மண்முதற்... ரூபம் பிருதிவி தத்துவ முதலாகச் சிவதத்துவமீறாக வரும் முப்பத்தாறு தத்துவத்தின் வடிவை இம்முறையிலே காண்பதுவே தத்துவ ரூபம் ; மண்முதற்... காட்சி இப்படி வந்த தத்துவம் முப்பத்தாறும் ஆன்மா கூடியறியினல்லாது தானாக அறியாதாகையால் சடமென்று காண்பதுவே தத்துவ தரிசனம் ; மண்முதற்... மன்றே சிவன் ஆசாரிய மூர்த்தமாய் எழுந்தருளி வந்து மண் முதலாகச் சிவமீறாக வரும் பூதம் பொறி அந்தக்கரணம் கலாதி சுத்ததத்துவமென்று அஞ்சுவகையாம் முப்பத்தாறு தத்துவமும் அசத்தாய்ச் சடமா யழிந்து போயிறதென் றறிவிப்பதா லொக்கு மெனப் பொருந்தி, ஆன்மா பூதமல்லவென்று பழித்தும் பொறி யல்லவென்று உணர்ந்தும் அந்தக் கரணமல்லவென்று நீக்கியுங் கலாதி ஞானமல்லவென்று நிராகரணம் பண்ணியுஞ் சுத்ததத்துவ மல்லவென்று தூடணஞ் செய்தும், இவையிற்றின் நில்லாது நீங்கித் தத்துவாதீதமாய் இந்தத் தத்துவத்தின் மீண்டுங் கூடாமல் விஞ்ஞானகலத்துவம் பிறந்து சகல தரிசனமாய் நிற்றல் தத்துவ சுத்தியாம்.