தலைவாயில்

ஐந்தாம்  திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி..|.13 | 4 | 5 |

கை தொழுவார், வைதெழுவார்:

மனம் கசிந்துருகித் தொழுவாரையும் விரும்பி அருள் செய்வான். கடவுள் இல்லை என்று நீக்கி வைதெழுவாரையும் துன்பம் செய்யான். வைபவரும் தம்மக்களே ஆகலின் இறைவன் அவர்களையும் காலப்போக்கில் திருந்துமாறு அருள்செய்து ஆட்கொள்வான். இதே கருத்தை ஞானசம்பந்தரும் இரண்டாம் திருமுறையில் திருவாழ்கொளிபுத்தூர்ப் பதிகப் (தி.2 .94 பா.5) பாடலில்,

"பரவுவாரையும் உடையார் பழித்திகழ்வாரையும் உடையார்

................

வரமும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூருளாரே"

எனக் குறிப்பிட்டுள்ளமை ஒப்புநோக்கி இன்புறற்பாலது.

இப்பாடலில் குறளின் சொற்பொருட்சாயல் வந்துள்ளமை கண்டு மகிழலாம்.

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி எனல் -குறள் 196

என்ற குறளுக்குப் பரிமேலழகர் உரை கூறும்போது, மகன் எனல் என்ற சொல்லுக்கு பயனில் சொல் பாராட்டுவானை மகனென்று சொல்லற்க எனவும், மக்கட் பதடி எனல் என்ற சொல்லுக்கு மக்களில் பதர் என்று சொல்லுக எனவும் கூறுகிறார். எனல் என்ற சொல் சொல்லற்க என்றும் சொல்லுக என்றும் பொருள் தருதலைக் காண்கிறோம்.

இக் கருத்தை ஓரளவு இப்பாடலில் வரும் காதலன், வாடலன் என்ற சொல்லிலும் கண்டு மகிழலாம். காதலன் - விருப்புடையன், வாடலன்-வாட்டம செய்யான்.

தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை -குறள் 155

என்ற குறட்கருத்தையும் இப்பாடலில் காணநேர்கிறது. தொழு தெழுதல் மனைவியின் செயல், வைதெழுதல் புறச்சமயத்தார் செயல். சொற்பொருள் கருத்து ஒற்றுமை கண்டு மகிழ்க. அப்பாடல் காண்போம்.

கரைந்து கைதொழு வாரையும் காதலன்

வரைந்து வைதெழு வாரையும் வாடலன்

நிரந்த பாரிடத் தோடவர் நித்தலும்

விரைந்து போவது வீழி மிழலைக்கே. -தி.5 .12 பா.1

இனியன் தன்னடைந்தார்க்கு:

தன்னை அடைந்தவர்கட்கெல்லாம் இடைமருதீசர் இனியனாக இலங்குகிறார். இதனைக் "கனியினும் கட்டிபட்ட கரும்பினும்" என்ற பாடலால் விளக்குகிறார். குழந்தைப்பருவத்தில் கனியிலே விருப்பம், கொஞ்சம் முதிர்ந்தால் வெல்லக்கட்டியிலும், கற்கண்டிலும் விருப்பம் மிகுகிறது. காளைப் பருவத்தில் பாவையரிடத்து விருப்பம் உண்டாகிறது. அதை அடுத்து அரசியலில் இன்பம் காண்கிறது. இவற்றையெல்லாம் விட இடைமருதீசன் கழல் நீங்காத இனிமை பயப்பது என்று அதைவிட அதைவிட என்று உறழ்ச்சிப் பொருள் காணலாம். மேலும் நாம் ஏழாம் வேற்றுமை இடப்பொருளில் வைத்தும் பொருள் காணுதல் மிகவும் இனிமை பயக்குமாறுள்ளது. கனியின்கண் சுவையாயிருப்பவனும், கட்டிபட்ட கரும்பின்கண் சுவையாயிருப்பவனும், பனிமலர்க்குழல் பாவை நல்லாரிடத்து இன்பமாயிருப்பவனும், தனிமுடி கவித்து ஆளும் அரசிடத்து இன்பமாயிருப்பவனும் இடைமருதூர்ப் பெருமானே என்று இனிமையாக இயம்பியுள்ளார். எல்லா இடத்தும் எல்லாப் பொருள்களிலும் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களிலும் அவன் உடனாயிருந்து நுகரச் செய்கிறான் என்ற கருத்தையே இப்பாடல் எளிமையாக உணர்த்துகிறது.

ஆகமம் சொல்லும் பாங்கிக்கு:

ஊழிக் காலத்தில் அஃதாவது யுக முடிவில் இறைவனும் இறைவியும் மட்டுமே உள்ளனர். அப்போது இருவரும் தனிமை கழிய பெருமான் பெருமாட்டிக்கு வருகிற யுகத்தில் எப்படியெல்லாம் மக்களை மன்னுயிர்களை ஈடேற்றம் செய்வது என்று திட்டமிடும் ஆகமங்களை பணைத்தெழுந்த மருதமரத்தடியில் உமாதேவியாருக்கு உபதேசித்தார். அப்பாடல் காண்க.

துணையி லாமையில் தூங்கிருட் பேய்களோடு

அணைய லாவது எமக்கரி தேஎனா

இணையி லாஇடை மாமரு தில்எழு

பணையில் ஆகமம் சொல்லும்தன் பாங்கிக்கே.-தி.5.15பா.4

பாங்கி பக்கத்திருப்பவர் உமையம்மை.

திருவெண்ணி:

திருவெண்ணி என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய ஊர். சங்க காலத்தில் இவ்வூரில் தோன்றிய பெரும்புலவர் வெண்ணிக் குயத்தியார் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் கரிகாற்சோழனின் வெண்ணிப் போரைப்பற்றிக் கூறுகிறது. கரிகாலன் வெற்றி பெற்ற ஊர் வென்றி என்றாகி பிறகு வெண்ணி என ஆயிற்று என்பர்.

"கலிகொள்பாணர் வெண்ணிப்பறந்தலை" - புறம் 66.

"ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்" -அகம் 55,246

"இருபெரு வேந்தரும் ஒருகளத் தவிய -

வெண்ணித் தாக்கிய கரிகால் வளவன்" -பொருநர் - 147-8

இருபெருவேந்தர் - சேர, பாண்டியர்கள். மேலும் பதினொரு வேளிரையும் வென்றமை குறிக்கப்படுகிறது.

இத்தலம் மிகத் தொன்மையானது என்பதையும் இங்குள்ள பெருமானை நினைத்திருந்த நாவுக்கரசருக்கு இனிமை பயந்து அமு தூறிற்று என்பதையும் அவரே ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

வெண்ணித் தொல்நகர் மேய வெண்திங்களார்

கண்ணித் தொத்த சடையர் கபாலியார்

எண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்கு

அண்ணித் திட்டமு தூறும்என் நாவுக்கே -தி.5 .17 பா.2

எனக்கு இனியர்:

ஒருவன் தனக்கு இனியர் யார்? என்று எண்ணிப்பார்த்தால் தமக்குத் தாமே இனியவராகத் தோன்றுவர். இது சரியன்று. நமக்கு நாமே நன்மை செய்ததாக எண்ணிச் செய்யும் செயலெல்லாம் நமக்கு நல்லனவாக முடியாததைக் காண்கிறோம். நாம் செய்யும் செயல் நமக்குத் தீமையையும் செய்துவிடுகிறது. நமக்கு நன்மை செய்பவன் நம்மினும் இனியவன் ஒருவன் இருக்கின்றான். அவன் நம்முள் உயிர்க்காற்றாய் புறத்தும் அகத்தும் புகுந்து நம் உள்ளத்தே நிற்கின்றான். அவனே திரு இன்னம்பரில் எழுந்தருளியிருக்கின்றான். அவனைத் தொழுது உய்மின்கள் என்கிறார் அப்பர். மேலும், அவ்வின்னம்பர் ஈசன் நாம் செய்வனவற்றையெல்லாம் ஒரு சிறிதும் விடாது குறித்துக்கொண்டு இருக்கிறார் என்கிறார் அப்பர். அவ்விரு பாடல்களையும் சிந்திப்போமாக.

என்னி லாரும் எனக்கினி யாரில்லை

என்னி லும்இனி யானொரு வன்உளன்

என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்கு

என்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே. -தி.5 .21 பா.1

தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று

அழுது காமுற்று அரற்றுகின் றாரையும்

பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்

எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே. -தி.5 .21 பா.8

பற்றினாரைப் பற்றா வினை:

பற்றும் பாசமும் விடவேண்டுமானால் பற்றற்ற பரம்பொருளை நாம் பற்றவேண்டும். அப்படிப் பற்றினால் நாளடைவில் நமது பற்று அற்றுப்போகும். பற்றுள்ளாரைப்பற்றாகப் பற்றினால் நாளும் பற்று மிகுமே தவிரக் குறையாது. இதனையே ஞானசம்பந்தரும் "கற்றாங்கு எரியோம்பி" என்ற பாடலில் "முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே" என்கின்றார். அதே கருத்தை இங்கு அப்பர் கூறும் அரிய பாடலில் காண்போம்.

புற்றி னாரர வம்புலித் தோல்மிசைச்

சுற்றி னார்சுண்ணப் போர்வைகொண் டார்சுடர்

நெற்றிக் கண்உடை யார்அமர் நின்றியூர்

பற்றி னாரைப்பற் றாவினை பாவமே. -தி.5 .23 பா.3

நெஞ்சம் வாழி:

நெஞ்சை வாழ்த்துவது பெரியோர் இயல்பு. வாழ்க எம் மனமும் மணி நாவும்மே" என்பார் குமரகுருபரர். நெஞ்சம் நல்லதே நினைத்தால் அது நம்மை நன்னெறியில் செலுத்தும். இறைவனை நினையும் நெஞ்சம் நல்ல நெஞ்சம். எனவேதான் அப்பர்பெருமான் திருநின்றியூர்த் திருக்குறுந்தொகையில் "நெஞ்சமே நீ அஞ்சி வழிபட்டாலும் சரி அன்புடனே வழிபட்டாலும் சரி அது அந்நெஞ்சுடையானை உய்விக்கும் ஆற்றல் உள்ளது. எனவே பெருமானை அச்சத்துடனோ அன்புடனோ வழிபட்டாலும் நீ வாழ்க" என வாழ்த்துகிறார் அப்பர். அறியாப்பருவத்தினர் அச்சம் காரணமாகவும், அறிந்தமெய்யுணர்வினர் அன்பு காரணமாகவும் வழிபடுவர் என்பது அறியத்தக்கது.

அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்

நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ

இஞ்சி மாமதில் எய்திமை யோர்தொழக்

குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே. -தி.5 .23 பா.9

அந்திக்கோன்:

இச்சொல் அரிய பிரயோகமாய் வந்துள்ளது. அந்தி - மாலைப்பொழுது. இரவு-இரவில தண்ணளியுடன் குளிர்ச்சியாக ஆட்சிபுரிபவன் சந்திரன். இதனை, "அந்திக் கோன்தனக் கேஅருள் செய்தவன்" என்னும் பாடல் பகுதியால் அறிவிக்கிறார்.

இப்பதிகத்தின் இறுதிப்பாடலில் இறைவன் மகத்துக்கு மகத்தாகவும் அணுவிற்கு அணுவாகவும் இருப்பதைக் குறிப்பிடுகிறார். "பரியர் நுண்ணியர் பாசூர் அடிகளே" என்பது அப்பாடல் பகுதியாகும்.

பாதிப்பெண் ஒரு பாகத்தன்:

"அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்" என்பது சாத்திரம். "ஒருமை பெண்மை உடையன்" என்கிறார் ஞானசம்பந்தர்.

"பாதி ஓர் பெண்ணை வைத்தாய்" என்பது சுந்தரர் வாக்கு.

"சக்தி இன்றிச் சிவம் இல்லை, சிவம் இன்றிச் சக்தி இல்லை." இரண்டும் இரு தன்மை கொண்ட ஒரே பொருள் என்பதை யாரும் மறத்தற்கியலாது.

இக்கருத்தைத் திருவாவடுதுறை அகத்துறைப்பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அப்பாடல் வருமாறு;

பாதிப் பெண்ஒரு பாகத்தன் பன்மறை

ஓதி என்னுளம் கொண்டவன் ஒண்பொருள்

ஆதி ஆவடு தண்துறை மேவிய

சோதி யேசுட ரேஎன்று சொல்லுமே -தி.5 .29 பா.3

வஞ்சமின்றி வணங்குமின்:

கரவாடும் வன்நெஞ்சர்க்கரியவன் என்பார் காஞ்சிப்பதிகத்தில். ஆனைக்காவிலும் நாளும் வஞ்சமின்றி வணங்குமின் வைகலும் என்கிறார். மேலும் வெஞ்சொல் இன்றி விலகுமின் வீடுஉற என்கிறார். நெஞ்சில் வஞ்சமின்றியும் நாவில் வெஞ்சொல் இன்றியும் நினைந்தும் வாழ்த்தியும் வழிபடுவாருக்கு ஆனைக்கா அண்ணல் அஞ்சல் என்று அருள்செய்திடும் என்பவர் மேலும் ஒரு பாடலில் திருகுசிந்தையைத் தீர்த்து, உருகி நைபவர்க்கு அருகில் நின்று அருள்செய்பவன் ஆனைக்கா அண்ணல் என்கிறார். மேலும் ஒரு பாடலில் துன்பம் இன்றித் துயர் இன்றி என்றும் நீர் இன்பம் வேண்டுவீர் ஆனால் இராப்பகல் ஏத்துமின், அப்படி என்பொன் ஈசன் இறைவன் என்று உருகுவார்க்கு ஆனைக்கா அண்ணல் அன்பனாய் அருள்புரிவன் என்கிறார்.

மேலும், "நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே, படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள், தடை ஒன்று இன்றியே தன்னடைந்தார்க்கெலாம், அடைய நின்றிடும் ஆணைக்கா அண்ணலே" என்று அறம் கூறுகிறார். மேலும் மடநெஞ்சமே நேசமாகி நினை என்று அறிவுறுத்துகிறது ஒரு பாடல். இவற்றையெலாம் சிந்தித்துச் சிறப்புறுவோமாக.

அடிகள் சேவடிக் கீழ் நாம் இருப்பது:

திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம் ஒன்று அமைத்து அங்கேயே நிலையாகத் தங்கிவிடுவது என்ற குறிப்பில் அப்பர் திருப்பூந்துருத்தியில் எழுந்தருளினார். அங்குத் தங்கி இருப்பதை இறைவன் சேவடிக்கீழ்த் தங்கியிருப்பதாகவே கொண்டார். அவ்வெண்ணங்கள் பாடல் வடிவு கொண்டன.

"அடிகள் சேவடிக்கீழ் நாம் இருப்பதே"

"தீர்த்தன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே"

"ஆதி சேவடிக்கீழ் நாம் இருப்பதே" -தி.5 .32.பா.1-10

என்று பத்துப்பாடல்களிலும் பாடியுள்ளார்.

பூணியாய்ப் பணி செய்க:

திருச்சோற்றுத்துறைப் பதிகமாகிய "கொல்லை ஏற்றினர்" என்ற பதிகம் முழுவதும், திருவடிக்கீழ் நாம் இருந்தாலும் பணி செய்வதில் குறை ஏற்படக்கூடாது என்பதில் கருத்தாய் இருக்கிறார் அப்பர். இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும்,

"சோற்றுத் துறையர்க்கே வல்லையாய்ப் பணி செய் மடநெஞ்சமே"

"பக்தியாய்ப் பணி செய்மடநெஞ்சமே".

"பட்டியாய்ப் பணிசெய் மடநெஞ்சமே"

(பட்டி - மீளா அடிமை.)

"வாதியாய்ப் பணிசெய் மடநெஞ்சமே"

(வாதியாய் - பரமன் புகழ்களையே பேசுபவனாய் பணி செய்வது.)

"பூணியாய்ப்பணி செய் மடநெஞ்சமே"

(பூணி-அன்ப.)

இப்படி இப்பதிகம் முழுதுமே பாடியுள்ளமை கண்டு நாமும் பணிசெய்து உய்வோம். (தி.5 .33 பா.1-10)

ஒருவர் தாம் பலபேர் உளர்:

இறைவன் ஒருவரா, பலரா என்பது பலரது உள்ளத்தே எழும் ஐயம். இவ் ஐயத்திற்கு நம் சமயாசாரிய மூர்த்திகள் பல இடங்களிலும் பல்வேறு விதமாகவும் இறைவன் ஒருவனே என்பதைத் தெளிவு படுத்தியுள்ளனர்.

அவற்றுள் இது ஒரு இடம். திருச்செம்பொன்பள்ளி திருக் குறுந்தொகையில் "செம்பொன் பள்ளியார் ஒருவர்தாம் பலபேர் உளர் காண்மினே" என்றருளிச் செய்துள்ளார். கடவுள் ஒருவர்தான். பேர்கள் தான் பலவாக உள்ளன என்று இங்கு தெரிவித்துள்ளார். அப்பாடல் வருமாறு.

அருவ ராததோர் வெண்டலை யேந்திவந்து

இருவ ராயிடு வார்கடை தேடுவார்

தெருவெ லாமுழல் வார்செம்பொன் பள்ளியார்

ஒருவர் தாம்பல பேருளர் காண்மினே. -தி.5 .36 பா.4

ஒருவர் தாம் பல பேருளர் என்பதற்கு உலகியலிலும் சில உதாரணங்கள் கண்டு தெளியலாம். காவிரி ஒன்றுதான்; பலவாகப் பிரிந்து பலபேர் தரித்து பலருக்கும் பயன் தருகிறது. இந்தியா ஒன்றுதான்; பல மாநிலங்களாகப் பேர் பெற்று பலவாகப் பிரிந்து பலருக்கும் பயன் தந்து நிற்கிறது. இதுபோல் இன்னும் பல உதாரணங்களும் காணலாம்.

பாவமும் பிழையும் தீர்ப்பர்:

கடவூர் மயானப்பெருமானை ஞானசம்பந்தர் "வரிய மறையார்" என்னும் பதிகத்துள் ஒவ்வொரு பாடல் இறுதியிலும் "பெரிய பெருமான் அடிகளே" என்றும் "எம்பெருமான் அடிகளே" என்றும் குறிப்பிட்டுள்ளமை காணலாம். இங்கு நாவுக்கரசர் "குழைகொள் காதினர்" என்று தொடங்கும் பதிகத்துள் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "பெருமான் அடிகள்" என்று குறிப்பிட்டிருப்பதும் சிந்தித்தற்குரியது. பழைய அடியார்கள் செய்த பாவத்தையும் பிழையையும் தீர்ப்பர் என்றும், பரவுவார் இடர் தீர்த்துப் பணி கொள்வார் என்றும் இப்பதிகத்துள் குறிப்பிட்டுள்ளார். அப்பாடல் பகுதிகளைக் காண்க.

"பழையதம் அடியார் செய்த பாவமும்

பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே" -தி.5 .38 பா.1

"பரவுவார் இடர் தீர்ப்பர் பணிகொள்வர்

பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே"-தி.5 .38 பா.8

மயிலாடுதுறைப் பதிகம்:

"கொள்ளும் காதன்மை" எனத்தொடங்கும் திருப்பதிகம் அகத்துறைப்பாடல்கள் பதினொன்றைக் கொண்டது. முதற்பாடலில் பெருமான் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி பெருமானைக் கண்டபோதெல்லாம் உள்ளம் உருகுவதால் உடல் மெலிகிறாள். கையில் பெய்யும் வளையல்கள் கழல்கின்றன. பெருமான் பெயராகிய வள்ளலையே உரைத்தவண்ணம் உருகுகின்றாள், என்கிறார். இங்குள்ள பெருமான் வள்ளலாய் வீற்றிருக்கின்றார். நாற்றிசையிலும் நான்கு விதமாக வண்மை வழங்கும் பெருமான் இங்கு நடுநாயகமாக எல்லாவற்றுக்கும் மூலமான வள்ளலாகத் திகழ்கிறார். வடக்கே கைகாட்டும் வள்ளல் வள்ளலார் கோயில், கிழக்கே துறைகாட்டும் வள்ளல் - விளநகர், தெற்கே மொழிகாட்டும் வள்ளல்-பெருஞ்சேரி, மேற்கே வழிகாட்டும் வள்ளல் மூவலூர். வேறு ஒருவராலும் வழங்கமுடியாத வீடுபேற்றை, மோட்சத்தை வழங்குபவர் எவரோ அவரே வள்ளல் எனப்படுவார். மற்றவர்க்குச் சொல்வதெல்லாம் உபசாரமே. சிவபெருமான் ஒருவரே வீடு அளிப்பவர் ஆதலின் இவர்க்கு வள்ளல் என்ற பெயர் வந்தது. அப்பாடல் காண்க.

கொள்ளும் காதன்மை பெய்துறும் கோல்வளை

உள்ளம் உள்கி உரைக்கும் திருப்பெயர்

வள்ளல் மாமயி லாடுது றைஉறை

வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே. -தி.5 .39 பா.1

அஞ்சொலாள்:

இத்தலக் குறுந்தொகை நான்காம் பாடலில் கொடிய கோபமுடைய காலன் நம்மிடம் வரமாட்டான். அஞ்சத்தக்க இறப்பும் பிறப்பும் அறுக்கலாம், எப்பொழுது? அஞ்சொலாள் உமை பங்கன் அருளில் காலனைக் கடக்கலாம், பிறப்பினையும் இறப்பினையும் அறுக்கலாம் என்று அருளியுள்ளார். அஞ்சொலாள்-அழகிய இனிய சொல்லை உடையவள் அம்மை. இதனைப் பின்னர் வந்தோர் அஞ்சலாள் எனக்கொண்டு இவ்வூர் அம்மை பெயரை "அபயாம்பிகை" என மொழி பெயர்த்தனர். எப்பெயரும் இறைவிக்கு ஏற்றதே. எனினும் உண்மை காண்டல் உலகினுக்கு இனியதே என்க.

நிலைமை சொல்லு:

கயிலாய நன்மலையன் மாமயிலாடுதுறையன் நம் தலையின் மேலும் மனத்துளும் தங்க நெஞ்சே தவம் என் செய்தாய்? நிலைமை சொல்லு என்று வினவுகிžர். அந்தப் பாடல் வருமாறு.

நிலைமை சொல்லுநெஞ் சேதவம் என்செய்தாய்

கலைக ளாயவல் லான்கயி லாயநன்

மலையன் மாமயி லாடு துறையன்நம்

தலையின் மேலும் மனத்துளும் தங்கவே -தி.5 .39 பா.6

குழலின் நேர்மொழி:

நான்காம் திருமுறையில் திருவாரூர்த் திருநேரிசையில் "குழல் வலம் கொண்ட சொல்லாள்" என்ற அரிய பிரயோகம் உள்ள பாடலை முன்பு கண்டோம். இங்கு ஐந்தாம் திருமுறையிலும் திருக்கழிப்பாலை "வண்ணமும் வடிவும்" என்ற பதிகத்தின் மூன்றாம் பாடலில் இரண்டாம் அடியில் "குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ" என்று குழலுக்கு ஒப்புமையாக அம்மையின் இனிய மொழியைக் குறிப்பிட்டுள்ளமை கண்டு மகிழலாம்.

தலைவாயில்

ஐந்தாம்  திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி..|.13 | 4 | 5 |