தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை 1 - தொடர்ச்சி | 1 | 2 | 4 | 5 | 6 | 7 | 8 |

இவ்வாறு கூறும் அடிகள் சிவபிரானையே ஆரியன் என்றும் தமிழன் என்றும் கூறும் பகுதிகள் அழகுடையவை தமிழ் ஆகிய மொழி பேசுவோனை - மொழிக்குரியவனைக் குறிக்கும் சீரிய இனப் பெயராகத் `தமிழன்' என்ற சொல் நிற்றல் அறிந்தின்புறத்தக்கது இவ்வாறு `மொழி வழி இனம்' என்ற புது மரபினைத் தோற்றுவித்து அப்பரடிகளே முதன்முதல் - `தமிழன்' `ஆரியன்' என்ற பெயர்களை மொழிந்துள்ளார் என்பது அறிஞர் கருத்தாகும்.

"ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

 அண்ணாமலையுறையெம் மண்ணல் கண்டாய்"

(தி.6 . 23 பா.5)

"செந்தமிழோ டாரியனைச் சீரி யானை"

(தி.6 .46 பா.10)

     இன்று நாம் தமிழர் எனப் பெருமிதத்துடன் பேசுதற்கு அன்றே வித்திட்ட பெருமை அப்பரடிகட்கே உரியதென்பதை நாம் மறந்துவிடலாகாது இதைப் பின்னும் ஒருமுறை சிந்திப்போம்.

தமிழ்ப் பண்களும் தாண்டகவேந்தரும்:

     இலக்கியம் என்பது பண்ணோடு கூடிய கருத்து என்று கூறுவர் ஆதலின், பாடலுக்குப் பண் எத்துணை இன்றியமையாத தென்பது விளங்கும்எம்மொழியிலும் பாட்டுப் பண்ணொடு குழைந்தே விளங்கி இயங்குவதாகும்நம் தமிழ் நாட்டிலும் பழைய காலந்தொட்டே பண்ணும் வளர்ந்து வந்திருத்தல் நம் இலக்கி யங்களால் இனிது துணியப்படும்.

     முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐம்பெரும் பண்களைச் சங்க நூல்களிற் காணலாம்அப்பண்கள் பலவகைகளை உடையவாயிருந்தன அவற்றை ஓதி வளர்த்து வந்த கலைஞர்  குடும்பம் பாணர் என்ற பெயரால் நிலை பெற்றது தோற்கருவிகள், துளைக் கருவிகள், நரம்புக்கருவிகள் என்ற மூவகைப்பட்ட இசைக் கருவிகளில் பண்வளர்த்தனர் பழந்தமிழர்பழந்தமிழ் மரபினை நன்கு உணர்ந்து தெளிந்த அடிகள் வாழ்ந்த காலம் கிறித்துவுக்குப் பின் 7 ஆம் நூற்றாண்டு என்பர்.

     சமணர்கள் இசைத் தமிழை மறுத்தும் பழித்தும் பிரசாரம் செய்தமையின், மக்கள் இசையைப் புறக்கணித்து வந்த அக்காலத் தேயே தமிழ் இலக்கண இலக்கியப் பெரும்புலவராக விளங்கிய அடிகள் தெய்வத்திருவருளால் சைவம் பரப்ப முற்பட்டார்பண், இசை ஆகியவற்றில் இறைவன் வீற்று இருக்கின்றான் என்று கூறிய துடன், பழந்தமிழ்ப் பண்களிலேயே தம் கருத்தைத் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் பரப்பத் தொடங்கினார்.

     இவ்வாறே திருஞானசம்பந்த சுவாமிகளும் நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் திருத்தொண்டு புரிந்து சைவம் வளர்த்தார்.

     இறைவைன் பண் பொருந்திய பாடல்களை விரும்பிக் கேட் கும் கருணை உடையவன் என்ற கருத்தை, தம் பண் கலந்த பாடல் களாலேயே எடுத்து விளக்கிய அப்பரடிகளின் புதுமைக் குரலைத் தமிழ்ப் பெருமக்கள்  கேட்டனர்.

"பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை"

(தி.5 .18 பா.4)

"பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு

 அண்ணித் தாகும் அமுது"

(தி.5 .44. பா.8)

"பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி"

(தி.6. .5. பா.2.)

என்றெல்லாம் பாடியருளினார்.

     கொல்லி, காந்தாரம் பியந்தைக் காந்தாரம், சாதாரி, பழந்தக் கராகம், பழம்பஞ்சுரம், சீகாமரம், குறிஞ்சி, இந்தளம், காந்தாரபஞ்சமம் ஆகிய பத்துப் பண்களில் அமைந்த பதிகங்களையும், திருநேரிசை, திரு விருத்தம் முதலிய பதிகங்களையும் அடிகள் பாடியிருத்தல் காணலாம்.

     1பாட்டுக்கும் பண்ணுக்கும் பருந்துக்கும் நிழலுக்கும் உள்ள தொடர்பு இருத்தல் வேண்டும் என்பர் பழந்தமிழ் நூலோர்.  `பாட்டோடு இயையாத பண்ணினால் என்ன பயன்கண்ணோட்டமில்லாத கண் போன்றது அது' என்று உரைப்பர் ஆசிரியர் திருவள்ளுவரும் அப்பரடிகளுடைய அமுதப்பாக்கள் இனிய பண்ணமைப்பிற்கு இனியவையாய் உள்ளமையை அன்பர்கள் நன்கு அறிவர்.

     இவ்வாறு தக்க பண்களுடன் விளங்கும் பழுத்த அநுபவப் பாடல்களாகிய இவற்றிற் காணப்பெறும் இலக்கிய அழகுகளை இனி ஒவ்வொன்றாக இங்குக் காண்போம்இவ்விலக்கிய அழகுகள், ஒன்பான் சுவையமைப்புடனும், கவிதைச் சீரியல்புகளுடனும் கலந்து திகழுமாற்றையும், பழந்தமிழ்ப் பாடல்களுடன் கருத்தொற்றுமை கொண்டு கவினுமாற்றையும் நுகர்ந்து மகிழ்வோம்.

உவமை நலம்:

     உவமை, இலக்கியக் கலையெழில்களில் முதலிடம் பெறுவ தாகும்கவிதையில் உவமை கருத்து விளக்கம் செய்வதுடன், அழகும் தருகின்றதுஉவமை யமைந்த கவிதை, அணிகலம் பூண்ட அரிவை யொருத்தியைப் போன்ற தென்பர்.

     எல்லா அணிகளுக்கும் தாயாகும் பெருமையும், உவமைக் குண்டுதொல்காப்பியரும் இவ்வுவமையணி யொன்றையே விரிவாக ஆராய்ந்து தம் நூலில் அமைத்துள்ளார்வேறுபடவந்த உவமத்தோற்றம் என மற்றவற்றைத் தழுவி அவை உவம விகற்பங் களே என விளக்கியுள்ளார்அருட்புலவர்கள் அருள் வாக்குக்களிலும் சீரிய உவமைகள் பலவற்றை நுகர்ந்து மகிழ்கின்றோம்.

     அப்பரடிகள் தேவார அருளிச் செயல்களிலும் பலவகைப் பட்ட உவமைகளைக் காணலாகும்வினை, பயன், மெய், உரு எனும் நான்கு வகைகளில் இவ்வுவமைகள் பெரும்பாலும் வினையுவமை யாகவே விளங்குகின்றன எனலாம்.

நீர்நிலை பற்றியது:

     நீர்நிலையொன்றினைக் காவல் செய்து வருவோர் சிலர் உள்ளனர்அக்காவலைப் பொருட்படுத்தாமல், நீர்நிலைக்கரைக் கண் நின்றவர் அந்நீர்நிலையின் ஆழம் அறிய வினவ `நீரே இறங்கிக் கண்டு கொள்வீராக' என்று காவலர் கூறிவிட, இறங்கு துறையிலேயே மூழ்கித் தவிக்கும் மக்களை நமக்குக் காட்டுகின்றார், அடிகள்.

     தாம் சைவசமயத்தை விட்டுச் சமண சமயம் புகுந்து இடர்ப் பட்டதை இப்பிறிதுமொழிதல் உவமையினால் அவர் விளக்குகின்றார் திலகவதியார் முதலியோருடைய அறிவுரைகளையெலாம் இகழ்ந்து பொருட்படுத்தாதுவேற்றுச் சமய நூல்களை ஆராய்ந்தறிந்து, சமண சமய உண்மைகளை ஆராய்ந்து கண்டுகொள் என்று சமண சமயத்தார் கூற, சமண சமயம் புகுந்து அதனை மேற்கொண்டு, மீளும் வகையின்றி இடர்ப்பட்டவர் அடிகள்.

     இந்நிலையை விளக்கும் அடிகள், கூறாமற் கூறித் தம் துயரநிலைமையப் புலப்படுத்துகின்றார்ஆழப்பொருளை அகத்தே உடைய அப்பாடற் பகுதி பின் வருவதாகும் :

"காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால்

    கரைநின்றவர் கண்டுகொ ளென்று சொல்லி

 நீத்தாய கயம்புக நூக்கியிட

    நிலைக்கொள்ளும் வழித்துறை ஒன்றறியேன்"

(தி.4 .1 பா.5)

     கருதிய பொருளைத் தொகுத்து, அதனைக் கூறாது, ஒத்த பொருள் ஒன்றை, உரைப்பதை இவ்வணியாகக் கூறுவர் திருவள் ளுவர்நுனிக்கொம்பர் ஏறினார்.  பீலிபெய் சாகாடும் ஆகிய குறட் பாக்களில் கூறும் முறையை ஒட்டியவையாக இவ்வமைப்புக்களை நாம் காணலாம்.

எல்லாம் சிவம் எனல்:

     எல்லாம் சிவமயமாகக் காணும் பெருந்தகை அப்பரடிகள் எப்பொருளைக் கண்டாலும் அதனூடு இறைவனைக் கண்டு ஏத்துவது இப்பண்பட்ட அருட் புலவரின் இயல்புஇதனைத் திருவையாற்றுப் பதிகத்தில், காந்தாரப் பண்ணில் அமைத்து அருளியுள்ளார்.

     சோலைகளும், பிற பூங்காக்களும் நிறைந்த திருவையாற் றில், பிடியும் களிறும், கோழியும், பெடையும், குயிலும் பெடையும், மயிலும் பெடையும், பகன்றில்களும், ஏனங்களும், நாரையும், மானும், கிளியும், நாகும், ஏறும் ஆகியவற்றைக் காண்கின்ற அடிகள் சிவமும் சத்தியுமாகவே இவற்றைக் கண்டு களிக்கின்றார்கவிதை இசைக் கின்றார்.

     "கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறி யாதன கண்டேன்" (தி.4 பதி.3) என்று இனிக்கப் பாடுகின்றார் ஆணும் பெண்ணு மாகிய அஃறிணை உயிர்களிலும், அம்மையப்பரை உவமை கொண்டு அருளிச் செய்வாராயின் இக்கனிந்த உள்ளத்தின் ஏற்றத்தை என்னென் பதுமெய்ப் பொருளாக விளங்கும் இறைவனை எல்லாமாகக் கண்டு ஏத்தும் பண்பாட்டில் தலைசிறந்து விளங்குகின்றார் தாண்டகவேந்தர்.

சைவத்தின் மாண்பும் புறச்சமயப் புன்மையும்:

     இறைவன் திருவாரூரில் எழுந்தருளி அருள்வழங்கவும் தாம் அவனைத் தொழாது சமண சமயம் சார்ந்து இடருற்றமைக்குத் தக்க பழமொழிகள் பலவற்றை உவமை முகத்தான் எடுத்தாளும் திருப்பதிகம் (தி.4 .5) ஒன்றைக் காந்தாரப் பண்ணில் காண்கின்றோம்.

"கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும்

      ஆரூரரைக்

 கையினால் தொழாதொழிந்து கனியிருப்பக் காய்கவர்ந்த

      கள்வனேனே"

"முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் காக்கைப்பின்

      போனவாறே"

"அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க மறம்விலைக்குக்

      கொண்டவாறே"

"பண்டெலாம் அறியாதே பனிநீராற் பாவைசெயப்

 பாவித்தேனே"

"என்னாகத் திருத்தாதே ஏதன்போர்க்கு ஆதனாய்

      அகப்பட்டேனே"

"எப்போதும் நினையாதே இருட்டறையில் மலடுகறந்து

      எய்த்தவாறே"

"விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க மின்மினித்தீக்

      காய்ந்தவாறே"

"பாவியேன் அறியாதே பாழூரிற் பயிக்கம்புக்கெய்த்தவாறே"

"தட்டானைச் சாராதே தவமிருக்க அவஞ்செய்து

      தருக்கினேனே

"கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க இரும்புகடித்

      தெய்த்தவாறே"

     கனியிருப்பக் காய்கவர்தல், முயல்விட்டுக் காக்கைப்பின் செல் லல், அறமிருப்ப மறம் விலைக்குக் கொள்ளல், பனிநீராற் பாவை செய்ய முனைதல், ஏதன்போர்க்கு ஆதனாய் அகப்படல், இருட்டறையில் மலட்டுப் பசுவைக் கறந்து இளைத்தல், விளக்கிருக்க மின்மினித் தீயிற்குளிர் காய்தல், பாழூரிற் பிச்சை யெடுக்கச் செல்லல், தவம் இருக்க அவம் செய்து தருக்கல், கரும்பிருக்க இரும்பு கடித்து எய்த்தல் ஆகிய உவமைகள் அனைத்தும் சைவசமயம் விட்டுச் சமணசமயம் புக்கு மயங்கியமை குறித்த கழிவிரக்கத்தான் விளைந்த உவமைகள்.

     கனி, முயல், அறம், விளக்கு, தவம், கரும்பு ஆகிய ஆறும் சைவத்தை விளக்கும் உவமைகளாக வந்துள்ளனகனிந்து இனிக்கும் சுவை யநுபவம், முத்தி நோக்கி விரையும் செலவும், அறமே செழிக் கும் உயர்வும், அறிவின்மையை அறுக்கும் விளக்காம் விழுப்பமும், தவநெறியாகும் தாழ்வின்மையும், கரும்பென இனிக்கும் திறமும் உடையது சைவசமயம் என்பது இவ்வுவமைகளாற் பெறப்படும்.

திருவைந்தெழுத்துப் பற்றிய தெளிவு:

     நமச்சிவாயப் பதிகத்தில் நலஞ்செறிந்த உவமைகள் பல நயம் பொருந்தித் திகழ்கின்றனபூவினிற் சிறந்த தாமரை போலவும், அரன் அஞ்சாடுதலாற் சிறந்த ஆவினைப் போலவும், கோட்டமில்லாத கோவினைப் போலவும் நாவினுக்கு அருங்கலமாகச் சிறப்பது திருவைந்தெழுத்து (பா.2) என்கின்றார் அடிகள்.

     விண்ணளவும் மிகுமாறு அடுக்கி வைக்கப்பட்ட விறகுக் குவியலிடையே, அழல் உண்ணப் புகுந்தால் ஒன்றும் எஞ்சாதுஅது போல், உலகினில் பண்ணிய பாவத்தின் குவியலைத் திருவைந் தெழுத்தே நண்ணிநின்று அறுக்கும் (பா.3) என்னும் பகுதியும் மிக இனிய அறவுரைப் பகுதியாகும்.

     விரதம் கொண்டார்க்கு அருங்கலம் திருநீறே ஆதல் போல வும், அந்தணர்களுக்கு அருமறையாறங்கங்கள் அருங்கலம் ஆதல் போலவும், சிவபிரானுக்குத் திங்கள் அருங்கம் ஆதல் போலவும் அடியார்களுக்குத் திருவைந்தெழுத்தே அருங்கலம் ஆகும் (பா.5) என்ற திருப்பாடற் கருத்துச் சீரிய உவமைகளைக் கொண்டுள்ளது.

     அகத்திருளைக் கடியும் அகவிளக்கு என்றும், சொல்லின்கண் விளங்கும் சோதி விளக்கு என்றும், எண்ணில்லாத உயிர்களின் அகந்தோறும் ஒளிபெருக்கும் விளக்கு என்றும், அறிவிற்கு அறிவாய் விளங்கும் நல்லக விளக்கு என்றும் திருவைந்தெழுத்தை இனிய உவமைகளால் விளக்கும் திருப்பாடலும் (பா.8) இங்கு அறிதற் குரியதாகும்.

அறுகயிறூசல் அருமைப்பாடு:

     கயிற்றிற் கட்டப்பட்ட ஊசலைத் தம் நிலைக்கு உவமையாக்கு கின்றார். பிறிதோரிடத்தில், நெஞ்சு ஒன்றுவிட்டு ஒன்று பற்றும் இயல் புடையதுசென்று பற்றுதலும் பற்றியதை விட்டு நீங்குதலும் அதன் இயல்புகள்தன்னிடத்தை விட்டுப் பிறிதொன்றைச் சேர்ந்து பற்றுவது `உறுகயிறூசல்.' மீண்டும் தன்னிலைக்கு ஆடிக்கொண்டே திரும்புவது `மறுகயிறூசல்'. இவ்வாறு ஆடிக் கொண்டிருக்கும் ஊசலை உடையவ னாகிய அடியேன், அவ்வூசல் அற்று நின்பாதமாகிய நிலத்தை அடைந்தேன் என்கின்றார் அடிகள்.

     இவ்வழகிய திருப்பாடல் பன்முறை ஓதி ஓதி உணர்தற்குரிய தாகும்நாமும் அறுகயிறூசலாகி அவன்றாள் சேர்தல் வேண்டும் என்பதை இத்திருப்பாடல் உணர்த்துகின்றது.  `ஊசல் கயிறற்றால் தாய் தரையேயாந்துணையான்' என்பது சிவஞானபோதம்.

உறுகயி றூசல்போல ஒன்றுவிட் டொன்றுபற்றி

மறுகயி றூசல்போல வந்துவந் துலவுநெஞ்சம்

பெறுகயி றூசல்போலப் பிறைபுல்கு சடையாய்பாகத்

தறுகயி றூசலானேன் அதிகைவீ ரட்டனீரே.    (தி.4. 26. பா.6)

தலைவாயில்

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை 1 - தொடர்ச்சி | 1 | 2 | 4 | 5 | 6 | 7 | 8 |