பத்தாம் திருமுறை - முதலாம் பகுதி - ஆசியுரை - தொடர்ச்சி... | 2 | 3 | 4 |
உ
குருபாதம்
திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 26ஆவது குருமகா சந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ
சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கியருளிய ஆசியுரை| தேவர்
குறளும்
திருநான்
மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகம்என்று உணர் |
-
ஓளவையார், நல்வழி பா.40கருத்து
ஒன்றே:"
பலகலை ஆகமம் வேதம் யாவையினும் கருத்துப் பதி, பசு, பாசம் தெரித்தல்" என்பது உமாபதி சிவாசாரிய சுவாமிகளின் உபதேசம்.இதனை ஒட்டியே ஓளவையாரும் திருக்குறள், நான்மறை முடிவு, மூவர் தமிழாகிய தேவாரம், முனிமொழி கோவை, திருவாசகம், திருமூலர் சொல்லாகிய திருமந்திரம் ஆகியவற்றின் முடிவான கருத்து பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மை மொழிதலேயாம் என்பதைத் தெரிவித்துள்ளார்.
ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்கள் ஒத்த கருத்து உடையவர்களாகவே இருப்பர். இதற்கு இந்நூல்களே சான்று.
மந்திரம்
: அருளாளர்கள் மொழிவன எல்லாம் மந்திரங்கள். மந்திரம் என்ற சொல்லுக்குப் பொருள், நினைப்பவரைக் காப்பது என்பதாம். மந்திரங்களை ஜெபிப்பதுடன் நினைப்பதற்கு ஆற்றல் அதிகம். மந்திரங்களாக விளங்கும் அருள் நூல்களை வழங்கிய பெருமக்களை நிறைமொழி மாந்தர் என்பர் தொல்காப்பியரும், திருவள்ளுவரும்.நிறைமொழி
மாந்தர் ஆணையிற் கிளந்தமறைமொழி
தானே மந்திரம் என்ப. -தொல் செய்யுள் - 178என்பது
தொல்காப்பியம்.நிறைமொழி
மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி
காட்டி விடும். -குறள் 28என்பது
திருக்குறள். இப்பெரியோர்களின் வார்த்தைகள் அனைத்துமே மந்திரங்கள் ஆயினும் சிறப்பாக யோகப் பயிற்சிக்கும் வழிபாட்டிற்கும் உரிய மந்திரங்கள் நிறைந்திருத்தல் பற்றி இப்பத்தாம் திருமுறை திருமந்திரம் என்றே போற்றப் பெறுகிறது.முகம்
: இவ்வளப்பரிய பெருநூலைப் பருப்பொருட்டாகப் புரிந்து கொள்வதற்கு உரைநடையில் ஒரு முகவுரை இன்றியமையாதது. ஒரு மனிதனைப் புரிந்துகொள்ள அவன் முகம்தான் துணை செய்கிறது. அதுபற்றியே `அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' (பழமொழி) என்றனர்.எவ்வளவுதான் உடல் வளமாகவும் வலமாகவும் நலமாகவும் இருந்தாலும் அவன் முகம்தான் அவனது வளத்தையும், வலத்தையும், நலத்தையும் எடுத்துக்காட்டும். இது பற்றியே திருவள்ளுவரும்;
அடுத்தது
காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்கடுத்தது
காட்டும் முகம். -குறள் 706என்றார்
. எனவே ஒரு நூலின் முகவுரை அந்நூலில் உள்ள கருத்துகளைப் புரிந்துகொள்ளப் பெரிதும் துணைசெய்யும் என்பது ஒருதலை.இம்முகவுரையைப் பாயிரம் என்று இலக்கண நூல் கூறும். இம்முறையில் இத்திருமந்திரத்திற்கும் திருமூலர் பாயிரம் எழுதி யுள்ளார். அது பாடல் பகுதியாய் உள்ளது;
"பருப்பொருட் டாகிய பாயிரம் கேட்டார்க்கு
நுண்பொருட் டாகிய நூல் இனிது விளங்கும்."(
தி.10 பாயிரம்)ஆதலின் இந்நூலின் அமைப்பினை ஓரளவு புரிந்து கொள்ளத் துணையாகவே முகவுரை (பாயிரம்) தேவைப்படுகிறது.
பத்தாம்
திருமுறை : திருமுறை ஆசிரியர்கள் இருபத்து எழுவருள் ஒருவராகிய திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம் பத்தாம் திருமுறையாக விளங்குவது. இது மூவாயிரம்பாடல்களைக் கொண்டது.காரணாகமம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், வியாமளம், காலோத்தரம், சுப்பிரம், மகுடம் என்னும் ஒன்பது ஆகமங்களின் சாரமாகத் திகழ்வது. ஒன்பது ஆகமங்களையும் ஒன்பது தந்திரங்களாகக் கொண்டுள்ளது.
முதல் தந்திரம் நிலையாமை கூறுமுகத்தால் ஞானம் பெற அறம் உணர்த்துகிறது.
இரண்டாம் தந்திரம் புராணங்களின் வழியே சிவபராக் கிரமங்களையும் அவர்தம் புகழையும் பேசுகிறது.
மூன்றாம் தந்திரம் பெருமானை அடையும் யோக சாதனங்களைக் குறிப்பிடுகிறது.
நான்காம் தந்திரம் மந்திர யந்திர வழிபாட்டு முறைகளை விளக்குகிறது.
ஐந்தாம் தந்திரம் சைவத்தின் பிரிவுகளையும், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நெறிகளையும் தெளிவிக்கிறது.
ஆறாம் தந்திரம் சிவமே குருவாக நின்று அருள்புரிவதையும் சற்குரு கிடைப்பது அவரவர் தவத்தின் பயனாலாகும் என்பதையும் உணர்த்துகிறது.
ஏழாம் தந்திரம் அண்டமும், பிண்டமும் இலிங்க உருவாய் உள்ளதையும், சிவபூசை, குருபூசை செய்ய வேண்டிய அவசியத்தையும் அறிவிக்கிறது.
எட்டாம் தந்திரம் உயிர் எடுக்கும் உடல் பற்றிய அன்னமயகோசம், பிராணமயகோசம், மனோமய கோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்தமய கோசம் பற்றிய விளக்கங்களைக் கூறுகிறது.
ஒன்பதாம் தந்திரம் அகர, உகர, மகரமாகிய ஒங்காரப் பிரணவமே எல்லாவற்றிற்கும் மூலம் என்பதையும், தூல பஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம், முதலிய ஐந்தெழுத்து உண்மைகளையும் ஐந்தொழில் நடனத்தையும் சிறப்புற விளக்குகிறது.
அன்பும்
அறிவும்: சைவ சமய நூல்களைச் சான்றோர் தோத்திரம், சாத்திரம் என இருவகையாகப் பகுத்துள்ளனர். தோத்திரம் அன்பின் அடிப்படையில் எழுவது. சாத்திரம் அறிவின் அடிப்படையில் எழுவது.மெய் அன்பில் மெய்யறிவும், மெய்யறிவில் மெய்யன்பும் கலந்தே இருக்கும் என்பது நியதி. இங்கு அன்பின் அடிப்படை அறிவின் அடிப்படை என்றது மிகுதி பற்றி எழுவதையே குறிப்பதாகும்.
இறைவனது கருணைப் பெருக்கால் நடைபெறும் ஐந்தொழிற் சிறப்புகளையெல்லாம் அன்பினால் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருகப் புகழ்ந்து பாடுதல் தோத்திரம் எனப்படும். ஆனால் இப்புகழ் உண்மைக்கு மாறாக உபசாரமாகப் பாடப்பட்டது அல்ல. அருளாளர்கள் அருளிய பொருள்சேர் புகழேயாம். என்னெனில், மெய்யறிவும், மெய்யன்பும் உடையாராகலின் இவர்களிடம் மறந்தும் பொய்ப்புகழ் வாராது என்க.
சாத்திரம் என்பதும் அன்புடையார் அறிவு மிகுதிப்பாட்டால் இறைவன் பெருமைகளையும் உயிர்களின் சிறுமைகளையும் உலக இயல்புகளையும் திருவருள் வலிமையால் ஒக்க ஆய்ந்து மக்கள் கடைத்தேற அருளிச் செய்ததாகும். எனவேதான் தோத்திரமும் சாத்திரமும் ஆனார்தாமே என்று இறைவனைப் பாடினார் அப்பர் பெருமான்.
தோத்திரமும்
சாத்திரமும் : இவ்விரு திறத்து நூல்களும் பொய்யன்பிலா அடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் வாய்க்கப்பெற்ற மெய் உணர்வாளர்களால் அருளிச் செய்யப்பெற்றவை.இவ்விரு வகையிலும் பல நூல்கள் இருப்பினும் சைவ உலகில் சமயாச்சாரியர் உள்ளிட்ட 27 ஆசிரியர்கள் அருளிய 12 திருமுறைகளே சிறப்பாகத் தோத்திரங்கள் எனப் போற்றப் பெறுவன.
இதேபோல் சந்தானாச்சாரியர் உள்ளிட்ட அறுவர் அருளிச் செய்த பதினான்கு நூல்களே சாத்திரங்கள். (மெய்கண்ட சாத்திரம்) எனப் போற்றப்பெறுவன.
எழுகோடி
மந்திரங்கள்: இந்த அடிப்படையில் பார்த்தால், திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம் தோத்திரத்தின்பாற்படும். ஆனால் இதில் தோத்திரத்தை விட சாத்திரக்கூறுகளே அதிகம் உள்ளன. இது பத்தாம் திருமுறையாகப் போற்றப்பெறுவது."
மந்திரங்கள் எழுகோடி ஆதலினால் மன்னும் அவர் இந்த வகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்து" என்பது திருமுறை கண்ட புராணக் கூற்று. எழுகோடி என்றால் ஏழு கோடி மந்திரங்கள் என்பது பொருள் அல்ல. ஏழு முடிவுகளை உடைய மந்திரங்கள் என்பதே பொருளாகும்.அவையாவன- நமஹா, சுவாஹா, சுவதா, பட், உம்பட், வௌஷட், வஷட் என்பனவாகும்.
நமஹா - ஐஸ்வர்யம் அளிப்பது.
சுவாஹா - தேவதைகளைத் திருப்தி செய்வது.
சுவதா - தைரியம், வசீகரம் கொடுப்பது.
பட் - விக்கினங்களைத் துரத்துவது.
உம்பட் - காமாதிகளைப் போக்குவது.
வௌஷட் - தேவதைகளை இழுப்பது.
வஷட் - தேவதைகளை வசம் செய்வது.
திருமுறைகள் அனைத்துமே மந்திரங்கள் ஆகையினால் ஏழு முடிபுகளை வைத்தே மூவர் தேவாரங்களை 7 திருமுறைகளாக வகுத்தனர்.
பத்தாம் திருமுறை - முதலாம் பகுதி - ஆசியுரை - தொடர்ச்சி... | 2 | 3 | 4 |