தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி... | 1 | 2 | 35 | 6 |

நிரூபியாய் ரூபியுமாய் நின்றான்:

இறைவன் யாதொரு வடிவமும் இல்லாதவன். இது அவனது உண்மைநிலை. ஆனால் உலகத்தை நடத்துவதற்கு மூன்று வடிவம் கொள்கிறான். 1. அருவம்: இது ஆகாயம் போன்றது. இதனைத் தில்லையில் உள்ள இரகசியம் நமக்கு நன்கு உணர்த்தும். 2. உருவம்: இது மனித உருவம் போன்றது. தில்லையில் நடராசப் பெருமான் திருவுரு இதனைத் தெளிவிக்கும். 3 அருவுருவம்: அருவமும் இன்றி, உருவமும் இன்றி, தத்துவம் நிறைந்த அடையாளமாய்த் திகழ்வது. தில்லையில் சிவலிங்க வடிவாய் உள்ளது. வானக்கவிவும், மனிதத் தலையும் இத்தத்துவத்தை இனிதே விளக்கும். உருவம் அற்றநிலையே இறைவனுக்கு உண்மைநிலை என்பதை நமது ஆதிகுருமூர்த்திகள், தமது ஆசாரியரைச் சிவமாக வைத்து அருளிய சிவபோகசாரப் பாடலால் (பா.2) அறிந்து இன்புறத்தக்கது அப்பாடல்.

அருவும் உருவும் அருவுருவும் அல்லா

ஒருவன் உயிர்க்குயிராய் ஓங்கித் - திருவார்

கமலைவரு ஞானப்ர காசனென வந்தே

அமலபதந் தந்தெனையாண் டான்.

அப்பர் கூறும் அப்பாடல் பகுதி திருமறைக்காட்டுத் திருத்தாண்டகம் "சிலந்திக்கருள் முன்னம்" (தி.6 .23 பா.3) எனத் தொடங்குவது. அதன் மூன்றாம் அடியில் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் என அறிவிக்கிறது. நிரூபி - உருஅற்றன். ரூபி - அருவம், உருவம். அருவுருவம் கொள்பவன்.

யோகநெறித் தியாகேசன்:

அப்பர் சுவாமிகள் அருளிய திருவாரூர்த் திருத்தாண்டகம் யோகநெறியை உணர்த்தும் சிறப்புடையது. ஆரூர் மூலாதார கே்ஷத்திரம் என்பதும், சுந்தரருக்கு யோகநெறி அருளியது என்பதும் சிந்திக்கத்தக்கது. யோக மார்க்கத்தில் இறைவனை அடைந்துய்ந்தவர் சுந்தரர். இவர் வரலாற்றில் மிகுந்த இயல்புடையது ஆரூர். இது, யோகநெறி காட்டும் தலமாக இலங்குவதில் வியப்பில்லை. அதனால் அப்பர் அடிகள், "உயிராவணம் இருந்து உற்றுநோக்கி" (தி.6 .25 பா.1) என்ற இத்தலத் திருத்தாண்டகத்தில் யோக நெறியினை விளக்கி அருளுகிறார். மங்கையோடு இருந்தே யோகு செய்யும் அம்மணா ளனை, உயிர் எங்ஙனம் ஒன்றியிருந்து வழிபட வேண்டும் என்று இதில் கூறுகிறார். உயிர்க்காற்றை அடக்கி உற்றுநோக்கி, உள்ளம் எனும் கிழியில் இறைவனின் திருவுருவத்தை எழுதி, அதன் முன்பு உயிரையே ஆவணம் செய்து தந்தால், அஃதாவது மீளா அடிமை உனக்கு என ஓலை எழுதித் தந்தால், தன்னை உணரும் சிறப்புடை யாரோடு இணைந்து அருளுவன் இறைவன் என்பது கருத்து. ஆயிரம் கொம்புகளைக் கொண்ட யானையாகிய அயிராவணத்தில் ஏறாது, ஆனேறு ஏறி, அமரர்நாடு ஆளாது ஆரூர் ஆண்ட அயிராம்வணமாக இலங்கும் இறைவனே! என் அம்மானே! நின் அருட்கண் துணை யின்றி யார் எது செய்ய வல்லார்? என்று கேட்டு அருளுகின்றார். இப்பாடலில் நுட்பமான பல கருத்துக்கள் உள்ளன. உயிரை அடிமை ஓலை எழுதி இறைவனிடத்துத் தருதல் என்றால், தன்னை - தன் முனைப்பை - தன் செயலை அறவே மறந்து, துறந்து இனி எல்லாம் நீயே என்று சரண் புகுதல். இதனை மாணிக்கவாசகர் தன் அநுபவமாகத் திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலில், இறைவன் குருநாதராக இருந்து காட்சி தந்த பொழுது உயிரை அர்ப்பணித்ததாகக் கூறுகிறார். "அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லா மும், குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டி லையோ - இன்று ஓர் இடையூறு எனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே, நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே" (தி.8 குழைத். பா.7) என்று அருளுகின்றார். உயிர், உடல், உடைமை அனைத்தையும் ஆண்டவன் கொண்டான் என்கிறார். ஆவி, உடல், உடைமை எல்லாம் என்பதில்லாமல், எல்லாமும் என்று முற்றும்மை கொடுத்துக் கூறியிருப்பதனால், இனி என்னிடம் ஏதும் இல்லை என்பது பொருளாயிற்று. இங்ஙனம் அர்ப்பணித்தலே, உயிர் ஆவணம் செய்து உன்கைத் தருதல் என்பது. சுந்தரரும் திருவாரூர்த் தேவாரத்தில், "மீளா அடிமை உமக்கே ஆளாய்" (தி.7 .95 பா.1) என்று அருளியிருப்பதும் இக்கருத்தையே உணர்த்துகிறது.

ஈண்டு உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி என்பது அடியார்களுடன் உடனாய் இருந்து அருளுகின்றான் என்னும் கருத்துடையது. இதுவே யோகநெறி ஆகும். ஒட்டுதல் யோகம் ஆம். "ஏகபோகமாய் நீயும் நானுமாய்" என்று அருணகிரிநாதர் குறிப்பது ஈண்டு நினையத் தகும். அடுத்து இந்தப்பாடலில் அயிராம்வணமே என் அம்மானே என்பதில் அயிராம்வணமே என்றதற்குப் பொருள் நுண்மணலால் ஆகிய வடிவத்தையுடையவனே என்பதாகும். அயிர் என்னும் சொல்லிற்கு நுண்மணல் என்பது பொருள். அந்த நுண்மணலையே உண்டு வாழும் மீன்தான் அயிரை மீன். எனவே நுண் மணலால் ஆகிய திருவுருவத்தையுடையவனே (புற்றிடங் கொண்டவனே) என்பார். அயிராம்வண்ணமே என்றருளினார். இக்கருத்துக்களையுடைய பாடல் காண்க.

உயிரா வணம்இருந்து உற்றுநோக்கி

உள்ளக் கிழியில் உருஎழுதி

உயிரா வணம்செய்திட்டு உன்கைத் தந்தால்

உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி

அயிரா வணம்ஏறாது ஆனேறு ஏறி

அமரர்நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட

அயிரா வணமே என் அம்மானே நின்

அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே.

- தி.6 .25 பா.1

என்பது அப்பாடல். அயிராவணம் ஏறாது, ஆனேறு ஏறி, அமரர் நாடு ஆளாது, ஆரூர் ஆண்ட இறைவன், என்பதால் அவன் தனக்குரிய வாய்ப்பு வசதிகளையெல்லாம் விட்டுவிட்டு, மன்னுயிர்களை ஈடேற்றம் செய்யும் பொருட்டு இந்த மண்ணுலகுக்கு எளிவந்த கருணாமூர்த்தியாக இறங்கி வந்தான் என்று போற்றுகிறார்.

ஏக்காதார் மனத்து இருள்:

இறைவனை இரவும் பகலும் எப்பொழுதும் நாவாரத் துதித்து ஏத்தும் அடியார் உள்ளத்து அவன் ஒளிவளர் விளக்காக ஒளிவிடு வான். அல்லாதார் உள்ளத்து இருளாயிருப்பான். இதனைத் திரு வாரூர் அறநெறித் திருத்தாண்டகம், "பகலவன்தன்" (தி6 .33 பா.10) என்ற பாடலில், "ஏத்தாதார் மனத்தகத்துள் இருளானானை" என்றும், "பொருளியல் நல்" (தி.6 .33 பா.7) என்ற பாடலில், "மருளியலும் சிந்தையார்க்கு மருந்துதன்னை" என்றும் அருளியிருப்பதால் தெளிய லாம். திருவாரூர்அரநெறி என்பது, திருவாரூர் திருமூலட்டானார் சந்நிதிக்கு எதிரில், வலப்பக்கம் மேற்கு நோக்கிய சந்நிதியாகத் திகழ்வது. நமிநந்தி அடிகள் நாயனார், நீரால் திருவிளக்கு இட்ட திருத்தலம். செருத்துணைநாயனார், மலர்தொடுக்கும் இடத்தின் கீழ் இருந்த மலரை முகந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கரிந் ததும் கழற்சிங்க நாயனார் இதை அறிந்து மலரை எடுத்த மனைவியின் கையைத் தடிந்ததுமாகிய தலம் என்பதும் அறியத்தக்கது.

திருவாரூர் கோயிலாக் கொண்ட நாள்:

திருவாரூர் மிகமிகப் பழமைவாய்ந்த திருத்தலம். இதனைப் பல புராணக் குறிப்புகள் கொண்டும், வரலாற்றுக் குறிப்புக்கள் கொண்டும் விளக்குகிறார் அப்பர். ஆரூர்ப் பெருமானே நீ ஒருவ னாக, ஏகனாக இருந்தபோதே இக்கோயிலை இடமாகக் கொண்ட னையா? ஓருருவே மூவுருமாய் அயன், அரி, அரன் எனப் படைத்து, காத்து, அழிக்கத் தொடங்கிய அந்நாளோ? மார்க்கண்டேயர் மீது பாசம் வீசிய நாளில் கோபித்துக் காலனைக் காய்ந்த நாளோ? காமனை ஒரு காலத்தில் நெற்றிக் கண்ணால் விழித்தழித்தனையே? அந் நாளோ? பஞ்சபூதங்களிலும் கலந்திருந்து மண் முதல் விண் முடிய ஐம்பூதங்களையும் படைத்த நாளோ? மான் கன்றினைக் கையிலே ஏந்திய பெருமானே! ஒப்பற்ற உமாதேவி உனது இடப்பாகத்தைத் திருவினளாய்ச் சேர்ந்தாளே அந்த நாளோ? அதற்கு முன்போ பின்போ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாள்? என்று வினா வடிவிலேயே பதிகம் (தி.6 .34) முழுவதும் பாடியுள்ளார்.

ஓராதார் உள்ளத்தில் நில்லார்:

தினையாதவர் உள்ளத்தில் மறைந்திருப்பானே தவிர நிறைந்திருக்க மாட்டான் இறைவன். உள்ளுருகி நிற்பார் சிந்தையில் தெளிவாயிருப்பவன். இதனை, "ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே, உள்ளூறும் அன்பர் மனத்தார் தாமே" (தி.6 .36 பா.8) என்றும் திருப்பழனத் தாண்டகப் பகுதியில் அறிவிக்கிறார். மேலும் விடை யேறி என்னும் தாண்டகத்தில் சப்தஸ்தானத் தலங்களில் ஐந்து தலங் களைக் குறிப்பிட்டு உள்ளமை அறிந்து மகிழத் தக்கது.

ஏழூர் விழா:

விடைஏறி வேண்டுலகத் திருப்பார் தாமே

விரிகதிரோன் சோற்றுத் துறையார்1 தாமே

புடைசூழத் தேவர் குழாத்தார் தாமே

பூந்துருத்தி2 நெய்த்தானம்3 மேயார் தாமே

அடைவே புனல்சூழ் ஐயாற்றார்4 தாமே

அரக்கனையும் ஆற்றல் அழித்தார் தாமே

படையாப்பல் பூதம் உடையார் தாமே

பழன நகர்5 எம்பிரானார் தாமே.

- தி.6 .36 பா.10

மேலே 1, 2, 3, 4, 5 எனக் குறியிட்டவற்றுடன், திருவேதிகுடி, திருக்கண்டியூர் என்னும இருதலங்களும் சேர்த்து சப்தஸ்தானத் தலங் கள் எனப் போற்றப்படுகிறது.

திருவையாறு சித்திரைப் பெருவிழாவை அடுத்து நந்திகேஸ் வரர் திருக்கல்யாண ஊர்வலமாக, சப்தஸ்தான விழா நடைபெற்று வருகிறது. சித்திரைப் பெருவிழாவிற்கு முன்பே, பங்குனி மாதத்தில் திருநந்திதேவர் திருஅவதார விழா ஐயாற்றுக்கு அண்மையில் உள்ள அந்தணர்குறிச்சியிலும், திருமணவிழா திருமழபாடியிலும் திருமண ஊர்வல விழா சப்தஸ்தானங்களிலும் விழாவாகக் கொண்டாடப்படு கிறது. திருவையாறு, திருக்கயிலாயமாகப் போற்றப் பெறுவதால் அதை மையமாக வைத்து, ஆறு ஊர் சுவாமிகளும் திருவையாற்றுக்கு எழுந்தருளி ஐயாறப்பரும் அறம்வளர்த்த அம்மையும் கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருள, ஏழூர் சுவாமிகளும் விசேட பல்லக்கில் உடன்வர நந்தியெம் பெருமான் விளாமிச்சைவேர்ப் பல்லக்கில் எழுந்தருள, தேவார பாராயணம், பஜனை கோஷ்டிகள் புடைசூழ வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இன்றும் நடைபெறுகிறது.

இன்பம் துன்பம் இல்லான்:

இறைவன் இன்பமே வடிவானவன். துன்பம் என்பது ஒரு சிறிதும் இல்லாதவன். இதனை வலிவலம் தாண்டகத்துள் ஏயவன் காண் எல்லார்க்கும் இயல்பானான்காண், இன்பன்காண் துன்பங்கள் இல்லாதான் காண் (தி.6 .48 பா.3) என்ற அடியினால் தெளிவித்துள் ளார். திருக்கோகரணம், "பின்னு சடைமேல்" (தி.6 .49 பா.8) என்னும் தாண்டகத்து மூன்றாம் அடியில், "இன்னவுரு என்று அறிவொண்ணாதான்" என்று அருளியமை, உருவொன்றில்லா உத்தமத் திறத்தை எடுத்துக் காட்டுகிறது. பத்தாம் பாடல் மூன்றாம் அடியில், "பொய்யர் மனத்துப் புறம்பாவான் காண்" (தி.6 .49 பா.10) என்று இறைவனது தூய தன்மையை எடுத்தாள்கிறார்.

நன்னெறிக்கண் சேராதாரே:

எல்லோருக்கும் நல்லவனாகிய இறைவனைச் சேர்கின்றவர் கள் தீநெறி நீத்து நன்னெறி சேர்க்கின்றனர். அங்ஙனம் சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே, என்று இரங்குகிறார். இக்கருத்தைத் திருவீழிமிழலைப் பெருமானைத் தரிசிக்கிறபோது அருளிச் செய்துள்ளார். "போரானை" (தி.6 .50 பா.1) எனத்தொடங்கும் திருத்தாண்டகப் பதிகம் முழுவதிலும் ஈற்றடியில் "திருவீழிமிழலையா னைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே" என்று இரங்கி அருளியுள்ளார். இதனை உடன்பாட்டு வகையில் கூறியுள்ளார். பெரு மானைச் சேராதவர்கள் எல்லாம் நன்னெறிக்கண் சேராதாரே, என்று எதிர்மறை வகையாலும் அருளியுள்ளார். இக்கூற்று திருநாகேச்சுரம் "தாயவனை" (தி.6 .66 பா.1 - 10) எனத் தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தின் பாடல் முழுவதும் இறுதியில் திருநாகேச்சரத்துளானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே என்றருளியுள்ளமை கண்டு மகிழ்க.

அகச்சான்று:

திருவீழிமிழலைப் பதிகத்து மூன்றாம் பாடலில், "நேரிழை யைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றானை" (தி.6 .50 பா.3) என்று பெருமானின் தூய நிலையைப் புலப்படுத்தியுள்ளார். இதே கருத்தைத் திருஇசைப் பாவிலும், "மங்கையோடிருந்தே யோகுசெய் வானை" (தி.9 திருவிசை 13 பா.11) என்று அருளியுள்ளமை ஈண்டு சிந்தித்தற்குரியது. இதே பொருளில், "வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச் சேயானை" (தி.6 .50 பா.4) என வருவதும் காண்க. வஞ்சனை இங்கு ஐய உணர்வு. பெருமான் நமக்கு அருள் செய் வானோ செய்யானோ என்ற சந்தேகத்துடன் அஞ்செழுத்தை ஓதுவார் க்கு, வெகு தூரத்திற்கு அப்பால் இருப்பவன் பெருமான் என்பதைக் குறித்துள்ளமை கண்டு உண்மை உணர்வோமாக. மேலும் இப்பதிகத் துள் "வெஞ்சொற் சமண்சிறையில் என்னை மீட்டார்" என்றும், "எண்ணில் சமண் தீர்த்தென்ன ஆட்கொண்டான்காண்" என்றும் தமது வாழ்வியல் உண்மைகளை எடுத்துக் காட்டியுள்ளார்.

பாமாலை பாடப் பயில்வித்தான்:

ஞானசம்பந்தருடன் திருக்கோலக்கா வணங்கி விடைபெற்ற அப்பர், திருக்கருப்பறியலூர் முதலிய தலங்களை வணங்கப்போம் வழியில் திருப்புள்ளிருக்கு வேளூரைப் பணிந்து போற்றினார். போற் றிய திருத்தாண்டகப் பதிகமே, "ஆண்டானை அடியேனை" (தி.6 .54 பா.1) எனத் தொடங்குவது. அதில் மூன்றாம் பாடல், "பத்திமையால் பணிந்து அடியேன், தன்னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில் வித்தானை" என்பதாகும். இதில், தன்னைப் பன்னாளும் பாமாலை பாடத் தனக்கு வைத்தியநாதப் பெருமான் பயிற்சி அளித்தார் என்று கூறுகிறார். இதே கருத்தையும் தொடரையும் திருமுதுகுன்றத் திருத்தாண்டகமாகிய "எத்திசையும் வானவர்கள்" (தி.6 . 68 பா.3) எனத் தொடங்கும் பாடலில் பத்தனாய்ப் பணிந்து அடியேன், தன் னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில்வித்தானை என்று அருளியுள் ளமை கண்டு மகிழத்தக்கது. தன்னை என்பது இங்கே இறைவனைக் குறித்தது.

தன்னைப் போல் ஆக்கும் அருளாளன்:

பெரியோர், தாம் சொன்னதைக் கேட்டு நடக்கும் பிள்ளை யாக ஒருவன் இருப்பானாயின், தமக்குத் தெரிந்த எல்லாவற்றையும் அவனுக்குச் சொல்லிக் கொடுத்துப் பயிற்சி அளித்து அவனைத் தன்னைப் போலாக்கவே கருதுவர். இந்த உணர்வு அப்பெரியோர் கட்கு எங்கிருந்து வந்தது? இறைவனிடமிருந்தே வந்தது. அப்பெரி யோரும் இறைவனையே நம்பித் தொழுததால், இறைவன் அவர்களை யும் தன்னைப் போலாக்கியுள்ளான். இதே நிலையில் அவர்களும் தமக்குக் கால்வழியாக வரும் நல் இளைஞர்களைத் தம்மைப் போலவே ஆக்க முயல்கின்றனர். இக்கருத்தை "இருளாய உள்ளத் தின்" (தி.6 .54 பா.4) என்ற பாடலில் இனிது விளக்குகிறார்.

இருளாய உள்ளம் - ஆணவ இருள் வேறு தான்வேறு என்றில் லாமல் அத்துவிதமாய்க் கலந்துள்ள உயிரை (உள்ளம் - உயிர், ஆன்மா) ஆணவ இருளிலிருந்து நீக்கி, இடரையும் அதற்கு முதலா கிய பாவத்தையும் கெடுத்து, அறிவில் ஏழையாகிய என்னை உய்யு மாறு, என் தெளிவில்லாத சிந்தையைத் தெளிவித்துத் தன்னைப்போல் என்னை ஆக்குவதற்கு சிவலோகமாகிய தனது உலகத்தை அறியுமாறு சிந்தை தந்த அருளாளன் வேளூர்ப் பெருமான். அவனைப் போற் றாதே பலநாள்கள் போக்கினேனே என்று இரங்குகிறார் அப்பாடற் பகுதி காண்க.

"இருளாய உள்ளத்தின் இருளை நீக்கி

இடர்பாவம் கெடுத்து ஏழையேனை உய்யத்

தெருளாத சிந்தைகளைத் தெருட்டித் தன்போல்

சிவலோக நெறியறியச் சிந்தை தந்த

அருளானை" -தி.6 .54 பா.4

வாராத செல்வம் வருவிப்பான்:

பேராயிரம் உடைய பெருமானை வானோர்கள் பயன் அடையப் பரவுகிறார்கள். அப்பெருமானைப் பிரிவிலாது - இடை யீடில்லாது வழிபடும் பக்தர்களுக்கு என்றும் யாவர்க்கும் கிடைக்காத பெருஞ்செல்வமாகிய வீடுபேற்றை இறைவன் அருள்கிறான். அவ் விடுதலையை நாம் பெறுதற்கு ஐந்தெழுத்தாகிய மந்திரத்தாலும் தந்திரமாகிய ஆகமங்களை அறியச் செய்வதாலும், மருந்தாகிய செபம், பூசை, தியானம் முதலியவற்றைச் செய்வதாலும் அறியாமை யாகிய ஆணவம் முதலிய நோய்களை நீக்கி வீடு அருள்கிறான்.

வாராத செல்வம் என்பது எவர்க்கும் எளிதில் கிடைக்கப் பெறாத மோட்சம். அஃதாவது வீடுபேறு, விடுதலை. இது கிடைத்தற்கு நம்மிடையே உள்ள அறியாமை நீங்க வேண்டும். இதனையே எவ ராலும் தீர்க்க முடியாத பிறவி நோயைத் தீர்த்தருள வல்லான் என்றருளினார். தீரா நோய் தீர்த்தருள வல்லான் என்றருளினார். தீராநோய் தீர்த்தருள வல்லான் என்பதால் துன்ப நீக்கத்தையும், வராத செல்வம் வருவிப்பான் என்றதால், இன்ப ஆக்கத்தையும் இப்பாடலி லேயே அப்பர் அருளியுள்ளார். இங்குள்ள இறைவன் பவரோக வைத்தியநாதர் என்னும் பெயருடையவர். பவம் - பிறப்பு. பிறவி நோயைத் தீர்ப்பவர். எனவே உடலில் வரும் நோயைத் தீர்ப்பவர் என்பது சொல்லத் தேவையில்லை அன்றோ!

தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி... | 1 | 2 | 35 | 6 |