தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை - 2 தொடர்ச்சி...  | 2 | 3 | 4 |

 

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருமுறைகளின்

சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 2

நாவுக்கரசர் அருளிய நன்ஞானம்

தருமை ஆதீனத் தமிழ்ப் புலவர், சித்தாந்தக் கலைமணி

வித்துவான் சி. அருணைவடிவேலு முதலியார்,

தமிழ்ப் பேராசிரியர், தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரி.

 

    ஞானம் என்பது, `அறிவு' எனப் பொருள்படும் ஆயினும், அது தலைமைபற்றிப் பேரறிவையே குறிக்குமல்லது, சிற்றறிவைக் குறியாது சிற்றறிவை, புல்லறிவு என்றும், பேரறிவை, நல்லறிவு என்றும் கூறுதல் உண்டு.

"நில்லாதவற்றை நிலையின என்றுணரும் புல்லறிவாண்மை கடை" என்னும் திருக்குறளால், ஒன்றை மற்றொன்றாக உணரும் மயக்க உணர்வே புல்லறிவாம் என்பது பெறப்படும்.

ஒன்றும் அறியாத தன்மையாகிய அறியாமையே அஞ்ஞானம் ஆயினும், அந்நிலை அறிய நில்லாமையின், அறிய நிற்கும் மயக்க உணர்வாகிய விபரீத ஞானமே பெரும்பான்மையும், அஞ்ஞானம் என வழங்கப்படும்.

ஆகவே, அவ்விபரீத ஞானத்தை நீக்கியருளும் அருள் மொழிகளே ஞானத் திருமொழிகளாம் அத்தகைய ஞானத் திருமொழிகள் சிலவற்றால் அப்பர் அருளும் ஞானத்தின் தன்மையை ஒருவாறு ஈண்டு உணர முயல்வோம்.

உண்மை உணர்த்தல்:

விபரீத ஞானங்களுள் முதலாவது, கண்டதே காட்சி; கொண்டதே கோலம் என நினைத்து, காணப்பட்ட உலகம் ஒன்றே மெய்யானது; இதற்கு வேறாக, `கடவுள் உண்டு; உயிர் உண்டு; இரு வினை உண்டு; மறுபிறப்பு உண்டு' என்றாற்போலக் கூறுவன வெல் லாம் அறியாமையின் காரியமாகும் என அறியும் அறிவேயாகும்.

இந்த விபரீத ஞானத்தை அப்பர் பெருமான் அடியோடு அகற்றி, உண்மையை உணர்த்தியருளும் இடங்கள் பல.

"நடையை மெய் என்று நாத்திகம் பேசாதே" (தி. 5 . 31. பா. 6) என்று உறுதியாக அருளுகின்றார்.

"மிறைபடும்இவ் வுடல்வாழ்வை மெய்யென் றெண்ணி

               வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்ே\u2970?"

   (தி. 6. . 42. பா. 6)

"பேசப் பொருளலாப் பிறவி தன்னைப்

               பெரிதென்றுன் சிறுமனத்தால் வேண்டி ஈண்டு

   வாசக் குழல்மடவார் போக மென்னும்

               வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்ே\u2970?"

(தி. 6 . 42. பா. 7)

"தினைத்தனைஓர் பொறையிலா உயிர்போங் கூட்டைப்

               பொருளென்று மிகவுன்னி மதியால் இந்த

   அனைத்துலகும் ஆளலாம் என்று பேசும்

               ஆங்காரம் தவிர் நெஞ்ே\u2970?"       (தி. 6 . 42. பா. 5)

என்பனவும் அவரது அருட்டிரு மொழிகள் இவை போன்றவற்றால், உலகத்தையே உறுதியாக நினைந்து பற்றுதல் கூடாது என்பதை உணர்கின்றோம்.

இறையுண்மை:

இனி இறைவனைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது,

"அந்திவட் டத்திங்கட் கண்ணிய னையா றமர்ந்துவந் தென்

   புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பெனோ

(தி. 4. . 98. பா. 1)

என அருளுகின்றார் இன்னும்,

"உள்ளத்தில் ஒளியைக் கண்டதுள்ளமே"

(தி. 5 . 98. பா. 3)

என்றும்,

"தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும்

   தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே

   தேடிக் கண்டு கொண்டேன்"     (தி. 4. பா. 9. பா. 12)

என்றும்,

"தானலா துலக மில்லை"  (தி. 4. . 40. பா. 1)

"தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடி

               யோங்களுக்கே"                       (தி. 4. . 94. பா. 1)

என்றும் வருவனபோன்ற திருமொழிகள், கடவுள் உண்மையைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.

"பாட அடியார் பரவக் கண்டேன்" (தி. 6 . 77 பா. 1)

என்னும் திருத்தாண்டகத்தால், இறைவன் உண்மை கண்கூடாய் அறி யப்படுகின்றது இறைவன் உண்மையைச் சித்தாந்த சாத்திரங்கள் காரண காரிய முறையில் வைத்து ஆராய்ந்து அளவை முறையால் அரிதில் நிலைநாட்டுகின்றன.

நாயனார் அதனைத் தமது அநுபவத்தில் இருந்து எளிதில் விளக்குதலைக் காண்கின்றோம்.

வினையுண்மை:

"பண்டு செய்த பழவினை யின்பயன்

கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே"         

(தி. 5 . 47. பா. 1)

"கொடுவினையார் என்றுங் குறுகா அடி"   (தி. 6 . 6 பா. 2)

என்றாற் போலும் பகுதிகள் வினை உண்மையை இனிதே விளக்கும்.

உயிர் முதலியன உண்மை:

"துறக்கப் படாத உடலைத் துறந்துவெந் தூதுவரோடு

   இறப்பன் இறந்தால் இருவிசும் பேறுவன் ஏறிவந்து

   பிறப்பன்..."      (தி. 4. . 113. பா. 6)

என்னும் திருவிருத்தப் பகுதியால் உடலுக்கு வேறான உயிரும், மறுபிறப்பும், சுவர்க்கமும் இருத்தல் அறியப்படும்.

"புள்ளி ருக்குவே ளூர்அரன்பொற்கழல்

   உள்ளி ருக்கும் உணர்ச்சியில் லாதவர்

   நள்ளி ருப்பர் நரகக் குழியிலே"  (தி. 5 . 79. பா. 1)

என்று நரகம் உண்மையைக் குறிப்பித்தருளினார்.

முப்பொருள் உண்மை:

இனி, ஒரு சாரார், `ஒரு பொருளே உள்ளது; இரண்டாவது பொருள் இல்லை' என விபரீத வாதம் பேசுவர். நாவுக்கரசர்,

"சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்

   தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை"      

(தி. 6 . 67. பா. 2)

என்று அருளுகின்றார் இதனுள் இருள் ஒன்றும், இருள் அடைந்த மனத்தை உடையவர் பலரும், அவ்விருளை நீக்குகின்ற தலைவன் ஒருவனும் ஆகிய முப்பொருள்கள் கூறப்படுதல் தெளிவு.

அம்முப் பொருள்களே பாசம், பசு, பதி எனச் சைவ சித்தாந் தத்துள் கூறப்படுதல் வெளிப்படை இன்னும்.

"பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி" (தி. 6 . 55. பா. 6) என்கின்றார் இவையெல்லாம் ஏகான்ம வாதமாகிய விபரீத ஞானத்தை அகற்றி, `உயிர்கள் எண்ணிறந்தன' என்னும் உண்மை ஞானத்தை இனிது பெறுவிப்பன.

நிலையான்மையும் நிலையும்:

மேற்காட்டிய,

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை  (குறள். 331)

என்ற திருவள்ளுவர் திருமொழியின்படி, நிலையாத பொருள்களை நிலைப்பனவாக உணரும் திரிபுணர்ச்சியே எல்லாத் துன்பங்கட்கும் அடிநிலையாகலின், அவற்றது நிலையாமை, நூல்களில் யாண்டும் இனிதெடுத்து விளக்கப்படும்.

ஆயினும், நிலைத்த பொருள் இது என்பது, அவைகளில் இனிது விளங்குதல் இல்லை திருமுறைகளே அதனை இனிது விளக்குவனவாம் அவற்றுள்ளும், திருநாவுக்கரசர் திருமொழியுள் அவை இரண்டும் நன்கினிது விளங்கக் காணலாம்.

"கொப்புளே போலத் தோன்றி அதனுளே மறை(யும்)...

   இக்களே பரம்"             (தி. 4 . 79. பா. 2)

என்று, யாக்கை, நீர்மேற் குமிழியாதல் விளக்கப்படுகின்றது.

"கால பாசம் பிடித்தெழு தூதுவர்

   பால கர்விருத் தர்பழை யாரெனார்"       (தி. 5 . 86 பா. 1)

நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்

சுடலை சேர்வது சொற்பிர மாணமே

கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்

உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.       (தி. 5 . 90. பா. 4)

"கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால்

   இல்லத் தார்செய்ய லாவதென் ஏழைகாள்"

(தி. 5 . 43. பா. 1)

"உற்றார் ஆருளரோ - உயிர் - கொண்டு போம்பொழுது" (தி. 4. . 9. பா. 10)

"இளமை கைவிட் டகறலும் மூப்பினார்

   வளமை போய்ப்பிணி யோடு வருதலால்"

   (தி. 5 . 97. பா. 28)

என்றாற் போலும் திருமொழிகள், யாக்கையது நிலையின்மை யையும், அதன்கண் இளமை அதனினும் நிலையின்மையையும் நம்மனோர் நெஞ்சில் ஆழப்பதிவித்து, உலகியலில் அழுந்தாதவாறு எடுப்பன.

இனி, நிலையாமை மட்டில் நினைவூட்டி, `எல்லாப் பொருளும் நிலையாமையுடையன வேயாகலின், செய்வது என்' என்பார்க்கு ஒன்றும் கூறாதொழியாது, அதனைத் தெளிவுபடுத்தும் திருமொழிகள் நம்மனோரால் நன்குணர்தற்பாலன.

யாவரும் எல்லாப் பொருள்களும் நிலையில்லாதனவாக, சிவபிரான் ஒருவனே என்றும் நிலையுடையன் என்பதனை அறைகூவி அருளிச் செய்கின்றார், ஆளுடைய அரசர்.

"சிவன் எனும் ஓசை அல்லது அறையோ உலகில்

   திருநின்ற செம்மை உளதே"      (தி. 4. . 8. பா. 1)

என்பது அத்திருமொழி திரு என்பது, நன்மை அல்லது இன்பம் எனப் பொருள்தரும்.  `அஃது என்றும் நிலைபேறுடையதாய் நிற்றல், சிவபிரானிடத்தன்றிப் பிறர் எவரிடத்தேனும் உண்டோ? சொல்மின்' என்கின்றார் நாவரசர்.

சிவபிரானையன்றிப் பிறிதொரு பொருளும் நிலையுடையன அல்ல என்னும் தெளிவான உணர்வே சிவஞானம் எனப்படுவது அத னையே நமக்கு அவர் பலவாற்றானும் அறிவுறுத்த முயல்கின்றார்.

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்

ஆறு கோடி நாராயண ரங்ஙனே

ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர்

ஈறி லாதவன் ஈசன் ஒருவனே.     (தி. 5 . 100. பா. 3)

"...வந்த நஞ்சமுது செய்தானை, அமுதம் உண்ட மற்ற

  அமரர் உலந்தாலும் உலவா தானை"            (தி. 6. . 50. பா. 5)

"சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச் சிங்கமே"          

(தி. 6. . 99. பா. 2)

என்றற் றொடக்கத்தன காண்க.

உலக இன்பத்தின் நிலை:

நிலையாத பொருள்களை நிலையுடையன என்று பற்றுதலால் இன்பம் உளது போலத் தோன்றினும், உண்மையில் விளைவது பெருந் துன்பமே என்பதனை நாவுக்கரசர்,

"தளைத்துவைத் துலையை ஏற்றித் தழலெரி மடுத்த நீரில்

 திளைத்துநின் றாடு கின்ற ஆமைபோல்"

(தி. 4 . 79. பா. 6)

என்ற அரிய உவமையால் அருளிச் செய்தார்.  "ஆமையை அட்டு உண்பவர், அதனை உலை நீரில் இட்டு அடுப்பில் ஏற்றி வைத்த பொழுது, அவ் ஆமை, தனக்கு நல்ல தண்ணீர் கிடைத்தது என்று எண்ணி அதில் மூழ்கிக் களிக்கின்ற இன்பம் போன்றதே உலகில் ஐம்புல நுகர்சசியால் வரும் இன்பம்" என்னும் இவ் அரிய உவமை, உலகியலின் உண்மை நிலையை நமக்கு எத்துணைத் தெளிவாக உணர்த்துகின்றது.

 

தலைவாயில்

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை - 2 தொடர்ச்சி...  | 2 | 3 | 4 |