சேந்தனார் - திருவிடைக்கழி


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

மாலுலா மனந்தந் தென்கையிற் சங்கம்
வவ்வினான் மலைமகள் மதலை
மேலுலாந் தேவர் குலமுழு தாளுங்
குமரவேள் வள்ளிதன் மணாளன்
சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன்
என்னும்என் மெல்லியல் இவளே. 

பொழிப்புரை :

`சேல் மீன்கள் உலாவுகின்ற வயல்களை உடைய திருவிடைக் கழியில் திருக்குராமரத்தின் நிழலின்கீழ் நின்ற திருக்கோலத்தில் காட்சி வழங்கும் வேல் தங்கிய நீண்ட கையினை உடைய அரசனாகியவனும், பார்வதியின் புதல்வனும், வானத்தில் தங்கும் தேவர்கள் இனம் முழுதும் ஆள்பவனும், வள்ளியின் கணவனும், செந்நிறத்தவனும் ஆகிய குமரவேள் மயக்கம் தங்கும் மனத்தை எனக்கு நல்கி என்கைகளில் யான் அணிந்திருந்த சங்கு வளையல்களைத் தான் கவர்ந்து விட்டான்` என்று பெண்மையே இயல்பாக உடைய என்மகள் பேசுகிறாள் - என்று தலைவியின் தாய் அவள் நலம் பற்றி வினவிய அயலக மகளிரிடம் கூறியவாறு.

குறிப்புரை :

மால் உலாம் மனம் - மயக்கம் நிகழ்கின்ற மனம். ``தந்து`` என்றது, `என் மனத்தை அத்தன்மையதாக்கி` என்றவாறு. சங்கம் - சங்க வளையல், தேவர் அனைவரையும் சேனைகளாக்கித் தான் அவற்றுக்குப் பதியாய் நிற்றலின், `தேவர் குலமுழுது ஆளும் குமரவேள்` என்றாள். குரா, ஒரு மரம். ``என் சேந்தன்`` என்றாள், காதல் பற்றி.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

இவளைவார் இளமென் கொங்கைபீர் பொங்க
எழில்கவர்ந் தான் இளங்காளை
கவளமா கரிமேற் கவரிசூழ் குடைக்கீழ்க்
கனகக்குன் றெனவருங் கள்வன்
திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
குவளைமா மலர்க்கண் நங்கையாள் நயக்குங்
குழகன்நல் லழகன்நம் கோவே. 

பொழிப்புரை :

இளையகாளை போல்வானும், சோற்றுத்திரளை உண்ணும் பெரியயானைமீது மேலே குடைகவிப்ப இருபுறமும் கவரிவீசப் பொற்குன்றம் போன்று வருவானாய்த் தன்னைக் காண்பார் உள்ளத்தைக்கவரும் கள்வனும், நல்ல விளக்கம் பொருந்திய மாளிகைகளால் சூழப்பட்ட திரு இடைக்கழி என்ற திருத்தலத்தில் அழகிய குராமரத்தின் நிழலின் கீழ் எழுந்தருளியிருப்பவனும், குவளைமலர் போன்ற கண்களைஉடைய நங்கையாகிய தெய்வயானையாருக்கும் வள்ளிநாச்சியாருக்கும் கணவனும் இளையோனும், பேரழகனும் ஆகிய நம் தலைவனாம் முருகன் இந்த என் பெண்ணுடைய கச்சினை அணிந்த இளையமெல்லிய கொங்கை பசலைநிறம் மிகுமாறு செய்து அவளுடைய அழகினைக்கவர்ந்து விட்டான்.

குறிப்புரை :

வார் - கச்சினையுடைய. பீர் - பசலை. ``இவளை எழில் கவர்ந்தான்`` என்றது, `பசுவைப் பால்கறந்தான்` என்பது போல நின்றது. கவளம், யானை உண்ணும் உணவு. எழிலைக் கவர்ந்தமை பற்றி, `கள்வன்` என்றாள்; எனினும், இஃது இகழ்ந்ததன்று; புகழ்ந்து கூறிய காதற் சொல்லேயாம். திவள் அம் மாளிகை - ஒளி வீசுகின்ற அழகிய மாளிகை. ``நங்கையாள்`` என்றது தலைவியை. நயக்கும் - விரும்புகின்ற. குழகன் - இளைஞன். ``நங்கை யானைக்கும்`` எனப் பாடம் ஓதி, அதற்கு, `தெய்வயானை` என உரைப்பாரும் உளர்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

கோவினைப் பவளக் குழமணக் கோலக்
குழாங்கள்சூழ் கோழிவெல் கொடியோன்
காவனற்சேனை யென்னக்காப் பவன்என்
பொன்னைமே கலைகவர் வானே
தேவினற் றலைவன் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தூவிநற் பீலி மாமயி லூருஞ்
சுப்பிர மண்ணியன் றானே.

பொழிப்புரை :

தேவர்களுக்கு மேம்பட்ட தலைவனாய்த் திரு விடைக்கழி என்ற திருத்தலத்தில் அழகிய குராமர நிழலின்கீழ் நின்ற திருக்கோலத்தில் காட்சிவழங்குபவனாய், தோகைகளைஉடைய பெரிய ஆண்மயிலை வாகனமாக உடைய சுப்பிரமணியப்பெருமான், எல்லோருக்கும் தலைவனாய், பவளநிறத்தனாய், இளையவனாய், திருமணக்கோலம் கொண்டவனாய், அடியார் கூட்டங்கள் சூழ்பவனாய், பகைவர்களைவெல்லும் கோழிக்கொடியை உடையவனாய், காவலைச் செய்யும் பெரிய சேனையைப்போல எல்லோரையும் காப்பவன் என்று சொல்லப்படுபவனாய் இருந்தும் என் திருமகள் போன்ற மகளின் மேகலையைக் கவர்ந்து அவளைக் காவாது விடுத்த காரணம் அறிகிலேன்.

குறிப்புரை :

கோ வினை - தலைமைச் செயல்களையுடைய, பவளக் குழ - பவளம்போலும் நிறத்தையுடைய குழவியாகிய இவை இரண்டும், ``கோழி வெல்கொடியோன்`` என்பதனோடே முடியும். மணக் கோலக் குழாங்கள், தேவருலக மகளிர் குழாங்கள், இவர்கள் முருகனால் மாலை சூட்டப்படுதலை விரும்பி அவனைச் சூழ்ந்து நிற்பர் என்க. ``ஒரு கை வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட`` என்ற திருமுருகாற்றுப்படை(அடி 116 - 117)யைக் காண்க. காவன் - கற்பகச் சோலையையுடைய இந்திரன். `அவனைச் சூழ்ந்தவரையும் சேனை யாகக் கொண்டு காப்பவன்` என்க. இனி, `அமரரை` என ஒரு சொல் வருவித்து, `காவல் நற்சேனையென்னக் காப்பவன்` என உரைப்பினும் ஆம். இனி, வேறு உரைப்பாரும் உளர். `கவர்வானே` என்றது, `கவர்தல் பொருந் துவதோ` என்றவாறு. `அமரர்களை வருந்தாமற் காப்பவன், என் மகளை வருந்தச் செய்தல் பொருந்துமோ` என்றதாம். ``தே`` என்பது அஃறிணைச் சொல்லாய்ப் பன்மை குறித்து நின்றது. தே - தெய்வம். தூவி - சிறகு. பீலி - தோகை. `சுப்பிர மண்ணியன்` என்றதில் ணகர மெய் விரித்தல்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

தானமர் பொருது தானவர் சேனை
மடியச்சூர் மார்பினைத் தடிந்தோன்
மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை
மறைநிறை சட்டறம் வளரத்
தேனமர் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
கோனமர் கூத்தன் குலஇளங் களிறென்
கொடிக்கிடர் பயப்பதுங் குணமே. 

பொழிப்புரை :

அசுரர்கள் படை சூரபதுமனோடு சேர்ந்து போர் செய்து மடியத் தான் போரிட்டுச் சூரபதுமனுடைய மார்பினைப் பிளந்தவனாய், மான் தங்கியிருக்கும் பெரிய கையினை உடைய வள்ளலாகிய சிவபெருமானுடைய மகனாய், வேதங்களில் மிகுதியாகச் சொல்லப் படுகின்ற ஓதல், ஓதுவித்தல் வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறு அறங்களும் வளருமாறு, வண்டுகள் தங்கியிருக்கும் சோலைகளால் சூழப்பட்ட திருவிடைக்கழியில் திருக்குரா நிழலின் கீழ் நின்ற, தலைமை வாய்ந்த கூத்தப்பிரானுடைய குலத்தில் எல்லோராலும் விரும்பப்படும் இளைய யானை போல்வானாகிய முருகப் பெருமான் என்னுடைய பூங்கொடி போன்ற மகளுக்குத் துயர் விளைக்கும் செயல் அவன் நற்பண்புக்கு ஏற்றதாகுமா?

குறிப்புரை :

தானவர் - அசுரர். `வானவர் சேனை மடிய` எனப் பாடம் ஓதி, அதற்கியைய உரைத்தல் பொருந்தாமை அறிக. மறை நிறை - வேதத்தின்கண் நிறைந்துள்ள. செம்மையுணர்த்தும் `சட்ட` என் னும் இடைச்சொல்லில் அகரம் தொகுத்தலாயிற்று, ``சட்டோ நினைக்க மனத்தமுதமாம் சங்கரனை`` (தி.8 - கோத்தும்பி. 7.) என்றதிற் போல சட்ட அறம் - செம்மையான அறம். `அறம் வளர நின்ற இளங் களிறு` என இயையும். ``கோன்`` என்றதும், கூத்தனையே குறித்தது. அமர் கூத்தன் - விரும்பப்படும் கூத்தினையுடையவன். குலம் - மேன்மை. கணபதி மூத்தகளிறாதல் பற்றி முருகனை, `இளங் களிறு` என்றாள். ``மானமர் தடக்கை வள்ளல் தன் பிள்ளை`` என முன்னர் கூறிப் பின்னரும், ``கூத்தன் குல இளங்களிறு என்றது. `உயிர்களின் இடரைப் போக்குதற்குக் கூத்தினை விரும்பி ஆடும் அவன்மகன், என் மகளுக்கு இடர் பயப்பது குண மாகுமோ` என்னும் கருத்தைத் தோற்றுவித்தற் பொருட்டாம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை
படுமிடர் குறிக்கொளா தழகோ
மணமணி மறையோர் வானவர் வையம்
உய்யமற் றடியனேன் வாழத்
திணமணி மாடத் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
கணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன்
கணபதி பின்னிளங் கிளையே. 

பொழிப்புரை :

பெருமைபொருந்திய கூட்டத்தவரான அந்தணர் களும் தேவர்களும் நில உலக உயிர்களும் தீங்கினின்றும் பிழைக்கு மாறும், அடியேனாகிய யானும் வாழுமாறும், உறுதியான அழகிய மாடிவீடுகளை உடைய திருவிடைக்கழியில் திருக்குரா நிழலின் கீழ்நின்ற, இரத்தினங்களின் தொகுதிகளை அடித்துக்கொண்டு வரும் நீர்ப்பெருக்கை உடைய கங்கா தேவியின் மகனும், கணபதியின் தம்பியும் ஆகிய முருகப்பெருமான், நற்குணங்கள் தன்னைச் சேர்ந்து அழகு பெறுதற்குக் காரணமான சிறுமியாய்க் கொவ்வைக்கனிபோன்ற சிவந்தவாயினை உடைய என் மகள், தன் அருள் முழுமையாகக் கிட்டாமையால் உறும் துயரத்தைத் தன்மனத்தில் ஏற்று அதற்குப் பரிகாரம் தேடாமல் இருப்பது, அவனுக்கு அழகிய செயல் ஆகுமா?

குறிப்புரை :

குண மணிக் குருளை - நற்பண்பினையுடைய சிறந்த வீரமுடைய சிறுவன்; முருகன். ``குருளை`` என்றது சிங்கக் குட்டியை. இஃது உவம ஆகுபெயராய், அதுபோலும் சிறுவனைக் குறித்தது. `குறிக்கொளாதது என்பது குறைந்து நின்றது. மணம் அணி மறையோர் - மங்கல விழாக்களை அழகு படுத்துகின்ற அந்தணர். மறையோரை வையத்தாரினின்று வேறு பிரித்தது, சிறப்புப் பற்றி. `வாழ நின்ற` என இயையும். `திண்ணம்` என்பது இடைக்குறைந்து, ``திணம்`` என வந்தது, `திண்மையாகிய மாடம்` என்க. கண மணி - கூட்டமாகிய இரத்தினங்களையுடைய பின். இளங்கிளை - தம்பி.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

கிளையிளஞ் சேய்அக் கிரிதனைக் கீண்ட
ஆண்டகை கேடில்வேற் செல்வன்
வளையிளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலை
கார்நிற மால்திரு மருகன்
திளையிளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
முளைஇளங் களிறென் மொய்குழற் சிறுமிக்
கருளுங்கொல் முருகவேள் பரிந்தே. 

பொழிப்புரை :

தன் அடியவருக்குச் சுற்றமாக உதவும் இளைய குமரனாய், கிரவுஞ்சமலையைப் பிளந்த ஆண்மைத் தன்மை உடையவனும், என்றும் அழிதல் இல்லாத வேலினை ஏந்திய செல்வனும், வளைந்த இளம் பிறையைச் சூடி சிவந்த சடையை உடைய சிவபெருமான் மகனும், கார்மேகம் போன்ற நிறத்தை உடைய திருமாலுடைய சகோதரிமகனும், எல்லோரும் மகிழ்ச்சியால் திளைக்கின்ற இளமரச் சோலைகளால் சூழப்பட்ட திருவிடைக்கழியில் திருக்குரா மரத்தின் கீழ்நின்ற மிக இளைய ஆண்யானை போல் பவனும் ஆகிய முருகவேள் இரக்கங்கொண்டு, என்செறிந்த கூந்தலை உடைய சிறுபெண்ணுக்கு அருள் செய்வானோ? மாட்டானோ?

குறிப்புரை :

`இளங்கிளை` என்பதே, `கிளைஇளையன்` என மாறி நின்றது. `இளைய பிள்ளை` என்றவாறு. சேய் - முருகன். `இளங் கிளையாகிய முருகன்` என்க. கிரி, கிரவுஞ்ச மலை. திளை - பலரும் இன்பம் துய்க்கின்ற. முளை இளங்களிறு - மிகவும் இளைய களிறு. ``முருகவேள்`` என்றதை, ``களிறு`` என்றதன் பின்னும், ``பரிந்து`` என்றதை, ``சிறுமிக்கு`` என்றதன் பின்னும் கூட்டுக. பரிந்து - அன்பு கொண்டு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ
பவளத்தின் குழவியோ பசும்பொன்
சொரிந்தசிந் துரமோ தூமணித் திரளோ
சுந்தரத் தரசிது என்னத்
தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல்
மையல்கொண் டையுறும் வகையே. 

பொழிப்புரை :

வேதநெறியை அறிந்த,வேதம் கூறியநெறியில் வாழும் மக்கள் வாழும் திருவிடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற, கட்டமைந்த கொடிய வில்லைக் கையில் ஏந்திய இளையனாய் உள்ள முருகப்பெருமான் திறத்து அழகிய சொற்களைப் பேசும் என்மகள் காம மயக்கம்கொண்டு அவன் திருஉருவினை `எல்லோரும் விரும்பும் சிவந்தசுடரோ? சூரியனோ? மின்னலோ? தூய இரத்தினத்தின் குவி யலோ? அழகுக்கு உயர்நிலையாகிய அரசோ? என்று பலவாறாக ஐயுறுகிறாள்.

குறிப்புரை :

பரிந்த - வீசுகின்ற. சுடர் - விளக்கு. குழவி - கொழுந்து. சிந்துரம் - செந்நிறப் பொடி. மணி - மாணிக்கம். சுந்தரத்து அரசு - அழகின் தலைமை. முருகன் விற்படையும் உடையனாதலைக் கருதி, ``சிலைக்கை மைந்தன்`` என்றாள். அம் சொல் - அழகிய சொல்; இஃது, அதனையுடையாள்மேல் நின்றது. `ஐயுறும்` என்றது முற்று. `வகை யானே` என உருபு விரிக்க. `அம் சொலாள், மையல் கொண்டு, மைந்தனை, சுந்தரத்து அரசாகிய இது, சுடரோ, பரிதியோ ..... என்ன வகைவகையாக ஐயுறும்` என்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

வகைமிகும் அசுரர் மாளவந் துழிஞை
வானமர் விளைத்ததா ளாளன்
புகைமிகும் அனலிற் புரம்பொடி படுத்த
பொன்மலை வில்லிதன் புதல்வன்
திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்கென்
துடியிடை மடல்தொடங் கினளே. 

பொழிப்புரை :

பலவகையினராக எண்ணிக்கையில் மிகுந்த அசுரர் கள் அழியும்படியாகத் தானே சென்று அவர்களுடைய மதில்களை வளைத்துக் கொண்டு பெரிய போரினைச் செய்த முயற்சி உடைய வனும், புகைமிக்க தீயால் திரிபுரம் அழியுமாறு செய்த, மேருமலையை வில்லாக ஏந்திய சிவபெருமானுடைய புதல்வனும், நாற்புறமும் பரவிய புகழை உடைய திருவிடைக்கழியில் திருக்குரா நிழலின் கீழ் நின்ற எண்ணிக்கையால் மிகுந்த பல திருப்பெயர்களை உடையவனும் ஆகிய முருகப் பெருமானுடைய திருவடிகளை அடைய வேறு வழி கிட்டாமையால், என்மகள் பெண்கள் மடலேறக்கூடாது என்ற பொது விதியை நெகிழ்த்து மடலேற ஆயத்தம் செய்துவிட்டாள்.

குறிப்புரை :

உழிஞை அமர், முற்றுகை இட்டுச் செய்யும் போர். தாளாளன் - வீரன். திகை - திசை. தொகை - எண்: அவை, நூறு, ஆயிரம், நூறாயிரம், கோடி முதலியவாம். நாமம் - பெயர். திருவடிக்கு-திருவடியை அடைதற்பொருட்டு; என்றது `தன்னைப் பணிகொள்ள ஏற்றுக் கொள்ளுதற்பொருட்டு` என்றவாறு. துடி இடை - உடுக்கை போலும் இடையை உடையாள். `கடலன்ன காமம் உழப்பினும் பெண்டிர் மடல் ஏறுதல் இல்லை` (குறள்-1137.) ஆயினும், அவளது பெருந்துயரைப் புலப்படுத்த, `மடல் ஏறத் தொடங்கினள்` என்றாள். `மயல் தொடங்கினள்` என்பதும் பாடம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

தொடங்கினள் மடல் என் றணிமுடித் தொங்கற்
புறஇத ழாகிலும் அருளான்
இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன்
மறத்தொழில் வார்த்தையும் உடையன்
திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
மடங்கலை மலரும் பன்னிரு நயனத்
தறுமுகத் தமுதினை மருண்டே. 

பொழிப்புரை :

வேதநெறியில் உறுதியாக இருக்கும் நன்மக்கள் வாழும் திருவிடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற சிங்கம் போல்பவனாய், அடியார்திறத்து அருள்புரிய விழிக்கும் பன்னிரு கண்களையும் ஆறுமுகங்களையும் உடைய அமுதம் போல்வானாய் உள்ள பெருமானைக் கண்டு காமத்தால் மயங்கி, அவனை அடைய வேறு வழி இல்லாத நிலையில் என்மகள் மடல் எடுக்கத் தொடங்கி விட்டாளாக அதனைக் கண்டு தன்முடியில் அணிந்துள்ள மாலையின் வெளி இதழ்களைக் கூட அவள் ஆறுதல் பெறுமாறு அப்பெருமான் வழங்குகிறான் அல்லன். தன் அருகிலேயே இடம் பெற்றுள்ள அக் குறமகளாகிய வள்ளியம்மையார் கொள்ளக் கூடிய வெகுளியை விட மிகுதியாக அப்பெருமான் இவள் திறத்துத் தன் வெகுளியைப் புலப்படுத்தும் செயல்களும் சொற்களும் உடையவனாக இருக்கிறான்.

குறிப்புரை :

தொங்கல் - மாலை. புறஇதழ் சிறப்பில்லாததாகலின், `அதனையேனும் கொடுத்திலன்` என்றாள். இடங்கொள் அக்குறத்தி திறத்திலும் - தன்பால் இடங்கொண்டு இருக்கும் வள்ளியது தன்மையைக் காட்டிலும், மறத்தொழில் வார்த்தையும் உடையன் - பகைத்தொழிலையுடைய சொற்களையும் இவள் (தலைவி) கூற்றில் உடையனாகின்றான். தன் கணவனை மற்றொருத்தி காதலித்தலை அறியின் அவளிடத்தில் வள்ளியம்மைக்குப் பகையுண்டாதல் இயல் பாதலின், `அவளினும் பகைவார்த்தையை உடையன்` என்றாள். `மாலை கொடாமையேயன்றி` என்னும் பொருள் தருதலின், ``வார்த்தையும்`` என்ற உம்மை இறந்தது தழுவிய எச்சம். மடங்கல் - சிங்கம். ``அமுதத்தினை`` என்றதன் பின்னர், `கண்டு` என ஒருசொல் வருவிக்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப்
பொழில்வளர் மகிழ்திருப் பிடவூர்
வெருண்டமான் விழியார்க் கருள்செயா விடுமே
விடலையே எவர்க்குமெய் யன்பர்
தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
குருண்டபூங் குஞ்சிப் பிறைச்சடை முடிமுக்
கண்ணுடைக் கோமளக் கொழுந்தே. 

பொழிப்புரை :

முருகப்பெருமானுக்கு உண்மையான அன்பர் களாகிய, வேதநெறியைத் தெளிவாக உணர்ந்து பின்பற்றும் சான்றோர் கள் வாழும் திருவிடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற, பூக்களைச் சூடிய சுருண்ட மயிரினையும் பிறையைச் சூடிய சடைமுடியையும் முக்கண்களையும் உடைய சிவபெருமானுடைய மென்மையான கொழுந்துபோன்ற மகனாகிய முருகன் விரும்பி உறைகின்ற திருக் கோயிலையும், வளம்நிறைந்த சிறந்த குன்றுகளிடத்தே வளர்கின்ற சோலைகளையும் உடையதாய், எல்லோரும் மகிழும்படியான திருப்பிடவூரில் உள்ள, மருண்ட மானின் விழிபோன்று மருண்ட விழிகளைஉடைய இப்பெண்களுக்கு அருள்செய்யாமல் அவர் களைப் புறக்கணித்துவிடுவானோ?

குறிப்புரை :

``எவர்க்கும் மெய்யன்பர்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. `மருள` என்பது, ``மருண்டு`` எனத் திரிந்தது. மல்கு - வளங்கள் நிறைந்த. `கோயிலையும், குன்றத்தையும் உடைய, சோலைகள் வளர்கின்ற திருப்பிடவூர்` என்க. இஃது ஒரு வைப்புத் தலம். திருக்கயிலையில் அரங்கேறிய சேரமான் பெருமானது ஞான வுலாவை மாசாத்தனார் வெளிப்படுத்திய ஊர். ஒருதலப்பதிகத்தில் மற்றொரு தலத்தை நினைவுகூரும் முறைபற்றி இத்தலத்தை இங்கு எடுத்தோதினார். `திருப்பிடவூரில் அருள்செயாவிடுமே` என்க. அருள் செயாவிடுமே - அருள்செய்யா தொழிவானோ. விடலை - காளை. இதனை, ``கொழுந்து`` என்பதன் பின்னர்க் கூட்டுக. குருண்ட - சுருண்ட. கோமளக் கொழுந்து - அழகின் குருத்து; என்றது முருகனை. இதனுள், முருகனுக்கு, பிறைச்சடை முடியும், முக்கண்ணும் கூறப் பட்டமை நோக்கற்பாலது. இனி, கோமளம் என்றதனை சிவபிரானுக்கு ஆக்கியுரைப்பினும் ஆம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத்
தூமொழி அமரர்கோ மகனைச்
செழுந்திரட் சோதிச் செப்புறைச் சேந்தன்
வாய்ந்தசொல் லிவைசுவா மியையே
செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
எழுங்கதி ரொளியை ஏத்துவார் கேட்பார்
இடர்கெடும் மாலுலா மனமே. 

பொழிப்புரை :

அறியாமையாகிய மயக்கம் நிலவப்பெற்ற மனமே! தூய்மையான சொற்களையே பேசும் தேவர்களின் தலை வனும் செழுமையாகத் திரண்ட சோதி வடிவினனும் ஆகிய சுவாமி எனப்படும் முருகனைப்பற்றிச் செப்புறை என்ற ஊரினைச் சார்ந்த சேந்தன் ஆகிய அடியேன் வளமையாகத் திரண்ட வாயினை உடைய தலைவியின் தாய்மார் கூறும் சொற்களாகச் சொல்லிய இச்சொற்களால் செழுந்தடம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற உதிக்கின்ற ஞாயிறு போன்ற ஒளியை உடைய முருகப் பெருமானைப் புகழ்பவர்கள், அங்ஙனம் புகழக் கேட்பவர்கள் ஆகியவர்களுடைய எல்லாத்துன்பங்களும் கெட்டுஓடும்.

குறிப்புரை :

கொழுந் திரள் வாய் ஆர் தாய் - செழுமையாய்த் திரண்ட வாயினையுடைய செவிலி. வழிபடுவோர்க்கு வரங் கொடுத்தல் பற்றி அமரரை, ``தூமொழி அமரர்`` என்றார், `செப்புறைச் சொல்` என இயைத்து, `செப்பென்னும் உறை போல்வதாகிய சொல்` என உரைக்க. முருகனாகிய அருமணியைத் தன்னுட் கொண்டிருத்தல் பற்றி இங்ஙனம் கூறினார். `செப்புரை` எனவும், `செப்புதல்` எனவும் பாடம் ஓதுப. செப்புறை ஊருமாம். வாய்ந்த - பொருந்திய: இதனை, ``கோமகனை`` என்றதனோடு கூட்டுக. `இவை` என்றதில் `இவற்றால்` என உருபு விரிக்க. சுவாமி - முருகன் ``சுவாமியையே`` என்ற ஏகாரம் அசைநிலை `கேட்பார்க்கு` என்னும் நான்காவது, தொகுத்தலாயிற்று. `மனம் இடர்கெடும்` என, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது. ``மாலுலா மனம்`` என்பது, முதல் திருப்பாட்டிற் சென்று மண்டலித்தல் அறிக.
சிற்பி