சேந்தனார் - திருவீழிமிழலை


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

ஏகநா யகனை இமையவர்க் கரசை
என்னுயிர்க் கமுதினை எதிர்இல்
போகநா யகனைப் புயல்வணற் கருளிப்
பொன்னெடுஞ் சிவிகையா ஊர்ந்த
மேகநா யகனை மிகுதிரு வீழி
மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
யோகநா யகனை யன்றிமற் றொன்றும்
உண்டென உணர்கிலேன் யானே. 

பொழிப்புரை :

எல்லா உலகங்களுக்கும் ஒரே தலைவனாய், தேவர் களுக்கு அரசனாய், அடியேனுடைய உயிரைத் தளிர்க்கச் செய்யும் அமுதமாய், ஒப்பில்லாத இன்பம் நல்கும் தலைவனாய், கார்மேக நிறத்தினனாகிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை வழங்கி, அவனைப் பொன்மயமான பல்லக்குப் போல வாகனமாகக்கொண்டு செலுத்திய, மேகம் போலக் கைம்மாறு கருதாமல் உயிர்களுக்கு உதவும் தலை வனாய், மேம்பட்ட திருவீழிமிழலையிலே தேவருலகிலிருந்து இறங்கி வந்து நிலவுலகில் நிலையாகத் தங்கியுள்ள மேம்பட்ட கோயிலில் முத்தியை வழங்கும் தலைவனாய் உள்ள சிவபெருமானை அன்றி மற்றொரு பரம்பொருள் உள்ளது என்பதனை நான் அறிகின்றேன் அல்லேன்.

குறிப்புரை :

எதிர் இல் போகம் - இணையில்லாத இன்பம்; சிவபோகம்; அதனைத் தரும் நாயகன் (தலைவன்) என்க. புயல் வண்ணன் - மேகம்போலும் நிறம் உடையவன்; திருமால். ``சிவிகை`` என்றதை, `ஊர்தி` என்னும் அளவாகக் கொள்க. ``ஊர்ந்த மேகம்`` என்றது, `உண்ட சோறு` என்பதுபோல நின்றது. `ஒரு கற்பத்தில் திருமால் சிவபெருமானை மேகவடிவங் கொண்டு தாங்கினமையால், அக்கற்பம், `மேகவாகன கற்பம்` எனப் பெயர் பெற்றது` என்னும் புராண வரலாற்றை அறிந்துகொள்க. மிகு - உயர்ந்த. திருவீழி மிழலைக் கோயிலின் விமானம் திருமாலால் விண்ணுலகினின்றும் கொணரப்பட்டமை பற்றி, `விண்ணிழி விமானம்` எனப்படும் என்பது இத்தல வரலாறு. இது தேவாரத் திருப்பதிகங்களிலும் குறிக்கப்படுதல் காணலாம். `யோகம்` என்பது, முத்தியைக் குறித்தது. `மற்றொன்றும் உணர்கிலேன்` என இயையும். ``உண்டென உணர்கிலேன்`` என்றது, `பொருளாக நினைந்திலேன்` என்றதாம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளம்
குளிரஎன் கண்குளிர்ந் தனவே.

பொழிப்புரை :

கற்றவர்களால் அக்கல்வியின் பயனாக அடைந்து அநுபவிக்கப்படும் தெய்வீக மரத்தில் பழுத்தகனி போன்றவனாய், எல்லை இல்லாத பெருங் கருணைக் கடலாய், மற்றவர்கள்தம் முயற்சி யில் அறியமுடியாத செந்நிற மாணிக்கமணியால் ஆகிய மலைபோன்றவனாய், தன்னை வழிபடும் அடியவருடைய உள்ளத்தில் மாணிக்கச் சுடர் போன்ற ஞான ஒளி வீசுபவனாய், பகைவர்களுடைய முப்புரங்களையும் அழித்த, எங்களுக்கு நன்மையைத் தருபவனாய், அடியார்களுக்கு அருளுவதற்காகவே திருவீழிமிழலையில் வீற்றிருந்த வெற்றியனாகிய சிவபெருமானைப் பலகாலும் தரிசித்ததனால் என் உள்ளம் குளிர என் கண்களும் குளிர்ச்சி பெற்றன.

குறிப்புரை :

இறைவன், மெய்ந்நூல்களைக் கற்றவர்களால் அக்கல்வியின் பயனாக அடைந்து அனுபவிக்கப்படுபவனாதலின், ``கற்றவர் விழுங்கும் கனி`` என்றார். ``கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி`` (தி. 6 ப.32 பா.1) என்ற அப்பர் திருமொழியைக் காண்க. கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் - நற்றாள் தொழாஅ ரெனின்`` (குறள்-2) எனத் திருவள்ளுவரும் கல்விக்குப் பயன் இறைவன் திருவடியை அடைதலே என்று வரையறுத்தருளினார். விழுங்குதல், உண்டல் தொழில் நான்கனுள், `உண்டல்` எனப்படுவது. வாளா, `கனி` என்னாது, கற்பகக்கனி என்றார். அருமையுணர்த் துதற்கு. கனி முதலியவை உவமையாகுபெயர்கள். கரையிலாக் கடல் என இயையும். மற்றவர் கற்றவரல்லாதார். மதிப்பவர் - தலைவனாக அறிந்து போற்றுபவர். மணி - இரத்தினம்; இஃது இயற்கையொளி உடையது. ``மாணிக்க மலை`` என்றது செந்திரு மேனியின் அழகுபற்றி. செற்றவர் - பகைத்தவர். செற்ற - அழித்த. ``உள்ளம் குளிரக் கண் குளிர்ந்தன`` என்றது, `ஞாயிறுபட வந்தான்` என்பது போல உடனிகழ்ச்சியாய் நின்றது.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

மண்டலத் தொளியை விலக்கியான் நுகர்ந்த
மருந்தை என் மாறிலா மணியைப்
பண்டலர் அயன்மாற் கரிதுமாய் அடியார்க்
கெளியதோர் பவளமால் வரையை
விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்
திருவீழி மிழலையூர் ஆளும்
கொண்டலங் கண்டத் தெம்குரு மணியைக்
குறுகவல் வினைகுறு காவே. 

பொழிப்புரை :

வட்டமான ஞாயிற்றின் ஒளியை வழிபடுதலை விடுத்து அதன் உட்பொருளாய் என்னால் வழிபடப்பட்ட சிவப்பொரு ளாகிய அமுதமாய், என் ஒப்பற்ற மாணிக்கமாய், முற்காலத்தில் தம் முயற்சியால் அறிய முற்பட்ட தாமரையில் வீற்றிருக்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும் அறிதற்கு அரியனாய், அடியவர்களுக்கு எளியனாய் இருக்கும் பெரியபவளமலை போல்வானாய், முறுக்கு அவிழ்ந்து மலரும் பூக்களிலிருந்து வெளிப்படும் தேன் பரந்து பெருக்கெடுக்கும் சோலைகளால் சூழப்பட்ட திருவீழிமிழலை என்ற திருத்தலத்தை ஆளும் கார்மேகம் போன்ற கரியகழுத்தை உடைய எம் மேம்பட்ட குருமணியை அணுகினால் கொடிய வினைகளின் தாக்குதல்கள் நம்மை அணுகமாட்டா.

குறிப்புரை :

மண்டலம் - ஞாயிற்றின் வட்டம், அதன் ஒளியை விலக்கி நுகர்தலாவது, ஞாயிற்றின் ஒளியிலே மயங்கி அதனையே வணங்கியொழியாது, அதன் நடுவில் எழுந்தருளியிருக்கும் சிவ மூர்த்தியை வணங்கி மகிழ்தல்.
மருந்து - அமுதம். மாறு - கேடு. அலர் அயன் - மலரின்கண் உள்ள பிரமன். `அயன்மாற்கு அரியதும், அடியார்க்கு எளியதும் ஆயதோர் பவளமால்வரை` என்றது இல்பொருளுவமை. ``அரிது மாய்`` என்ற உம்மை, எச்சம். மலர்வாய் - மலரின்கண் பொருந்திய. வேரி - தேன். வார் - ஒழுகுகின்ற. குரு மணி - ஆசிரியருள் தலைவன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த
சசிகுலா மவுலியைத் தானே
என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி
எழுஞ்செழுஞ் சுடரினை அருள்சேர்
மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி
மிழலையுள் விளங்குவெண் பளிங்கின்
பொன்னடிக் கடிமை புக்கினிப் போக
விடுவனோ பூண்டுகொண் டேனே.

பொழிப்புரை :

தன் திருவடிநிழலின் கீழ் அடியேனையும் தடுத்து ஆட்கொண்ட பிறைவிளங்குகின்ற முடியை உடையவனாய், தானே உகந்து என்னிடத்தில் அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய மேல் மூன்று ஆதாரங்களாகிய மூன்று தாமரைகளிலும் உதித்து எழும் சிறந்த சுடராய், அருளாகிய ஒளிபொருந்திய கடலின் நீர்ப்பெருக்காய், திருவீழிமிழலையுள் விளங்குகின்ற வெண்மையான பளிங்குபோன்ற சிவபெருமானுடைய பொன்போன்ற அரிய திருவடிக்கண் தொண்டு செய்தலை மேற்கொண்ட அடியேன் அத்திருவடிகள் அடியேன் உள்ளத்தை விடுத்து நீங்கவிடுவேனோ?

குறிப்புரை :

தகைத்த - தடுத்து நிறுத்திய. சசி - சந்திரன். குலா - விளங்குகின்ற. மவுலி - முடியையுடையவன்; ஆகுபெயர். கமலம் மூன்று - ஆதாரங்கள் ஆறனுள் மேல் உள்ள மூன்று. கீழ் உள்ள மூன்றில் பிற கடவுளர் இருத்தலின், இவற்றையே கூறினார். `அருள்சேர் நெடுங்கடல்` என இயையும்.சேர் - திரண்ட. மின் - ஒளி. கடல், ஆகு பெயராகாது இயற்பெயராயே நின்று, பள்ளத்தையே உணர்த்திற்று. ``வெள்ளம்`` என வாளா கூறினாராயினும் இன்பம்சேர் (திரண்ட) வெள்ளம் என உரைக்க. வெள்ளம் - நீர்ப்பெருக்கு. அருளின் வழியே ஆனந்தந் தோன்றுதலின், அருளைக் கடலாகவும், ஆனந்தத்தை அதன்கண் நிறைந்த நீர்ப்பெருக்காகவும் உருவகித்தார். சிவபிரானை, ``பளிங்கு`` என்றது திருநீற்றொளி பற்றி. புக்கு - புகுந்தபின். `அவ்வடியை இனிப் போகவிடுவனோ. இறுகப் பற்றிக்கொண் டேனாதலின்` என்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

இத்தெய்வ நெறிநன் றென்றிருள் மாயப்
பிறப்பறா இந்திர சாலப்
பொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த
புராணசிந் தாமணி வைத்த
மெய்த்தெய்வ நெறிநான் மறையவர் வீழி
மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
அத்தெய்வ நெறியிற் சிவமலா தவமும்
அறிவரோ அறிவுடை யோரே. 

பொழிப்புரை :

`இந்தத் தெய்வத்தை வழிபடும் வழி நல்வழி` என்று உட்கொண்டு அஞ்ஞானமும் வஞ்சனையும் கூடிய பிறவிப் பிணி யிலிருந்து தாமே தம்மைக் காத்து கொள்ள இயலாத இந்திர சாலம் போன்று விரைவில் அழியும், நிலைபேறில்லாத தெய்வங்களைப் பரம் பொருளாகக் கருதி வழிபடும் வழியிலே அடியேன் ஈடுபடாத வகையில் அருள்புரிந்த, வேண்டியவர்க்கு வேண்டியன நல்கும் சிந்தாமணியாய், ஆதிபுராதனனாய் உள்ள சிவபெருமான் அமைத்து வைத்த உண்மையான தெய்வநெறியில் வாழும் நான்கு வேதங்களிலும் வல்ல அந்தணர்களின் திருவீழிமிழலையில், தேவருலகிலிருந்து இவ்வுலகிற்கு வந்த செழுமையான கோயிலில் உகந்தருளியிருக்கும் சிவ பெருமானை விடுத்து, அறிவுடையார்கள் பயனில்லாத பிறபொருள்களைப் பொருளாக நினைப்பாரோ?

குறிப்புரை :

இருள் - அறியாமை. மாயம் - நிலையாமை `இவற்றை யுடைய பிறப்பு` என்க. அறா - அறுத்து உய்விக்க மாட்டாத. இம் மாட்ட மை உடையவாயினும், மாட்டுவபோலச் சொற்சாலம் செய்தல் பற்றி, ``இந்திர சால நெறி`` என்றார். ``பொய்`` என்றது போலியை. `பொய்த் தெய்வங்களைக்கொண்ட நெறி` என்க.
புரிந்த - இடை விடாது நின்று அருள்செய்த. புராண சிந்தா மணி - பழைய (எல்லாப் பொருட்கும் முன்னே உள்ள) சிந்தாமணி; என்றது, சிவ பெருமானை. வைத்த - அமைத்த. `மெய்த் தெய்வ நெறியையுடைய நான்மறையோர்` என்க. கோயிற்கண் உள்ளதும், அத்தெய்வ நெறிக்கண் விளங்குவதும் ஆகிய சிவம்` என்க.
அவம் - பயனில்லாத பிறபொருள்கள். அறிவரோ - பொரு ளாக நினைப்பரோ? நினையார்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

அக்கனா அனைய செல்வமே சிந்தித்
தைவரோ டழுந்தியான் அவமே
புக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட
புனிதனை வனிதைபா கனைஎண்
திக்கெலாங் குலவும் புகழ்த்திரு வீழி
மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப்
பொடியணிந் தடிமைபூண் டேனே.

பொழிப்புரை :

உண்மையில்லாத பொய்த்தோற்றமாகிய கனவைப் போன்று நிலைபேறில்லாத உலகியல் செல்வங்களைப் பெறும் வழிகளையே ஆராய்ந்து, ஐம்புல இன்பத்தில் ஈடுபட்டு அடியேன் வாழ்க்கை வீணாகாதபடி காப்பாற்றி அடியேனை ஆட்கொண்ட தூயோனாய்ப் பார்வதிபாகனாய் எட்டுத்திக்குக்களிலும் தன்புகழ் பரவிய திருவீழிமிழலை எம்பெருமானுடைய திருவடி நிழலின் கீழ்ப்பொருந்தியிருப்பவர்களுடைய பொலிவுடைய திருவடித் தாமரைகள் தோய்ந்த அடிப்பொடியினை அணிந்து அவ்வடியவர் களுக்குத் தொண்டு செய்வதனை மேற்கொண்டேன்.

குறிப்புரை :

பண்டறி சுட்டாய அகரச் சுட்டு, ``செல்வம்`` என்பத னோடு இயையும். கனா, நிலையாமை பற்றிவந்த உவமை. ``சிந்தித்து`` என்றது, `விரும்பி` என்றவாறு. ஐவர் - ஐம்புலன்கள். அழுந்தி - மிகப் பொருந்தி. அவமே - வீண் செயலிலே. பொடி - துகள். `அவர்க்கு அடிமை பூண்டேன்` என்க. `இனி எனக்கு என்ன குறை` என்பது குறிப்பெச்சம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

கங்கைநீர் அரிசிற் கரைஇரு மருங்கும்
கமழ்பொழில் தழுவிய கழனித்
திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்
மாடநீ டுயர்திரு வீழித்
தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி
நம்பியைத் தன்பெருஞ் சோதி
மங்கைஓர் பங்கத் தென்னரு மருந்தை
வருந்திநான் மறப்பனோ இனியே.

பொழிப்புரை :

இருபக்கங்களிலும் பூக்கள் மணம் கமழும் சோலை களைக் கொண்டதாய்க் கங்கை போன்ற தூயநீரைஉடைய அரிசில் ஆற்றங் கரையில் வயல்வளம் உடையதாய்ச் சந்திரனைத் தொடும் படியான மிகஉயர்ந்த மேல்மாடிகள் நிறைந்த பேரில்லங்களை மிகுதி யாக உடைய மேம்பட்ட திருவீழிமிழலையில் உகந்தருளியிருக்கும், சிறந்த செல்வமாகத் தானாகவே தோன்றிய குண பூரணனாய், தன் பேரொளியே வடிவெடுத்தாற் போன்ற பார்வதி பாகனாய் உள்ள என் கிட்டுதற்கரிய அமுதத்தை, இனிமேல் மறந்து வருந்துவேனோ?

குறிப்புரை :

`கங்கையது நீர்போலும் நீரையுடைய அரிசில்` என்க. ``கங்கை நீர்`` உவமையாகு பெயர். அரிசில், ஓர் ஆறு. அரிசிலின் கரைக்கண் உள்ளதும், இருமருங்கும் பொழிலால் சூழப்பட்டதும், கழனிகளை யுடையதும், நீண்ட மாளிகை சூழ்ந்ததும், மாடங்கள் நீடியதுமான உயர்திருவீழி` என்க. `மாளிகை, மாடம்` என்பன இல்லத்தின் வகைகள். `தங்கு, சீர், செல்வம், தெய்வம், தான்தோன்றி` ஆகிய அனைத்தும், ``நம்பி`` என்பதையே விசேடித்தன. சோதி - ஒளி. `தனது ஒளியாகிய மங்கை` என்க. ``வருந்தி மறப்பனோ`` என்றதை, `மறந்து வருந்துவனோ` எனப் பின்முன்னாக்கி யுரைக்க. `வருந்த` எனப் பாடம் ஓதுதலும் ஆம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

ஆயிரங் கமலம் ஞாயிறா யிரமுக்
கண்முக கரசர ணத்தோன்,
பாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த
படர்சடை மின்னுபொன் முடியோன்,
வேயிருந் தோளி உமைமண வாளன்
விரும்பிய மிழலைசூழ் பொழிலைப்
போயிருந் தேயும் போற்றுவார் கழல்கள்
போற்றுவார் புரந்தரா திகளே. 

பொழிப்புரை :

ஆயிரம் கதிரவர்கள் ஒன்று கூடினாற்போல முக் கண்களின் ஒளியை உடையவனாய், ஆயிரம் தாமரைபோன்று முகமும் கைகளும் பாதங்களும் அழகாக உடையவனாய், பரவின பெரிய கங்கையும் குளிர்ந்த பிறையும் மறையவைத்த பரவிய சடை ஒளிவிடும் அழகிய திருமுடியை உடையவனாய், மூங்கில் போன்ற பெரிய தோள்களை உடைய பார்வதியின் கணவனாகிய சிவபெரு மான் உகந்தருளியிருக்கும் திருவீழிமிழலை என்ற திருத்தலத்தைச் சூழ்ந்த சோலைகளிடையே தங்கி, அங்கு இருந்தவாறே, கோயிலை அடையாது சிவபெருமானைப் போற்றித் துதிக்கின்ற அடியவர் களுடைய திருவடிகளை இந்திரன் முதலியோர் போற்றி வழிபடுவர்.

குறிப்புரை :

கண் முதலியவற்றை எதிர்நிரனிறையாக்கி, கண் ஒன்றற்கும் ஞாயிற்றை உவமையாகவும், ஏனையவற்றிற்குக் கமலத்தை உவமையாகவும் கொள்க. கண்களை, ``ஆயிர ஞாயிறு`` என்றது ஒளிமிகுதி பற்றி. கரம் -கை. சரணம் - பாதம். பாய் இருங் கங்கை - பாய்ந்தோடுகின்ற பெரிய கங்கை. பனி - குளிர்ச்சி. கரந்த - மறைத்த. படர் - விரிந்த. `சடையாகிய பொன்முடியோன்` என்க. ``போய்`` என்றது, `அடைந்து` என்றபடி. `திருவீழிமிழலைக் கோயிலை அடைந்து போற்றாவிடினும், அதனைச் சூழ்ந்துள்ள பொழிலை அடைந்தேனும் போற்றுவாரது கழல்களைப் போற்றுவார் புரந்தராதியர் ஆவர்` என்றார். புரந்தரன் - இந்திரன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

எண்ணில்பல் கோடி சேவடி முடிகள்
எண்ணில்பல் கோடிதிண் டோள்கள்
எண்ணில்பல் கோடி திருவுரு நாமம்
ஏர்கொள்முக் கண்முகம் இயல்பும்
எண்ணில்பல் கோடி எல்லைக்கப் பாலாய்
நின்றைஞ்ஞூற் றந்தணர் ஏத்தும்
எண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி
இவர்நம்மை ஆளுடை யாரே. 

பொழிப்புரை :

எண்ணிக்கையைக் கடந்த பலகோடிக் கணக்கான சிவந்த பாதங்களையும், பலமுடிகளையும், பல வலிய தோள்களை யும், பலகோடிக்கணக்கான திருவுருவங்களையும், திருநாமங்களை யும், அழகிய முக்கண்கள் பொருந்திய முகங்களையும் செயல்களையும் கொண்டு அளவின் எல்லைக்கு அப்பாற்பட்டவராய் நின்று, அந்தணர் ஐந்நூற்றுவர் துதித்து வழிபடுகின்ற எண்ணற்ற பலகோடி நற்பண்புகளை உடையவர் அழகிய திருவீழிமிழலையை உகந்தருளியிருக்கும் பெருமானார். இவர் நம்மை அடியவராகக் கொள்ளும் இன்னருள் உடையவர்.

குறிப்புரை :

``எண்ணில் பல் கோடி`` என்றது, `அளவிறந்த` என்ற வாறு. சேவடி முதலியவற்றை, `அளவிறந்தன` என்றல் எங்கும் நிறைந்து நிற்கும் நிலையைக் குறிப்பதாம்
ஆயிரந் தாமரை போலும் ஆயிரஞ் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரந் தோள்உடை யானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள்முடி யானும்
ஆயிரம் பேர்உகந் தானும் ஆரூர் ஆமர்ந்தஅம் மானே. (தி.4 ப.4 பா.8)
என்று அருளியது காண்க. முகம் உள்ள இடம் எல்லாம் முக்கண் உள்ளமையின், ``எண்ணில் பல்கோடி முக்கண்`` என்பதும் கூறினார். ``இயல்பு`` என்றது, செயலை. எண்ணில் பல்கோடி குணம், ஒருவ ராலும் அளவிட்டறிய ஒண்ணாத தன்மைகள். சடமும், சித்துமாகிய பொருள்கள்தாம் பலவாகலின், அவற்றின் எல்லைகளும் பலவாதல் பற்றி, அவையனைத்தையும் கடந்து நிற்றலை, ``எண்ணில் பல்கோடி எல்லைக்கப்பாலாய் நின்று`` என்றார். தில்லையில் மூவாயிரவர் போலத் திருவீழிமிழலையில் உள்ள அந்தணர் ஐஞ்ஞூற்றுவர் என்க. ``இவர்`` என்றது, `இத்தகு மேலோர்` என்னும் பொருட்டு. ஆள் உடையார் - ஆளாக உடையவர். `ஆதலின் எமக்கென்ன குறை` என்பது குறிப்பெச்சம்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

தக்கன் வெங்கதிரோன் சலந்தரன் பிரமன்
சந்திரன் இந்திரன் எச்சன்
மிக்கநெஞ் சரக்கன் புரம் கரி கருடன்
மறலி வேள் இவர்மிகை செகுத்தோன்
திக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி
மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப்
பொடியணிந் தடிமைபூண் டேனே.

பொழிப்புரை :

தக்கன், வெப்பமான கதிர்களைஉடைய சூரியன், சலந்தரன் என்ற அசுரன், பிரமன், சந்திரன், இந்திரன், தக்கன் செய்த வேள்வித் தலைவன், வலிய நெஞ்சினை உடைய இராவணன், திரிபுரம், தாருகவன முனிவர்கள் விடுத்தயானை, கருடன், இயமன், மன்மதன் ஆகிய இவர்களுடைய எல்லை கடந்த செருக்கை அழித்த வனாய், எண்திசைகளிலும் நிறைந்த புகழையுடைய திருவீழிமிழலைப் பெருமானுடைய அடியவர்களுடைய பொலிவை உடைய திருவடித் தாமரைகள் படிந்த பொடியைத் தலையில்சூடி அவர்களுக்கு அடியவனானேன்.

குறிப்புரை :

அரக்கன் - இராவணன். மறலி - கூற்றுவன். கரி - யானை; கயாசுரன். வேள் - மன்மதன். திணைவிராய் எண்ணியவழி மிகுதி பற்றி, `இவர்` என உயர்திணை முடிபு பெற்றது. அன்றி, அனைத்துப் பெயர்களையும் உயர்திணை என்றே கொள்ளினும் அமையும். மிகை - செருக்கு. இந்திரனைத் தோள் நெரித்ததும், கருடனை இடப தேவரால் அலைப்பித்ததும், பிறவும் ஆகிய வரலாறு களைப் புராணங்களிற் கண்டுகொள்க. இதன் ஈற்றடியில் உள்ள தொடர் ஆறாம் திருப்பாட்டின் ஈற்றடியிலும் வந்திருத்தல் காண்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

உளங்கொள மதுரக் கதிர்விரித் துயிர்மேல்
அருள்சொரி தரும்உமா பதியை
வளங்கிளர் நதியும் மதியமும் சூடி
மழவிடை மேல்வரு வானை
விளங்கொளி வீழி மிழலைவேந் தேஎன்
றாந்தனைச் சேந்தன்தா தையையான்
களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்
கைக்கொண்ட கனககற் பகமே. 

பொழிப்புரை :

மனத்தில் பொருந்துமாறு இனிய ஞானஒளியைப் பரப்பி, உயிரினங்கள் மாட்டுத் தன் கருணையைப் பொழிகின்ற பார்வதியின் கணவனாய், வளம் பொருந்திய கங்கையையும் பிறையையும் சூடியவனாய், இளைய காளைமீது இவர்ந்து வரு பவனாய் உள்ள ஒளி விளங்கும் திருவீழிமிழலையில் உள்ள, அரசே என்று என்னால் இயன்றவரையில் முருகன் தந்தையாகிய அப்பெருமானை அடியேன் குரல்வளை ஒலி வெளிப்படுமாறு அழைத்தால், அடியேன் பற்றுக்கோடாகக் கொண்ட பொன்நிறம் பொருந்திய கற்பகமரம் போன்ற அப்பெருமான் அடியேன் பக்கல் வரத் தவறுவானோ?

குறிப்புரை :

உளம் கொள - உயிர்களின் உள்ளம் நிறையும்படி. மதுரம் - இனிமை; இங்குத் தண்மைமேல் நின்றது. `தண்கதிர்` என்ற தனால், திங்களாய் நிற்றல் பெறப்பட்டது. ``கதிர்`` என்றது, பின்வரும் அருளையேயாம். ஆம்தனை - இயலும் அளவு. சேந்தன் - முருகன்; இவ்வாசிரியர் பெயரும் அதுவாதல் கருதத் தக்கது. களம் கொள - என்முன் வந்து தோன்றுமாறு. பிழைக்குமோ - தவறுமோ; வாரா தொழிவானோ! கைக்கொண்ட - பற்றிநின்ற. கனக கற்பகம் - பொன் வண்ணமான கற்பகத்தருப்போல்பவன். ``சேந்தன் தாதையை`` என்றதை ``விடைமேல் வருவானை`` என்பதன் பின்னும், ``யான்`` என்றதை, ``என்று`` என்பதன் பின்னும் கூட்டுக.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 12

பாடலங் காரப் பரிசில்கா சருளிப்
பழுத்தசெந் தமிழ்மலர் சூடி
நீடலங் காரத் தெம்பெரு மக்கள்
நெஞ்சினுள் நிறைந்துநின் றானை
வேடலங் காரக் கோலத்தின் னமுதைத்
திருவீழி மிழலையூர் ஆளும்
கேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக்
கெழுமுதற் கெவ்விடத் தேனே. 

பொழிப்புரை :

பாடப்படுகின்ற அணிகள் நிறைந்த பாடல் களுக்குப் பரிசிலாகப் பொற்காசுகளை வழங்கி மேம்பட்ட செந்தமிழ்ப் பாமாலைகளாகிய மலர்களைச் சூடி, எம்பெருமக்களாகிய தேவார முதலிகள் உள்ளத்திலே நீடித்து நிற்கும் அலங்காரத்துடன் நிறைந்து நின்றவனாய், அருச்சுனனுக்கு அருளுவதற்காக அழகிய வேட்டுவக் கோலம் பூண்ட அமுதமாய், திருவீழிமிழலை என்ற திருத்தலத்தை ஆளும், என்றும் அழிதலில்லாத புகழைஉடைய பொன்நிறக் கற்பகம் போல்பவனாகிய எம்பெருமானை அடைவதற்கு அடியேன் எந்த விதத்தகுதியையும் உடையேன் அல்லேன். எம்பெருமான் அடியே னுடைய தகுதியை நோக்காது தன்னுடைய காரணம் பற்றாக் கருணை யாலேயே அடியேனுக்கு அருள் செய்துள்ளான்.

குறிப்புரை :

பாடு அலங்காரப் பரிசில் - பாடுகின்ற அணிநிறைந்த பாட்டிற்குப் பரிசாக. அலங்காரம், ஆகுபெயர். காசு - பொற்காசு. பழுத்த - அன்பு நிறைந்த, ``எம்பெருமக்கள்`` என்றதை முதற்கண் கூட்டி, `அவர்தம் பழுத்த செந்தமிழாகிய மலரைச் சூடிக்கொண்டு, நீடு அலங்காரத்துடன் அவர்தம் நெஞ்சினில் நிறைந்துநின்றானை` என உரைக்க. ``எம்பெருமக்கள்`` என்றது, ஞானசம்பந்தர், நாவுக்கரசர் என்னும் இவரையே என்பது வெளிப்படை.
``இருந்து நீர்தமி ழோடிசை கேட்கும்
இச்சையாற் காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண் டீர்அடி யேற்கும் அருளுதிரே``
(தி. 7. ப.88. பா.8)
எனச் சுந்தரரும் இத்தலத்தில் அருளிச் செய்தமை காண்க. வேடு அலங்காரக் கோலம் - வேட்டுவச் சாதியாகப் புனைந்துகொண்ட வேடம். இஃது அருச்சுனன் பொருட்டு என்பது மேலே சொல்லப்பட்டது. கேடு இல் அம்கீர்த்தி - கெடுதல் இல்லாத அழகிய புகழ். கெழுமுதல் - கூடுதல். ``எவ்விடத்தேன்`` என்றதனால், இவ்விறுதித் திருப்பாடலில் பணிவு கூறினார் என்க.
சிற்பி