தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை 1 - தொடர்ச்சி | 13 | 4 | 5 | 6 | 7 | 8 |

அப்பர் தேவாரப் பெயரமைப்பு:

     அப்பரடிகள் தேவாரப் பாக்களின் பெயர்க் காரணத்தைப் பின்வருமாறு பாகுபாடு செய்யலாம்.1

     (1) பொருளமைப்பு: திருஅங்கமாலை, தசபுராணம், குறைந்த திருநேரிசை, காலபாசத் திருக்குறுந்தொகை, ஆதிபுராணத் திருக்குறுந் தொகை, இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை - முதலியன.

     (2) பாடல்தோறும் பயின்ற சொற்பொருளமைப்பு: கொப் பளித்த திருநேரிசை, நினைந்த திருநேரிசை, ஆருயிர்த் திருவிருத்தம், சரக்கறைத் திருவிருத்தம், திருவடித் திருத்தாண்டகம், புக்க திருத் தாண்டகம் முதலியன.

     (3) முதற்குறிப்பு: `சிவனெனும் ஓசை' என்ற பதிகம்.

     (4) ஈற்றுத் தொடர்: பாவநாசத் திருப்பதிகம்.

     (5)  பொருட்டொகை: மனத்தொகை, சித்தத்தொகை, உள்ளத் தொகை, கே்ஷத்திரக்கோவை முதலியன.

     (6)  பாடல்களிற் பயின்ற ஈற்றுச் சொல்: மறக்கிற்பனே, தொழற் பாலதே எனுங் குறுந்தொகைகள்.

     (7)  சிறப்பு: நமச்சிவாயத் திருப்பதிகம்

     (8)  பொதுவகை: தனித்திருநேரிசை, தனித்திருக்குறுந் தொகை, தனித்திருத்தாண்டகம், பலவகைத் திருத்தாண்டகம்.

அப்பர் மேற்கொண்ட யாப்பு வகைகள்:

     அப்பரடிகள் தமிழ்க் கவிதை யாப்பில் மேற்கொண்டுள்ள வகைகள் தமிழ் இலக்கணத்துடன் மாறுகொளாதவை சந்த விருத்தங் களும், விருத்த வகைகளும், கலி விருத்தங்களும், கட்டளைக் கலித் துறைகளும் ஆகியவற்றுடன் தாண்டகம் என்ற வகையும் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார்.

     தாண்டகம் என்ற பாட்டியல் வகையை அடிகள் கையாண்டு வெற்றி பெற்றுள்ளமையாலேயே `தாண்டகச் சதுரர்' என்ற சிறப்புப் பெயருக்குரியவரானார்.1

விளங்குபெருந் திருமுன்றில் மேவுதிருப் பணிசெய்தே

உளங்கொள்திரு விருத்தங்கள் ஓங்குதிருக் குறுந்தொகைகள்

களங்கொள்திரு நேரிசைகள் பலபாடிக் கைதொழுது

வளங்கொள்திருப் பதியதனில் பலநாள்கள் வைகினார்

(தி.12 திருநா. புரா.337)

என வரும் சேக்கிழார் திருப்பாடலால் (1) விருத்தம் (2) குறுந்தொகை (3) திருநேரிசை (4) தாண்டகம் ஆகிய யாப்பு வகைகளை அடிகள் மேற்கொண்டார் என்பது விளங்கும்.

     திருநேரிசை நேரிசைக் கொல்லி எனவும், திருவிருத்தம் விருத்தக் கொல்லி எனவும் கொல்லிப்பண்ணில் அடக்கப் பெறும் திருநேரிசை, `கூவிளம் புளிமா தேமா கூவிளம் புளிமா தேமா' எனவரும் கட்டளையடி உடைய செய்யுள் என்றும், அறுசீர்களால் இயன்ற இக்கட்டளையடியில் முதற்சீரும் நான்காம்சீரும் ஓரோவழிக் கருவிளம் ஆதலும், இரண்டாம் சீரும் ஐந்தாம் சீரும் ஒரோவழி தேமாவாதலும் உண்டு என்றும், மூன்றாம் சீரும் ஆறாம் சீரும் எப்பொழுதும் தேமாவாக நிற்பன என்றும் இந்த யாப்பமைதியை யாழ் நூல் (பக்.217) ஆசிரியர் விளக்குவர்.

     திருவிருத்தம் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பமைதி உடையது. `அடியடிதோறும் ஐஞ்சீராகி, முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாது கடையொரு சீரும் விளங்காயாகி, நேர் பதினாறு நிரை பதினேழு என்று, ஓதினர் கலித்துறை ஓரடிக்கு எழுத்தே' என்னும் இலக்கணப்படி அமைந்த பகுதி திருவிருத்தம்.

     திருக்குறுந்தொகை, நாற்சீர், நாலடியாய் அடிதோறும் தேமா புளிமா என்பவற்றுள் ஒன்று முதல் சீராகவும், கருவிளம் கூவிளம் என்பவற்றுள் ஒன்று நான்காம் சீராகவும், இடையிரு சீர்கள் பெரும்பாலும் விளச்சீர்களாகவும், சிறுபான்மை மாச்சீர்களாகவும், அமைய வரும் செய்யுள் வகை சிலப்பதிகார வேட்டுவ வரியில் இவ்வமைப்பை உடைய பாடல்கள் உள்ளன ஆதலால் கி.பி. 2 ஆம் நூற்றாண்டிலேயே இந்தயாப்பும் பெருகியிருந்த தென்பர். 1பிற்கால யாப்பிலக்கணப்படிக் கலிவிருத்தம் என்பர்.

தாண்டக விளக்கம்:

     இவற்றுள் தாண்டகம் என்ற செய்யுள் வகையை அப்பரடிகள் மிகச்சிறப்பாக எடுத்தாண்டுள்ளார் ஆறாம் திருமுறை முழுதும் இத்தாண்டக யாப்பாலேயே விளங்குகின்றன இத்தாண்டகம் வடமொழி இலக்கணம் பற்றிவந்த செய்யுள் என்றும் இது தமிழ் யாப்பே யாகும் என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு.

     யாப்பருங்கல விருத்தி 2ம் சூத்திர விளக்கவுரையிலிருந்து (1) அளவியல் தாண்டகம் (2) அளவழித் தாண்டகம் என்ற இருவகைகள் அறியப்படும்.

     பன்னிரு பாட்டியல் என்ற நூலிலிருந்தும் அதன் உரையி லிருந்தும் அறியப்படும் வகைகள் (1) குறுந்தாண்டகம் (2) நெடுந் தாண்டகம் என்ற இரண்டாம் ஒவ்வோரடியினும், `அறுசீரேனும்', `எண்சீரேனும்' வகையாக அமைத்து இயற்றப்பட்ட நான்கடிச் செய்யு ளால் ஆடவரையும் கடவுளரையும் புகழ்வது, தாண்டகம் என்பது பன்னிரு பாட்டியற் கருத்தாகும்.

     இவற்றுள் அறுசீரடிப் பாக்களாலாயது குறுந்தாண்டகம் எண் சீர்ப்பாக்களாலாயது நெடுந்தாண்டகம்.

"மூவிரண் டேனும் இருநான் கேனும்

 சீர்வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர்

 கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றுள்

 அறுசீர் குறியது நெடியதெண் சீராம்"

என்பது பன்னிருபாட்டியலார் கூற்று. (110)

"அறுசீர் எண்சீர் அடிநான் கொத்தங்

 கிறுவது தாண்டகம் இருமுச் சீரடி

 குறியது நெடிய திருநாற் சீரே"

என்பது பல்காயனார் வாக்கு.

"மங்கல மரபின் மானிடர் கடவுளர்

 தம்புகழ் உரைப்பது தாண்டக வகையே"

"தாண்டகம் மானிடர் கடவுளர்க் குரித்தே"

என்பன மாபூதனார் நூற்பாக்கள்.

"அடிவரை நான்கும் எழுத்தெண்ணி

 நேரடி வருவது தாண்டகம் ஆகும்"

என்பர் சீத்தலையார் இருபத்தேழெழுத்து முதலாக உயர்ந்த எழுத்தடி யினவாய் எழுத்தும், குருவும், லகுவும் ஒத்து வருவன அளவியல் தாண்டகம் எனவும், எழுத்தொவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வருவன அளவழித் தாண்டகம் எனவும் பெயர் பெறும் என்பது யாப்பருங்கல் விருத்தி உரைகாரர் விளக்கம் ஆகும்.

     அப்பரடிகள் அருளிய தாண்டகங்கள், ஒற்றும் குற்றியலுகர மும் நீக்கி எழுத்தெண்ணி வகுக்கப்பட்ட ஐவகை அடிகளுள் கழி நெடிலடிக்கு மேலெல்லையாகிய இருபதெழுத்தென்னும் அளவி னைக் கடந்து இருபத்தேழெழுத்திற்கு உட்பட்டு வருவனவாகும்.

     ஆனால் யாப்பருங்கல விருத்தி கூறும் இலக்கணம் இதனின் வேறுபட்டது என்பது மேலே காட்டப்பட்டது யாப்பருங்கல விருத்தி உரையின் கருத்துப்படி இந்தயாப்பு அமையவில்லை என்பது அறிந்துணரத்தக்கது.

     எனவே, தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தை அடியொற்றி யமைந்த திருத்தாண்டகப் பாவும், வடமொழித் தண்டக யாப்பினை அடியொற்றிப் புதியன புனைந்த யாப்பருங்கல விருத்தி உதாரணச் செய்யுள்களும் இலக்கண வகையால் தம்முள் வேறுபட்டன என்று உணர்தல் வேண்டும்.1

     தாண்டக வேந்தராகிய அப்பரடிகள் இந்த வகையை மிக அழகுபடுத்தி இதனை நயம்பெறக் கையாண்டு விளக்கம் புரிந்துள் ளார் கி. பி. 7 ஆம் நூற்றாண்டிற்கு முன் அடைந்திராத செல்வாக்கை இவ்வகை யாப்புலகிற் பெறுவதாயிற்று.

     பின்வந்த திருமங்கையாழ்வாரும் இந்த யாப்பை மேற் கொண்டு காத்தனர்.

     தாண்டவமாடும் சிவன்தாள் மலரின்பம் நுகர்ந்த அடிகள் அப்பெருமான் புகழ்பாட இதனை மேற்கொண்டது வியந்து போற்று தற்குரியதாகும். இப்போது கிடைத்துள்ள அப்பர் திருத்தாண்டகங்க ளின் தொகை தொளாயிரத்து எண்பத்தொன்று (981) ஆகும் என்பது இங்கு அறியத்தக்கது.

அகப்பொருட் பதிகங்களின் அமைப்பு :

     தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழுதறக்கற்ற பண்பினர் அப்பரடிகள் ஆதலின், அப்பெரியார் அமுதவாக்குகளில் இலக்கிய ஒட்பங்களும் இணைந்து நிற்கக் காணலாம் அவற்றை இங்கு அறிந்து இன்புறுவோமாக. அகப்பொருள் தமிழ்க்குச் சிறப்பு மற்ற எம் மொழிக்கும் இல்லாப் பெருஞ் சிறப்பாக அகப்பொருள் இலக்கணம் தமிழ்க்கு வாய்த்துள்ளது.

     அகத்தே நிகழும் தன்மையதாய்ப் புறத்தார்க்கு உணர்த்துதற்கரியதாய் இருப்பது அகத்திணை, அவ்வகவொழுக்கம் பற்றிய சங்கப் பாடல்கள் மிக்க நுட்பமும் சீர்மையும் வாய்ந்தவை.

     நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய தொகை நூல்கள் முற்றும் இவ்வைந்திணை நெறி யளாவி வரும் இயல்புடையவை தமிழ்ப் பாவலர் திலகம் போல் வாரும், நடையறாப் பெருந்துறவியாரும் ஆகிய திருநாவுக்கரசர் பெருந்தகையும் இறைவன் திருவருளில் தோய்ந்து நின்று புனையும் கவிகளில் இவ்வமைப்பு உடையனவாகப் பலவற்றைப் புனைந் துள்ளார் அவை இலக்கியச் சிறப்புடையனவாய் இலங்குகின்றன.

     இப்பெருந்தகையார் திருவாக்கில் வரும் அகத்துறைப் பகுதிகள் கீழ்வரும் முறைப்படி அமையும் பெற்றியன.

திருமுறை  பதிகம்   பாடல்

      4         12     1 - 10

      4        97     1 - 10

      5        29     1 - 10

      5        40     1 - 10

      5        45     1 - 10

      5        53     1 - 12

      6         9     1 - 10

      6         13     1 - 10

      5         7     6 - 8

      5        46      1 - 5

      5        64     0 - 6

      5        66     0 - 9

      5        88     4 - 9

      6        25     0 - 7

      6        35      3 -7

      6        45  1 - 4 - 8

      6        58 3 - 7 - 0

     முழுப்பதிகங்களாக ஒன்பதும் ஏனைய பாடற்பகுதிகளும் அகத்துறை விளக்கமாக அமைந்து இவற்றுள் அழகு செய்கின்றன.

     தலைவியின் காதல் நிலைகண்டு இரங்கிக்கூறும் தாய் அல்லது தோழியின் கூற்று, தலைவி கூற்று, ஆகிய இரண்டு துறைகளிலேயே இவ்வகைச் செய்திகள் அமைந்துள்ளன இவை நயம் பொருந்தியனவாயும், காதல் உணர்வைக் கடவுள் உணர்வாக மாற்றித் தரும் மாண்பினவாயும் அமைந்துள்ளன.

தமிழின் மாட்டுத் தண்ணளி :

     அப்பரடிகள் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கூர்ந்து ணர்ந்து, தேர்ந்த பழுத்த தமிழ்ப் புலவர் ஆதலின் இம்மொழிச் சிறப்பை இனிது உணர்ந்து அதனைப் பன்முறையும் எடுத்து ஓதுவதிற் பெருமை கொள்கின்றார்.

     `பொருள் நீத்தம் கொளவீசிப் புலன் கொளுவ மனம் முகிழ்த்த சுருள்நீக்கி மலர்விக்கும் கலை' (தி.12 திருநாவு - 1290) பயின்றவர் எனவும், `சிந்தை மலர்ந்தெழும் உணர்வில் செழுங் கலையின் திறங்க ளெல்லாம், முந்து முறைமையிற் பயின்று முதிர அறிவு எதிரும் வகை மைந்தனார் மறுஒழித்த இளம்பிறை போல் வளர்கின்றார்' (தி.12 திருநாவு - 1921) எனவும், `அங்கவரும் அமண் சமயத்தருங்கலை நூலான வெலாம், பொங்கும் உணர்வுறப் பயின்றே அந்நெறியிற் புலன்சிறப்ப' (தி.12 திருநாவு - 1309) எனவும் இப்பெருந் தகையாருடைய கலைப் பயிற்சியையும், ஆழ்ந்த புலமையையும் விளக்கிய சேக்கிழார் `உலகின்கண் ஒளிஉடைய  வித்தகராய்' என்று முடிவு போக்கியுள்ளமை இங்கு அறியத்தக்கதாகும்.

     இவ்வாறு பல கலைகளையும் நன்கு உணர்ந்த இப்பெருந் தகையார் தம் அருட்டிறத்தால் அக்கலைகளையும், அவற்றான் சிறந்து தோன்றும் தமிழையும் சிவபரம்பொருளாகக் கண்டு சிந்தை கனிந்து பாடுகின்றார் அவ்வமுதப்பாடற் பகுதிகள் கலைகளின் மாட்டும், தமிழின் மாட்டும் அடிகள் கொண்டிருந்த அயராவன்பை விளக்குவ தாகும்.

"இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்

 எட்டெட் டிருங்கலையு மானான் கண்டாய்

(தி.6. .73 பா.9)

கல்வி ஞானக் கலைப்பொரு ளாயவன்

செல்வ மல்கு திருக்கானூரீசனை

எல்லியும் பகலும் இசைவானவா

சொல்லிடீர் நுந் துயரங்கள் தீரவே.

(தி.5 .76 பா.6)

"மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்

 முத்தமிழும் நான்மறையும் ஆனான்கண்டாய்"

(தி.6 .23 பா.9)

"வானவன்காண் வானவர்க்கு மேலானான்காண்

 வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்

 ஆனவன்காண்"

    (தி.6 .87பா.1)

"ஆரி யந்தமி ழோடிசை யானவன்

 கூரி யகுணத் தார் குறி நின்றவன்"

தலைவாயில்

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை 1 - தொடர்ச்சி | 1 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |