எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
20 திருப்பள்ளியெழுச்சி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பதிக வரலாறு :

திரோதான சுத்தி
பள்ளி எழுச்சி - படுக்கையினின்றும் எழுதல். எழுச்சியை விளைக்கும் பாடலை, `எழுச்சி` என்றது ஆகுபெயர். `துயிலும் அரசரை அவர் எழுதற்குரிய காலமாகிய வைகறைக்கண் சென்று, `சூதர்` எனப்படும், நின்றேத்துந் தொழிலவர் அவரைப் புகழ்ந்துகூறி எழுப்புதலாகிய மரபு பற்றி, அவர் கூற்றாகப் பாடாண் திணைப்பாட்டு, புலவரால் பாடப்படும்` என்பதும், `அங்ஙனம் பாடப்படும் அத்துறை, அத்திணையுள், `துயிலெடை நிலை` எனப்படும்` என்பதும்,
``தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச்
சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்``
(தொல் - பொருள் 88) என்பதனான் அறியப்படும். மக்கட் பாடாண் பகுதியாக வரும் அதனை அடிகள் இங்குக் கடவுட் பாடாண் பகுதியாக அருளிச் செய்தார் என்க. இங்குச் சூதர் நிலையில் நிற்பார் அடியவர் களே. இவ்வாற்றால் இது, வைகறைப் பொழுதில் எந்தையார் திருநாம மாகிய நமச்சிவாய (தி.6 ப.93 பா.10) என்பதனைச் சொல்லி விழித்தெழுவார், பின்னர் ஒருதலையாக ஓதும் திருமுறையாயிற்று.
உறக்கமும், விழிப்பும் இல்லாது எஞ்ஞான்றும் ஒருநிலையே யுடைய இறைவனை இங்ஙனம் உறக்கத்தில் ஆழ்ந்து கண் விழியாதான் போல வைத்துப் பாடுதல் குற்றமாகாதோ எனின், ஆகாது; என்னையெனின், உலகத்துத் தலைவராயினார்க்கு அவர் தம் தொண்டர் செய்யும் பணிவிடைகளை எல்லாம், இறைவற்குத் தொண்டராயினார், தாம் அவனிடத்துச் செய்து மகிழ விரும்பும் வேட்கை காரணமாகப் பாடுதலானும், அவர்தம் வேட்கை யுணர்ந்து இறைவனும் அவர்தம் செய்கைக்கு உடம்பட்டு அருளுதலானும் என்க. இவ்வாறன்றி இதனைக் குற்றம் எனின், இறைவனைத் தூய்மை யில்லாதான் போல வைத்து ஆனைந்தும், நீரும், பிறவும் ஆட்டு வித்தலும், அழகில்லாதான் போல மாலை முதலியவற்றால் ஒப்பனை செய்வித்தலும், பசியுடையான்போல உணவூட்டுதலும், பிறவும் எல்லாம் குற்றமாய் ஒழியும்; அஃதின்மையால், இத்திருப்பள்ளி யெழுச்சியும் அன்னதேயாம் என்க.
``எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர், தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை``
(தி.12 பெ. புரா. திருக்குறிப்பு. 51) என உரைத்தருளினமையானும், பூசனையாவன இத் தொடக்கத்தனவன்றிப் பிறிதில்லையாகலானும், இவை இறைவற்கு உவப்பாவனவல்லது, குற்றமாதல் யாண்டையது என விடுக்க. இவற்றைப் பூசனை யென்னாது குற்றம் என்று இகழ்வோர், `புறச்சமயிகள்` என்க. இதனானே, இஃதோர் வழிபாட்டு முறை பற்றிப் பாடியருளியதன்றி, உண்மையாகவே, திருப்பெருந் துறையில் வந்து ஆட்கொண்டருளிய பெருமான் பள்ளிகொண்டிருந்த காலத்து அடிகள் ஏனைய அடியாரோடும் உடன் சென்று நின்ற விடத்துப் பாடியதாகாமையும் அறிக.
இனி, அகப்பாட்டுப் புறப்பாட்டுக்களிடை வேற்றுமை தெரிய மாட்டாமையால், `இத் திருவாசகம் முழுவதும் அகப்பாட்டே` எனத் திரியக்கொண்டு, யாண்டும் தம் மனம் சென்றவாறே உரை கூறுவார், இதனை, `மேற்காட்டிய இலக்கணத்தை உடையது அன்று` எனவும், `இதுவும் தலைவனிடத்துக் காதலுடைய தலைவியும், அவள்தன் தோழியும் முதலாயினாரது கூற்றே` எனவும் கூறித் தம் கொள்கைக்கு மாறாவனவற்றையே தமக்கு மேற்கோளாக எடுத்துக்காட்டிப் பலபட உரைத்துப் போவர்; அவற்றை எல்லாம் ஈண்டு எடுத்துக்காட்டப் புகின், மிக விரியும் என்க,
திருக்கோத்தும்பி முதலாக, திருத்தசாங்கம் ஈறாக மகளிர் கூற்றாக வந்தன பலவற்றையும் முறைப்பட வைத்துக் கோத்து முடித் தமையின், `சூதர்` என்னும் தொழிலவர் கூற்றாக வரும் இதனை இங்கு வைத்துக் கோத்தனர் என்க. துயிலெழுதல், அறியாமையின் நீங்கி அறிவு பெறுதலாதலின், இதற்கு, `திரோதான சுத்தி` எனக் குறிப் புரைத்தனர் முன்னோர். இறைவனது சத்தி ஒன்றே, மலத்திற் கட்டுண்ட உயிர்களிடத்து அம்மலத்தின் ஆற்றலைத் தொழிற்படுத்தி அவை களின் ஆற்றலை மறைப்பதாயும், இம்மறைத்தல் தொழிலால் மலத்தினது சத்தி வலியிழந்து மெலியும் பக்குவகாலத்தில் உயிர்களின் அறிவை விளக்கும் சத்தியாயும் நிற்கும். அவ்விருநிலைகளுள், மறைக்கும் நிலையில் அது, `திரோதான சத்தி` எனப் பெயர்பெறும். மலத்தைச் செலுத்தி மறைப்பை உண்டாக்குதலால், இத்திரோதான சத்தியும், `ஒருமலம்` என்றும் சொல்லப்படும். அம் மறைப்பு நிலை நீங்குதலே, திரோதான மல நீக்கம். அந்நீக்கமே, இங்கு, `திரோதான சுத்தி` என்றதன் பொருள் என்க.
இது, திருப்பெருந்துறையில் அருளிச்செய்யப்பட்டது என்பதே, பதிப்புக்களில் காணப்படுவது. `அடிகள் எங்கிருப்பினும், தம் பணியைத் திருப்பெருந்துறையில் எழுந்தருளித் தம்மை ஆட் கொண்ட திருமேனியிடத்தே செய்யும் நினைவினராகலின், இதனுள் அவ்வாற்றானே, பலவிடத்தும் திருப்பெருந்துறையுறைதலையே ஓதியருளினார்` என்றல் இழுக்காது. இது முழுதும், எண்சீரடி விருத்தத்தால் ஆயது. பள்ளி யெழுச்சி பாடுதல், `புறநீர்மை` என்னும் திறத்தினால் என்பது மரபாகலின், இதனை ஓதுவார் அத்திறத்தானே ஓதுப. பள்ளி யெழுச்சி புறநீர்மையால் பாடப்படும் என்பதனை, ``பாண்வாய் வண்டு நோதிறம் பாட`` (சிலப். அந்தி. 75) என்பதில், ``நோதிறம்`` என்றதற்கு உரைக்கப்பட்ட உரைகளால் அறிக. இவ்வாற் றானே, இவை `பண்ணத்தி` என்பதும் பெறப்படும். தாளத்தொடு கூட்டிப் பாடப்படாமையின், இவை இசைத்தமிழ் எனப்படாவாயின.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.