இயற்கையான ஒளி நாளும் வளருகின்ற விளக்கு ஆனவனே! என்றும் அழிதல் இல்லாத ஒப்பற்ற பொருளே! உயிரினது அறிவைக் கடந்த ஒப்பற்ற ஞான வடிவினனே! தூய்மை மிக்க பளிங்கின் குவியலாகிய அழகிய மலையே! அடியவர் உள்ளத்தில் இனிமைதரும் தேனே! பொதுவான எல்லையைக் கடந்து இறைவனிடம் ஈடுபட்டு இருக்கும் உள்ளத்தில் பேரின்பம் நல்கும் கனியாக உள்ளவனே! பொன்னம்பலத்தைத் தன் கூத்தினை நிகழ்த்தும் அரங்கமாகக் கொண்டு அடியவருடைய காட்சிக்குப் புலனாகும் அருள் நடனத்தை விரும்பி நிகழ்த்தும் உன்னை, உன் தொண்டனாகிய நான் புகழுமாறு நீ திருஉள்ளம்பற்றிச் செயற்படுவாயாக.
இதனுள், `விளக்கு` முதலியனவாகக் கூறப்பட்டவை உவமையாகுபெயர்கள். ஒளிவளர் விளக்கு என்றதில், வளர்தல், முடிவின்றி விளங்குதல். எனவே, `நெய், திரி, அகல் என்பவற்றைக் கொண்டு ஏற்றப்பட்ட செயற்கை விளக்காகாது இயற்கையில் விளங்கும் விளக்கு` என்றதாயிற்று. இதனையே, `நந்தா விளக்கு` எனவும், `தூண்டா விளக்கு` எனவும் கூறுவர். மாணிக்கமும், வயிரமும் போன்ற மணிவிளக்குக்கள் இங்ஙனம் அமைவனவாம். எனினும், `அவற்றினும் மேம்பட்ட விளக்கு` என்பதையே, `உலப்பிலா ஒன்றே` என்பதனாலும், `அவ்வாறாதல் அறிவே உருவாய் நிற்றலாலாம்` என்பதை, உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே என்பதனாலும் குறித்தருளினார்.
உணர்வு இரண்டனுள் முன்னையது உயிரினது அறிவு. சூழ் - எல்லை. இறைவன் உயிர்கள் அனைத்தையும் தனது வியாபகத்துள் அடக்கி நிற்பவன் ஆதலின், அவனை `அவற்றது அறிவின் எல்லையைக் கடந்தவன்` என்றார். `கடவுள்` என்னும் சொற்கும் இதுவே பொருளாதல் அறிக. தெளிவளர் - தூய்மை மிக்க. `பளிங்கின் திரளாகிய அழகிய குன்றே` என உரைக்க. மணி - அழகு. சிவபெருமான் பளிங்குமலைபோல விளங்குதல், திருநீற்று ஒளியினாலாம். அளி - அன்பு. ஆனந்தக் கனி - இன்பமாகிய சாற்றை யுடைய பழம். `இன்பம்` என்பது, தலைமை பற்றி, வரம்பில் இன்பமாகிய பேரின்பத்தையே குறித்தது. முன்னர், `சித்தத்துள் தித்திக்கும் தேன்` என்றது துரியநிலைக்கண் நிகழும் அனுபவத்தை யும், பின்னர், அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனி என்றது, அதீத நிலைக்கண் நிகழும் அனுபவத்தையும் குறித்தனவாம். வெளிவளர் கூத்து - காட்சிப் புலனாய், முடிவின்றி நிகழும் நடனம். `வெளியாகி` என ஆக்கம் வருவிக்க. தெய்வக் கூத்து - அருள் நடனம். அஃதாவது உயிர் கட்கு `பெத்தம்`, `முத்தி` என்னும் இருநிலைகளிலும் ஏற்ற பெற்றியால் அருள்புரியும் நடனம். அவ்விருவகை நடனங்களின் இயல்பையும்,
தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோ தம்முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.
(உண்மை விளக்கம் - 36)
எனவும்,
மாயை தனைஉதறி, வல்வினையைச் சுட்டு,மலம்
சாய அமுக்கிஅருள் தானெடுத்து - நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல்
தான்எந்தை யார்பரதந் தான்.
(உண்மை விளக்கம் - 37)
எனவும் போந்த வெண்பாக்களால் முறையே உணர்க.
விளம்புதல் - துதித்தல். விளம்புமா விளம்பு என்பதற்கு, `யான் விளம்புதற்பொருட்டு, நீ விளம்புவாயாக` எனவும், இதனுள் இனி வரும் திருப்பாட்டுக்களிலும், `பணியுமா பணியே, கருதுமா கருதே` முதலியவற்றிற்கும் இவ்வாறேயாகவும் உரைக்க. இவற்றால், இறைவனது காணும் உபகாரத்தின் இன்றியமையாமை விளக்கப் படுகின்றது.
`காட்டும் உபகாரம், காணும் உபகாரம்` என்பவை பற்றி இங்குச் சிறிது கூறற்பாற்று.
அறிவிக்க அன்றி அறியா உளங்கள் (சிவஞானபோதம்
சூ. 8, அதி. 2) என்றபடி, உயிர்களின் அறிவு, அறிவிக்கும் பொருளின்றி ஒன்றை அறியும் தன்மையைப் பெறாது. ஆகவே, உயிரினது அறிவு, பிறிதோர் ஒளியின்றித் தானே உருவத்தைக் காணமாட்டாத கண்ணின் ஒளிபோன்றதாம். அதனால், கதிரவன் ஒளி கண்ணொளியிற் கலந்து உருவத்தைக் காணச்செய்யும் முறைபோல, இறைவன் உயிரறிவிற் கலந்து பொருள்களை அறியச் செய்வான். இவ்வாறு செய்வதே, `காட்டும் உபகாரம்` எனப்படும்.
இனிக் கதிரவன் ஒளி கலந்தமையால் விளக்கம் பெற்ற பின்னும் கண்ணொளிதானே சென்று உருவத்தைக் காணமாட்டாது அதனோடு ஆன்மாவினது அறிவும் உடன்சென்று அறிந்தால்தான், கண் உருவத்தைக் காணும் அதுபோல, இறைவனது கலப்பால் விளக்கம் பெற்ற பின்பும் உயிரினது அறிவு, தானே சென்று ஒன்றை அறியமாட்டாது அதனோடு இறைவனும் உடன்சென்று அறிந்தால் தான் உயிர், பொருளை அறியும். ஆகவே, உயிர்கள் அங்ஙனம் அறிதற் பொருட்டு அவற்றோடு தானும் உடன்நின்று அறிதலே, `காணும் உபகாரம்` எனப்படும். இவற்றின் இயல்பெல்லாம் சிவஞானபோதம் முதலிய சித்தாந்த நூல்களாலும், உரைகளாலும் இனிது உணரற்பாலன.