தலைவாயில

மூன்றாம் திருமுறை - அடியார் பெருமை - தொடர்ச்சி...| 13 |

சிவபெருமானே தாயினும் நல்ல தலைவன் என்று அம்முழு முதலடியைப் போற்றிசைப்பார்கள். அப்போற்றுக்களை இசைக்கும் வாயினும் அத்திருவடியை அடியார்கள் நினைந்து மறவாமலிருக்கும் மனத்தினும் அகலாமல் மருவியிருக்கும் மாண்பு அக்கடவுளுக்கு இயல்பாக உண்டு.

"தாயினும் நல்ல தலைவர் என்று அடியார்

தம்அடி போற்றிசைப் பார்கள்

வாயினும் மனத்தும் மருவிநின்று அகலா

மாண்பினர் காண்பல வேடர்" (தி.3 .123 பா.5)

இதில், அடியவரடிகளைப் போற்றிசைப்பாருடைய வாயிலும் மனத்திலும் ஆண்டவன் குடிகொண்டிருந்தருள்வான் என்ற கருத்தும் கொள்ளுமாறு தொடர் அமைந்திருப்பது உணரத்தக்கது.

அடியவர்கள் போற்றல் செய்யும்பொழுது, ஆண்டவன் அதுசெய்துவரும் வாயில் விளங்குகின்றான் என்பது அநுபவம் மிக்கவர்க்கே புலனாகும். அன்பால் உருகும் அடியவர்க்கு ஆண்டவன் அன்பனாகின்றான்.

"சொல்நவிலும் மாமறையான் தோத்திரம்செய் வாயின்உளான்" (தி.1 .62 பா.7)

"அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர்" (தி.2 .63 பா.5)

அடியார்க்கு இலக்கணம் பல உள்ளன. அவற்றுள் தூய வெண்ணீற்றை மெய்யெலாம் சண்ணித்தல், அத் திருநீறு ஒளி வீச, கூட்டமாகக் கலந்து, திருவுலாவுடையார் பின்னர்ச் செல்லுதல், இசை பாடிப் பரவுதல், சிவபூசை செய்தல், மாலை தொடுத்தல், மாலையாற் புனைதல், தோளும் கையும் குளிரத் தொழுதல், அக்கு மாலைகொண்டு அங்கையில் எண்ணுதல், மறையோதுதல், உள்ளுருகுதல், சீலம் உடைமை, பற்றறுத்தல், அன்புருவாதல், திருவடியே தொழுதல், திரு வடி நினைவன்றி வேறு நினைவுறாமை, சிவதலங்களை வழி படுதல், புலனடக்கம், அடியார்க்கு அடியாரை வழிபடுதல், அடியார்க்கு உணவளித்தல், திருவைந்தெழுத்தை ஓதுதல், காலை மாலைகளில் கோயிலை அடைந்து வழிபடுதல், நண்பகலிலும் மாலையிலும் கூட்டமாகச் சேர்ந்து சிவச்சார்பாகப் பொழுதுபோக்குதல், தேவாரம் (தேவாராதநம்) புரிதல் முதலிய பல, திருஞானசம்பந்தர் திருப்பாடல் களில் காணக்கிடைக்கின்றன.

பெரியபுராணத்துள் விரித்துணர்த்தப்பெறும் வரலாறுகட்கு உரியவரும் திருஞானசம்பந்தர் திருப்பதிகங்களுள்ளே கிளந்தோதப் பெற்றவரும் ஆகிய நாயன்மார் திருப்பெயர்களாவன:-

1. சண்டேசுர நாயனார்

2. கண்ணப்ப நாயனார்

3. குலச்சிறை நாயனார்

4. கோச்செங்கட் சோழ நாயனார்

5. சிறுத்தொண்ட நாயனார்

6. தண்டியடிகள் நாயனார்

7. திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார்

8. திருநீலநக்க நாயனார்

9. நம்பிநந்தியடிகள் நாயனார்

10. புகழ்த்துணை நாயனார்

11. மங்கையர்க்கரசியார்

12. முருக நாயனார்

13. அமர்நீதி நாயனார்

14. தில்லைவாழந்தணர் (கூட்டம்)

15. நின்றசீர்நெடுமாற நாயனார்

16. தண்டியடிகள் நாயனார்.

இவ்வடியவர்களை ஆங்காங்குப் பாடியுள்ள பகுதிகளையும் அவற்றின் கருத்துக்களையும் அறிதல் அடியார் அடிக்கு அன்பினை நம் உள்ளத்தில் விளைக்கும்.

1. சண்டேசுர நாயனார்

1. 1 "பீரடைந்த பாலதாட்டப் பேணாதவன் தாதை

வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந்தான் றனக்குத்

தாரடைந்த மாலைசூட்டித் தலைமைவகுத் ததென்னே

சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர்மே யவனே". (தி.1 .48 பா.7)

1. 2 "வந்தமண லால்இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டும்

சிந்தை செய்வோன்". (தி.1 .62 பா.4)

என்பனவற்றாலும் பிறவற்றாலும் சண்டேசுர நாயனாரைப் போற்றி யுள்ளார்.

2. கண்ணப்ப நாயனார்

2. 1 "கானலைக் கும்மவன் கண்இடந்தப்பநீள்

வானலைக் கும்தவத் தேவுவைத்தான்". (தி.3 .35 பா.7)

2. 2 " வாய்கலசம் ஆகவழி பாடுசெயும் வேடன்மல ராகும்நயனம்

காய்கணையி னால்இடந்தீசனடி கூடுகா ளத்திமலையே" (தி.3 .35 பா.4)

2. 3 "கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலையெங்கள்

அண்ணலாரூர் ஆதி ஆனைக்காவே". (தி.3 .109 பா.7)

2. 4 "ஈண்டுதுயிலமரப்பினனே இருங்கண் இடந்து அடி

அப்பினனே' (தி.3 .113 பா.2)

எனக் கண்ணப்ப நாயனாரைப் போற்றிக் குடுமித்தேவரைக் கும்பிட்ட பயன் கண்டருளினார்.

3. குலச்சிறை நாயனார்

3ஆம் திருமுறை 120ஆம் திருப்பதிகத்தில், 2, 4, 6, 8, 10, 11 ஆகும் திருப்பாடல்களில், குலச்சிறை நாயனாரைப் புகழ்ந்திருத்தல் ஓதிக் களித்தல் சைவர் கடன்.

3. 1 "வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளை நீறணியும் கொற்றவன் றனக்கு மந்திரி ஆய

குலச்சிறை குலாவிநின் றேத்தும்

ஒற்றைவெள் விடையன்"

3. 2 "கணங்களாய் வரினும் தமியராய் வரினும்

அடியவர் தங்களைக் கண்டால்

குணங்கொடு பணியும் குலச்சிறை குலாவும்

கோபுரம் சூழ்மணிக் கோயில்"

3. 3 "நலம்இலர் ஆக நலமதுண் டாக

நாடவர் நாடறி கின்ற

குலம்இலர் ஆகக் குலமதுண் டாகத்

தவம்பணி குலச்சிறை பரவும்

கலைமலி கரத்தன்"

3. 4 "நாவணங்கு இயல்பாம் அஞ்செழுத் தோதி

நல்லராய் நல்இயல் பாகும்

கோவணம் பூதி சாதனம் கண்டால்

தொழுதெழு குலச்சிறை போற்ற

ஆவணம் கொண்ட சடைமுடி யண்ணல்

ஆலவாய் ஆவதும் இதுவே".

3. 5 "தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறும்

தொழுதுதன் குணத்தினைக் குலாவக்

கண்டுநாள் தோறும் இன்புறு கின்ற

குலச்சிறை கருதி நின்றேத்த

... ... ... ... ... ... ... .... ...

அண்டநா யகன்தான் அமர்ந்துவீற் றிருந்த

ஆலவாய் ஆவதும் இதுவே".

3. 6 "பன்னலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை

எனும்இவர் பணியும்

அந்நலம் பெறுசீர் ஆலவாய் ஈசன்".

4. கோச்செங்கட்சோழ நாயனார்

4. 1 "சிலந்தி செங்கட் சோழ னாகச் செய்தான் ஊர்" (தி.2 .63 பா.7) 4. 2 "செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே"(தி.3 .18 பா.4)

4. 3 "செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே" (தி.3 .18 பா.2)

என்பவற்றிலும் பிறவற்றிலும் வளவர் கோமகனார் திருப்பெயரைக் கூறியருளி னார்.

5. சிறுத்தொண்ட நாயனார்

தி. 3 -63ஆம் திருப்பதிகத்தின் எல்லாத் திருப்பாடல்களிலும் சிறுத்தொண்ட நாயனார் புகழ் பாடப்பெற்றுள்ளது. அவற்றால், அவர் வரலாற்றுக் குறிப்புக்கள் சிலவற்றையும் அறியலாம்.

"திருச்செங்காட்டங்குடி - கணபதீச்சரம் - சிறுத்தொண்டர் - செருவடிதோட் (பொருவன்மை) - தேனமர்தார்க் கல்நவில் தோள், சீராளன் - சிறப்பு உலவான் - வெந்தநீறணி மார்பன். சீர் உலாம் சிட்டன். பணிசெய்யப் பெருமான் விளையாடும் உரிமை. சிறுத் தொண்டன் அவன் வேண்ட, காழியடிகளையே அடிபரவும் சம்பந்தன் தமிழ் உரைப்போர் தக்கோர்" என்னும் தொகுப்பு, நுண்ணுணர்விற்கு விருந்து.

"சிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய

பிறப்பிலிபேர் பிதற்றிநின்று இழக்கோஎம் பெருநலமே" (தி.3 .63 பா.9)

என்பதில், பலபதிப்புக்களில் கால்தான் போயிற்று. அதனால் ஆனது யாது? `சிறப்புலவன் என்பதன் பொருள் யாது? நாளடைவில் சிறப்புளவன் எனத் திருத்தி விடுவரே!

 

6. தண்டியடிகள் நாயனார்

"அண்டர்தொழு சண்டிபணிகண்டு அடிமை கொண்டஇறை"

என்று (தி.3 .68 பா.10) பின் வந்த பதிப்புகளில் இருக்கின்றது. அதனால், `தண்டி' என்பது தண்டியடிகள் நாயனாரைக் குறிப்பதாகக் கொண்டு உரைப்பர் அறிஞர். தண்டி என்பது சண்டேசுர நாயனாரையும் குறிக்கும்.

 

"அண்ணலந் தண்டிதன் அடிகள் போற்றுவாம்"

-தணிகைப்புராணம், கடவுள் வாழ்த்து

7. திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார்

7. 1 "தாணுஎனை ஆளுடையான் தன்அடியார்க் கன்புடைமை

பாணன்இசை பத்திமையால் பாடுதலும் பரிந்தளித்தான்" (தி.1 .62 பா.9)

எனத் திருக்கோளிலியிற் பாடிய திருப்பாடலில்வரும் `பாணன்' என்பது, திருநீலகண்டயாழ்ப்பாண நாயனாரைக் குறித்தது என்பர் பலர்.

7. 2 "தக்க பூமனைச் சுற்றக் கருளொடே தாரம்உய்த்தது பாணற் கருளொடே" (தி.3 .115 பா.6)

என்பவற்றால், தம் திருப்பாடல்களை யாழிலிசைத்து இன்புறுத்திய நாயனாரைப் பாடி, நன்றியறிந்தருளினார்.

8. திருநீலநக்க நாயனார்

8. 1 "கடிமணம் மல்கி நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை அடிகள் நக்கன் பரவ அயவந்தி அமர்ந்தவனே"

(தி.3 .58 பா.6)

8. 2. .. ... ... ... ... ... "மன்னும்

"நிறையினார் நீலநக்கன் நெடுமாநகர் என்று தொண்டர்

அறையும்ஊர் சாத்தமங்கை அயவந்தி"(தி.3 .58 பா.11)

என்று, திருநீலநக்க நாயனாரையும் அவர் வாழ்ந்தருளிய நெடு மாநகராகிய சாத்தமங்கையையும் அவ்வூர்த் திருக்கோயிலாகிய அயவந்தியையும், அதைத் தொண்டர் புகழ்வதையும் குறித்தருளிய வாறு உணர்க. "மன்னும் நிறையினார்" என்று நாயனாரைப் புகழ்ந்தது கருதற்பாலது.

தலைவாயில

மூன்றாம் திருமுறை - அடியார் பெருமை - தொடர்ச்சி...| 13 |