தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை - 2 தொடர்ச்சி... | 1 | 24 |

 

பொருள் வகை:

தத்துவ சாத்திரங்களில் முதற்கண் பொருள் உண்மையும், பின் னர் அப்பொருள்களின் இயல்பும் கூறப்படும். இவை இரண்டு கருத்து களில் சமயங்கள் தம்முள் மாறுபடும்.

உலகாயதம், `உலகமே உண்டு; ஏனைய, உயிர் கடவுள் முதலிய எவையும் இல்லை' என்று கூறும்.

மீமாஞ்சகம், சாங்கியம் முதலியன, `உலகமும் உயிரும் உண்டு: கடவுள் இல்லை' என்று கூறும்.

ஏகான்மவாதம், `கடவுள் ஒன்றே உண்டு; ஏனைய உலகம் உயிர் எதுவும் இல்லை' என்று கூறும்.

இவைகள் பிறகொள்கையை மறுத்துத் தம் கொள்கையை நிலைநாட்டுதற்குக் கூறும் வாதங்களால் மயங்காது, `பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களும் என்றும் உள்ளன' என்று உணர்வதே மெய்யறிவு.

அதனை, நாவுக்கரசர் தமது அநுபவத்தினின்றும் எடுத்தருளிச் செய்தலை மேற்காட்டினோம்.

இறையியல்பு:

இனி முப்பொருளின் தன்மைகளை வேறு வேறு வகையாகக் கூறும் சமயங்களும் உள்ளன அவற்றுள், `கடவுளுக்கும் பிறப்பு உண்டு' என்று கூறுவது பாஞ்சாரத்திரம்.

ஞான நோக்கு உடையார்க்கு, இழிவுகளில் எல்லாம் பேரிழி வாகத் தோன்றுவது உடம்பும், துன்பங்களில் எல்லாம் பெருந் துன்பமாகத் தோன்றுவது பிறப்பும், அவை நீங்குதற்கு வாயிலாக அவர் காண்பது, அவ்விழிவும் துன்பமும் சிறிதும் இல்லாது, பெருந்தூய்மையும், பேரின்பமுமே வடிவாய் உள்ள இறைவனை அடைதலுமேயாய் இருக்க, அவை எல்லாவற்றையும் மறந்து, அப்பேரிழிவும் பெருந்துன்பமும் கடவுளுக்கும் உள்ளன என்று கூறும் விபரீத ஞானத்தை, அப்பரடிகள்,

"செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று

 பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ"   (தி. 5 . 100 பா. 2)

என்று மிக வன்மையாகக் கடிந்தருளுகின்றார் கடவுளுக்கும் அக் குறைபாடுள்ளனவாக, மாயோன் தனது நூலுட் கூறினானாயின், அவ னது எத்துணையோ மாயங்களில் அதுவும் ஒன்றென்று கொள்ளல் வேண்டும் என்பதை,

தாயி னும்நல்ல சங்கர னுக்கன்ப

ராய வுள்ளத் தமுதருந் தப்பெறார்

பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய

மாயன் மாயத்துட் பட்ட மனத்தரே.         (தி. 5. . 100. பா. 9)

என விளக்கியருளினார் சிவபிரானது பிறப்பிறப்பில்லாத நிலையை அப்பர் பெருமான் பலவாறு எடுத்தோதிப் புகழ்தலை, அவரது திரு முறையிற்பல இடங்களில் காணலாம்.

இனி, புத்த சமண மதங்கள், பந்தத்துள் அகப்பட்டிருந்தது முத லில் வீடு பெற்ற ஒருவன்தான், கடவுள் எனப்படுகின்றான் எனக் கூறும் இக்கொள்கையில் சமண சமயம் மிகச் சிறந்து நிற்பது அது பற்றி, கடவுளை, பொறிவாயில் ஐந்தவித்தான் என்று கூறினமையால், திருவள்ளுவரும் சமணரே எனவாதிப்பாரும் உளர்.

இறைவன் எஞ்ஞான்றும் பந்தத்துட்படாதவன் என்று கூறும் சைவசமயம். அதனை இரு வகையில் வைத்துக் காட்டும்; ஒன்று இயல்பாகவே பாசங்கள் இல்லாத நிலை; மற்றொன்று பாசங் களையுடைய உயிர்களோடும், பாசங்களோடும் இரண்டறக் கலந்து நிற்பினும், அவற்றின் தன்மையால் தன் தன்மை சிறிதும் மாறாத நிலை.

இவற்றுள், முதலில் உள்ள நிலையை, நாயனார், தூயன், நின் மலன், விமலன், அமலன் முதலிய சொற்களாலும், பிறவாற்றாலும் விளக்கி, இரண்டாவது உள்ள நிலையை,

"துறவாதே கட்டறுத்த சோதி யானை"     (தி. 6. . 11. பா. 1)

"நேரிழையைக் கலந்திருந்தே புலன்க ளைந்தும் வென்றானை" (தி. 6 . 50. பா. 3)

என்றாற்போலும் திருமொழிகளால் விளக்கியருள்வர்.

இரண்டாவதாகக் குறிக்கப்பட்ட நிலையையே, திருவள்ளுவ நாயனார், "பொறிவாயில் ஐந்தவித்தான்" எனக் குறித்தார். ஆதலின், அது பற்றி அவர் சமணராதல் இல்லை.

அன்றியும், முதலிற்குறித்த இயல்பாகவே பாசங்களின் நீங்கு தலை, "வாலறிவன்" என்றும், "வேண்டுதல் வேண்டாமை இலான்" என்றும் அவர் முன்பே கூறிப் போந்தமையால், பின்னர் வந்து கூறிய, "பொறிவாயில் ஐந்தவித்தான்" என்பது, அவரைச் சமணராக்க முயல் வோர்க்கு ஒரு பயனையும் தராது.

இனி, சூரியன் அக்கினி முதலிய பொருள்களையோ, அவற் றிற்கு முதல்வராய தேவர்களையோ கடவுளர் என்றும், முதற் கடவுள் என்றும் கூறும் பல தெய்வக் கொள்கை, பிற தெய்வக் கொள்கை ஆகிய அனைத்தையும் நாவுக்கரசர் விலக்கி, சிவபெருமானது முழு முதற் றன்மையை இனிதுணர்த்துகின்றார்.

"அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்

 அருக்க னாவான் அரனுரு வல்லனோ" (தி. 5 . 100. பா. 8)

"எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசன

 துருவ ருக்கம தாவ துணர்கிலார்"            (தி. 5 . 100. பா. 7)

இன்னும், இலிங்க புராணத் திருக்குறுந்தொகை, `தொழற் பாலதே' என்னும் திருக்குறுந்தொகை முதலியவற்றால் சிவபிரானது முதன்மையை நாயனார் பலவாற்றாலும் விளக்கியுள்ளார்.

"மற்றெல்லாரையும் விடுத்துத் தியானிக்கப்படத் தக்கவன் சிவன் ஒருவனே" என்னும் அதர்வசிகோப நிடதத்தின் பொருள் `தொழற் பாலதே' என்னும் திருக்குறுந்தொகையில் அமைந்துள்ளது.

`சிவபிரான், முழுமுதல் தன்மையாகிய பேராற்றலேயன்றிப் பெருங்கருணையையும் உடையவன்' என்பதை விளக்க, அவன் அமரர்க்காக நஞ்சுண்டமை, திரிபுரம் எரித்தமை, மார்க்கண்டேயருக் காகக் காலனை உதைத்தமை, அருச்சுனனைக் காக்க வேடனாகச் சென்றமை முதலிய வரலாறுகளைப் பலவிடத்தும் பாராட்டி அருளிச் செய்கின்றார்.

இன்னும், அவன் உயிர்கள் செய்யும் பிழைக்காக முன்பு சிறிது ஒறுத்தலைச் செய்யினும், பின்பு அப்பிழையை உணர்ந்து தன்னை அடையின், மனம் இரங்கி அருளுதலைக் குறிக்க இராவணனுக்கு அருள்செய்த வரலாற்றை ஒவ்வொரு திருப்பதிகத்தின் இறுதிப் பாடல்களிலும் அருளிச் செய்வார்.  "ஆறாத ஆனந்தத் தடியார் செய்த அனாசாரம் பொறுத்தருளி அவர்மேல் என்றும் - சீறாத பெருமான்" (தி. 6. . 80. பா. 5) என்பதைவிடச் சிவபெருமானது கருணைத் திறத்தை விளக்கும் சிறந்த தொடர் வேண்டாவன்றோ!

சிவபிரானுடைய பெருமைகள் பலவற்றையும் பல்லாற்றானும் விரித்தோதும் சிவபுராணங்கள் சிறப்புடையன என்பதை வலியுறுத் துதற்கு, தசபுராணத் திருப்பதிகத்தை அருளிச் செய்தார். இலிங்க புராணத்திற்கு மட்டும் ஒரு தனித்திருப்பதிகமே ஐந்தாந் திருமுறையில் உள்ளது என்பதை, மேற்கூறினோம்.

இனி, இறைவன் உயிர்களோடும் உலகத்தோடும் வேறறக் கலந்து நிற்றலை, அத்துவித சம்பந்தம் என்றும், `அஃது ஒன்றாய் வேறாய் உடனாய் இருத்தல்' என்றும் சாத்திரம் கூறும்.

ஒன்றாய் இருக்கும் நிலை பெரும்பான்மையாகப் பலவிடத்தும் கூறப்படுதல் காணலாம். சிறப்பாக, நின்ற திருத்தாண்டகம் அதனையே விரித்தோதுகின்றது இவ் வொன்றாம் நிலையை, `அட்ட மூர்த்தம்' எனக் கொண்டு போற்றி வருதல், சைவ சமயத்தின் தொன்றுதொட்ட மரபு அதனை நின்ற திருத்தாண்டகத்தின் தொடக்கத்தே,

"இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி

               இயமான னாய்எறியுங் காற்று மாகி

 அருநிலைய திங்களாய் ஞாயி றாகி

               ஆகாச மாய்அட்ட மூர்த்தி யாகி"          

(தி. 6 . 94. பா. 1)

என இனிது விளங்க அருளிச் செய்தார் வேறாய் இருத்தலை,

"விரிகதிர் ஞாயி றல்லர் மதியல்லர் வேத

               விதியல்லர் விண்ணும் நிலனும்

 திரிதரு வாயு வல்லர் செறுதீயு மல்லர்

               தெளிநீரு மல்லர்"          (தி. 4. . 8. பா. 2)

"மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை

               மலையல்லை கடலல்லை வாயு வல்லை

 எண்ணல்லை எழுத்தல்லை எரியு மல்லை

               இரவல்லை பகலல்லை யாவு மல்லை"

    (தி. 6. . 45. பா. 9)

போன்றவற்றில் அருளியிருத்தல் காணலாம் உடனாய் இருத்தலை,

"அசிர்ப்பெனும் அருந்தவத்தால் ஆன்மாவி னிடம தாகி

  உசிர்ப்பெனும் உணர்வு முள்ளார் ஒற்றியூ ருடைய கோவே"

(தி. 4 . 45. பா. 2)

"................ நினைக்குமா நினைக்கின் றார்க்

 குணர்வினோ டிருப்பர் போலும் ஒற்றியூ டைய கோவே"

(தி. 4. . 45. பா. 7)

"தானும் யானும் ஆகின்ற தன்மையனை" (தி. 6 . 98. பா.7)

என்றாற் போல்வனவற்றால் உணர வைத்தருள்வார்.

`இறைவன் உலகுயிர்களோடு ஒன்றாய் வேறாய் உடனாய் இருந்து செய்வன ஐந்தொழில்கள்' என்பதும், `அவை, `படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்' என்பன' என்பதும் சைவத்தின் கொள்கைகள்.

அவற்றுள், யாவரும் அறிந்த நிலையில் உள்ள, படைத்தல் முதலிய மூன்று தொழில்கள் பெரும்பான்மையாக யாண்டும் கூறப் படும் அதனை, நாவுக்கரசர்,

"மூன்று மூர்த்தியுள் நின்றிய லுந்தொழில்

 மூன்று மாயின மூவிலைச் சூலத்தன்"     (தி. 5 . 89. பா. 3)

"மூவாதி யாவர்க்கும் மூத்தான் தன்னை

 முடியாதே முதல்நடுவு முடிவா னானை" (தி. 6 . 74. பா. 3)

"நாராணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்"    (தி. 6 . 8. பா. 3)

என்றாற்போல் வெளியிடுவர்

இறைவனது தொழில்களை மூன்றாகக் கூறுமிடத்து, மறைத்தல் காத்தலிலும், அருளல் அழித்தலிலும் அடங்கி நிற்கும் என்றலே சிவநெறி மரபு.

இனி, ஐந்தொழில்களில், மறைப்பு என்பது, முத்தொழிலின் வேறாய் நிகழ்வது அன்று அவற்றிற்கு அடிநிலையாய் நிற்பதே, அஃது உயிர்களைப் பிறவியிற் செலுத்தி நிற்பதாகலின், அதுவே உயிர்கட்குப் பந்தமாம்.

அருளல் என்பது, முத்தொழில்கட்கு வேறாயினும், அஃது அம்முத்தொழில்போல ஏனையவற்றோடு ஒப்ப நின்று மாறிமாறி வாராது அவற்றிற்கு மேலாய் நிலைத்து நிற்கும்; எனவே, அஃது உயிர்களைப் பந்தத்தினின்றும் நீக்குவதாகலின், அதுவே உயிர்கட்கு வீடாம்.

ஆகவே, மறைத்தலும், அருளலும் முறையே, பந்தம் எனவும், வீடு எனவும் வழங்கப்படும் இதனை,

"பந்தமாய் வீடு மாகிப் பரம்பர மாகிநின்று

 சிந்தையுள் தேறல்போலும் திருச்சோற்றுத் துறையனாரே"

   (தி. 4. . 41. பா. 5)

என்றாற்போல்வனவற்றால் அருளுவர் நாயனார் இதனால், ஐந் தொழில்களும் ஒருவாற்றால், பந்தம், வீடு என இரண்டாய் அடங் குதலை அறியலாம்.

தலைவாயில்

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை - 2 தொடர்ச்சி... | 1 | 2 | 4 |