நிட்களமாய் ஒருவராலும் அறிதற்கரியதாகிய சிவம் ஆசாரிய மூர்த்தமாகி வந்ததென்று கருதி உம்முடைய குற்றத்தினின்று நீங்குவீராக. ஞானத்தைத் தான் விரும்பாமல் தானே வலியக் கொடுத்ததென்று கருதி உம்முடைய குற்றத்தினின்று நீங்குவீராக.
உந்தீபற வென்பதற்கு மேற்செய்யுள்களுக்கும் இப்படிப் பொருளுரைக்க. பறவென்றது ஒருமைப்பன்மை மயக்கம். இப்படியன்றிப் பறக்கவென்னும் வியங்கோளைப் பறவென்று விகாரமாக்கிக் கர்த்திருவாலே உம்முடைய தீமைகளெல்லாம் பறக்கக் கடவதெனினு மமையும். இதற்கும் அப்படியன்றிப் பறக்கவென்னு மெச்சத்தைப் பறவென விகாரமாக்கி உம்முடைய தீமைகளெல்லாம் பறந்துபோம்படிக்குக் கருதி நிற்பீரெனினுமமையும். இதற்கு நிற்பீரென்பது வருவிக்க. இம்மூவகையன்றிப் பொருளுண்டாயினுங் காண்க.