திருவாசகம்-திருப்பள்ளியெழுச்சி


பண் :

பாடல் எண் : 1

போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

பொழிப்புரை :

என் வாழ்வுக்குத் தாரகமாகிய பொருளே! சேற்றினிடத்து இதழ்களையுடைய தாமரை மலர்கள் மலர்கின்ற குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த, திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! உயர்ந்த இடபக் கொடியை உடையவனே! என்னை அடிமையாக உடையவனே! எம் தலைவனே! வணக்கம். பொழுது விடிந்தது; தாமரை போலும் திருவடிகளுக்கு ஒப்பாக இரண்டு மலர் களைக் கொண்டு சாத்தி அதன் பயனாக உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்கு அருளோடு மலர்கின்ற அழகிய நகையினைக் கண்டு உன் திருவடியைத் தொழுவோம்; பள்ளி எழுந்தருள்வாயாக.

குறிப்புரை :

முதல் - நிதி. ``என்`` என்றது, ``முதல்`` என்றதனோடு இயைய, ``வாழ்`` என்றது இடைநிலையாய், ஏதுப் பொருண்மேல் வந்த வினைத்தொகை நிலைபட அதனோடு தொக்கது. இனி, ``வாழ்`` என்றதனை முதனிலைத் தொழிற் பெயராகக் கொண்டு, `வாழ்விற்கு` என உருபு விரித்தலுமாம். இப்பொருட்கு, முதல், `காரணம்` என்னும் பொருளதாம். `நின் பூங்கழற்கு இணையான துணைமலர்களைக் கையில் கொண்டு ஏற்றி` என்க. ``துணை`` என்றது கூட்டத்தை. ``மலர்கள்`` என்றது, பலவகை மலர்களையும். பொலிவு பற்றி எம் மலரும் இறைவனது திருவடிகளுக்கு ஒப்பாவனவாம். ஏற்றி - தூவி. மலரும் - வெளிப்படுகின்ற. `மலரைக் கொடுத்து, நகையைப் பெறு வோம்` என்பது நயம். `சேற்றின்கண் மலரும்` என இயையும். `ஏற்றுக் கொடி, உயர் கொடி` எனத் தனித்தனி இயைக்க. `முதலாகிய பொருளே, சிவபெருமானே,கொடி உடையாய், எனை உடையாய்,` எம்பெருமானே, போற்றி! (நீ எழுந்தருளினால் நாங்கள்) மலர் கொண்டு ஏற்றி, நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்; பள்ளி எழுந்தருளாய்` என வினைமுடிக்க. ``போற்றி`` என்றது, தலைவர்க்கு ஒரு காரியம் சொல்லுவார், முதற்கண் அவர்க்கு வாழ்த்தும், வணக்க மும் கூறுதலாகிய மரபுபற்றியாம். ``எனை உடையாய்`` என்றதனால், இஃது ஒருவர் கூற்றாகவே அருளிச் செய்யப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 2

அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே. 

பொழிப்புரை :

பெரியோய்! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! அருட்செல்வத்தைக் கொடுக்க வருகின்ற இன்ப மலையே! அலைகளையுடைய கடல் போன்றவனே! சூரியன் தேர்ப் பாகன் இந்திரன் திசையாகிய கீழ்த்திசை அடைந்தான். இருள் முழுதும் நீங்கிவிட்டது. உதய மலையில் உனது திருமுகத்தினின்றும் தோன்று கின்ற கருணையைப் போல, சூரியன் மேல் எழுந்தோறும் உனது கண் போன்ற வாசனை பொருந்திய தாமரை விரிய, அவ்விடத்தில் பொருந் திய கூட்டமாகவும் வரிசையாகவும் விளங்குகின்ற வண்டுகள் இசை பாடுகின்றன. இவற்றைத் திருவுள்ளம் பற்றுக! பள்ளி எழுந்தருள் வாயாக.

குறிப்புரை :

சூரிய உதயத்திற்கு முன்னர்த் தோன்றும் சிவந்த நிறத்தை, `அருணன்` என்றும், `அவன் சூரியனது தேரை ஓட்டுபவன்` என்றும், `அவன் கால் இல்லாதவன்` என்றும் கூறுதல் புராண வழக்கு. ``போய் அகன்றது`` என்றது, ஒரு பொருட்பன்மொழி. ``சூரியன்`` என்றதனை, இறுதியொற்றுக் கெட்டு நின்ற, ``உதயம்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. `முகத்தினது` என்பதில், சாரியை நிற்க, உருபு தொக்கது. ஒப்புப் பொருட்கண் வந்த, ``கருணையின்`` என்னும் இன்னுருபின் ஈறு திரிந்த றகரம், ஓசையின்பம் நோக்கி மெலிந்து நின்றது. நயனக் கடிமலர் - உனது கண்போலும் விளக்கம் பொருந்திய தாமரை மலர். `உதயஞ் செய்த சூரியன், நின் திருமுகத்தினது கருணையைப் போல, மேன்மேல் எழுந்தோறும் தாமரை மலர் மேலும் மேலும் மலர்தலைச் செய்ய` என்பது பொருள். அண்ணல் - தலைமையையுடைய (அறுபதம்). முன்னர், `கோத்தும்பி` என்றது காண்க. இதனை விளியாக்கி, இறைவனைக் குறித்ததாக உரைப்பாரும் உளர். அங்கண் ஆம் - அவ்விடத்து அடைந்த. திரள் நிரை - திரண்ட வரிசைப்பட்ட. அறு பதம் - ஆறுகால்களையுடையவை; வண்டுகள். இவ்வாறே, ``அறுபதம் முரலும் வேணுபுரம்`` (தி.1 ப.128 அடி.25) எனத் திருஞானசம்பந்தரும் அருளிச்செய்தார், அலை கடல் - அலையும் கடல்; இஃது, உவம ஆகுபெயர். `புலரிக் காலமும் நீங்கி, அருணோதயமும், சூரியோதமும் ஆகித் தாமரை மலர்களும் மலர்ந்துவிட்டன; பெருமானே, பள்ளி எழுந்தருள்` என்பது இதன் திரண்ட பொருள்.

பண் :

பாடல் எண் : 3

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 

பொழிப்புரை :

தேவனே! திருப்பெருந்துறை உறை சிவபெரு மானே! யாவரும் அறிதற்கு அரியவனே! எங்களுக்கு எளியவனே! எம் தலைவனே! அழகிய குயில்கள் கூவின; கோழிகள் கூவின; பறவைகள் ஒலித்தன; சங்குகள் முழங்கின; நட்சத்திரங்களின் ஒளி மங்கியது. உதய காலத்து வெளிச்சம் தோன்றுகிறது. எமக்கு அன்புடன் சிறந்த நெருங்கிய வீரக்கழலை அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டுவாயாக! பள்ளியெழுந்தருள்வாயாக.

குறிப்புரை :

குருகுகள் - (பிற) பறவைகள். இயம்பின - ஒலித்தன. ஓவின - நீங்கின. தாரகை - விண்மீன். `தாரகைகள் ஒளி நீங்கின` என உரைக்க. `உதயத்து ஒளி ஒருப்படுகின்றது` என மாற்றிக் கொள்க. ஒருப்படுகின்றது - நிலத்தின்கண் வந்து பொருந்தாநின்றது. ``ஒருப் படுகின்றது`` என ஒருமையாற் கூறினமையின், ``ஒளி`` என்றதற்கு, `கதிர்கள்` என்றும், ``ஒருப்படுகின்றது`` என்றதற்கு, `ஒருங்கு திரண்டன` என்றும் உரைத்தல் கூடாமை யறிக.

பண் :

பாடல் எண் : 4

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

பொழிப்புரை :

திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! அடியேனையும் அடிமை கொண்டு, இனிய அருளைச் செய்கின்ற எம் தலைவனே! இனிய ஓசையையுடைய வீணையை யுடையவரும் யாழினையுடையவரும் ஒரு பக்கத்தில், வேதங்களோடு தோத்திரம் இயம்பினர் ஒருபக்கத்தில்; நெருங்கிய தொடுக்கப்பட்ட மலர்களாகிய மாலைகளை ஏந்திய கையை உடையவர் ஒரு பக்கத்தில்; வணங்குதலை உடையவரும், அழுகை உடையவரும், துவளுதலை யுடையவரும் சூழ்ந்து ஒரு பக்கத்தில்; தலையின் மீது, இருகைகளை யும் குவித்துக் கும்பிடுபவர் ஒரு பக்கத்தில் உள்ளார். அவர்களுக் கெல்லாம் அருள்புரிய பள்ளி எழுந்தருள்வாயாக.

குறிப்புரை :

இதனால், வீணையும், யாழும் வேறுவேறு என்பது விளங்கும். ``பண்ணொடியாழ் வீணை பயின்றாய் போற்றி`` என்ற திருநாவுக்கரசர் திருமொழியும் காண்க. ``இன்னிசை`` என்றது, இரண்டையுங் குறித்தேயாம்.
இருக்கு - வேதம். தோத்திரம் - பிற பாட்டுக்கள். `திருப் பதிகம்` என்னாது, பொதுப்பட, ``தோத்திரம்`` என்றமையால், இது, தேவாரத் திருமுறைகளைக் குறியாமை அறிக. துன்னிய - பிணைத்துக் கட்டிய. பிணை - மாலை. `மலர்ப் பிணைக் கையினர்` என மாற்றுக. ``ஒருபால்`` என்றதனை, ``தொழுகையர், அழுகையர்`` என்ப வற்றுக்கும் கூட்டுக. தொழுதல் - மார்பிற்கும், முகத்திற்கும் நேராகக் கைகுவித்துக் கும்பிடுதல். துவள்கை - மெலிதல்; இஃது அருள் பெறாமையால் வருவது. ஒருபால் என்பவற்றின் பின்னர், `நிற்கின்றனர்` என்பன, எஞ்சிநின்றன.

பண் :

பாடல் எண் : 5

பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 

பொழிப்புரை :

குளிர்ச்சியைக் கொண்ட, வயல் சூழ்ந்த திருப் பெருந்துறைக்கு அரசனே! நினைத்தற்கும் அருமையானவனே! எங்கள் எதிரில் எழுந்தருளி வந்து, குற்றங்களைப் போக்கி எங்களை ஆட்கொண்டருளுகின்ற எம் பெருமானே! உன்னை, எல்லாப் பூதங்களிலும் நின்றாய் என்று பலரும் சொல்வதும், போதலும் வருதலும் இல்லாதவன் என்று அறிவுடையோர் இசைப்பாடல்களைப் பாடுவதும்; ஆனந்தக் கூத்தாடுவதும் தவிர உன்னை நேரே பார்த்தறிந் தவர்களை நாங்கள் கேட்டு அறிந்ததும் இல்லை. ஆயினும், யாங்கள் நேரே காணும்படி பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

குறிப்புரை :

பின்னர், ``புலவோர்`` என்றலின், முதற்கண்` `பலரும்` என்பது வருவிக்கப்படும். இடைக்குறையாய் நின்ற, `நின்னை` என்பதை முதலிற் கூட்டுக. ``எனின்`` என்றதன் பின், `என்றல்` என்பது எஞ்சிநின்றது. ``புலவோர்`` என்றது, ஆடல் வல்லாரையும் குறித்தாதலின், வாளா, ``ஆடுதல்`` என்றார். ``அல்லால்`` இரண்டும், வினைக்குறிப்புச் செவ்வெண்ணாய் நின்றன.
``உனைக் கண்டறிவாரை`` என்றது, `ஏனைப் பொருள்களைக் கண்டறிதல் போல, பாச அறிவு பசு அறிவுகளால் உன்னையும் கண்டறிவாரை` என்றபடி. `இவ்வாறு சிந்தனைக்கும் அரியவனாய் இருப்பவனே, இருந்தும் எங்கள் முன்வந்து எம்மை ஆண்டு அருள்புரியும் எம்பெருமானே, பள்ளி எழுந்தருள்வாய்` என்க.

பண் :

பாடல் எண் : 6

பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 

பொழிப்புரை :

உமையம்மைக்கு மணவாளனே! கிண்ணம் போன்ற தாமரை மலர்கள் விரியப்பெற்ற குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! இந்தப் பிறவியை நீக்கி எங்களை ஆட்கொண்டு அருள் செய்கின்ற எம் பெருமானே! மனவிரிவு ஒடுங்க பற்றற்று இருந்து உணருகின்ற உன் அன்பர்கள் உன்பால் அடைந்து பிறவித்தளையை அறுத்தவராய் உள்ளவர்களும் மை பொருந்திய கண்களையுடைய பெண்களும் மனித இயல்பில் நின்றே உன்னை வணங்கி நிற்கின்றார்கள்; பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

குறிப்புரை :

`பரப்பு` என்பது இடைக்குறைந்து, `பப்பு` என நின்றது. பரப்பு - பரத்தல்; விரிதல், இதற்கு வினைமுதலாகிய `மனம்` என்பது வருவிக்க. `மனம் பரப்பற` எனவே, `குவிந்து ஒருவழிப்பட்டு` என்ற தாயிற்று. வீடு - வீட்டுநிலை; என்றது, நிட்டையை. வந்து - பிறந்து. `பிறந்து பந்தனை அறுத்தார்` என்றது, `பிறப்பின் பயனைப் பெற்றுவிட்டார்` என்றவாறு. இதன்பின், `அவ்வாறாயினும்` என்பது எஞ்சி நின்றது. மைப்பு - மைத்தல்; மைதீட்டப்படுதல். ``மைப்புறு கண்ணியர்`` என்றதன்பின், ஒடு உருபு விரிக்க. மானுடத்து இயல்பின்- மகளிர் மேல் நிகழும் மானுடரது இயல்பை உடையவராய்; என்றது, `காமத்தை வெறாதார் போல` என்றவாறு. இன்னோரன்ன வழி பாடுகள் எல்லாம், இல்லறத்தைத் துறவாது அதனோடு கூடி நிற்பார்க்கே இயல்வனவாகலின், அவ்வாற்றான் வந்துநின்ற அடியார் களைக் கண்டு, அவரது உண்மை நிலையையும் உற்றுணர்ந்து அடிகள் இவ்வாறு அருளிச் செய்தார் என்க. செப்பு உறு - கிண்ணத்தின் தன்மையை எய்தும் (தாமரை மலர்கள்). மலரும் - அவ்வாற்றான் மலர்கின்ற. இப்பிறப்பு - எடுத்துள்ள இவ்வுடம்பு. அதனை அறுத்துப் பரமுத்தியை அருளுதல் மேல் நிகழற்பாலதாகலின், ``அருள்புரியும்`` என எதிர்காலத்தாற் கூறியருளினார்.

பண் :

பாடல் எண் : 7

அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

பொழிப்புரை :

பழம் பொருளானது கனியின் சுவைபோன்றது எனவும், அமுதத்தை ஒத்தது எனவும் அறிவதற்கு அருமையானது எனவும், அறிதற்கு எளிமையானது எனவும் வாதிட்டு, தேவரும் உண்மையை அறியாத நிலையில் எம்பெருமான் இருப்பார்; இதுவே அப்பரமனது திருவடிவம்; திருவுருக்கொண்டு வந்த சிவனே அப்பெருமான், என்று நாங்கள் தெளிவாகச் சொல்லும் படியாகவே, இவ்வுலகத்தில் எழுந்தருளுகின்ற, தேன் பெருகுகின்ற சோலை சூழ்ந்த திருவுத்தரகோசமங்கையில் எழுந்தருளி இருப்பவனே! திருப் பெருந்துறைக்கு அரசனே! எம் பெருமானே! எம்மைப் பணி கொளும் விதம் யாது? அதனைக் கேட்டு அதன்படி நடப்போம். பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

குறிப்புரை :

`முதற்பொருளை, `அது` என்றல் வடமொழி வழக்கும், `அவன்` என்றல் தமிழ் வழக்குமாதலின், `முதற்பொருள் பழத்தின் சுவைபோல்வது என்றாதல், அமுதம் போல்வது என்றாதல், அறிதற்கு அரியது என்றாதல், அறிதற்கு எளியது என்றாதல் தேவரும் அறியாராக, யாங்கள் அம்முதல்வன் இவனே என்றும், அவன் பெற்றியும் இதுவே என்றும் இனிதுணர்ந்து உரைக்குமாறு, இந்நில வுலகத்தின்கண்ணே எழுந்தருளிவந்து எங்களை ஆண்டுகொள்ளும், உத்தரகோசமங்கைக் கண் உள்ளவனே, திருப்பெருந்துறைத் தலைவனே, எம்பெருமானே, இன்று நீ எம்மைப் பணிகொள்ளுமாறு எதுவோ அதனைக் கேட்டு நாங்கள் மேற்கொள்வோம்; பள்ளி எழுந்தருள்` என்பது இத்திருப்பாட்டின் பொருளாயிற்று.
``பழச்சுவையென`` என்றது முதலிய நான்கும், `கறுப்பென்றோ சிவப்பென்றோ அறியேன்` என்பதுபோல, இன்னதென ஒருவாற்றானும் அறியாமையைக் குறிக்கும் குறிப்பு மொழிகளாய் நின்றன. அதனால், ``என`` நான்கும் விகற்பப் பொருளவாயின. `அறியாராக` என, ஆக்கம் வருவித்து உரைக்க. செய்யுட்கு ஏற்ப அருளிச் செய்தாராயினும், `அவன் , இவன்` என மாற்றி முன்னர் வைத்துரைத்தலும், `இங்கெழுந்தருளி எங்களை ஆண்டுகொள்ளும்` என மாற்றி உரைத்தலுமே கருத்தாதல் அறிந்து கொள்க. `அமரரும் அறியாராக இங்கு எழுந்தருளி எம்மை ஆண்டு கொள்ளும்` என்றது, அத்தகைய அவனது அருளின் பெருமையை விதந்தவாறு. இவ்வாறு திருவருளின் சிறப்பை விதந்தோதி, ` எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்` என, அத் திருவருளின் வழி நிற்றலையே பொருளாக வைத்து அருளிச் செய்தமையின், அங்ஙனம் நிற்க விரும்புவார்க்கு இப்பகுதியுள் இத்திருப்பாட்டு இன்றியமையாச் சிறப்பிற்றாதலை ஓர்ந்துணர்ந்துகொள்க.

பண் :

பாடல் எண் : 8

முந்திய முதல்நடு இறுதியு மானாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. 

பொழிப்புரை :

அருமையான அமுதமே! எப்பொருளுக்கும் முற்பட்ட முதலும், நடுவும் முடிவும் ஆனவனே! மும்மூர்த்திகளும் உன்னை அறியமாட்டார்; வேறு யாவர் அறியக்கூடியவர். பந்தை ஏந்திய விரல்களை உடைய உமையம்மையும் நீயுமாக உன்னுடைய அடியார்களுடைய பழைய சிறு வீடுதோறும் எழுந்தருளின மேலானவனே! சிவந்த நெருப்பை ஒத்த வடிவத்தையும் காட்டித் திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற திருக்கோயிலையும் காட்டி, அழகிய தண்ணிய அருளாளன் ஆதலையும் காட்டி வந்து ஆட்கொண் டவனே! பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

குறிப்புரை :

முந்திய முதல் - முத்தொழில்களுள் முற்பட்ட தோற்றம். உலகிற்கு, `தோற்றம், நிலை, இறுதி` என்னும் முத்தொழிலையும் உளவாக்குதல் பற்றி இறைவனை அவையேயாக அருளிச் செய்தார். இதனானே, ஒருவனேயாய் நிற்கின்ற அவன், மூவராய் நிற்றலும் கூறியவாறாயிற்று. ஆகவே, ``மூவரும் அறிகிலர்`` எனப்பின்னர்க் கூறிய மூவர், அம் முத்தொழிலுள் ஒரோவொன்றைச் செய்யும் தொழிற்கடவுளராதல் இனிது விளங்கும். முத்தொழிலின் முதன் மையையும் ஒருங்குடைய முதல்வன் அருள்காரணமாக மூவராய் நிற்கும் நிலைகளை, `சம்பு பட்சம்` எனவும், புண்ணியங் காரணமாக முதற்கடவுளது தொழில்களுள் ஒரோவொன்றைப் பெற்றுநிற்கும் கடவுளர் பகுதியை, `அணு பட்சம்` என்றும் ஆகமங்கள் தெரித்துக் கூறும். அதனால்,
``ஆதி - அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
அரனாய்அழிப்பவனும் தானே``, -ஞான உலா -5
``வீரன் அயன்அரி, வெற்பலர் நீர்,எரி பொன்எழிலார்
கார்,ஒண் கடுக்கை கமலம் துழாய்,விடை தொல்பறவை
பேர்,ஒண் பதி,நிறம்,தார்,இவர் ஊர்திவெவ் வேறென்பரால்
ஆரும் அறியா வகைஎங்கள் ஈசர் பரிசுகளே``
-தி.11 பொன்வண்ணத்தந்தாதி - 95
என்றாற்போலும் திருமொழிகள், சம்பு பட்சம் பற்றி வந்தனவும்,
``திருமாலும் நான்முகனும் தேர்ந்துணரா தன்றங்
கருமா லுறஅழலாய் நின்ற - பெருமான்``
-ஞான உலா 1
என்றாற்போலும் திருமொழிகள் அணு பட்சம் பற்றி வந்தனவுமாதல் தெளிவாம்.
``மூவரும்`` என்ற உம்மை, சிறப்பு. ``அறிகிலர்`` என்றதன் பின், `எனின்` என்பது வருவித்து, `உன்னை மூவர்தாமே அறிய மாட்டார் எனின், மற்று யாவர் அறிய வல்லார்` என உரைக்க. இத் துணை அரியவனாகிய நீ, உன் அடியவரது எளிய குடில்தோறும் உன் தேவியோடும் சென்று வீற்றிருக்கின்றாய்` என்பார், ``பந்தணை விரலியும் ... ... எழுந்தருளிய பரனே`` என்று அருளினார். பந்து அணை விரலி - பந்தைப் பற்றி ஆடும் விரலை உடையவள். `பந்து - கை` எனக் கொண்டு, அதன்கண் பொருந்திய விரல் என்று உரைப் பினுமாம். இவ்வாறு உரைப்பின், கையினது அழகைப் புகழ்ந்த வாறாம். அடியார் பழங்குடில் தோறும் எழுந்தருளியிருத்தல், அங்கு அவர்கள் நாள்தோறும் வழிபடுமாறு திருவுருக்கொண்டு விளங்குதல். இவ்வுருவத்தை, `ஆன்மார்த்த மூர்த்தி` என ஆகமங்கள் கூறினும், இஃது அவ்வில்லத்துள்ளார் அனைவர்க்கும் அருள்புரிதற்கு எழுந் தருளிய மூர்த்தி என்பதே கருத்து என்க. இதனானே, `என்றும் உள்ள மூர்த்தியாக எழுந்தருள்வித்துச் செய்யும் ஆன்மார்த்த பூசை, இல்லறத் தார்க்கும், மாணாக்கர் வழிபட இருக்கும் ஆசிரியர்க்குமே உரியது` என்பதும், `ஏனையோர்க்கு அவ்வப்பொழுது அமைத்து வழிபட்டுப் பின் விடப்படும் திருவுருவத்திலும், திருக்கோயில்களில் விளங்கும் திருவுருவத்திலும் செய்யும் ஆன்மார்த்த பூசையே உரியது` என்பதும் பெறப்படும். இனி, `பழங்குடில்தொறும்` எழுந்தருளுதல், விழாக் காலத்து` என்றும் சொல்லுப; `எழுந்தருளிய` என இறந்த காலத்தாற் கூறினமையின், அது, பொருந்துமாறு இல்லை என்க. ``பழங்குடில் தொறும்`` என எஞ்சாது கொண்டு கூறினமையின், `இது, சில திரு விளையாடல்களைக் குறிக்கும்` என்றலும் பொருந்தாமை அறிக.
திருப்பெருந்துறையில் இறைவன் குருந்தமர நிழலில் எழுந்தருளியிருந்து அடிகட்குக் காட்சி வழங்கிய இடத்தையே அடிகள், ``திருப்பெருந்துறை உறைகோயில்`` என்று அருளினார்; இது, `திருப்பெருந்துறைக்கோயில்`என்னாது, ``திருப்பெருந்துறை உறைகோயில்`` என்றதனானே பெறப்படும். `திருப்பெருந்துறைக்கண் நீ எழுந்தருளியிருந்த கோயில்` என்பது இதன் பொருளாதல் வெளிப் படை. இவ்விடத்தையே பின்னர் அடிகள் கோயில் ஆக்கினார் என்க.

பண் :

பாடல் எண் : 9

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 

பொழிப்புரை :

விண்ணில் வாழும் தேவர்களும், அணுகவும் முடியாத, மேலான பொருளாயுள்ளவனே! உன்னுடைய தொண் டினைச் செய்கின்ற அடியார்களாகிய எங்களை மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே! பரம்பரை அடியாராகிய எங்களுடைய கண்ணில் களிப்பைத் தருகின்ற தேன் போன்றவனே! கரும்பு போன்றவனே! அன்பு செய்கின்ற அடியவரது எண்ணத்தில் இருப்பவனே! உலகம் அனைத்துக்கும் உயிரானவனே! பள்ளியினின்றும் எழுந்தருள் வாயாக.

குறிப்புரை :

`அருள்பெற மாட்டாமையேயன்றி அணுகவும் மாட்டார்` என்றமையின், ``நண்ணவும்`` என்ற உம்மை இழிவு சிறப்பு. விழுப்பொருள் - சீரிய பொருள். `தொழும்பு` என்னும் மென்றோடர்க் குற்றுகரத்தின் மெல்லெழுத்து, வேற்றுமைப் புணர்ச்சிக்கண் வல்லொற்றாய்த் திரிந்தது. `தொழும்பினை உடைய அடியோங்கள்` என்க. தொழும்பு - தொண்டு. ``வந்து`` என்னும் வினையெச்சம், `வருதலால்` எனக் காரணப்பொருட்டாய் நின்றது. எனவே, `வாழ்தற்பொருட்டு அடியோங்களை மண்ணகத்தே வரச்செய்தாய்` என்பது கருத்தாயிற்று. `மண்ணுலகத்திலன்றி விண்ணுலகத்தில் ஞானங் கூடாது` என்பதனை அடிகள் யாண்டும் குறிப்பித்தல் அறிக. களி - களிப்பு. `எண்` என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயராய், எண்ணுதற் கருவியாகிய மனத்தைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 10

புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. 

பொழிப்புரை :

திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே! திருமாலாகிய அவன், பூமியில் சென்று பிறவாமையினால் யாம் வீணாகவே நாளைக் கழிக்கின்றோம்; இந்தப் பூமியானது சிவபெருமான் நாம் உய்யும்படி அடிமை கொள்கின்ற இடமென்று பார்த்து விருப்பத்தை அடையவும், பிரமன் ஆசைப்படவும் அர்ச்சிக்கவும் உனது பரந்த உண்மையான திருவருட்சத்தியும், நீயுமாகப் பூமியில் எழுந்தருளி வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே! அருமையான அமுதம் போன்றவனே! திருப்பள்ளி யினின்றும் எழுந்தருள்வாயாக.

குறிப்புரை :

பொருள்கோள்: `திருப்பெருந்துறை உறைவாய், சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு இந்தப்பூமி; ஆதலின் புவனியில் போய்ப் பிறவாமையின், நாம் நாள் அவமே போக்குகின்றோம் என்று நோக்கித் திருமாலாம் ... ... எழுந்தருளாயே`.
புவனி - புவனம்; என்றது, மண்ணுலகத்தை. `இந்த` என்றது, அடிகள் தம் கூற்றாக அருளியது. இடத்தை, ``ஆறு`` என்றார், வாயிலாதல் பற்றி. அவர்தம் ஏக்கறவு மிகுதியை உணர்த்தற்கு, ``விருப்பெய்தவும், ஆசைப்படவும்`` எனத் தனி விதந்தோதி யருளினார். அலர்ந்த - பரந்த; மெய்ம்மை - நிலைபேறு. `கருணை யொடு` என அடையாக்காது, ``கருணையும்`` என வேறு பொருளாக ஓதினார், அதன் அருமை புலப்படுத்தற்கு. அவனி - மண்ணுலகு. பாசத்தை அறுத்து ஞானத்தை எய்துவிக்கும் திறன் நோக்கி. ``வல்லாய்`` என்றும், ஞானத்தை எய்தியபின், இன்ப உருவாய் விளங்குதல்பற்றி, ``ஆரமுதே`` என்றும் அருளிச்செய்தார்.
சிற்பி