கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதேனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன். ஏற்றாய் அடிக்கு + ஏ. ஏ - தேற்றம்.
திருக்கெடிலம் என்னும் ஆற்றிற்கு வடபால் விளங்கும் திருவதிகையில் உள்ள திருவீரட்டானம் எனப் பெயரிய மாநகராகிய திருக்கோயிலுள் எழுந்தருளிய சிவபெருமானே, அடியேனுக்கு மருளும் பிணி மாயை ஒரு கூற்று ஆயினவாறு வந்து வருத்தும் சூலை நோயை விலக்கமாட்டீர். (இந்நோயை அடைதற்கு அடியாகக்) கொடுமை பல செய்தன (உளவோ எனின், அவற்றை) நான் அறியேன். விடையானே. இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாமல் (நின்) அடி (மலர்)க்கே வணங்குவன். இந்நோய் என் வயிற்றின் உள்ளே அடியில் பற்றித் தன்னைத் தோற்றாமல் குடரொடு துடக்குண்டு என்னை முடக்கியிடலால், அடியேன் ஆற்றாமல் வருந்துகின்றேன். இவ்வருத்தம் அகற்றி அடியேனை ஆட்கொண்டருள்வாய்.
திருவதிகை மாநகர்க் கடவுளை மருணீக்கியார் (திருநாவுக்கரசு சுவாமிகள்) முதன் முதலில் நோக்கியபொழுதில் தம்மை அறியாதே திருவாயினின்றும் போந்த மொழியாவது, தம் உள்ளத்திற் பொருளாக இருந்த துன்பத்தை நீக்கிக் கொள்ளல் வேண்டும் என்பது. அஃது அல்லாமல் வேறொன்றாயிருத்தல் பொருந்தாது. அதனால் தொடக்கத்திலே `கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்` என்று வெளியாயிற்று.
அது கேட்ட முழுமுதற் பொருள், `இக்கூற்று ஆகி வந்த நோயினை அடைந்து வருந்துமாறு பல கொடுமைகளைச் செய்தனை. அக்கொடுமைகளை அடியாகக் கொண்டே இவ்வருத்தம் உண்டாயிற்று` என்று குறித்தது.
அதுகேட்ட சுவாமிகள், `அவற்றை நான் அறியச் செய்திலேன். என்னை அறியாமல் செய்த கொடுமைகள் பல இருக்கலாம். இருப்பினும் நான் அக்கொடுமைக்கோ அவற்றின் பயனுக்கோ கொள்கலம் ஆகும் பெற்றியேன் அல்லேன். இரவிலும் பகலிலும் எப்பொழுதும் பிரியாமல் (இடை விடாமல்) விடையேறி திருவடிக்கே வணங்கும் பணிசெய்து கிடப்பேன். திருவடிக்கு அடிமை பூண்ட என்னையும் அவ்வினை வருத்துதல் முறையோ? ஏற்றாய்க்கு இஃது ஏலாது (அறத்தின் வடிவமே ஊர்தியாம் ஏறு)` என்றார்.
`அச்சோ! கெடிலத்தின் வடபால் விளங்கும் திருவதிகையில் வீரட்டானத்தில் எழுந்தருளிய அம்மானே! சூலை நோய் தன்னைப் புலப்படுத்தாமல் என் வயிற்றின் உள்ளே அடியிலே குடலொடு துடக்குற்று, முடக்கியிடுதலால் உண்டாக்கும் வருத்தத்தினைப் பொறுக்கும் வலியில்லேன். அறிந்து செய்த வினையின் பயனாயினும் அறியாது செய்த வினையின் பயனாயினும், இத் துயரம் தீர்த்து அடியேனைக் காத்தருள்வாய்` என்றார் சுவாமிகள்.
விளக்கம்
வேற்றுச் (சமண்) சமயத்தில் இருந்த காலம் முழுதும் பரம சிவனைத் தொழாதாராகியும், இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன் என்றது எவ்வாறு பொருந்தும் எனின், கூறுதும்.
இது திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு மட்டும் அன்று. புது நெறியிற் புக்க யாவர்க்கும் தொன்னெறியிற் பற்று நீங்காது; புது நெறியில் ஒரு துணிவுண்டாகாது; பழநெறியிலிருந்தால் இப்பிறவியிலேயே வீடு பெறலாம் என்ற எண்ணம் அகலாது. இஃது உள்ளத்தியற்கை. சைவ சித்தாந்தச் செந்நெறிப்படியும் பரசிவனை மறவாமை வாய்மையாகின்றது. எவ்வாறு?
`யாதோர் தேவர் எனப்படுவார்க் கெல்லாம்
மாதேவன் அல்லால் தேவர்மற்று இல்லையே`
என்று (தி.5 ப.100 பா.9) அவர் திருவாய் மலர்ந்தருளியதாலும் `யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்` என்று அருணந்தி தேவநாயனார் அருளிய திருவாக்காலும், இராப் பகல் எல்லாம் சிவபிரானை மறவாத சீர்த்தி சுவாமிளுக்கு உண்டு என்பது உறுதியாயிற்று.
`வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.`
(தி.5 ப.90 பா.7)
என்று அருளினார் பின்னர். சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்று அருளினார் முன்னர். இது முரணுவதே? இதுவும் பலர் வினாவுவதே. `பூக் கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்... கழிவரே`,`நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும்... புண்ணியன், பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பன் அவர் தம்மை நாணியே` என்றவற்றையும் `பல் மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்` என்பது முதலியவற்றையும் ஒருங்குவைத்து நோக்குவார்க்குச் செவ்வன் இறை (நேர்விடை) தோன்றும்.
திருவதிகை வீரட்டானத் திறைவர் வினா:- ஏன் இங்கு வந்தாய்? என்பால் தீர்தற்கு உன்பால் உள்ள குறை என்ன?
மருணீக்கியார்:- அதிகைக் கெடில வீரட்டானத் திறைவரே, இச்சூலை நோய் எனக்குக் கூற்று ஆன வகையை விலக்கமாட்டீர்?
இறைவர்:- `அவர் அவர் வினைவழி அவர் அவர் அநுபவம்` உன்னை இச்சூலை நோய் பற்றி வருத்த, நீ செய்த வினைகள்தாம் காரணம். வினைப்பயனை வினை செய்தவர் அநுபவித்துத்தான் ஆதல் வேண்டும். பயன் அநுபவிக்காமல் இருக்கும் நெறியில் இறைபணி நின்று வினைசெய்திருப்பாயாயின், உன்னை அவ்வினை வருத்தாது. நீ செய்த பல கொடுமைகள் யாவை? அறிவையோ?
மருணீக்கியார்:- கொடுஞ்செயல்களாகச் செய்தன பலவற்றை அறியேன் நான். (அபுத்தி பூர்வ பாவ கன்மம் என்றவாறு)
இறைவர்:- அபுத்தி பூர்வ புண்ணிய கன்மங்களைச் செய்துவரின், அத்தகைய பாவ கன்மம் விலகும். அது செய்து வருகின்றாயோ?
மருணீக்கியார்:- ஏற்றாய்! (எருதின்மேல் ஏறிவரும்) பெருமானே! பசுபதீ! இரவிலும் பகலிலும் எப்பொழுதும் பிரியாமல் அடிக்கே வணங்குவன். வணங்கி வந்தும் அபுத்தி பூர்வ பாவகன்மம் விலகி யொழியாமல் வருத்துகின்றதே!.
இறைவர்:- விலகும் வரையில் வலியைப் பொறுத்துக் கொண்டு தான் இருத்தல் வேண்டும். எவ்வாறு எங்கே உன்னை அது வருத்துகின்றது?
மருணீக்கியார்:- எனக்கும் தோற்றாமல் என் வயிற்றின் உள்ளடியில் குடலொடு துடக்குற்று என்னை முடக்கி யிடுகின்றது. அதனால் அடியேன் வலியைப் பொறுக்கமாட்டாமல் வருந்துகின்றேன்.
இறைவர்:- நீ வருந்தினால், நான் யாது செய்வது?
மருணீக்கியார்:- கெடில நதிக்கரையில் திருவதிகையின் மாநகரில் (பெருங்கோயிலில்) எழுந்தருளிய அம்மானே! ஆண்டீர் நீயிர். அடியேன் யான். அதனால் அடியேனைக் காத்தல் ஆண்டீர்க்குக் கடனாகும்.
எச்சம்
கூற்று என்பது உடம்பும் உயிரும் வெவ்வேறு கூறாகச் செய்யுங்காரணம் பற்றிய பெயர். சூலை நோய் உடம்பினின்று உயிரை நீக்கும் அளவு வருத்துவதால் கூற்றெனப்பட்டது. சூலை கூற்று அன்று. கூற்றாயிற்று. அதனால் `ஆயினவாறு` என்றார்.
கயிலையை எடுத்தபோது நெருக்குண்ட இராவணன் அத்துன்பத்தின் நீங்கத் தக்க வழியைக் (கடவுள் இன்னிசையில் சாமகானத்தில் விருப்பன் என்று சொல்லிக்) காட்டிய பழம் பிறவி நிகழ்ச்சியே இச் சூலைக்கு ஏது என்பதை உணர்த்தக் `கூற்று ஆயினவாறு` எனறருளினார் என்பது சிலர் கருத்து. கோவை சிவக்கவிமணி சைவத் திரு. சி. கே.சுப்பிரமணிய முதலியார் பி.ஏ., அவர்களும் அதைக் குறித்திருக்கின்றார்கள். கோதாவரிக் கரையில் சமணமே உயர்ந்தது என்று சொற்போர் புரிந்த வரலாறும் அவர்களால் குறிக்கப்பட்டுளது. (தி.12. அப்பர் புராணம் 70 சி.கே.எஸ் உரை. பதிகக் குறிப்பு நோக்குக.)
கொடுமை பல செய்தன - கொடுஞ் செயல்களாகச் செய்தன பல. நான் அறியேன் - அறிந்து செய்தேன் அல்லேன். அறியாமற் செய்தனவாயிருக்கும். அபுத்தி பூர்வ பாவ கன்மம் என்றபடி.
கொடுமை - கொடுஞ்செயல். பண்பாகு பெயர். செய்தன - வினையாலணையும் பெயர்.
ஏற்றாய் - (ஏறு- விடை) விடையை யுடையாய்; விளியேற்ற வினைப்பெயராயும் முன்னிலை வினைப்பெயராயும் கொண்டுரைத்தாருமுளர். இராப் பகல் இடைவிடாது செய்யும் வணக்கமே பிறவிப் பிணிக்கு மருந்து. `மனத் தகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப் பகலும் நினைத்தெழுவார் இடர் களைவாய் நெடுங்களம் மேயவனே!` தி.1 ப.52 பா.2); `இரவொடு பகலதாம் எம்மான் உன்னைப் பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்` (தி.3 ப.3 பா.8) `எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக; ஏத்தும்` (தி.4 ப.41 பா.3) என வருதல் உணர்க.
அடிக்கே இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன். அடிக்கே - என்பதில் உள்ளவாறு, அப்பர் அருளிய மூன்று திருமுறையுள்ளும் பற்பல இடத்திற் காணலாம். `சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே` என்பது பல திருப்பாக்களின் முடிவாயுள்ளது. `விசயமங்கை ஆண்டவன் அடியே காண்டலே கருத்தாகியிருப்பன்` `நல்லுருவிற் சிவனடியே அடைவேன்` `சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றேன்` `திருவாரூர் மணவாளா நின்னடியே மறவேன்` உன்னை அல்லால் யாதும் நினைவிலேன்` என்று அண்ணாமலையாகிய தீச்சான்றாகச் சொல்லியருளினார். `எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் கண்ணிலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழலடியே கை தொழுது காணின் அல்லால்... உணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே` என்பவற்றால் திருவடிக்கேயன்றி மற்று எதற்கும் தம் வணக்கத்தை உரித்தாக்காத உறுதியுடையவர் வாகீசப் பெருந்தகையார். நான்காவது திருமுறையின் இம்முதல் திருப்பாட்டில் `அடிக்கே` என்றருளினார். தி.6இன் ஈற்றுப் பதிகத்தின் ஈற்றடியில் எல்லாம் `அடிக்கே` என்பது அமைந்தவாறு அறிக. `ஒற்றை யேறுடையான் அடியே அலால் பற்று ஒன்று இல்லிகள் மேற்படை போகலே` என்பதில் `சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்` உடையவர்க்கு இறப்பு இன்மை உணர்த்தியவாறும் உணர்க. இதனை உணர்வார் அனைவரும் தம் தம் முப்பொறிகளையும் சிவபிரான் திருவடிக்கே உரியனவாம் வகையிற் செலுத்தும் அருள் வாழ்வு நடத்துவதே வையகத்துள் வாழ்ந்தும் அருள் வானத்தில் வாழ்ந்து பெறும் பேரின்பத்தை அடைவிக்கும்.
`ஏயிலானை என் இச்சை அகம்படிக் கோயிலானை` (தி.5 ப.91 பா.1) ஈற்றுத் திருக்குறுந்தொகையுள் 4,8,9 ஆம் திருப் பாடல்களை நோக்கின், திருநாவுக்கரசர் திருவுள்ளக் கிடக்கை இனிது புலனாகும். சிவபத்தர்க்குளதாகும் பேரின்பம் விண்டு பத்தர்க்கு உண்டாகாது என்று அறுதியிட்டுக் கூறியதுணர்க.
அகம்படியே:- அகம்புxபுறம்பு. அகம், புறம் என்பன வற்றின் ஈற்றில், புகாரம் இயைந்து வழங்குதல் இன்றும் அறியலாம். புகாரத்தோடு சேர்ந்தவை அகன், புறன் என்றலும் ஆம். அகம்பு + அடிமை + தொழில் = அகம்படிமைத்தொழில். திருக்கோயிலின் உட்டுறை வினைஞர் அகம்படியர் ஆவர். திருநாளைப் போவாரை `நாளைப் போவாராம் செயலுடைப் புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம்` `திருவாயிற்புறம் நின்று ஆடுதலும் பாடுதலும் ஆய் நிகழ்வார்.` `தம் பெருமான் இடம் கொண்ட கோயில் புறம் வலம் கொண்டு பணிந்தெழுந்து` `மதிற்புறத்தின் ஆராத பெருங்காதல்... வளர்ந்தோங்க உள்ளுருகிக் கைதொழுதே... திருவெல்லை வலங்கொண்டு செல்கின்றார்`. `மதிற்புறத்துப் பிறை யுரிஞ்சுந் திருவாயில் முன்னாகப்... நெருப்பமைத்தகுழி` என்பவற்றால், புறம்படிமை விளங்கும். `நடமாடும் கழல் உன்னி அழல் புக்கார்... எரியின் கண்... மாய... உரு ஒழித்துப் புண்ணிய மாமுனிவடிவாய்... வெண்ணூல் விளங்க வேணிமுடி கொண்டெழுந்தார்`, `வானவர்கள் மலர்மாரிகள் பொழிந்தார்`. `தில்லைவாழந்தணர்கள் கைதொழுதார்`. `தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார்`. திருநாளைப் போவாராம் மறைமுனிவர் தில்லை வாழந்தணரும் உடன் செல்லச் சென்று... கோபுரத்தைத் தொழுது உள்புகுந்தார்... `உலகு உய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார்` என்பவற்றால் அகம்படிமை விளங்கும். ஒருவர் திறத்திலேயே அகம்படிமை புறம்படிமை இரண்டும் விளங்குதலைத் திருத்தொண்டர் புராண(தி.12)த்தில் காண்க.