உரைமாட்சி தொடர்ச்சி... | 13 |

தலைவாயில்

விளக்க உரையில் குறிப்பிடும் நயங்கள்:

பேராசிரியர் நயமாக உரை எழுதும் திறத்தை ஏறத்தாழ 70 பாடல்களில் கண்டு சுவைக்கலாம்.

5 ஆம் பாடலில் `அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன்' என்ற தொடருக்கு எனக்கு ஆபரணமும், அமிழ்தும் என் உயிரும் ஆயவன் என்று பொருள் கூறி, அணி என்றார் அழகு செய்தலான். அமிழ்தென்றார் கழிபெருஞ் சுவையோடு உறுதிபயத்த லுடைமையான். ஆவியென்றார் காதலிக்கப்படும் பொருள்கள் எல்லாவற்றினுஞ் சிறந்தமையான். ஈறிலின்பம் பயக்கும் இறைவனோடு சார்த்த அணியும் அமிழ்தும் ஆவியும் இறப்ப இழிந்தனவே ஆயினும், `பொருளது புரைவே புணர்ப்போன் குறிப்பின், மருளற வரூஉ மரபிற் றென்ப' என்பதனான் ஈண்டுச் சொல்வானது கருத்துவகையானும், உலகத்துப் பொருள்களுள் அவற்றினூங்கு மிக்கன வின்மையானும் உயர்ந்தனவாய் உவமை ஆயின என்று விளக்கியுள்ளமை அவருடைய நயவுரைப் பகுதிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

சைவநூற்பயிற்சி:

சைவ சமயாசாரியராகிய மணிவாசகப் பெருமானால் அருளப்பட்ட இந்நூற்பாடல்களில் சைவ சமயக்கருத்துக்கள் நிறைந் துள்ளன. உரையாசிரியர் அவற்றை விளக்கிச் செல்லுதலோடு ஏற்ற இடங்களில் தேவார திருவாசக மேற்கோள்களைப் பெய்து அவற்றிற்கு வலி சேர்க்கின்றார்.

112ஆம் பாடலில் `தன் ஒரு பாலவள் அத்தனாம் மகனாம் தில்லையான்' என்பதற்குத் தனதொருபாகத்துளளாகிய அவட்குத் தந்தையுமாய் மகனுமாம் தில்லையான் என்று பொருள் கூறி, சிவதத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார் என்று அதற்கு விளக்கம் தந்து அதனை நிலை நிறுத்த `இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன்' என்ற தி.8 திருவாசகத் திருப்பொற்சுண்ணப் பகுதி 13ஆம் பாடலடியை மேற்கோளாக எடுத்தாள்கின்றார்.

இருவேறு உரைகள்:

பேராசிரியர் பதவுரையில் ஒரு பொருளையும், ஆழ்ந்து நோக்கத் தோன்றும் வேறும் ஒரு பொருளை விளக்கவுரையிலுமாகச் சில பாடல்களுக்கு இருவேறு உரைகளை வரையும் இயல்பினர் ஆவர்.

சான்றாக 158ஆம் பாடலில் ஒலியாநின்ற அருவியால் பெருகுகின்ற சுனைப்புனற்கண் அன்றியான் வீழ்ந்து கெடப்புகப் பற்றிஎடுத்துக் கரைக்கண் உய்த்த பெரியோர்க்குச் சிறியேனாகிய யான் சொல்லுவதோர் மாற்றமறியேன் என்று பதவுரையிற் கூறி, பிறவிக் குட்டத்தியான் விழுந்து கெடப்புகத் தாமே வந்து பிடித்தெடுத்து அதனினின்றும் வாங்கிய பேருதவியார்க்குச் சிறியேனாகிய யான் சொல்வதறியேன் என்று வேறும் ஒரு பொருள் தோன்றியவாறு கண்டு கொள்க என்று விளக்கவுரையிற் கூறியுள்ளமை காண்க.

உரையிடை உவமை:

சொல்லும் செய்தியைத் தக்க உவமையை இடைப் பெய்து இனிது விளக்குந் திறம் இவ்வுரையில் ஆங்காங்குக் காணலாம். 149 ஆம் பாடலுரையில் எமது வாழ்பதி இவ்வொழுக்கத்தைச் சிறிது அறியுமாயின் சிந்தையாலும் நினைத்தற்கரிய துயரத்தைத் தருமாதலால், தாம் செத்து உலகாள்வார் இல்லை; அது போல இவ்வொழுக்கம் ஒழுகற்பாலீரல்லீர் என்று மறுத்துக் கூறியவாறாயிற்று என்றும், 272ஆம் பாடலுரையில் திருந்தும் கடனெறி என்பது தித்திக்கும் தேன் என்பது போல இத்தன்மைத்து என்னும் நிகழ்காலம்பட நின்றது என்றும் உவமைகளை ஆண்டுள்ளமை காண்க.

பிறருரை மறுத்தல்:

பிறருரைகளை, என்றுரைப்பாருமுளர் என்று கூறிப்பேரளவு எடுத்துக்காட்டும் இயல்பினர் இவ்வுரையாசிரியர். ஆனால், பிறருரை பொருத்தம் அற்றதாயின், தக்க காரணங்களைக் கூறி அதனை மறுத்தலும் செய்வார்.

86ஆம் பாடலுரையில், இதனைத் தோழி கூற்றாக உரைப்பாரும் உளர்; இவையிவை என்னும் அடுக்கானும், இனி `உள்ளப்படுவன உள்ளி' எனத் தலைமகளோடு புலந்து கூறுகின்றமை யானும், இவ்விரண்டு திருப்பாட்டும் தலைமகள் கூற்றாதலே பொருத்தமுடைத்தென்பதறிக என்று தோழி கூற்றென்பாரை மறுத்தமை காண்க.

ஐயமகற்றல்:

கற்பார்க்கு இன்னின்ன இடங்களில் என்னென்ன ஐயங்கள் இயல்பாக எழும் என்பதனை உய்த்துணர்ந்து அவ்வவற்றைக் களையும் வண்ணம் வேண்டிய விளக்கங்களை ஆங்காங்கு வரைந்துதவும் இயல்பினர் இவ்வுரையாசிரியர்.

102ஆம் பாடலில் `மைத்தழையா நின்ற மாமிடறு' என்ற தொடரில் இயல்பாக எழும் கூறியது கூறல் என்னும் ஐயத்தை, `மா கருமை. மாமிடறு என்பது பண்புத் தொகையாய் இன்னது இது என்னும் துணையாய் நிற்றலானும், மைத்தழையா நின்ற என்பது அக்கருமையது மிகுதியை உணர்த்தி நிற்றலானும் கூறியது கூறலாகாமை அறிக' என்று கூறி அகற்றியமை காண்க.

124ஆம் பாடலில் தாரகைமுகை ஆயம், மதிக்கமலத் தலைவி என்பன அடுக்கிவரலுமை ஆகுங்கொல் என்னும் ஐயத்தை, முகையொடு தாரகைக்கு ஒத்த பண்பு வெண்மையும் வடிவும் பண்பும். தாரகையோடாயத்தார்க்கு ஒத்த பண்பு பன்மையும் ஒன்றற்குச் சுற்றமாய் அதனிற்றாழ்ந்து நிற்றலும். கமலத்தோடு மதிக்கு ஒத்த பண்பு வெண்மையும் வடிவும் பொலிவும். மதியோடு தலைமகட்கு ஒத்த பண்பு, கட்கு இனிமையும் சுற்றத்திடை அதனின் மிக்குப் பொலிதலும். இவ்வாறு ஒத்த பண்பு வேறுபடுதலான் உவமைக்கு உவமை ஆகாமை அறிந்து கொள்க என்று கூறிக் களைந்தவாறு காண்க.

சொற்பொருள்:

பாடலுட் பயிலும் அரிய சொற்களுக்குப் பொருள் கூறுவதில் இவ்வுரையாசிரியரின் நுண்ணறிவு புலப்படுகிறது. சான்றாகச் சில.

படிச்சந்தம் 78 - ஒன்றன் வடிவை உடைத்தாய் அது என்றே கருதப்படும் இயல்புடையது. சிலம்பு 99 - வெற்பின் ஒரு பக்கத்து உளதாகிய சிறுகுவடு. அழைப்பு 102 - பொருள் புணரா ஓசை. குதலைமை 104 - விளங்காமை. மழலை 104 - இளஞ்சொல். கூடம் 129 - மன்றாகமரத்திரளால் செய்யப்பட்ட தேவகோட்டம். இருவி 144 - கதிர் கொய்த தட்டை. தாள் 144 - கதிர் கொய்யாத முன்னும் சொல்வதொருபெயர். இசும்பு 149 - வழுக்குதல், ஏற்றிழிவு முதலாயின குற்றம். செறு 166 - நீர் நிலை. சோத்தம் 173 - இழிந்தார் செய்யும் அஞ்சலி. செறிவு 179 - எல்லைகடவா நிலைமை. கொழுமீன் 188 - மீன்களுள் ஒரு சாதி. சுத்தி 242 - பிறர்க்குத் திருநீறு கொடுத்தற்கு இப்பிவடிவாகத் தலையோட்டால் அமைக்கப்படுவ தொன்று. செல்வு 266 - இரு முதுகுரவரால் கொண்டாடப்படுதல். நீதி 266 - உள்ளப்பொருத்தம் உள் வழி மறாது கொடுத்தல். மாத்து 373 - தலைமகற்கு உரியளாகி நிற்றலான் உண்டாகிய வரிசை.

சொற்றொடர்ப் பொருள்:

சில சொற்றொடர்களுக்குப் பேராசிரியர் வரைந்துள்ள பொருள் நுட்பம் எண்ணியெண்ணி வியத்தற்குரியதாகும். அவற்றுள் சில.

அவயவம் கண்டு 10 - அவயவங்களின் உறுதல் முதலிய நான்கையும் கண்டு. தையல் பாங்கி 60 - புனையப்படுதலையுடைய பாங்கி. இன்புறுதோழி 66 - இருவர் காதலையும் கண்டு இன்புறும் தோழி; ஐயம் நீங்கித் தெளிதலான் இன்புறும் தோழி; தலைவி நலத்திற்கேற்ற நலத்தையுடைய தலைமகனைக் கண்டு இன்புறும் தோழி. மெய்த்தகை 231 - மெய்யாகிய கற்பு; புனையா அழகுமாம். வண்புகழ் 298 - அறத்தொடுநின்று கற்புக் காத்தலான் வந்த புகழ். ஊரனோடு இருந்து வாடியது 354 - ஊரன் குறைகளை நினைந்து அதனோடு இருந்து வாடியது.

வடசொல் முதலியன:

உரையாசிரியர் திருக்கோவையாரில் பயின்றுள்ள வடசொல், பாகதச்சொல், வடநூல் முடிவு போன்றவற்றை எடுத்துக் காட்டி யுள்ளவற்றில் கீழ்க்காண்பன சில.

தேயம் 39 - வடமொழித்திரிபு. அளிகுலம் 45 - வடமொழிமுடிபு. கண்ணன் 53 - கரியோன் என்னும் பொருளதோர் பாகதச் சிதைவு. படிச்சந்தம் 78 - பிரதிசந்தம் என்றும் வடமொழிச் சிதைவு. மணிகண்டன் 81 - வடமொழி இலக்கணத்தால் தொக்குப் பின் திரிந்து நின்றது. இராகம் 194 - வடமொழிச் சிதைவு. கித்தம் 388 - செய்யப்பட்டது என்னும் பொருளதோர் வடமொழித் திரிபு.

உவம உருபின் பொருள்படும் சொற்கள்:

போல, புரைய, ஒப்ப, மான, கடுப்ப போன்று நூல்களில் பயில வழங்கும் உவம உருபுகளே அன்றி வேறு பல சொற்களும் திருக்கோவையாரில் மணிவாசகப் பெருமானால் போலும் என்னும் பொருள் தரும் வகையில் ஆளப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் உரையாசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார். அவற்றுட் சில.

கார்தரு பொழில் 32 என்பதில் தரு என்பதும், அரவரு நுண்ணிடை 81 கொளு என்பதில் வரும் என்பதும், கயல்வளர் வாட்கண்ணி 117 என்பதில் வளர் என்பதும் அம்மலர் வாட்கண் நல்லாய் 153 என்பதில் வாள் என்பதும், பொன் செய்த மேனியன் 278 என்பதில் செய்த என்பதும், காந்தளும் பாந்தளைப் பாரித்து அலர்ந்தன 324 என்பதில் பாரித்து என்பதும், பால் செலும் மொழியார் 359 என்பதில் செல்லும் என்பதும் உவமப் பொருளைத் தரும் சொற்களாகும்.

ஒரு சொல் நீர:

சில சொற்றொடர்கள் பொருள் தரும் தன்மையை ஆராய்ந்து அவற்றை ஒரு சொல் நீர என்றும், சில சொற்றொடர்கள் எழுவாய், இரண்டாவது ஆகியவற்றை முடிக்கும் தன்மை கண்டு அவற்றை ஒரு சொல் நீர என்றும் இவ்வாசிரியர் குறிப்பிடுவர். வகைக்குச் சில கீழே காண்பன.

நடுங்க நுடங்கும் 31- ஒரு சொல் நீர, நடுக்கும் என்னும் பொருளன. கெடக் கொண்டது 138 - ஒரு சொல் நீர, கெடுத்தது என்பது பொருள். கெடச்செய்திடுவான் 141-ஒரு சொல் நீர, கெடுப்பான் என்பது பொருள். பொடியாய் விழ விழித்தோன் 179 - ஒரு சொல் நீர, பொடியாக்கினான் என்பது பொருள்.

நாணுதல் உரைத்தல் 95 கொளு - என்னும் சொற்கள் ஒரு சொல் நீர்மைப்பட்டு இரண்டாவதனை அமைத்தன. உய்யநின்றோன் 106 - என்னும் சொற்கள் உய்வித்தோன் என்னும் பொருளவாய், ஒரு சொல் நீர்மைப்பட்டு இரண்டாவதற்கு முடிவாயின.

தொடை மடக்கும் 274 ஒரு சொல் நீரவாய்க் குன்றவர் என்னும் எழுவாய்க்கும், கணையை என்னும் இரண்டாவதற்கும் முடிபாம். சீர்வழுத்தா 337 என்பன ஒரு சொல் நீர்மைப்பட்டு அம்பலத்தை என்னும் இரண்டாவதற்கு முடிபாயின.

சொற்களின் திரிந்த வடிவம்:

சில சொற்கள் வடிவு திரிந்து வழங்குதலைக் கண்டு, இன்ன சொற்கள் இவ்வாறு திரிந்தன என்று எடுத்துக் காட்டுவர் இவ்வுரையாசிரியர்.

அளவியை யார்க்கும் அறிவு அரியோன் 10 என்பதில் துறவு துறவி என நின்றாற்போல அளவு அளவி என நின்றது என்பர். இரவில் வந்து மீளி உரைத்தி 151 என்பதில் மீடல் என்பது மீளி என நின்றது; மருடல் வெகுடல் என்பன மருளி வெகுளி என நின்றாற்போல என உரைப்பர்.

செய்யுள் விகாரங்கள் முதலியன:

செய்யுள் இன்பத்தையே சிறப்பாகப் போற்றி வரும் வலித்தல் முதலிய அறுவகை விகாரங்களையும், வழங்கற்பாடேபற்றிப் பெயர்ச் சொற்களிடத்து வரும் மூவகைக் குறைகளையும், விதியின்றி வரும் புணர்ச்சியில் விகாரங்களாகிய தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், நிலைமாறுதல் ஆகியவற்றையும் சொற்களின் உண்மை வடிவறிந்து பொருள் காண உதவும் வகை இவ்வாசிரியர் எடுத்துக் காட்டுவர். வகைக்குச் சில.

நற்பகல் சோமன் 168 என்ற தொடர் விகாரவகையால் நற்பகற்சோமன் என வலிந்து நின்றது. அங்கட்டிகழ் மேனி 384 என்பது அங்கண் திகழ்மேனி என மெலிந்து நின்றது. போர்த்தரு அங்கம் 187 என்பது போர்த்தரங்கம் என்று தொகுக்கும் வழித்தொகுத்து நின்றது. ஒல்லைக் கண்டிட 214 என்பது விகார வகையால் வல்லெழுத்துப் பெறாது ஒல்லை கண்டிட என வந்தது. எவ்வம் செய்து 358 என்பது எவம் செய்து என இடைக் குறைந்தது. பறத்தல் இயல் வாவல் 375 என்பது பறல் இயல்வாவல் என இடைக்குறைந்தது. சோத்தம் 173 என்பது சோத்து எனக் கடைக்குறைந்தது. மல்லல் 178 என்பது மல் எனக் கடைக்குறைந்தது. வாயின் 10 என்பது வயின் என நின்றது. அணி 53 என்பது அண் எனக்குறைந்தது. வாமம் 263 என்பது வாமாண்கலை என இடைக்குறைந்தது. செல்ல அரிது 264 என்பது கடைக்குறைந்து செல்வரிது என்றாகியது.

இடைச் சொற்கள்:

பாடல்களில் பயிலும் இடைச்சொற்களைச் சுட்டி அவற்றின் பொருள்களை எடுத்துக்காட்டும் இவ்வுரையில் சிறப்பான சிலவற்றைக் காண்பாம். நின்று என்பது 34 ஐந்தாம் வேற்றுமைப் பொருள் உணரநிற்பதோர் இடைச் சொல். மீட்டு அது அன்றேல் 57 - மீட்டு என்பது பிறிதும் ஒன்று உண்டு என்பதுபட வினைமாற்றாய் நிற்பதோர் இடைச்சொல். தான் செறி இருள் 382 - தான் என்பது அதுவன்றி இது ஒன்று என்பதுபட நின்றதோர் இடைச்சொல். ஏழையின் 19-இன் ஏழன் உருபு புறனடையால் கொள்ளப்பட்டது. ஆவ 211, -இரங்கற்குறிப்பு, ஆவா 72 - அருளின்கட்குறிப்பு, இரக்கத்தின் கட்குறிப்பு. ஐயோ 384 - உவகைக்கண் வந்தது. அந்தோ 72- இரக்கத்தின்கட் குறிப்பு. கற்றவா 60- -வியப்பின் கட்குறிப்பு. யாதே 82- ஏகாரம்வினா. பேர் என்னவோ 56-ஓகாரம் வினா. மன்னும் 174 - மிகுதி.

உரிச்சொற்கள்:

30 ஆம் பாடல் கொளுவில் வய என்னும் உரிச்சொல் விகார வகையால் வயம் என நின்றது என்றும், 208 ஆம் பாடலில் மல்லல் மல் எனக் கடைக்குறைந்து நின்றது என்றும் 368 ஆம் பாடலில் மல்லல் கடைக்குறைந்து ஐகாரம் விரிந்து நின்றது என்றும் இவ்வுரையாசிரியர் உரிச்சொற்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

அன்மொழித் தொகையும் ஆகுபெயரும்:

அன்மொழித் தொகையும் ஆகுபெயரும் ஒன்றல்ல என்னும் கருத்தினராதலின் இவ்வுரையாசிரியர் அவற்றை ஆண்டாண்டு எடுத்துக்காட்டும் இயல்பினர். சான்றாகச் சிலவற்றைக் காண்பாம்.

அரன் அம்பலத்தின் இயல் 35 - ஆறாம் வேற்றுமைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. பொன்னங்கழல் 131 - பொன்னை ஒக்குங் கழல் என உவமத் தொகை, பொன்னான் இயன்ற கழலை உடையது என அன்மொழித் தொகையும் ஆம். செறிகழல் 273 - செறியும் கழலை உடையது என அன்மொழித்தொகை. முத்தமணல் 273 - முத்துப்போன்ற மணலையுடைய இடம் என அன்மொழித் தொகை. எற்றும்திரை 134 என்பது சினையாகிய தன்பொருட்கு ஏற்ற அடையடுத்து நின்றதோராகுபெயராய்க் கடலைக் குறிப்பிடுகிறது. மாதுற்ற மேனி 174 - என்பது ஆகுபெயராய் மேனியை உடையான் மேல் நின்றதெனினும் அமையும். பாயினமேகலை 282 என்னும் சொற்கள் ஒரு சொல் நீர்மைப்பட்டு மேகலை உடையாளை உணர்த்தலின் ஆகுபெயர் எனப்படும். ஆழிதிருத்தும் புலியூர் 186 - ஆழி என்பது ஆழி சூழ்ந்த உலகைக் குறித்தலின் ஆகுபெயர்.

உருபு மயக்கம்:

இவ்வுரையாசிரியர் `பொருள் செல்மருங்கின் வேற்றுமை சாரும்' (தொல்; சொல்: 107) என்பதற்கேற்ப, ஆளப்பட்டுள்ள வேற்றுமை உருபு பிறிதொரு வேற்றுமைப்பொருளை உணர்த்துவ தாகிய உருபு மயக்கத்தை எடுத்துக்காட்டுவர்.

சின்மழலைக்கு 104 என்பது சின்மழலைத் திறத்தென நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்தது எனினும் அமையும் என்றும், சூழ்பொழிற்கே 161 என்னும் நான்கன் உருபு ஏழாவதன் பொருட்கண் வந்தது என்றும் இருந்தேமை 280 என்னும் இரண்டாவது ஏழாவதன் பொருட்கண் வந்தது என்றும், சின்மொழியை 343 என்னும் இரண்டாவது ஏழாவதன் பொருட்கண் வந்தது என்றும் பரிசினின் நிற்பித்த 286 - ஐந்தாவது ஏழாவதன் பொருட்கண்வந்து சிறுபான்மை இன்சாரியை பெற்று நின்றது என்றும் வடிக்கு 291 என்னும் நான்காவது, வடியின் என்னும் ஐந்தாவதன் ஒப்புப்பொருட்கண் வந்தது என்றும் விளக்குதல் காண்க.

வினைஎச்சம் எதிர்மறைவினை கோடல்:

மறைவினைகள், தொழிற்பெயர்கள் இவற்றின் முதனிலைகள் எப்பொழுதும் உடன்பாட்டுவினைகளாகவே இருத்தலின், வினைஎச்சங்கள் எதிர்மறை வினையின் முதனிலையாகிய உடன்பாட்டு வினையைக் கொண்டு முடிந்தன என்று கூறல் சான்றோர் மரபாகும். அம்மரபைப்பற்றி இவ்வுரையாசிரியர் வரைந்தவற்றுள் சில.

துப்புற என்னும் வினையெச்சம் 26 தந்தின்று என்பதன் தருதலொடு முடிந்தது. ஒருவிக்கெடாது 65 - ஒருவி என்னும் வினையெச்சம் கெடாது என்னும் எதிர்மறை வினையெச்சத்தின் கெடுதலொடு முடிந்தது. அறிய என்னும் வினையெச்சமும், சிறிது என்னும் வினையெச்சமும் 41 திறவாவிடின் என்னும் எதிர்மறையில் திறத்தலொடு முடிந்தன.

சினைவினை முதலியன:

உரையாசிரியர் 116 ஆம் பாடலுரையில் சினைவினை முதல் மேல் ஏறி நின்றன என்றும், 126 ஆம் பாடலுரையில் சினை தன்வினைக்கு ஏலா எழுத்துக் கொண்டது என்றும், 103 ஆம் பாடலுரையில் சினை வினை முதல்மேலேறியும், இடத்து நிகழ் பொருளின் வினை இடத்துமேல் ஏறியும் நின்றன என்றும், 222 ஆம் பாடலுரையில் சினைவினையெச்சம் முதல் வினையோடு முடிந்தது என்றும் இடத்து நிகழ்பொருளின் வினை இடத்தின் மேல் ஏறிநின்றது என்றும் சினைவினையும் இடத்து நிகழ் பொருளின் வினையும் கொள்ளும் முடிபுபற்றிக் கூறியுள்ளார்.

உரைமாட்சி தொடர்ச்சி... | 13 |

தலைவாயில்