தலைவாயில்

உரைமாட்சி தொடர்ச்சி... |  23 |

திருக்கோவையார் உரைமாட்சி

பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர்

திருக்கோவையார் உரையாசிரியர் பற்றிய

பல கருத்துக்கள்:

எட்டாந் திருமுறையின் ஒருகூறாய் விளங்கும் திருக் கோவையார், சைவ சமயாசாரியராகிய மணிவாசக சுவாமிகளால் அருளிச் செய்யப்பட்டதாகும். அஃது உரையோடு ஆறுமுக நாவலர் அவர்களால் முதன் முதல் அச்சில் பதிப்பிக்கப்பட்டது. அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே அஃது ஐந்து பதிப்புக்களைப் பெற்றுவிட்டது. அவற்றில் அவ்வுரையாசிரியர் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. நூலின் இரண்டாம் பக்கத்தில் `இவ்வுரையைப் பிற்கால அறிஞர் பேராசிரியரது என்பர். முற்காலத்து அறிஞர் பலர் நச்சினார்க்கினியரது என்றனர். தஞ்சைவாணன் கோவை உரையாசிரியர் சேனாவரையரது என்றனர்', என்ற குறிப்பு அச்சிடப்பட்டுள்ளது.

திருக்கோவையார் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் அல்லர்:

உரையொடு கூடிய திருக்கோவையார் நாவலர் பதிப்பைப் பாராட்டிச் சிறப்புப் பாயிரம் வழங்கிய தாண்டவராய சுவாமிகள், மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, தியாகராஜச் செட்டியார், சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார், முருகையப்பிள்ளை ஆகிய அனைவரும் உரையாசிரியரை நச்சினார்க்கினியரென்றே நவின்றுள் ளனர்.

நச்சினார்க்கினியர் வினையெச்சமே வினைமுற்றாகும் என்னும் கருத்தினர். `வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய' என்னும் தொல்காப்பியச் சொல்லதிகார எச்சவியல் 61ஆம் நூற்பா உரையில், `பெயர்த்தனென் முயங்கயான் - இது வினையெச்சத் தன்மைத் தெரிநிலைமுற்று. வந்தனை சென்மோ - இது வினையெச்ச முன்னிலைத்தெரிநிலைமுற்று. முகந்தனர் கொடுப்ப, மோயினள் உயிர்த்த காலை - இவை வினையெச்சப் படர்க்கைத் தெரிநிலைமுற்று' என்று குறிப்பிடுவர்.

`வரிசேர் தடங்கண்ணி' என்று தொடங்கும் திருக்கோவையார் 83ஆம் பாடல் உரையில், `தளிரன்னமேனியன், ஈர்ந்தழையன், இத்தேம்புனம்பிரியான்' என்புழி வினைமுற்றுக்களே வினையெச்சங் களாக வந்துள்ளன என்ற கருத்தில், `மேனியன் தழையன் என்பன வினையெச்சங்கள்' என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

`குறப்பாவை' என்று தொடங்கும் 205ஆம் பாடலில் `நறப்பாடலம் புனைவார் நினைவார்' என்புழிப் `புனைவார் என்னும் முற்றுச்சொல் செயவென் எச்சமாகத் திரித்து உரைக்கப்பட்டது' என விளக்கந்தரப்பட்டுள்ளது.

இவற்றால் இவ்வுரையாசிரியர் வினைமுற்றே வினையெச்ச மாகும் என்னும் கருத்துடையர் என்பது பெறப்படுகிறது. ஆகவே, எச்சமே முற்றாகும் என்ற நச்சினார்க்கினியரினும், முற்றே எச்சமாகும் என்ற கருத்துடைய இவ்வுரையாசிரியர் வேறாவர் என்பது தெளிவு.

திருக்கோவையார் உரையாசிரியர் சேனாவரையர் ஆகார்:

`எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி, பல்வழி நுதலிய நிலைத்தாகும்மே' என்னும் தொல்காப்பியச் சொல்லதிகாரப் பெயரியல் 32ஆம் சூத்திரத்திற்குச சேனாவரையர், `எல்லாம் என்னும் பெயர் இருதிணைக் கண்ணும் பன்மை குறித்து வரும்' என்று பொருள்கூறி, `அஃது எஞ்சாப் பொருட்டாய் வருவதோர் உரிச்சொல் என்பாருமுளர்' என்றும் குறிப்பிட்டுள்ளார். எல்லாம் என்பது பெயர்ச் சொல்லேயன்றி உரிச்சொல் அன்று என்பது சேனாவரையர் கருத்தாகும்.

திருக்கோவையார் 351ஆம் பாடலில் `வெஞ்சுரம் சென்றதெல்லாம்....... பூவணைமேல் அணையாமுன் துவளுற்றதே' என்ற தொடரின் உரை விளக்கத்தில், `எல்லாம் என்பது முழுதும் என்னும் பொருள்பட நின்றதோர் உரிச்சொல். பன்மை ஒருமை மயக்கம் என்பாரு முளர்' என்று குறிப்பிடும் உரையாசிரியர் எல்லாம் என்பது உரிச்சொல் என்னும் கருத்தினர். எல்லாம் என்பது இருதிணைக் கண்ணும் பன்மை குறித்துவரும் பெயர் என்ற சேனாவரையர் கொள்கையை மறுக்காமல் `எல்லாம் துவளுற்றதே' என்ற தொடர், `பன்மை ஒருமை மயக்கம் என்பாருமுளர்' எனப் பிறன்கோட் கூறலாகத் தழுவிக் கொண்டுள்ளனர்.

தொல்காப்பியச் சொல்லதிகார 114ஆம் நூற்பாவுரையுள் சேனாவரையர் அன்மொழித்தொகை எச்சவியலுட் கூறப்படினும், அஃது ஆகுபெயராதல் உடைமை பற்றி வேற்றுமை மயங்கியலில் கூறப்பட்டது என ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் ஒன்றே என்ற தமது கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

திருக்கோவையார் உரையாசிரியரோ 35 ஆம் பாடலுரையில் `அரன் அம்பலத்தின் இயல்' - ஆறாம் வேற்றுமைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை என்றும், 131ஆம் பாடலுரையில் `பொன்னங் கழல் என்பதற்குப் பொன்னானியன்ற கழலையுடையது என அன்மொழித்தொகைப்பட உரைப்பினும் அமையும்' என்றும், 134 ஆம் பாடலுரையில் `எற்றுந்திரை என்பது சினையாகிய தன் பொருட்கு ஏற்ற அடையடுத்து நின்றதோர் ஆகுபெயர்' என்றும் 151ஆம் பாடலுரையில் `குரைகழல் அன்மொழித்தொகை' எனவும் குறிப்பிடலின் இவ்வாசிரியர் ஆகுபெயர் வேறு, அன்மொழித் தொகை வேறு என்னும் கருத்தினர் என்பது இனிது விளங்கும்.

இவ்வாறெல்லாம் சேனாவரையரொடு மாறுபடும் கருத் துக்களையுடைய இவ்வுரையாசிரியர் சேனாவரையர் ஆதல் இல்லை.

திருக்கோவையார் உரையாசிரியர் பேராசிரியர் ஆவர்:

ஆறுமுக நாவலர் திருக்கோவையாரை உரையோடு பதிப்பித்தபின்னர்ச் சில்லாண்டுகள் கழித்துப் பிரயோக விவேகம் என்ற நூலை அதன் உரையோடு பதிப்பித்தார். அவ்வுரையில் திருக்கோவையாரின் உரையாசிரியர் பெயர் பேராசிரியர் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரயோக விவேகம் 14 ஆம் காரிகை உரையில் `ஆலத்தினால் அமிர்தாக்கிய கோன் என அநபிகித கன்மம் திருதியையில் வந்தது. ஆலத்தினால் என்னும் திருக்கோவையாருள் (61) பேராசிரியர் சொற் சோதனை செய்து காட்டிய பாலால் தயிராக்கினான் என்பதும் அது,' என்றும், 24ஆம் காரிகை உரையில் `திருக்கோவையாரில் பாயின மேகலை(282)யைப் பெயரெச்சம் ஒரு சொல்லாகலின் ஆகுபெயர் என்பர் பேராசிரியர்' என்றும், 36ஆம் காரிகை உரையில் `கொள்ளப்படாது மறப்பது அறிவில் என் கூற்றுக்களே என்றும் திருக்கோவையாரில் (87) பேராசிரியர் முதனிலையைப் பிரித்து எழுவாயாக்கி முடித்தலும் காண்க' என்றும், 39 ஆம் காரிகை உரையில் `கற்றில கண்டு அன்னம்' (பா.97) என்பதில் பேராசிரியர் கண்டு என்பது கற்றலோடு முடியும் என்பர்' என்றும், `தொழுதெழுவார் வினை வளம் நீறெழ' என்னும் திருக்கோவையாரில் (118) பேராசிரியர் தொழா நின்று எழுவார் எனத் துணைவினையாய் உரைப்பர்' என்றும், கூறியிருக்கும் செய்திகள் யாவும் ஆறுமுக நாவலர் பதிப்பித்துள்ள திருக்கோவையார் உரையில் காணப் படுதலின் அவர் பதிப்பித்த திருக்கோவையார் உரை பேராசிரியர் என்பவரால் இயற்றப்பட்டது என்பது போதரும்.

திருக்கோவையார் பேராசிரியர்

தொல்காப்பியப் பேராசிரியரினும் வேறானவர்:

திருக்கோவையார் உரையாசிரியர் அலங்காரங்களை 157, 161, 162, 185, 195, 217, 233, 234, 289 ஆகிய பாடல்களின் உரையில் குறிப்பிடுதலின், உவமையை அணி என்று கூறுவதை மறுக்கும் தொல்காப்பிய உரையாசிரியர் ஆகிய பேராசிரியரினும் இவர் வேறாதல் தெளிவு.

பழையவுரை:

பேராசிரியர் குறிப்பிடும் பாட வேறுபாடுகளிலும், சொற்றொடர்க்குப் பிறன்கோட் கூறலாய்க் குறிப்பிடும் உரைகளிலும் சிலவற்றைக் கொண்டதாய், கொளுக்களுக்கும் பாடல்களுக்கும் பொழிப்புரையாக அமைந்த உரை ஒன்று தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

அதிகார வரலாறு என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளதாய் இந்நூலின் கிளவிக் கொத்து எனப்படும் அதிகாரங்கள் பற்றிய நூற்பா அப்பதிப்பில் இல்லை. இயற்கைப் புணர்ச்சி முதலிய 25 கிளவிக்கொத்துகளிலுமுள்ள கிளவிகளை எடுத்தோதும் நூற்பாக்கள் யாவும் அப்பதிப்பில் இடம் பெற்றுள்ளன.

பேராசிரியர் பிறன்கோட் கூறலாகக் கூறும் செய்திகள் சிலவற்றைத் தன்பால் கொண்டுள்ள அவ்வுரை பேராசிரியர் உரைக்கும் முற்பட்டது ஆகும். அதன்கண் கிளவிக்கொத்துக்கள் பற்றிய நூற்பாக்கள் காணப்படுதலானும், கொளுக்களுக்கு உரை வரையப்பட்டிருத்தலானும், கொளுக்களும், கிளவிக்கொத்து நூற்பாக்களும் பேராசிரியருக்கு முற்பட்ட சான்றோரால் ஆக்கப்பட்டன ஆதல் வேண்டும்.

நூற்பாக்களுக்கு உரையும், தலைப்புக்களாகிய கிளவிகளுக்கு விரிவான விளக்கங்களும் வரைந்தமையே பேராசிரியருடைய பணியாக அமைந்தது. புறப்பொருளின் உட்பிரிவுகளைத் துறை எனவும், அகப் பொருளின் உட்பிரிவுகளைக் கிளவி எனவும் கூறலே பழைய மரபு.

அகப்பொருட்பாடல்கள் தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலியோருள் ஒருவர் கூற்றாகவே அமைதலின் அகப்பொருளின் உட்பிரிவைத் துறை என்னாது கிளவி என்பதே நேரிய மரபாகும். ஆயினும், இன்னார் கூற்று என்னாது, `இற்செறிவித்தது' (133) என்றும், `நகர் காவலின் மிகுகழி காதல்' (258) என்றும், `வார்புனலூரன் மகிழ்வுற்றது' (365) என்றும், `கலவிகருதிப் புலவி எய்தியது' (366) என்றும், `மலர்நெடுங்கண்ணி புலவியுற்றது' (367) என்றும், `தாரவன், தன்மை கண்டு பின்னுந்தளர்ந்தது' (397) என்றும் வருவனவற்றைத் துறைகூறியனவாகக் குறிப்பிடுவர் உரையாசிரியர். கிளவிகளுக்கும் துறைகளுக்கும் விளக்கம் கூறும் இயல்பில் பேராசிரியருடைய புலமை சிறப்பாக வெளிப்படுகிறது.

சிறந்த உரையாசிரியர்:

நானூறு பாடல்களைக் கொண்ட திருக்கோவையாருக்கு உரை எழுதியதன் வாயிலாகப் பேராசிரியர் தம்முடைய பழுத்த இலக்கண, இலக்கிய சாத்திரப் புலமையை வெளிப்படுத்தியுள்ளார். சிறந்த உரையாசிரியரிடம் நாம் காண விழையும் நலன்கள் யாவும் இவர் உரையில் மிளிர்கின்றன.

பாடவேறுபாடுகள்:

பழங்காலத்தில் பெரும்பான்மையவாய நூல்களைத் தமிழ்ச் சான்றோர் மனப்பாடம் செய்துகொண்டு மற்றவருக்குக் கற்பித்து வந்தனர். பாடல்களின் யாப்பிற்கும் பொருளுக்கும் ஊறு வாராத வகையில், மனப்பாடம் செய்யும் போது பாடங்களில் சிற்சில வேறுபாடுகள் தோன்றுவது இயல்பே. ஒரு நூல் பலராலும் பயிலப்பட்டுப் பிரபலமாக இருந்தால், அந்நூலில் அதிகப் பாடவேறுபாடுகள் ஏற்படுவது இயற்கை.

கோவைக்கு உரிய இலக்கணம் செவ்விதின் அமையப்பெற்று, நானூறு என்ற வரையறை உடைய பாடல்களான் இயன்ற திருக்கோவையாரின் சொற்சுவை பொருட் சுவைகளில் ஈடுபட்ட சான்றவர் நாவில் பலகாலும் பயின்ற பாடல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடவேறுபாடுகள் பேராசிரியரால் குறிப்பிடப் பட்டுள்ளன. அப்பாட வேறுபாடுகள் தள்ளத்தக்கன அல்ல; கொள்ளத்தக்கனவே என்பதே பேராசிரியரின் கருத்தாகும். அவற்றுள் மிக எளியவாக உள்ள ஒரு சிலவற்றை விடுத்து எஞ்சிய வேறுபாடுகளுக்கெல்லாம் பொருத்தமான உரையும் அவரால் வரையப்பட்டுள்ளது.

மேற்கோள் ஆட்சி:

திருக்கோவையார் தோன்றிய காலத்தில் தொல்காப்பியமும், இறையனார் அகப்பொருளும் அதன் உரையுமே தமிழகத்தில் பயிலப்பட்டன. ஆகவே, பேராசிரியர் தொல்காப்பியத்தையும், இறையனார் அகப்பொருளையும் மேற்கோள் காட்டியும், இறையனார் அகப்பொருள் உரைச்செய்திகளைக் கிளவித் தலைப்புக்களின் விளக்கத்திலும், கிளவித்தொகைகளின் நூற் பாக்களின் விளக்கத்திலும் பாடல்களின் விளக்கவுரைகளிலும் இடைமிடைந்தும் தம் உரையை வரைந்துள்ளமையைக் காண்கின்றோம். தொல்காப்பிய நூற்பாக்கள் 19உம், இறையனார் அகப்பொருள் நூற்பாக்கள் 8உம் இன்று பெயர் அறியமுடியாத அகப்பொருள் நூல்களின் நூற்பாக்கள் 6உம் திருக்கோவையார் உரையில் காணப்படுகின்றன. விளங்கா மேற்கோள் நூற்பாக்கள் இந்நூல் 5ஆம் பாடல் உரையில் ஒன்றும், 70ஆம் பாடலுரையில் மூன்றும், 109ஆம் பாடலுரையில் ஒன்றும், 252ஆம் பாடலுரையில் ஒன்றுமாக எடுத்தாளப்பட்டுள்ளன. சொற்பொருள் விளக்கத்திற்காகக் லித்தொகை, குறுந்தொகை, புறநானூறு, திருக்குறள், நாலடியார், திருக்குறுந்தொகை, தேவாரம், திருவாசகம், திவாகரம் என்ற நூல்களின் பாடலடிகள் பேராசிரியரால் ஆளப்பட்டுள்ளன.

பாடல்களுக்கு உரை:

பேராசிரியர் ஒவ்வொரு கிளவியையும் முதற்கண் விளக்கி, பின் அக்கிளவிக்குரிய பாடலுக்குப் பதவுரை வரைவர்; விளக்கவுரையில் சில சொற்றொடர்களுக்கு வேறுவகையாக உரை கூறப்படுமாயின் அவ்வுரையையும் வழங்குவர்; தமக்கு உடன்பாடு இன்றெனினும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் வேறு உரைகளைப் பிறன்கோட் கூறலாகக் கூறவும் செய்வர்; பாட வேறுபாடுகளைக் காட்டி, அவற்றிற்கு இயைபான உரையையும் தருவர்; எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் பற்றிய செய்திகளைச் சுட்டுவர். ஒவ்வொரு பாடலிலும் காணப்படும் மெய்ப்பாடும், அப்பாடலால் அதனிடத்துப் பயிலும் அகப்பொருள் மக்களுக்குக் கிட்டக்கூடிய பயனும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. பாடல்களில் அமைந்துள்ள இறைச்சி, உள்ளுறை, ஏனை உவமம், ஏனைய அணிவகைகள் ஆகியவையும் இவ்வுரையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்:

ஒரு சொற்றொடர்க்குப் பதவுரையில் ஒரு பொருளும், விளக்கவுரையில் மற்றொரு பொருளும் வரைந்து இரு பொருளுக்கும் ஏற்றவாறு சொற்றொடர் அமைந்திருத்தலைப் பேராசிரியர் தம்முரையில் பல இடங்களிலும் சுட்டிச் செல்வர். 23 ஆம் பாடலில் மாணிக்கக்கூத்தன் என்ற தொடருக்குப் பதவுரையில் மாணிக்கம் போலும் கூத்தன் என்று உரைகூறி, விளக்கவுரையில் மாணிக்கத்தைக் கூத்தனுக்கு உவமையாக்காது கூத்தினுக்கு உவமையாக உரைப்பினும் அமையும் என்று வேறுபொருள்கூறியும், மென்தோள் கரும்பினை என்ற தொடருக்குப் பதவுரையில் மெல்லிய தோளையுடைய கரும்பைப் போல்வாளை என்று உரைகூறி விளக்கவுரையில் மெல்லிய தோளில் எழுதிய கரும்பை உடையாளை எனினும் அமையும் என்று வேறு பொருள் கூறியும் உள்ளமை போன்ற இடங்கள் பல.

பிறன்கோட் கூறல்:

ஒரு சொற்றொடர்க்குத் தாம் வரைந்த பொருளின் வேறாக ஒரு பொருள் வழங்குமாயின் அதனை என்பாருமுளர் என்னும் பிறன்கோட் கூறலாகத் தழுவிக்கோடலும் இவ்வுரையின் இயல்பாகும்.

32ஆம் பாடலில் `வாய் பவளம் துடிக்கின்றவா' என்ற தொடருக்கு வாய்பவளம் துடித்தாற்போலத் துடிக்கின்ற ஆறு என் என்று உரை கூறி, பவளம் போலப்பாடஞ் செய்கின்றவாறென் என்று உரைப்பாரும் உளர் என்று மற்றோருரையைத் தழுவுவது போன்று பல இடங்களில் காணலாம்.

பாடவேறுபாடு:

பாடல்களில் காணப்படும் வேறுபட்ட பாடங்களைச் சுட்டிக் காட்டி அப்பாடங்களுக்கு ஏற்பப் பொருள்கொள்ளுமாற்றையும் விளக்கிச்செல்லுதலை இவ்வுரையில் எங்கும் காணலாம்.

10ஆம் பாடலில் `கிளவியை என்னோ இனிக் கிள்ளையார் வாயில் கேட்கின்றதே' என்று பாடமோதி கிள்ளைபோல்வாள் வாயின் மொழியை இனிக் கேட்க வேண்டுகின்றதென்? என்று உரை கூறி, மொழி கிளிமொழியோடு ஒக்கும் என்பது போதரக் கிள்ளையார் என்றான் என்று விளக்கமும் வரைந்த உரையாசிரியர், வயின் என்பது பாடமாயின் வாயின் என்பது குறுகி நின்றதாக வுரைக்க; வயின் இடம் எனினும் அமையும் என்று பாட வேறுபாட்டைச் சுட்டி அதற்குப் பொருள் காணுமாற்றையும் கூறிச்செல்லுதல் காண்க.

எழுத்து, சொல் இலக்கணச் செய்திகள்:

11ஆம் பாடலில் கூம்பலங்கைத்தலத்தன்பர் என்பதில் அல்லும் அம்மும் சாரியைகளாகக், கூம்பு கைத்தலத் தன்பர் என்று கொண்டு பொருளுரைத்ததும், தேம்பலஞ்சிற்றிடை என்பதிலும் அவற்றைச் சாரியைகளாகக் கொண்டு தேம்பு சிற்றிடையாகக் கொண்டு பொருள் கூறியுள்ளதும் போன்றன எழுத்திலக்கணச் செய்திகள். 235ஆம் பாடலில் `நலச்சேட்டைக் குலக்கொடியே' என்ற ககர ஒற்று இடையே மிக்க தொடருக்கு நல்ல சேட்டையையுடைய சீரிய கொடியே என்றும், ககர ஒற்று இடையே மிகாது நின்ற `நலச்சேட்டை குலக்கொடியே' என்ற தொடருக்குச் சேட்டையாகிய தெய்வத்தின் நல்ல கொடியே என்றும் பொருள் கூறுதல் போன்ற சொல்லிலக்கணச் செய்திகளை இவ்வுரையில் நிரம்பக் காணலாம்.

பொருளிலக்கணச் செய்திகள்:

82ஆம் பாடலில் "மாதே புனத்திடை வாளா வருவர்வந் தியாதுஞ் சொல்லார், யாதே செயத்தக் கதுமது வார்குழலேந் திழையே" என்ற தொடரில் முதலில் மாதே என்று விளித்துப் பின்னும் ஏந்திழையே என்று அழைத்தமைக்கு அமைதி கூறுமுகத்தான், முகம் புகுகின்றாள் ஆதலின் மாதே என்று அழைத்த பின்னரும் ஏந்திழையே என்றாள் என்று தலைவியின் நினைவு அறியாநிற்கும் தோழியின் நுண்மதியை யுணர்த்துகின்றார் உரையாசிரியர்.

4ஆம் பாடல் உரை இறுதியில் கைக்கிளை முதற் பெருந்திணை யிறுவாய் எழுதிணையினுள்ளும் கைக்கிளையும் பெருந்திணையும் அகத்தைச் சார்ந்த புறமாயினும் கிளவிக்கோவையின் எடுத்துக் கோடற்கண் காட்சி முதலாயின சொல்லுதல் வனப்புடைமைமை நோக்கிக் கைக்கிளை தழீஇயினார். பெருந்திணை தழுவுதல் சிறப்பின்மையின் நீக்கினார் என்றும், 70ஆம் பாடலுரையில் இவை நான்கும் பெருந்திணைப் பாற்படும். என்னை, அகத் தமிழ்ச் சிதைவாகலான். என்னை, "கைக்கிளை பெருந்திணை அகப்புறம் ஆகும்." இவற்றுள் கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம். பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். என்னை, "ஒப்பில் கூட்டமும் மூத்தோர் முயக்கமும், செப்பிய அகத் தமிழ்ச் சிதைவும் பெருந்திணை" என்றும் கூறியுள்ளவை அகப்புறச் செய்திகள் ஆகும்.

தலைவாயில்

உரைமாட்சி தொடர்ச்சி... |  23 |