தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி... | 1 | 2 | 3 | 4 | 5 |

அற்றார்கட்கு அற்றான்:

சிவபெருமான் பற்றற்ற பரம்பொருள். அவனைத் திருவள்ளு வர் "பற்றற்றான்" (குறள் 350) என்கிறார். "வேண்டுதல் வேண்டாமை இலான்" (குறள் 4) என்கிறார். ஞானசம்பந்தர், "அற்றவர்" (தி.3 . 120 பா.2) என்கிறார். இங்ஙனம் பற்றற நிற்கும் பரம்பொருளாகிய சிவனே. நம்மையெல்லாம் பற்றி நம்மிடையே உள்ள பற்றை அகற்றி, பற்றற்ற நிலையில் உள்ள உயிர்களைத் தம்முடனே ஒன்றாக ஆக்கிக் கொள்கிறான். இதனையே "அற்றார்கட்கு அற்றான்" என்கிறார் அப்பர் அடிகள். திருக்கோடிகா திருத்தாண்டகமாகிய, "மற்றாரும் தன்னொப்பார்" என்னும் பாடல் மூன்றாம் அடியில், "அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய்" (தி.6 .81 பா.4) என்று பேசுகிறது. தூய பொருளோடு அழுக்குப்பொருள் சேர இயலாது. எனவேதான் தூய்மையாக இருக்கின்ற பரம்பொருளோடு தூய்மையாக இருக்கின்ற உயிரே சேர இயலும். எனவேதான் இதே கருத்தை ஞானசம்பந்தரும் "அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாயாவதுமிதுவே" (தி.3 .120 பா.2) என்றருளினார். தூய்மை தூய்மையோடு சேர்வதே இயல்பு என்பதை, இதனால் அருளினார். "நினைப்பார் தம் வினைப் பாவம் இழிப்பான் கண்டாய்" (தி.6 .81 பா.5) என்றும், ஆறாம் பாடலில், "பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்" (தி.6 .81 பா.6) என்றும் அருளியிருப்பனவும் இக்கருத்திற்கு அரண் செய்வன வாயுள்ளன.

உருகுமனத்து அடியார்:

மனம் உருகி வழிபடுதல் பக்தர்களுக்கு உரிய சிறப்பு இலக் கணம். அத்தகையவர்களின் உள்ளத்தே தேனாகச் சுரந்து, இனிமை தருகிறான் இறைவன். இதனை அப்பர் திருச்செங்காட்டங்குடி தாண்ட கம் ஒன்றில், "உருகுமனத் தடியவர்கட்கு ஊறும் தேனை" (தி.6 .84 பா.3) என்று அருளியுள்ளார். மேலும், "கந்த மலர்" என்ற தாண்ட கத்தில் நமது பந்தங்களை அறுத்து ஆளாகக் கொண்டு தமிழ்மாலை பாடுமாறு செய்து சிந்தையில் உள்ள மயக்கத்தைப் போக்கி அருள் புரிகின்றான் (தி.6 .84 பா.4) என்கிறார். அப்பாடல் பகுதி காண்க.

பந்தமறுத்து ஆளாக்கிப் பணிகொண்டு ஆங்கே

பன்னியநூல் தமிழ் மாலை பாடுவித்துஎன்

சிந்தை மயக்கறுத்த திருவருளினானைச்

செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே

(தி.6 .84 பா.4)

மேலும் "கல்லாதார் மனத்தகத்து" என்னும் பாடலில் "கல்லா நெஞ்சில் நில்லான் ஈசன்" (தி.3 .40 பா.3) என்னும் ஞானசம்பந்தர் வாக்கைப் போலவே அப்பரும் அருளியது, "கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக், கற்றார்கள் உற்றோரும் காதலானை" (தி.6 .84 பா.8) என்பதாம். மேலும் இப்பாடல் இறுதியில், "நிறைதவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும், செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச் செங்காட்டங் குடியதனில் கண்டேன்" (தி.6 .84 பா.8) என்று அருள்வதும் காண்க. திருமுண்டீச்சரம், "நம்பன் காண்" என்னும் தாண்டகத்தில் "ஏசற்று மனம் உருகும் அடியார் தங்கட்கு அன்பன் காண்" (தி.6 .85 பா.3) என்பதும் சிந்திக்கத் தக்கது.

தானம் தர்மம்:

தானம் தம்மிற் பெரியார்க்குக் கொடுப்பது தர்மம். தம்மில் தாழ்ந்த ஏழைகட்கு அளிப்பது. ஒவ்வொரு நாளும் மூன்று சந்தியா காலங்களிலும் அர்க்கியம் கொடுப்பதைப் பெருமானே ஏற்றுக் கொள்கிறார். எல்லாம் அவரைய சேரும். அவரைவிடப் பெரியார் யாரும் இல்லை. ஆதலின் அவருக்கே தானம் சேரத்தக்கது. இதனை, "தானத் தின் முப்பொழுதும் தாமே போலும், தம்மிற் பிறர் பெரியார் இல்லார் போலும்" (தி.6 .89 பா.4) என்று அறிவிக்கின்றார். ஏழாம் பாடலில், "கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும், கற்றவர்கள் ஏதம் களைவார் போலும்" என்று கல்லார்க்கும் கற்றார்க்கும் அருள் செய்யும் திறன் கூறுகிறார்.

மறந்தும் அரன்திருவடிகள் நினையாதேன்:

அறத்தின் உண்மையைச் சிறிதும் உணராத ஊத்தை வாய்ச் சமணரோடு அரனை மறந்திருந்தேன். மறந்துங்கூட அரனை நினை யாத மதியிலியேன் ஆயினேன். பல்லாண்டுகள் வாழ்ந்தும் அரனை நினையாமையால் வாழாதவனாயினேன். அந்நாள்களெல்லாம் பிறந்த நாள்களல்லவாயின. இறுதியில் சில நாள்களே. சில ஆண்டுகளே ஈசன் பேர் பிதற்றி அடியேன் அடிமைத் திறத்துன் அன்பு செறிந்து எறும்பியூர் மலைமேல் உள்ள மாணிக்கத்தைச் சென்றடையப் பெற்றேன். பன் னாள்களைப் பாழாக்கி விட்டேனே என்று இரங்கி, இன்று எறும்பியூர்ப் பெருமானை வணங்கும் பேற்றால் இறும்பூதெய்துகிறார். அப்பாடல் காண்க.

அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை

ஆரம்பக் குண்டரோடு அயர்த்து நாளும்

மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா

மதியிலியேன் வாழ்வெல்லாம் வாளாமண்மேல்

பிறந்த நாள் நாளல்ல வாளா ஈசன்

பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்துள் அன்பு

செறிந்து எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தைச்

செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே

(தி.6 .91 பா.8)

இப்பாடலாலும் அப்பர் புறச் சமயத்திருந்த போது சிவநெறி உணர்வின்றியிருந்தார் என்பது தெளிவாகும். பெருமான் இவரை அடிமையாக ஏற்ற பிறகே, நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் என்பதும் சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் என்பதும் நிகழ்ந்தன என்பதும் நன்கு தெளியலாம்.

அப்பன் நீ அம்மை நீ:

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்பது கொன்றை வேந்தன். மாதா, பிதா, குரு தெய்வம் என்பது பழமொழி. கண்ணுக்குப் புலனாகும் மாதா பிதாவாகிய தெய்வங்களைக் காட்டி இவர்களை யெல்லாம் நமக்குத் தந்தவனே எல்லாவற்றிற்கும் மூலமாக இருக்கும் பரம்பொருள் என்பதை அப்பன் நீ என்னும் தாண்டகத்தால் உணர்த்து கிறார். அப்பன் என்பது தந்தையையும், அம்மை என்பது தாயையும், ஐயன் என்பது குருவையும் குறிப்பதாகக் கொள்ளலாம். அன்புடைய என்ற சொல் இடைநிலைத் தீவகமாக எல்லோரையும் பற்றுமாறுள்ளது. குலம், சுற்றம், ஊர் என்பன. உயிர் ஒரு வரையறைக்குட்பட்டே வாழவல்லது என்பதைக் காட்டுகிறது. துய்ப்பன என்பது அநுபவித்தல், உய்ப்பன அநுபவத்திலே செலுத்துதல். இப்படி அநுபவத்தில் செலுத்தி நுகரச் செய்து அதற்கும் உடனாயிருந்து துணை செய்து என்நெஞ்சத் துறப்பிப்பவனும் நீயே, ஆதலின் இப்பொன், மணி, முத்து, இறைவன் எல்லாம் நீயாகவே இருக்கின்றாய் எனறருள் கிறார். அறவிடையூரும் செல்பவனாகவும் இருக்கின்றான் என்கிறார். ஐயன் - அண்ணன் என்பர் அருணை வடிவேலனார் அப்பாடல் காண்க