தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி... | 1 | 2 | 3 | 46 |

சிந்தை புகுந்தாய் போற்றி:

திருக்கயிலாயக் காட்சியைத் திருவையாற்றில் கண்டபோது, "வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி" (தி.6 .55 பா.1) எனத் தொடங்கி மூன்று திருத்தாண்டகப் பதிகம் பாடிப் போற்றினார். இம்மூன்று திருப்பதிகங்களும் போற்றித் திருத்தாண்டகம் என்றே போற்றப்படுகின்றன. இவற்றுள் "வேற்றாகி" என்ற பதிகத்தில் 2ஆம் பாடலில், வெளியில் எங்கும் போகாமல் என் சிந்தையுள் புகுந்தாய் என்கிறார். "போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி" என்பது அத் தொடராகும். 7, 8ஆம் பாடல்களில், "என் சிந்தை நீங்கா இறைவா போற்றி" என்றருளி மகிழ்கிறார். 11ஆம் பாடலில், "பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி" என்று தம்மைப் பெருமான் திருவதிகை யில் சூலைகொடுத்து ஆண்டருளிய அன்றே என் சிந்தை புகுந்தான் என்பதை நினைத்து அருளியுள்ளார். அன்று முதல் இடையீடில்லாது இடையறாப் பேரன்புடன் பரமனை நினைந்தும் பாடியும் வரும் பண்பை உணர்த்துகிறது. இப்பாடலில் காணும் பண்டே என்ற குறிப்பு. அடியார் அடிமைத் திறத்தை, ஆண்டவனாகிய இறைவன் நன்கு அறிவான் என்பதை மூன்றாவது போற்றித் திருத்தாண்டகப் பதிக எட்டாம் பாடலில் குறிப்பிடுகிறார். "அடியார் அடிமை அறிவாய் போற்றி" என்பது அப்பகுதியாகும்.

தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றார்:

தன்னையே நம்பி வழிபடும் அடியவர்கள், மிகக் கற்றார் இல்லையாயினும், மிகக் கற்றவரினும் மேலாயநெறி நிற்கக் கற்பிக்கின் றார் கடவுள். இதனையே பல இடங்களிலும் சமயாசாரி யப் பெருமக்கள் அருளியுள்ளனர். அவற்றுள் சில இடங்களைக் குறிக்கலாம். திருவெண்ணியூர் திருத்தாண்டகப் பதிகம் முதல் பாடலிலேயே, "தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியினாரும்" என்றருளியுள்ளார் (தி.6 .59 பா.1). "துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னை" (தி.6 .19 பா.7) என்பது திருஆலவாய்த் திருத்தாண்டகம் ஏழாம் பாடல்.

கற்பகம்:

திருக்கற்குடிக் கற்பகத்தைக் காண்போம். கற்பகதரு நினைத் ததையெல்லாம் தரும் என்பர். கற்குடிப் பெருமான் கற்பகமாய் அருள் செய்பவன். அவன் "மெய்யானைப் பொய்யேதும் இல்லான் தன்னை" (தி.6 .60 பா.2) எனப் போற்றப்பெறுகிறார். இடரை எல்லாம் காத்தவன் என்கிறார். "பாரில் வாழ் உயிர்கட்கெல்லாம் கண்ணவனைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே" (தி.6 .60 பா.2) என்பது கற்குடிக் காட்சி. "பல்லாடுதலை சடைமேல்" என்னும் தாண்டகத்தில், "கல்லாடை புனைந்தருளும் காபாலியைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே" என்கிறார் (தி.6 .92 பா.2). இத்திருக்கழுக்குன்றத் தாண்டகப் பதிகத்தில் இரண்டே பாடல்கள்தான் உள்ளன. இரு பாடல்களிலும் கற்பக்தைக் கண்ணாரக் கண்டேன் என்றருள்கின்றார். "முவிலைநற்சூலம்" எனத் தொடங்கும் திருக் கஞ்சனூர்த் தாண்டகப் பதிகப் பத்துப் பாடல்களின் இறுதியிலும் "கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே" (தி.6 .90 பா.1-10) என்றருளியுள்ளமை கண்டு இன்புறத்தக்கது.

நடுதறியப்பர்:

திருவிளையாடற்புராணத்தில் விருத்தகுமாரபாலரான படல வரலாறுபோல், கன்றாப்பூரிலும் ஒரு வரலாறு வருகிறது. இத்தலத்தில் சைவப்பெண் ஒருத்தி வைணவக்குடியில் வாழ்க்கைப்பட்டாள். சிவபத்தியைக் காட்ட அவளுக்கு அவ்வீட்டில் இடமில்லை. மாட்டுத் தொழுவத்தில் கன்றுக்குட்டி கட்டும் முளைத்தறியையே சிவலிங்க மாகப் பாவித்து வழிபட்டு வந்தாள். வைணவக் கணவன் அது கண்டு பொறாது கோடரியால் அத்தறியைப் பிளக்க முயன்றான். அப்போது அத்தறியே சிவலிங்கமாய்க் காட்சி தந்தது. அதுமுதல் ஊர் கன்றாப் பூர் என்றும், பெருமான் நடுதறியப்பர் என்றும் போற்றப் பெறுகிறார். "மாதினையோர்" என்று தொடங்கும் பதிகம் முழுவதும் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும், "கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே" (தி.6 .61) என்றருளியுள்ளார். முதல் பாடல் மூன்றாம் அடியில் வாதனை யால் என்பதை வாசனையால் என்று பொருள் கொள்ள வேண்டும்.

மனத்தூய்மையும், அன்பும், ஆசாரமும், நெறி தவறாமை யுமே வாழ்வின் இன்றியமையாமை என்பதை இப்பதிகம் எடுத்துக் காட்டுகிறது.

ஓங்காரம்:

அகர, உகர, மகரமே ஓங்காரம். ஓங்காரத்து உட்பொருளாயி ருப்பவனே பரம்பொருள். எல்லாக் கலைகளும் அவ் ஓங்காரத்துள்ளே இருந்துதான் வெளிப்படுகின்றன. அவ்வனைத்திற்கும் முதல்வனாயி ருப்பவனே பரம்பொருள். அவனன்றி ஓரணுவும் அசையாது. அவனே படைப்பவன், காப்பவன், அழிப்பவன், மறைப்பவன், அருள்பவன். இக்கருத்தை எல்லாம் உள்ளடக்கியதே ஓங்காரம். ஓம் என்னும் பிரணவம். இதன் உள்ளும் புறமுமாய் இருப்பவனே பரம்பொருள். இதனை, "ஒரு சுடராய் உலகேழும் ஆனான் கண்டாய். ஓங்காரத்து உட்பொருளாய் நின்றான் கண்டாய்" (தி.6 .39 பா.10) என்றருள்கிறார் அப்பர். இது திருமழபாடித் தாண்டகத்தின் இறுதிப்பாடல். இதே கருத் தைத் திருவானைக்கா திருத்தாண்டகம், "முற்றாத வெண்திங்கள்" என்ற பாடலின் இரண்டாம் அடியில், "உற்றானைப் பல்லுயிர்க்கும் துணையானானை, ஓங்காரத்துட் பொருளை உலகமெல்லாம் பெற்றானைப்பின் இறக்கம் செய்வான் தன்னை" (தி.6 .63 பா.3) என்று அருளியுள்ளார். காஞ்சிபுரத் திருத்தாண்டகம் இரண்டாம் பதி கம் முதல் பாடல் முதல் அடியில், "உரித்தவன்காண் உணர்மெய்ஞ் ஞானம், விரித்தவன்காண்" (தி.6 .65 பா.1) என்றும், திருக்கீழ் வேளூர்த் திருத்தாண்டகம், "உளர்ஒளியை" எனத் தொடங்கும் பாடலில், "ஓங்காரத்து உட்பொருள்தான் ஆயினானை" (தி.6 .67 பா.7) என்றும், திருமாற் பேறு தாண்டகத்தில், "உற்றானைஉடல் தனக்கோர் உயிரானானை, ஓங்காரத்து ஒருவனை அங்கு உமையோர் பாகம், பெற்றானை" (தி.6 .80 பா.4) என்றும் அருளியுள்ளமை காண்க.

ஆலின் கீழ் அறம் உரைத்தான்:

ஆலின்கீழ் பெருமான் தட்சணாமூர்த்தியாய் எழுந்தருளி, சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமார் ஆகிய நால்வர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு உபதேசித்ததுடன் வேதம், ஆறங்கங்களும் உபதேசித்ததாக "உரித்தானை" என்னும் திருநாகேச்சரப் பாடலில் குறித்துள்ளார். இப்பாடற்பகுதி காண்க. "...தன்னடைந்தார் தம் வினை நோய் பாவமெல்லாம், அரித்தானை, ஆலதன்கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறங்கம், வேதம், தெரித்தானைத் திருநாகேச்சரத்துளானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே" (தி.6 .66. பா.2)

இதே பதிகத்துள் மூன்றாம் பாடலில், "காதலித்து நினையாத கயவர் நெஞ்சில் வாரானை மதிப்பவர்தம் மனத்துளானை" என்னும் இறைத் தத்துவம் பேசப் பெறுவதையும் காணலாம்.

மெய்யர்க்கு மெய்யன்:

இறைவன் தன்னை விரும்புவார்க்கு மெய்ப்பொருளாக இருந்து அருள் செய்பவன். இறைவனை விரும்பாதவரை அரும் பாவி என்கிறார். அப்பாவிகட்குப் பொய்ப் பொருளாகவே இருந்து வருபவன். இப்பாடல், "மெய்யானைத் தன்பக்கல் விரும்புவார்க்கு விரும்பாத அரும்பாவியர்கட்கென்றும் பொய்யானை" (தி.6 .66 பா.5) என அறிவித்துள்ளார். அடுத்த பாடலில், "அறம்புரியாத் துரிசர் தம்மைத் துறந்தான்" என்றும், "தோத்திரங்கள் பலசொல்லி வானோர் ஏத்த, நிறைந்தானை" என்றும் அருளினார். அடுத்த பாடலில், "மறந் தானைத் தன்னினையா வஞ்சர் தம்மை" என்றும், "அஞ்செழுத்தும் வாய் நவில வல்லோர்க்கு என்றும் சிறந்தானை" என்றும் அடுத்து, "ஏகம்பத்தில் உறைவானை ஒருவரும் ஈங்கறியாவண்ணம் தன் உள்ளத்துள்ளே ஒளித்துவைத்த சிறையானை" என்றும், "அறத்தில் நில்லாப் பிரமன்தன் சிரம் ஒன்றைக் கரம் ஒன்றினால் கொய்தானை" என்றும் பல தத்துவ உண்மைகளையும் புராண வரலாறுகளையும் இப்பதிகம் உணர்த்துவது காணலாம்.

சொற்பாவும் பொருள்:

சொல்லில் பரவியுள்ள பொருளை அறிந்து ஓதுவதே பெரும் பயன் நல்குவது. இதனையே மணிவாசகரும், சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்வாரே செல்வர். இவரே சிவபுரம் சேரத் தக்கார். சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்த இருப்பாரும் இவரே (தி.8 சிவபுரா, வரி 95) என்று குறித்துள்ளார். இதைத்தான் திருக்கீழ் வேளூர்த் தாண்டகம், "சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்திருளை வாங்காதானை" (தி.6 .67 பா.2) என்று குறிக்கின்றது. இப்பாடலில், பொருள் உணர்ந்து சொல்லாதார் உளத்திருளை நீக்கான், என்று எதிர்மறையாய்க் கூறியுள்ளார். பன் னிரு திருமுறைகளும் உரையுடன் வருதற்குக் காரணமாயிருந்த திரு முறைப்பாடல் இஃது என்பது குறிக்கத் தக்கது.

ஊன்கருவின் உள்நின்ற சோதி:

திருமுதுகுன்றத்தீசனை வணங்கினார் திருநாவுக்கரசர், முப் பொருள் உண்மை தெளியத் தோன்றியது. இக்கருத்தைத் திருமுதுகுன் றத் திருத்தாண்டகம், "ஊன்கருவின்" (தி.6 .68 பா.4) என்ற பாடலில் தெளிவிக்கிறார். ஊன் - உயிர் குடியிருக்கும் உடம்பு. கரு - உடம்பில் குடியிருக்கும் உயிர். சோதி - அவ்வுயிரில் ஒளியாய் உள்ள இறைவன். ஊன் என்பது பாசத்தையும், கரு என்பது உயிர்களையும், சோதியானை என்பது கடவுளையும் குறித்துள்ளன. அப்பாடற்பகுதி "ஊன்கருவின் உள்நின்ற சோதியானை, உத்தமனைப் பத்தர்மனம் குடிகொண்டானை" என்பதாம் திருஞானசம்பந்தரும் இத்திருமுது குன்றத் தேவாரமாகிய "விளையாத தோர்பரிசில் வருபசு, பாச, வேதனை, ஒண்தளை, ஆயின தவிரவ்வருள்தலைவன்" (தி.1 .12 பா.3) என்னும் பாடலால் முப்பொருள் உண்மையோடு, இருவினை, மாயையையும் குறித்துள்ளமை காண்க.

கோச்சோழர்:

முற்பிறவியில் சிலந்தியாயிருந்து வெண்ணாவல் மரத்தடிக் கீழ் வீற்றிருந்த பெருமான் மீது சருகு படாவண்ணம் தன் வாயின் நூலால் பந்தர் செய்த புண்ணியத்தால் மறுபிறவியில் சோழ மன்னரான கோச்செங்கட் சோழர் வரலாறு பெரிய புராணத்துள் காண்பது. சிலந்தியும், யானையும் முற்பிறவி உணர்ந்தவர்கள், முற்பிறவியிலும் இருவரும் பகையாயிருந்தவர்களே. இருவருள் சிலந்தி சோழ மன்ன ரானார். யானை கயிலையில் கணங்கட்குத் தலைவரானார். முற்பிறவி யில் மாலியவானே சிலந்தி புட்பதந்தனே யானை. சிலந்திக்கு அருள்செய்த திறத்தை, "பூச்சூழ்ந்த" என்னும் பாடலில், "சிலந்திக் கந்நாள் கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும்" (தி. 6 . 75 பா.8) என்ற பகுதியில் போற்றி உள்ளமை காணலாம்.

நன்பாட்டுப் புலவன்:

திருவாலவாயப் பெருமான், ஆதிசைவ அந்தணனாகிய தருமிக்குப் பொற்கிழி அளித்த வரலாற்றை அப்பர் திருப்புத்தூர்த் திருத்தாண்டகத்தில் அருளியமை கண்டு மகிழத்தக்கது. அப்பாடற் பகுதி காண்க. "மின்காட்டும் கொடிமருங்குல் உமையாட்கு என்றும், விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண், நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி, நற்கனகக் கிழிதருமிக்கு அருளி னோன் காண்." (தி.6 .76 பா.3)

தோத்திரமும் சாத்திரமும்:

மெய்யறிவு முதிர்ந்த மெய்யன்பில் விளைவது தோத்திரம். மெய்யன்பு முதிர்ந்த மெய்யறிவில் விளைவது சாத்திரம். உதாரண மாக, சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர் முதலியோர் மெய்யன் பில் விளைந்தனவே தோத்திரம் மெய்கண்டார். அருணந்திசிவம், மறைஞானசம்பந்தர், உமாபதிசிவம் முதலியோர் மெய்யறிவில் விளைந்தனவே சாத்திரம்.

தோத்திரம் என்பது பெருமாள் உயிர்கட்காகச் செய்தருளிய செயல்களையெல்லாம் புகழ்ந்து உரைப்பதாகும். சாத்திரம் என்பது பெருமான் அன்பராயினும் வன்பராயினும் நடுநிலை நின்று அவரவர்க்கு உள்ளபடி அவரவரைக் கொண்டு செலுத்தும் திறம் பாடுவது.

தோத்திரங்கள் என்பது இலக்கியம் போன்றது. சாத்திரம் என்பது இலக்கணம் போன்றது. தோத்திரங்களுள் தலையாயது திருமுறை. சாத்திரங்களுள் தலையாயது மெய்கண்ட சாத்திரம். இக்கருத்தை உள்ளடக்கி எழுந்த திருத்தாண்டகம் காண்போம். இதில் இறைவன் இரவாகவும் பகலாகவும் இருக்கின்ற தன்மையையும். அந்தி - மாலைப் பொழுது. சந்தி - காலைப் பொழுது. இவ்விருபொழுதா யும் இருப்பவன் என்பதையும், செயலாகவும், சொல்லின் பொரு ளாகவும் இருப்பவன் என்பதையும் அருளியுள்ளார். சொல், வடிவத் தைக் குறிப்பது. சொல் வடிவம் அம்மை. பொருளே அதனுள் உறை யும் சிவம். இதனை, "சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவ ருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே" என்றார் அபிராமிப் பட்டர். அப்பர் காட்டும் திருவாலங்காடு தாண்டகப் பகுதி காண்க. "அல்லும் பகலுமாய் நின்றார் தாமே, அந்தியும் சந்தியும் ஆனார்தாமே, சொல் லும் பொருளெலாம் ஆனார் தாமே, தோத்திரமும் சாத்திரமும் ஆனார்தாமே." (தி.6 . 78 பா.5)

சீலத்தார் ஏத்தும் திறம் :

சீலம் என்பது இங்கு ஒழுக்கத்தைக் குறித்தது. ஒழுக்கம் என்பது அன்பு, அருள், ஆசாரம், உபசாரம், உறவு, தவம், தானங்கள், வணக்கம், வாய்மை, அழுக்கிலாத் துறவு, வழிபடுதல் முதலிய நற்குண நற்செயல்களாம். இப்படிப்பட்டவர்களே இறைவனை ஏற்றிப் போற்றுவர். அல்லாதார் இப்பணியில் ஈடுபாடே கொள்ளார். அத் தகையோர் போற்றுதலைப் பெருமானும் கொள்ளார். இதனைப் பல இடங்களிலும் நமது ஆசாரிய மூர்த்திகள் குறிப்பிட்டுள்ளனர். சில வற்றைக் காண்போம். திருவாலங்காடு திருத்தாண்டகம், "மாலைப் பிறை" என்னும் பாடல் நான்காம் அடியில், "சீலத்தார் ஏத்தும் திறத்தார்தாமே திருஆலங்காடுறையும் செல்வர்தாமே" (தி.6 .78 பா.10) என்றும், திருவீழிமிழலைத் தாண்டகம் ஆலைப்படு கரும்பின் என்னும் பாடல் இரண்டாம் அடியில், "சீலம் உடை அடியார் சிந்தையான் காண்" (தி.6 .52 பா.2) என்றும் அப்பர் அருளியுள்ளமை காண்க. ஞானசம்பந்தரும் தில்லையில் பாடியருளிய "ஆடினாய்" என்னும் பதிக மூன்றாம் பாடலில் "சீலத்தார் தொழுதேத்து சிற்றம்ப லம்" (தி.3 .1 பா.3) என்று தில்லைவாழ் அந்தணர்களைச் சிறப் பித்துள்ளமை காண்க.

அடியவர் விருப்பே ஆண்டவன் விருப்பம்:

உலகியலில் ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு வேறொன்று தோன்றும். அருளியலில் பெருமானைப் போலவே அடி யவர்களும் பாசம் ஒன்றிலராய், அற்றவர்க்கு அற்றவராய் இருத்தலின் பெருமான் அருள் எதுவோ அதையே வேண்டுவதன்ற வேறொன்றை விரும்பார். இதனையே அடியவர் வழி ஆண்டவன் வருவதாகக் கூறுகிறார். திருமாற்பேறு திருத்தாண்டகமாகிய, "மலைமகள்தம்" என்னும் பாடலில், "விலைபெரிய வெண்ணீற்று மேனியானை, மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை" (தி.6 .80 பா.3) என்றருளியுள்ளார். இதனையே மணிவாசகரும், "வேண்டத் தக்கதறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ" (தி.8 குழை. பா.6) என்றெல்லாம் கூறி, "வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே" என அருளிப் போந்தார்.

அனாசாரம் பொறுத்தருளி:

இறைவழிபாட்டில் ஈடுபடுவோர் அன்பும் அச்சமும் உடைய வராயிருத்தல் வேண்டும் என்பர். அப்பர் ஐந்தாம் திருமுறையில் அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும் எப்படியேனும் இறைவனை வழிபடுக என்று அருளினார். இது தாழ்ந்தோர் ஆசாரம். அன்பு, ஆசாரம், அச்சம் இவற்றுள் எது முதன்மையானது? பெருமான் விரும்புவனவற்றுள், அன்பே முதன்மையானது. சிவகோசரியார் அச்சத்துடனும் ஆசாரத்துடனும் வழிபட்டார். கண்ணப்பர் அச்சம், ஆசாரம் இன்றி அன்புப் பிழம்பாய் வழிபட்டார். அவரது தூய அன்பையே ஏற்றார். சிவகோசரியாருக்கும் அருள் செய்தார். திருநீல நக்க நாயனார் சாத்தமங்கை ஈசனை ஆசாரத்துடன் வழிபட்டார். இறைவன் மீது விழுந்த சிலந்திப் பூச்சியை அகற்றுவதற்கு அவர்தம் மனைவியார் அன்பு மேலீட்டால் ஊதி உமிழ்ந்தார். இங்கும் அன்பே முதன்மை பெற்றது. எனவே இறைவன் இரண்டையுமே விரும்பு கிறான் என்றாலும் மிகுதியாக நம்மிடம் எதிர்பார்ப்பது அன்பு ஒன் றையே என்பது தெளிவாகிறது. இதனைத் திருமாற்பேறு திருத் தாண்டகமாகிய "நீறாகி நீறுமிழும்" என்னும் பாடலில் குறிப்பிட் டுள்ளமை கண்டு கடைப்பிடிப்போமாக. உவகைக் கண்ணீர் ஆறாத ஆனந்தத்து அடியவரின் ஆசாரமற்ற செயல்களைப் பொறுத்து அவருக்கு அருளும் வழங்குகிறான்.

நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகி

நினைவாகி நினைவினிய மலையாள் மங்கை

கூறாகிக் கூற்றாகிக் கோளுமாகிக்

குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர்

ஆறாத ஆனந்தத் தடியார் செய்த

அனாசாரம் பொறுத்தருளி அவர்மேல் என்றுஞ்

சீறாத பெருமானைத் திருமாற் பேற்றெஞ்

செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

(தி.6 .80 பா.5)

இத்தலத்தாண்டகமாகிய, "பிறப்பானை" என்ற பாடலில், "நின்மலனை நினையாதாரை நினையானை நினைவோரை நினை வோன் தன்னை" என்றருளியுள்ளமை காண்க. பெருமான், "நலமிலன் நண்ணார்க்கு, நண்ணினர்க்கு நல்லன், சலமிலன் பேர் சங்கரன்" (திரு வருட்பயன் 9) என்னும் நடுவுநிலையையும் சுகத்தையும் செய்வதே அவன் தொழில் என்பதையும் உணர்வோமாக.

தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி... | 1 | 2 | 3 | 46 |