தலைவாயில்

ஐந்தாம்  திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி..|.1 | 2 | 3 | 4 |

நமச்சிவாயவே:

மாசில் வீணை என்ற பதிகத்தின் இரண்டாம் பாடலில் நமச்சிவாய என்னும் தூல பஞ்சாட்சரத்தின் பெருமை பேசுகின்றார். நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தை முறையாக ஓதினால் அதுவே அவனை நன்னெறிக்கண் கொண்டு செலுத்தும் என்கிறார். ஏதும் ஒன்றும் அறிவிலர் ஆயினும் இப்பஞ்சாக்கரத்தை ஓதினால் அதுவே கல்வியைத் தரும். அதன்வாயிலாகக் கலைஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் தரும். மந்திர சாத்திர வித்தையும் கைவரும். எல்லாம் ஐந்தெழுத்தை இடைவிடாது ஓதுவதால் கிடைக்கும். நல்ல நெறியும், அதனால் வீடுபேறும் கிடைக்கும் என்கிறார்.

நமச்சி வாயவே ஞானமும் கல்வியும்

நமச்சி வாயவே நான்அறி விச்சையும்

நமச்சி வாயவே நாநவின் றேத்துமே

நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே. -தி.5 .90 பா.2

விறகில் தீயினன்:

இறைவன் எங்கு இருக்கிறான்? எப்படிக் காண்பது?என்று வினவுவார்க்கு அப்பர் எளிமையாக ஒரு வழி காட்டுகிறார். விறகில் தீ இருப்பது போலவும், பாலில் நெய் இருப்பது போலவும், மணியில் ஒளி இருப்பது போலவும் இறைவன் மறைந்திருக்கிறான். ஆனால் சோதி வடிவாய் இருக்கிறான். அதிலும் மணிச்சோதியாய் மாமணிச்சோதியாய் உள்ளான்.

அப்படியிருந்தும் நம்கண்ணுக்குத் தெரியவில்லையே என்பார் சிலர். குருட்டுக் கண்ணுக்கு உலகியல் பொருள் தெரியாது அதுபோல அறியாமை நிரம்பிய நம்மனோருக்கு அச்சோதி புலப்படாது. நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவாகிய கோலை நட்டு, உணர்வாகிய கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய முன்னின்றருளுவான் என்கிறார். அப்பர். முறுகக் கடைய விறகில் தீ தோன்றும். வாங்கிக் கடைய பாலில் நெய் தோன்றும். கடைய மணியில் ஒளி தோன்றும். எனவே பக்தியுடன் உறவுடன் முறுக வாங்கிக் கடைந்து இறைவனைக்கண்டு இன்புறுவோமாக. அப்பாடல்:

விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே. -தி.5 .90 பா.10

புழுவுக்கும் குணம் நான்கு:

புழுவுக்குக் குணம் நான்காவன. உணவின் பொருட்டு முயலுதல், உண்டல், உறங்கல், இன்பத் துன்ப நுகர்வு. இந்நான்கும் எனக்கும் உள்ளன. இங்கு எனக்குள்ள பொல்லாங்கு புழுவுக்கு இல்லை. எனவே புழுவிலும் கடைப்பட்டவனாகிய நான் தூயனாகிய பெருமானது அடியார்களுடன்கூடிவாழ எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று வினவுகிறார்.

என்னை ஏதும் அறிந்திலன்:

காரிட்ட ஆணவக் கருவறையில் கண்ணிலாக் குழவியைப் போல் இருந்த உயிர்களை இறைவன் தயா என்னும் மூல தர்மத்தின் வழியே பிறவிக்குக் கொண்டுவந்த பிறகே ஒவ்வொன்றையும் உணர்கிறோம். இப்படி வாராத வழியில் நாம் ஒன்றையும் உணரும் வாய்ப்பில்லை.

பெருமான் பிறவியைக் கொடுத்துப் பிறவியை அறுக்கிறார். அவ்விறைவன் நமக்குப் பிறவி கருணையினால் கொடாதபோது அவனை நாம் எப்படி அறிவோம். இதனைத்தான் அப்பர், "என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான், அந்நிலையில் அவனையும் நான் அறிந்திலன்" எனகிறார். எனக்கு உடல் முதலிய கருவி கரணங்களைக் கொடுத்து அறியச் செய்தபொழுது அவனை நான் அறியமுடிகிறது என்றார். இதனையே பின் இரண்டடிகளில் "இறைவன் என்னைத்தன் அடியான்" என்று அறிதலும் அவனை நானும் பிரான் - தலைவன் எனக்குப் பிரியமானவன் என்று அறிந்தேன் என்கிறார். அப்பாடல்:

என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்

தன்னை நானும்முன் ஏதும் அறிந்திலேன்

என்னைத் தன்அடி யான்என்று அறிதலும்

தன்னை நானும் பிரான்என்று அறிந்தெனே. -தி.5 .91 பா.8.

கால பாசத் திருக்குறுந்தொகை:

சிவனடியார்களிடத்து இயமனோ அவன் தூதுவர்களோ தொடரக்கூடாது என்பது இறைவன் ஆணை. அவ்வாணையைச் செருக்கினால் கடந்தான் இயமன். அதனால் இறைவன் காலினால் காலனைக் காய்ந்தான் மார்க்கண்டேயற்காக. இதனை எல்லோரும் நன்கு உணருமாறு அப்பர் பெருமான் "காலபாசத் திருக்குறுந்தொகை" என்று ஒரு பதிகமே அருளிச் செய்துள்ளார்.

கொடுகொட்டி தாளம் கைக்கொண்ட இறைத்தொண்டர்களை நெருங்காதீர் என்றும், இடுக்கண் செய்யப்பெறீர் என்றும், சிவன் என்று அரற்றுவாரை நீங்கள் சாரப்பெறீர் என்றும், நிறைய நீறணிவார் எதிர் செல்லலே என்றும், சாந்தமும் ஏமமும் புனைவார் எதிர்செல்லலே என்றும், ஐந்தெழுத்தில் ஒரு எழுத்தைச் சொல்வாரிடத்தும் சாராதே என்றும், சாராததோடு அடியார்களைப் போற்றிச் செல்மின்கள் என்றும் நமன் தூதுவர்க்கு அறக் கட்டளையிடுகின்றார் அப்பர். அப்பாடல்களில் ஒன்று காண்போம்.

படையும் பாசமும் பற்றிய கையினீர்

அடையன் மின்நமது ஈசன் அடியரை

விடைகொள் ஊர்தியி னான்அடி யார்குழாம்

புடைபு காதுநீர் போற்றியே போமினே. -தி.5 .92 பா.7

ஈசன் என்னை அறிந்தது:

என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்,

தன்னை நானும்முன் ஏதும் அறிந்திலன்,

என்னைத் தன்அடி யான்என்று அறிதலும்,

தன்னை நானும் பிரான்என்று அறிந்தெனே. -தி.5 .9 பா.8

என்ற பாடற்கருத்தை ஒட்டிய பாடல் ஒன்று மறக்கிற்பனே என்னும் மகுடம் உடைய திருப்பதிகத்தில் வருவது சிந்திக்கத்தக்கது. அப்பாடல் காண்க.

ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன்

ஈசன் சேவடி ஏற்றப் பெறுதலால்

ஈசன் சேவடி ஏத்தப்பெற் றேன்இனி

ஈசன் தன்னையும் யான்மறக் கிற்பனே.-தி.5 .93 பா.3

இங்குற்றேன்:

இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை, திருமாலும் பிரமனும் தாமே தலைவர் என்ற செருக்கித் தருக்கியபோது சிவபெருமான் சோதிப்பிழம்பாய்த் தோன்றினான். அத்தோற்றமே சிவலிங்க வடிவம். அப்பெருமானைப் பொய்யும் பொக்கமும்(வஞ்சகம்) போக்கிப் புகழ்ந்திலர். எருக்கங்கண்ணி கொண்ட இண்டை புனைந்திலர். இவர்கள் எப்படி இறைவனைக் காண்பர். காணகில்லார். இந்த வரலாற்றை இப்பதிக இறுதிப்பாடலில் தெளிய விளக்கியருள்கிறார் அப்பர்.

செங்க ணானும் பிரமனும் தம்முளே

எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலார்

இங்குற் றேன்என்று இலிங்கத்தே தோன்றினான்

பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே. -தி.5 .95 பா.11

சித்தத் திருக்குறுந்தொகை:

இப்பதிகம் முப்பது பாடல்களைக் கொண்டுள்ளது. சித்தத்துள்ளே சிவபெருமானைச் சிந்திக்கும் திறம் கூறுவது. இப்பதிகம் சிந்திப்பார் மனத்தால் என்று தொடங்குவதால் இப்பெயர் பெற்றது.

இதனுள் அகரம் முதல் ஔகாரம் வரை 12 உயிரெழுத்துக் களும் 2ஆம் பாடல் முதல், பாடலின் முதல் எழுத்தாகத் தொடங்கு கிறது. பிறகு ககரம் முதலிய 14 மெய்யெழுத்துக்களையும் முதலெழுத்தாக வைத்து இத்திருப்பதிகத்தைப் பாடி உள்ளார்.

இதில் ஒரு பாடல் பரஞ்சுடர் பாதிப்பெண்ணுருவானவன் என்பதை அறிவிக்கிறது. கந்தபுராணத்துள் அசுரகாண்டத் தொடக்கத்தில் உள்ள கடவுள் வணக்கப் பாடல் "ஊரிலான்" எனத் தொடங்குகிறது. அதைப் போலவே இங்கு அப்பர் ஒரு பாடல் பாடியுள்ளார்.

ஊர்இ லாய்ஒன்று ஒன்றாக உரைப்பதுஓர்

பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா

கார்உ லாம்கண்ட னேஉன் கழலடி

சேர்வு இலார்கட்குத் தீயவை தீயவே. -தி.5 .97 பா.7

இப்பாடலுக்கு ஒப்பான கந்தபுராணப்பாடலும் காண்க.

ஊரி லான்குணம் குறியிலான் செயலிலான் உரைக்கும்

பேரி லான்ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர்

சாரி லான்வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு

நேரி லான்உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்.

-கந்தபுராணம் அசுர. பா.1

குரங்காடுதுறை:

திருவையாற்றிற்குக் கிழக்கே பத்து கிலோ மீட்டர் தூரத்தில் காவிரியின் வடகரையில் இருப்பது வடகுரங்காடுதுறை. இது வாலியால் பூசிக்கப்பெற்ற பாடல்பெற்ற தலம். கும்பகோணத்திற்குக் கிழக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் காவிரியின் தென்கரையில் இருப்பது சுக்ரீவனால் பூசிக்கப்பட்ட தென்குரங்காடுதுறை. இத்தலத்து எழுந்தருளியுள்ள இறைவன் மணவனாக, கணவனாக, எண் குணவனாக, அன்புடை அடியார்கட்கு அணவனாக உள்ளமையை இத்தலப் பதிகப்பாடல் ஒன்றில் அப்பர் குறிப்பிடுகிறார்.

கணவன்:

சிவம் என்ற சொல்லிற்கு மங்கலம் என்பது பொருள். இறவாமல் பிறவாமல் அமங்கலம் இன்றி என்றும் ஒரே பெற்றியனாய் இருப்பவன் சிவபெருமான் ஒருவனே. மனித்த வாழ்வில் மங்கலம், அமங்கலம் இரண்டும் கலந்தே வரும். "குறைவில் மங்கலக் குணத்தனாகலின் சிவம் என்றனர்" பெரியோர்.

நமக்குரிய மணவன் என்பதெல்லாம் உபசாரமே. உண்மை இல்லை. உண்மை மணவன் மகேச்சுவரனேயாவான். மணவன் என்ற சொல்லும் திருமுறையிலும், மற்ற இலக்கியங்களிலும் அரிய பிரயோகமாகும். நம்பெருமான் என்றும் மணவனாயிருக்கிறான். மலைமகளின் நெடுமங்கலக் கணவனாயிருக்கிறான். நெடுமங்கலம் என்பது என்றும் அம்மையப்பர் மங்கலமாகவே இருக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.

கலைஞானிகள் காதலுடன் - விருப்பத்துடன் ஒன்றாயிருக்கிற பெருமானை எட்டாகப் பிரித்துப் பெரும்பயன் காண்கின்றனர். எண்குணவன் என்கிறார் அப்பர். திருவள்ளுவரும் கலைஞானி யல்லவா?. அவர் இறைவனை எண்குணத்தான் என்கிறார்.

எண்குணங்களாவன: தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேராற்றல் உடைமை, பேரின்பம் உடைமை, பேரருள் உடைமை என்பன. எண் குணத்தானை வணங்காத் தலை பயனற்றது என்கிறார் வள்ளுவர். சிலருக்குக் கண் இருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய்ப் பயன்படாதவாறுபோல தலையிருந்தும் எண்குணத்திறைவனை வணங்கவில்லையானால் அத்தலை பயனற்றது என்கிறார். இங்ஙனம் மணவனாய், கணவனாய், குணவனாய் இருக்கும் இறைவன் குரங்காடுதுறையில் அன்புடை அடியவர்கட்கு அணியனாய் அருள்புரிகிறான் என்று பாடியுள்ளார். அப்பாடல் காண்க.

மணவன் காண்மலை யாள்நெடு மங்கலக்

கணவன் காண்கலை ஞானிகள் காதல்எண்

குணவன் காண்குரங் காடு துறைதனில்

அணவன் காண்அன்பு செய்யும் அடியர்க்கே -தி.5 .63 பா.4

கண் - அவன். கணவன். மனைவிக்குக் கண்ணாக இருப்பவன் என்ற பொருளில் கணவன் என்ற சொல் வழங்கி வருகிறது. உடல் உறுப்புக்களுள்ளே கண்தான் மிகச் சிறந்த உறுப்பு. கருவிலும் முதலில் தோன்றும் உறுப்பு கண்ணே என்று மருத்துவர்களும் குறிக்கின்றனர். கண்ணைக் கொண்டே ஒருவரின் தகுதியைக் கண்டுபிடிக்கலாம். இதுபற்றியே கோவை நூலும், கண்ணிற் சிறந்த உறுப்பில்லை யாவதும் காட்டியதே என்று கூறுகிறது. அப்பரோ, மற்றோரிடத்திலும் கணவன் என்ற சொல்லைக் காட்டியுள்ளார். திருச்சத்திமுற்றத் திருவிருத்தத்தில். "வில்நேர் புருவத்து உமையாள் கணவா விடிற்கெடுவேன்" என்பது அவர் திருவாக்கு.

ஙகரவெல் கொடியான்:

ஙகர இனப் பதின்மூன்றெழுத்துள் என்னும் உயிர்மெய் யெழுத்தும், ங் என்ற மெய்யெழுத்தும் மட்டுமே மொழியில் பயின்று வருவன. இனத்தில் மற்ற ஙா, ஙி முதலிய எழுத்துக்கள் மொழியில் வருவதில்லை. இருப்பினும் என்ற எழுத்துடன் மற்ற 11 எழுத்துக்களும் சுவடியில் வாழ்ந்து வருகின்றன. அதைப் போல் மக்களும் சுற்றத்தாரைத் தழுவி வாழவேண்டும் என்பதற்கு ஔவையார் இந்த ஙகரத்தை உதாரணமாகக் காட்டுகிறார். "ஙப் போல்வளை" என்பது ஔவையின் ஆத்திசூடி. ஙகரம் எப்படி அதனுடன் உள்ள மற்ற 11 எழுத்துக்களும் மொழி வளர்ச்சிக்குப் பயன்படாவிட்டாலும் அவற்றை உடன் வைத்துப் போற்றுகிறதோ அதைப் போலவே திறன் உடைய ஒருவன் திறன் இல்லாத சுற்றத்தாரையும் உடன் வைத்துப் போற்ற வேண்டும் என்பதற்கு இவ்வுதாரணத்தைக் காட்டியுள்ளார்.

இச் சித்தத்திருக்குறுந்தொகையில் ஙகரத்தை முதலாக வைத்துத் தொடங்கும் பாடலில் "ஙகர வெல்கொடியான்" என்று தொடங்குகிறார். இடபம் காலை மடக்கிப் படுத்திருக்கும் போது போன்று இருப்பதை உணர்ந்து நமக்கும் அறிவிக்கின்றார். மேலும் அற உருவாகிய இடபம் இல்லாதார்க்கு உதவும் குறிப்பினது என்பதையும் உணர்த்துகிறார். `நல்ல நெஞ்சமே நீ ஙகரம் போன்ற இடபத்தைக் கொடியாகக் கொண்ட சிவபெருமானை உய்வதற்குரியவனாகக் கொள்வாயானால் அதுவே உனக்குச் சிறந்த புகலிடமாகும். அச்சிவன் மகரவெல்கொடியானாகிய மன்மதனைக் காய்ந்தவன். காய்ந் தவனைப் புகலாகக் கொள்வதே உன் உய்விற்கும் உயர்விற்கும் சிறந்தவழி' என்கின்றார். அப்பாடல் காண்க.

ஙகரவெல்கொடியானொடு நன்னெஞ்சே

நுகர நீ உனைக் கொண்டுயப் போக்குறில்

மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்

புகரில் சேவடி யேபுக லாகுமே. -தி.5 .97 பா.16

பாவமும் பழியும்:

பெரும்பாலான மக்கள் பாவம் செய்வதற்கு அஞ்சுவதில்லை, அதனால் வரும் பழிக்குத்தான் அஞ்சுகின்றனர். பாவநாசத் திருக்குறுந்தொகைப் பதிகத்து முதல் பாடலில் பாவமும், பழியும் பற்றற வேண்டுமானால் நம் காவலனாக உள்ள பெருமானை நினைமின்கள், நினையின் அருள்புரிவான் என்கிறார். மற்றப் பாடல்களில் இறையுணர்வில்லாது சடங்காகச் செய்யும் தீர்த்தமாடல், வழிபாடு செய்தல், வேதம் ஓதல், குருக்களாய் உபதேசித்தல் முதலியன பயன்தராது என்கிறார். அவற்றுள் ஒருபாடல் காண்போம்.

கோடி தீர்த்தம் கலந்து குளித்துஅவை

ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்

ஓடு நீரினை ஓட்டைக் குடத்தட்டி

மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே. -தி.5 .99 பா.9

எரி பெருக்குவர்:

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களும், சூரியன், சந்திரன், உயிர், என்பனவுமாகிய எட்டுப்பொருள்களும் இறைவனுக்கு உருவங்களாகும். இவ்வெட்டையும் அட்டமூர்த்தம் என்பர். அட்டமூர்த்தங்கள். இறைவனின் உடல்போல்வன. அவற்றுள் மூர்த்திமானாக விளங்குபவர் இறைவன். இதனைச் சரியாகப் புரிந்து கொள்ளாமலே எரிஓம்புகின்றனர் சிலர். அவர்கட்கு ஒரு நரியின் வரலாற்றை உதாரணமாகக் காட்டுகிறார் நாவுக்கரசர்.

ஒரு யானை காட்டில் இறந்து கிடந்தது. அதனைக் கொல்வதற்காக எய்த அம்பு அதன் பக்கத்தே கிடந்தது. இவற்றைப் பார்த்த நரி பெரும் பயனாகிய யானையை உணவாக உடனே கொள்ளாமல் அருகிலிருந்த அம்பிலும் வில்லிலும் ஒட்டியிருந்த தசையை முதலில் உணவாகக் கொள்ளக் கருதி வில்நரம்பைக் கடித்தது. நரம்பு அறுபட்ட நிலையில் வில் விசிறி அடித்தது, அதனால் நரியின் வாய் கிழிந்து இறந்துபட்டது.

இதைப்போல் பெரும்பயனாகிய இறைநெறி உணர்ந்து இன்புறாது அக்கினியைப் பார்க்கிறார்களே தவிர அதனுள் இருக்கும் இறையை உணர்கிலர் எரிபெருக்கும் மாந்தர் என்று இரங்குகிறார். அப்பாடல்:

எரிபெ ருக்குவர் அவ்எரி ஈசனது

உருவ ருக்கம தாவது உணர்கிலார்

அரிஅ யற்குஅரி யானை அயர்த்துப்போய்

நரிவி ருத்தம தாகுவர் நாடரே -தி.5 .100 பா.7

கல்மனவர்:

இதைப் போன்றே சூரியனை வணங்குவோரும், சூரியனும் இறைவனது எட்டு உருவங்களுள் ஒன்று என்று உணர்ந்திலர். மேலும் சூரியன் உள்ளே உள்ள பேரொளிப் பொருளாகிய பெருமானை உணர்ந்திலர், மேம்போக்காக சூரியன் உருவத்தையே வணங்கி உட்பொருளை உணராமல் வீணாகின்றனர். அவர்கள் ஓதும் இருக்கு முதலிய வேதங்கள் எல்லாம் ஈசனையே தொழுகின்றன. இக்கருத்தை நினைந்து உய்திபெறாதவர் கல்மனவர் என்கிறார். அப்பாடல்:

அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்

அருக்கன் ஆவான் அரன் உருஅல்லனோ

இருக்கு நான்மறை ஈசனையே தொழும்

கருத்தி னைநினை யார்கல் மனவரே. -தி.5 .100 பா.8

கயவக்கணம்:

கயவர் - கீழ்மக்கள். இவர்களைப் பற்றித் திருவள்ளுவர் இரண்டு குறள்களில் குறிப்பிடுகிறார். கயவர்கள் என்றால் அவர்கட்கென்று அடையாளங்கள் ஏதும் இல்லை. இருப்பதாக எண்ணி ஏமாந்துவிடாதீர்கள். அக்கயவர்களும் மக்களே போன்றிருப்பர் என்பதனை "மக்களே போல்வர் கயவர்" என்றும், மேலும், மக்களிலும் உயர்ந்த தேவர்களைப் போன்றும் இருப்பர், இதனைத்தான் "தேவர் அனையர் கயவர்" என்றும் கூறியுள்ளார்.

இவர்கள் இறைவனின் பெருந்தன்மையை உணரார்கள் என்று அறிவித்து இத்திருமுறையை அப்பர் நிறைவு செய்கிறார். இத்திரு முறைத் தொடக்கத்தில் அன்னம்பாலிக்கும் என்று முத்திப் பேற்றை விரும்பும் பெரியோர்களைப் பற்றி அறிவித்தார். இறுதியில் என்ன தான், பேரின்பம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏக உருவாய்க் கிடக்குது அதை அனுபவிக்கச் சேரவாரும் ஜெகத்தீரே என்று அழைப்பு விடுத்தாலும், கயவர் என்றுமே வாரார். அதுகொண்டு பெருமான் அருள் இல்லை என்று மயங்காதீர் என்று அறிவுறுத்தி நிறைவு செய்கிறார். கயமை அகற்றி நயனைப் பற்றி நலமுடன் வாழ அருள்மிகு செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.

கல் மனம் அகற்றி, நல் மனம் பெறுவோம்.

தலைவாயில

ஐந்தாம்  திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி..|.1 | 2 | 3 | 4 |