தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை - 2 தொடர்ச்சி... | 1 | 3 | 4 |

 

இறை இன்பத்தின் (சிவானந்தத்தின்) நிலை:

இனி, இறைவன் திருவடி இன்பம் எத்துணைச் சிறப்புடையதாய் நிற்கின்றது என்பதை அவர், குற்றம் அற்ற நல்ல வீணையின் இசையும், மாலைக் காலத்தில் எழுகின்ற நிலவின் ஒளியும், மெல்லென வீசுகின்ற தென்றற் காற்றும் வண்டுகள் ஒலிக்கின்ற தாமரைத் தடாகமும் ஆகிய இவை எல்லாம், இளவேனிற் காலத்தில் ஒருங்கு சேர்ந்தது போன்றதாய் உள்ளது என விளக்கும் அரிய திருப்பாடல்,

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே.  (தி. 5 . 90. பா. 1)

என்பதாகும் இன்னும்,

கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்

பனிம லர்க்குழற் பாவைநல் லாரினும்

தனிமு டிகவித் தாளும் அரசினும்

இனியன் தன்அடைந் தார்க்கிடை மருதனே.       

(தி. 5 . 14. பா. 10)

என வகுத்து அருளுகின்றார்.

இறை இன்பம், உலகில் உள்ள எக்கனியின் சுவையும் உயி ரோவியம் போல மிக்க அழகினையுடைய மங்கை நல்லாரது மெய்யூற்றமும், உலக முழுதும் ஒரு குடைக்கீழ் வைத்து ஆளும் பேரரசாட்சியும் துச்சமென ஒதுக்கத் தக்கவாறு எல்லையற்று விளையுமாம் அவன் அடியார்க்கு அதனை அனைவரும் அடைதல் வேண்டும் என்பது நாவரசரது திருவுள்ளம் அதனால்,

"மனிதர்காள் இங்கே வம்ஒன்று சொல்லுகேன்

 கனிதந் தாற்கனி உண்ணவும் வல்லிரே"

என அழைத்து வினாவி,

"புனிதன் பொற்கழல் ஈசன் எனுங்கனி

 இனிது சாலவும் ஏசற் றவர்கட்கே"                  (தி. 5 . 91. பா. 7)

என்று அறிவிக்கின்றார் மற்றும் இறைவனை அவர், `தேன்' என்றும், `பால்' என்றும், `கரும்பின் தேறல்' என்றும் `அமுதம்' என்றும் பலவாறு உள்ளம் அண்ணித்து ஓதும் இடங்கள் எண்ணில.

இறைபணி:

இனி, துன்பத்திற்கு நிலைக்களமாகிய பிறவியினின்றும் நீங்கி, இன்பக் கடலாகிய இறைவனை அடைதல், அவன் பணியினாலே கிடைப்பதாகும் வேறொரு வழியும் அதற்கு இல்லை என்பதைத் திரு நாவுக்கரசர் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் உரைத்தருளுகின்றார்.

இறைவன் பணியே, சைவசித்தாந்த சாத்திரத்துள், சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வகையாக வகுத்துணர்த்தப் படுகின்றன இந்த நான்கும் ஞானத்தின் படிமுறையான வளர்ச்சி நிலைகளே என்பதைத் தாயுமான அடிகள்,

"விரும்புஞ் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்

 அரும்புமலர் காய்கனிபோ லன்றோ பராபரமே"

என்று, அழகான உவமையில் வைத்து அருளிச் செய்தார்.

சரியை முதலிய நான்கும் இறைவனுக்குச் செய்யும் வழி பாடுகளே என்பதைச் சிவஞான சுவாமிகள் தமது சிவஞான சித்தி உரையுள், "புறத் தொழில் மாத்திரையானே உருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு, `சரியை' எனப்படும் என்றும்,"

"புறத்தொழில் அகத்தொழில் என்னும் இரண்டானும் அருவுரு வத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு, `கிரியை' எனப் படும்" என்றும்,

"அகத்தொழில் மாத்திரையானே அருவத்திருமேனியை நோக் கிச் செய்யும் வழிபாடு, `யோகம்' எனப்படும்" என்றும்,

"புறத்தொழில், அகத்தொழில் இரண்டும் இன்றி, அறிவுத் தொழில் மாத்திரையானே, அம்மூன்று திருமேனிக்கும் மேலாய் அகண்டாகார நித்த வியாபக சச்சிதானந்தப் பிழம்பாய் நிறைந்து நிற்கின்ற சிவபிரானிடத்தில் செய்யும் வழிபாடு, `ஞானம்' எனப்படும் என்றும்" இனிது விளக்கியுள்ளார்.

எனவே, பிற பிற சமய ஆசிரியர்கள் வேறு எவ்வெவற்றையோ, ஞானம் என்று அறிவிப்பது போல் அல்லாமல், சைவ சமய ஆசாரி யர்கள் சரியை முதலிய நான்கையுமே, ஞானம் என உபதேசித்தரு ளுவார்கள் என்பதை நன்குணரலாம்.

அந்நிலை திருநாவுக்கரசரது திருமொழிகளில் மிக விளக்கமாக இருத்தல் காணலாம்.

`திருஅங்கமாலை' என்னும் திருப்பதிகத்துள், தலைமுதலாகக் கால்வரையில் உள்ள உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக, "தலையே, நீ வணங்காய்," "கண்காள், காண்மின்களோ," "செவிகாள், கேண்மின்களோ," "மூக்கே, நீ முரலாய்," "வாயே, வாழ்த்து கண்டாய்," "நெஞ்சே, நீ நினையாய்," "கைகாள், கூப்பித் தொழீர்," "கால்களாற் பயன் என்" என்று இவ்வாறு விளித்து, உங்களுக்கு உரிய இறைவன் பணியை நீங்கள் செய்யுங்கள் இல்லாவிட்டால், உங்களால் யாதும் பயன் இல்லை என்று அறுதியிட்டு அருளும் அருளிச் செயல், மிகமிக நாம் நம் உள்ளத்தில் கொள்ளத்தக்கது.

இத்திருப்பதிகத்தில் சரியையும் கிரியையும் வெளிப்படையாக விளங்குதல் காண்லாம் நுனித்து நோக்கினால், "நெஞ்சே நீ நினை யாய்" என்பதில் யோகமும் அடங்கியிருத்தல் புலனாகும்.  `சரியை, கிரியை' என்னும் இரண்டையும், திருக்களிற்றுப்படியார், `சிவதன்மம்' என ஒன்றாகக் கூறுகின்றது அதனை இத்திருப்பதிகம் நன்கு வலி யுறுத்துகின்றது.

இன்னும், "ஆக்கையாற் பயன் என், அரன் கோயில் வலம் வந்து பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இவ்வாக்கையாற் பயன் என்" என்பது, "மனிதப் பிறப்பினால் அடையும் பயன், சிவவழிபாடு ஆகிய சரியை, கிரியை யோகங்களைச் செய்து சிவஞானம் முதிரப் பெறுவதே" என்பதைத் தெள்ளத் தெளிய விளக்குகின்றது எனவே,

"மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக்காயம்

 ஆனிடத் தைந்தும் ஆடும் அரன்பணிக் காக அன்றோ"

என்ற (சிவஞானசித்தி சூ.2.92) செய்யுள், இதனையே விளக் குவதாதல் அறியலாம்.

சரியை முதலிய நான்கும் இறைவன் பணியே என்பதை மேலே காட்டினோம்.

சிவஞான சித்தி (சூ.12.5)யும்

"ஞானயோ கக்கிரியா சரியை நாலும் நாதன்றன் பணி"

என்கின்றது அதனால், இங்கு, "அரன் பணி" என்றது சரியை முதலிய நான்கையுமே குறிக்கும் என்பது பெறப்படும் ஞானத்தையும், "இறை வன் பணி" என்றும், `ஞானமே, சரியை முதலிய நான்கு நிலைகளாய் நிகழ்கின்றது' என்றும் சைவ சமயம் கொண்டுள்ளமையால்தான், ஞான நெறியில் நிற்போர் அனைவரையும், சைவ சமயம், `திருத்தொண்டர்' எனக் குறிப்பிடுகின்றது.

ஆகவே, ஆளுடைய நம்பிகள் அருளிச் செய்த திருத்தொண்டத் தொகையினாலும், அதன்வகையும் விரியுமாகிய, `திருத்தொண்டர் திருவந்தாதி, திருத்தொண்டர் புராணம்' என்பவற்றாலும் உணர்த் தப்பட்ட நாயன்மார் அனைவரும் ஞானநெறியில் நின்றவர்களே என்பது தெளிவு.

சரியை:

புறத்தொழில் மாத்திரையானே சிவபிரானது உருவத் திரு மேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாவது, திருக்கோயிலுள் இருக் கும் திருமேனிகளையே சிவபெருமானாகக் கண்டு, அக் கோயிலில் திருவலகிடுதல், திருமெழுக்குச் சாத்தல், திருவிளக்கிடுதல், திருநந்த வனம் வைத்தல், பூக் கொய்து கொடுத்தல், பூமாலை கட்டித் தருதல், திருவுருவங்களை வணங்கிச் சிவபிரானது புகழ்ப் பாடலைப் பாடுதல், ஆடுதல், சிவனடியார்களைக் கண்டால், அடியேன் செய்ய வேண்டிய பணி யாது? எனக் கேட்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்தல் முதலிய பலவகைப் புறத்தொண்டாகும் ஆதலின், அதனைத் திருநா வுக்கரசரே பெரிதும் எடுத்தோதியுள்ளார் என்பது நன்கறியப்பட்டது.

நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா

               நித்தலும்எம் பிரானுடைய கோயில்புக்குப்

புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்

               பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்

தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்

               சங்கரா சயபோற்றி போற்றி என்றும்

அலைபுனல்சேர் செஞ்சடைஎம் ஆதீ என்றும்

               ஆரூரா என்றென்றே அலறா நில்லே.   

(தி. 6 . 31. பா. 3)

எவரேனும் தாமாக இலாடத் திட்ட

               திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி

உவராதே அவரவரைக் கண்ட போதே

               உகந்தடிமைத் திறம் நினைத்தங் குவந்து நோக்கி

இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி

               இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்

கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே

               கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

(தி. 6 . 61. பா. 3)

என்னும் திருத்தாண்டகங்கள், சரியைத் தொண்டினை இனிதெடுத்து விளக்குவனவாம் இவைகள் ஆங்காங்குப் பல இடங்களில் குறிக்கப் படுவதையும் நாம் நாவரசர் திருமுறையில் காணுதல் கூடும்.

கிரியை:

இனி, புறத்தொழில், அகத்தொழில் என்னும் இரண்டானும் சிவபிரானது அருஉருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாவது, பூவும் நீரும் ஆனைந்தும் புகையும் ஒளியும் திரு வமுதும் முதலிய பொருள்களைச் சேர்த்துக் கொண்டு ஐவகைச் சுத்திகளைச் செய்து, இலிங்கத்தில் அகத்தும் புறத்தும் மந்திரங்களால் ஆசனம் முதலியவைகளைக் கண்டு, சிவபிரானை வருவித்தல் (ஆவாகனம்) முதலியவைகளைச் செய்து, நீராட்டுதல், ஒற்றாடை சாத்துதல் முதலாகத் திருமேனியைத் தீண்டிச் செய்யும் பணிவிடைகளாகிய அணுக்கத் தொண்டாகும் இதனை,

"சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்"    (தி. 4. . 3. பா. 1)

"போதொடு நீர்சுமந்தேத்திப் புகுவாரவர்பின் புகுவேன்"

(தி.4 .3 பா.1)

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி

அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை உள்ளே வைத்து

விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்

கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்டனாரே.       

(தி. 4. . 31. பா. 4)

நகமெலாந் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி

முகமெலாங் கண்ணீர் வார முன்பணிந் தேத்துந் தொண்டர்

அகமலால்கோயிலில்லை ஐயன்ஐ யாற னார்க்கே           

(தி. 4. . 40. பா. 8)

நின்போ லமரர்கள் நீண்முடி சாய்த்து நிமிர்த்துகுத்த

பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன பாங்கறியா

என்போ லிகள்பறித் திட்ட இலையும் முகையும் எல்லம்

அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ யாறன் அடித்தலமே (தி. 4. . 92. பா. 10)

என்பன முதலிய திருப்பாடல்கள் விளக்கும்.

காயமே கோயி லாகக் கடிமனம் அடிமையாக

வாய்மையே துய்மை யாக மனமணி இலிங்க மாக

நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய ஆட்டிப்

பூசனை ஈச னார்க்குப் போற்றவிக் காட்டினோமே.         

(தி. 4. . 76. பா. 4)

என்னும் திருப்பாடல், அகப் பூசையைச் சிறப்பாக விளக்குவது அகப் பூசை புறப்பூசைகளில் அட்ட புட்பம் (எட்டுப் பூக்கள்) சாத்துதல் என்பது சிறப்பாகச் சொல்லப்படுவது அதனை ஒரு திருப்பதிகம் முழுவதும் அப்பர் பெருமானார் அருளியுள்ளார்.

"எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி

 மட்ட லரிடு வார்வினை மாயுமால்"                 (தி. 5 . 54 பா. 1)

எனத் தொடங்குவது அத்திருப்பதிகம் ஆனைந்து (பஞ்ச கௌவியம்) ஆடுவதில் சிவபிரான் மிக்க விருப்பம் உடையவன் என்பதை நாயனார் பல இடங்களில் எடுத்தோதி அருளுவார்.

"ஆவினுக் கருங்கலம் அரன்அஞ் சாடுதல்" (தி. 4 . 11. பா. 2)

"பாலுநெய் முதலா மிக்க பசுவில்ஐந் தாடு வானே"

   (தி. 4. . 63. பா. 9)

"பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்

 ஆவில் அஞ்சுகந் தாடு மவன்கழல்

 மேவ ராய்மிக வும்மகிழ்ந்துள்குமின்"

   (தி. 5 . 99. பா. 1)

"ஆட்டான தஞ்சும் அமர்ந்தாய் போற்றி"   (தி. 6 . 57. பா. 1)

என்பவற்றை எடுத்துக்காட்டாகக் காணலாம் இன்னும்,

"நெய்யினொடு பால்இளநீர் ஆடி னான்காண்"    

(தி. 6 . 52. பா. 5)

"நறப்படுபூ மலர்தூபம் தீபம் நல்ல

               நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர்

 சிறப்போடு பூசிக்கும் திருவா ரூரில்

               திருமூலட் டானத்தெம் செல்வன் தானே"          

(தி. 6 . 30. பா. 5)

என்றற் றொடக்கத்துத் திருப்பாடல்கள், கிரியையாகிய வழிபாட்டினை நன்கு வலியுறுத்துவனவாம்.

இங்ஙனம் பூவும் நீரும் பிறவுங் கொண்டு சிவபெருமானைப் பூசிக்குங்கால், இன்றியமையாது வேண்டப்படுவது, உள்ளத்துள் இருக்கும் அன்பே என்பதையும், `அவ்வன்பு இல்லாது புறத்தோற்றத் திற்கு மாத்திரம் பூசிப்பவரது பூசையைச் சிவபிரான் எள்ளி நகையாடி, ஆங்கு வருவதற்கு அருவருப்புக் கொண்டு அப்பாலே ஒதுங்கி நிற்கின்றான்' என்பதையும் நாயனார் அருளிச் செய்திருத்தல் பெரிதும் போற்றி உணர்தற்குரியது.

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்;

பொக்கம் மிக்கவர் பூவும்நீ ருங்கண்டு

நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.        (தி. 5 . 90.பா. 9)

என்னும் திருக்குறுந்தொகைப் பாடலைக் காண்க.

`சரியையில் நின்று வழிபடுவோர்க்கச் சிவபெருமான் இலிங்கத் தில் மறைத்து நின்று அருள் செய்கின்றான்' எனவும், `கிரியையில் நின்று வழிபடுவார்க்கு, விறகில் மறைந்து நிற்கின்ற நெருப்பும், பாலில் மறைந்து நிற்கின்ற நெய்யும் அவைகளைக் கடையுங்காலத்து வெளிப்படுதல் போல, மந்திர நியாசங்களைச் செய்யுங்கால் அவற்றில் வெளிப்பட்டு நின்று அருளுவன்' எனவும் சாத்திரம் கூறும் அதனை,

விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.    (தி. 5 . 90. பா. 10)

என்னும் திருக்குறுந்தொகை பாடலே நமக்கு அருளுகின்றது.

யோகம்:

"உயிரா வணம்இருந் துற்று நோக்கி

               உள்ளக் கிழியின் உருவெழுதி

 உயிர்ஆ வணம்செய்திட் டுன்கைத் தந்தால்

               உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி"  

 (தி. 6 . 25. பா. 1)

என்னும் திருத்தாண்டகம், ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, மனத்தை ஓடாது நிறுத்தி, உள்ளமாகிய கிழியில் சிவபிரான் உருவத்தை எழுதி, அதிலே ஒன்றியிருக்கும் அகத்தொழிலாகிய யோகமுறையை அறி வுறுத்துகின்றது.

"ஞானி நாலினுக்கும் உரியன்" (சிவஞானசித்தி. சூ. 12.5) என்பதனால், சரியை முதலிய மூன்றும் சிவப்பேற்றை அடைய விரும்புவார்க்கு அதனை அடையும் சாதனமாய் மட்டும் இல்லாமல், ஞானத்தாற் சிவனைப்பெற்றார்க்கும், அதனை இழக்காதிருத்தற்கும் சாதனமாம் ஆகையால், மேற்காட்டியவை எல்லாம் ஒவ்வொரு சாரார்க்கு மட்டும் இன்றி, எல்லோருக்குமேயாம் என்க.

சந்தியாநுட்டானம்:

சரியை முதலியவற்றில் நிற்பவர்கள் சமய தீக்கை முதலியன பெற்றுக் காலை நண்பகல் மாலைகளில் சந்தியானுட்டானங்கள் செய் யுங்கால், அவ்வனுட்டானங்களைச் சிவபிரான் சந்தித்தெய்வமாய் நின்று ஏற்று அவர்களக்கு அருள்புரிதலை,

புரிகாலே நேசம் செய்ய இருந்தபுண் டரீகத் தாரும்

எரிகாலே மூன்று மாகி இமையவர் தொழநின் றாரும்

தெரிகாலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று

திரிகாலங் கண்ட எந்தை திருச்செம்பொன் பள்ளி யாரே

(தி. 4. . 29. பா. 7)

என்று, செல்வேந்தர் குறித்தருளுகின்றார்.

ஞானம்:

இனி, சரியை முதலிய நான்குமே ஒருவகையில் ஞானமாயினும், சிவப்பேற்றை நேரே அடைவிப்பதாய், `ஞானம்' எனச் சிறந்தெடுத்துப் பேசப்படுவது, `பதி, பசு, பாசம்' என்னும் முப்பொருளின் இயல்புகளை உள்ளவாறு உணர்தலேயாகும் இதுவே, `தத்துவஞானம்,' `ஆத்தும ஞானம்' என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படுவது இதனையே நாம் சாத்திரங்களில் விரிவாகக் காண்கின்றோம்.

தலைவாயில்

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை - 2 தொடர்ச்சி... | 1 | 3 | 4 |