தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை 1 - தொடர்ச்சி |  2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருமுறைகளின்

சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 1

அப்பர் தேவாரத்தில்

இலக்கியப் பண்புகள்

செஞ்சொற்கொண்டல்

வித்துவான் சொ. சிங்காரவேலன் எம்..,

தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரி முதல்வர்

கலைநோக்கு:

     உலகின் அழகைக் கண்டு வியந்து போற்றும் இயல்பு நம்மி டம் இல்லை துன்பங்களைக் கண்டு நொந்து கவலைப்படும் இயல்பே நம்மிடம் கால்கொண்டிருக்கின்றதுஆனால் அழகு கூத்தாடும் இயற்கைச் செல்வத்தை அறிந்து, உணர்ந்து பாராட்டிசைக்கும் பண்பு பாவலனிடத்தேயே உள்ளது.

     கவிஞன் உலகின் அழகுக் கூத்தைத் தன் சொற்களாற் காவிய மாக்குகின்றான் சொல்லோவியமாக்கி மகிழ்கின்றான்இதற்குக் காரணம் என்ன கவிஞன் பெற்றிருக்கும் கவிதைக்கண் - கலைநோக் குத்தான் இதன் காரணமாகும்.

     நம் பார்வை மேம்போக்காக நின்று விடுகின்றதுகவிஞன் அல்லது கலைஞன் பார்வை ஊடுருவிப் பாய்கின்றதுநம் நோக்கு புறத்தோற்றத்திலேயே நின்று வலியிழந்து விடுகின்றதுகவிஞன் அல்லது கலைஞன் நோக்கு அகத்தோற்றத்தில் ஆழ்ந்து அச்சிறப்பியல்புகளால் வலுப்பெற்று விடுகின்றது இதனாலேயே பாட்டு, கவிஞனின் உயர் கருவியாகின்றது.

     மற்றவர்க்குப் பாட்டை நுகர இயலுகின்றதே தவிர புனையும் ஆற்றல் இல்லைஇந்த நுட்பம் சிந்தித்தால் தான் விளங்குவதாகும்இந்த நுட்பம் இயற்கையின் அழகுக் கூத்தை மெய்ம்மறந்து சுவைத்துக் களிவெறி கொள்ளும் கலைஞர்களுக்குத் தனிச்சிறப்பாக உள்ளது.

கவிதையநுபவம் :

     அழகை மட்டுமின்றி உலகத் துயரங்களையும் கவிஞன் காணாமல் இல்லைஅவற்றையும் படம் பிடித்துக்காட்ட அவன் தவற வில்லைஆனால் கவிதையில் அத்துன்பங்களை மிகவும் விரும்புகின் றோம் நாம்உலகியலில் துன்பங்களை வெறுத்தொதுக்கும் நம்மைக் கலைத் துறை அவலங்கள் கவர்ந்து விடுகின்றனகலைத்துறைத் துன்பங்களைக் கண்டு கண்ணீர் விடுகின்றோம். ஆனால் இக்கண் ணீரை நாம் விரும்புகின்றோம்.

     நுட்பமான உணர்ச்சிகளைத் தூண்டும் சொல்லாட்சி, கற்பனை அமைப்புடைய கவிதைகளை உருவாக்கி நம்மைத் தன்வயப்படுத்தி விடுகின்றான் கவிஞன்இவ்வாறு நம் உணர்ச்சியோடு ஒன்றுபடும் கவிதைச் செல்வத்தை நாம் வாழ்வில் இடையறாது சுவைத்தல் வேண்டும்.

     உயர்ந்த கவிஞர்கள் கைம்மாறு கருதியா கவிதைகளை யாத்துள்ளார்கள்தம் அநுபவத்தை எடுத்து கைம்மாறு வேண்டாக் கார்மழைபோல் பொழிந்து உள்ளார்கள்சுவைக்கும் உள்ளத்துடன் - இலக்கியப் பசியுடன் - அவர்களை அணுகுதல் ஒன்றே நாம் செய்ய வேண்டுவதுஅணுகி விட்டால் நம்மை அவர்கள் ஆட்கொண்டு விடுகிறார்கள்வேறு உலகுக்கு - கவியுலகுக்கு அழைத்துச் சென்று பலப்பல காட்சிகளைக் காட்டிக் களிப்பிக்கின்றார்கள்.

     உலகியல் மறந்து அவ்வின்பக்காட்சியில், காலம், இடம் முதலிய வேற்றுமைகளை யிழந்து கிடக்கின்றோம் நாம்ஆம், கவிதை அநுபவம் இதுவேயாகும்.

     1"கவிஞனுடைய கண், விண்ணுக்கும் மண்ணுக்கும், மண் ணுக்கும் விண்ணுக்குமாகச் சுழல்கின்றதுசுழன்று நோக்கிக் கற்பனை வடிவங்களைப் படைக்கின்றது அவ்விழுமியோனுடைய எழுதுகோ லால் அறியப்படாத பொருள்கள் வடிவம் பெறுவதுடன் உயிர்த் தன்மையும் எய்துகின்றன" என்று ஆங்கில நாடகப் பெருங்கவிஞராகிய சேக்ஸ்பியர் கூறும் பகுதி இங்கு ஒப்பிட்டு மகிழத்தக்கது.

அருட்பாடல்களின் ஆற்றல்:

     இத்தகு கவிஞர்களின் உறவு உள்ளத்தைத் திருத்தும் உயர்வு உடையதுஉலகியற் றுன்பங்களினின்று உயர்ந்து உயிர்ப் பறவையை மேலே மேலே பறக்குமாறு செய்து எங்கும் - என்றும் இன்பமாய பெரும் பேற்றிற்கு உய்ப்பது.

     அதிலும் திருநாவுக்கரசு சுவாமிகளைப் போன்ற அருட் புல வர்கள் பாடல்கள் என்றால் கூறவா வேண்டும் அருளே வடிவாகிய இறைவனை அகமுருகப்பாடி மகிழும் அருள் ஆசிரியர்கள் அவர்கள்.

     அவர்களது அருங்கவிதைகள் பக்தியை விளைக்கும் பண்பு டைய பாடல்கள்இசை தழுவிய எண்ணக் குவியல்கள், பண் கலந்த பாடல் தொகுப்புக்கள்இறைவனுடைய கருவியாக நின்று தாம் இயங்குகின்றோம் என்ற எண்ண அழுத்தம் உடைய அவ்வருட் செல்வர்களின் உணர்ச்சிப் பிழம்புகளாகிய கவிதைகள் நம் வாழ்வுக்கு நெறி காட்டும் வான்புகழ் கலங்கரை விளக்குகள் என்றே கூறலாம்.

     அவர்கள் தம் வாழ்வில் என்ன கண்டார்கள், தம் வாழ்வில் பட்டறிந்த உண்மைகளால் என்ன உணர்வு பெற்றார்கள்அவ்வுணர் வினின்றும் அவர்கள் தெளிந்ததென்ன, நம்மனோர்க்கு அத்தெளிவி னால் அவர்கள் உரைக்கும் செய்திகள் யாவை என்பதற்கு அவர்களது இலக்கியமே சான்று பகரும் இவையனைத்தையும் காட்டுவதே இலக் கியப் பண்பு என்பர்.1

அருட்செல்வர்:

     திருநாவுக்கரசு சுவாமிகள் சிறந்த தோத்திரப்பாக்களை அருளிய ஞானாசிரியர்அவ்வருட் செல்வரை இத்தகு இலக்கியப் பண்புகள் கனிந்த பனுவல்களை - பக்தி உணர்ச்சிப் பாடல்களை யாத்த ஓர் அருட்புலவராகவும் காணலாம்அவ்வருட் புலவருடைய பாக் களில் காணப்படும் இலக்கிய நலங்களைக் கண்டு, அத்தெய்வக் கவிஞரது பாக்களில் புலனாகும் அவருடைய திருவுள்ளத்தை அறிந்து, தெளிவுறுத்துவதே இச்சிற்றாராய்ச்சியின் நோக்கமாகும்.

     பழுத்த அநுபவம் உடைய இப்பெரியார் பழுத்த தமிழ்ப் புலமை எய்தியிருந்த பண்பட்ட பாவலரும் ஆவர்ஆதலின் அவ்வா ராய்ச்சி இவ்வருட் புலவருடைய இனிய திருவாக்குகளை அடியாகக் கொண்டே இயங்குவதாகும்.

முருகியல் அமுதம்:

     இலக்கியம் என்பது சொல், பொருள் ஆகிய அடிப்படையில் நயம் தோன்ற - கற்பனை விளங்க - உணர்த்தும் திறம் ஒளிர ஆசிரி யனுடைய அநுபவ வெளியீடாக இருப்பது.

     ஆதலினாலேயே, ஆசிரியனுடைய அநுபவ இன்பத்தை இலக்கியத்தில் நாமும் அநுபவித்தின்புற முடிகின்றது.

     திருநாவுக்கரசு சுவாமிகள் அருட் புலவராக விளங்கிய நல்லா சிரியராதலின் அவருடைய கனிந்த உளத்தின் முருகியல் அமுதம் தமிழ்க் கவிதையாக வெளிவந்தது அப்பெருமானாரின் கவிதைகள் கல்மனத்தையும் கசிந்துருக்கும் திறன் உடையவைஉறுதியான சொற்களால் இயன்றவை பொருட்சிறப்பு பொதுளிய அமைப்பு உடையவை.

அப்பர் அருளுருவம்:

     இறைவன் திருவடிகளிலேயே பதித்த நெஞ்சுடைய இப்பெரு மானுடைய அருள் பழுத்த திருக்கோலத்தைச் சேக்கிழார் பின்வருமாறு சொல்லோவியமாக்கியுள்ளார்.

தூயவெண் ணீறு துதைந்தபொன் மேனியும் தாழ்வடமும்

நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்துருகிப்

பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும் பதிகச் செஞ்சொல்

மேயசெவ் வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே

- தி.12 திருநாவு. புரா.140

     இறைவன் `பொருள்சேர் புகழ்' விரிக்கும் செந்தமிழ் அமுதத் திருப்பாடலை ஓதிக் கொண்டேயிருக்கும் ஒட்பம் தோன்றப் `பதிகச் செஞ்சொல் மேய செவ்வாய்' என்றருளிய திறம் இனிது உணரத்தக்கது.

தொடையறாச் செவ்வாய்:

     சிவஞான சுவாமிகளும் அப்பரடிகள் அழகுருவத்தைத் தமிழாற் சிறப்பித்துள்ளனர்அதனுள் `ஞானப்பாடல் தொடையறாச் செவ்வாய்' என்று இப்பெருமானாருடைய பாவன்மை தோன்றப் பாடியருளியுள்ளனர்அவ்வருந் தமிழ்ப்பாடல் பின்வருவதாகும்.

இடையறாப் பேரன்பும் மழைவாரும் இணைவிழியும்

    உழவா ரத்திண்

படையறாத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே

    பதித்த நெஞ்சும்

நடையறாப் பெருந்துறவும் வாகீசப் பெருந்தகைதன்

    ஞானப் பாடல்

தொடையறாச் செவ்வாயும் சிவவேடப் பொலிவழகும்

    துதித்து வாழ்வாம்.    (காஞ்சிப்புராணம். பா.13)

திருவாரூர்ப் புராணமுடையார்,

"சாலமிகு பாவமுது வேனில் வெம்மைத் தழலாற

    ஆகமநூற் றருமஞ்சான்ற

சீலநிறை சைவநெறி நிழல்பரப்பும் திருநாவுக்கரசு"

என்று புகழ்தல் இங்கு ஒப்பிட்டுணர்தற்குரியது.

"தேவரசு மனமகிழத் திருப்பதிகம் இசைத்தமிழிற்

    சிறக்கப்பாடும் நாவரசு"

என்று புகழ்வர் சிவராத்திரி புராண ஆசிரியர்.

"மதுர மாந்திருத் தாண்டகச் செந்தமிழ்வகுத்த

    சதுரன் நாவினுக் கரையன்"

என்று சிவரகசியம் பாடும்.

     இவ்வாறு புகழப்பெறும் சிறப்பு உடைய அப்பரடிகள் அமுதத் தமிழ்வாக்கும், அப்பெருமானார் வகுத்தருளிய தமிழ்மரபும், இலக்கிய நுட்பங்களும் பிற மாண்புகளும் கருதிய சேக்கிழார் இவரைத் `தமிழ் மொழித் தலைவர்' (தி.12 திருஞா.புரா. 598) என்றே கூறிப் போற்றுவர்.

     `இன்தமிழ்க்கு மன்னான வாகீசத் திருமுனி' (தி.12 திருநா. புரா. 147) `உடையவரசு உலகேத்தும் உழவாரப் படையாளி' (தி.12 தடுத்தாட்கொண்ட புரா.83) `வாக்கின் பெருவிறல் மன்னர்' (தி.12 திருஞா. புரா.269) என்றெல்லாம் சேக்கிழார் பாடும் பகுதிகளைக் காணலாம்.

பாவலர் - அப்பர்:

     திருநாவுக்கரசு சுவாமிகளின் தேவாரப் பாக்களில் பெரிதும் ஈடுபட்ட பிற்காலப் பெரியார் ஒருவர் பாடும் பகுதியும் இங்குச் சிந்திக்க இனிக்கும்தண்ணிய தமிழ்க் கவிதைகளை சிவபிரான் திருவைந்தெழுத்துத் திருப்புகழோடு குழைத்துப் பாடிக் கடலில் மிதந்த தாண்டக வேந்தருடைய அருளாற்றல் அப்பெரியார்க்கு எண்ண எண்ண இன்பமளிக்கின்றதுகல்லும் உருகும் கவிபாடிய அப்ப ரடிகளைப் `பாவலர்' என்றே அழைக்கின்றார் அவர்.

"செற்றார் புரம்எரி செய்தவில் வீரன் திருப்பெயரே

 பற்றா மறிவெண் டிரைக்கடல் நீந்திய பாவலனே"

ஆம் சிவப்பிரகாச சுவாமிகளுடைய புகழுரை இது.

தலைவாயில்

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை 1 - தொடர்ச்சி |  2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |