தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை 1 - தொடர்ச்சி | 1 | 2 | 3 | 4 | 5 | 7 | 8 |

ஒன்றரைக்கண்ணன்:

     இறைவனை ஒன்றரைக் கண்ணன் என்று நயம்பெற அப்பர் அடிகள் பாடுகின்ற திருப்பாடல் இனியதாகும் முக்கண்ணன், உமைக்கு ஒரு பாகம் கொடுத்தவுடன், செம்பாதித் திருமேனியில் ஒன்றரைக்கண் உடையனாயினான் என்கின்றார்:

இன்றரைக் கண்ணுடை யார்எங்கு மில்லை

      இமயமென்னும்

குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக்குக்

      கூறிட்டநாள்

அன்றரைக் கண்ணுங் கொடுத்துமை யாளையும்

      பாகம்வைத்த

ஒன்றரைக் கண்ணன்கண் டீர்ஒற்றி யூருறை

      உத்தமனே. (தி.4. .86. பா.7)

மற்றும் பல கற்பனை மாண்புகள்:

     இறைவன் கீழ்க்கணக்குப் பதிவேடு வைத்துக் கொண்டுள் ளான் என்றும், அதில் தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று அழுது காமுற்று அரற்றுகின்றாரையும், பொழுதுபோக்கிப் புறக்கணிப்பாரை யும் எழுதிக் கொள்வான் (தி.5. .21. பா.8) என்றும் அப்பரடிகள் அருளும் திருப்பாடல் கவிநயம் தோன்றும் பகுதியாகும்.

     `மெய் யானைத் தன்பக்கல் விரும்புவார்க்கு, விரும்பாத அரும்பாவி யவர்கட் கென்றும் பொய்யானை' (தி.6 .66. பா.7) என் றும், `தன்னுடைய திருவடியென் தலைமேல் வைத்த தீங்கரும்பை' (தி.6. .68. பா.4) என்றும், `பிறப்பானைப் பிறவாத பெருமை யானைப் பெரியானை அரியானைப் பெண் ஆண் ஆய, நிறத்தானை நின்ம லனை நினையாதாரை நினையானை நினைவோரை நினைவோன் தன்னை' (தி.6 .80 பா.7) என்றும் பாடும் பகுதிகள் படிக்கப்படிக்க இன்பமூட்டிச் சிந்திக்க வைத்துச் சிவநெறி காட்டும் சீர்க்கவிதைகள்.

     நின்றதிருத்தாண்டகத்துப் (தி.6. .94) பாக்கள் முழுதும் எல்லாமாய் விளங்கும் இறைவன் அருளெழிலை வகுத்துரைப்பன.  `ஊரல்ல அடவி காடே' (தி.6. .95 பா.5) என்று உறுதியாக உரைக்கும் கருத்தை எவ்வளவு அழகாகக் காண்கின்றோம்!

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே

      அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே

ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே

      உருகுவித்தால் ஆரொருவர் உருகாதாரே

பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே

      பணிவித்தால் ஆரொருவர் பணியாதாரே

காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே

      காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக்காலே.   (தி.6. .95. பா.3)

என்னுந் திருப்பாடல் நல்ல வடிவும், சொல்லமைப்பும் உடைய நறுங்கவிதையாக நின்று, எல்லாவற்றிற்கும் அவனருள் துணை நிற்க வேண்டும் என்ற பேருண்மையை மிக அழகாக அறிவுறுத்துகின்றது.

அருள்வீரம்:

கவிஞர்களுக்கே உரிய அருள்வீரம் அடிகட்கு இயல்பாக உள்ளது :

என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்

      இருநிலத்தில் எமக்கெதிரா வாருமில்லை

சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்

      சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்

ஒன்றினாற் குறையுடையோ மல்லோமன்றே

      உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்

பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்

      புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.     (தி.6 .98. பா.5)

"நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான

 காவலரே ஏவி விடுத்தா ரேனும்

      கடவமலோம்"   (தி.6..98.பா.6)

"மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும்

  விண்பால் திசைகெட் டிருசுடர் வீழினும் அஞ்சனெஞ்சே." (தி.4. .94. பா.9)

வானத்துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும்

தானந்துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும்

மீனம்படி லென்விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்

டூனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே.

(தி.4. .112. பா.8)

என்றெல்லாம் வரும் பகுதிகள் அடிகளாரது அஞ்சாமையை விளக்கும் பெருமிதச் சுவையுடைய பாடல்களாய்ப் பிறங்குகின்றன.

அகப்பொருட் கற்பனைகள்:

     தலைவனுடைய பெரும்புகழ் கேட்டுத் தலைவி மகிழும் நிலையில் நிகழும் மெய்ப்பாட்டை உறுபெயர் கேட்டல் என்பர் தொல் காப்பியர்.

     அகத்துறைப் பாடல் ஒன்றினால் இம்மெய்ப்பாட்டை அமைத்து அடிகள் அருளியுள்ளார் முதற்கண் தலைவி தலைவனின் (ஆரூர் இறைவன்) பெயரைப் பிறர்கூறல் கேட்டாள் அவன் இருக்கும் வண் ணம் பின்னைக் கேட்டாள் அவன் ஊர் வளம் பிறகு கேட்டாள் அவன் மேலேயே காதல் ஊன்றினாள் பித்தானாள் தாய் தந்தையரை, உலகிய லொழுக்க நிலைகளை நீத்து மறந்தாள் தன்னை மறந்து தன் நாமமும் கெட்டுத் தலைவன்தாள் தலைப்பட்டாள் என்கின்றார் ஒரு தலைவியின் அன்புநிலையைக் கூறுவது போன்று, உயிர் இறை வனைத் தோய்ந்து இன்புற்றிருக்கும் பேரின்ப நெறியை இலக்கிய அழகுபட எடுத்துரைக்கும் இத்திருப்பாடல் ஓதுதற்கினியது.

முன்ன மவனுடைய நாமம் கேட்டாள்

      மூர்த்தி யவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்

      பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

      அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்

தன்னை மறந்தாள் தன்னாமம் கெட்டாள்

      தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.   

(தி.6. .25. பா.7)

     அடிகள் அருளியுள்ள அகத்துறைப் பாடல்கள் முழுவதும் இலக்கிய அழகு ததும்புகின்ற கற்பனைக் கருவூலங்களாக உள்ளன பழனத்திறைவனிடம் தன் துயரைக் கூறும்படி ஒரு தலைவி இரக்கின் றாள் குயில்கள், கண்டகங்கள், முண்டகங்கள், கைதைகள், நெய்தல் கள், இளங்குருகு, தென்றல், நாரை, பூவைகள் ஆகியவற்றை நோக்கி உரைக்கின்றாள் என் புதுநலம் உண்டு இகழ்வானோ (தி.4 .12. பா.1) என் எழில் நலம் உண்டு இகழ்வானோ (தி.4 .12. பா.7) என்ற தொடர்களில் அவலம் ததும்பி நிற்கின்றது.

உண்டற்குரிய வல்லாப் பொருளை

உண்டன போலக் கூறலும் மரபே.  (தொல். பொருளியல். 18)

என்ற நூற்பாவிற்கு ஏற்ப, இவ்விடத்து உண்டு என்ற சொல்லாட்சி அழகு பயந்து நிற்றலைக் காணலாம்.

     நேற்று ஓடொன்று கரத்திலேந்திப் பிச்சைக்கென்று வந்தார் வெண்காடு மேவிய விகிர்தர் வந்தேன் இதோ என்று இல்லம்புக்கு மீண்டேன் அவர் அந்நிலையிலேயே நின்றார் ஐயம் கொண்டார் இல்லை அருகே வருவார் போல் நோக்கினார் நும் ஊர் ஏது, நும் நிலைமை ஏது? என்று கேட்டேன் ஒரு விடையும் கூறினாரில்லை என்று ஒரு பெண் கூறுவதாகக் கூறும் திருப்பாடல் (தி.6. .30. பா.3) அழகுமு நயமும் உடையது.

     புணர்ந்துழி உவகை, பிரிவுழிக்கலக்கம் அமைய வரும் பாடல்களும் பல எட்டு மலர் கொண்டு இறைவனை வழிபடல் வேண்டும் என்ற கருத்தைத் திருவதிகைத் திருப்பதிகம் முழுவதும் (தி.5. .54) உரைக்கின்றார்.  எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி, மட்டலர் இடுவார் வினை மாயுமால் என்கின்றார்.1

பழமொழியழகு:

     பழமொழிகளைப் பல இடங்களில் வைத்து அழகு செய்யப் பெற்ற பாடல்கள் பல தி.4: .5 பா.3, .97.பா.6, .5.பா.6, .75. பா.6, .5. பா.10, .5. பா.1, .99. பா.2, .27. பா.5, .5. பா.4, .5. பா.8, .96. பா.3, .52. பா.9, .26. பா.8, .5. பா.2, .75. பா.7, .5. பா.7, தி.5: .100.பா.5, .90. பா.3 ஆகிய பாடல்களில் நம்நாட்டுப் பழமொழிகள் பலவற்றை நயம் பெறக் கூறியுள்ளமை காணலாம்.

இயற்கை வருணனைகளிற் சில:

     அப்பர் அருள்மணம் கமழக் கமழ வாழ்ந்து வண்டமிழ் பாடி இறைவனை வணங்கியவராதலின் வருணனைகளுக்கு விரிவாக அப்பெருந்தகையாரின் அருட்பாடல்களில் இடமில்லை.

     ஞானசம்பந்தர் கவிதைகளில் இயற்கை வருணனைகள் விரிவாக இடம் பெற்றிருப்பது போல் அவ்வளவு இல்லாததற்குக் காரணம் இதுவே.

     ஆயினும் சிற்சில இடங்களில் இவ்வருணனைகள் வனப்புச் செய்யவும் காணலாம்.

மடுக்களில் வாளை பாய வண்டினம் இரிந்த பொய்கைப்

பிடிக்களி றென்னத் தம்மிற் பிணைபயின் றணைவ ரால்கள்

(தி.4. .55. பா.2)

"செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம்பழ மினிய நாடித்

 தங்கயம் துறந்து போந்து தடம்பொய்கை அடைந்து நின்று."

(தி.4. .55. பா.7)

அருகெலாங் குவளை செந்நெல்

      அகவிலை ஆம்பல் நெய்தல்

தெருவெலாம் தெங்கும் மாவும்

      பழம்விழும் படப்பை எல்லாம்

குருகினங் கூடி ஆங்கே

      கும்மலித் திறகு லர்த்தி

மருவலாம் இடங்கள் காட்டும்

      வலம்புரத் தடிகளாரே. (தி.4. .55. பா.8)

"பைங்கால் தவளை பறைகொட்டப் பாசிலை நீர்ப்படுகர்

 அங்காற் குவளைமேல் ஆவி உயிர்ப்ப அருகுலவும்

 செங்காற் குருகிவை சேரும் செறி கெடி லக்கரை."

(தி.4. .104. பா.2)

பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற

புனற்காந்தள் கைகாட்டக் கண்டுவண்டு

தென்காட்டும் செழும்புறவில் திருப்புத் தூரில்

திருத்தளியான் காண்அவன்என் சிந்தையானே.

(தி.6 .76. பா.3)

            "...............வளங்கொள் மேதி

சேடேறி மடுப்படியுந் திருப்புத் தூரில்"

(தி.6. .76. பா.4)

அறங்கூறும் இயல்பு:

     இலக்கியம் என்றால் கற்பனை முதலிய அனைத்துடன் அறங்கூறும் இயல்பும் அதில் இருத்தல் வேண்டும் ஆங்காங்கு உல கர்க்கு நெறிகாட்டும் உண்மைகள் அதனுள் பொதிந்திருத்தல் வேண் டும் அவ்வரிய உண்மைகள் நேரடியாக உரைக்கப் பெறுதலும் உண்டு தோத்திரப் பாக்களின் தொகுதியாக உள்ளமையால் அத்தகு உண்மை களை - நீதிக் கருத்துக்களை - அப்பர் வாக்கில் ஆங்காங்குக் காணலாம்.

     ஈகை என்பது தலையாய அறம்.  `செல்வத்துப் பயனே ஈதல்' என்று புறநானூறு கூறும்.  `ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல் பொருள்' என்று ஔவையார் வாக்கு விளக்கும் ஈகை எனும் உயர் பண்பு உலகில் இருத்தலே உலகின் இன்பம்.

     வாழ்வுக்கு அடிப்படை `வறியார்க் கொன்றீவதே ஈகை' என்று விளக்கிய திருவள்ளுவர், `அற்றார் அழிபசி தீர்த்தல்' என்று பொருள் வைப்புழியை இனிது காட்டி, `உரைப்பார் உரைப்பவையெல்லாம் இரப்பார்க்கென்று, ஈவார் மேனிற்கும் புகழ்' என முடித்து ஈவார்க்கே புகழுண்டு என்று நிறுவியுள்ளார்.

     அருளாசிரியராகிய அப்பரடிகளோ, ஈபவர்க்கே அருள் உண்டு என்று பாடுகின்றார்.

     `கரவு கொள்வோர் நிலையை எண்ணினால் உள்ளம் கரைந்து ஒளிக்கும்' என்று வள்ளுவர் கூற, அடிகள் அவ்வாறு கரப்பவர் கடுநரகங்கள் சேர்வர் என விளக்குகின்றார் அடிகளின் அவ்வறவுரை இது

இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்

கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்.

(தி.4 .38. பா.10)

     இவ்வாறே கரவுடையார் நெஞ்சிற்கு அரியவனாக, கரவாத வர் பால் விரவுவோனாக உள்ளான் இறைவன் என்றிசைக்கின்றார்.

கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானைக் கரவார்பால்

விரவாடும் பெருமானை.

(தி.4. .7. பா.1)

     அறம் ஒன்றையே உள்ளம் நாட வேண்டும் அவ்வாறு அறம் கனிந்த நெஞ்சுடையாரே, ஆசை, சினம் - வெறுப்பு முதலிய தீக் குணங்களிலிருந்து விடுபட முடியும் அவ்வாறு விடுபடுதலே அறி வின் பயன் என்று குறிப்பாக உணர்த்தும் பகுதி பின் வருவது :

"அறத்தையே புரிந்த மனத்தனாய்

      ஆர்வச்செற்றக் குரோதம் நீக்கியுன்

  திறத்தனாய் ஒழிந்தேன் திருவாரூர் அம்மானே."

(தி.4. .20. பா.8)

"காலமும் கழிய லான கள்ளத்தை ஒழிய கில்லீர்

 கோலமும் வேண்டா ஆர்வச் செற்றங்கள் குரோதம் நீக்கில்

 சீலமும் நோன்பு மாவர் திருச்செம்பொன் பள்ளி யாரே."

(தி.4. .29. பா.6)

     இறைவனைப் பற்றிச் சொல்லிச் சொல்லிக் காலங் கழித்தல் அறிவுடைமையாகாது நீதியால் தியானித்தலே அறிவுடைமையாகும் என்பது ஒரு தக்க அறிவுரை:

"ஓதியே கழிக்கின் றீர்கள் உலகத்தீர் ஒருவன் தன்னை

 நீதியால் நினைய மாட்டீர் நின்மலன் என்று சொல்லீர்."

(தி.4. .41. பா.9)

     உலகியலிற் கிடந்து அழுந்திப் பின்னும் பின்னும் துயரப் படுதலினின்றும் விடுபட இறைவனை நினைத்தலில் வன்மை எய்துவீர் களாக என்ற உபதேசம் இனிய ஒன்றாகும்.

மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும்

வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதே

கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை

நினையுமா வல்லீ ராகில் உய்யலாம் நெஞ்சி னீரே.

(தி.4. .71. பா.1)

தலைவாயில்

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை 1 - தொடர்ச்சி | 1 | 2 | 3 | 4 | 57 | 8 |