திருவாசகம்-திருப்படையெழுச்சி


பண் :

பாடல் எண் : 1

ஞானவாள் ஏந்தும்ஐயர்
நாதப் பறையறைமின்
மானமா ஏறும்ஐயர்
மதிவெண் குடைகவிமின்
ஆனநீற் றுக்கவசம்
அடையப் புகுமின்கள்
வானஊர் கொள்வோம்நாம்
மாயப்படை வாராமே. 

பொழிப்புரை :

ஞானமாகிய வாளைத் தாங்கிய இறைவரது பிரணவமாகிய நாதப்பறையை முழக்குங்கள்! பெருமையாகிய குதிரையை ஏறுகின்ற இறைவனை அறிகின்ற அறிவு என்கிற வெண்குடையைக் கவியுங்கள்! திருநீறாகிய கவசத்திற்குள் புகுந்து கொள்ளுங்கள்! இவ்வண்ணம் செய்வீர்களாயின் மாயப் படையை வென்று முத்தி உலகைக் கைக்கொள்ளலாம்.

குறிப்புரை :

``மாயப் படை வாராமே`` என்றதை முதற்கண் கூட்டுக.
அறியாமையும், மயக்க உணர்வும் ஆகிய பகையை அழிப்பது மெய்யறிவே யாதலின், அவ்வாற்றால் அவற்றைப் போக்குகின்ற இறைவனுக்கு, `ஞானமே வாள்` என்று அருளினார். `இறைவனுக்கு நாதமே பறை` (தி.8 கீர்த்தி. 108;தசாங்கம். 8) என முன்னர் அருளியவற்றைக் காண்க. அதனை அறைதலாவது, ``நமச்சிவாய வாழ்க`` என்றற் றொடக்கத்தன போல, வாழ்த்து வகையானும், வணக்க வகையானும், வெற்றி வகையானும் சிவநாமங்களை வானளாவ முழக்குதல். மான மா - பெருமையமைந்த குதிரை; இஃது அடிகள் தமக்கு வந்து அருள்செய்த வகைபற்றிக் கூறியது. மதிவெண்குடை, சிலேடை. வெண்மை கூறினமையின், மதி, மலந்தீர்ந்த உயிரினது அறிவு; அதனுள் இறைவன் சோதிக்குட் சோதியாய்த் தோன்றலின், அதனை அவற்குக் குடையாகக் கூறினார். ஆன - பொருந்திய. `கவசம் புகுமின்கள்` என இயையும். அடைய - முழுதும். `இவ்வாற்றால் நாம் வான ஊரைத் தப்பாது கொள்வோம்` என்க. வானம் - சிவலோகம். மாயப் படை - நிலையாமையாகிய படை.

பண் :

பாடல் எண் : 2

தொண்டர்காள் தூசிசெல்லீர்
பத்தர்காள் சூழப்போகீர்
ஒண்டிறல் யோகிகளே
பேரணி உந்தீர்கள்
திண்டிறல் சித்தர்களே
கடைக்கூழை சென்மின்கள்
அண்டர்நா டாள்வோம்நாம்
அல்லற்படை வாராமே. 

பொழிப்புரை :

தொண்டர்களே! நீங்கள் முன்னணியாய்ச் செல்லுங்கள்! பத்தர்களே! நீங்கள் சூழ்ந்து செல்லுங்கள்! யோகிகளே! நீங்கள் பெரிய அணியைச் செலுத்துங்கள்! சித்தர்களே, நீங்கள், பின்னணியாய்ச் செல்லுங்கள்! இப்படிச் செய்வீர்களாயின் நாம் தேவர் உலகத்தை ஆளலாம்.

குறிப்புரை :

இங்கும், ``அல்லற்படை வாராமே` என்றதை முதலிற் கூட்டுக.
தொண்டர்கள் - கைத்தொண்டு செய்வோர்; விரைந்து செயலாற்றுவதே தூசிப்படையாதலின், அதற்குத் தொண்டர்களை அமைத்தார். தூசிப் படை - முன்னணிப் படை. பத்தர்கள் - அன்பு மிக்கவர்கள். இறைவனது புகழைப் பாடுதலிலும், கேட்டலிலும், விரித்துரைத்தலிலும் ஆர்வம் மிக்கவர்கள். இவர்களை இருமருங்கும் அமைத்தார், படைஞர்கள் உள்ளம் அயராது வீறுகொண்டிருத்தற்கு. யோகிகள் - சிவயோகத்தில் இருப்பவர்கள்; இவர்கள் மனத்தைத் தம்வழி நிறுத்தும் வன்மையுடையராதலின், ``ஒண்திறல் யோகிகள்`` என்றார். இவ்வாற்றால் இவரை இறுதி வெற்றிக்குரிய நடுப்படை யாகிய பெரிய அணிகளில் நிறுத்தினார். `அணியை உந்தீர்கள்` என்றது, `அணி என்னும் முறையை நிகழ்த்துங்கள்` என்றபடி. சித்தர்கள் - இறைவனது அருளால் வியத்தகு செயல்கள் செய்து அவ் வருளின் பெருமையை உலகிற்கு உணர்த்துபவர்கள். இவர்களைப் பின்னணிப் படையில் நிறுத்தினார், பின்னிடுவார் உளராயின், அவரது தளர்ச்சியைப் போக்கி முன்செல்லச் செய்தற் பொருட்டு. கடைக் கூழை - பின்னணிப் படை. தூசிப் படைதானே வெல்லற்பாலதாயி னும், ஏனைப் படைகளும் முறைப்படி அமைத்தல் செயற்பாலதாக லின், இங்ஙனம் அனைத்தையும் வகுத்தமைத்தார் என்க. தொண்டர் முதலாக இங்குக் கூறப்பட்டோர் அனைவரும் ஞானநிலைக்கண் நிற்பவர்களேயன்றிப் பிறரல்லர் என்க. அண்டர் - சிவபெருமானார்; அவரது நாடு சிவலோகம். ``அண்டர்நாடு ஆள்வோம் நாம்`` என்றதற்கு, மேல், ``வானவூர் கொள்வோம் நாம்`` என்றதற்கு உரைத்தவாறு உரைக்க. அல்லற்படை - துன்பமாகிய படை.
சிற்பி