தலைவாயில

மூன்றாம் திருமுறை - அடியார் பெருமை - தொடர்ச்சி...| 1 | 2 |

9. நம்பிநந்தியடிகள் நாயனார்

நம்பிநந்தி என்பது நமிநந்தி என மருவிற்று, திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருப்பாடலில், "நாரூர் நறுமலர்நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி நீரால் திருவிளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே' (தி.4 .102 பா.2) என்று உள்ளது, அதனால், நமி என்பது நம்பி என்பதன் மரூஉ எனல் உறுதியாயிற்று.

அவரே, "அடித் தொண்டன் நந்தி என்பான் உளன் ஆரூர் அமுதினுக்கே' (தி.4.102 பா.4) என்றும், "ஊனம் இல்லா அடிகளும் ஆரூரகத்தினர் ஆயினும், அம்தவளப்பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும் நந்தி புறப்படிலே' (தி.4 .102 பா.6) என்றும் அருளியவற்றால், `நந்தி' என்று வழங்கும் அதுபற்றிச் சிறிதும் ஐயம் இல்லை.

அதற்கு முன்மொழியான `நமி' என்பது யாவது? அதன் தொல்லுருவம் யாது? இவ்வினாக்கள் எழுமுன் இறுத்த விடையாக, அவர் திருவாயினின்றே `நம்பிநந்தி' என்று தோன்றியிருக்கின்றது. தொண்டர்க்கு ஆணியெனும்பேறு திருநாவுக்கரசு விளம்பப்பெற்ற பெருமையினார்' என்று குறித்தருளிய அருள்மொழித்தேவர், `நம்பிநந்தியடிகள்' என்னாது , `நமிநந்தி யடிகள்' என்றதன் காரணம் தொகையிலும் வகையிலும் `நமிநந்தி என்று இருப்பதற்குச் சிறிதும் வேறுபடாதவாறு பெயரைக் குறிப்பது தான், அறிவார்க்கு மயக்கம் விளைக்காது என்று திருவுளங் கொண்டதாகும்.

சேக்கிழார் சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள், நம்பியாண்டார் நம்பி மூவரும் `நமிநந்தி' என்று குறித்தமையால், நம்பிநந்தி திருநாவுக்கரசர் குறித்தது வழுவாய்விடுமோ? அவரது திருப்பாடலில், `நமிநந்தி' என்று இருந்ததை எவரோ `நம்பிநந்தி' என்று திருத்தியிருக்கலாம் எனில், அஃது செய்யுளியலறியார் கூறுதலும், திருத்தியவர்க்குப் பேரறிவைத் தோற்றுதலும் ஆகும். `வேலைமெனக் கெட்டு' என்பது போல `நம்பி நமிநந்தி' எனத் திருத்தொண்டத் தொகையில் அமைந்திருப்பது வியக்கத்தக்கது.

(வினைக்கெட்டு - வெனைக்கெட்டு - வெனக்கெட்டு - மெனக்கெட்டு - வேலைமெனக் கெட்டு என மருவியவாறும் மரூஉ மொழிப்பொருள் தெரிய அப்பொருளுடையதொரு சொல் முன் நின்றவாறும் உணர்க. நமக்கு நம்பி என்ற அதன் தொல்லுருவமே முன்நின்றது. அரைஞாண்கயிறு எனப் பின் நிற்றலும் அறிக. வேலைமினுக்கிட்டு என்று ஒரு வெண்பாவில் உள்ளது. அது பட்டினத்தார் பாடியதென வழங்குகின்றது).

10. புகழ்த்துணை நாயனார்

"அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர்காசு எய்திப்

புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே". (தி.2 .63 பா.7)

என்று, புகழ்த்துணை நாயனார் வழிபாட்டினையும் திருவருட் பயனை யும் குறித்தருளினார். இதில், அலந்த அடியான்' என்பது நன்கு நோக்கி உணரத்தக்கது.

புகழ்த்துணை நாயனார், சிவபெருமானைத் தவத்தால் தத்துவத்தின் வழிபடும் நாளில், கறுப்பால் பசித்துன்பம் பெருக லுற்றது. உலகம் வருந்தியது. தாமும் பெரிதும் வருந்தினார். என் "அப்பனை என் கண் பொருந்தும் போதத்தும் கைவிட நான் கடவேனோ? `விடுவேன் அல்லேன்' என்று இராப்பகலும் மலர் புனல் கொண்டு அருச்சிப்பாராய், அப்பேராடலாற்கு நீராடல் புரியுங்கால், "சாலவுறு பசிப்பிணியால் வருந்தி, நிலைதளர்வு எய்தி, குடம் தாங்கமாட்டாமை ஆலமணி கண்டத்தார் முடிமீது வீழ்த்து அயர்வார்' ஆனார். கொடிய நஞ்சினைத் திருக்கழுத்தில் அடக்கியதினும், பொறுமை பெரிதும் உண்டோ? அருளால் ஒரு துயில் வந்தது. அங்கணன் கனவில் அருளினான்; கறுப்பொழியும் அளவும் நாள்தோறும் ஒரு காசு வைக்கப்பெறும் என்று. சிவபீடத்தில் காசு கிடைக்கப்பெற்று, சிற்றுணர்வு ஆகிய பசியும் இன்றி, முற்றுணர்வாகிய உணவும் கொண்டு முகமலர்ந்து அகம் உவந்தார். அங்கு அவ் வண்ணம் (அங்ஙனம்) கறுப்பொழியுங் காலம் வரையிலும் பெற்று, பசியின்றி மெய்யடிமைத் தொழில் செய்து புனிதரடி நிழல் சேர்ந்தார். இவ்வரலாற்றை எண்ணி, `அலந்த அடியான்' என்றும், `அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி' என்றும், `காலையும் மாலையும் போற்றி வழிபட்டார்' என்றும் உணர்த்தி அருளினார் திருஞானசம்பந்த சுவாமிகள். அச்சிவபாதம் வந்து அணையும் மனத்துணையாராகிய புகழ்த்துணை நாயனாரை "அலந்த அடியான்" என்றாரே அன்றிக் கிளந்து உரைத்தாரல்லர். அவர் வரலாற்றை நோக்கி உணர்வது மிக எளிது.

11. மங்கையர்க்கரசியார்

"மங்கையர்க்கரசி வளவர்கோன்பாவை

வரிவளைக் கைம்மட மானி...

பங்கயச் செல்வி பாண்டிமா தேவி

பணிசெய்து நாள்தொறும் பரவ" (தி.3 .120 பா.1)

என்பது முதலிய பாடல் சிவனைக் கூடல் விளைத்தலும் ஒல்லும்.

12. முருக நாயனார்

"தொண்டர் தண்கயம் மூழ்கித்

துணையலும் சாந்தமும் புகையும்

கொண்டு கொண்டடி பரவிக்

குறிப்பறி முருகன்செய் கோலம்

கண்டு கண்டுகண் குளிரக்

களிபரந்து ஒளிமல்கு கள்ளார்

வண்டு பண்செயும் புகலூர்

வர்த்த மானீச்சரத் தாரே". (தி.2 .92 பா.3)

"....................பூம்புகலூரில்

மூசு வண்டறை கொன்றை

முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்

வாச மாமலர் உடையார்

வர்த்த மானீச்சரத் தாரே". (தி.2 .92 பா.5)

என்றவற்றால், முருக நாயனார் திருப்புகலூர் உடையவரை ஆட்டல் சூட்டல் முதலிய வழிபாட்டினைச் செய்து முப்போதும் முடிசாய்த்துத் தொழுதுநின்ற ஆதிசைவர் என்றுணரலாம். "குறிப்பு அறி முருகன்' என்றதால், இறைவன் திருக்குறிப்பினை அறியும் ஆற்றலும் அன்பும் மிக்கவர் என்பது புலனாகும். திருநாவுக்கரசர்க்குத், தில்லைச்சிற்றம் பலத்து நட்டத்தைச் சென்று தொழுதகாலத்தில், எம்பெருமான் திருக்குறிப்பு `என்று வந்தாய்' என்று உசாவுவதாயிருந்தது. அவர், திருக்கச்சியேகம்பத்தில்.

"அரியயன் இந்திரன் சந்திரா தித்தர் அமரர்எல்லாம்

உரியநின் கொற்றக் கடைத்தலை யார்உணங் காக்கிடந்தார்

புரிதரு புன்சடைப் போக முனிவர் புலம்புகின்றார்

எரிதரு செஞ்சடை யேகம்ப என்னோ திருக்குறிப்பே".

(தி.4 .99 பா. 7)

என்று, ஒருமாநிழலுடையார் திருமாண்குறிப்பினை உசாவியரு ளினார். மாணிக்கவாசகப்பிரானும், 'சிவனே, தென்தில்லைக் கோனே உடையானே உன்றன் திருக்குறிப்புக் கூடுவார்நின் கழல்கூட, ஊனார் புழுக்கூடு இதுகாத்து இங்கு இருப்பதானேன்' (திருவா.59) என்றுணர்ந்து உணர்த்தியருளினார். அவரும், `தில்லைச் சிற்றம்பலத்துச் செல்வம், கவித்த கைம் மேலிட்டு நின்று ஆடும்' திருக்குறிப்பினை அப்பருக்கு முன்பே அறிந்திருப்பார் என்று அறியக்கிடக்கின்றது. "என்போல் வினை உடையார் பிறர் ஆர்? தினையின் பாகமும் அடிநாயேனைப் பிரிவது உடையான் திருக்குறிப்பு அன்று" (திருவா.41) என்று, உடையானது திருவுள்ளக் குறிப்பினை ஓதியருளியதொடு அமையாது, அம் முழுமுதல்வனது திருக்குறிப்பினையே குறிக்கொண்டும் கடைக் கொண்டும் இருக்கும்படி அடியரை ஏவுதலையும் கருதின், அடியார் கடமைகளுள் முதன்மையும் இன்றியமையாமையும் உடையது எது என்றும் அஃது இறைவன் திருக்குறிப்பே அறிந்து கொண்டிருத்தல் என்றும் புலப்படும். அதுதான் அடியார்க்குரிய குறிக்கோள் ஆகும். ஆண்டவனது திருவுள்ளத்தது "திருக்குறிப்பு" ஆகும். அடியவரது திருவுள்ளத்தது "குறிக்கோள்" ஆகும். அது `குறி' எனவும் படும். இறைவனது குறிப்புள்ளார் அடியாராவர்.

"பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்

மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து

கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள்இ லாது கெட்டேன்

சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே". (தி.4 .67 பா.9)

"........பிரமன்றன் சிரமொன்றைக் கரமொன் றினாற்

கொய்தானைக் கூத்தாட வல்லான் றன்னைக்

குறியிலாக் கொடியேனை அடியே னாகச்

செய்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்

சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே". (தி.6 .66 பா.8)

"செறிவிலேன் சிந்தை யுள்ளே சிவனடி தெரிய மாட்டேன்

குறியிலேன் குணமொன் றில்லேன் கூறுமா கூற மாட்டேன்

நெறிபடு மதியொன் றில்லேன் நினையுமா நினைய மாட்டேன்

அறிவிலேன் அயர்த்துப் போனேன் ஆவடு துறை யுளானே". (தி.4 .57 பா.7) "தாமே தமக்குச் சுற்றமும்

தாமே தமக்கு விதிவகையும்

யாமார் எமதார் பாசமார்

என்ன மாயம் இவைபோகக்

கோமான் பண்டைத் தொண்டரொடும்

அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு

போமா றமைமின் பொய்நீக்கிப்

புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே". (திருவா. 607)

என்னும் திருவாசகத்துள் இரண்டும் அமைந்தவாறு அறியலாம்.

"அடியார் ஆனீர்! எல்லீரும்

அகல விடுமின் விளையாட்டைக்

கடிசேர் அடியே வந்தடைந்து

கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்

செடிசேர் உடலைச் செலநீக்கிச்

சிவலோ கத்தே நமைவைப்பான்

பொடிசேர் மேனிப் புயங்கன்றன்

பூவார் கழற்கே புகவிடுமே". (திருவா. 608)

எனப் புயங்க (பாம்பின்கால்) முனிவரால் வழிபடப்பெற்ற புயங்கன் திருவடிக்குப் புகவிடும் மணிவாசகர், அடியாரை ஏவுந்திறத்தால் ஆண்டவன் திருக்குறிப்பைப் புலப்படுத்தியது நன்கு விளங்குகின்றது.

13. அமர்நீதி நாயனார்

"கொடிறனார் யாதும் குறைவிலார் தாம்போய்க்

கோவணம் கொண்டு கூத் தாடும்

படிறனார்". (தி.3 .121.பா.1)

என்பதில், அமர்நீதி நாயனார் திருத்தொண்டு குறிக்கப்பெற்றுள்ளது என்பது சிலர் கருத்து.

14. தில்லைவாழந்தணர்

அந்தணர் பிரியாத சிற்றம்பலம், கற்றாங்கு எரி ஓம்பிக் கலியை வாராமே, செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பலம், சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம், எரி ஓம்பும் சிறப்பர். மறையோர் தில்லை நல்லவர், நீலத்தார்....சடையார்....சீலத்தார் (தி.1 .80; தி.3 .1)

15. நின்றசீர்நெடுமாற நாயனார்

தமிழ்ப்பாண்டியன், தென்னவன், பங்கம்இல் தென்னன். பஞ்சவன், பண்டிமன், பட்டிமன், பத்திமன், வெள்ளைநீறணியுங் கொற்றவன், தென்னவன் உற்ற தீப்பிணியாயின தீரச்சாற்றிய பாடல்கள் பத்தும். (தி.2 .66; தி.3 .51)

சிவபெருமானை வழிபட்டுப் பேறுஎய்திய பலர் இத்திரு முறைகளுள் குறிக்கப் பெற்றுளர்:- அநுமான், அயன், அரி, இந்திரன், இமையோர், இயக்கர், உருத்திரர், கின்னரர், சடாயு, சந்திரன், சம்பாதி, சரசுவதி, உபமன்யு, கொச்சைமுனி, கௌதமர், சண்பைமுனி, சூதமுனி, சனகாதியர், நீரின் மாமுனிவன், பராசர முனிவர், வியாக்கிரபாதர், பதஞ்சலிமுனிவர், சித்தர், சிபி, சுக்கிரீவன், சூரியன், திக்குப்பாலகர், நளன், பிருகஸ்பதி, பூரூரவா, மறவாளர், மார்க்கண்டேயர், முனிகணங்கள், யானை, இராகுகேது, இராமர், இலக்குவர், வருணன், வாலி, விஞ்சையர் முதலியோர் ஆவர். விரிவஞ்சி இவ்வளவில் நிறுத்தலாயிற்று.

தலைவாயில்

மூன்றாம் திருமுறை - அடியார் பெருமை - தொடர்ச்சி...| 1 | 2 |