தலைவாயில்

ஐந்தாம்  திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி..| 2 | 3 | 4 | 5 |

குருபாதம

திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 26 ஆவது குருமகா சந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கியருளிய

ஆசியுரை

திருச்சிற்றம்பலம்

விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்

மண்ணி னார்மற வாதுசி வாயஎன்று

எண்ணி னார்க்கிட மாஎழில் வானகம்

பண்ணி னார்அவர் பாலைத் துறையரே.

-அப்பர் (தி.5 .51 பா.6)

அப்பர் ஒரு புரட்சியாளர்:

புரட்சி என்பது சீர்கெட்டுப் போனதை - மீண்டும் சீர்மைபெறச் செய்வதேயாகும். சுதந்திரமாக வாழ்ந்த இந்தியர்களை ஆங்கிலேயர் 150 ஆண்டுகட்கு மேலாக அடிமைப்படுத்தி ஆண்டு வந்தனர். சீர்கெட்டு நின்ற பாரத தேசந்தன்னை மீண்டும் சுதந்திரமாக வாழ்வதற்கு மகாத்மா காந்தியடிகள் போன்ற தலைவர்கள் பெரும் புரட்சி செய்தனர். மீண்டும் சுதந்திரப்பாதையில் இந்தியர்களை நடையிடச் செய்தனர். இதுவே புரட்சி. சீர்கெட்ட தனிமனிதரை அல்லது சமுதாயத்தை, அல்லது நாட்டை, செப்பஞ்செய்ய எடுக்கும் நடவடிக்கைக்கே புரட்சி என்ற பெயர் பொருந்தும். மக்களிடையே குழப்பம் விளைவிப்பதெல்லாம் புரட்சியாகாது.

இக்காலத்தில், புரட்சி செய்து தேசத்தைச் செம்மை செய்த மகாத்மா காந்தியடிகளைப் போல், அன்று கடமை செய்யத் தவறியோரைக் கடமை வழிச் செலுத்தி, செம்மை செய்த புரட்சியாளர் அப்பர் அடிகள்.

பகவத் கீதையில கண்ணபிரான் அருச்சுனற்குக் கடமையை உணர்த்தினார்.

"கர்மண்யேவ அதிகாரஸ்த்தே மாபலேஷு கதாசன"

என்பது கீதாசாரியன் வாக்கு. `அர்ச்சுனா, கர்மத்தைச் செய்வதற்குத்தான் உனக்கு அதிகாரம். அஃதாவது உரிமை உண்டே தவிர பலனைப் பற்றிக் கேட்க உனக்கு அதிகாரமில்லை. அஃதாவது உரிமை இல்லை' என்பது இதன்பொருள்.

இது துவாபர யுகத்தில் நடந்தது. இப்போது நடப்பதோ கலியுகம். இதற்கு ஏற்ப அதே தர்மத்தைச் சொல்லவேண்டும். எப்படிச் சொல்வது? அப்பர் அதே உரிமையைக் கடமை என்ற சொல்லால் புரட்சிகரமாகச் சொல்கிறார். அப்பாடல் காண்க.

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்

தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்

தன்க டன்அடி யேனையும் தாங்குதல்

என்க டன்பணி செய்து கிடப்பதே. -தி.5 .19 பா.9

`கடமையைச் செய்யத்தான் உனக்கு அதிகாரம். பலனைப் பற்றிக் கேட்க உனக்கு அதிகாரம் இல்லை. என்கின்றது கீதை.

ஆனால் கடமையைச் செய்பவனுக்கு அதற்குரிய பலனைப் பகவான் கொடுத்தே தீர்கிறார். அணு அளவுகூடக் குறைக்கமாட்டார். அக்கருத்து அர்ச்சுனற்குத் தெரியும்; உயர்ந்தோரானதால்; யுகமும் துவாபரயுகமானதால். இக்கருத்தைக் கலியுகத்தில் அப்பர் சுவாமிகள் புரட்சிகரமாகத் திருக்கடம்பூர்த் தேவாரத்தில் தெளிவாக விளக்குகிறார். கீதையில் கண்ணன் கர்மத்தைச் செய்யத்தான் அதிகாரம் என்று சொன்னார். அப்பர், உரிமை என்ற சொல்லையும் புரட்சிகரமாக மாற்றி, கடமை என்ற சொல்லாலேயே கடவுளின் கடமையையும், மக்களின் கடமையையும் குறிப்பிட்டுள்ளார். கடவுளின் கடமை மக்கட்கு உரிமையாய் விடுகிறது. மக்களின் கடமை கடவுளுக்கு உரிமையாகி விடுகிறது. உரிமைப் போராட்டத்திற்கே இடமில்லாமல் கடமை என்ற சொல்லாலேயே அவரவர்க்கு உள்ள உரிமையைக் கிடைக்கச் செய்துவிடுகிறார்.

இதை எல்லோரிடத்தும் வைத்துத் தெளிவு பெறலாம். முதலாளி செய்யும் கடமை தொழிலாளிக்கு உரிமை. தொழிலாளி செய்யும் கடமை முதலாளிக்கு உரிமை. கணவன் செய்யும் கடமை மனைவிக்கு உரிமை. மனைவி செய்யும் கடமை கணவனுக்கு உரிமை. பெற்றோர் செய்யும் கடமை மக்களுக்கு உரிமை. மக்கள் செய்யும் கடமை பெற்றோர்க்கு உரிமை. ஆசிரியர் செய்யும் கடமை மாணாக்கர்கட்கு உரிமை. மாணாக்கர் செய்யும் கடமை ஆசிரியர்கட்கு உரிமை. அரசு செய்யும் கடமை மக்கட்கு உரிமை. மக்கள் செய்யும் கடமை அரசுக்கு உரிமை. இறைவன் செய்யும் கடமை உயிர்கட்கெல்லாம் உரிமை. உயிர்கள் செய்யும் கடமை இறைவனுக்கு உரிமை. கடவுள் கடமையைச் சரியாகச் செய்துவிடுவார். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் காலத்தில் உதிப்பது கடவுளின் கடமை தவறாமையைக் காட்டுகிறது.

குறுந்தொகை யாப்பமைப்பு:

அப்பர் அருளிய ஐந்தாம் திருமுறைப் பதிகங்கள் நூறு. இந் நூறும் திருக்குறுந்தொகை எனப் போற்றப் பெறுவது. குறுந்தொகை என்பது யாப்பமைப்பால் பெற்ற பெயர். குறைந்த எழுத்துக்களைப் பெற்று அமைதலின் இப்பெயர் பெற்றது. இது நாற்சீர் நாலடியாய் வருவது.

சங்க இலக்கியங்களாகிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை எனப்பெயர் பெற்று விளங்குகிறது. இந்நூலில் நாலடிக்கு மேலும் பாக்கள் இருப்பினும் மற்ற சங்க நூல்களை நோக்கக் குறைந்த அடிகளைக் கொண்ட பாடல்களை இந்நூல் உடையதாகலின் அப்பெயர் பெற்றது. குறுந்தொகைப்பாடல்களின் முதற்சீர் தேமா, அல்லது புளிமா என்று அமையும். தேமா என்று தொடங்கும் அடி ஒற்று நீக்கிப் பதினொரு எழுத்துக்கள் கொண்டிருக்கும். புளிமா என்று தொடங்கும் அடி ஒற்று நீக்கிப் பன்னிரண்டு எழுத்துக்கள் கொண்டிருக்கும். எனவே குறுகிய எண்ணிக்கையுள்ள எழுத்துக் களைக் கொண்டுள்ள அடிகளையும், குறைந்த அடிகளைக்கொண்ட பாடல்களையும் கொண்ட நூல் குறுந்தொகை என்று அழைக்கப்பெற்று வருகிறது.

திருநாவுக்கரசர் இவ்வியாப்பமைப்பை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று சிந்திக்கும் பொழுது, ஒரு தலத்திலிருந்து பிறிதொரு தலத்திற்கு நடந்து செல்லும்பொழுதும், உழவாரத் திருத்தொண்டு செய்யும் பொழுதும் இவ்வியாப்பமைப்பு எளிமையாகப் பாட ஏற்றது எனக்கருதி அமைத்துக் கொண்டார் எனத் தோன்றுகிறது.

தில்லை பற்றிய முதல் பதிகம்:

ஐந்தாம் திருமுறையில் முதல் திருப்பதிகமாகத் திகழ்வது "அன்னம் பாலிக்கும் தில்லை" எனத் தொடங்குவதாகும். இப்பாடலில், `அன்னம்' என்று குறிப்பது சோற்றையும் வீடுபேற்றையும் குறிப்பதாகும். "பாதகமே சோறு பற்றியவா தோள் நோக்கம்" என்று திருவாசகம் வீட்டைச் சோறு எனக் குறிப்பிட்டிருத்தல் இக்கருத்துக்குச் சான்றாகத் திகழ்கிறது.

தரிசித்தால் முத்திதரும் தலம் தில்லை என்பதும் ஈண்டு கருதத்தக்கதாம். வீடுபேற்றைத் தரவல்ல நடராசப் பெருமான் எழுந்தருளியுள்ள தலம் தில்லைச் சிற்றம்பலம் என்பதை முதற்கண் கூறி, அடுத்துப் படிப்படியாகக் கீழிறங்கி வருகின்றார். அது பொன்னுலகமாகிய தேவலோகத்தையும் அளிக்கும்; மேலும் இப்பூவுலகில் என்னுடைய அன்பு விரிந்து பரவுதற்குரிய ஈர்ப்பு நிலை கொண்ட இச்சந்நிதானத்தில் வழிபடுவதற்கு ஏதுவாக இப்பிறவியை அளிக்குமோ? இல்லை வீடுபேற்றைத் தந்தருளுமோ? என்று வினா வடிவில் கேட்டுள்ளார். அம்மை, மறுமை, இம்மை என்ற மும்மைப் பேறும் அளிக்கவல்லது தில்லை என்பதையே இப்பாடல் குறிக்கின்றது, என்று கொள்ளலாம்.

நினைப்பவர் மனமே கோயில்:

தில்லைப் பெருமானைத் தொழுது உழவாரத்தொண்டு செய்திருந்த திருநாவுக்கரசர் திருவேட்களத்து ஈசரையும், திருக்கழிப்பாலை மணவாள நம்பியையும் வணங்கிப் போற்றிப் பாமாலை சூட்டித் தில்லை மீள்கிறார். மீளும் வழியில் வழிநடைப் பயணத்தில் "பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்" என்னும் பதிகம் பாடினார். இப்பாடலில் நினைப்பவர் மனத்தையே இறைவன் தாம் உறையும் கோயிலாகக் கொண்டுள்ளான் என்ற தத்துவத்தை விளக்கியுள்ளார். "உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்" என்ற திருமூலர் வாக்கும் நினைக்கத் தக்கதாகும். இறைவனது மாட்சிமைப்பட்ட திருவடிகளை அன்பால் இடையறாது நினைப்பவரது உள்ளத்தாமரையில் இறைவன் விரைந்து சேர்பவன் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார் -குறள் 3

என்பதே அக்குறள். இக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின்" ஏகினான் என இறந்த காலத்தாற் கூறினார் என்கிறார். இதனையே, "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" என்கிறார் அப்பர். அப்பாடல் காண்க.

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்

நினைப்ப வர்மனம் கோயிலாக் கொண்டவன்

அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்

தினைத்த னைப்பொழு தும்மறந்து உய்வனோ -தி.5 .2 பா.1

இமைப்பொழுதும் நம் நெஞ்சைவிட்டு நீங்காதிருக்கும் பரமனை (தி.5 .2. பா. 1-10) நாம் இமைப்பொழுதும் அவனை விட்டு நீங்காது நினைதல் வேண்டும் என்பதையே இத்திருப்பதிகம் நமக்கு நினைவூட்டுகிறது. நீதியை, ஆதியை, ஐயனை, அமுதை, அத்தனை, பித்தனை, கூத்தனை என்றும் மறவாது நினைந்து போற்றுவோம். என்றும் மகிழ்வோடு வாழ்வோம்.

தொழத்தக்கவன்:

"சிவ ஏகோத்தியேயகா" என்பது உபநிடத வாக்கியம். சிவபெருமான் ஒருவனே தியானிக்கத் தக்கவன் என்பது இதன்பொருள். தியானிக்கத் தக்கவன் சிவனே என்றால் தொழத் தக்கவனும் அவனே என்பது சொல்லாமலே விளங்கும். அக்கருத்தையே அப்பர், திருநெல்வாயிலரத்துறைத் திருக்குறுந் தொகைப் பதிகத்தின் (தி.5 .3 பா.1-10) ஒவ்வொரு பாடலிறுதியிலும் "அரத் துறைமேவிய, சுடருளானைக் கண்டீர் நாம் தொழுவதே. சுரும்பு ஒப்பானை, கரும்பு ஒப்பானை, சுரப்பு ஒப்பானை, கை ஒப்பானை, கதி ஒப்பானை, கனல் ஒப்பானை, தன் ஒப்பானை, ஊழியானை, நிலை ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே" என்று நாம் தொழுவது சிவபரம்பொருளையே. அவனையே தொழுது உய்மின்கள் என்று மன்பதைகளுக்கு அறிவுறுத்துகிறார்.

நினைத்தால் முத்தி தரும் தலம்:

நினைத்தால் முத்தி தரும் தலம் திருஅண்ணாமலை, "நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறைகோயில்" திருவண்ணாமலை என்கிறார் ஞானசம்பந்தர்.

அப்பர் தில்லைப் பெருமானை மறந்து உய்வனோ என்று பாடியவாறே அண்ணாமலைப் பெருமானையும் "இகழ்ந்தார் புரம் மூன்றையும் அட்டனை, ஆனனை, அத்தனை, ஆற்றனை, அன்னனை, ஆரனை, அருவனை, அருத்தனை, என் உடல் உறுநோய்களைத் துரக்கனைத் தொண்டனேன் மறந்து உய்வனோ என்கிறார். மறந்தார்க்குக் கதியில்லை. மறவாதே நினைந்தார்க்குத் தீங்குறும் விதியில்லை. எனவே அண்ணாமலையானை நினைவோம். கண்ணாரக் கண்டு தொழுவோம்.

எந்த மாதவம் செய்தனை:

திருவாரூர்ப் பெருமானைத் தொழுத திருநாவுக்கரசர், நெஞ்சைப் பார்த்துக் கேட்கிறார். பிறவி எடுத்துழலும் பெத்த காலத்தும், பிறவியற்ற முத்திக் காலத்தும் நம்முடனே மறைந்திருந்தே நலம் செய்பவன் ஆரூர் அரநெறிப் பெருமான். அவன் விளக்கமாக நம் சிந்தையுள்ளும், சிரத்துள்ளும் தங்குதற்கு நாம் எந்த அளவு தவம் செய்திருக்கிறோம் என்று ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும். பெருமான் நமது சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கியிருப்பதைச் சிறப்பாக உணர்ந்தவர்கள் தவம் செய்தவர்கள். அங்ஙனம் தவம் செய்யாதவர்களும் இப்பாடலை எண்ணிப் பார்க்கலாம். என்ன தவம் செய்தாய், செய்தால் அல்லவா இறைவன் நம் உள்ளத்தும் சிரத்தும் எழுந்தருள்வான்? என்று வினாவாகவும் அமைகிறது. இப்பாடல். அது வருமாறு.

எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே

பந்தம் வீடவை யாய பராபரன்

அந்தம் இல்புகழ் ஆரூர் அரநெறி

சிந்தை யுள்ளும் சிரத்துளும் தங்கவே -தி.5 .7 பா.2

இதே கருத்துள்ள, அப்பரின் திருச்சேறைத் திருக்குறுந்தொகைப் பாடலைக் கண்டு மகிழ்வோமாக.

என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே

மின்னு வார்சடை வேத விழுப்பொருள்

செந்நெ லார்வயல் சேறையுட் செந்நெறி

மன்னு சோதிநம் பால்வந்து வைகவே -தி.5 .77 பா.2

அம்மையாரைத் தந்தார்:

எம்மையராகிய தாய் தந்தையார் (இரு முது குரவர்) இலராயினர். யானும் வழி அறியாதவனாயினேன். இந்த நேரத்தில் எனக்கு அன்னை(எம்மையராக)யாக உறுதுணையாய் நின்றவர் உடன்பிறந்த திலகவதியம்மையார். அம்மையார் நமக்கு யார் என்று நைந்து அரற்றி நிற்பேனுக்குத் திலகவதியாராகிய அம்மையாரைப் பெருமான் எனக்குத் தந்தருளினார். இளமையில் அவரது சொல்லைக் கேளாது போயினும், தாயுள்ளம் படைத்த தமக்கையாரின் தவம்தான் என்னைக் கரையேற்றியது என்று நன்றியுணர்வோடு பாடுகிறார். அப்பாடல் காண்க.

எம்மை யாரிலை யானும் உளேனலேன்

எம்மை யாரும் இதுசெய வல்லரே

அம்மை யார்?எனக்க என்றென் றரற்றினேற்கு

அம்மை யாரைத்தந் தார்ஆரூர் ஐயரே -தி.5 .7 பா.6

இட்டமாக இருக்கும் இடம்:

திருமறைக்காட்டை விரும்பி உறையும் இடமாகக் கொண் டுள்ளார் சிவபெருமான். இங்குள்ள பெருமான் அஷ்ட புஷ்பம் என்னும் எண்மலர்களை வட்டமாகச் சுற்றிய சடைமிசைச் சூடியுள்ளார் என்கிறார். எண் மலர்களாவன: புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், நீலோத்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்பனவாம். இவ்வெட்டு மலர்களும் புறப்பூசையில் வழிபடற்கு உரியன. அகப்பூசைக்கு உரிய எண் மலரையும் நாம் தெரிந்து வழிபடல் நன்மை தருவதாம். அவையாவன: கொல்லாமை, அருள், பொறிஅடக்கல், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு என்பனவாம். அகப்பூசை செய்தே புறப்பூசை செய்தல் வேண்டும். புறப்பூசை மட்டும் பூசையாகாது.

பண்ணின் நேர் மொழியாள்:

திருமறைக் காட்டீசர் சந்நிதிக் கதவு மறைகளால் பூசிக்கப்பட்டு திருக்காப்பிடப்பட்டமையால், அன்று முதல் மக்கள் பக்கத்தில் ஓர் வழி வகுத்துப் பூசை புரிந்து வழிபட்டு வந்தனர். ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் எழுந்தருளியபோது இந்நிலை அறிந்த ஞானசம்பந்தர் நேரே கும்பிடத் திருவருளால் எண்ணினார். அப்பரைத் திறக்கப்பாடுக என்றார். அப்பர், "பண்ணின் நேர்மொழியாள்" என்ற திருப்பதிகம் பாடினார். பத்துப்பாடல்கள் பாடியும் கதவம் திறக்கவில்லை. கடைசிப் பாடலில் இரக்கம் ஒன்றிலீர் என்றபோது கதவம் திறந்தது. இதில் இவ்வூர் அம்மையின் பெயர் தூய தமிழில் "பண்ணின்நேர் மொழியாள்" என்று குறிக்கப்பட்டுள்ளது. யாழைப்பழித்த மொழியம்மை என்று தமிழிலும் "வீணாகானவிதூ ஷினி" என்று வடமொழியிலும் வழங்கி வருகின்றனர். அகச்சான்றாக உள்ள அப்பாடல் காண்க.

பண்ணின் நேர்மொழி யாள்உமை பங்கரோ

மண்ணி னார்வலம் செய்மறைக் காடரோ

கண்ணி னால்உமை காணக் கதவினைத்

திண்ண மாகத் திறந்தருள் செய்மினே -தி.5 . 10 பா.1

இளங்கோயில்:

பெருமான் எழுந்தருளியுள்ள கருவறை பழுதுற்றிருக்கு மானால் அப்பகுதியைச் செப்பம் செய்யவேண்டும். செப்பம் செய்யத் தொடங்குமுன், அத்திருமேனியில் எழுந்தருளியுள்ள பெருமான் திருவுருவை, பாலுள்ள பலா மா முதலிய பலகைகளில் எழுதி அல்லது அம் மரத்தாலாகிய திருவுருவத்தில் மூல லிங்கத்தை ஆவாகனம் செய்து திருப்பணி பூர்த்தியாகும் வரை புதிய திருவுருவத்தையே வழிபட்டு வரலாம். இப்படி ஆவாகனம் செய்வதே சிறு கும்பாபி ஷேகம் போலத்தான் ஆகும். எனவே இதனை இளங்கோயில் என்பர். இதனையே வடமொழியில் பால ஆலயம் என்பர். அப்பர் தூய தமிழில் இளங்கோயிலே என்று திருமீயச்சூர்ப் பெருமானைப் பாடுகின்றார். அப்பர் இத்தலத்திற்குச் சென்றபொழுது பெருமான் இளங்கோயிலில் எழுந்தருளி இருந்தமையால் அதையே பாடினார். பெருமான் இளங்கோயிலில் எழுந்தருளிய காலத்தும், கும்பாபிஷேகத்திற்காக வேள்விச் சாலைக்கு எழுந்தருளும் காலத்தும், ஒரு கலை மூலஸ்தானத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. மூலஸ்தானத்திலும் வழிபாடு செய்தலே முறையாகும். இளங்கோயில் பாடல் வருமாறு:

தோற்றும் கோயிலும் தோன்றிய கோயிலும்

வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்

கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்கு

ஏற்றம் கோயில்கண் டீர்இளங் கோயிலே -தி.5 .11 பா.1

இது இளங்கோயில் என்றதனால், மூலத்தானம் பழமையாகிய முதுகோயில் என்பது தெளிவாகப் புரியும்.

தலைவாயில்

ஐந்தாம்  திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி.. | 2 | 3 | 4 | 5 |