தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி... | 1 | 3 | 4 | 5 | 6 |

94ஆம் பதிகம்:

4 "நின்ற திருத்தாண்டகம்:" குறிகளும், அடையாளமும், கோயிலும், நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும் என்று அப்பர் ஐந்தாம் திருமுறையில் அருளியவாறு பெருமான் எப்படியெல்லாம் நின்று அருள் செய்கிறார் என்று அவர் நின்ற தன்மைகளைப் பலபடியாக இப்பதிகம் எடுத்துரைத்தலின் இப்பதிகம் நின்ற திருத்தாண்டகம் எனப் போற்றப் பெறுகிறது. "நெருநலையாய், இன்றாகி, நாளையாகிய, நிமிர் புன்சடை அடிகள் நின்ற வாறே" (தி.6 .94 பா.1) என்பது எடுத்துக்காட்டு.

95ஆம் பதிகம்:

5. "தனித்திருத்தாண்டகம்:" அப்பன் நீ, அம்மை நீ எனத் தொடங்குவது. சிவபெருமானின் முழுமுதல் தன்மையாகிய தனித் தன்மை பேசப் பெறுதலால் இப்பெயர் பெற்றது எனலாம்.

96ஆம் பதிகம்:

6. இதுவும் "தனித்திருத்தாண்டகம்:" அப்பர் அடிகள் எப்படி யெல்லாம் தன்னை இறைவன் ஆட்கொண்டான் என்ற தனித் தன்மை களை விளக்கிப் பாடுதலால் இதுவும் தனித்திருத்தாண்டகம் எனப் போற்றப் பெறுகிறது. சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே, சமண் தீர்த்து என்றன்னை ஆட்கொண்டாரே, உடல் உறுநோய் தீர்த்தென்னை ஆட்கொண்டாரே, வெந்துயரம் தீர்த்தென்னை ஆட்கொண்டாரே, இடர் உறுநோய் தீர்த்தென்னை ஆட்கொண்டாரே என்பன அப்பரின் வரலாறு கூறும் அகச் சான்றுகளாகத் திகழ்கின்றன.

97ஆம் பதிகம்:

7. "திருவினாத் திருத்தாண்டகம்:" அண்டம் கடந்த சுவடும் உண்டோ? என்பது போன்ற வினாக்களாகவே ஐந்து பாடல்கள் காணப்படுதலால் இப்பதிகம் இப்பெயர் பெற்றது. மற்ற ஆறு பாடல் களும் பெருமானின் பெருமைகளைக் கண்டேன் என்றே குறிப் பிட்டுள்ளார்.

98ஆம் பதிகம்:

8. "மறுமாற்றத் திருத்தாண்டகம்:" சமணத்தினின்றும் சைவம் சார்ந்த நாவுக்கரசரை, பல்லவ மன்னன் சமணர் துர்ப்போதனையால் தண்டிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஏவலரை அனுப்பி அழைத்தபோது, அவர்கட்கு மறுமொழியாக அருளியதே மறுமாற்றத் திருத்தாண்டகம். முடிமன்னனை எதிர்த்து மறுமொழி சொன்ன மாண்பை இப்பதிகத்துட் பரக்கக் காணலாம். மன்னன் முன்பு செல்லா மலேயே அப்பர் இருந்திருப்பார். ஏவலர்கள் மீது வைத்த கருணையால் அவர்கள் துன்புறா வண்ணம் மன்னன் எதிர் சென்றார். "நாமார்க்கும் குடியல்லோம்," "பாராண்டு பகடேறி வருவார் சொல்லும், பணி கேட்கக் கடவோமோ, பற்றற்றோமே, புண்ணியனை நண்ணிய புண் ணியத்துளோமே," "நாவலந் தீவகத்தினுக்கு நாதாரன காவலரே ஏவி விடுத்தாரேனும், கடவமல்லோம் கடுமையொடு களவற்றோமே," "கோவாடிக் குற்றேவல் செய்கென்றாலும், குணமாகக் கொள்ளோம் எண்குணத்துளோமே" என்பன அவர் மறுமாற்றங்களாம். இவ்வெட் டுத் தலைப்புக்களும் பின் எட்டுப் பொதுப் பதிகத் தலைப்புகளில் காணப்படுவனவாம்.

இப்பதினைந்து பதிகங்களேயன்றி, "கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி" (தி.6 .32) என்னும் திருவாரூர்த் திருத்தாண்டகம், திருக்கயிலாயத் திருத்தாண்டகப் பதிகங்களாகிய "வேற்றாகி விண் ணாகி நின்றாய் போற்றி" (தி.6 .55) என்ற பதிகம்; "பொறையுடைய பூமி நீரானாய் போற்றி" (தி.6 .56) என்ற பதிகம், "பாட்டான நல்லதொடையாய் போற்றி" (தி.6 .57) என்ற பதிகம் என்பன போற்றித் திருத்தாண்டகம் என்ற தலைப்பில் அமைந்துள்ளன. ஆக 19 பதிகங்கள் சிறப்புத் தலைப்புடையனவாம்.

பிறந்த நாளும் பிறவாநாளும்:

பயனில்லாத சொல் பேசுபவனை மகன் என்று சொல்லாதே. மக்களில் பதர் என்று சொல்லுக என்கிறார் திருவள்ளுவர்.

பயனில்சொல் பாராட்டுவானை மகன் எனல்

மக்கட் பதடி எனல். - குறள், 196

இஃது உலகியல்.

தலைவனும் தலைவியும் சேர்ந்து இன்புறும் நாளே பயனுள்ள நாள். அல்லாத நாள் பயன் இல்லா நாள். பதர் போன்ற நாள் என்கிறார். குறுந்தொகைப் புலவர் பதடி வைகலார். இவர் இயற்பெயர் தெரியாமையால் பாடல் சிறப்பைக் கொண்டு இப்பெயரையே இவருக்கு இட்டனர் பெரியோர். இவர்தம் பாடற்பகுதி காண்க.

"எல்லாம் எவனோ பதடி வைகல்

.................

அரிவை தோளணைத் துஞ்சி

கழிந்த நாள் இவண் வாழுநாளே" - குறுந்தொகை 323

இஃது அகவியல்.

அருளியல் ஞானியாகிய அப்பரடிகளோ பேரின்பப் பொருளாகிய "பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே" (தி.6 .1 பா.1 - 10) அவனைப் பற்றிப் பேசும் நாளே பிறந்த நாள்; பயனுள்ள நாள்; நாட்களிலே உள்ளீடு உள்ள நாள்; மற்ற நாள் பிறவா நாள், பயனுள்ள நாள், நாட்களிலே உள்ளீடு உள்ள நாள். மற்ற நாள் பிறவா நாள்; உள்ளீடு இல்லாத பதர் போன்ற நாள் என்கிறார். "அரியானை அந்தணர் தம் சிந்தையானை" (தி.6 .1) எனத் தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே" (தி.6 .1 பா.1 - 10) என்பதையே மகுடமாக வைத்துப் பாடியுள்ளமை கண்டு தெளியத்தக்கது.

துறந்தோர் உள்ளப் பெரும் பயன்:

ஆசை நீத்தவர்க்கே வீடு தருபவன் இறைவன். பற்றற்றோர் சேர் பரம்பொருளைப் பற்றுற்றார் சேர இயலாது. இதனால்தான் ஞானசம்பந்தர் "அற்றவர்க்கு அற்ற சிவன்" (தி.3 .120 பா.2) என்றார். பற்றற்றவரே, இயல்பாகவே பற்றற்ற பரமனைச் சேரலாம் என்றார். பற்று அறுவதற்கே பரமேசுவரன் நமக்குப் பல பிறப்பைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான்.

இக்கருத்தையே அரியானை என்னும் பதிக ஐந்தாம் பாடலி லும், ஏழாம் பாடலிலும் குறிக்கின்றார். அருந்துணையை என்னும் ஐந் தாம் பாடலில், "மடவாரோடும் பொருந்தணை மேல்வரும் பயனைப் போக மாற்றிப் பொது நீக்கித் தனை நினையவல்லோர்க்கு என்றும் பெருந்துணையை" (தி.6 .1 பா.5) என்றருள்கிறார். வரும் பயனை என்னும் ஏழாம் பாடலில், "சுரும்பமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில், துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் யார்? அவர் உள் ளத்தில் பெரும்பயனாய்ப் பிரகாசிப்பவன் பெரும்பற்றப் புலியூர்ப் பிரான்" (தி.6 .1 பா.7) என்கிறார்.

இவ்விரு பாடல்களிலும், பெண்ணாசை துறந்தார்க்கே பெரு மான் வீடளிப்பான், பெரும்பயனாயிருப்பான். பெருந் துணையாயி ருப்பான் என்பது தெளிவாகிறது.

எல்லா ஆசைகளும், மண்ணாசை, பெண்ணாசை, பொன் னாசை (பொருள்) என்ற மூன்றில் அடங்கும். இவற்றுள்ளும் மற்ற இரு ஆசைகளைக் கடந்தாலும் பெண்ணாசை கடத்தற்கரியது என்பத னால்தான். அதனைக் கடந்தவர்கட்குப் பெரும்பயனாய் உள்ளான் இறைவன் என்கிறார் அப்பா.

கண்ணால் காணும் இன்பம், காதால் கேட்கும் இன்பம், நாவால் சுவைக்கும் இன்பம், மூக்கால் முகரும் இன்பம், உடலால் உற்றறியும் ஊற்றின்பம். இவ்வைந்தும் சிற்றின்பமே. சிறுபொழுது இன்பம் பயப்பதால் சிற்றின்பம் என்றனர். இவ்வைம்புல இன்பமும் ஒரு காலத்து ஓரிடத்தே நிகழ்தல் பெண்ணிடத்தேயாகலின், பெண் இன்பத்தைத் தலைமை பற்றிச் சிற்றின்பம் என்று பேசி வருகின்றனர். "கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும், ஒண்தொடி கண்ணே உள" (குறள், 1101) என்பது வள்ளுவம், தலைமை பற்றிய முடிவான ஆசையைத் துறந்த பெரியோர்க்கே பெரும்பயனாகப் பெருமான் விளங்குகின்றான் என்பதை இப்பாடல் பகுதிகளால் விளக்கியுள்ளார். எனவே எந்த வகை ஆசையும் அற்றவர்க்கே வீடு பேறு உண்டாம் என்பதே இதனால் உணர்த்தப்படும் உண்மை என்பதைத் தெளிவோமாக.

ஆசை அறுவது நமது முயற்சியால் ஆகாது. இறைவன் அருளைத் துணையாகப் பற்றினால் அறும். அதற்குத் துணை செய்கி றார் தருமைக் குருமுதல்வர் குருஞானசம்பந்தர், அப்பாடலை நாளும் ஓதுவோம். நலம் பெறுவோம். அப்பாடல் வருமாறு:

வந்த பொருளாசை மண்ணாசை பெண்ணாசை

இந்தவகை ஆசையெல்லாம் என் மனதில் - வந்தும் இனிச்

சேராமல் வாழ நினைகண்டாய் தென்கூடல்

பேராத சொக்கநாதா! - சொக்கநாத வெண்பா

ஆரூரில் அந்திக் காப்பு:

நமது சிவாலயங்களில் ஆறு கால பூசை உண்டெனினும் அவற்றுள் அந்திக்கால பூசையே சிறப்புடையது. இப்பூசை திருவா ரூரில் சிறப்பாகப் போற்றப்படுகிறது. இதனை அப்பர், புக்க திருத் தாண்டகத்துள் ஒன்பதாம் பாடலில் குறித்துள்ளார்.

பொன்தீ மணிவிளக்கைப் பூதம் பற்றிவர புலியூர்ச் சிற்றம் பலம் எழுந்தருளும் பெருமான் மணியாரூரில் நின்று அந்தி வழிபாட்டை ஏற்றுச் செல்கிறார் என்று நயம்பட உரைத்துள்ளார். "மணியாரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ளப், பொன்தீ மணிவிளக்குப் பூதம் பற்றப், புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே" (தி.6 .2 பா.9)

தொழுதகை துன்பம் துடைப்பாய்:

தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் என்பது தொல் லோர் வாக்கு. "தொழுவாரவர் துயிராயின தீர்த்தல் உன தொழிலே" (தி.7 .1 பா.9) என்பது சுந்தரர் வாக்கு. "தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி" (தி.8 போற். வரி 131) என்பது மணிமொழி. இதனை அப்பரும், "தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி" (தி.6 .5. பா.8) எனத் திருவதிகைப் போற்றித் திருத்தாண்டகம் எட்டாம் பாடலில் குறிக்கின்றார். இதற்குப் பொருள் - தொழுதவர்கட்குக் காலம் கடந்து அருள் செய்வதில்லை. உடனே அருள் செய்கிறார் என் கிறார் அப்பர். தொழுதகையோடேயே, சற்றும் தாமதியாமல் துன்பத் தைத் துடைப்பான் பரமன் என்று அருள்கிறார். அதே பாடலில், "அஞ் சொலாள்பாகம் அமர்ந்தாய் போற்றி" (தி.6 .5 பா.8) என்கிறார். ஐந்தாம் திருமுறையில் மயிலாடுதுறைப் பதிகத்தில், "அஞ்சொலாள் உமைபங்கன் அருளிலே" (தி.5 .39 பா.4) என்ற பாடலில் அஞ் சொலாள் என்ற சொற்றொடர் இங்கும் வந்துள்ளமையால் அஞ்சலாள் என்பது சரியல்ல. அஞ்சொலாள் என்பதே சரியான பாடம் என்பது தெளிவாகிறது.

கொடுவினையார் என்றும் குறுகாவடி:

கொடிய வினைகளைச் செய்தவர்கள் இறைவழிபாட்டில் ஈடுபட மாட்டார்கள். அவர்களுடைய செயல் (வினை) கொடுமை யானது. ஆகலின் அவர்கள் அவ்வினைப் பயனை அநுபவித்து மெல் வினையான பிறகே பெருமான் பக்கலில் வருவது சாத்தியமாகும். என வேதான் கொடிய செயல்களைச் செய்தவர்கள் இறைவன் திருவடிக்கு வெகுதூரத்திலேயே இருப்பர். குறுகமாட்டார். குறுகவிடாது திருவ ருள். மெல்வினையாளர் தம் குறைகளை உணர்ந்து பெருமானை அடையின் அவர்களைத் துன்பக் கடலில் ஆழாமல் எடுத்துக் காப்பாற்றுவார். இதனையே அப்பர், "கொடுவினையார் என்றும் குறுகாஅடி, குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும் அடி" (தி.6 .6 பா.2) என்று அருளிச் செய்தார். குறைந்தடைந்தாரை நல்லவர்கள் என்று சொல்லலாம். நல்லவர்கள் தொழுதேத்தும் நாரையூரும் என்பது அப்பர் அருள்வாக்கன்றோ!

உரு இரண்டும் ஒவ்வா:

சிவபெருமான் சொரூப நிலையில் அருவும் (ஆகாயம்) அல்லனாய், உருவும் அல்லனாய், அருவுருவும் (சிவலிங்கம்) அல்லனாய் இருப்பவன். இதனை நம் குருஞானசம்பந்தர், "அருவும் உருவும் அருவுருவும் அல்லாப் பெரியவன்" என்கிறார். அப்பரம் பொருள் தடத்தநிலையில் (உயிர்கட்கு அருள் செய்யும் நிலையில்) உருவுகொண்டு அருள்பாலிக்கும்போது எல்லா உருவங்களிலும் அம்மை அப்பர், சிவசத்தி கலப்புடனேயே உருவம் கொள்வார். அவ்வுருவம் ஒன்றோடொன்று சிறிது வேறுபட்டே அவ்வுண்மையை திருவதிகைத் திருவடித் திருத்தாண்டகம் ஆறாம் பாடலில் அப்பர் தெரிவித்தருள்கின்றார். இறைவன் தனது இயல்பாய் சொரூபத்தில் உரு என்று உணரப்படாத அடி, உயிர்கட்கு அருளும் பொருட்டுத் தடத்த நிலையில் உருவம் கொள்ளும்போது, அம்மை அப்பராகிய உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வாமல், சிறிது வேறுபாட்டுடன் இருக்கும் இயல்பின் என்கிறார். இன்று நமது உடம்பிலும் வலப்பக்கம் இடப்பக்கம் ஒவ்வாததாக, சிறிது வேறுபட்டதாக (உலக முழுவதும்) எல்லோருக்கும் இருப்பதை நாம் நன்கு உணரலாம், வலம் - சிவம், இடம் - சத்தி, மனித உடல் மட்டுமல்ல விலங்கினங்கள், தாவரங்கள் எல்லாமே சிவசத்தி சம்மேளனமாகத்தான் உள்ளன. எனவே எல்லாமே ஒன்றோடொன்று ஒவ்வாதனவாகவே உள்ளன. ஊன்றி நோக்குவோர் இத்தத்துவத்தை நன்கு உணரலாம். நம் உடலிலும் வலம் பெரிது. இடம் சிறிது. தாவரத்தில் ஓர் இலையை எடுத்துப் பார்த்தால் வலது பக்கம் பெரிதாய், வன்மையதாய் இருத்தலையும், இடது பக்கம் சிறிதாய் மென்மையாய் இருத்தலையும் காணலாம். அப்பாடல் பகுதி காண்க. "உரு இரண்டும் ஒன்றோடொன்று ஒவ்வா அடி, உரு என்று உணரப்படாத அடி" (தி.6 .6 பா.6) இறைவன் உருவம் கடந்தவர். இதுவே அவர் தம் இயற்கை நிலை.

மனத்தகத்தான்:

மனத்தகத்தான், தலைமேலான் வாக்கினுள்ளான் என்னும் தாண்டகம் மனம், மொழி, மெய் என்னும் முக்கரணங்களிலும் இறை வன் பிரிப்பின்றி இருந்து இயக்குகின்றான் என்பதை எடுத்துக் காட்டுகிறது. எல்லாப் பொருள்களிடத்தும் கலப்பினால் ஒன்றியிருந்து உதவும் இறைவனின் பெருங்கருணையை இப்பாடல் நமக்கு உணர்த்துகிறது. இதைப் போலவே, "வாயானை, மனத்தானை, மனத்துள் நின்ற கருத்தானை" (தி.6 .19 .8) என்பதும் கலப்பினால் இறைவன் ஒன்றாயிருந்து அருள் செய்யும் சிறப்பை எடுத்து ஓதுகிறது. "தேவர்க்கென்றும் சேயான்" என்பது வேறாய் இருந்து அருள் செய் யும் தத்துவத்தை விளக்கி நிற்கிறது.

திருவடி என் தலைமேல் வைத்தார்:

அப்பருக்குத் தாம் சமணசமயம் சார்ந்ததனால் உண்டாய அருவருப்பு, திருநல்லூரில் பெருமான் திருவடி சூட்டியபிறகே நீங்கி யது. இதன் பிறகு அருவருப்பாய குறிப்புக் காணப் பெறவில்லை. ஊன்றி உணர்வோர் இக்கருத்தை நன்கறிவர். புறச்சமயம் சார்ந்தத னால் தமக்கு உண்டாய அருவருப்பைப் போக்கவே தில்லைத் திரு வீதியில் அங்கப்பிரதட்சணம் செய்தார். திருத்தூங்கானை மாடத்தில், "மின்னாரும் மூவிலைச்சூலம் என்மேல் பொறி" (தி.4 .109 பா.1) என வேண்டி, சூலக்குறியும் இடபக்குறியும் பெற்றார். திருச்சத்தி முற்றத்தில், "பூவார் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை" (தி.4 .96 பா.1) என வேண்டினார். அவ்வேண்டுகோளைப் பெருமான் திருநல் லூரில் நிறைவு செய்தருளினார். "இனமலர்கள் போதவிழ்ந்து மது வாய்ப்பில்கி நனைந்தனைய திருவடிஎன் தலைமேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே" (தி.6 .14 பா.1) என்பது அப்பர் அருள்வாக்கு. இப்பாடலின் முன்பகுதியே நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் என்பது.

பெருமானின் பெருமையையும் தமது சிறுமையையும் நினைத்தால் மனம் இயல்பாகவே உருகத்தான் செய்யும். அவ்வநு பவம் அப்பருக்கு வாய்த்தது. அதனை அவர்தம் அருள்வாக்கு நமக் கும் புலப்படுத்துகிறது. நையவைத்தார் என்பதற்குத் துன்புற வைத்தார் என்றும், அதனால் மனப்பக்குவம் அடைந்த போது தீவினைகளை நீங்குமாறு செய்தார் பெருமான் என்றும் கொள்வர். ஆனால் இத் தொடருக்கு அருணைவடிவேலனார், மனம் மேலும் இளக வைத்தார் என்று கூறி, தற்போதம் கெட வைத்தார் என்பார்.

தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி... | 1 | 3 | 4 | 5 | 6 |