தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி... | 2 | 3 | 4 | 5 | 6 |

 

குருபாதம்

திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம்

26 ஆவது குருமகா சந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்

வழங்கியருளிய

ஆசியுரை

 

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற

      கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்

தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச்

      சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்

தாயானைத் தவமாய தன்னை யானைத்

      தலையாய தேவாதி தேவர்க் கென்றும்

சேயானைத் தென்கூடல் திருஆ லவாய்ச்

      சிவன்அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

- அப்பர் (தி. 6 .19 பா.8)

தமிழின் சிறப்பு:

உலகில் இன்று வழங்கிவரும் மொழிகள் தொள்ளாயிரத்திற்கும் மேல் உள்ளன என்பர் ஆய்வறிஞர்கள். அவற்றுள்ளும் தொன்மை வாய்ந்த மொழிகள் தமிழ், சமஸ்கிருதம், இபிரேயம், கிரேக்கம், இலத்தின் என்பனவாம். இவற்றுள்ளும் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் உள்ள மொழி, தமிழ் மொழி ஒன்றே என்பது தமிழ் மக்கள் பெருமை கொள்ளத் தக்கதாம். மேலும் தமிழ்மொழி, பிறமொழிக் கலப்பின்றியும், துணையின்றியும் தானே தனித்தியங்கும் பேராற்றல் பெற்றுள்ளது. மொழி உலகமே முன்பின் கண்டறியாத காதல் கனிந்த அகப்பொருள் இலக்கணத்தையும் வீரம் விரவிய புறப்பொருள் இலக்கணத்தையும் தன்னிடத்தே கொண்டு திகழ்கிறது.

அகப்புறப் பாகுபாடு:

அகப்பொருளாயம் காதல் பற்றி நெறிப்படுத்தி உரைக்கும் பகுதி அகத்திணை என்றும், வீரம் பற்றி நெறிப்படுத்தி உரைக்கும் பகுதி புறத்திணை என்றும் பேசப்பெறும். திணை என்பது ஒழுக்கம். எனவே அகஒழுக்கம் என்பது இன்பம் பற்றியது. பிறருக்கு எடுத்துரைக்க இயலாதது. கணவன் மனைவியுடன் வாழும் குடும்பம் பற்றியது. புற ஒழுக்கம் என்பது பிறருக்கு எடுத்துரைக்கும் தன்மையது. அறம், பொருள் பற்றியது. மக்கட் சமுதாயம் அல்லது அரசு பற்றியது. இச்சிறப்போடு தமிழ்மொழி, இயல், இசை, நாடகம் என முத்திறப்பட்டு, முத்தமிழ் எனவும் போற்றப்பெறும் சிறப்பினது.

முத்தமிழ் விளக்கம்:

இச்செந்தமிழ் மொழியை முத்திறப்படுத்தறிவித்த மேதைமை தமிழர்கட்கே வாய்த்த தனிச்சிறப்பாகும். வேறு பல மொழிகளிலும் இம்முக்கூறு இருந்தபோதிலும் அதை நுண்ணிதின் உணர்ந்து வெளிப் படுத்தினார் இல்லை.

இயல் என்பது உள்ளத்தே இயல்பாக எழும் எண்ணங்கள். அஃதாவது கருத்துக்கள். கருத்தே அறிவு எனப்படுகிறது. எனவே அறிவு இயற்றமிழ் எனப்படுகிறது. வரலாறு, பூகோளம், வானியல், தத்துவம் என அறிவு பலதிறப்படும் என்பதை நாம் நன்கு அறிவோம். இவ்வறிவிற்கெல்லாம் பிறப்பிடம் மனமே. எனவே மனமும், மனத்துள் நின்று எழும் எண்ணங்களாகிய கருத்துக்களும் இயற்றமிழ் எனப் பெறுகின்றன.

எண்ணங்களாகிய கருத்துக்களுக்கு மனம் இருப்பிடமாக இருக்கிறதே தவிர தன்னிடம் தோன்றிய கருத்தைப் பிறருக்கு எடுத்துரைக்க இயலாதது. இதனால்தான், இயற்றமிழ், ஊமை எனப் பேசப்பெறுகிறது. இதுபோன்றே எல்லா உலகிற்கும் முதலாய் இருக்கின்ற ஓம் என்ற பிரணவம், ஊமை எழுத்து என்று சாத்திரம் பேசும். முதலாய் இருப்பதெல்லாம் மோனமாயிருப்பதே முறைமை போலும்.

பழந்தமிழ் இலக்கியங்களில் முத்தமிழ் என்று தமிழைக் குறிப்பிட்டவர் நம் அப்பர் அடிகளேயாவார். "மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய், முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்" (தி.6 .23 பா.9) (மூலநோய் - பிறவிநோய்) என்பது அவர்தம் அருள்வாக்கு. தமிழரைத் தமிழன் என்று பழம்பெரும் இலக்கியங் களில் சொல்லிய சிறப்பும் அப்பர் அடிகளையே சேரும். "ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையெம் அண்ணல் கண்டாய்" (தி.6 .23 பா.5) என்னும் திருமறைக்காட்டுத் திருத் தாண்டகப் பகுதி இதனை வலியுறுத்தும்.

திருநாவுக்கரசர் இயற்றமிழிலும், இசைத் தமிழிலும் பாடல்களை அருளியுள்ளார். திருஞானசம்பந்தர் தாம் பாடியருளிய மூன்று திரு முறைகளையும் பண் அமைப்பிலேயே இசைத் தமிழாகவே பாடியுள் ளார். மூன்று திருமுறைகளிலுமாகச் சம்பந்தர் 22 பண்கள் பொருந்தி வரப் பாடல்கள் பாடியுள்ளார். அதனால்தான் அவரைப் போற்றிய சுந்தரர், நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் (தி.7 .62 பா.8) என்று குறித்தார்.

இசைத்தமிழும் இயற்றமிழும்:

திருநாவுக்கரசர் அருளிய நான்காம் திருமுறைப் பதிகங்கள் அனைத்தும் பண் அமைப்புடையன. இசைத்தமிழ்ப் பாடல்களாகப் பத்துப் பண்கள் அத்திருமுறையில் காணப் பெறுகின்றன. ஐந்தாம் திருமுறை "குறுந்தொகை" என்னும் யாப்பு அமைப்பிலும், ஆறாம் திருமுறை "தாண்டகம்" என்னும் யாப்பு அமைப்பிலும் அமைந் துள்ளன. எனவே அப்பர் அருளிய நான்காம் திருமுறை "இசைத் தமிழ்" எனவும், ஐந்து, ஆறாம் திருமுறைகள் "இயற்றமிழ்" எனவும் குறித்து உணரலாம். இயற்றமிழாயினும் தொன்றுதொட்டு, ஐந்தாம் திருமுறை ரூபக தாளத்தில், நாதநாமக்கிரியா இராகத்திலும், மாயா மாளவ கௌள இராகத்திலும் பாடி வருகின்றனர். ஆறாந் திருமுறை யான திருத்தாண்டகத்தைச் சுத்தாங்கமாக அரிகாம்போதியில் பாடி வருகின்றனர்.

தாண்டக வேந்தர்:

தாண்டகம் என்னும் யாப்பு குறித்த இலக்கணம், பன்னிரு பாட்டியல், யாப்பருங்கலவிருத்தி என்னும் இலக்கண நூல்களில் விளங்கக் காணலாம். ஒவ்வொரு அடியிலும், அறுசீர் அல்லது எண்சீர் அமைய, ஆடவர் அல்லது கடவுளரை நான்கு அடியால் போற்றிப் பாடுவது தாண்டகத்தின் இலக்கணம். அவற்றுள் அறுசீர்களில் அமை வது குறுந்தாண்டகம். எண்சீரால் அமைவது நெடுந்தாண்டகம். இத னைப் பன்னிருபாட்டியல், "மூவிரண்டேனும் இருநான் கேனும், சீர்வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர், கடவுளர்ப் புகழ்வன தாண்டகம், அவற்றுள், அறுசீர் குறியது, நெடியது எண்சீராம்" என்று கூறுகிறது.

தமிழிலக்கிய வரலாற்றில் முதன்முதல் தாண்டக யாப்பில் பாடல்களை அருளியவர் அப்பர் சுவாமிகளேயாவார். அதனால் அப்பரைத் "தாண்டகச் சதுரர்" என்று சேக்கிழார் சுவாமிகள் போற்று கின்றார். "தலைவராம் பிள்ளையாரும் தாண்டகச் சதுரராகும் அவர் புகழ் அரசும்கூட அங்கெழுத்து அருளக்கண்டு" (தி.12 - குங்.32) என்பது பெரியபுராணப் பாடல்பகுதி. இந்நிகழ்ச்சி திருக்கடவூரில் குங்குலியக் கலயர் திருமடத்தில் அப்பரும் சம்பந்தரும் எழுந் தருளியிருந்ததைக் குறிக்குமிடத்துச் சேக்கிழார் குறிப்பிட்டு உள்ளார். தாண்டக யாப்பிற்குத் தந்தையாக இலங்கும் அப்பர் அடிகளைப் பின்னே வந்த கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசரும், நால்வர் நான் மணிமாலையில் "தாண்டகவேந்த" என்று விளித்துப் போற்றுகிறார். "வெள்ளேறு உடையான் தனக்கு அன்புசெய் திருத்தாண்டக வேந்த" (பா.6) என்பது அவர்தம் அருள் வாக்கு.

ஆறாம்திருமுறை:

ஆறாம் திருமுறையில் 99 திருத்தாண்டகப் பதிகங்களும், 65 திருத்தலங்களும் இடம் பெற்றுள்ளன. ஆறாம் திருமுறையில் உள்ள திருப்பதிகங்கள் அனைத்தும் நெடுந்தாண்டக அமைப்பைச் சேர்ந்தன. சிவ சம்பந்தப்பட்டமையால் திருவைச் சேர்த்து, திருத்தாண்டகம் என்று வழங்கப் பெறுகிறது.

முன் ஏழும், பின் எட்டும் சிறப்புத் தலைப்புள்ளன:

முதலில் உள்ள ஏழு திருப்பதிகங்களில் முன் உள்ள "அரி யானை அந்தணர் தம் சிந்தையானை" (தி.6 .1 பா.1) என்ற பதிகமும், இரண்டாவதாகவுள்ள "மங்குல்மதி தவழும் மாடவீதி" (தி.6 .2 பா.1) என்ற பதிகமும் தில்லையில் அருளிச் செய்யப் பெற்றவை. இருப்பினும் இவ்விரு திருப்பதிகங்கட்கும் தலைப்பில் "அரியானை" என்பதில் "பெரிய திருத்தாண்டகம்" என்றும், "மங்குல்மதி" என்பதில் "புக்க திருத்தாண்டகம்" என்றும் பெரியோர் குறித்துள்ளனர்.

1. பெரிய திருத்தாண்டகம்:

பெரிய திருத்தாண்டகம் என்பதற்கு "நெடுந்தாண்டகம்" என்பதையே இப்பெயரிட்டுக் குறித்துள்ளார் என்று கொள்ளலாம். ஆறாம் திருமுறை முழுவதுமே நெடுந்தாண்டகமாகத்தான் அமைந் துள்ளது. மேலும் இப்பதிக முதல் பாடலில் "பெரியானை" என்றும் "பெரும்பற்றப் புலியூரானை" என்றும், பின்னர் பெருமானை, பெருந் தகையை, பெருந்துணையை, பெரும்பொருளை, பெரும்பயனை, பேரொளியை என்றும் குறிக்கப் பெறுதலால் இப்பெயர் பெற்றதெனக் கொள்ளலாம். மேலும் உலகம் அனைத்திற்கும் சிவபெருமானே பெரி யவன் ஆதலின் இங்ஙனம் குறிப்பிட்டுள்ளார் என்பதும் கொள்ளத்தகும்.

2. புக்க திருத்தாண்டகம்:

தில்லையில் பாடியருளிய இரண்டாம் திருப்பதிகம், "மங்குல் மதிதவழும்" என்பது இதைப் "புக்க திருத்தாண்டகம்" எனப் போற்றியுள்ளனர். இறைவன் மற்றைய தலங்களைக் காட்டிலும் இத்தலத்தில் சிறப்பாக விளங்குதல் பற்றியும், பாடல்தோறும் புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே என்றமையாலும் புக்க திருத்தாண்டகம் எனப் பெயர் பெற்றுள்ளது. மேலும் இறைநெறிக் கலைகள் அனைத் தும் அர்த்தயாமத்தில் தில்லையில் ஒடுங்குவதாகக் குறிப்பிடப்படுவ தாலும் இப்பெயர் பெற்றது எனலாம். புக்கது - புகுந்தது.

3. ஏழைத் திருத்தாண்டகம்:

மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு ஆகிய ஐந்து பதிகங்களும் திருவதிகையில் பாடப் பெற்றன. மூன்றாவதாக உள்ள "ஏழைத் திருத்தாண்டகம்" திருவதிகையில் பாடப் பெற்றது. ஏழை என்பது, செல்வமின்மை, வலிமை இன்மை, அறிவின்மை முதலியவற்றைக் குறிக்கும். இங்கு நாயனார் அறிவில் ஏழையாகவே தம்மைக் குறிப்பிட்டுள்ளார். நம்பர் அருளாமையினாலும், சமண சமயம் சார்ந்திருந்த போது அறிவுத் தெளிவின்றி இருந்தமையாலும், இருபிறப்பும் வெறுவியராய் இருந்தாராகிய சமயர் சொற்கேட்டு ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே (தி.7 .3) என்று பதிகம் முழுவதும் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் குறிப்பிடலாலும் இத்திருப்பதிகம் இப்பெயர் பெற்றது. இரவும் பகலும் பிரியாது வணங்குவன். நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன். சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்பனவெல்லாம் அப்ப் சைவம் சார்ந்தபிறகே என்பது இப்பதிகத்தாலும் வலியுறுத்தப் பெறுதல் காணலாம்.

4. அடையாளத் திருத்தாண்டகம்:

நான்காவதாக "அடையாளத் திருத்தாண்டகம்" எல்லாப் பாடல்களிலும் இறைவனிடத்துள்ள சந்திரன், கங்கை, சடாமகுடம் முதலிய அடையாளங்களைப் பதிகம் முழுவதும் குறிப்பிட்டிருத் தலின் இப்பெயர் பெற்றுள்ளது.

5. போற்றித் திருத்தாண்டகம்:

ஐந்தாவது, பெருமாள் புகழைப் பல படியாகப் பதிகம் முழுவதும் போற்றி, போற்றி என்று பலமுறை அருளப் பெற்றிருத்தலின் "போற்றித் திருத்தாண்டகம்" எனப் பெயர் சூட்டியுள்ளார். இதில் 82 போற்றிகள் வருகின்றன1.

6. திருவடித் திருத்தாண்டகம்:

ஆறாவதாக, "திருவடித் திருத்தாண்டகம்" அமைந்துள்ளது. இறைவன் திருவடியே எல்லாவற்றையும் இயக்குகிறது என்ற குறிப்பில் அவன் திருவடிச் சிறப்பைப் பாடல்தோறும் பல படியாகக் குறிப்பிட்டிருத்தலின், இப்பெயர் பெற்றுள்ளது. பின்வந்துள்ள திருவடிப் புகழ்ச்சிகட்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வது இத்தாண்டகப் பதிகமே என்பது குறிப்பிடத்தக்கது.

7. காப்புத் திருத்தாண்டகம்:

ஏழாவதாக, காப்புத் திருத்தாண்டகம் திருவதிகை வீரட்டம் முதலாக உள்ள தலங்கள் அனைத்தும் நமக்குக் காப்புக்களாக உள்ளன என்ற குறிப்பில் இதற்கு இப்பெயர் இட்டுள்ளனர்.

முன் ஏழில் முதல் இரண்டு தில்லையைப் பற்றியன. ஏனைய ஐந்தும் திருவதிகையைப் பற்றியன. மற்றைய திருத்தாண்டகப் பதிகங் கட்கு இதுபோன்ற சிறப்புப் பெயர் கொடுக்கப் பெறவில்லை. இவை முன் ஏழு திருப்பதிகங்களைப் பற்றியன. 70, 71, 93, 94, 95, 96, 97, 98 ஆகிய எட்டும் சிறப்புப் பெயர் பெற்ற, பின் எட்டுப் பதிகங்களாம்.

பின் எட்டும் பொதுப்பதிகங்கள்:

70ஆம் பதிகம்:

1. "கே்ஷத்திரக் கோவைத் திருத்தாண்டகம்:" திருக்கயிலா யமே சிவபெருமான் எழுந்தருளியுள்ள முதன்மைத் தலமாகும். பெருமான் அங்கிருந்தே எல்லாத் திருத்தலங்களிலும் ஒவ்வொரு காரணம் பற்றி எழுந்தருளியுள்ளார். ஆதலால், தில்லைச் சிற்றம்பலம் முதலாக எல்லாத் தலங்களிலும் கயிலாய நாதனையே காணலாம் என்று அருளியுள்ளார். தலங்கள் பலவாயினும் அங்கு எழுந்தருளி யுள்ள இறைவன் ஒருவனே. அவன் கயிலாயநாதனே என்று அருளி யுள்ளமை நன்கு அறியத்தக்கது. கடவுள் ஒருவரே என்பதைச் சைவம் இதனாலும் தெளிவுறுத்துவது காணலாம்.

71ஆம் பதிகம்:

2. "அடைவுத் திருத்தாண்டகம்:" பள்ளி என வருந்தலங்களை யும் வீரட்டானம், காடு, துறை, குடி, கோயில், ஊர் என வருந் தலங் களையும் ஒவ்வொரு பகுதியாக அடைவு செய்து பாடியிருத்தலின் இப்பதிகம் அடைவுத் திருத்தாண்டகம் எனப் போற்றப்படுகிறது. அடங்கல் - அடைவு என்பன ஒரு பொருட் சொற்களே.

93ஆம் பதிகம்:

3. "பல வகைத் திருத்தாண்டகம்:" பூந்துருத்தி, நெய்த்தானம், ஐயாறு, சோற்றுத்துறை, திருப்பழனம் முதலாய பல தலங்களின் பெயர்களைச் சொல்வீரானால் பழவினை போகும். துயர் நீங்கித் தூய நெறியில் சேரலாம். கொடுவினைகள் தீர்ந்து அரனைக் குறுகலாம், வீடாதவல்வினை வீட்டலாம் எனப் பல தலவழிபாட்டின் பலன் கூறலால் இப்பதிகம் பலவகைத் திருத்தாண்டகம் எனப் போற்றப் பெறுகிறது.

தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி... |  2 | 3 | 4 | 5 | 6 |