தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை 1 - தொடர்ச்சி | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 8 |

சாத்திரம் பல பேசிச் சிலர் வம்புடன் காலம் கழித்துத் திரித லையும், அவர்கள் பெரிதாகக் கருதும் கோத்திரமும் குலமும் கொண்டு ஒன்றும் செய்யலாகாது என்பதையும் மிக உறுதியாக உரைக்கின்றார்.

சாத்திர ரம்பல பேசும் சழக்கர்காள்

கோத்திர முங்குல முங்கொண் டென்செய்வீர்

பாத்திரஞ் சிவம் என்று பணிதிரேல்

மாத்தி ரைக்குள் அருளும் மாற்பேறரே.      (தி.5. .60. பா.3)

     மனிதரில் தலையான மனிதராக வாழவேண்டும் என்று உறுதி ஒவ்வொருவர்க்கும் வேண்டும்.  `உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என் பார் திருவள்ளுவர் கல்வி கற்பதுடன் இறைவனைக் கனிந்து போற்று வோரை தலையானவர் என்று உரைக்கின்றார் அடிகள்.

"கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப்

 புனித னைப்பூவ னூரனைப் போற்றுவார்

 மனித ரில்தலை யான மனிதரே"  (தி. 5 . 65 பா. 6)

நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென்

குன்ற மேறி யிருந்தவம் செய்யிலென்

சென்று நீரிற் குளித்துத் திரியிலென்

என்றும் ஈசனென் பார்க்கன்றி யில்லையே.

      (தி. 5 . 99. பா. 8)

"செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று

 பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ"   (தி. 5 . 100 பா. 2)

வாது செய்து மயங்கும் மனத்தராய்

ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள்

யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம்

மாதே வன்னலால் தேவர்மற் றில்லையே.    

(தி. 5 . 100 பா. 4)

என்பனவும் தக்க செவியறிவுறூஉக்களாக இலங்குகின்றன.  `திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில்' எனத் தொடங்கும் திருத்தாண்டகம் (தி. 6 . 95 பா. 6) உலகமாந்தர் நெறியறிந்து உய்தி பெறற்குரிய உயர் ஞான விருந்தாக ஒளிர்கின்றது இவ்வாறு ஆங்காங்கு அறவுரைகள் பலவற்றையும் அப்பர் அருளிலக்கியத்தில் காணலாம்.

சொல்லாட்சியழகு:

     "சொற்குறுதிக் கப்பரெனச் சொல்லு" என்ற வெண்பாவடி அப்பரடிகளின் சொல்லாட்சிச் சிறப்பை எடுத்தரைப்பதாகும் கவிஞ ரின் கவிதைச்சிறப்பு சொல்லாட்சியில் விளங்குகின்றது.

     சொற்களை இடமறிந்து, தரமறிந்து எடுத்தாளும் எழில் உயரிய பெருங் கவிஞர்களுக்கே வருவதாகும் சொல்வன்மை எனும் அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவன சொல்லுதல் வன்மை மட்டு மன்றி; எழுதுங்கால் சொல்லின் வன்மையறிந்து எழுதும் திறமையும் குறித்ததாகும் வெல்லும்சொல் இன்மை யறிந்து சொல்லைப் பயன் படுத்துவர் உயர்பெருங்கவிஞர்.

     அப்பரடிகள் ஆளும் சொற்கள் இனிய, எளிய தமிழ்ச் சொற் களாக உள்ளன உணர்ச்சிப் பிழம்புகளாக உள்ளன சங்கநூல், திருக் குறள் ஆகிய சான்றோர் நூற்சொற்கள் ஆங்காங்கு அப்பரடிகள் திருக் கவிதைகளில் திகழ்ந்து, தமிழின் தனிநலங்காட்டி நிற்கின்றன ஏற்ற சொல்லை ஏற்ற இடத்தில் பயன்படுத்தி இனியதொரு பொருளைப் பெறவைப்பதே `சொல்லாட்சிச் சிறப்பு'1 என மேலைநாட்டார்  போற்றுவர்.

இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை

நச்சுவார்க் கினியர் போலும் நாகஈச் சரவனாரே

(தி. 4. . 66 பா. 1)

என்ற பகுதியில், நச்சுதல் என்ற சொல்லைக் காணலாம் நசை - நச்சு - நச்சினார் - நச்சினார்க்கு இனியர் என வருவது இச்சொல்; விருப்பம் என்ற பொருள் உடையது விரும்புவார்க்கு இனியவராய் - கற்ற வர்கள் உண்ணுங்கனியாய் - கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியாய் உள்ள, இறைவனை நல்ல சொற்களால் நச்சுவார்க்கினியர் என்று போற்றுகின்றார் அடிகள் உளமார விழைதலே நச்சுதல் இச்சை வெறும் ஆசையைக் குறிக்கும் மேம்போக்கான சொல்லாக இருக்க, நச்சுதல் ஆழமான சொல்லாய்ச் சுடர்விடுகின்றது அதனை அடுத்துப் பெய்து அச்சொல்லினை ஆளும் திறத்தில் முந்துகின்றார் அடிகள்.

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்

நச்சு மரம்பழுத் தற்று.   - குறள் 1008

என இச்சொல் வள்ளுவராலும் ஆளப்பட்டுள்ளது. `ஒன்றியிருந்து நினைமின்கள்' என்று உரைக்கும் உத்தமராதலின், அவ்வாறு ஒன்றித்த விழைவை இச்சொல்லாற் குறித்த அருமை பாராட்டற்குரியது.

     இவ்வாறே நம்பு, மேவு எனும் இரண்டு சொற்களும் நசை என்னும் பொருளைக் குறிக்கும் பழந்தமிழ் உரிச்சொற்கள்.1  இவற் றையும் அடிகள் உரிய இடங்களில் கையாண்டு ஒளி, பெறுவிப்பர்.

"நம்புவார்க் கன்பர் போலும் நாகஈச் சரவனாரே"

(தி. 4 . 66 பா. 4)

     இவ்விடத்து, நச்சுவார் எனும் பொருளிலேயே நம்புவார் என்னுஞ் சொற்கு விளக்கம் கூறுமாறு அடிகள் அருளியுள்ளார்.

     அன்னை எனுஞ்சொல்லை, அன் என்றும் சில இடங்களில் ஆளுவது அடிகள் இயல்பு இதனை அடியொற்றிச் சுந்தரர் பாடுவதும் இங்கு ஒப்பிடத்தக்கதாகும்.2  ஐ வியப்பு எனும் பொருளிலும், கை ஒழுக்கம் என்ற பொருளிலும் வருவன இவற்றை அடிகள் அருளும் திறம் அறியத்தக்கது.3

     உறைப்பு என்னும் சொல்லை உறுதி எனும் பொருளில் அடிகள் வழங்குவர் நன்கு உள்ளத்தில் உறைந்து பலன் பெருக்கும் நிலை தானே உறுதி என்பது! இந்த உறைப்பு என்பது ஓர் அரிய சொல்லாட்சி.

"திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்

  உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந்நின்றார்

(தி. 5 . 50 பா. 8)

     அப்பரடிகள் அருளிய இச்சொல்லின் அருமையைச் சேக்கி ழார் மிகவியந்து போற்றி உள்ளங்கொண்டிருத்தல் வேண்டும் இந்த உறைப்பு - அல்லது அன்பின் உறுதியைத் தமிழால் அழகுபடுத்தி இன் னும் விளக்குகின்றார்.

பூதம் ஐந்தும் நிலையில் கலங்கினும்

மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்

ஓது காதல் உறைப்பின் நெறிநின்றார்

கோதி லாத குணப்பெருங் குன்றனார்.   

(தி. 12 பெரிய திருக்கூட்டச் சிறப்பு-7)

     இறைவன் அருட்புகழைக் கேளாத செவிகளை உடையாரை அடிகள் கூறும் வகையில் துளையிலாச் செவித் தொண்டர்காள் என் கிறார் இவ்விடத்துக் `கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால், தோட்கப்படாதசெவி' (குறள். 418) என்பதில் வரும் `தோட்கப் படாத செவி' எனுந்தொடரை இன்னும் விளக்கமாகத் துளையிலாச் செவி என்று அருளியுள்ளமை அறியத்தக்கது.

இளைய காலமெம் மானை அடைகிலாத்

துளையி லாச்செவித் தொண்டர்காள்     (தி. 5 . 66 பா. 3)

     தோட்கப்படுதல் என்ற சொல் விளங்குதற்கருமையின் துளைக்கப்படுதல் என்ற சொல்லால் அதனை எளிமைப்படுத்தி ஆளு வது அடிகளுக்கு அவசியமாயிற்று அரிய சொற்களை ஆண்டு புரி யாமல் வைப்பதைவிட, எளிய சொற்களை எடுத்துரைத்து விளங்க வைப்பது அறிஞர் இயல்பாதலை எடுத்துரைக்கவும் வேண்டுமோ?

     நண்பன் என்ற சொல்லால் காதலனைக் குறிக்கும் (தி. 5 . 66. பா. 9) இடமும் உண்டு பாடி என்னும் சொல் ஊரைக் குறிக்கும் பழந் தமிழ்ச்சொல். பட்டினம், பாடி, பாக்கம் என்பன நெய்தனிலத் தார்களுக்கு வழங்கிய பெயர்கள் இவை சிறுபான்மை உள்நாட்டு ஊர்களுக்கும் மாறிவழங்கும் இயல்பையும் பின்பு பெற்றன ஊர் காவலைப் பாடி காவல் என்பதும் மரபே அடிகள் வாக்கில் இதனைக் காண்க.

"கோடி காவனைக் கூறிரேற் கூறினேன்

 பாடி காவலிற் பட்டுக் கழிதிரே"   (தி. 5 . 78. பா. 2)

"கோடி காவனைக் கூறாத நாளெலாம்

 பாடி காவலிற் பட்டுக் கழியுமே"   (தி. 5 . 78 பா. 6)

     பறைதல் என்னும் சொல்லைக் கெடுதல் எனும் பொருளிற் கையாண்டுள்ள அருள்வாக்குக்கள் பல இணர் என்றால் பூங்கொத்து எனப் பொருள்படும் அப்பெயர்ச் சொல்லினடியாக ஓர் இலக்கிய நயமிக்க மென்சொல்லை அடிகள் படைத்துள்ளார்.  கொத்தாக மலர்ந்து எனப் பொருள்படும் வினையெச்சத்தை அதிலிருந்து உரு வாக்கி இசைக்கின்றார்.

"இணர்ந்து கொன்றைபொன் தாது சொரிந்திடும்"

(தி. 5 . 97. பா. 20)

தயாமூல தன்மநெறி:

     `தயாமூல தன்மம்' (அன்பும், அன்பிற்கு அடிப்படையான அறமும்) என்னும் புதிய சொற்றொடரை அடிகள் வாக்கிற் காண்கின் றோம். அன்பும் அறமுமாகிய பண்புகள் செறிந்த மெய்ம்மையைத் `தயா மூலதன்மம்' என்ற நறுஞ்சொற்றொடரால் ஆண்டு விளக்கு கின்றார்.

".......... தயாமூல தன்ம மென்னும்

 தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம்

 நலங்கொடுக்கும் நம்பியை..." (தி. 6 . 20 பா. 6)

"தயாமூல தன்மவழி எனக்கு நல்கி

 மனம்திருத்தும் மழபாடி வயிரத் தூணே"  (தி. 6 . 40 பா. 6)

     இவ்விடத்துச் சைவசித்தாந்தச் செந்நெறியைக் குறிக்க இத் தயாமூல தன்மவழி எனுஞ்சொற்றொடரை அடிகள் கனிந்து அருளி யுள்ளமை காணலாம் மனிதர்களாகப் பிறந்த நாம், அன்பும் அறமும் கொண்டு உயர்ந்தால் அதனினும் சீரியவாழ்வு உண்டோ? அவ்வாழ் வினை அடையும் நெறியே இத் தயாமூலதன்மம் என்னும் முப் பெருஞ்சொற்களிலே அடங்கியிருக்கின்றது உலகு இந்நெறி நின் றால் பூசல் உண்டோ? அமைதியன்றோ உலகிற்செழிக்கும்! மாந்த ரினத்தை வாழ்விக்கும் மெய்ம்மருந்தை, உலகிற்கு எடுத்து உரைக்கும் நீர்மையை இத் திருக்கவியிற் காணலாம்.

     பரம்பொருளையே தெய்வமென்று பற்றாது, சிறுதெய்வங் களைப் பற்றுவோர் மனத்தைப் பாறையாக்கி, `மனப்பாறை'கட்கு நல்லுரை ஏறுமோ (தி. 5. . 100. பா. 2) என்கின்றார் ஓரிடத்து.

     மயில் + ஆர்ப்பு + ஊர் = மயிலாப்பூர் என்று காண்கின்றோம் இதனை (மயிலா(ர்)ப்பு) மயிலாப்பு என்றே அடிகளும் கூறக் காண்கிறோம். (தி. 6 . 2 பா. 1, . 7. பா. 12, . 45, பா. 6)

     பழவினையை, பண்டை வல்வினை (தி. 5. . 7. பா. 11) தொல் வினை (தி. 5 . 97. பா. 23) முன்னை நான்செய்த பாவம் (தி. 5. . 64. பா. 7) என்றும், மேலைவினையை மேலை ஏதங்கள் (தி. 4. . 35. பா. 5) மேலைவினை (தி. 5 . 5 பா. 8, தி. 5 . 14. பா. 5) என்றும் ஆளுவது அடிகள் இயல்பு.

     சில சொற்களை விளக்கியுரைத்தலும், சில சொற்களைக் குறிப் பான் விளக்கலும் அடிகள் இயல்பு இறைவன் அருள் உடையன் ஆதலின் `அருளன்' என்றே அழைத்து மகிழ்வதும் (தி. 4. . 90. பா. 10) அடிகள் இயல்பு இதனைச் சற்றே விரித்து `அருளாளன்' (தி. 7 . 1. பா. 1) என்று சுந்தரர் முதலியோர் கொள்வர்; ஆயினும் அருளன் என்பது எளிய சொல்லாய், இறைவனது அருட்பெற்றி தோன்ற நின்று இனிமை பயத்தல் கண்கூடு.

     `தவ' எனும் உரிச்சொல்லைத் தக்க இடத்தில் வைத்து `தவப் பெருந்தேவு' செய்தார் என்று (தி. 4 . 65 பா. 8) பாடுதல் அறியத்தக்கது இத்தொடரில் ஈடுபட்ட பிற்கால உலகு, கல்வெட்டுக்களிலும் இதனைப் பொறித்து இச்சொல்லாட்சி அருமையைப் போற்றியுள்ளமை நன்கு உணரத்தக்கது.1

     இன்று குறிக்கோள்2 எனும் சொல்லை எங்கும் காண்கின் றோம். இதனை முதன்முதல் தமிழுலகிற்கு வழங்கிய பெருந்தகையார் அடிகளே ஆவர்; ஒரு குறியினைக் கொண்டொழுகுவது என்ற பொரு ளில் இது வழங்கப்படும், `குறிக்கோள் இலாது கெட்டேன்' (தி. 4 . 67. பா. 9) எனவரும் திருக்கொண்டீச்சரத் திருப்பதிகம் காண்க.

     `தமிழன்' என்று மொழியினடியாகத் தமிழ் மகனை முதன் முத லாக அழைத்த சொல்லாட்சித் திறமும் அடிகட்கே உரியது என்பது முன்னும் விளக்கப்பட்டது தமிழை உடையான் என்ற பொருள்பட மொழியை விழியாகப் போற்றும் புவிமுதல் மகனாகிய இனக்கொழுந் தைத் தமிழன் என்று வாயார உளமார, இனிய புதுச்சொல்லால் எடுத்துக் கிளக்கும் அப்பரடிகள் அருளமுதம் ஆரா இன்ப ஆரமிர்தமாகும்.

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

அண்ணா மலையுறையெம் மண்ணல் கண்டாய்

வாரி மதகளிறே போல்வான் கண்டாய்

மறைக்காட் டுறையும் மணாளன் தானே.   (தி. 6 . 23 பா. 5)

     சங்ககாலத்தும் அதன்பின்னும் தமிழ் என்ற சொல்லாலேயே தமிழ் மக்கள், தமிழ்ப் பண்பு, தமிழ் நிலம் முதலிய அனைத்தையும் குறிக்க நேர்ந்தது புதிதாக முதன்முதல் இந்த மரபை மாற்றி அடிகள் புரியும் கருத்துப் புரட்சியின் கால்கோளாக அமைகின்றது இந்தத் தமிழன் என்ற சொல்லாட்சி தமிழன் என்றொரு இனமுண்டு என இன்று நாம் தலைநிமிர்ந்து செம்மாந்து பேசுவதற்கு இஃதன்றோ அடிப்படையாகும்!

     பிழைப்பு என்ற சொல்லைப் பிழைசெய்வது என்ற பொரு ளில் அடிகள் ஆளக் காணலாம்.1

"அழைக்கும் அன்பின ராயஅடிய வர்

 பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே"      (தி. 5 . 16 பா. 8)

     பொக்கம் என்ற சொல்லை அடிகள் ஆளும் திறம் இனியது.

"பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்"  

(தி. 5 . 95 பா. 4)

"பொக்க மிக்கவர் பூவுநீ ரும்கண்டு

 நக்குநிற்பர் அவர்தம்மை நாணியே"      (தி. 5 . 90. பா. 9)

     தாம் ஆளும் சொற்கள் தமிழ்ப் பழைமையும், உறுதியும், அழகும் உடையவாய் இருத்தல் வேண்டும் என்று அடிகள் திருவுள்ளம் கொண்டாராதல் வேண்டும் அடிகள் அருள் மொழியில், வட சொற்கள் பெரும்பங்கு பெறாமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

தலைவாயில்

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை 1 - தொடர்ச்சி | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 8 |