1-4. பூமன்னும் நிருத்த நிலை போற்றி :
(உரை) பொற்றாமரைப் பூவில் நிலைபெற்று நான்கு முகத்தோ டெழுந்தருளி யிருக்கின்ற பிரமனும், தேவர்களும், அவர்களுக்கு மன்னனாகிய தேவேந்திரனும், திருமகள் பொருந்திய மார்பில் மிகுந்த பிரகாசமுடைய கௌத்துவ மணி தரித்திருக்கிற விஷ்ணுவும், சகல பொருண்மையும் நாவிலிருந்து சொல்லுகிற வேதங்களும், வேத முடிவான உபநிடதங்களும், சகல அறிவும் விளக்கஞ் செய்கிற விந்துவும், அதற்குள்ளொளியாகிய நாதமும் குடிலையும் தத்தம் இதயத்தில் தோன்றிய போதச் செயல்களால் ஆமளவுந் தேடவும் அளவுபடாமல் அப்பாற்பட்டிருக்கிற பேரின்பவொளியாகிய பதி ஆன்மாக்களை இரக்ஷிக்க வேண்டுமென்கிற கிருபை ஜனித்து எவர்களும் பத்தியுடனே தரிசித்து மலமயக்கம் நீங்கித் தெளிந்து தேறும்படிக்கு மிகுந்த இரத்தின மணிகள் சூழ்ந்து விளங்காநின்ற அழகிய திருச்சிற்றம்பலத்துள் ஞானப்பிரகாசம் நிறைந்து தோன்ற நின்று ஆன்மாக்களுடைய பிறவித் தொடர் பறுக்கச் செய்யும் ஆனந்த நிருத்தநிலை எம்மை இரக்ஷிக்க.
4-6. குன்றாத பெரியவழி போற்றி :
(உரை) அநாதியாய் எண்ணிறந்த ஆன்மாக்கள் மோக்ஷமடைந் திருக்கவும் குறைவில்லாமல் நித்தியமாய் அளவிறந்திருக்கிற பெத்தான் மாக்களைக் கன்மத்துக்கீடான தேகங்களில் சராயுஜம் அண்டஜம் சுவேதஜம் உத்பீஜம் ஆகிய நால்வகை யோனிகளிலும் மாறி மாறி வேறு வேறாகப் படைத்தும் அவ்வான்மாக்களுக்குள்ள அரிய வினைப் போகங்களை ஏறாமற் குறையாமற் கூட்டிப் புசிப்பித்தும் சர்வ சங்கார காலத்தில் ஆன்மாக்கள் சகலாவத்தைப் பட்டுப் பிறந்து இறந்து அலைந்து திரிந்த இளைப்பு நீங்கும்படிக்குக் காரண கேவலாவத்தையில் ஒடுக்குவித்தும் அநாதியே தொடுத்து ஆதியாய்ச் சிருஷ்டித்துந் திதித்துஞ் சங்கரித்தும் அளவிறந்து ஆதி நடுவந்தமற்று வருகிற பெரிய கிருத்திய வழி எம்மை இரக்ஷிக்க.
6-13. முந்துற்ற வினைபோற்றி :
(உரை) ஆன்மாக்கள் நித்தியமாயிருக்கச் சிருஷ்டிப்பட்டுந் திதிப் பட்டுஞ் சங்காரப்பட்டும் வருவானேனென்னில், அநாதியிலே மலத்திலே பந்திக்கப் பட்டிருக்கையினாலே மலம் நீங்கும் படிக்குக் கர்த்தா கிருபையினாலே செய்வித்ததாயிருக்கும். ஆனால் மலம் ஆன்மாக்களைப் பந்தித்த தெப்படியென்னில், முன்னேயுண்டான நெல்லுக்கு உமிதவிடு முளை முற்பிற்பாடில்லாமல் அநாதியிலே கூடத்தோன்றினதாயிருக்கும். இதில் ஆணவமலம் ஆன்மாவின் அறிவை மறைத்த தெப்படியென்னில், செம்பினுடைய நிறத்தைக் காளிதங் கூட உதித்து மறைத்தது போன்றிருக்கும். கர்த்தாவினுடைய வியாபகத்திலே ஆன்மாக்கள் நிறைந்திருக்கவும் ஆணவமலம் உயிரை மறைத்தது எப்படியென்னில், பழமையாகிய கடல் வியாபகத்திலே நிறைந்திருக்கிற தண்ணீரை உப்புக் கலந்து பிடித்திருப்பது போன்றிருக்கும். இப்படி யெல்லாம் வெவ்வேறாய் ஒருபுடை யொப்பாகக் கர்த்தா உள்ளவன்றே யுண்டாய் அருவமாய் மூவகையான்மாக்களையும் ஆணவமலம் பிடித்து உருவையுடைய மகத்தான மாணிக்க மணியை நஞ்சுவாய்க்கு ளடக்கின மகத்தாகிய சர்ப்பம் போலவும் பச்சையாய் முளைத்து விறகாகுமட்டும் அக்கினியைத் தெரியாமல் மறைத்து வைத்திருந்த காஷ்டம் போலவும் ஆன்மாவினுடைய ஞானக் கண்ணை மறைத்த கடுந்தொழிலையுடைய ஆணவமலத்தினாலே அறிவுஞ் செயலும் இறந்த சகல உயிர்களுக்குங் கர்த்தா கிருபையினாலே நன்றாய் அவர்களிச்சையை நாடிப் பார்த்துக் கட்புலனாற் காணாத பிறவியந்தகர்க்கு உரிமையுள்ளவர்கள் இச்சித்த படிக்குக் கோலைக் கொடுத்து இச்சித்த இடங்களிலே கொண்டுபோய் விடுகிறது போலப் பொலிவினையுடைய மாயையின் காரியமான தனுகரண புவன போகங்களையும் முன்னே யுண்டாக்கிக் கொடுத்து இச்சித்த புவனங்களிலே இச்சித்த வினைப் போகங்களையும் கூட்டி முடித்துப் புசிப்பிக்கையினும் அந்த ஆணவமல மயக்கத்தாற் கர்த்தா வுபகாரத்தை மறந்து நாமென்கிற அந்தக்கரண விகார ஹிதாஹித முண்டாகையாற் புண்ணிய பாவமிரண்டும் உண்டாம்படி காட்டி அந்தப் புண்ணிய பாவத்தினாற் பிறக்கும் பிறவியுண்டாக்கி அதனாற் செய்யு மிருவினைகளையும் ஏற்றுக்கொண்டு மீண்டும் அந்த வினைப் போகங்களைப் புசிப்பதற்குக் கலாதி ஞானங்களையுங் காட்டுங் கிருபைத் தொழில் எம்மை இரக்ஷிக்க.
13-19. நாட்டுகின்ற வல்லபமே போற்றி :
(உரை) கர்த்தா ஆன்மாக்களுக்கு வினைப்போகங்களைப் புசிப்பிக்கிறதற்குத் தேகங்களைக் கூட்டுகிற முறைமை சொல்லுமிடத்து முன்பு ஆகமங்களிலே சொல்லப்பட்ட எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதப் பிறப்பின் வகையெல்லாம் முன் செய்த இருவினைக் கீடாக உண்டாம்படி திருவுள்ளத்திலே நிச்சயித்துப் பல பிரகாரம் வெவ்வேறு தேகபேதங்களை யுண்டாக்குவதுமல்லாமல் மானுட தேகமுண்டாக்குவ தெப்படியென்னின், அழகு பொருந்திய தந்தையுந் தாயுங் காமவிகாரம் தீரும்படிக்குச் சையோகபோகஞ் செய்யுங் காலத்து அவர்களுக்குப் பிள்ளைப்பேறு உண்டு இல்லையென்பதும் அறிந்து தாயினுடைய கருப்பத்தில் தந்தை புல்லினுனியிற் றங்கிய பனித்திவலை போன்ற விந்துவை விடும்போது அதற்குள் உயிரை யடக்கி உட்கருப்பாசயத்திற் சுரோணிதத்துடனே கலப்பித்து இருத்தி அந்த விந்து தாய் வயிற்றில் அளவற்றிருக்கின்ற உதராக்கினியினால் எரிசுவற்றாமலும் பல வகையாகிய அந்த வயிற்றுக்குட் கிடந்த அநாதி யுயிர்களாகிய புழுக்கள் தங்கள் பசியினாலே அந்த விந்துவை விரைவிலே யெடுத்துப் புசியாமலும் வெய்ய கும்பிநரகம் போன்ற காயக் கருக்குழியிற் காத்திருந்து வினைக்கீடான கை கால் முதலாகிய சகல உறுப்புங் குற்றமறச் செய்து அழகு பொருந்தத் திருத்திப் பின்பு அத்தேகத்தை யெடுத்து நேரே யோகத்தி லிருத்தித் திரிகால வர்த்தமானங்களையும் அறியும்படிக்கு உணர்வையுங் கொடுத்துப் பத்துமாதவரைக்கும் புசிப்புங் கொடுத்துப் பின்பு பூமியிலே பிறக்கும்போது இரண்டு கையுஞ் சிரசிலே குவித்த பாவனையாய்த் தலைகீழாய் வரும்படி செய்து முன் புகுந்த சிறுவழியைப் பெருவழியாக்கி அவ்வுயிர் துன்புற்று இறவாமல் உயிருக்குயிராய் அணைத்திருந்து வெளியிலே யிழுத்துக்கொண்டு வருகிற மெய்ம்மையாகிய வல்லபம் எம்மை இரக்ஷிக்க.
19-22. அம்மாயக்கால் நெறி போற்றி :
(உரை) தாய் வயிற்றை விட்டுப் பூமியிலே பிள்ளை பிறந்தவுடனே சரீரத்துக்குக் காரணமான மாயை சண்டமாருதம் போல் அலைத்து மயக்க, முன் கருப்பத்தினிருக்கும்போது இப்பிறவித் துன்பத்தை நீக்கிக் கொள்ள வேண்டுமென்று அவ்விடத்திலே நினைத்திருந்த நல்ல நினைவையும் மறந்து உயிர் தேக மயமாய் நல்வினை தீவினைத் துன்பத் தொடர்ச்சியாற் பகுத்தறிவில்லாமல் அக்காலத்தில் உயிர் புசிப்பிச்சையுற் றிருப்பதை யறிந்து பசிதெரியும்படி அறிவித்துக் கதறியழும்படி செய்வித்துப் பிள்ளை யழுவதுகண்டு உடனே பெறும்போதுற்ற வருத்தத்தையுந் தாயானவள் மறந்து உட்கி ஆவிசோரும்படி யுள்ளே நடுங்கி மிகுந்தோங்கிய அன்பினாலே அவள் சிந்தையிரங்கி யுருகப் பச்சுடம்பிலிருந்த இரத்தஞ் சிவப்பு மாறி வெண்ணிற அமுதமாய்க் கொங்கையில் வந்து சுரக்கிற அந்தத் தீஞ்சுவைப் பாலைப் பிள்ளை வாய்வைத்துக் குடித்து முகஞ்செழித் திருப்பது கண்டு தாய் மகிழ்ந்திருக்கும்படி செய்வித்து இப்படிப் பிள்ளையாசை யென்கிற பெருங் கயிற்றாற் கட்டிச் சகல உயிர்களுக்குங் குழந்தைகளை வளர்க்கும்படிக்கு ஆன்மாக்கள் தோறும் நேசத்தை வைத்தருளிய நெறி எம்மை இரக்ஷிக்க.
22-24. ஆசற்ற படிபோற்றி :
(உரை) தாயன்பாயிருந்து இரக்ஷித்த கர்த்தா இப்படி ஜநித்து வரும் உயிர்களுக்குக் கருப்பத்திலிருக்கிற பசும்பருவத்தும் பாலனாயிருக்கிற அந்தப் பருவத்தும் நாளுக்கு நாள் பரிணமித்து வளரும் பாலகுமார விருத்தப்பருவத்துஞ் சகலாவத்தைப்படுத்திப் பருவத்துக் கேதுவான கலாதிஞானத்தைக் கொடுத்துச் செயலற்ற உயிர்கள் வாங்கிக்கொள்ள ஆள்வதற்கேற்ற முப்பத்தாறு வகைக் கருவிகளையுங் கொடுத்து உயிர்க்குயிராய் இமைப்பொழுதும் நீங்காமல் நின்று பண்டாரியாய் உயிர்க்கு ஏவல் செய்யும் கிருபை எம்மை இரக்ஷிக்க.
24-35. தண்டாத அறம் போற்றி :
(உரை) கர்த்தா பண்டாரிபோல நின்று தத்துவங்களைக் கூட்டி இரக்ஷிக்கும்படி எப்படியென்னில், நீங்காமற் புன்புலால் நாறுந் தோல் போர்த்த புழுக்கூடான சரீரமாகிய பெரியமனைக்குள் கிருபையினாலே துரியாதீதந் துரியம் சுழுத்தி சொப்பனம் சாக்கிரமென்னும் பெயரையுடைய ஐந்துகட்டாக்கி, ஆன்மாவுக்கு அநாதியிலே பொருந்தின உண்மை நிலைமையான ஆணவமல மறைப்புச் சற்றும் நீங்காமல் திண்மையாய் உயிரைச் சிறைப்படுத்தி நிற்கும் மூலாதாரமாகிய வீட்டில் அதீதப்பட்டு உயிர் மூடமாய் உட்கிடப்ப அவ்விடத்தில் இளைப்பாறு மட்டுங் காலத்தை நியதியினால் நிறுத்தி, அப்பால் மேலே ஓங்கியிருக்குந் துரியமான நாபித்தான வீட்டில் உயிரைப் பிராணவாயு வுடனே கூடச்சேர்த்து அவ்விடத்திலே கலை வித்தை இராகத்தினால் முன்னே ஆன்மாவினுடைய தொழில் அறிவு இச்சை மூன்றையும் எழுப்பி அதற்குத் துணையாகப் பிரகிருதிமாயையி லுண்டான அழகு பொருந்திய சாத்துவிக ராசத தாமத மென்னும் முக்குணங்களையுஞ் சேர்த்து, அப்பால் மேலே சுழுத்தி வீடாகிய இருதயத் தானத்திற் சித்தக் கருவியுடனே கூட்டி, அவ்விடத்திற் சித்தத்தாற் கண்ட பொருள் இன்ன பொருளென் றறியாமல் மயங்கி நின்ற உயிரைச் சொப்பன வீடாகிய கண்டத்தானத்திற் சேர்த்து அவ்விடத்திலே சத்தாதியைந்தும் வசனாதியைந்தும் அந்தக்கரணங்கள் நான்கும் வாயுக்கள் பத்தும் புருடனுமான இருபத்தைந்து கருவியுங் கூட்டி முன்னே செய்த இருவினைக்கீடாக முன் சாக்கிரத்திலே இன்ப துன்பத்தைப் புசிப்பித்த முறைமைபோலச் சொப்பனத்திலும் இருவினைப் போகம் உண்டானதுமறிந்து சுத்ததத்துவங்களினாற் பிரேரித்துப் புசிப்பித்து, பின்பு அதற்கு மேலாய தூலதேகத்தின்கண் வளர்ந்து நிற்கிற சாக்கிர வீடென்னும் நுதற்றானமாகிய ஓலக்கமண்டபத்தின்முன் கேவலாவத்தைக்குக் கூடாமல் நின்ற பூதங்கள் ஐந்தும் புருடதத்துவம் நீங்கலாக நின்ற வித்தியாதத்துவம் ஆறுஞ் சிவதத்துவம் ஐந்தும் ஆகப் பதினாறும் முன் சாக்கிரத்திலிருந்த ஞானேந்திரியம் ஐந்துங் கன்மேந்திரியம் ஐந்துஞ் சொப்பனத்திலிருந்து வந்த இருபத்தைந்து கருவியும் மற்றப் புறக்கருவிகள் நாற்பத்தைந்தும் ஆகத் தொண்ணூற்றாறு கருவிகளையும் பொருத்தி ஜீவிக்கும்படி செய்வித்து, முன்னே விட்டு நீங்காமல் ஐந்தவத்தையினும் மறைந்து நின்ற ஆணவமல இருள் கூடாதபடி மனையிலே நெருங்கியிராநின்ற இருளை நீக்கும் விளக்கைப் போலச் சூக்குமாதி வாக்குடனே கூடிப் பிரகாசித்து நிற்குஞ் சகலாவத்தையில் உயிரை நிறுத்திக் கன்மத்துக் கேதுவான சத்தாதி விடயங்களைக் காட்டி ஆன்மாக்கள் யானென தென்று கர்ஜித்து நின்றவர்கள் வெவ்வேறு தொழிற்குரியராம்படி செய்விக்குஞ் சிவதருமம் எம்மை இரக்ஷிக்க.
35-38. வேட்கைமிகும் படிபோற்றி:
(உரை) கர்த்தா சகலாவத்தையிற் கருவி கூட்டி முடிக்கும் உபகாரத்தை மறந்து ஆன்மாக்கள் பிரபஞ்ச ஆசை மிகுந்து புசிப்பு நிமித்தம் ஒருகண நேரமானாலுங் கெடாமல் வயிற்றிலே மண்டியெரிந்து கொண்டிருக்கிற வடவாமுகாக்கினி போன்ற பசியைத் தணிக்கும் பொருட்டுத் திண்ணிய ஆங்காரப் பலன்களால் அவரவர் வல்லமைக் கேற்ற தொழில்கள் செய்யுமிடத்து அவர்களுக்குத் தோன்றாமல் உடன் நிகழ்ச்சியான ஒருமைப்பாடாய்க் கூடி நின்று அவரவர் நினைவின்படி செய்வித்துக் கொடுத்து ஆன்மாக்கள் யானெனதென்று இடையறாது செய்யும் வினை மிகுதியான ஆகாமியத்துக்கும் முன்செய்த ஆறத்து வாவிலுங் கட்டுப்பட்டிருக்கிற சஞ்சிதத்துக்கும் அதிலே பாகப்பட்டுப் புசிப்புக்கு வந்த பிராரத்துவச் செலவுக்கும் அவரவர் கணக்கப்பிள்ளை யாயிருந்து பட்டோலை யெழுதி யொப்பிக்குங் கருணை இரக்ஷிக்க.
38-53. நட்டோங்கும் மறம்போற்றி :
(உரை) கர்த்தா ஆன்மாக்கள் செய்த இருவினைக்குங் கணக்கெழுதின படிக்குப் புண்ணிய பாவத்துக்குள்ள பலன்களைக் கூட்டுகிறது எப்படியென்னில், பொருந்தி மிகுந்த இருவினை முறைமை பூமியிலுள்ள மானுடருக்கே யல்லாமலும் எண்ணில்லாத தனுக்களிலே பொருந்தியிருக்கிற பல உயிர்களுக்கும் இந்த முறைமையாக வினைகளை நிச்சயித்தறிந்து முன் அமைத்த ஆயுள் முடிவில் உடல்களைப் பிரித்து நல்வினை பாகப்பட்ட உயிர்களையெல்லாம் பூதசரீரமான திவ்விய சரீரத்துடனே காலநீட்டிப்பாய் வாழ்ந்திருக்கும்படிக்கு விஷ்ணுவுலகத்தில் விஷ்ணு ரூபமாயும் பிரமலோகத்திற் பிரமரூபமாயுந் தேவலோகத்தில் தேவேந்திர ரூபமாயுந் தேவர்களாயும் வந்த பெரிய பதப்பிராப்திகளிலே நானாவிதமான போகங்கள் புசித்திருக்கும்படி செய்வித்தும், பூமியிலே இராஜ ஐசுவரியத்துடனே வாழும்படி செய்வித்து மிருக்கும் நாராயண(?) புண்ணிய கன்மபலன் புசித்து முடிந்து பாவகன்ம பலன் புசிக்கும் நாள் அடுத்தவுடனே அங்கங்கு வாழ்ந்திருந்த உயிர்கள் அந்தந்தத் தேகத்தை விட்டு மாளும்படிக்குக் கர்த்தாவினுடைய ஆக்கினையினாலே வெற்றி பொருந்திய யமதூதர்கள் வேகத்துடனே வந்து பாசத்தினாற் கட்டிப் பிடித்துக் கொண்டு போய்த் தங்கள் யஜமானாகிய தருமராஜாவின் முன்புவிடத் தருமராஜர் வந்து ஆன்மாக்களைப் பார்த்து இரங்கி, ‘பாவிகாள் ! உங்களுக்கு இற்றைவரைக் குள்ளாகப் பிறவாநெறி பெறவேண்டுமென்று கர்த்தாவை விரும்பும் அறிவு பிறக்கவில்லையோ’ என்று நல்ல இன்சொல்லாக நடுவுநிலைமையாய்ப் பேசிப் பின்பு அவர்கள் செய்த பாவத்துக்கேற்ற செயல்களைச் செய்யுமென்று கோபத்துடனே கிங்கரர்களைப் பார்த்துச் சொல்ல, விடைபெற்றுப் பூதசரீரமான யாதனா சரீரத்திலே உயிரை நிறுத்தித் துன்பமுறும்படிக்குச் செக்கிலேயிட் டாட்டியும், தீவாயிலிட் டெரித்தும், பெரிய நெருப்புத் தூணைத் தழுவிக் கிடக்கும்படிச் செய்தும், மிகுந்து நீண்டிருக்கிற நாராசங்களைக் காய்ச்சிச் செவியிலே செலுத்தியும், நாக்கைக் கருவிகொண்டறுத்தும், அவரவர் ஊனை அவரவர் தின்னும்படிக்கு அரிந்து கொடுத்து அடித்தும், பேராதபடி ஆழ்ந்த நரகங்களிலே அழுத்துவித்தும், பின்னுந் தங்களுடைய கடுங்கோபமாறாத இச்சையுடையராய் அவற்றிலே ஒருநாள் போல் துன்பத்தைக் கொடாநின்ற கொடிய நரகங்களிலே பல நெடுநாள் செல்லுமட்டும் இயமகிங்கரர்கள் பணி செய்யக் காருண்ணிய வடிவாகிய கர்த்தா சிற்றுயிர்களை யமகிங்கரர்களிடத்திலே காட்டிக் கொடுத்து அவர்கள் துக்கப்படுகிறதைப் பார்த்திருப்பானேனென்னில், உலகத்திலே தந்தை தாயான பேர்கள் பிள்ளையினுடைய நோய் மிகுதியை உள்ளே நாடியறிந்து நோய் தீரும்படிக்கு அதற்கேற்ற முறைமை செய்வது கடனென்று நினைந்து பிள்ளையை நோயறிந்து மருந்து கொடுத்துத் தீர்க்கும் வைத்தியத் தொழில் செய்கிறவனிடத்திலே ஒப்புவித்து, அவன் இருப்பு நாராசங் காய்ச்சிச் சுடவும் சத்திரமிட்டு அறுக்கவும், கண்படலத்தை உரிக்கவும், இப்படிப் பல கிரியையுஞ் செய்யப் பிள்ளை வருத்தப்பட்டாலும் நோய் தீர்ப்பதை யறிந்து அந்த வைத்தியனுக்கு நல்ல திரவியமுதலான வெகுமானம் பண்ணிச் சந்தோஷத்துடனே அவர்கள் கண்டு நிற்பதுபோலவும், மனுச்சக்கிரவர்த்தியான சோழராஜா தான் அரிய தவம் பண்ணிப் பெற்ற அருமையான ஒரு மகன் திருவாரூர்த் தெருவழியே தேரேறிப் போம்பொழுது மாயமாகத் தேர்க்காலில் வீழ்ந்து இறந்த பசுவின் கன்றினிமித்தம் அந்தப் பாவந் தீரும்படிக்கு எத்தனை பேர்கள் மாறுபாடாய்த் தடுக்கவுங் கேளாமற் பிள்ளையைக் கன்று தங்கின படிக்குத் தேர்க்காலிலே போட்டு நசுக்கிப் போடவேண்டு மென்று துணிந்து தேரிலே தாய்ப்பசுவை வைத்து ஊர்ந்து கொன்றது மகனை யமன்பிடித்து வருத்தாதபடிக்குச் செய்த கிருபையே யாகையால் அந்த வழக்குப்போலவும், விடம்போன்ற சிந்தையையுடைய நமன் தூதர் மிகுந்த கோபத்துடனே பாவஞ்செய்த உயிர்களைக் கொடிய நரக வாதனைப் படுத்துவதைச் சகல உயிர்களுக்குந் தந்தையுந் தாயுமாயிருக்கிற சிவமுஞ் சத்தியும் மலநோய் தீர்ந்தாற் போதுமென்று சந்தோஷத்துடனே கண்டு நிற்கிற வல்லபமான கருணை மறம் எம்மை இரக்ஷிக்க.
53-59. பல்லுயிர்க்கும் தரம்போற்றி :
(உரை) கர்த்தா இங்ஙனஞ் சொன்ன ஒன்பது வகையினாலும் இரக்ஷிக்கப்பட்ட ஆன்மாக்களுக்குப் பெத்தகாலம் முடிவாகுமட்டும் இருவினைப் பலன்களை அவன் அவள் அது முன்னிலையாக நின்றருத்தித் தனக்குமேல் ஒரு கர்த்தா இல்லாத சகல புவனகர்த்தாவாகிய சிவன் அந்த இருவினைகளுக்கு இருப்பிடமான மாயாவுலகங்களை எடுப்புண்டு எடுப்புண்டு மாறிமாறி வரும்படிக்கு ஆதியாய் அநாதிதொடுத்துச் சிருஷ்டித்துந் திதித்துஞ் சங்கரித்துந் திரோபவித்தும் அநுக்கிரகித்துந் தமது சத்தியினாலே பஞ்சகிருத்தியங்களைச் செய்வித்தும் மலபரிபாகப்பட்டதை அறிந்து பின் நரகத்திற் செல்லும் பெத்தத்தை நீக்கி, ஆன்மாக்களுக்கு முத்திக் காலத்தை ஏற்படுத்த வேண்டித் தனக்கு அன்பராகிய மெய்யடியார்களைக் கண்டவுடனே தன்னைக் கண்டதுபோல அந்த ஆன்மாக்கள் இன்புற்று அவர் ஏவின பணிவிடை கேட்டுய்யும் படிக்குச் சிறிது நல்லவழியை யுண்டாக்கிக் காட்டி, அதின் நல்வழியே சிவபுண்ணியமானது புத்தி பூர்வத்தினும் அபுத்தி பூர்வத்தினும் உபாயச் சரிதையாதியிலும் உண்மைச் சரிதையாதியிலுமாகக் கிரமத்திலே செய்யப்படுத்தி, அந்தமட்டாய் மலர விருக்கிற அரும்புப் பருவம் நீங்கிய வரும்பருவத்துக்கடுத்த முதனாள் மொட்டாயிருக்கிற மலர்போல் மலம் பரிபாகம் பிறந்த தன்மை சமீபத்திற் கண்டு ஒப்பற்ற நல்ல சிவசமயத்திற் பத்திமிகுந்த இடத்திலே பிறப்பித்து நாட்டப்பட்ட இருவினையும் ஏககாலத்தில் இரண்டுந் தராசு நுனிபோலச் சமனான பருவத்திலே பல பிறவியும் அந்தமாம் படிக்குத் தமது தீவிரதரம் பொருந்தின அருட்சத்தியை அவ்வுயிர்களின் மலம் நீங்கும்படிக்குப் பதிக்குந் தரம் எம்மை இரக்ஷிக்க.
59-71. முத்திதரும் குணம் போற்றி :
(உரை) இருவினையொப்பு மலபரிபாகம் சத்திநிபாதம் பெற்ற பக்குவான்மாக்களுக்குக் கர்த்தா ஆசாரிய மூர்த்தமாய் அநுக்கிரகம் பண்ணுகிற முறைமை எப்படியென்னில், முத்தியைக் கொடுக்கும் நல்வழியையுடைய விஞ்ஞானாகலர்க்கு அவர்கள் பற்றியிருக்கிற ஆணவமல மொன்றினையும் அவர்களறிவுக்குட் பேரறிவாய்ப் பிரகாசித்துத் தோன்றி நீக்கி அருள்வடிவாக்கி ஞேயத்திலழுந்தும்படி கடாக்ஷிப்பர். பின்பு பொருந்தி விளங்காநின்ற பிரளயாகலருக்குத் திருவுருக்காணும் படிக்கு மானும் மழுவுஞ் சதுர்ப்புஜமுங் காளகண்டமுந் திரிநேத்திரமுமுடைய திருமேனி கொண்டிருந்து, அவர்களைப் பற்றியிருக்கிற ஆணவமலங் கன்மமலம் இரண்டையும் நீக்கி அருள்வடிவாக்கி, ஞேயத்தி லழுந்தும்படி கடாக்ஷிப்பர். அசுத்த மாயையிற் றோன்றி பூலோகத்தை விட்டு நீங்காமலிருக்கிற சகலருக்கு அவர்களைப் போல மானுடச்சட்டை சாத்தி, மானைக்காட்டி மானைப் பிடிப்பார் போல, முன்நின்று தரிசனை கொடுத்து அவர்களைப் பற்றியிருக்கிற ஆணவம் கன்மம் மாயையென்னும் மூன்று மலங்களையுந் தீக்ஷடக்கிரமங்களினாலே தீர்த்து அருள்வடிவாக்கி அடிமையாக்கிக் கொள்ளுதல் அந்தக் கர்த்தாவுக்கு ஆதிகாலத்திலே யுண்டான குணமாதலால், திருச்சிற்றம்பலத்தின் கண்ணே நின்றாடுகிற திருநடனத் தொழிலும், பிரகாசம் பொருந்திய நீலமணி போன்று இலங்குகிற காளகண்டமும், திருமேனியிற் பாதியாய்ப் பச்சை வடிவு கொண்டிலங்குஞ் சிவகாமி தங்கிய இடப்பாகமும், பவளக்கொடி படர்ந்து கிடப்பதுபோன்ற திருச்சடா பாரத்தின்மேல் தரித்திருக்கிற கங்கையும், பாலசந்திரப் பிரபையும், வெருவும்படிக்குப் படம்விரித்தாடுகிற சர்ப்பமும், அழகுமிகுந்த திருநுதல் நடுவில் மேல்நோக்கி நீண்டு கிடந்திலங்கும் அக்கினி நேத்திரமும், வலக்கையிற் பிடித்திருக்கிற கேடில்லாத லயத்துடனே முழங்குந் தமருகமும், அழகு பொருந்திய இடக்கையிற் பிடித்திருக்கிற அக்கினி குண்டமும், அரையிலே கட்டியிருக்கிற ஐந்தலையரவக் கச்சும் புள்ளிபொருந்திய புலித்தோலுடையும், பக்குவான்மாக்களை மோட்சமாகிய பேரின்ப வெள்ளத் தழுத்துதற்கு ஊன்றின பாதத்தினும் அடியாருள்ளத்திற் கலந்து இன்ப பூரணமாயிருக்கிற ஞான குஞ்சிதபாதத்தினும் பிரியாமற் றரித்திருக்கிற திருவருட் பிரகாசம் பொருந்திய சிலம்பும், உயிர்களைச் சோரத்தனமாய்க் களவு கொண்டு தன் வசப்படுத்துகிற முன்னை வினையை வென்று பிறவித் துன்பங்களை யறுப்பதற்கு மலவைரி நாமென்று முழந்தாளில் தரித்துக் கொண்டிருக்கிற வீரகண்டாமணியும் இவைகளொன்றும் உருத்தோன்றாதபடி உள்ளேயடக்கி ஒளித்துக்கொண்டு, என்றும் முடிவில்லாத பேரின்ப மோக்ஷத்தில் எம்போல்வாரையும் உறுத்த வேண்டிப் பிறவா முதல்வன் பிறந்து வந்தானென்று அதிசயமாய்ச் சொல்லும்படிக்குத் திருமேனி கொண்டு, தேன்பொருந்திய செங்கழுநீர் மாலை யுலாவும் புயத்தையுடைய மறைஞானசம்பந்த நாதனென்று ஒரு பெயருஞ் சுபாவத்திலில்லாத நாதன் ஒரு திருப்பெயருஞ் சாத்திக் கொண்டு பூமியிலுள்ளவர்களைப் போல உண்பதும் உறங்குவதும் அஞ்சுவதும் விடயபோகம் இன்பமுறுவதும் ஒத்தொழுகிக் கொண்டெழுந்தருளி மகிழ்ந்திருந்த குணம் எம்மை இரக்ஷிக்க.
71-78. மிண்டாய நிலைபோற்றி :
(உரை) இப்படி மானுடரைப்போலத் திருமேனி கொண்டு ஆசாரியமூர்த்தமாய்ப் பெண்ணாகடத்தின்கண் எழுந்தருளியிருந்து, எங்களுக்கு அகங்காரம் பொருந்திய புறச்சமயப் பொருள்களெல்லாம் அறிவித்து, அதிலே ஒரு பிரயோஜனமு மில்லையென்று அறிகிற திடமே பேறாகும்படி செய்வித்து, தேறாமலிருந்த சித்தந் தெளியும் படிக்குத் திருமேனி தரிசனை கொடுத்தருளிய அந்தத் தகைமையும் போகாமல் மேம்பாடாகிய மெய்கண்ட சந்தானச் சுத்தசைவ நெறியில் விட்டகுறை யறிந்து சமயவிசேட நிருவாணம் பொருந்தப்பட்ட அபிடேகமென்னும் நான்குவகைத் தீடிக்ஷயும் பண்ணி, சிவந்த தாமரை மலர் போன்ற திருக்கண்ணருளினாற் பார்த்து துன்பப் பிறப்பினாற் பட்ட புண்ணுடம்புத் துன்பமும் இருவினைத் துன்பமும் உயிரை விட்டு நீங்கும்படிக்கு அழகு பொருந்திய தாமரை மலர் போன்ற திருக்கைத் தலத்தைச் சிரசிலே வைத்தருளி, கற்போன்றிருந்த நெஞ்சை அக்கினியைச் சேர்ந்த மெழுகுபோல உருக்கி, திரிபதார்த்த மெய்த்தகைமைப் பொருள்களெல்லாம் விரித்தோதி யுபதேசித்து, ஒற்றுமையாக ஆகாயத்தை மறைத்த பூதவிருள்வடிவானது அந்த ஆகாயத்திற் சிவந்த சூரியன் உதயமானவுடனே பூதவிருட் பிரகாசமாய் மறைந்து நீங்க ஆகாயம் சூரியவொளி வடிவாகி நின்ற முறைமைபோல உபதேசித்த ஞானப்பிரகாசத்தைப் பற்றி மும்மலமும் நீங்கி ஆன்மபோதம் அருளிலடங்கச் செய்து, மலம் ஆன்ம போதத்தையும் பற்றாமல் தன்னுடைய அநாதி நித்தியமுங் கெடாமல் நீதியாக நிறுத்தின நிலைமை எம்மை இரக்ஷிக்க.
79-84. மேதக்கோர் கழல்போற்றி :
(உரை) உலகப்பற்று அற மேம்பாட்டுடனே தாதமார்க்கஞ் சற் புத்திரமார்க்கஞ் சகமார்க்கஞ் சன்மார்க்கமென்னும் நான்கு வழியினும் நின்று உண்மைச் சரியை கிரியா யோகங்களை விதிதப்பாமல் அநுட்டித்துச் செய்த அடியார்களுக்குச் சிறப்பு மிகுந்த பதமுத்தியான சாலோக சாமீப சாரூபம் எய்தும்படி செய்வித்து அதனால் ஞானதாகமுற்ற அடியார்கள் அநுக்கிரகத்தைப் பெற்று மெய்யன்பினாலே சிவ ரூபத்தில் ஆன்மதரிசனை பண்ணிச் சிவதரிசனத்தில் ஆன்மாவின் தன்னியல்பை யறிந்து பின்பு பெத்தமுத்தி இரண்டினும் உபகரித்து இரக்ஷிக்கிற கர்த்தாவினுடைய கருணையை மறந்து நாம் ஒரு முதலென்றிருந்தோமேயென்று லஜ்ஜைப்பட்டு நாணிப் பதைப்பற அருளினழுந்தி இரண்டற் றநுபவிக்குஞ் சிவாநுபவத்தைத் தடுமாறியானாலுஞ் சிவசிவாவென்று நினையாத எனக்கும் வீணே இரங்கி அநுக்கிரகம் பண்ணவேண்டி வேதாகமபுராண சாத்திரங்களிற் சொல்லப்பட்ட எல்லாப் பொருளுக்கும் மனத்துக்குந் தாமரைமலரி னெழுந்தருளி யிருக்கும் பிரமாவிஷ்ணு முதலாகிய தேவர்கள் நினைப்புக்குந் தெரியப்படாத தூரம்போல நின்றும் ஜடசித்துக்களிடத்தினும் அணித்தாய் நிறைந்திருக்கிற அழகு பொருந்திய சீர்பாத கமலத்தை அடியேன் சிரசின்மீதிருந்து பிரகாசிக்கும்படிக்கு வைத்துப் பெரிய மஹாதேவரென்னும் பெயரையுடைய மறைஞானசம்பந்த ஞானாசாரியர் எனக்கு அநுக்கிரகம் பண்ணிய பொருள் ஏதென்னில், தான்வேறு நான்வேறாய் வந்து பொருந்தினதில்லை யென்னும் வழக்கை யறிவித்து, அநாதியே தொடுத்து உன்னிடத்திலே யொளித்திருந்து நீ நம்மைப் காணாதிருக்க நாம் என்றும் உன்னைக் கண்டு கொண்டிருந்தோமென்கிற கள்ளத்தை இப்போது உயிர்க்குயிராய்ப் பிரகாசித்துநின்று அறிவித்த பாதமானது எம்மை இரக்ஷிக்க.
84-87. வள்ளமையால் செயல்போற்றி :
(உரை) வளப்பமிகுந்த கிருபையினாற் கர்த்தா தன்னைத் தெரிவித்துத் தன் பாததாமரையான திருவருளுக்குள்ளே பிரியாமல் என்றுங் கிடந்த என்னையுந் தெரிவித்த எல்லைக்கண் மின்போன்று தோன்றி யழிகிற வண்ணத்தையுடைய தேகமுந் தேகத்தைப் பொருந்திய குணமயக்கங்களும் அறிவை விளக்கப்பட்ட கலைகால முதலாகிய தத்துவங்களும் முன்னில்லாத கேவலாவத்தையை முன்னே அறிவித்துப் பின்பு தேக முதலிய கருவி கரணாதிகளுங் கூடின சகலாவத்தையையும் அறிவித்து இனி அருளை விட்டுத் தேக முதலான கருவிகரணாதிகளிற் செல்லாத சுத்தாவத்தையையும் அறிவித்த செயல் எம்மை இரக்ஷிக்க.
87-95. எல்லாம் போற்றிசைப்பேன் யான் :
(உரை) எல்லாத் தத்துவங்களையும் பொய்யென்று கண்டு நீங்கித் தம்மைத் தெளிந்தோ மென்றும், நமக்கு மேலே வேறொரு பொருளில்லை யென்றும், சைவ சித்தாந்திகளுடனே கூடலாகாது அவர் நமக்குப் புறம்பென்றும் பேசித் தன் இன்பத்தை தானே புசித்திருப்போ மென்று மகிழ்ச்சியுற்றுச் செவ்விதான நிருவிகாரி நாமேயென்று பேசி அகமே பிரமமென்னும் வாதிகள் தன்னையும் அறியாமல் தலைவனையும் அறியாமல் மயங்கி நிற்கிற வெளிபோன்ற இருளில் என்னை விடாமல், ஞானசொரூப வொளி வடிவாய் இப்போது நீ நிற்கிற நிலையென்று நிகழ்த்தி, இதற்கு மேலே வேறொரு பொருளின்றி யமையாமையும் எடுத்தோதி, ஆன்மாவைச் சிவத்துடனே ஒன்றாகும்படி சாதித்துத் தம்மைச் சிவமாக்கி இந்தப் பிறவிப் பேதமாகிய சரீரத்திலேதானே ஜீவன் முத்தித் தன்மையும் பரமுத்தித் தன்மையும் சரியாகக் கண்டு வெற்றின்பமான சிவபோகம் புசியாமல் சமவாதம் பேசி ஆன்ம சத்தியுடனே கூடி இன்பம் புசிப்போமென்கிற பாதகரோடுங்கூடி ஏகமாய்ப் போகாமல் எனக்கு எவ்விடத்துங் குருலிங்க சங்கமமாய்க் காட்சிகொடுத்து, மேலான போகமுண்டாகிற திருவருட் பாதத்திற் பிரியாமல் உள்ளேயடங்கிக் கிடக்கும்படி பொருந்துவித்து, ஞேயத்தி லழுந்திநிற்கும் அழியாத சாயுச்சியநிலை இந்த அருள் நிலையென்று விகற்பந்தோன்றாமல் அநுக்கிரகித்து, தமது பரிபூரண வியாபகத்துள்ளே யானும் ஒக்க வியாபித்து நிற்குந் தன்மையுங் காட்டி, மிகுந்தோங்கி அளவுபடாமல் நிறைந்து நின்ற தமது பேராநந்தத் திருவருட் கடலில் விளைந்த ஆராத ஞேயவமுதத்தைப் புசித்துக் களித்திருக்கும்படி தாமே என்னைத் தேடிவந்து கொடுத்த பெருங்கருணைத் தகுதியினால் ஊனுயிர் தானே முதன்மையென்று நின்ற பெத்தகாலத்தும் அதற்கு முதன்மையுங் கொடுத்து நீங்காமல் நின்ற முன்னோனை எந்த விதங்கொண்டு புகழ்ந்து போற்றுவேன் யான்.