தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை 1 - தொடர்ச்சி | 1 | 2 | 35 | 6 | 7 | 8 |

துயரங்களுக்குத் தகும் உவமைகள்:

     தாம் அடைந்து வருந்துதற்குக் காரணமான துயரங்களை எண்ணி எண்ணிக் களிக்கின்றார் அடிகள் மன்றத்தில் இருக்கும் புன்னை மரத்தினைப்போல் நான் ஆவேன் என்கின்றார் மன்றத்தில் இருக்கும் புன்னை ஊரார்க்குப் பொதுவானதாகும் இன்னார்க்கு உரியது என்றிருந்தால் மரத்திற்குத் துன்பமில்லை. பொதுவாயிருப் பதால்தான் துயரத்திற்கேதுவாகின்றது.

     இது போல் இறைவனுக்குரிய தனிமரமாக உயிர் இருந்தால் தான் ஐம்பொறிகளாகிய பிறரால் வரும் தொல்லையின்றி இருத்தல் முடியும் என்பது அடிகளார் திருவுள்ளமாதல் வேண்டும்.

"மன்றத்துப் புன்னைபோல மரம்படு துயரமெய்தி

 ஒன்றினால் உணரமாட்டேன்."   (தி.5 .26 பா.8)

     உப்பங்கழியில் தோணிபோல உழலுகின்றேன் என்றும் இவ் வருந்துயர் நிலையை விளக்குவர் அடிகளார்

"அழிவுடைத் தாயவாழ்க்கை ஐவரா லலைக்கப்பட்டுக்

  கழியிடைத் தோணிபோன்றேன் கடவூர்வீ ரட்டனீரே."

(தி.4. . 31. பா.6)

     தான் விரும்பியபடி எங்கும் உலவும் நிலையை கழியிடைத் தோணியிடம் காணவியலாது கடலிடைத் தோணியாயின் அந் நிலை யைக் காணலாம். குறுகிய கழியின் இருகரைகளாலும் அலைக்கப் பட்டு அமிழாதும் மிதவாதும் துயருறும் தோணியை ஐம்பொறிகளால் அலைக்கப்படும் உயிர்க்கு ஒப்பிட்டுள்ள ஆழம் அறிந்தின்புறத்தக்கது.

     மத்தினால் இடிபட்டுத் தயிர் சுற்றிச் சுழன்று உடைந்து உருவமும் கெடுமாறுபோல, சித்தத்துள் ஐவர் தீயவினை பலவும் செய்ய மறுகும் உள்ளத்தை ஒரு திருப்பாடலில் உரைக்கின்றார் இவ்வருளாளர்,

"சித்தத்துள் ஐவர்தீய செய்வினை பலவும்செய்ய

 மத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந்தானும்"

(தி.4. .52. பா.9)

     இவ்வாறெல்லாம் ஒருபுறம் அலைக்கப்பட்டும், இறைவனை உள்குவார் உள்ளத்திற் குடியிருக்கும் உணர்வெனும் பெருமானை, உள்கிக் கொண்டிருக்கின்றார் இவ்வருளாசிரியர் இருதலையிலும் தீப் பற்றிக் கொண்டுள்ள கொள்ளியின்மேல் எறும்பைத் தமக்கு உவமை யுரைக்கின்றார் திருவாசகத்தும் முத்தொள்ளாயிரத்தும் இவ்வுவமை வருதல் இங்கறியத்தக்கது.

"எள்கினேன் எந்தைபெம்மான் இருதலை மின்னுகின்ற

  கொள்ளிமேல் எறும்பென்னுள்ளம் எங்ஙனம் கூடுமாறே"

(தி.4. .75. பா.6)

     சோற்றுருண்டையைக் கண்ட காக்கைகள் அதனைக் கூடி மொய்த்து உண்ணுவது போல, வல்வினைகள் மொய்த்து வருத்து வதனை உரைக்கின்றார்.

"மோத்தையைக் கண்டகாக்கை போலவல் வினைகள்

      மொய்த்துஉன்

  வார்த்தையைப் பேசவொட்டா மயக்கநான்

      மயங்குகின்றேன். (தி.4..75.பா.7)

இறைவன் அருள்:

     இறைவனுடைய இன்னருள் தேனாறு பாய்வதுபோல் அடிகளார் உள்ளத்தில் `சிறைபெறாநீராய்'ப் பாய்கின்றது களிவிஞ்சக் கவிதை யிசைக்கின்றார் தாண்டகவேந்தர்.

"நான்ஐ யாறுபுக் கேற்கவன் இன்னருள்

 தேனை யாறு திறந்தாலே ஒக்குமே"          (தி.5.27.பா.9)

     பண்ணில் ஓசைபோலும், பழத்தினில் சுவைபோலும், கண்ணில்மணி போலும் கலந்துள்ளான் இறைவன் என்று கனிகின்றார்.

"பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை....

  கண்ணில் உண்மணி கச்சியே கம்பனே."   (தி.5. .27. பா.9)

     திருவரிசிற்கரைப்புத்தூர் இறைவனைச் சிந்தைசெய்யச் செய்ய அவன் மிகச் சுவை பயக்கும் நிலையில் கரும்புச் சாற்றுச் சுவை யாய் அடிகளின் திருவாக்கில் முந்துகின்றான்.

"திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக்

  கருப்புச் சாற்றிலும் அண்ணிக்கும் காண்மினே."

(தி.5. .61. பா.5)

     இறைவன் இணையடி நீழலை நீற்றறையில் காண்கின்றார் அடிகள் இணையடி நீழல் இன்பத்தினைக் கண்டும், கேட்டும், உண் டும், உற்றம், உயிர்த்தும் வெறி கொண்டிசைக்கின்றார் குற்றமற்ற வீணை யிசையும், மாலையில் தோன்றும் மதியின் நிலவும் வீசும் தென்றல் இனிமையும், இளவேனில் மாண்பும், வண்டொலிக்கும் தாமரைப் பொய்கையும் போன்றதென்று, திருவாய் பொலியப் பாடுகின்ற அத்திருப்பாடல் வருமாறு:

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசுதென்றலும் வீங்கிள வேனிலும்

மூசுவண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன்எந்தை இணையடி நீழலே.     (தி.5. .90. பா.1)

     கோடி தீர்த்தங்கள் கலந்து குளித்து அவை ஆடினாலும் அரனுக்கு அன்பில்லையேல் பலனில்லை ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தில் கொட்டி மூடிவைத்தது போலும் அச்செயல், அரனுக்கு அன்பில்லையேல் தீர்த்தங்கள் ஆடினாலும் பலன் இல்லை என்பதைக்

`கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென், கொங்கு தண் குமரித்துறை ஆடிலென், ஓங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென், எங்கு மீசன் எனாதவர்க் கில்லையே' என்று அருளும் அடிகள் இவ்விடத்துத் தெளிவாக உவமையின் மூலம் இதனை விளக்கி விட்டார்.

"ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தட்டி

  மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே" (தி.5. .99. பா.9)

எள்ளல் உவமை:

     தேவதேவனாகிய சிவபிரான் ஞானத்தால் கண்டு தொழத்தன்னையருளும் தலைவன் பாவகாரிகளாக உள்ளவர்களே அவனைப் பார்க்க அரியவன் என்றுரைப்பர்.

     அவர்களுக்கு ஓர் அழகிய உவமை கூறுகின்றார் அடிகள் கிணற்றில் வாழும் ஆமை, கடலில் வாழும் ஆமையைச் சந்தித்து, `இக்கிணற்றினளவைவிடப் பெரியதா உன் கடல்' என்று கேட்பது போன்றது இது என்று உரைக்கின்றார் எள்ளி நகையாடுகின்றார்.

கூவ லாமை குரைகட லாமையைக்

கூவ லோடொக்கு மோகட லென்றல்போல்

பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்

தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.    (தி.5. .100. பா.5)

     ஐம்பொறிகளால் அலைக்கப்பட்டுத் துன்புறும் தம் நிலைக்கு இவ்வாறே ஆமையை அணிபெற உவமை கூறும் பகுதியும் இவ்விடத்து அறிந்தின் புறத்தக்கது உலைநீரில் இட்ட ஆமை சூடேறச் சூடேறத் திளைத்து நின்று இன்புற்றாடிப்பின் அழிந்தொழிவது போலத் தாம் வளைத்துநின்ற கள்வராகிய ஐவரால் தளைக்கப்பட்டு வருந்துவதாக உரைக்கின்றார்.

"உலையை ஏற்றித் தழல்எரி மடுத்த நீரில்

திளைத்துநின் றாடு கின்ற ஆமைபோல் தெளிவி லாதேன்."     (தி.4..79.பா.6)

பிறபல உவமை நலங்கள்:

     வெள்ளிக் குன்றம் போல்வது விடை (தி.6. .3. பா.2.) என்றும், தோன்றும் செஞ்ஞாயிறு போன்றது திருவடி (தி.6. .6. பா.4) என்றும், தண்ணீர் நிறைந்த ஏரி போன்று தண்ணளிச் செல்வம் உடைய கருணைக் கடலாய் உள்ளான் மறைக்காட்டுறையும் மணாளன் (தி.6. .23. பா.5) என்றும், ஆலைப்படு கரும்பின் சாறுபோல அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத்தான்காண் (தி.6. .52. பா.2) என்றும், கருதியது முகக்கமாட்டாத தாம் காம்பிலா மூழை என்றும், பலபல நினைவு களைத் தாம் கொண்டொழுகுவது பாம்பின்வாய்த் தேரையின் நினைப் புப்  போல்வது என்றும் (தி.4 .46. பா.1) பிற இடங்களில் வரும் உவமைகளும் இலக்கிய அழகு செறிந்தவை.

உவமனில்லி:

     உவமைகள் பலவற்றால் இறைவனை எடுத்துப் போற்றும் அடிகள், இவ்வுவமைகள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு விளங்கு பவன் அவன் என்பதை, நன்கு உணர்ந்தவர் அந்தக் கருத்தமைய அடிகள் பாடியருளும் பகுதிகள் பல.

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி

      மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்

ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்

      ஓரூரன் அல்லன்ஓர் உவமன் இல்லி

அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும்

      அவனருளே கண்ணாகக் காணி னல்லால்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்

      இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே.

(தி.6. .97. பா.10)

     தனக்குவமை இல்லாதான் என்று திருவள்ளுவர் கூறும் கருத் துரையை நன்கு தம் அநுபவத்தில் தெளிந்துள்ள அடிகள் இவ்வாறு கூறியருளுவது நன்கு சிந்தித்துத் தெளிதற்குரியதாகும்.

உருவக அமைப்பு நுட்பம்:

     உவமைகளாற் கூற இயலாத அடிகள், உருவகத்தால் அழகு படுத்தும் உயர் கவிதைகள் பலவாகும் அவ்வுருவகங்கள் அனைத் தும் ஆழ்ந்த இலக்கிய நலம் அமைந்தவை. உவமையின் செறிவே உருவகம் என்பர் பல திருப்பதிகங்களை இவ்வமைப்பில் அடிகள் அருளியுள்ளார்.  (தி.6. .38. பா.15) முதலிய பதிகங்களைக் காணலாம்.

     மெய்ம்மை யெனும் உழவினால் சிறந்து, விருப்பமெனும் வித்தை வித்தி, பொய்ம்மையாம் களையை நீக்கிப் பொறையெனும் நீர் பாய்ச்சித் தகவு எனும் வேலியிட்டுச் செம்மையுள் நின்றால் சிவகதி எனும் நல்விளைவு உண்டாகும் என்பது (தி.4. .76. பா.4) ஓர் அழகிய உருவகமாகும்.

     காயக் கோயிலில் மனமே அடிமையாக, வாய்மையே தூய் மையாக மனமணி இலிங்கமாக, நேயமே நெய்யும் பாலுமாகச் செய் யும் அன்புப் பூசனையை (தி.4. .76. பா.4) அடிகள் அருள்வதும் ஓர் இனிய பகுதி ஆகும்.

     துன்பக் கடலிடைத் தோணித்தொழில் பூண்ட தொண்டர் தம்மை இன்பக் கரைமுகந்து ஏற்றுந் திறத்தன ஐயாறன் அடித்தலம் (தி.4. .92. பா.6) என்பதும் இவ்வருளாளர் அருள்வாக்கு.

     பித்தராம் அடியார்க்கு முத்திகாட்டும் ஏணியாகவும், இடர்க் கடலுட் சுழிக்கப்பட்டு இளைப்போர்க்கு அக்கரைக்கே ஏறவாங்கும் தோணியாகவும், சுடர் பொற்காசின் ஆணியாகவும் உருவகம் செய் யும் (தி.6. .46. பா.4) அமைப்பு அழகுடையதாகும் இவ்வாறே தோணி யாகிய சோற்றுத் துறையர்க்கே பூணியாய்ப் பணிசெய் மட நெஞ்சமே என்றும் (தி.5. .33. பா.7) பாடியருள்வர்.

     பத்தர் நெஞ்சுகள் தேனும் இன்னமுதுமாகவே தித்தித்திருப் பான் (தி.4. .29. பா.1) என்று இறைவனைப் பரவுகின்றார் வித்தினில் முளையர் (தி.4. .64. பா.9), கனியினும் கட்டிபட்ட கரும்பினும் பனி மலர்க் குழற்பாவை நல்லாரினும் தனிமுடிகவித்தாளும் அரசினும் இனியர் (தி.5 .14 பா.10), நீற்றுத் தண்டத்தராய் நினைவார்க்கெலாம் ஊற்றுத் தண்டவர்.  (தி.5. .24. பா.3), மாலையெழுந்தமதி, காலை முளைத்தகதிர், (தி.6. .46. பா.3.), உருகும் மனத்து அடியவர்கட்கு ஊறும் தேன், உண்மை நின்ற பெருகுநிலைக் குரியாளர் அறிவு மெய்த்தவத்தோர் துணை (தி.6. .84. பா.3), தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச் சிங்கம் (தி.6 .99 பா.2), என்றெல்லாம் உருவகம் செய்து இறைவனை ஏத்துவது அடிகள் இயல்பு.

     உருவகம் செய்யுங்கால் அணிபெற அவற்றை எடுத்து விளக்குவதும், சிலவும் பலவுமாய் அடைமொழிகளால் எடுத்து மொழிவதும், உயர்கருத்தை அருளநுபவம் குழைத்துத் தொடுத்து இனிய கவிதையாக்கி, இனிய பண் கலந்து இறைவன் திருவடியிற் சாத்தி மகிழ்தலும், அடிகளார் அருளிச் செயல்களில் நாம் எங்கெங்கும் கண்டு களிகூரத்தக்க செய்திகளாகும்.

     முடிவண்ணம் வான மின் வண்ணம், தம்மார மார்பின் பொடிவண்ணம், தம்புகழூர்தியின் வண்ணம், படிவண்ணம் பாற்கடல் வண்ணம், செஞ்ஞாயிறு அடிவண்ணம் ஆரூர் அரநெறியார்க்கே என (தி.4. .17. பா.9) வரும் அருள் உருவகத்தை மறக்கலுமாமோ?

உடல்நிலை உருவகங்கள்:

     உடலை அடிகள் பலவாறாக விளக்கி, ஐம்பொறித் துயரங் களையும் பலவாறாக உருவகம் செய்து எள்ளுவர் பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகிவீழ மெய்யனாய் வாழ மாட்டேன் (தி.4. .26. பா.2), அஞ்சினால் அடர்க்கப்பட்டு இங்கு உழி தரும் ஆதனேன் (தி.4 .26. பா.5), கால் கொடுத்து இருகையேற்றிக் கழிநிரைத்து இறைச்சி மேய்ந்து, தோல்படுத்து உதிர நீரால் சுவரெடுத்து, இரண்டு வாசல் அமைத்து ஏழுசாலேகம் பண்ணி, மால்கொடுத்து ஆவி வைத்தார் (தி.4. .33. பா.4), பொந்தையைப் பொருளா எண் ணிப் பொருக்கெனக் காலம் போனேன் (தி.4. .41. பா.5)ஒரு முழம் உள்ள குட்டம், ஒன்பது துறை உடைத்தாய் அரைமுழம் அதன் அகலம், அதனின்வாழ் முதலை ஐந்து (தி.4. .44. பா.2), மனம் தோணி, மதிகோல், சினம் சரக்கு, பிறவி கடல், மதனெனும் பாறை தாக்க மறிந்து வீழ்கின்றது தோணி (தி.4. பா.46. பா.2), முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடுகுரம்பை அப்பர்போல் ஐவர்வந்து அது தருக, இது விடுக என்று ஒப்பவே நலியலுற்றால் உய்யுமாறு அறிய மாட்டேன் (தி.4. .54 பா.3), மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டளவுயரத் தூண்டி உய்வதோர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம் ஐவரை அகத்தே வைத்தீர் (தி.4. .45. பா.9.), ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும் கழுகரிப்பதன் முன்னம் கழலடி தொழுக (தி.5. .31. பா.7), என்றெல்லாம் வரும் அருள்மொழி விளக்கங்கள் மறக்கவியலாத மாண்பும், பாடி மகிழ்வோர் நெஞ்சைப் பண்படுத்திக் கனிந்துருகு வித்து இறையொளிக்கு ஆட்படுத்தும் திறனும் உடையவை சிறந்த உருவக அமைப்புடன் கூடிய செய்யுள்களாகவும் இவை திகழ்கின்றன.

உடம்பெனும் மனை யகத்துள் உள்ளமே தகளி யாக

மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிம யக்கி

இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்

கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.

(தி.4. .75. பா.4)

என்பது அகவிளக்குப் பற்றி அடிகள் அருளும் அழகிய கவிதை.

தலைவாயில்

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை 1 - தொடர்ச்சி | 1 | 2 | 3 | 5 | 6 | 7 | 8 |