தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி... | 1 | 2 | 4 | 5 | 6 |

பத்தாம் அடியார்:

திருக்கருகாவூர்த் திருத்தாண்டகப் பதிகம், "குருகரம் வயிரமாம்" (தி.6 .15 பா.1) எனத் தொடங்குவது. முதல்பாடல் மூன்றாம் அடியில், "உள்நின்ற நாவிற்கு உரையாடியாம்" என்கிறார். நாவிற்குள் உடனாயிருந்து உதவும் தன்மையை இதில் புலப் படுத்துகிறார். இரண்டாம் பாடல் இரண்டாம் அடியில் "பத்தாம் அடியார்க்கோர் பாங்கனுமாம்" என்கிறார். இதற்குப் பத்து இலக்க ணங்களையுடைய அடியார் என்பது பொருள். அவற்றுள் அக இலக்க ணம் பத்தையும் உபதேச காண்டம் கூறுகிறது. அவை 1. கண்டம் விம்மல், 2. நாத்தழுதழுத்தல், 3. நகைமுகம் காட்டல், 4. உடல் நடுங்கல், 5. மயிர்சிலிர்த்தல், 6. வியர்த்தல், 7. சொல்இன்மை, 8. வசம் அழிதல், 9. கண்ணீர் அரும்பல், 10. வாய்விட்டழைத்தல் என்பனவாம். புற இலக்கணம் பத்து. அவை விபூதியணிதல், உருத்திராக்கம் அணிதல் முத லியனவாம். ஏழாம் பாடல் முதலடியில், "ஆதிரை நாளானாம்" என இறைவனை அறிமுகப்படுத்துகிறார். ஒன்பதாம் பாடல் மூன்றாம் அடியில், "எட்டுருவ மூர்த்தியாம் எண்தோளானாம், என் உச்சிமேலானாம் எம்பிரானாம்" என்று அருளியுள்ளார். பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன், உயிர் என்பன இறைவன் எழுந்தருளும் எட்டு உருவங்களாம். என் உச்சிமேலான் என்பது, தலைக்குமேல் 12 அங்குல அளவை துவாதசாந்தம் என்பர். அங்குதான் இறைவன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இதைப் பல இடங்களிலும் குறிக் கின்றார். "மனத்தகத்தான்" (தி.6 .8 பா.5) எனத் தொடங்கும் திருக் காளத்தித் திருத்தாண்டகத்தில் தலைமேலான் என்று குறித்திருப்பதும் இக்கருத்துப் பற்றியதே. எம்பிரான் என்பதற்கு நமக்குப் பிரியமான வன் என்பது பொருள். எனவே நமக்குப் பிரியமானவனே நமக்குத் தலைவனாகவும் இருப்பது தானே பொருத்தமானது. இதில் தலைவன் இலக்கணம் கூறுவதும் காண்க.

வேத சிவாகமங்கள்:

வேதசிவாகமங்கள் இறைவனால் அருளிச் செய்யப் பெற் றவை உலகியல் பொது தர்மங்களைப் போதிப்பது வேதம். ஆன்மிகச் சிறப்பியல்புகளை உபதேசிப்பது சிவாகமம். இறைவன் நூல், தந்திர கலை, மந்திர கலை, உபதேச கலை என மூன்றாய்த் திகழும்.

தந்திர கலை :

தந்திர கலை என்பது கர்ம காண்டம் எனப் பெறும். நாம் நாள்தோறும் செய்ய வேண்டிய நித்திய கர்மாநுட்டானங்களையும், ஏதேனும் பயன் கருதிச் செய்யப் பெறும் சிறப்புக் கர்மாக்களையும் இது தெரிவிப்பது.

மந்திர கலை:

மந்திர கலை என்பது உபாசனா காண்டம் எனவும் பேசப் பெறும். கர்மகாண்டத்தில் சொல்லப் பெற்ற கர்மாக்களை மேற் கொண்டு செய்யும் செயல்முறைகளை இது கூறுவது.

உபதேச கலை:

உபதேச கலை என்பது ஞானகாண்டம் எனவும் பேசப் பெறும். தலைவனாகிய இறைவனது இயல்புகளையும், அவனது அடிமை களாகிய உயிர்களின் இயல்புகளையும் அவனது உடைமைகளாகிய உலகு, உடல், மனம் முதலிய உருவங்களின் (தத்துவங்களின்) இயல்புகளையும் இது தெரித்துணர்த்துவது.

தந்திர கலையாகிய கர்மகாண்டத்திலேயே மந்திரகலையாகிய உபாசனா காண்டத்தையும் அடக்கிக் கர்மகாண்டம் எனவும், உபதேச கலையை ஞானகாண்டம் எனவும் கூறுவர்.

மந்திரமும் தந்திரமும் ஆனார்:

மேற்கூறிய இருகாண்டத்துள், கர்மகாண்டத்தையே, "மந்திர மும் தந்திரமும் ஆனார் போலும்" (தி.6 .16 பா.1) எனத் திரு இடைமருதூர்த் திருத்தாண்டகம், சூலப்படையுடையார் என்ற பதிக முதல் பாடலில் குறிப்பிட்டாரேனும், உபதேச கலையாகிய ஞானகாண் டத்தையும் இதனுள் அடக்கிக்கூறும் கருத்தினரே அப்பரடிகள். இக்கருத்தைத் தருமை ஆதீனம் பத்தாவது குருமூர்த்திகளாகிய சிவஞான தேசிக சுவாமிகள், தாம் அருளிய தட்சிணாமூர்த்தி திருவருட்பாவில, "தந்திரகலை அறிவனோ, மந்திரகலை அறிவனோ, சாரும் உபதேச கலையில் தந்த கைலாச பாரம்பரியமாக வரு சம்ப்ரதாயம் அறிவனோ" என்பதனாலும், கர்மகாண்டம், ஞான காண்டம் என்னும் இரண்டையும் அறிவிப்பதே அப்பர் கருத்து என்பதைத் தெளியலாம்.

ஐவகையால் நினைவார்:

ஐவகையாவன, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலை இயற்றும் ஆற்றலைக் குறிக்கும். இவ்வைகை ஆற்றல் ஒருங்கு நிற்குமிடத்து ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் ஐந்து திருமுகங் களாய் நிற்கும். இவை பிரிந்து நிற்குமிடத்து மனோன்மனி உடனாய சதாசிவமாய். மகேஸ்வரி உடனாகிய மகேசுவரராய், உமை உடனா கிய உருத்திரராய், இலக்குமி உடனாகிய திருமாலாய், சரசுவதி உடனாகிய பிரமனாய் நின்றருள் செய்வர். ஈசானம் - மேல்நோக்கிய முகம். தத்புருஷம் - கிழக்கு முகம். அகோரம் - தெற்கு முகம், வாம தேவம் - வடக்கு முகம், சத்தியோசரதம் - மேற்கு முகம். இக் கருத்தையே திருப்பூவணப் பதிகமாகிய, "வடியேறு திரிசூலம்" (தி.6 .18 பா.1) எனத் தொடங்கும் திருத்தாண்டகப் பதிகம் மூன்றாம் பாடல் மூன்றாம் அடியில் ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும் என்று அருளியுள்ளார்.

வைகைத் திருக்கோட்டில் நின்ற திறம்:

இப்பதிகம், ஒன்பதாம் பாடல், இரண்டாம் மூன்றாம் அடிகளில், "மணியார் வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறமும் - தோன்றும்" (தி.6 .18 பா.9) என்றருளியுள்ளார். இது திருவிளையாடற் புராணம், மண்சுமந்த படலத்தில் மதுரைப் பெருமான் வந்திக் காகக் கரையடைக்க வந்த வரலாற்றைக் குறிப்பதாகக் கொள்வர். இப்படியாயின் மணிவாசகர் காலம் முற்பட்டதாகிறது. இது சிந்தனைக்குரியதே. பத்தாம் பாடலில், "ஆங்கணைந்த சண்டிக் கும் அருளி அன்று, தன்முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்" எனச் சண்டீசர் வரலாறு பேசப்படுவதும் காணலாம்.

முன்னே முளைத்தான்:

"முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி" (தி.6 .19 பா.1) என்பது அப்ப மூர்த்திகளின் ஆலவாய்த் திருத்தாண்டகத்தின் முதல் பாடலின் முதல் அடி. இதற்குப் பலரும் பலவாறாகப் பொருள் கண்டுள்ளனர். உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் தோன்றுதற்குப் பெருமானே நிமித்தகாரணன். ஆதலின் எல்லார்க்கும் முன்னே தோன்றி நின்றருளினார் என்றும், ஏனைய தலங்களில் உள்ள இலிங்க மூர்த்திகட்கெலாம் முன்னே தோன்றி முளைத்த சுயம்புமூர்த்தி என்றும், முதலில் தோன்றிய பழைமை வாய்ந்த இலிங்கமூர்த்தி என்றும் குறிப்பிடுகின்றனர்.

பரஞ்சோதி முனிவர் கருத்து:

திருவிளையாடற் புராணம் அருளிய பரஞ்சோதி முனிவர் இதுபற்றி என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம். தடாதகைப் பிராட்டியார் திருமணம் நிறைவெய்தியது. எல்லோரும் உணவரந்திச் செல்க என்து இறையாணை. எல்லோரும் உணவருந்திச் சென்றனர். பதஞ்சலி முனிவரும், வியாக்கிரபாத முனிவரும், அம்பலத்துளாடும் பரஞ்சுடர் நடனங் கண்டே நாங்கள் உணவு கொள்வது நியமம் என்றனர். அக்குவத்தை இங்கு நாம் செய்கிறோம், கண்டு தரிசிக்க என்றார் பெருமான். மேலும் உலகமாகிய விராட புருஷனுக்கு இதயமாயிருப்பது சிதம்பரம். இம்மதுரையோ துவாதசாந்தத் தலமா யிருப்பது என்று சொல்ல, ஏனைய மூலாதாரம் முதலிய தலங்களையும் அருள் என்றனர் முனிவர்கள்.

மூலாதாரத் தலங்கள்:

திருவாரூர் மூலாதாரத் தலம். திருவானைக்கா சுவாதிட்டா னத் தலம். திருவண்ணாமலை மணிபூரகத் தலம். சிதம்பரம் இருதயத் தலம். திருக்காளத்தி கண்டத் தலம். காசி புருவமத்தியத் தலம். திருக் கயிலாயம் பிரமந்திரத் தலம். மதுரை - துவாதசாந்தத் தலம். இத்தலம் எல்லாத் தலங்களினும் அதிகச் சிறப்பு வாய்ந்தது. எதனால் என்னின் முன்னர்த்தோன்றிய முறையால் என்று கூறிப் பெருமான் இருமுனிவ ரோடும் ஆலவாய்க் கோயில் சேர்ந்தார். முன்னர்த்தோன்றியது துவாதசாந்தமாகலின், "முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி" (தி.6 .19 பா.1) என அருள் ஞானியாகிய அப்பரடிகள் அருளிச் செய்தார். இதனால்தான் எல்லார்க்கும் முன்னே தோன்றி என்றருளினார். எல்லோரது தலைக்குமேல் துவாதசாந்தத்தலம் இருப் பது உண்மையாகலின் இங்ஙனம் கூறினார்.

மனித உடம்பில் ஆறாதாரம்:

இனி, மனித உடலிலும் இந்த ஆறு ஆதாரத் தலங்களையும் சிந்தித்தாலே இக்கருத்து இனிது விளங்கும். அதனையும் காண்போம். மனித உடலில் மூலாதாரம் என்பது எருவாய் கருவாய்க்கு இடைப் பட்ட இடம். இதைத்தான் மண்தலமாகிய திருவாரூர் என்பர். சுவாதிட்டானம் என்பது அடிவயிற்றுப் பகுதி. இதைத்தான் நீர்த் தலமாகிய திருவானைக்கா என்பர். மணிபூரகம் என்பது கொப்பூழ்ப் பகுதி. இதனைத்தான் நெருப்புத் தலமாகிய அண்ணாமலை என்பர். அனாகதம் என்பது இதயத்தானம். இதைத்தான் ஆகாசத் தலமாகிய சிதம்பரம் என்பர். விசுத்தி என்பது (கழுத்து), கண்டத்தைக் குறிக்கும். இதைக் காற்றுத் தலமாகிய திருக்காளத்தி என்பர். ஆக்ஞை - ஆணையிடுதல். இதுவே புருவ மத்தியமாகும். இது காசித்தலம் என்பர். ஆறாதாரத்திற்கு மேல் ஏழாவது தானம் தலையின் உச்சி பிரமந்திரம் எனப் பேசப் பெறும். இதுவரை ஆதாரத் தலம் என்பர்.

நிராதாரத் தலம்:

இதற்கு மேல் பற்றுக்கோடு இன்மையின் பன்னிரண்டங்குலம் வரை நிராதாரத்துவம் என்பர். இதையே துவாதசாந்தத் தலம் என்பர். இதற்குமேல் உள்ள இடம் மீதானம். எல்லாவற்றிற்கும் மேலான இடம். முதன்மையான இடம். இங்குதான் தத்துவங்கடந்த தத்துவாதீத னாகிய இறைவன் அம்மையோடு அப்பனாகி எழுந்தருளியுள்ளான். எனவே இங்கு நிகழ்த்துகின்ற நடனக் கோலத்தைத் தரிசித்துச் செல்லுமாறு, பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்கு வெள்ளியம் பலக் கூத்தன் கட்டளை இட்டான். அவ்வாறே தரிசித்தேகினர் முனிவர் கள். இக்கருத்தே, "முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி" (தி.6 .19 பா.1) என்பதற்கு உண்மைப் பொருள் எல்லோரும் சிந்தித்துச் சிறப்புறுக.

இதே கருத்தை. இப்பதிகத்தின் பத்தாவது பாடலின் முதல் இரண்டடிகளில் அப்பர் குறிப்பிட்டுள்ளமை கண்டு மகிழத்தக்கது. "மலையானை மாமேரு மன்னி னானை, வளர்புன் சடையானை வானோர் தங்கள், தலையானை என் தலையின் உச்சி என்றும் தாபித் திருந்தானை" (தி.6 .19 பா.10) என்பது அப்பாடற்பகுதி. மேலும் ஆறாதாரத் தலங்களையும் அவற்றுள் துவாத சாந்தத் தலத்தின் சிறப்பினையும் கூறும் திருவிளையாடல் புராணம் - வெள்ளியம்பலக் கூத்தாடிய படலப் பாடல் இரண்டனையும் கண்டு மகிழ்வோம்.

திருவளர் ஆரூர் மூலம் திருவானைக் காவே குய்யம்

மருவளர் பொழில்சூழ் அண்ணா மலைமணி பூரம், நீவிர்

இருவரும் கண்ட மன்றம் இதயமாம், திருக்கா ளத்தி,

பொருவரும் கண்ட மாகும் புருவமத் தியமாம் காசி.

பிறைதவழ் கயிலைக் குன்றம் பிரமரந் திரமாம், வேதம்

அறைதரும் துவாத சாந்தம் மதுரை, ஈது அதிகம், எந்த

முறையினால் என்னின்? முன்னர்த் தோன்றிய முறையால் என்றுஅக்

கறையறு தவத்தரோடு கவுரியன் கோயில் புக்கான்.

- திருவிளை. புரா. வெள்ளி .6, 7

குலம்கொடுத்துக் கோள் நீக்கவல்லான்:

"ஆதிக்கண் நான்முகத்தில்" என்று தொடங்கும் திருநள்ளாறு திருத்தாண்டகப் பதிகத்தின் ஆறாம் பாடலில், இறைவன் குலம் கொடுத்துக் கோள்நீக்க வல்லான் என்றும், தயாமூலதர்மமென்னும் தத்துவத்தின் வழிநின்று, தாழ்ந்தோரை உயர்த்துகின்றான் என்றும், இரண்டு தர்மங்களைச் சொல்கிறார்.

அழுக்கைச் சேர்த்து அழுக்கைப் போக்குவதுபோல், குலத்தைக் கொடுத்துத்தான் குலத்தைக் கெடுக்கிறான் இறைவன். கோள் நீக்கவல்லான் என்றால் குற்றத்தைப் போக்க வல்லான் என்பது பொருளாகிறது.

தயையே மூலதர்மம்:

தயை என்பது கருணை அல்லது அருள் எனப் பொருள்படும். இறைவனது எண்குணங்களில் பேரருளாளன் என்பது ஒன்று. அவன் பெருங்கருணையால்தான் இவ்வுலகத்தைப் படைத்து காத்து, அழித்து, மறைத்து, அருளி ஐந்தொழில் புரிகின்றான். இவ்வைந்தொழிலால் உயிர்கள் பலவகையிலும் படிப்படியாக வளர்ந்து வருகின்றன. அவன் அருள் இன்றேல் ஐந்தொழில் இல்லை. ஐந்தொழில் இன்றேல் உயிர் களுக்கு ஈடேற்றம் இல்லை.

காரிட்ட ஆணவக் கரு அறையில், கண்ணிலாக் குழந்தை யைப் போல், கட்டுண்டு செயலற்றுக் கிடக்கும் உயிர்களை, அருட் பார்வையால் பிறவிக்குக் கொணர்ந்து, உடல் முதலிய கருவி கரணங்களைக் கொடுத்து, அறிவுபெருகச் செய்து நல்லது கெடுதல் களை அறியச் செய்து, காலப்போக்கில் நல்லதை நாடவும், அல்தை விடவும் செய்து, உயிர்களை உயர்த்துகிறான். தாழ்ந்த உயிர்களை உயர்த்துதற்கே, பலகோடி பிறவிகளை உயிர்கட்கு அளித்து, படிப் படியாக உயர்த்தித் தன்னிலையை மன் உயிர்கள் சாரும்படி1 செய் கிறான். இது இறைவனின் பேரருள் வெளிப்பாடன்றோ இவ்விரு கருத்துக்களும் அமைந்துள்ள பாடல் காண்க.

குலம்கொடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னைக்

குலவரையின் மடப்பாவை யிடப்பா லானை

மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட

மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச்

சலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னுந்

தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம்

நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த வாறே.

(தி.6 .20 பா.6)

இதே பதிகம், பத்தாம் பாடலிறுதியில், தகுதியுடைய உயிர் களின் மனத்தில் இறைவன் என்றும் நிலைபெற்று விளங்குகிறான் என்பதை, மறவாதார் மனத்தென்றும் மன்னினானை என்று குறிப்பிட் டுள்ளமையும் அறிந்து மகிழத் தக்கது.

நரகம் சாராமல் காப்பான்:

நரகம் என்பது துன்ப உலகம். அதில் போய் விழாமல் காப் பவன் இறைவன். எப்படிக் காக்கின்றான்? மக்களை நன்னெறிப் படுத்துவதால் காக்கின்றான். இதனைத் திருநாகைக்காரோணத் தாண்டகப் பகுதியில் தெளிவிக்கிறார் அப்பர். "தோல்நரகம் நன்னெறி யால் தூர்ப்பான் தன்னை" (தி.6 .22 பா.9) என்பது அப்பாடல் பகுதி. இப்பாடல் தலைப்பு "சொல்லார்ந்த" என்பது.

வேண்டுவார் வேண்டுவதே ஈவான்:

மக்களின் வேண்டுகோள், அவரவர் தரத்திற்கு ஏற்ப, பல தரப்படும் அத்தனை மக்களையும், ஏனைய உயிர்களையும், அதனதன், தன்மை - தரத்திற்கேற்ப, வேண்டியதை வேண்டியாங்குக் கொடுத்தே அவ்வவ்வுயிர்களை ஈடேற்றம் செய்ய வேண்டும். அதனைத் திருமறைக்காட்டில் உறைகின்ற ஈசன் வழங்குகிறான் என்கிறார் அப்பர். அப்பாடல் பகுதி காண்க. "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" (தி.6 .23 பா.1) இப்பகுதியின் பாடல் தலைப்பு "தூண்டு சுடரனைய சோதி" என்பது.

தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி... | 1 | 24 | 5 | 6 |