தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை 1 - தொடர்ச்சி | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |

தொல்காப்பியர் கூறும் இலக்கிய வனப்பும் அப்பரடிகள் வாக்கும்:

     ஆசிரியர் தொல்காப்பியர் வனப்பு என்று ஒதுவன இலக்கிய அழகுகள் என்று கூறலாம்; எட்டு வகைப்பட்ட வனப்புக்களை அகச் சான்றோர் அருளுவர்.

"அம்மை அழகு தொன்மை தோலே

 விருந்தே இயைபே புலனே இழைபெனாஅப்

 பொருந்தக் கூறிய எட்டொடு"     (தொல். செய்யுளியல். 1)

     வனப்பென்பது பெரும்பான்மையும் பல உறுப்புந் திரண்ட வழிப் பெறுவதோர் அழகு என்பர் பேராசிரியர் இவ்வாறே நச்சினார்க் கினியரும் கூறுவர்; சமுதாய சோபை எனச் சிந்தாமணியுரையில் வரு வது இதுவே மாத்திரை முதலிய இருபத்தாறும் செய்யுளிலக்கணத் தினைத் தனியே நோக்கிக் கூறியவை வனப்பு எட்டும் முழுநோக் காகக் கூறியவை இவ்வனப்புத் தனிச் செய்யுள், தொடர்நிலைச் செய்யுள் இரண்டிற்கும் உரியதென்பர் உரையாசிரியர்கள்.

     இந்த எட்டு வனப்புக்களும் (இலக்கிய எழில்களும்) அப்ப ரடிகள் அருள்வாக்கில் ஆங்காங்குப் பொருந்தி விளங்குகின்றன அவற்றுள் சில இடங்களை இங்கு ஆய்ந்து கண்டு இன்புறுவோம்.

அம்மை:

     அம்மையின் இலக்கணம்; `சின்மென்மொழியாற்சீர்புனைந்து யாப்பின் அம்மை தானே அடிநிமிர்பின்றே' என்பது: (செய்யுளியல் 227) சிலவாய மெல்லியவாய சொல்லோடும் இடையிட்டு வந்த பனுவலிலக்கணத்தோடும் அடிநிமிர்வில்லாதது என்பது இதன் பொருள் அமைதிப்பட்டு நிற்றலின் அம்மை யென்றாயிற் றென்பர் பேராசிரியர் சின்மொழியாட்சி, மென்மொழியாட்சி தாயபனுவ லுடைமை, அடிநிமிர்வின்மை என்பன வெல்லாம் அம்மை எனல் விளக்கும்.

     சுருங்கக்கூறல் என்பதனை இதனுள் காணலாம் மென்மொழி - மெல்லிசை வண்ணம் அமைதல், அறம் பொருள் இன்பம் பற்றிக் கூறுவது அவ்வாறு கூறும்போது இடையிடை வேறுபொருள் பற்றிக் கூறுவது ஆகியனவும் அம்மை இயல்புகளே.

     அப்பரடிகளருளிய திருக்குறுந்தொகை முழுதும் அம்மை என்னும் வனப்பிலக்கியத்திற்கு எடுத்துக்காட்டாகும் அவ்விலக்கிய அழகு முழுதும் நிரம்பியது ஐந்தாம் திருமுறை என்றே கூறலாம்; எடுத்தக்காட்டுக்களாகக் கீழ்வரும் அருங்கவிதைகளைக் காண்க:

எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே

பந்தம் வீடவை யாய பராபரன்

அந்த மில்புகழ் ஆரூர் அரநெறி

சிந்தையுள்ளும் சிரத்துளும் தங்கவே.         (தி. 5 . 7 பா. 2)

ஏற தேறும் இடைமரு தீசனார்

கூறு வார்வினை தீர்க்கும் குழகனார்

ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க்

கூறி யூறி உருகுமென் னுள்ளமே.  (தி. 5 . 14. பா. 6)

நேச மாகி நினைமட நெஞ்சமே

நாச மாய குலநலஞ் சுற்றங்கள்

பாச மற்றுப் பராபர ஆனந்த

ஆசை யுற்றிடும் ஆனைக்கா அண்ணலே. (தி. 5 . 31. பா. 9)

உள்ளம் உள்கி உகந்து சிவனென்று

மெள்ள உள்க வினைகெடும் மெய்ம்மையே

புள்ளி னார்பணி புள்ளிருக்கு வேளூர்

வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே.    (தி. 5 . 79 பா. 8)

வேதம் ஓதிலென் வேள்விகள் செய்கிலென்

நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென்

ஓதி யங்கமொ ராறு முணரிலென்

ஈச னைஉள்கு வார்க்கன்றி இல்லையே.    (தி. 5 . 99. பா. 4)

அழகு:

     தொல்காப்பியர் கூறும் இரண்டாவது இலக்கியவனப்பு, அழகு என்பதாகும்.  `கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கமே அழகு' என்பர் பேராசிரியர் கற்போர் உள்ளத்தை யீர்க்கும் திறம் என்று கூறலாம்.

"செய்யுள் மொழியாற் சீர்புனைந் தியாப்பின்

அவ்வகை தானே அழகெனப் படுமே"(தொல். செய்யுளியல் 228)

     செய்யுட்குரிய சொற்களால் சீர்புனைந்து தொடுத்தலும், ஓசை உடைமையும் இதில் காணலாம் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகியவற்றால் பாடப்படுவது வழக்குச் சொற் பயிலாமல் செய்யுளுட் பயின்றுவருஞ்சொல் (நச்சினார்க்கினியர்) வழங்குவது, சொல்லழகு, பொருளழகு கூறுந்திறன் ஆகியவற்றால் கற்பவர் உள்ளத்தையீர்க்கும் இவ்வனப்பாகிய அழகு, அப்பரடிகள் வாக்கில் எண்ணற்ற பல இடங்களில் உள்ளன.

     எடுத்துக்காட்டாக இரண்டொன்றை இங்குக் குறிப்பாம்:

குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்றும்

நறவிள நறுமென் கூந்தல் நங்கையோர் பாகத் தானைப்

பிறவியை மாற்று வானைப் பெருவேளூர் பேணி னானை

உறவினால் வல்ல னாகி உணருமா றுணர்த்து வேனே.   

(தி. 4 . 60 பா. 3)

பழியுடை யாக்கைதன்னிற் பாழுக்கே நீரிறைத்து

வழியிடை வாழமாட்டேன் மாயமும் தெளியகில்லேன்

அழிவுடைத் தாயவாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டுக்

கழியிடைத் தோணிபோன்றேன் கடவூர்வீ ரட்டனீரே

(தி. 4 . 31. பா. 6)

பேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானைப்

      பித்தராம் அடியார்க்கு முத்தி காட்டும்

ஏணியை இடர்க் கடலுட் சுழிக்கப் பட்டிங்

      கிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்கும்

தோணியைத் தொண்டனேன் தூய சோதிச்

      சுலாவெண் குழையானைச் சுடர்பொற் காசின்

ஆணியை ஆவடுதண் துறையுள் மேய

      அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.

(தி. 6 . 46 பா. 4)

தொன்மை:

     தொன்மையென்ற மூன்றாவது இலக்கியவனப்புக்கு ஆசி ரியர் தொல்காப்பியர் தரும் விளக்கம்:

"தொன்மைதானே... உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே"    (தொல். செய்யுளியல் 229)

     உரைவிரவிப் பழையனவாகிய கதைப்பொருள்மேல் வரு வது உரையொடு புணர்தல், நெடுங்காலமாகப் பலராலும் சொல்லப் பட்டு வருதல் என்ற . வெள்ளைவாரணனார் கருத்திற் கேற்ப, அப்பர் வாக்கில் பழங்கதைக் குறிப்புக்கள் பற்பல இடங்களில் வரக்காணலாம் இவை தொன்மை அழகு துலங்கும் பகுதிகள்.

     பாண்டவ சரிதம், இராமசரிதம் தொன்மைக்கு இலக்கிய மாக உரைகாரர்களாற் கூறப்படும்.

"செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடும்

      சேதுபந் தனம்செய்து சென்று புக்குப்

 பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற

      போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ"

(தி. 6 . 58 பா. 10)

"பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்

 பரிந்தவனுக் கிராவணனென் றீந்தநாம தத்துவனை"

(தி. 6 . 79. பா. 10)

"அருச்சுனற்குப் பாசுபதம் கொடுத்தானை" (தி. 4 . 7. பா. 10)

"வேடனாய் விசயன்தன் வியப்பைக் காண்பான்

      வில்பிடித்துக் கொம்புடைய ஏனத் தின்பின்

 கூடினார் உமையவளும் கோலம் கொள்ளக்

      கொலைப்பகழி உடன்கோத்து" (தி. 6 . 83. பா. 5)

" .................அருச்சுனற் கம்பும் வில்லும்

துடியுடை வேட ராகித் தூயமந் திரங்கள் சொல்லி"

(தி. 4. . 50. பா. 1)

என்பன முதலியஅப்பர் கவிதைப் பகுதிகள் இத்தொன்மையழகு துலங்கும் பகுதிகள் எனலாம்.

தோல்:

     தோல் என்னும் இலக்கிய வனப்புக்கு ஆசிரியரின் இலக்கணம்:

"இழுமென் மொழியால் விழுமியது நுவலினும்

 பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும்

 தோலென மொழிப தொன்னெறிப் புலவர்"'

(தொல். செய்யுளியல். 230)

     "மெல்லென்ற சொல்லான் அறம்பொருளின்பம் வீடென் னும் விழுப்பொருள் பயப்பச்செய்வன' என்பர் பேராசிரியர் இழு மென் மொழியாப்பு, விழுமிய பொருளுடைமை, பரந்தமொழி உடைமை, அடிநிமிர்ந்தொழுகல் ஆகியவை தோலின் இயல்புகள் எனலாம் ஆற்றொழுக்குப் போன்ற ஓசையின்பம், மக்கள் வாழ்வைப் பண்படுத்தும் உயர் கருத்துக்கள் என்பவை ததும்பிநிற்கும் அழகு தோல் என்று கூறலாம்.

     அப்பரடிகள், இறைவனாகிய சிவபிரானையே பாடும் இயல் பினராதலின் விழுமியது நுவலல் அச்சான்றோருடைய அருட்பாடல் களனைத்திலும் இலங்கக் காணலாம் அடிநிமிர்ந்தொழுகும் இயல் பைக் காணவியலாதாயினும் முப்பது பாடல்களை உடைய சித்தத் தொகைக் குறுந்தொகைத் தொகுப்பைக் கூறலாம். (தி. 5 . 97)

     அப்பரடிகள் பண்ணொடு குழைந்த திருப்பதிகங்கள் பாடி யருளியுள்ளாராதலின் ஒழுகிசையின்பம் தழீஇய அவர் உயர் பாடல்கள் அனைத்திலும் இவ்வழகினைக் காணலாம்.

விருந்து:

     விருந்து என்பது ஆசிரியரால்,

"விருந்தேதானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே"

     (தொல். செய்யுளியல். 231)

என்று விளக்கப்பெறும்.

     பொருள், உருவம், கூறும் முறை ஆகியவற்றிற் புதுமை தவழக் கூறும் வகையுடைய அப்பரடிகள் அருட்கவிதைகளை இவ் விருந்திற் கூறலாம் தாண்டகம் என்ற புதிய வகையைத் தமிழில் செல்வாக்கு அடையச் செய்த அப்பர், விருந்து அழகு தோன்ற வித்தகப் பாடல் பாடினர் என்பதற்குத் தடையும் உண்டோ?

     சித்தத் தொகைக் குறுந்தொகையில் அகரமுதல் ஔகார இறுவாயும், ககரமுதல் னகர இறுவாயும் முதற்கண் எழுத்தாகத் தொடாகக் கவிதைகள் அருளியுள்ளார். இதுவும் விருந்து வகையாதல் ஓர்ந்துணரலாம்.

இயைபு:

     இயைபு, தொல்காப்பியரால்,

"ஞகார முதலா னகார வீற்றுப்

 புள்ளி யிறுதி இயைபெனப் படுமே"(தொல். செய்யுளியல். 232)

     அப்பரடிகள் அருள்வாக்கில் இவ்வியைபு காணப்பெற வில்லை இவ்வாறு தொடர்ந்து பாடத்தக்க பாஇனப்போக்கை அடிகள் மேற்கொண்டிலராதலின் இவ்வழகை நாம் காண இயலவில்லை.

புலன்:

     அடுத்து வருவது புலன், ஆசிரியர் தொல்காப்பியர் இதன் இலக்கணத்தை பின்வருமாறு கூறுவர்.

"தெரிந்த மொழியாற் செவ்விதிற் கிளந்து

 தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்

 புலனென் மொழிப புலனுணர்ந் தோரே"

(தொல். செய்யுளியல். 233)

     கற்றோர்க்கும் மற்றோர்க்கும் எளிதிற் பொருள் புலப்படுமாறு தெரிந்த சொற்களால் இயற்றப்படும் செய்யுளில் புலன் என்னும் அழகு செறிந்ததென்பர் அறிஞர் சேரிமொழி யென்பது பாடி மாற்றங்கள் என்பர் பேராசிரியர்.

"ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற்றேடிய ஆதரைப்போல்"   (தி. 4 . 97 பா. 6)

"மத்தார் தயிர்போல் மறுகுமென் சிந்தை" (தி. 4. . 96 பா. 3)

"முயல் விட்டுக் காக்கைப்பின் போனவாறே"

(தி. 4 . 5. பா. 2)

"மோத்தையைக் கண்ட காக்கை போல"   (தி. 4 . 75 பா. 2)

என்பன முதலிய உலக வழக்குகளை அடிகள் ஒட்டிப் பொருத்தி உரைக்கும் கவிகளில் இப்புலன் என்னும் அழகு பிறங்கக் காணலாம் பொந்தை, களேபரம், பட்டி, பாடி, மொண்ணை முதலிய உலக வழக்குச் சொற்களை அடிகள் புணர்த்துப் பாடியுள்ள கவிதைகள் புலனுக்கு ஏற்ற நலன் அமைந்தவை.

இழைபு:

     இறுதியாக, ஆசிரியர் தொல்காப்பியர் கூறும் இலக்கிய அழகு இழைபு ஆகும் அதற்கு அவர் தரும் இலக்கணம்:

"ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது

 குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து

 ஓங்கிய மொழியான் ஆங்ஙனம் மொழியின்

 இழைபி னிலக்கணம் இயைந்ததாகும்"

(தொல். செய்யுளியல் 234)

     வல்லெழுத்துப் பயிலாமை, ஐவகையடிகள் பயிலல், ஓங்கிய மொழியாட்சி, பொருள் புலப்பாடு ஆகியன இழையின் இயல்புகள் இவற்றுள் பின்னைய இரண்டும் அப்பர் தேவாரத்தில் காணக்கிடக்கும் கவின்களே என்பதை இதுகாறும் காட்டிய எடுத்துக்காட்டுக்களான் இனிது உணரலாம் வல்லிசை வண்ணம் நீங்கி நெடுஞ்சீர் வண்ணமும் பயின்று வரும் பாடல்கள் இவ்வழகின்பாற்படும் விடந்தீர்த்த பதிகம் (தி. 4. . 18) இதற்குத் தக்க இலக்கியமாக அருளரசர் திருவாக்கில் அமைவதாகும்.

     இங்ஙனம் ஆசிரியர் தொல்காப்பியர் இலக்கிய எழினலங் களாக ஓதியுள்ள எட்டழகும் அப்பர் அருட்கவிதைகளில் இலங்கு தலை ஆராய்ந்து அறியுங்கால், பேரின்பமும் பெருமகிழ்வும் தோன்றுதல் இயல்பேயாகும்.

முடிவுரை:

     இதுகாறும் ஆராய்ந்தவற்றால், அப்பர் அருட்பாடல்கள் இலக்கியப் பண்புகளாகிய அழகு ததும்பும் பேரருட் கருவூலங்களாம் என்பதும், உவமை உருவகம் முதலிய அணி விகற்பங்களும், கற்பனை, சொல்லாட்சிச் சிறப்பு முதலிய கவிதையியல்புகளும் செறிந்த சீர்மை உடையன என்பதும், இலக்கிய நயமிக்க ஏற்றம் உடையன என்பதும் இனிது பெறப்படும் ஆளுடைய அரசராகத் திகழும் இவ்வருளாசிரியரின் அருளிச் செயல்களை ஓதி ஓதி இன்புறுதலும், அவ்வின்ப நெறியே இறைநெறி பற்றி இருமைப் பயன்களை எய்துதலும் தமிழைக் கற்றறிந்த தகைசால் மாந்தர் கடனாகும்.

நெருக்கி யம்முடி நின்றிசை வானவர்

இருக்கொ டும்பணிந் தேத்த இருந்தவன்

திருக்கொ டும்முடி என்றலும் தீவினைக்

கருக்கெ டும்இது கைகண்ட யோகமே.      (தி. 5 . 81 பா. 5)

     திருநாவுக்கரசு சுவாமிகள் திருவடி மலர்கள் வாழ்க!

 

 

 

 

 

 

திருத்தொண்டர் திருவந்தாதி

நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப் பாதந்தன் சென்னிவைக்கப்

பெற்றவன் மற்றிப் பிறப்பற வீரட்டர் பெய்கழற்றாள்

உற்றவன் உற்ற விடமடை யாரிட ஒள்ளமுதாத்

துற்றவன் ஆமூரின் நாவுக் கரசெனும் தூமணியே.

மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால்

திணியன நீள்கத வந்திறப் பித்தன தெண்கடலிற்

பிணியன கல்மிதப் பித்தன சைவப் பெருநெறிக்கே

அணியன நாவுக் கரையர்பி ரான்றன் அருந்தமிழே

                               - தி. 11 நம்பியாண்டார் நம்பி

 

 

தலைவாயில்

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை 1 - தொடர்ச்சி | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |