தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை 1 - தொடர்ச்சி | 1 | 2 | 3 | 4 | 6 | 7 | 8 |

அருளியற் கற்பனை:

     கற்பனை நலம் கனிந்த அப்பரடிகள் கவிதைகள் என்றும் அழியாச் சிறப்புடையவை.

     கற்பனை என்பது இலக்கிய அழகுகளில் தலைசிறந்து நிற்கின்றது கற்பனை கலவாத கவிதை உயிரின்றி நிற்கும் உடல்போல் உள்ளது அதற்கு இயக்கம் இல்லை கற்பனை உயிரூட்டச் சக்தியாக நின்று கவிதையை உயிர்படைத்து இயக்குகின்றது.

     சங்க காலக் கவிதைகள் முதல் அனைத்தும் கற்பனை நலம் செறிந்து விளங்குகின்றன பழுத்த அருளியற் புலவரான அடிகள் கற்பனை செய்து தம் படைப்புத் திறத்தால் சிற்சில அரிய கவிதைகளை இனிக்கப் பாடுகின்றார்.

     மேலைநாட்டுக் கவிஞர்கள் கற்பனையை இரு கூறாக்குவர் ஒன்று ஆக்கக் கற்பனை, மற்றது மீள்நினைவுக் கற்பனை.

     இவற்றுள், ஆக்கக் கற்பனையே மிக விரிந்ததும் ஆழமான தும் ஆகும். பொருளைக் கண்டவுடன் அதன் புறத்தோற்றம் முதலிய வற்றில் ஈடுபடாமல் அதன் அகத்தை ஊடுருவி நோக்கியும், உட்க ருத்தை அறிந்தும் அவற்றின் பயனாகத் தோன்றுவது இந்தக் கற்பனை இம்மட்டோடு நில்லாமல் இக்கற்பனை ஆக்கல் தொழிலில் ஈடுபடு கிறது அப்பொருளின் உண்மைத்தன்மை, இவ்வுலகில் அது நிலவுவ தற்குரிய காரணம் ஏனைய பொருள்களோடு இதற்குள்ள தொடர்பு முதலியவற்றை வரிசைப்படுத்திக் கவிஞன் கூறுகையிற்றான் அவ னது ஆக்கச் சக்தி வெளிப்படுகிறது என்பர்.1

     சிதம்பரத்தில் ஆனந்தத் தாண்டவம் செய்யும் பெருமானைக் கோடிக்கணக்கான மக்கள் கண்டதுண்டு எனினும், திருநாவுக்கரசர் என்ற ஒரு கலைஞர் மட்டுமே அக்கலையின் உயிர்ப்புத் தன்மையை உணருகிறார் தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம் என்று வந்தாய் என்னும் எம்பெருமான்றன் திருக்குறிப்பே (தி.4 .81. பா.2) என்று அவர் பாடும்பொழுது பெருமானின் எடுத்த திருக்கை அவருடன் பேசியதை அறிய முடிகிறது.2

கற்பனையின் கடமை:

     மனம் அல்லது ஆத்மாவின் சக்தியே கற்பனை அது புலன் உணர்வு, ஞாபகம், உணர்ச்சி, பகுத்தறிவு என்ற அனைத்தினும் வேறுபட்டு உள்ளது அது, இவற்றின் துணைக்கொண்டே செல்கிறது அழகால் உலகம் விரிந்து வளர்கிற தென்றால் ஆக்குவது கற்பனையின் கடமையாம் என்பர்.3  இக்குறிப்பை அடிகள் திருவாக்கில் தெளிவு பெறக் காணலாம்.

அற்புதமான அழகு:

     சிவபிரான் திருமுடியிற் பாம்பும், பிறையும் உள்ளன அவர் கரத்தில் நகுதலையும் உள்ளது அம்மையொரு பாகத்தில் உள்ளாள் இத்திருக்காட்சி அடிகள் உள்ளத்தே விரிகிறது பாம்பைக் கண்டு அஞ்சுகின்றாளாம் அம்மை அம்மையை, நீலமயிலோ என்று அப் பாம்பு ஐயுற்று அஞ்சுகின்றதாம் பிறையோ, அம்மையின் நுதலைக் கண்டு இவ்வழகு தனக்கில்லையே என்று எண்ணி ஏங்குகின்றதாம் கையிற் பிடித்த கபாலமோ இதனைக் கண்டு நகுகின்றதாம்.

     ஆம் இப்படித் தோன்றுகிறது அடிகளின் கற்பனைக் கண் ணுக்கு அச்சம், ஐயம், ஏக்கம், நகை ஆகிய பண்புகளை இப்படிக் கண்டு காட்டுகின்றார் முரண்பட்ட இப்பண்புகளை இணைத்து அற்புதமான அழகை உருவாக்குகின்றார் அருளியற் புலவர் கவியின்பம் ததும்பும் இக் கற்பனைக் கருவூலம் பின்வருவதாகும்.

கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்

கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்

கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே

கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே.    (தி.4. .10. பா.8)

அச்சக் கற்பனை:

     உலகெலாம் ஈன்று காத்தளிக்கும் அன்னை ஒரு பாம்பைக் கண்டு அஞ்சுவாள் என்பது அறிவுக் கண்ணுக்குப் பொருந்தாத காட்சி தான். ஆனால் கற்பனைக்கண்ணுக்கு, கலைக்கண்ணுக்கு, உணர்வுக் கண்ணுக்கு ஒத்த காட்சியாகவே அஃது உள்ளது அடிகள் பாடும் அருங் கவிதையே இதுவும்:

நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞைஎன்று

வேகத்தைத் தவிர, நாகம் வேழத்தின் உரிவை போர்த்துப்

பாகத்தின் நிமிர்தல்செய்யாத் திங்களை மின்னென் றஞ்சி

ஆகத்திற் கிடந்த நாகம் அடங்கும்ஆ ரூர னார்க்கே

(தி.4. .53. பா.2)

நாகம் திங்களை மின்னென்று கருதி அடங்கியொடுங்கும் என்றும் கூறு வது நயம் மிக்க பகுதியாகும்.

இறைவன் அருளாடல் பற்றி:

     இறைவனுடைய திருவிளையாடலை எண்ணி எண்ணி மகிழ் கின்றார் அடிகள் அவற்றை அடிகள் இலக்கிய அழகுடன் எடுத்துரைக்கும் இனிய கவிதைகள் பல அவற்றுட் சிலவற்றை இங்குக் காண்போம். 

     வினவுவோர்போல ஏதோ வினவி நின்ற இறைவன், திடீர் என்று அடிகள் உள்ளத்திற் புகுந்து ஒளிந்து கொண்டானாம் வினவி வந்தவனை, அடிகள் சுழன்று சுழன்று பக்கமெங்கும் தேடுகின்றனராம் கள்ளரோ என்னையறியாது என் உள்ளத்தே புகுந்து கொண்டீர் எனக் கேட்கின்றாராம். அதற்கு இறைவன் மலர்ந்து சிரித்தபடியே நாம் வெள்ளரோம் (வஞ்சனை யில்லாதேம்) என்று கூறிக் கொண்டே வெளிப்பட்டுத் திருக்காட்சி வழங்கினாராம் இவ்வற்புதக் கற்ப னையை உடைய திருப்பாடல் இது.

வெள்ளநீர் சடைய னார்தாம் வினவுவார் போல வந்தென்

உள்ளமே புகுந்து நின்றார்க் குறங்குநான் புடைகள் போந்து

கள்ளரோ புகுந்தீர் என்னக் கலந்துதான் நோக்கி நக்கு

வெள்ளரோம் என்று நின்றார் விளங்கிளம் பிறைய னாரே.  (தி.4. .75. பா.9)

     இவ்வாறு தம் உள்ளத்தே இறைவன் இருந்தாலும், மூச்சினோடு வெளியே வந்தாலும் தம்மால் அறியப்பட முடியாதபடிக் கள்ளத்தால் நிற்றலையும் அடிகள் கனிந்து பாடுகின்றார்.

"உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும்

 கள்ளத்தே நிற்றியம்மா எங்ஙனம் காணுமாறே."

(தி.4. .76. பா.7)

     என்னைவிட யாரும் எனக்கினியவர் என்றில்லை என்னை விட எனக்கு இனியவன் ஒருவன் உள்ளான் என்று சுவைபெறக் கூறத் தொடங்கி, அவன் என்னுள்ளே நிற்பவன் என்று முடிக்கும் அழகுடைத் திருப்பாடல், இங்கு அறியத்தக்கது.

என்னி லாரும் எனக்கினி யாரில்லை

என்னி லும்மினி யானொரு வன் னுளன்

என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்

கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே.       (தி.5. .21. பா.1)

     இவ்வாறு தம்முள்ளமே கோயிலாகப் புகுந்த இறைவன் புகுந்த சுவடும் தெரியவில்லை என்கின்றார் அடிகள் யாதும் சுவடு படாமல் ஐயாறடைந்த உத்தமரன்றோ அடிகள் அவர் கயிலையி லிருந்து ஐயாறு புகுந்த சுவடு தெரியாமற் போனது போலவே இச் சுவடும் தெரியவில்லையாம்.

"என்மனமே ஒன்றிப்புக்கனன் போந்த சுவடில்லையே."

(தி.4. .81. பா.3)

என்று நயப்புறப் பாடுகின்றார்.

பிறவி வேண்டும்:

     மனிதப் பிறவி வேண்டும் என்று அப்பரடிகள் கூறுவது கருத் துப் புரட்சிபோல் தோன்றும் வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை (குறள் 362) என்ற நெறி பிறழாத் தவவேந்தரா இவ்வாறு கூறுகின்றார் என்று தோன்றும்.

     ஆனால், குனித்த புருவம், கொவ்வைச் செவ்வாய், குமிண் சிரிப்பு, பனித்தசடை, பவளமேனி, பால்வெண்ணீறு, எடுத்த பாதம் ஆகியவற்றைக் காணப்பெற்றால் தான் மானிடப் பிறவி வேண்டுவது என்று விளக்கங் கூறுங்கால் அமைதியும் இன்பமும் கொள்கின்றோ மல்லவா உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ளக்கிழியில் உருவெழுதி உருகி உரைக்கும் அப்பர் அடிகள் அருட்கவிதை இது:

குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்

இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே.

(தி.4. .81. பா.4)

     இத்திருப்பாடல் அழகிய சொல்லாட்சியும், அரும்பொருட் செறிவும், அடைமொழிச் சிறப்பும், கற்பனையிற் கண்டாலும் கனிவிக் கும் அருள்நலமும் உடைய அருட்பனுவல் திருவிருந்தாக உள்ள மையை தமிழ் அன்பர்களும் சமய அன்பர்களும் உணரலாம்.

திருவொற்றியூரர் திருமுடி:

     திருவொற்றியூர்ப் பெருமானின்மேல் தேன்போலுந் திருப் பதிகம் ஒன்றை அடிகள் அருளியுள்ளார் அப்பெருமானுடைய திரு முடி, அடிகளுடைய கற்பனைப் பார்வையை எழுப்புகின்றது.

     கொன்றை, வெண்டலை, கங்கை, அரவம், திங்கள் ஆகிய அனைத்தையும் அங்குக் காண்கின்றார் கொன்றை எந்த நிலத்தின் கருப்பொருள் முல்லையென்பது நினைவுக்கு வருகின்றது கபாலம் சுடுகாட்டை நினைவூட்டுகின்றது கங்கை கலத்தற்கு இடமாகிய கடல் நினைவுக்கு வருவதும் இயல்பே பாம்பு உறையும் இடமாகிய புற்றை நினையாமல் இருக்கவியலாது திங்கள் ஒளிவிரிக்கும் விசும்பும் தோன்றுகின்றது இவ்வாறு முல்லையாக (கொன்றையினால்), களர் நிலமாக (வெண்டலையினால்), கடலாக (கங்கையால்). புற்றாக (அரவத்தால்), வானமாக (திங்களால்) விளங்குகின்றதாம் பெருமான் திருமுடி.

     இனிக்க இனிக்க எழுகின்றது இலக்கிய எழிலுடன் அருட் கவிதை.

அங்கட் கடுக்கைக்கு முல்லைப் புறவம் முறுவல் செய்யும்

பைங்கட் டலைக்குச் சுடலைக் களரி பருமணிசேர்

கங்கைக்கு வேலை அரவுக்குப் புற்று கலைநிரம்பாத்

திங்கட்கு வானம் திருவொற்றி யூரர் திருமுடியே.

(தி.4. .86. பா.10)

     இவ்வாறு பாடும் அடிகள் நகைச் சுவையெழில் தவழ ஓர் விண்ணப்பம் செய்கின்றார்.

வங்க மலிகடல் நாகைக்கா ரோணத்தெம் வானவனே

எங்கள் பெருமானொர் விண்ணப்பம் உண்டது கேட்டருளீர்

கங்கை சடையுட் கரந்தாய்அக் கள்ளத்தை மெள்ளஉமை

நங்கை அறியிற்பொல் லாதுகண் டாய்எங்கள் நாயகனே.   (தி.4. .103. பா.8)

எவ்வளவு அழகாக அமைந்துள்ளது இத்திருப்பாடல் :

சடைமுடியில்:

     இவ்வாறு கங்கையைச் சடையில் வைத்துள்ளமை உமையம் மைக்குத் தெரிந்தால் பொல்லாது என்று கூறுவது உலகியல் நலம் உரைக்கும் பகுதியாகவும் உள்ளது தனக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொள்வதுடன் அவளைத் தனக்குத் தெரியா மல் ஒளித்துக்கொள்ளும் கணவனை அவன் மனைவி எப்படி உணர் வாள் என்ன நிகழும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாகும் அதனைப் பொல்லாது கண்டாய் என்ற இரு சொற்களில் விளக்கு கின்றார் இப்படியே ஒன்றற்கொன்று பகையாந்தன்மையுடைய பிறை யையும் பாம்பையும் சடையில் வைத்தமை குறித்தும் அடிகள் அரு ளும் நயப்பகுதி இனியதாகும்.

"பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசறியோம்

 எய்தப் பெறின்இரங் காதுகண் டாய்நம் இறையவனே."    (தி.4. .106. பா.1)

திருவடிச் செம்மாப்பு:

     திருமாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனைத் தம்முள்ளே தேடிக் கண்டுகொண்ட அப்பரடிகள் தம் அரிய அருள் வாய்ப்பை எண்ணி எண்ணி இறுமாந்திருக்கும் தலைவர் செம்மாந்து நிற்கும் செந்தமிழ் நாவலர்.

"திருவடி தரித்துநிற்கத் திண்ணம் நாம் உய்ந்தவாறே."

(தி.4. .71. பா.10)

என்றும்,

திருவடி சுமந்து கொண்டு காண்கநான் திரியுமாறே.

(தி.4. .75. பா.10)

என்றும் பாடி மகிழ்பவர் உடலுயிர் வேறுபட்டால், இறைவன் திருவடிக் கீழ்த் தலைமறைவு வேண்டி, உருக்கமுடன் ஓதுகின்றார்.

இருகாற் குரம்பை இதுநா னுடைய திதுபிரிந்தால்

தருவாய் எனக்குன் திருவடிக் கீழொர் தலைமறைவே.

(தி.4. .113. பா.2)

தொழப்படுதலும் தொழுவித்தலும்:

     தனக்குத் தொண்டு புரிவோர்க்கு இனிது விளங்கி அருளிப் பாடு புரியும் ஏந்தலாக உள்ள இறைவனை எண்ணுந்தொறும் கழிமகிழ் வெய்துகின்றார் இக்கவியரசர் தொண்டர்களைத் தேவர்களால் தொழுதற்கேற்ற சிறப்புடையவராக்குகின்றானாம் தன்னைத் தேவர் கள் தொழுதேத்தும் தகுதி உடையவன் அத்தகு சிவபுண்ணியம் செய்த தேவர்களும் தொண்டர்களுக்கு வழிபாடு செய்ய வைப்பன் எனின் அவன் கருணைக்கு அளவும் உண்டோ அக்கருணையைச் சொற்பொருட் பின்வருநிலையணி அமையப்பாடும் பகுதி இது.

தொழப்படுந் தேவர் தொழப்படு வானைத்

      தொழுதபின்னைத்

தொழப்படுந் தேவர்தம் மால்தொழு விக்கும்தம்

      தொண்டரையே.       (தி.4. .112. பா.5)

தம் நிலை பற்றிய கற்பனை:

     தம் நிலைகளைக் கற்பனை செய்கின்றார் அடிகள் துறக்கப் படாத உடலைத் துறக்க வேண்டும் என்பது அவர் எண்ணம் உறுதி யான எண்ணம் அப்படித் துறந்தால் ஒருவேளை தூதுவரோடு இறத் தலும் கூடும்.

     ஆயின் அதன்பின் இருவிசும்பில் ஏறுதல் அடுத்த நிலை யாதலும் கூடும் அதன்பின் மீண்டும் பிறத்தலும் கூடும் அப்படிப் பிறக்கும் நிலை வந்துற்றால், என் இறைவனை, பிறையணிந்த நீள் சடைப் பெருமானை மறந்துவிடுவேனோ என்று உள்ளம் அழல் கின்றார்.

     தம் நிலைகளைக் கற்பனை செய்து, அவ்வாறு வருமுன்னர்க் காத்தல் செய்வது தம் குறிக்கோளாதல் வேண்டும் என்பது அடிகள் கருத்து.

     அவ்வற்புதக் கற்பனையமைந்த திருப்பாடல் பின்வருவ தாகும் :

துறக்கப் படாத உடலைத் துறந்துவெந் தூதுவரோ

டிறப்பன் இறந்தால் இருவிசும் பேறுவன் ஏறிவந்து

பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்

மறப்பன்கொ லோஎன்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே. (தி.4. .113. பா.7)

தலைவாயில்

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை 1 - தொடர்ச்சி | 1 | 2 | 3 | 4 | 6 | 7 | 8 |