தலைவாயில்

ஐந்தாம்  திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி..|.1 | 2 | 3 | 5 |

பறப்பையும் பசுவும் படுத்து:

பறப்பை என்பதற்கு பறவை வடிவம் பொறித்த வேள்வித்தூண் என்பர். பசு-வேள்விப்பசு. படுத்து என்பதற்கு சிறந்த பொருளாகக் கொள்ளுதல் என்பர். வேள்வித்தீயின்கண் நெய்யைச் சொரிந்தும் வேள்விச்சாலையின்கண் பசுவிற்கு வாயுறை கொடுத்தும் ஆராதனை செய்து வேள்வியை நடத்தும் அந்தணர்வாழும் ஊர் திருவாஞ்சியம் என்கிறார் அப்பர். இக்கருத்துள்ள பாடல் காண்போம்.

பறப்பை யும்பசு வும்படுத் துப்பல

திறத்த வும்உடை யோர்திக ழும்பதி

கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர் தரு

சிறப்பு டைத்திரு வாஞ்சியம் சேர்மினே -தி.5 .67 பா.2

கறை பொருந்திய பிறை அணிந்தவர் என்ற குறிப்பு அரிய பிரயோகமாகக் காணப்படுகிறது. கண்ணுதற் பெருமான் எழுந்தருளியிருப்பதால் சிறப்புடையதாயிற்று திருவாஞ்சியம் என்னும் இத்தலம்.

நஞ்ச நெஞ்சர்க்கு அருளும் நள்ளாறர்.

திருநள்ளாற்று இறைவர் கொல்லும் தன்மை வாய்ந்த நஞ்சினைத்தன் கழுத்தில் கொண்டவர், வியத்தகு செயல்களினால் விளங்கும் ஞானச் செல்வியாகிய சிற்சக்திக்குக் கணவராய் உள்ளவர். இவர் வஞ்ச நெஞ்சத்தார்க்கு அருள் வழங்கமாட்டார். மனம் நைந்த நெஞ்சர்க்கே அருள்செய்வர். இவர் இருக்கும் இடம் திருநள்ளாறு என்கிறார். அப்பாடல் காண்க. நஞ்ச -நைந்த.

வஞ்ச நஞ்சிற் பொலிகின்ற கண்டத்தர்

விஞ்சை யின்செல்வப் பாவைக்கு வேந்தனார்

வஞ்ச நெஞ்சத் தவர்க்கு வழிகொடார்

நஞ்ச நெஞ்சர்க்கு அருளும்நள் ளாறரே. -தி.5 .68 பா.7

இடர், துன்பம், துயர்:

வெப்புநோயும் பிறவிநோயும் வறுமைநோயும் கொண்டீச்சுரவனை இடைவிடாது வழிபடுவார்க்கு இல்லை என்கிறது திருக்கொண்டீச்சுவரம் பாடல். மேலும் துன்பமும், துயரும், அவற்றிற்கு ஏதுவாகிய வினையும் இல்லை என்கிறார். துன்பம், துயரம், இடர் என்பன துன்பமே ஆயினும், ஒன்றிற்கொன்று வேறுபாடுண்டு, துன்பம் என்பது உடலைப் பற்றியது, துயரம் என்பது மனத்தைப்பற்றியது. இடர் என்பது பிறவித்துன்பத்தைக் குறிப்பது என்பர். இவையெல்லாம் கொண்டீச்சுரவனைப் போற்றுவார்க் கில்லையாம்.

வெம்பு நோயும் இடரும் வெறுமையும்

துன்பமும் துயரும் எனும் சூழ்வினை

கொம்பனார் பயில் கொண்டீச் சுரவனை

`எம்பி ரான்'என வல்லவர்க்கு இல்லையே -தி.5 .70 பா.6

திருவிசயமங்கை:

திருவிசயமங்கை என்பது காவிரியின் வடகரைத்தலங்கள் 63இல் ஒன்று. இது கொள்ளிடத்தின் தென்கரையில் திருவைகா வூருக்கு அண்மையில் சிறு கோயிலாக உள்ளது. இதுவே பாடல்பெற்ற விசயமங்கை என்பர். இதனை விசமூங்கி என மருவி அழைக் கின்றனர். கொள்ளிடத்தின் வடகரையில் ஜெயங் கொண்ட சோழபுரத்தின் தென்மேற்கே உள்ளதுதான் பாடல்பெற்றது என்று அங்குள்ளோர் கூறுகின்றனர். இரண்டில் கொள்ளிடத்தின் வடகரையில் உள்ளதே பாடல்பெற்றது என்பதில் ஐயமில்லை. இவ்வூரைப்பற்றி அப்பர் திருக்குறுந்தொகையில், "கொள்ளிடக்கரை கோவந்தபுத்தூர்" என்று குறிப்பிட்டுள்ளமையும், பசு பூசித்த வரலாற்று உண்மையுமே இதனை வலியுறுத்துகின்றன. இன்று கோவிந்தபுத்தூர் என மருவி வழங்குகிறது.

பிரம்மாவும் சிவபிரானைப் போல ஐந்து தலை உள்ளவனாக ஒருகாலத்திருந்தான். அவன், தானும் சிவபெருமானும் ஒன்றே என்று கூறிச் செருக்குற்றான். அப்போது பெருமான், பைரவரை அனுப்பி, பிரம்மனின் நடுத்தலை - உச்சித்தலையைக் கிள்ளி எடுக்கச் செய்தான் என்பது வரலாறு. அது இப்பாடலில் குறிக்கப்படுகிறது. கோவிற்கும், விசயனுக்கும் அருள் செய்த வரலாறு குறிக்கப்படுவதால் இதுவே கோவந்தபுத்தூராகிய விசயமங்கை எனப்பெறுகிறது. மேலும் பாண்டுவின் மகனாகிய அர்ச்சுனன் பணி செய்து, வேண்டிய வரங்களைப் பெற்றான் என்பதும், இப்பதிகத்தின் எட்டாவது பாடலில் காணப்படுகிறது. விசயனாகிய அர்ச்சுனன் பூசித்துப் பேறு பெற்றமையால் இப்பேர் பெற்றது. அப்பாடல் காண்க.

பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து

வேண்டும் நல்வரம் கொள்விச யமங்கை

ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால்

காண்ட லேகருத் தாகி யிருப்பனே -தி.5 .71 பா.8

வந்து கேண்மின்:

மக்களைப் பல கோணங்களில் அழைத்து அறம் உரைக்கும் திறன் அப்பர் வாழ்வில் அளப்பிலவாம். "மனிதர்காள் இங்கே வம் ஒன்று சொல்லுகேன்" "நம்புவீர் இது கேண்மின்கள்" "பாருளீர் இது கேண்மின்" போன்றன சில எடுத்துக்காட்டுக்கள்.

இந்த அமைப்பில் விசயமங்கையிலும் ஓர் அழைப்பு விடுக்கிறார். வந்து கேண்மின், மயல் தீர் மனிதர்காள் என்று அழைக்கிறார். விசயமங்கையில் உள்ள நம் எளிய தலைவன், நமது சிந்தையில் நினைவார்களைச் சிக்கெனப் பிடித்து, தன் பந்துவாக்கி, உய்யக்கொள்வான் என்கிறார். அப்பாடல்:

வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள்

வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான்

சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப்

பந்து ஆக்கி உயக்கொளும் காண்மினே -தி.5 .71பா.9

உள்ளங்கை - நெல்லிக்கனி:

உள்ளங்கை நெல்லிக்கனி என்பது தமிழ்நாட்டுப் பழமொழிகளுள் ஒன்று. தப்பாமல் கிடைத்தே தீரும் என்பதற்கு இப்பழமொழி கூறப்படுகிறது. புறநானூறும் "கையகத்தது அது பொய் ஆகாதே" எனக்கூறுகிறது. "சிற்றம்பலத்தனைத் தலையால் வணங்குவார் தலையானார்களே" (தி.1 .80 பா.7) என்பதும் இக்கருத்தே பற்றியது.

"தலையால் வணங்குவார் தலையாவார்களே" என்று எதிர்காலத்தால் கூறவேண்டும். உறுதிபற்றி இறந்த காலத்தாற் கூறினார் ஞானசம்பந்தர். அதைப்போல் மையலுற்று மறந்துவிடாமல் நினைப்பவர்க்கெல்லாம் நிச்சயமாக கையில் ஆமலகக்கனி ஒக்குமே என்று அருளியுள்ளார் அப்பர். ஆமலகக்கனி - அருநெல்லிக்கனி. அப் பாடலைக் காண்போம்.

செய்ய மேனியன், தேனொடு பால்தயிர்

நெய்அது ஆடிய நீலக் குடிஅரன்

மையல் ஆய்மற வாமனத் தார்க்குஎலாம்

கையில் ஆமல கக்கனி ஒக்குமே. -தி.5 .72 பா.2

மையல் -அன்பு.

கல்லினோடு - எனைப் - பூட்டி:

கல்துணைப்பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் என்பது எதிர்காலத்தின் குறிப்பு. எனவே கல்லுடன் இணைத்துக் கடலில் இடவில்லை என்பர் சிலர். அக்கூற்றை அடியோடு அகற்றுதற்கு இதோ ஓர் அகச்சான்று கூறுகிறார் அப்பர் தம் பாடலில்.

கல்லி னோடுஎனைப் பூட்டி அமண்கையர்

ஒல்லை நீர்புக நூக்கஎன் வாக்கினால்

நெல்லு நீள்வயல் நீலக் குடிஅரன்

நல்ல நாமம் நவிற்றிஉய்ந் தேன்அன்றே. -தி.5 .72 பா.7

திருமங்கலக்குடி:

இத்தலம், ஒரு சுமங்கலியின் மங்கல நாண் காத்து மங்கலம் வழங்கியமையால் திருமங்கலக்குடி எனப்பெயர் பெற்றது. சூரியனார் கோயிலில் உள்ள நவக்கிரகங்கட்கு அருள் செய்த பெருமான் இத்தலத்து இறைவனே. இவரை வணங்கிய பின்னரே சூரியனார் கோயிலை வணங்குதல் முறையாகும். அதுவே பலன்பெறும் வழியுமாகும். இத்தலம் செழுமையானது. செல்வவளம் நிறைந்தது. சிவவேதியர்கள் சிவ நியமத்துடன் வழிபாடு நிகழ்த்துபவர்கள். அவர்களை செல்வமல்கு செழுமறையோர் என்கிறார் அப்பர். மறையோர் தொழுமாறு சிவபெருமான் தேவியோடும் விளங்கும் கோயில் என்கிறார். அப்பாடல் காண்க.

செல்வம் மல்கு திருமங் கலக்குடி

செல்வம் மல்கு சிவநிய மத்தராய்

செல்வம் மல்கு செழுமறை யோர்தொழச்

செல்வன் தேவியொ டும்திகழ் கோயிலே. -தி.5 .73 பா.5

ஊர்தொறும் எறும்பியூர் ஈசன்:

பல ஊர்களிலும் பல கோயில்கள் உள்ளன. அங்குள்ள திருவுருவங்களில் இருந்து அருள் செய்பவன் ஒருவனே. அவ்வீசன் எறும்பியூரில் இருப்பவனே என்கிறார் அப்பர். இது கடவுள் ஒருவரே என்ற தத்துவத்தை இனிதாக விளக்குகிறது. மேலும், பல தலத்தும் கயிலாய நாதனையே காணலாமே என்பது அப்பர் அருள்மொழி. பேரும், ஊரும், உருவமும் பலவாயினும் அதனுள் இருந்து அருள்புரியும் இறைவன் ஒருவனே என்ற தத்துவ உண்மையை இப்பாடல்கள் வலியுறுத்துகின்றன.

"வான் உறும் பொன்மால்வரைப் பேதையொடு ஊர்தொறும்

எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே" -தி.5 .74 பா.5

என்பது அப்பர் கூறும் எடுத்துக்காட்டு.

மேலும் இன்பமும் பிறப்பும், துன்பமும் இறப்பும் உடனே வைத்த சோதி வடிவினன் எறும்பியூர் இறைவன் என்றவர், அன்பனே அரனே என்று அரற்றுவார்க்கு இன்பனாவன் என்கிறார். இறை உணர்வுடன் இறைவன் நாமத்தைச் சொன்னால் துன்பம் தோன்றாது இன்பமே தோன்றும் என்று அனுபவம் கூறுகிறார். அப்பாடலைக் காண்போம்.

இன்ப மும்பிறப் பும்,இறப் பி(ன்)னொடு,

துன்ப மும்உட னேவைத்த சோதியான்

அன்ப னேஅர னேஎன்று அரற்றுவார்க்கு

இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே -தி.5 .74 பா.8

மேலும் இப்பாடற் கருத்து துன்பத்தைக் கண்டு துவளக்கூடாது. துன்பம் தான் நம்மிடம் உள்ள அழுக்கைப் போக்கித் தூய்மை செய்வது. நாம் தூய்மை அடைய அடைய இன்பமே எந்நாளும் பெறலாம்.

அப்பனார் உளர் அஞ்சுவது ஏன்:

ஒழுங்காகச் சிவநெறி பற்றி நின்றால் எந்த இடர்ப்பாடும் நம்மை ஒன்றும் செய்யாது. பிராரத்த வினை வழிப் பல இன்னல்கள் வந்தாலும் அவை உடல் ஊழாய்க் கழியுமே தவிர உயிரைப் பாதிக்காது. மலையே வந்து விழினும் மனிதர்களே அஞ்சாதீர். கொலைசெய் யானையாயினும் அடியவரை ஒன்றும் செய்யாது என்பதையும் தம் அனுபவ வாயிலாக அறிவிக்கின்றார். வானம் மழை பொழியாது பஞ்சம் ஏற்படினும், பூகம்பம் ஏற்படினும் பெருவேந்தர்கள் பலர் சேர்ந்து சீறினாலும் சேறைச் செந்நெறி அப்பனாரை உறுதியாகப் பற்றிவிட்டால் அவர் நம்மைக் காப்பார். அஞ்சவேண்டாம் என அபயம் தருகிறார். அப்பாடல் காண்க.

தப்பி வானம், தரணிகம் பிக்கில்என்?

ஒப்புஇல் வேந்தர் ஒருங்குஉடன் சீறில்என்?

செப்பம் ஆம்சேறைச் செந்நெறி மேவிய

அப்ப னார்உளர்; அஞ்சுவது என்னுக்கே? -தி.5 .77 பா.6

புள்ளிருக்கு வேளூர் அரன்:

இத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் பவரோக வைத்திய நாதன். பவம் - பிறப்பு பிறவி நோயைத் தீர்ப்பவர். எனவே உடல்நோய்களையும் தீர்ப்பவர் என்பதைச் சொல்ல வேண்டிய தில்லை. இப்பெருமானை நினையாதவர் நரகு எய்துவர் என்கிறார். கூற்றுவனின் சீற்றம் தேய்த்து அருளும் வேளூர்ப் பெருமானை நினைந்து உருகுவோர் உள்ளம் குளிரும். பிறவித் துன்பம் இல்லை. இன்பம் பெருகும். பாவம் பறையும். பெருமானை மெல்ல உள்க வினை கெடும். எல்லாவிதத் துன்பங்களையும் போக்கி, எல்லாவற்றிற்கும் மேலான மோட்சத்தை இவனன்றி யாரும் வழங்க இயலாது என்பதாலேயே வள்ளல் என்ற பெயர் இவரையே சாரும். வள்ளல் பாதம் வணங்கித் தொழுதால் இகத்தில் எல்லா நலன்களும் பெற்று பரத்தில் வீடு பேறு அடையலாம் எனக் குறிப்பிடுகிறார். அப்பாடல்:

உள்ளம் உள்கி உகந்து, சிவன்என்று

மெள்ள உள்க வினைகெடும்; மெய்ம்மையே

புள்ளி னார்பணி புள்ளிருக்கு வேளூர்

வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே! -தி.5 .79 பா.8

வானோர் வலம் கொள்வர்:

அன்பில் ஆலந்துறையில் எழுந்தருளியிருக்கும் பெருமானை வலம் வந்து வழிபடுவோரை வானோர் வலம் செய்து வழிபடுவர் என்கிறார் அப்பர். உண்மைத் தொண்டர்களை உலகம் போற்றுகிறது. அதுபோல் நல்ல உள்ளத்துடன் ஆர்வத்தை உள்ளே வைத்து வழிபடுவோரைத் தேவரும் வழிபடுவது இறையருளால் நிகழ்வது. அப்பர் நாலாந் திருமுறையிலும் இக்கருத்தை "தன்னைத், தொழப் படும் தேவர் தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே" என்று குறிப்பிட்டுள்ளமையை ஒப்புநோக்கி மகிழலாம்.

இலங்கை வேந்தன் இருபது தோள்இற்று

மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன்

அலங்கல் எம்பிரான், அன்பில் ஆலந்துறை

வலம்கொள் வாரைவா னோர்வலம் கொள்வரே. -தி.5 .80 பா.10

கைகண்ட யோகம்:

நன்று நகு நாண்மலரால் நல் இருக்கு மந்திரம் கொண்டு ஒன்றி வழிபாடு செய்வாரை உயர்கதிக்கு ஏற்றுபவன் சிவன். இது ஞான சம்பந்தர் வாக்கு. அப்பரும் அதே கருத்தைப் பாண்டிக்கொடுமுடித் திருக்குறுந்தொகைப் பாடலில் குறிப்பிடுகிறார். வானவர்கள் எல்லாம் நெருங்கி வந்து பாண்டிக்கொடுமுடி ஈசனை இருக்கு வேத மந்திரம் கொண்டு வழிபடுகின்றனர். அப்பெருமானை ஏழை அடியார்கள் திருக்கொடுமுடி என்று சொன்னவுடனேயே தீய வினைகளும் பிறவிக்கு ஏதுவாகிய கருவும் கெடும் என்கிறார். தீவினை கெடும் எனவே நல்வினையும் கெடும் என்பது பெற்றாம். இருவினையும் பிறவிக்கு வித்தாம். இருவினை அற்றால் பிறவிக்கு ஏதுவாகிய கருக்கெடும் என்று அருளியுள்ளார். இது கைகண்ட யோகம் என்றும் வலியுறுத்திக் கூறுகிறார்.

நெருக்கி அம்முடி நின்றுஇசை வானவர்

இருக்கொ டும்பணிந்து ஏத்த இருந்தவன்

திருக்கொ டுமுடி என்றலும் தீவினைக்

கருக்கெ டும்இது கைகண்ட யோகமே. - தி.5 .81 பா.5.

வான்மியூர் ஈசன் வண்மை:

வான்மியூர் ஈசன் அடிதொழுவார் செய்த பாவம் பறைந்திடும். ஆதியே என்று தொழுவாரது மருளை அறுத்திடும். எந்தை ஈசன் என்று ஏத்துவார் முன் வந்து நிற்பன் வான்மியூர் ஈசன், ஆனால் உள்ளம் உள்கலந்து ஏத்துவார்க்கே இப்படி அருள்செய்வான். கள்ளம் உள்ளவர்க்குக் கசிவான் அல்லன். எல்லா நலன்களும் அருளும் வள்ளலாய் இருந்தும் வஞ்சகருக்கு அருள்செய்யான் என்றும் குறிப்பிடுகின்றார். தொழுதெழுவார் வினை மடங்க நின்றிடும். "அஞ்சி நாண்மலர் தூவி அழுவாரானால் நம் உள்ளத்தில் பெருமானை நினைக்க வொட்டாமல் தடை செய்கின்ற வஞ்சனையையே தீர்த்து அருள் செய்பவர். பாதிப்பெண்ணுருவாய பரமனே என்று ஓதி உள்குழைந்து ஏத்த வல்லவர்களின் வாதைகளைத் தீர்த்திடுவார் வான்மியூர் ஈசன். வாட்டம் தீர்த்திடுவார். கயிலை மலையை எடுத்த இராவணனே ஆர்வமாக அழைத்துத் துதித்தலும் பெருமான் வாரமாய் வரம் அருளினன் என்கிறார். அப்பதிகத்தின் ஒரு பாடல் காண்போம்.

உள்ளம் உள்கலந்து ஏத்தவல் லார்க்குஅலால்

கள்ளம் உள்ளவ ழிக்கசி வான்அலன்

வெள்ள மும்அர வும்விர வும்சடை

வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே. -தி.5 .82 பா.4

வாழ்த்தலே வாழ்வாம்:

எல்லா நலங்களையும் வழங்குபவன் ஈசன் ஒருவனே. மற்றையோர் ஒவ்வொன்றையே கொடுக்க இயலும். அதனால்தான் சிவபெருமானை வள்ளல் என்று நமது சமயாசாரியர்கள் கூறிப்போந்தனர். இங்கும் அப்பர் திருமணஞ்சேரி வள்ளலை வாழ்த்துவதே வாழ்வாவது என்று அருளுகிறார். நமது வாழ்விற்கே முதலாக இருப்பவர் அவராதலின் அவரை வாழ்த்தாத வாழ்வு வாழ்வாகாது. அதனால்தான் மணிவாசகரும் திருப்பள்ளியெழுச்சி முதல் பாடலில் "போற்றி என்வாழ்முதலாகிய பொருளே" என்று போற்றினார். அதனையே வேறு ஒருவகையில் அப்பர் போற்றுகிறார்.

துள்ளு மான்மறி தூமழு வாளினர்

வெள்ள நீர்கரந் தார்சடை மேல்அவர்

அள்ளல் ஆர்வயல் சூழ் மணஞ் சேரிஎம்

வள்ள லார்கழல் வாழ்த்தல்வாழ்வு ஆவதே. -தி.5 .87 பா.5

மேலும் ஞானசம்பந்தர் அருளிய "தோடுடைய செவியன்" என்ற பதிகத்தில் மூன்றாம் பாடலின் (தி.1 .1 பா.3) சொற்றொடர் அமைந்த பாடல் ஒன்றும் இப்பதிகத்தில் காணலாம்.

நீர் பரந்த நிமிர்புன் சடையின்மேல்

ஊர் பரந்த உரகம் அணிபவர்

சீர் பரந்த திருமணஞ் சேரியார்

ஏர் பரந்துஅங்கு இலங்கு சூலத்தரே. -தி.5 .87 பா.6

ஈசன் இணையடி:

மாசில் வீணை காதிற்கு இன்பம். மாலை மதியம் கண்ணிற்கின்பம். வீசு தென்றல் மூக்கிற்கு நறுமணம் சேர்த்து இன்பம் நல்கும். வண்டு அறை பொய்கை நாவிற்கு இன்பம். (நீரினால்) இளவேனில் மெய் உடலுக்கு இன்பம். இவ்வாறு ஐம்பொறிகளாகிய மெய்,வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளின் வாயிலாக சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புல இன்பம் நுகர்தல் உலகியல். இதேபோன்று பொறி புலன் இன்றி உயிர் நேரே அனுபவிக்கும் இன்பமே இறையின்பம். சிற்றின்பம் சிறுகாலை இன்பம். பேரின்பம் - என்றும் மாறுபாடு இல்லாது நிலைத்திருப்பது. அதற்கு உலகியல் சிற்றின்பங்களைக் காட்டித்தான் சாதாரண மக்கட்கு இறை இன்பத்தை உணர்த்த இயலும். அந்தமுறையில் அப்பர் நீற்றறையில் தாம் அனுபவித்த இறையின்பத்தை உலகியலோடு இணைத்துச் சுவைபட அருளியுள்ளமை அறிந்து இன்புறத்தக்கது. அப்பாடல் வருமாறு.

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே. -தி.5 .90 பா.1

தலைவாயில்

ஐந்தாம்  திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி..|.1 | 2 | 3 | 5 |