உரைமாட்சி தொடர்ச்சி... | 12 |

தலைவாயில் முகப்பு பதிகத் தலைப்ப

வினையெச்சம், வினைமுற்று, ஒருமைஉருபு,

பன்மையுருபு பொதுவினை பற்றிய சில செய்திகள்:

முத்தம் திங்களின் வாய்ந்து அளிவளர் வல்லி அன்னாய் 16 - வாய்ந்து என்பது வாய்ப்ப என்பதன் திரிபு ஆகலின் அளிவளர் என்னும் பிறவினை கொண்டது. கொள்ளப்படாது என்பது 87 வினைமுதல் மேலும் செயப்படுபொருள் மேலும் அன்றி வினைமேல் நின்ற முற்றுச்சொல், அகத்தின்னா வஞ்சரையஞ்சப்படும் (குறள் 824) என்பது போல. பைங்கார்வரை மீன்பரப்பி 130 - வினை முதல் அல்லாத கருவிமுதலியன அவ்வினைமுதல் வினைக்குச் செய்விப்பன ஆதலின் பரப்பி எனச் செய்விப்பதாகக் கூறினார். வன்மாக்களிற்றொடு சென்றனர் 338 - களிற்றுத் தானை சிறந்தமையின் ஒடு உயர்பின்கண் வந்ததாம். வேறு வினை ஒடுவாய்க் களிற்றினை உடையவராய்ச் சென்றார் என்பதுபட நின்றது எனினும் அமையும். ஊர்ந்தகளிறு என்று ஒடு கருவிப் பொருட்கண் வந்தது எனினும் அமையும். ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து 74 சாந்தும் எருக்கும் என இரணடாகலின் ஈசன எனப் பன்மை உருபு கொடுத்தார். விலங்கலைக் கால்விண்டு 24- விண்டு என்பது பிளந்து என்பது போலச் செய்வதன் தொழிற்கும் செய்விப்பதன் தொழிற்கும் பொது. இத்தகைய அரிய செய்திகள் இவ்வுரையிற் பல.

குறிப்பெச்சம்:

பாடலில் இடம் பெறாமல் பாடற்பொருளை நிரப்புவதற்குச் சில சொற்கள் எஞ்சி நிற்பன ஆயின் அவை குறிப்பெச்சம் எனப்படும். சில பாடல்களின் விளக்கவுரையில் உரையாசிரியர் குறிப்பெச்சங் களைச் சுட்டியுள்ளார்.

116ஆம் பாடலுரையில் இது குறிப்பெச்சமாதலின் ஆண்டுவா என்பது கருத்து என்றும் 152ஆம் பாடலுரையில் இவ்வாறு வினாவத் தலைவன் ஒன்றனை உட்கொள்ளும் என்று கருதிக் கூறினமையின் இது குறிப்பெச்சம் என்றும் 163ஆம் பாடலுரையில் இந்தீவரம் இவை காண் என்பது குறிப்பெச்சம் என்றும் சுட்டிச் செல்லும் பேராசிரியர் பாடலது தலைப்பின் விளக்கத்தில் குறிப்பெச்சச் செய்தி அறியக்கிடத்தலின். குறிப்பெச்சங்களை விரித்து விளக்கவில்லை.

அடைகள் பொருளில வாதல்:

அடைமொழியாய் நிற்கும் சொல்லின் பொருள் பின்வரும் பிறிதொன்றால் பெறப்படுமாயின், அவ்வடைமொழி பொருளின்றி வாளா நிற்பதாய்க் கூறும் மரபு பற்றி உரையாசிரியர், தன்பூங்கழலின் துணர்ப்போது 17-பூங்கழல் பூப்போலுங்கழல் என உவமைத் தொகையாய்க் கழல் என்னும் துணையாய் நின்றது என்றும், கருங்கண்ணனை அறியாமை நின்றோன் 53 - கண்ணன் என்பது கரியோன் என்றும் பெயரதொரு பாகதச் சிதைவு. அஃது அப்பண்பு குறியாது ஈண்டுப் பெயராய் நின்றமையின் கருங்கண்ணன் என்றார், சேற்றிற்பங்கயம் போல என்றும், மலைச்சிலம்பா 128 - சிலம்பன் என்பது அதனை உடையான் என்னும் பொருள் நோக்காது ஈண்டுப் பெயராய் நின்றது என்றும் கூறுவர்.

ஓரிடச் சொல் வேறிடத்து வருதல்:

படர்க்கைச் சொல் முன்னிலையிலும் தன்மையிலும், தன்மைச்சொல் முன்னிலையிலும் இந்நூலுள் வந்துள்ளமையை எடுத்துக் காட்டிச் செல்கின்றார் உரையாசிரியர்.

92ஆம் பாடலுரையில் அண்ணல் என்பது நீ என்னும் பொருளில் முன்னிலைக் கண்ணும், கொடிச்சியர் என்பது நாங்கள் என்னும் பொருளில் தன்மைக்கண்ணும் வந்தன என்றும் 164ஆம் பாடலுரையில் நாம் என்னும் முன்னிலை உளப்பாட்டுத்தன்மை உயர்வு தோன்ற முன்னிலைக்கண் வந்தது என்றும் காட்டுவன அதற்குச் சில சான்றுகள்.

நுட்பமான இலக்கண விளக்கங்கள்:

இவ்வுரையாசிரியர் நுட்பமான இலக்கணச் செய்திகளை நூல் நெடுக ஆட்டாண்டு வழங்கியுள்ளார். அவற்றுட் சிலவற்றை ஈண்டுக் காண்பாம்.

குற்றியலுகரத்தின் மேல் உயிரேறி முடியுமாகலின், 34ஆம் பாடலுரையில் நின்றதுவே என்புழி வகரம் சந்தம் நோக்கி வந்தது விரிக்கும்வழி விரித்தலின் பாற்படும். 286ஆம் பாடலுரையில் பாலன் என்பது பெண்பாலை உணர்திய பால்மயக்கம் அதிகாரப்புறநடையால் கொள்ளப்படும். 66ஆம் பாடலுரையில் மைஏர் குவளைக்கண் என்பதில் ஏர் குவளை என்னும் இயல்பு, புறனடையாற் கொள்க. 56 ஆம் பாடலுரையில் பேதையரே என உயர்திணைப் பெயர் சிறுபான்மை ஏகாரம் பெற்று விளி ஏற்றது. (இன்மை என்ற ஒன்றே உண்மை, உடைமை என்ற இரண்டற்கும் மறுதலையாய் வருவது.) 245 ஆம் பாடலுரையில் தீங்கையிலா என்புழி இன்மை உடைமைக்கு மறுதலையாகிய இன்மை. 25ஆம் பாடலுரையில் நோக்கிற்கு என்னும் நான்காவது நோக்கினால் என மூன்றாவதன் பொருளில் வந்தது. 264ஆம் பாடலுரையில் செல்வரிது என்பது செல்வுழிக்கண் என்பது போல மெய்யீற்று உடம்படு மெய். (மெய்யீற்று உடம்படுமெய் என்பது நச்சினார்க்கினியருக்கும் உடன்பாடாகும்.)

இறையனார் களவியலுரைச் செய்திகள்:

பேராசிரியர் பாடற் செய்தியைக் கிளவி என்றே குறிப்பிடுவர். கிளவித் தலைப்புக்களும், நூற்பாக்களும், கொளுக்களும் தமக்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றியமையின், அவற்றிற்கு விளக்கம் கூறுதலே இவர் பணியாக அமைந்தது. தமது உரையில் இறையனார் அகப்பொருள் நூற்பாக்கள் எட்டனை எடுத்துக்காட்டியுள்ள பேராசிரியர் அந்நூலுரைச் செய்திகள் பலவற்றையும் எடுத்தாண்டுள்ளார். அவற்றுட் சில.

18ஆம் பாடலுரையில் இயற்கைப்புணர்ச்சி எனினும் தெய்வப்புணர்ச்சி எனினும் முன்னுறு புணர்ச்சி எனினும் காமப்புணர்ச்சி எனினும் ஒக்கும். இடந்தலைப்பாடு என்னுந்தலைப்பின் கீழ் - பாங்கற் கூட்டம் நிகழாதாயின் இடந்தலைப்பாடு நிகழும், இடந்தலைப்பாடு நிகழாதாயின் பாங்கற்கூட்டம் நிகழும். மதியுடம் படுத்தல் என்னுந் தலைப்பின்கீழ் - இரண்டனுள் ஒன்றாற் சென்றெய்திய பின்னர்த் தெருண்டு வரைதல் தலை; தெருளானாயின் அவள் கண்ணாற் காட்டப்பட்ட காதற்றோழியை வழிபட்டுச் சென்றெய்துதல் முறைமையென்ப. 175ஆம் பாடல் உரையில், (காமம் மிக்க கழிபடர் கிளவி முதலிய) இவற்றைத் தலைமகன் கேட்பின் வரைவானாம்; தோழி கேட்பின் வரைவு கடாவுவாளாம்; கேட்பாரில்லையாயின் அயர்வுயிர்த்துத் தானே ஆற்றுதல் பயன். 293ஆம் பாடலுரையில் கிளிகடியும் பருவம் என்றதனால் கற்பினொடு மாறுகொள்ளாமை முதலியன கூறினாளாம்.

மெய்ப்பாடும் பயனும்:

திருக்கோவையார் பாடல் தோறும் மெய்ப்பாடும் பயனும் பேராசிரியரால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. மெய்ப்பாட்டொடு பயனை எடுத்துக் காட்டும் சிறப்பினைப் பிற்கால உரையாசிரியருள் நற்றிணைக்கு உரைவகுத்த நாராயணசாமி ஐயரிடமே காண்கின்றோம்.

மெய்ப்பாடுகளை நுணுக ஆராய்ந்து திருக்கோவையார் பாடல்கள் சிலவற்றில், அழுகையைச் சார்ந்த நகை, அழுகையைச் சார்ந்த இளிவரல், அழுகைச் சார்ந்து வருத்தம் பற்றிவந்த இளிவரல், அழுகையைச் சார்ந்த பெருமிதம், அழுகையைச் சார்ந்த உவகை, இளிவரலைச் சார்ந்த நகை, இளிவரலைச் சார்ந்த பெருமிதம், மருட்கையைச் சார்ந்த அச்சம், மருட்கையைச் சார்ந்த பெருமிதம், அச்சத்தைச் சார்ந்த நகை, அச்சத்தைச் சார்ந்த இளிவரல், அச்சத்தைச் சார்ந்த மருட்கை, அச்சத்தைச் சார்ந்த பெருமிதம், பெருமிதம் சார்ந்த நகை, பெருமிதம் சார்ந்த மருட்கை, உவகையைச் சார்ந்த அழுகை, உவகையைச் சார்ந்த மருட்கை, உவகையைச் சார்ந்த பெருமிதம், உவகையைச் சார்ந்த வெகுளி என்று இரண்டு மெய்ப்பாடுகளை விரவிக்கூறியுள்ள சிறப்புப் பேராசிரியருக்கே உரியதாகும்.

ஏனைய பாடல்களில் தனி மெய்ப்பாடுகளே கூறப்பட்டுள்ளன. "கண்ணினும் மனத்தினும் திண்ணிதின் உணரும், உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரிப்பின், நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே" (தொல். பொருள். மெய்ப்பாடு. 27) ஆதலின், இங்ஙனம் மெய்ப்பாடுகளைக் கூர்த்து உணர்ந்து பாடல் தோறும் தெரிவித்தல் இவ்வுரையாசிரியருடைய நுண்மாண் நுழை புலத்தை நுவல்வதாகும். அகப்பொருள் கோட்பாடுகளை நன்கு மனத்துட்கொண்டு ஒவ்வொரு பாடலுக்கும் பயன் வரையும் திறத்திலும் இவர் நுண்ணறிவு புலப்படுகிறது.

இறைச்சி:

பாடலிற் பயிலும் பொருட்புறத்ததாகும் இறைச்சியிற் பிறக்கும் பொருளினைத் திறத்தியல் மருங்கின் தெரிந்துரைக்கும் பேராசிரியர் திறத்தினை 96 ஆம் பாடலுரையில் காண்கின்றோம். ஒன்றனை ஒன்றாக ஓர்க்கும் நாடன் ஆதலான் அணங்கலர் சூடாத எம்மைச் சூடுவேமாக ஓர்ந்தாய் என்பது இறைச்சிப்பொருள். ஒப்புமையான் அஞ்சப்படாததனையும் அஞ்சும் நிலமாகலின் எங்குலத்திற்கேலாத அணங்கலரை யாம் அஞ்சுதல் சொல்ல வேண்டுமோ என்பது இறைச்சி எனினும் அமையும்.

உள்ளுறை:

அகப்பொருளுக்கு மிக இன்றியமையாத பொருள் உள்ளுறை ஆகும். இவ்வுள்ளுறை உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என ஐவகைப்படும். இவ்வுரைகாரர் உள்ளுறை உவமம் என்ற பெயரை 99, 128, 377ஆம் மூன்று பாடல்களின் உரையிலேயே குறிப்பிட்டுள்ளார். ஏனைய இடங்களில் உள்ளுறை என்றே குறிப்பிட்டுள்ளவை சுட்டு என்ற உள்ளுறையில் அடங்கும் போலும். ஏனை உவமம் உள்ள இடத்து இந் நான்கடிப் பாடல்களில் உள்ளுறை உவமம் அமைவது இன்று என்பது இவர் கருத்தாகும். (182)

99 ஆம் பாடலுரையில் மந்தி உயிர் வாழ்வதற்குக் காரணமாகிய வற்றைக் கடுவன் தானே கொடுத்து மனமகிழ்வித்தாற்போல அவள் உயிர் வாழ்தற்குக் காரணமாகிய நின் வார்த்தைகளை நீயே கூறி அவளை மனமகிழ்விப்பாயாக என உள்ளுறை உவமம் காண்க என்றும்,

128ஆம் பாடலுரையில், யாவருமறியா இவ் வரைக்கண் வைத்த தேன் முதிர்ந்துக்கு அருவி போன்று எல்லாரும் காணத் திசைதிசை பரந்தாற் போல, கரந்த காமம் இவள் கதிர்ப்பு வேறுபாட்டால் புறத்தார்க்குப் புலனாய் வெளிப்படாநின்றது என உள்ளுறையுவமை ஆயினவாறு கண்டு கொள்க என்றும், 377 ஆம் பாடலுரையில் உள்ளுறையுவமம் வெளிப்பட நின்றது என்றும் கூறியுள்ளார்.

133, 159, 168, 250, 252, 254, 260, 265, 276, 369, 381 ஆகிய பாடலுரைகளில் உள்ளுறைகள் காணப்படுகின்றன. இவை சுட்டு என்னும் உள்ளுறையின் பாற்படலாம். ஆனால், இவை எவ்வுள்ளுறையைச் சாரும் என்பதனைப் பேராசிரியர் தெளிவாகக் குறிப்பிட்டிலர்.

யாப்பு:

யாப்பு அமைதிக்கு ஏற்ற பாடவேறுபாடுகளையே பேராசிரியர் தமது உரையில் குறிப்பிட்டிருத்தலின் இவர் யாப்புப்பற்றித் தெளிவான கருத்துடையர் ஆதல் பெறப்படும்.

அணி:

தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியருக்கு உவமம் என்பது அணியன்று. செய்யுள் உறுப்புக்களுள் உவமமும் ஒன்றே என்பதும், அது பொருள் புலப்பாட்டிற்காகவே கொள்ளப்படும் என்பதும் அவர் கருத்து. இப்பேராசிரியருக்கு உவமம் என்பதும் ஓர் அலங்காரம். தமது உரையில் உவமம் பற்றிய ஐயுறவுகளை நீக்குவதனோடு ஏனை அலங்காரங்களுள் சிலவற்றையும் ஒரோவழி இவர் குறிப்பிட்டுள்ளார்.

உவமைக்கு உவமை ஆகாமை 124, 162ஆம் பாடலுரைகளில் விளக்கப்பட்டுள்ளது. 301ஆம் பாடலுரையில், பிரித்து உவமை ஆக்காது இவரது கூட்டத்திற்கு அவற்றது கூட்டத்தை உவமையாக அமைப்பினும் அமையும் என்று விளக்கம் அளிக்கிறார். 244ஆம் பாடலுரையில் இல்பொருள் உவமையையும், 162ஆம் பாடலுரையில் புகழுவமையையும் சுட்டுகின்றார்.

ஏனை அலங்காரங்களில் 157ஆம் பாடலுரையில் அலங்காரம்: எதிர் காலக் கூற்றிடத்துக் காரியத்தின் கண் வந்த இரங்கல் விலக்கு, உபாயவிலக்கு என்றும், 161ஆம் பாடலுரையில் அலங்காரம்: பரியாயம் என்றும், 185ஆம் பாடலுரையில் அலங்காரம்: அல்பொருள் தற்குறிப்பேற்றம் என்றும், 217ஆம் பாடலுரையில் அலங்காரம்: கூற்றிடத்து இருபொருட்கண் வந்த உயர்ச்சி வேற்றுமை என்றும், 289ஆம் பாட்டுரையில் அலங்காரம்: பரியாயம்; பொருள் முரணுமாம் என்றும், 233ஆம் பாட்டுரையில் நோக்கு என்னும் அலங்காரமாய்ப் பாம்பிற்கு அஞ்சும் மயில் என இல்குணம் அடுத்து வந்தது என்பாரும் உளர் என்றும், 234ஆம் பாடலுரையில் அலங்காரம்: முயற்சி விலக்கு என்றும் இவ்வுரையாசிரியர் எடுத்துக் காட்டுகின்றார். அலங்காரங்களை எடுத்துக் காட்டிய இவ்வுரையாசிரியர் ஏனோ அவற்றை விளக்கிப் பாடலில் பொருத்திக் காட்டிற்றிலர்.

சிறப்பான உரைப் பகுதிகள்:

கிளவித் தலைப்புக்களுள் இருவயின் ஒத்தல், வற்புறுத்தல், பொழில் கண்டு மகிழ்தல், முன்னுறவுணர்தல், வேறுபடுத்துக் கூறல், விரவிக் கூறல், வஞ்சித்துரைத்தல், உட்கொளவினாதல், ஏதங்கூறி மறுத்தல், பெரும்பான்மை கூறி மறுத்தல், கூறுவிக்குற்றல், வருமது கூறி வரைவு உடன்படுத்தல், ஐயுற்றுக் கலங்கல் முதலியவற்றின் விளக்கம் கோவையின் பொருளுணரப்பெரிதும் உதவும்.

இவர் இரண்டு உரைகள் வரைந்துள்ளமையை 23, 25, 38, 52, 90, 91, 95, 97, 116, 118, 120, 129, 131, 140, 146, 151, 166, 170, 183, 185, 189, 204, 225, 235, 276 முதலிய பாடல்களில் காணலாம்.

இவருடைய நயமான உரை 1, 5, 8, 9, 10, 12, 14, 24, 25, 27, 28, 32, 33, 36, 39, 40, 42, 48, 50, 54, 57, 58, 60, 61, 64, 66, 70, 76, 77, 83, 84, 86, 108, 109, 118, 122, 123, 125, 136, 137, 150, 154, 156, 158, 197, 205, 210, 225, 226, 231, 235, 242, 258, 261, 276, 279, 281, 285, 298, 328, 352, 354, 365, 381, 394 முதலிய பாடல்களில் காணப்படுகிறது.

உரையாசிரியர் பெருமை:

கோவை நூல்களுள் திருச்சிற்றம்பலக்கோவையார் தலையாய நூலாகத் திகழ்வது போலக் கோவை நூல் உரைகளுள் பேராசிரியர் உரை தலையானதாகத் திகழ்கிறது. நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலிய பேருரையாளர் வரிசையில் இந்நூலுரை யாசிரியராகிய பேராசிரியரும் இடம் பெறத்தக்கவர் என்பது உறுதி. இவர் பெருமையைத் திருக்கோவையார் உரையாக வெளிவந்துள்ள பழைய உரையோடு ஒப்பிட்டு உணரலாம்.

தலைவாயில்

உரைமாட்சி தொடர்ச்சி... | 12 |