தலைவாயில

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை - 2 தொடர்ச்சி... | 1 | 2 | 3 |

 

இறைவன் செயல் முறை:

தனது தொழில்கள் அனைத்தையும் நம்மைப்போலக் கரணத்தாற் செய்யாது, சங்கற்ப (நினைவு) மாத்திரையாற் செய்தலே இறைவனுக் குள்ள தனிச்சிறப்பு எல்லாவற்றையும் சங்கற்ப மாத்திரத்தாற் செய் தாலே அவனுக்கு நம்மைப் போன்று, தொழில்களால் வரும் வேறு பாடுகள் இலவாயின இதனை நாயனார்,

"நோக்காதே யெவ்வளவும் நோக்கி னானை

........

 ஆக்காதே யாதொன்றும் ஆக்கி னானை"   (தி. . 11. பா. 5)

என்று அருளுதலால் அறியலாம்.

இறைவன் வடிவம்:

உயிர் உடம்பை இயக்குதற்கு வேறோர் உடம்பு வேண்டாமை போல, தனது திருமேனியாகிய உயிர் உலகங்களை இயக்குதற்கு இறைவனுக்கு வேறோர் உடம்பு வேண்டுவதில்லையாயினும், உயிர்களது மனமொழி மெய்கட்குத் தான் அகப்படுதற் பொருட்டுப் பல அருட்டிருமேனிகள் கொண்டு நிற்பன் இறைவன் என்பதனை,

"அரிதரு கண்ணி யாளை ஒருபாக மாக

 அருள்கார ணத்தில் வருவார்"     (தி. 4. . 8. பா. 2)

என்னும் திருமொழியால் நன்குணர்கின்றோம் அவ்வருட்டிரு மேனிகள்தாம் எண்ணற்றனவாதலே, திருப்பதிகங்களுள் எவ்விடத் தும் எல்லையின்றி விளங்கும்.

`இறைவன் திருமேனிகள் பலவும் பிறரால் படைத்துக் கொடுக் கப்பட்டு அவனைப் பந்தப்படுத்தும் மாயா சரீரங்களாகாது, அவன் தனது இச்சையால் விரும்பியபடி கொள்ளும் அருட்டிருமேனிகளே' என்பதனையும், அத்திருமேனிகளின் அருமை பெருமைகளையும் சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரத்தில் தடை விடைகளால் மிகத் தெளிவாக விளக்கும்.

உணர்த்தும் முறைமை:

`உயிர்கள் இறைவன் உணர்த்தினாலன்றி உணரமாட்டா' என்பதையும், `அவனன்றி ஓரணுவும் அசையாது' என்பதையும், "ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே" என்பது முதலாகத் தொடங்கி, "காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே" என்று, வகுத்தருளினார் நாயனார். (தி. 6 . 95. பா. 3)

"சிந்தையைத் திகைப்பி யாதே செறிவுடை யடிமை செய்ய

 எந்தைநீ யருளிச் செய்யாய் யாதுநான் செய்வ தென்னே"

(தி. 4. . 23. பா. 4)

என்பதும் அப்பொருளுடையதே.

தத்துவங்கள்:

உயிர்களின் பொருட்டு மாயையினின்றும் இறைவன்படைத்துக் கொடுப்பன தத்துவங்களும் அவற்றின் காரியங்களாகிய தாத்துவிகங் களுமாகும்.

அவை அனைத்தும் தொண்ணூற்றாறு என்னும் தொகையுடை யன அவை நாவரசர் திருமொழியிற் பல இடங்களிற் பலவாறு கூறப்படுதலைக் காணலாம்.

"துருத்தியாங் குரம்பை தன்னில்

               தொண்ணூற்றங் கறுவர் நின்று"

(தி. 4. . 25. பா. 4)

"முப்பதும் முப்பத் தாறும் முப்பதும் இடுகு ரம்பை"

(தி.4. .54. பா.3)

"எண்பதும் பத்தும் ஆறும் என்னுளே இருந்து மன்னி"

(தி.4. .70. பா.3)

என்றாற்போல்வன, தத்துவங்களையே குறித்தன ஆன்ம தத்துவம் இருபத்து நான்குடன் புருட தத்துவம் கூடத் தத்துவம் இருபத்தைந் தாம் காலம் முதலிய வித்தியா தத்துவங்களைப் புருடதத்துவம் என ஒன்றாக வழங்குவர் என்று கொள்க.

சுத்த தத்துவங்கள் உயிர்கட்கு உடம்பு ஆகாமையின், அதனை, நீக்கி, தத்துவம் முப்பத்தொன்று என்றல் உண்டு.

தத்துவம் முப்பத்தாறனுள், தூல பூதங்கள் ஐந்தும், ஞானேந் திரியங்களின் புலங்கள் ஐந்தும் யாவர்க்கும் இனிது விளங்குதல் பற்றி யாண்டும் சிறந்தெடுத்துக் கூறப்படும்.

அந்தக் கரணங்கள் நான்கும், மனம் என ஒன்றாக அடக்கிக் கூறப்படும் இவைகள் உயிருக்கு இட்ட தளைகளாய் நின்று துன்புறுத் தும் முறையை அப்பர் பலப்பல வகையில் பாடியருளுவார் அவற்றின் பரப்பெல்லாம் ஈண்டுக் கூறுதல் இயல்வதன்று.

தூல பூதங்கள் ஐந்தின் குணங்களை,

"மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை

               வயங்கெரியில் மூன்றைமா ருதத்திரண்டை

 விண்ணதனில் ஒன்றை...                        (தி. 6. . 60. பா. 3)

என அருளக் காண்கின்றோம்.

தத்துவ நீக்கம்:

இத்தத்துவக் கூட்டங்கள் நீங்கப் பெற்றால், ஆன்மா இறைவன் திருவடியையே தனக்குப் புகலிடமாக அடையும் என்பதனை, கயிறுகள் யாவும் அறப்பெற்று ஊசல் தரையையே சென்று அடைதலாகிய உவமையில் வைத்து, நன்கு விளக்கியுள்ளார்.

உறுகயி றுசல்போல ஒன்றுவிட் டொன்று பற்றி

மறுகயி றூசல்போல வந்துவந் துலவும் நெஞ்சம்

பெறுகயி றூசல்போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்

தறுகயி றூச லானேன் அதிகைவீ ரட்டனீரே       

(தி. 4. . 26. பா. 6)

என்பது, அவ்வழகிய திருப்பாடல் இதனையே மெய்கண்டதேவ நாயனார், இவ்வான்மாத் தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே தமது முதல் சீபாபாதத்தையணையும் என்றது, ஊசல் கயிறற்றால் தாய் தரையேயாந் துணையான் (சிவஞானபோதம், சூத். 8. அதிகரணம் 4) என்று உரைத்தருளினார்.

வினை நீக்கம்:

கூவ லாமை குரைகட லாமையைக்

கூவ லோடொக்கு மோகடல் என்றல்போல்

பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்

தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.

(தி. 5. பா. 100. பா. 5)

என்னும் திருப்பாடலால், வினை நீங்கினாலன்றி மெய்யுணர்வு தோன் றாது என்பதையும்,

பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்

               பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில்

சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்

               சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம்

உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும்

               உன்னையல்லா லொருதெய்வம் உள்கேன் என்றும்

புற்றரவக் கச்சார்த்த புனிதா என்றும்

               பொழில் ஆரூ ராஎன்றே போற்றா நில்லே.

(தி. 6 . 31. பா. 7)

என்னும் திருப்பாடலால், சிவபிரானை வழிபடுதல் ஒன்றே வினை நீக்கத்திற்கு வாயில் என்பதையும் அருளினார்.

திருவைந்தெழுத்து:

சிவபிரானைச் சரியை கிரியை யோகங்களான் வழிபட்டு வினை நீங்கப் பெறுதற்கும், பின்னர்ச் சிவஞானம் பெற்றுச் சிவனை அநுப வமாகக் கண்டு, அந்நிலையிலே நிலைத்து நிற்றற்கும் துணையாய் இருப்பது திருவைந்தெழுத்தே என்பது சிவநெறியின் முடிந்த முடிபு.

அதனை அப்பரடிகள் மிக நன்றாக வலியுறுத்தருளிச் செய்துள் ளார்.  "சொற்றுணை வேதியன்" என்னும் நமச்சிவாயத் திருப்பதிகம் அதன் கருவூலமாகும் அது, நாவுக்கரசர், தமது அநுபவத்தின் வைத்து அருளிச்செய்த  "மாசில்வீணையும்" என்னும் திருக்குறுந்தொகைப் பதிகத்துள்,

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்

நமச்சி வாயவே நானறி விச்சையும்

நமச்சி வாயவே நாநவின் றேத்துமே

நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.      (தி. 5 . 90. பா. 2)

என்னும் திருப்பாடலும் அத்தகையதேயாகும் இன்னும், திருவைந் தெழுத்தைச் சிகாரம் முதலாக வைத்து ஓதுதல் சிறந்தது என்பர் அதனையும் நாயனார்,

வைத்த பொருள்நமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச்

சித்தம் ஒருக்கிச் சிவாய நமஎன் றிருக்கினல்லால்

மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர்

அத்த னருள்பெற லாமோ அறிவிலாப் பேதைநெஞ்சே.

(தி. 4 . 94. பா. 5)

என்று அருளிச் செய்தார் இது, சுவாமிகள் நமச்சிவாயத் திருப் பதிகத்தை அருளிச்செய்து, கல்லே மிதப்பாகக் கடலைக் கடந்து கரை ஏறியவுடன் அருளிச் செய்ததாதல் அறியத்தக்கது.

அருட்கண்:

இவ்வாற்றால் வினை நீங்கித் திருவருள் கிடைக்கப்பெற்று, `அவ்வருளே கண்ணாகக் காண்பவரே இறைவனைக் காணுதல் கூடும்; அல்லாதார்க்குக் கூடாது' என்பதைச் சுவாமிகள் மிக அழுத் தமாக அருளியுள்ளார்.

"அயிரா வணமேஎன் அம்மா னேநின்

               அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே"

(தி. 6. . 25. பா. 1)

மைப்படிந்த கண்ணாளும் தானுங் கச்சி

               மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்

ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்

               ஓரூர னல்லன்ஓர் உவம னில்லி

அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்

               அவனருளே கண்ணாகக் காணி னல்லால்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்

               இவன்இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே.

(தி. 6. . 97. பா. 10)

என்பன காண்க.

உள்ளுறைப்பொருள்:

நல்லாசிரியர் திருவைந்தெழுத்தை அறிவுறுக்கக் கேட்டு அதனை முறைப்படி நியமமாக ஓதுதல் முதலியவற்றால் இறைவன் திருவடி ஞானம் வளர்ந்து முதிர, அம் முதிர்ச்சிக்கேற்ப அவன்மாட்டு அன்பும் முறுகி வளரப் பேரன்பினை எய்தி, அவனுடைய திருவடியைத் தலைப் படுமாற்றினை நாயனார் அகப்பொருள் வகையில் உள்ளுறையாக வைத்து நன்கருளிச் செய்திருத்தலைச் சைவ உலகம் நன்கறியும் அத்திருப்பாடல் பின்வருவதாகும்.

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்

   மூர்த்தி அவனிருக்கும் வண்ணங் கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

   பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

   அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்

தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்

   தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

(தி. 6 . 25. பா. 7)

அணைந்தோர் தன்மை:

இங்ஙனம் இறைவன் தாளைத் தலைப்பட்டவர்க்கு இவ்வுலகில் எவ்வகையான துன்பமோ அச்சமோ யாதும் இல்லை அவர் யார்க் கும் பணிந்து வாழ்தலும் இல்லை என்பதை நாயனார் விதந் தோதி யருளியதுபோலப் பிறர் ஓதியதில்லை என்றே கூறலாம்.

"நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம்" (. 98) என்னும் மறுமாற்றத் திருத்தாண்டகம் அதனையே விரித்துரைக் கின்றது.

வெம்பருவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்

               வெய்ய வினைப்பகையும் பைய நையும்

எம்பரிவு தீர்ந்தோம் இடுக்க ணில்லோம்

               எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்

அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி

               அனலாடி ஆனஞ்சும் ஆட்டுக ந்த

செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்

               செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.

   (தி. 6. . 95. பா. 2)

என்னும் திருத்தாண்டகமும் அத்தகையதே இதனுள், `எங்கெழில் என் ஞாயிறு' என்னும் அரிய தொடரைக் காண்கின்றோம்.

மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும்

விண்பால் திசைகெட் டிருசுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே

திண்பால் நமக்கொன்று கண்டோம் திருப்பா திரிப்புலியூர்க்

கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே.

(தி. 4. . 94. பா. 9)

வானம் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும்

தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும்

மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்

டூனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே.

(தி. 4 . 112. பா. 8)

கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கடல் நீர்சுருங்கிப்

பன்னெடுங் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சமுண்டென்

றென்னொடும் சூளறு மஞ்சல்நெஞ் சேஇமை யாதமுக்கண்

பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண் டீரிப் புகலிடத்தே         (தி. 4 . 113. பா. 10)

என்னும் நாயனார் திருமொழிகளை யாவரும் தெளிந்து அந்நிலை யைப் பெறுதல் வேண்டும்.

இங்ஙனம் ஞான நெறியினை நன்கு தெரித்து அருளிச்செய்த நாவுக்கரசரது அருளிப்பாட்டினை உலகம் உணர்ந்து உயர்பயன் எய்துவதாக.

தலைவாயில்

ஆறாம் திருமுறை - ஆராய்ச்சிக் கட்டுரை - 2 தொடர்ச்சி... | 1 | 2 | 3 |