எவ்வளவு தகுதி உடையவரும் தம் முயற்சியால் அணுகுதற்கு அரியவன், அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவன். மாற்றுதற்கு அரிய வேதத்தின் உட்பொருளாகியவன், நுண்ணியன், யாரும் தம் முயற்சியால் உணரப்படாத மெய்ப்பொருள் ஆகியவன். தேனும் பாலும் போன்று இனியவன். நிலைபெற்ற ஒளிவடிவினன், தேவர்களுக்குத் தலைவன், திருமாலையும் பிரமனையும், தீயையும், காற்றையும், ஒலிக்கின்ற கடலையும்மேம்பட்ட மலைகளையும் உடனாய் இருந்து செயற்படுப்பவன் ஆகிய மேம்பட்டவன். புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையை உகந்து எழுந்தருளும் அப்பெருமானுடைய மெய்ப் புகழைப்பற்றி உரையாடாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களாம்.
அரியான் - புறப்பொருளை அறியும் கருவியறிவினாலும், தன்னையறியும் உயிரறிவினாலும் அறிய வாராதவன். ` அந்தணர் ` என்றது, ஈண்டுத் தில்லைவாழ் அந்தணரை. ` அந்தணர்தம் சிந்தை யானை ` என்றது, அரியானாகிய அவன், எளியனாய்நிற்கும் முறைமையை அருளிச்செய்தவாறு.
அருமறை - வீடுபேறு கூறும் மறை. அகம் - உள்ளீடு ; முடிந்த பொருள். இதனான், எவ்வுயிர்க்கும் முடிந்த வீடுபேறாம் பெருமான் சிவபெருமானேயாதல் தெற்றென விளங்கிற்று. அணு - சிறிது ; இதனை, ` தேவர்கள் தங் கோனை ` என்பதன் முன்னாகவைத்து உரைக்க. யார்க்கும் - எத்தகையோர்க்கும். தத்துவம் - மெய். ` தெரியாத ` என்பது, ` தத்துவன் ` என்பதன் முதனிலையோடு முடிந்தது.
இதனால், இறைவனை அணைந்தோரும் அவரது இன்பத்தில் திளைத்தலன்றி, அவனை முழுதும் அகப்படுத்து உணரலாகாமை அருளிச்செய்யப்பட்டது. ` தேன், பால் ` என்பன உவமையாகு பெயராய், ` அவை போல்பவன் ` எனப் பொருள்தந்து நின்றன. ` திகழ் ஒளி ` என்பது இசையெச்சத்தால், ` தானே விளங்கும் ஒளி ( சுயம்பிரகாசம் )` எனப் பொருள் தருதல் காண்க. ஒளியாவது அறிவே என்க. ` தேவர்கள் தம் கோனை ` என்பது முதலிய ஏழும், ` கலந்து நின்ற ` என்பதனோடு முடிந்தன. ` அணு ` என்றதனால் சிறுமையும் ( நுண்மையும் ), ` பெரியான் ` என்றதனால் பெருமையும் ( அளவின்மையும் ) அருளிச் செய்தவாறு.
புலிக்கால் முனிவர்க்குச் சிறந்த உறைவிடமாய் இருந்தமை பற்றித் தில்லை, ` பெரும் பற்றப் புலியூர் ` எனப்பட்டது. ` பிறவாநாள் ` என்றருளியது, பிறவி பயனின்றி யொழிந்த நாளாதல் பற்றி. அறம் பொருள் இன்பங்களாகிய உலகியல்களும் பயனல்லவோ ? என்னும் ஐயத்தினையறுத்து, ` அவை துன்பத்தால் அளவறுக்கப்படும் சிறுமையவாதலின், இறையின்பமாகிய பெரும்பயனொடு நோக்கப் பயனெனப்படா ` எனத் தெளிவித்தலின், ` பிறவா நாளே ` என்னும் ஏகாரம் தேற்றம்.