தலைவாயில

மூன்றாம் திருமுறை - அடியார் பெருமை - தொடர்ச்சி... | 2 | 3 |

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருமுறைகளின் சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 1

அடியார் பெருமை

தருமை ஆதீன வித்துவான்

முத்து. சு. மாணிக்கவாசக முதலியார்

திருவடியை உணராமல் அடியவர் என்னும் பெயர்ப் பொருளை உணர்வது அரிதினும் அரிதாகும். உடம்புடைய உயிர் கட்குப் பெரும்பாலும் அவ்வுடம்பின் அடிப்பகுதியை அடி என்பது வெளிப்படை. உருவம், அருவம், அருவுருவம் மூன்றும் இல்லாத கடவுளுக்கு அடி உண்டு என்றால், உருவத்தில் கொள்ளும் அடி அல்லாத வேறு அடியே அங்குக் கொள்ளற்பாலது.

உருவத்தில் உள்ள அடி அருவுருவத்திலும் அருவத்திலும் இருத்தல் கூடாது. இருப்பின், அருவம் என்றும் அருவுருவம் என்றும் சொல்லப்பெறுமோ? உருவம் என்றே கொள்ளப்படும். அம் மூவகை வடிவங்களையும் கடந்த பெருநிலையில், உணர்ந்து வழிபடப் பெறும் அடி உண்டு. அத் திருவடியை அடையும் பொருட்டே, உருவத் திரு வடியைக் கொள்ளல் வேண்டும். திருக்கோயில்களில் திருவுருவத்தில் திருவடியை வழிபடும்போதும் முடிவான திருவடியை நினைந்து போற்றுவதே வீடுபேற்றிற்குத் தலைசிறந்ததொன்றாகும். அத் திருவடியைச் சேராதார் பிறவிப் பெருங்கடலை நீந்திப் பேரின்பக் கரையை எய்தார்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவ னடி சேரா தார்"

என்பது பொய்யா மொழி. அத்திருவடிச் சேர்வும் அதனால் எய்தும் பேரின்ப வாழ்வும் திருக்கோயில் முதலியவற்றில் உருவத் திருமேனி களில், வைத்து வழிபடப்பெறும் திருவடியை மறவாது போற்று வார்க்கே கிடைக்கும். ஏனையோர் எத்தனை பிறவியெடுக்கினும் போற்றார் ஆயின் வீடு பெறல் அரிதே.

தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கே மனக் கவலை மாற்றல் எளிது. மற்றையோர்க்கு அரிது. அத்தாள் சேர்ந்தாரே நிலமிசை (பேரின்ப வீட்டில்) நீடுவாழ்வார். மும்மலமும் நீங்கிய உயிரின் அறிவில் தங்கி நின்று உணர்த்தும் முதன்மை யுடையவனை நம்மைப்போல ஒரு வடிவுடையனென்று மட்டும் கொண்டு, அவனது உணர்வுருவை மறந்தால் நமக்கு உய்யும் வழியே இல்லையாம். அதுவே (சத்திரூபம்) அருளுருவம். அதுதான் மலம்நீங்கிய உயிர்கட்கு நிறையுணர்வு (வியாபக ஞானம்) விளைப்பது. அத்தகைய நிறையுணர்வு தான் உயிர்கள் அடையும் பேரின்பத்துக்கு உருவம். அப்பேரின்ப நுகர்ச்சியே `சிவாநந்தாநுபூதி' எனப்படும். அச் சிவாநந்தாநுபூதியைத் திருவடி என்பது சைவ மரபு. "முதல்வன் திருவடியாகிய சிவாநந்தாநுபூதியைத் தலைப்படும்" என்பது சிவஞானபோதமாபாடியம் ( சூ. 11.) வசனம் "மலவாசனை நீங்கினால் அன்றி முதல்வனது திருவடியாகிய சிவாநந்தத்தை அநுபவித்தல் கூடாது" ( சூ.10. அதி 1.) `திருவருளான திருவடி' என்று அத்திருவருளுருவையும் கூறுதல் உண்டு. குண குணிகட்குப் பேதம் கொள்ளாத நிலையில் அது வழங்கும்.

`யான் எனது என்று அற, உயிரில் பரை (சிவசத்தி) நின்றது அடியாம்' என்பது உண்மை நெறிவிளக்கம். "என்னது யான் அற்றால் இறைவனடி தானாகும்" என்பது அநுபோக வெண்பா. அத்தகைய உண்மையில். `யான்' `எனது' என்னும் இருவகைப் பற்றும் அற்றுத் திருவருளாய்ச் சிவாநந்தத்தை நுகரும் அன்பரே அடியார் என்னும் திருப்பெயர்க்கு உரியவர். அதுபெறமுயலும் உண்மையாளர்க்கும் உபசாரத்தால் `அடியார்' என்னும் அருட்பெயர் உரித்தாயிற்று.

"அடியார் சிவஞானம் ஆனது பெற்றோர்

அடியார் அரனடி ஆனந்தம் கண்டோர்

அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர்

அடியார் பவரே அடியார் ஆம்ஆல்".

"அடியார் பொன்னம்பலத்து ஆடல்கண் டாரே"

எனப்பெறும் திருமந்திரவசனத்தை உற்றுணர்ந்தால் அடியார் என்பதன் உண்மை வாய்மையாகும்.

"ஆரியனாம் ஆசான்வந்து அருளால் தோன்ற

அடிஞானம் ஆன்மாவில் தோன்றும்"

என்பது சிவஞான சித்தி வாக்கியம். அடிஞானம் ஆன்மாவில் தோன்றும். ஆயின், அந்த ஞானத்திற்கு முதலான ஞேயம் அந்த ஆன்மாவில் தோன்றாதேல், ஆன்மா, சிவத்தை அறிவது எவ்வாறு? ஞானமும் ஞேயமும் தோன்றும் இடம் ஆன்மாவே ஆகும். அப்பொழுது அடிஞானத்தால் நிறைந்த ஆன்மா முடியாகிய ஞேயமாய் நிற்கும் பேரின்பமாம்.

"முடியெனும் அதுவும் பொருளெனும் அதுவும் மொழிந்திடின் சுகம்"

"துன்னும் அவனே தானாக அடையின் முடியாம்"

"உரையிறந்த சுகமதுவே முடியாகும்"

"அடியெனும் அதுவும் அருளெனும் அதுவும் அறிந்திடின் நிர்க்குண நிறைவு"

சிவாநந்தாநுபூதி பெற்றவர்க்குச் சிவபிரானும், திருவடியும், திருமுகமும், திருமுடியும், பிறவும் ஆகிய எல்லாம் இன்பமேயாய்த் திகழும் இன்பம் அன்றி வேறு இல்லை.

`இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை' என்னும் உயர்வுக்கு உரிய பெரு நிலைத் தாண்டவம் அடியார்க்குத்தான் தெரியும்.

"ஆநந்த மேசெவி அம்புயத்

தாளிணை அங்கைகளும்

ஆநந்தமே திருக்கண்ணும் செவ்வாய்

அருள் மேனியெல்லாம்

ஆநந்தமே அருட்சிற்றம் பலவர்

அருட் பொருளும்

ஆநந்தமே அவன் தில்லையும்

காழியும் ஆநந்தமே"

- சிற்றம்பல நாடிகள்

அத்தகு முடிந்த முடிபாகிய அடிமுடிகளை அறிந்து அநுப வித்து வரும் பேரின்ப வாழ்க்கையரே அடியார் ஆவார்.

அடியார் வேறு ஆண்டவன் வேறு அல்லர். 1 மண், 2 நீர் , 3 தீ, 4 கால், 5 விண், 6 செங்கதிர், 7 வெண்கதிர், 8 வேள்வித் தலைவன் என்னும் எட்டும் ஆண்டவனுடைய வடிவங்கள் ஆகும். அவற்றுள், வேள்வித்தலைவன் சித்துருவன். ஏனை ஏழும் அசித்துருவம். அசித்துக்கும் சித்துக்கும் ஆண்டவன் வாழ்ச்சியாலும் வேறுபாடுண்டு. அவன் அசித்துக்களைத் தொழிற்படுத்தும் அளவாய் அவற்றிற் படுவன். அச் சித்துக்கோ அநந்நியமாகி அருளி வருவன். எல்லா உயிர்களும் சித்துக்களே ஆயினும், வேள்விக்கோன் ஆண்டவனை மறவாதவனாதலின், அவன் அம் முதல்வனுக்கு என்றும் நீங்காது வாழும் இடமாயினான்.

"தீவளி விசும்பு நிலன்நீர் ஐந்தும்

ஞாயிறும் திங்களும் அறனும்."

-பரிபாடல். 3, 4-5

என்பதற்கு, "அவை தீ, வளி, விசும்பு, நிலம், நீர் என்னும் பூதங்கள் ஐந்தும் ஞாயிறும் திங்களும் வேள்வி முதல்வனும் என இவை" என்றுள்ள உரையை இங்குக் கருதுக. வேள்வி முதல்வன் என்றது, அவரவர் சமயத்திற்குக் தக வேறுபடும். சைவ சமயத்திற்கு வேள்வி முதல்வன் சிவாபூஜா துரந்தரன், சிவஞானி ஆவன். அவனே நடமாடுங் கோயில், சிவனை வழிபடாத மாக்களை நடமாடுங் கோயில் என்பது நரகத்தை அடைவிக்கும் நாச வார்த்தையே ஆகும். அடியார்க்கே நடமாடக் கோயில்' என்னும் பெயர் உரியது. அதனை, நம் ஞானசம்பந்த பரமாசாரியர்,

"காதலால் நினைவார்தம் அகத்தன்" (தி.3 .373 பா.3)

"நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சுளானே" (தி.1 .119 பா.4)

"கைதொழுது ஏத்தும் அடியார்கள் ஆகம் அடிவைத்தபெருமான்" (தி.1 .2 பா.9)

"போகமும் இன்பமும் ஆகிப் போற்றி என்பாரவர் தங்கள் ஆகம் உறைவிடம் ஆக அமர்ந்தவர்.' (தி.2 .205 பா.5)

என்பவற்றால், அடியார் அகத்திலும் ஆகத்திலும் ஆண்டவன் பிரியாமல் உறையும் உண்மையை உணர்த்தியருளினார்.

"கலிக்காமூர் மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழி பட்டால் ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமான்" (தி.3 .105 பா.3). "பாவிகள் சொல்லைப் பயின்றறியாப் பழந் தொண்டர் உள்ளுருக ஆவியுள் நின்று அருள் செய்ய வல்ல அழகர்" (தி. 3 .103 பா.10). என்றவற்றை உற்று உற்று நோக்கி உணர்ந்தால் திருஞானசம்பந்த சுவாமிகள். நாம் உய்யும் வழியை வெளிப் படையாக உபதேசித்தருளும் உண்மை இதுவே என்று நமக்கே இனிது புலப்படும்.

`உச்சிமேல் உறைபவர்', `உளங்கொள்வார் உச்சியார்' `எங்கள் உச்சி உறையும் இறையார்' என்பவற்றால், அகத்தும் புறத்தும் நின்று அடியவர்க்கு அருளும் மெய்ம்மை விளங்கும். சீவன்முத்தி எய்திய அடியார்க்குப் பிராரத்த தேகம் விளங்கும் அளவும், அதில் அம்மையப்பர் வீற்றிருப்பர் என்பதை, `ஊன் அமரும் உடலுள் இருந்த உமை பங்கன்' (தி.3 .12 பா.4) `அகன் அமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று, ஐம்புலனும் அடக்கி, ஞானம் புகல் உடையோர்தம் உள்ளப் புண்டரிகத்துள் இருக்கும் புராணர்' (தி.1 .132 பா.6) `உருகுவார் உள்ளத்து ஒண்சுடர் (தி.2 .109 பா.5) "எண் ஒன்றி நினைந்தவர் தம்பால் உள் நின்று மகிழ்ந்தவன்" (தி.1 .37 பா.2) "பாடி ஆடிப் பரவுவார் உள்ளத்து ஆடி" (தி.1.28 பா.7) என்பவற்றால் விளக்கியருளினார்.

அன்பு அகத்தில் அமர்ந்து பெருகுதல் வேண்டும். வேட்கை, வெகுளி, இவறுதல், மயக்கம், செருக்கு, பகை என்னும் ஆறும் அழிதல் வேண்டும். புலனடக்கம் வேண்டும். சிவஞானம் புகுதலும் அதை விரும்புதலும் வேண்டும். உருக்கம் வேண்டும். ஒன்றியிருந்து நினைதல் வேண்டும். பாடவும் ஆடவும் பரவவும் வேண்டும். அவ்வளவும் உடைய அடியார்க்கே அம்முழு முதல்வன், உள்ளிருந்து, சுடர்வீசி, மகிழ்ந்து ஆடிப் பேரின்பம் விளைப்பான் என்று பயன் விரித்தருளினார்.

அடியார் சிந்தையே திருக்கோயில் என்று திருமுறைகள் விளம்புவது பலர் அறிந்த உண்மை. திருஞானசம்பந்தப் பெருமானார்,

"இறைஞ்சுவார் சிந்தையுள்ளே கோயிலாகத் திகழ்வான்" (தி.2 .64 பா.4)

"நினைப்பவர் மனத்துளான்" (தி.1.76 பா.7)

என்றருளினார்.

"நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்"

(தி.5 .2 பா.1)

என்பது அப்பர் அருள்மொழி.

அம்மனம் மூச்சுடன் வெளிச்சென்று உலகில் அலைந்து இடர்ப்படாதவாறு, அடக்கி, இறைவனது திருவடிக்கே இடமாக்குவது அடியார் இயல்பு. ஏற்றான் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்கும் இயல்புடைய அடியார் எல்லாரும் அவனுக்கே நெஞ்சத்தை இடமாக்குவர் என்பது சிறிதும் ஐயம் விளைக்காத வாய்மை. அவர்க்கு மூச்சும் பேச்சும் பிறவும் சிவமாகவே விளையும். அதனால், அவர்க்குப் புலன் வழிச் சென்று உலகின்பம் நுகரும் பொறியுணர்வு இல்லை. அதனால், அவர் உளத்திலும் உணர்விலும் சிவபெருமான் வீற்றிருந்து ஞான நடம் புரிகின்றான். அதனை,

"சினமலிஅறு பகைமிகுபொறி

சிதைதருவகை வளிநிறுவிய

மனன்உணர்வொடு மலர்மிசைஎழு

தருபொருள்நிய தமும்உணர்பவர்

தனதெழில்உரு வதுகொடுஅடை

தருபரன்உறை வதுநகர்மதிள்

கனமருவிய சிவபுரம்நினை

பவர்கலைமகள் தரநிகழ்வரே" (தி.1 .21 பா. 5)

என்று, கனிச்சீர்நந்நான்கு கொண்ட நான்கடித் திருப்பாடலால் தெளியச்செய்தருளினார் சிரபுரக்கோமகனார். இதன் முற்பகுதியில், அறுபகையும், அப்பகையறாத பொறியின் இயல்பும் அவற்றின் சிதை வும், அச்சிதைவைத் தவிர்க்கும் மூச்சடக்கமும், அம்மூச்சடக்கத்தால் எய்தும் மனவடக்கமும், அம்மன வடக்கத்தால் வளரும் ஞானமும், அந்த ஞானத்திருவுருவொடு அவ்விதய கமலத்தில் இறைவன் எழுந் தருளலும், அங்ஙனம் எழுந்தருளும் செம்பொருளையே நியதமாக உணர்கின்ற உணர்வும், அவ்வுணர்வே அடிமைத்திறம் ஆதலும், அவ்வடிமைத்திறம் உடையவரே அடியவராதலும் சுருங்கச்சொல்லி விளங்கவைத்தருளிய உண்மை உணர்வார்க்குப் புலனாகாது ஒழியாது.

பிற்பகுதியில், "அடியாரிடத்தில் ஆண்டவனும் அவ்வடியார் திருக்கோலமாகவே நின்று, அவரை வழிபடுவார்க்குக் காட்சி கொடுத்தருள்வான். அருளினும், அவ்வடியார் திருவுள்ளத்தில் இருக்கும் சிவனுருவம் அருளாகிய எழிலுருவமே ஆகும். அதுதான் அவனது எழிலுரு. அதைக்கொண்டே அவ்வுள்ளத்தை அடைவான். அத்தகைய பராபரன் எழுந்தருளி விளங்கும் தலம் சிவபுரம். அதை நினைந்து போற்றுவார் சகலகலாவல்லியின் திருவருட்செல்வம் உலகு புகழ நிகழப் பெறுவர்" என்னும் வாய்மை உணர்த்தப்பெற்றுள்ளது.

தலைவாயில்

மூன்றாம் திருமுறை - அடியார் பெருமை - தொடர்ச்சி...|  2 | 3 |