திருவாசகம்-அன்னைப்பத்து


பண் :

பாடல் எண் : 1

வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதர்இந் நாதனார் அன்னே என்னும். 

பொழிப்புரை :

தாயே! வேதங்களாகிய சொல்லையுடையவர்; வெண்மையான திருநீற்றினை அணிந்தவர்; செம்மையான திரு மேனியை உடையவர்; நாதமாகிய பறையினையுடையவர் என்று நின் மகள் சொல்லுவாள். மேலும், தாயே! நாதமாகிய பறையையுடைய இத் தலைவரே, பிரம விட்டுணுக்களுக்கும் தலைவராவார் என்று சொல்லுவாள்.

குறிப்புரை :

வேதமொழியர் - வேதமாகிய சொல்லை உடையவர்; என்றது, `அவரது சொல்லே வேதம்` என்றபடி. நாதப் பறையினர் - நாததத்துவமாகிய பறையை யுடையவர். இத்தத்துவம், வாக்கு களுக்குக் காரணமாதல்பற்றி, `பறை` என்றார். இதனானே, சிவபெரு மான் கரத்தில் துடியாய் இருப்பது இத்தத்துவமே என்பதும் பெறப் படும். பின்னர் வரும் இத்தொடருக்கு, `நாதப் பறையினராயதன் மேலும்` என வழிமொழிந்ததாக உரைக்க. `இந்நாதனார்` எனச் சுட்டியது உருவெளியை. இப்பெயர், மொழியர் முதலிய பயனிலை கட்கு எழுவாயாய் இறுதிக்கண் நின்றது. `இவ்வாறெல்லாம் தலைவி தனது காதல் மிகுதியால் தலைவனையே நினைந்து பிதற்றுகின்றாள்` எனப்படைத்து மொழியாலும், மெய்ந்நிலை வகையாலும் தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கின்றாள் என்க. ``நான்முகன் மால்`` என்றதன் இறுதியில், `இருவர்` என்னும் தொகை எஞ்சி நின்றது`.

பண் :

பாடல் எண் : 2

கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர்
உண்ணின் றுருக்குவர் அன்னே என்னும்
உண்ணின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால் அன்னே என்னும். 

பொழிப்புரை :

தாயே! கண்ணில் தீட்டப்பட்ட மையையுடையவர்; கருணைக் கடலாயிருப்பவர்; உள்ளத்தில் நின்று உருக்குவர் என்று நின்மகள் சொல்லுவாள்; மேலும், தாயே! உள்ளத்தில் நின்று உருக்கி அழிவில்லாத ஆனந்தக் கண்ணீரை உண்டாக்குவர் என்று சொல்லு வாள்.

குறிப்புரை :

`எனது கண்ணில் தீட்டியுள்ள அஞ்சனத்தில் உள்ளார்` என்க. அஞ்சனம் - மை. மை தீட்டுதல் கண்ணினுள் ஆதலும், அவ் விடமே தலைவர் நிற்குமிடம் ஆதலும் பற்றி, ``கண் அஞ்சனத்தர்`` என்றாள். இதனை,
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து.
(குறள் - 1127) என்பதனானும் அறிக. கருணைக் கடலினர் - கருணை யாகிய கடலை உடையவர்; என்றது, `கடல்போலும் கருணை யுடையவர்` என்றவாறாம். உலப்பு - கெடுதல்; வற்றுதல்.

பண் :

பாடல் எண் : 3

நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத் திருப்பரால் அன்னே என்னும்
சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும். 

பொழிப்புரை :

தாயே! என்றும் மணவிழாக் கோலமுடையவர்; பேரழகை உடையவர்; என் மனத்தில் இருப்பவர் என்றும் நின்மகள் சொல்லுவாள்; மேலும், தாயே! என் மனத்தில் இருக்கின்ற அவர், தென்னாட்டில் உள்ள பெருந்துறைக் கடவுள் என்றும் சொல்லுவாள்.

குறிப்புரை :

நித்த மணாளர் - அழிவில்லாத மணவாளக்கோலம் உடையவர்; `என்றும் ஒருபெற்றியராய் உள்ளவர்` என்றபடி. அத்தர் - தலைவர்.

பண் :

பாடல் எண் : 4

ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர்
வேடம் இருந்தவா றன்னே என்னும்
வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம்
வாடும் இதுஎன்னே அன்னே என்னும்.

பொழிப்புரை :

தாயே! ஆபரணமாகிய ஆடும் பாம்பும், உடை யாகிய புலித்தோலும், பூசப்பட்டதாகிய திருநீறும் அமைந்த ஓர் ஒப்பற்ற வேடம் இருந்தவாறு என்னே? என்று நின் மகள் சொல்வாள்; மேலும், தாயே! வேடம் இருந்த விதத்தை நோக்கி நோக்கி, என் மனம் வாடுகின்றது; இது என்ன காரணம்? என்று சொல்லுவாள்.

குறிப்புரை :

`அரா` என்பதன் ஈற்று அகரம், செய்யுளிடத்துக் குறுகிநின்றது. `தோல் உடை` என்பது, பின்முன்னாகி நின்றது. `பூணும் உடையும் உடைய பொடிபூசிற்றோர் வேடம் இருந்தவாறு` என்க. ``பொடிப் பூசிற்று`` என்னும் பகரம் விரித்தல். வாடுதல், காதல் மிகுதி யாலாம். ``என்னே`` என்றதனை, முன்னுள்ள, ``இருந்தவாறு`` என்றதனோடும் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 5

நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர்
பாண்டிநன் னாடரால் அன்னே என்னும்
பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை
ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும். 

பொழிப்புரை :

தாயே! நீண்ட கையினையுடையவர்; வளை வுடைய சடையை உடையவர்; நல்ல பாண்டிய நாட்டை உடையவர், என்று நின்மகள் சொல்லுவாள், மேலும் நல்ல பாண்டி நாட்டையுடைய அவர் விரிந்து செல்லுகின்ற மனத்தை அடக்கியாண்டு அருள் செய்வர் என்று சொல்லுவாள்.

குறிப்புரை :

``நீண்ட கரம்`` என்றது, நீட்டியதனால் நீண்டமையைக் குறித்தவாறு; இஃது ஆடல் நிகழ்த்தும் நிலையைக் குறித்தபடி. நெறி தல் -சுருளுதல். சடையையே இங்கு, `குஞ்சி - தலைமயிர்` என்றார். பரந்தெழு சிந்தை - பலவழியானும் ஓடுகின்ற உள்ளம். ஆளுதல் - ஒரு வழிப்படச் செலுத்துதல். ஆள்வோனும், ஆளப்படுவோருமாய் நிற்கும் இயைபுபற்றி இறைவனது அருளை, `அன்பு` எனினும் இழுக்காது என்னும் கருத்தால், ``அன்பு செய்வர்`` என்று அருளினார்.

பண் :

பாடல் எண் : 6

உன்னற் கரியசீர் உத்தர மங்கையர்
மன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும்
மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார்
என்ன அதிசயம் அன்னே என்னும்.

பொழிப்புரை :

தாயே! நினைத்தற்கு அருமையான சிறப்புப் பொருந்திய திருவுத்தரகோச மங்கையை உடையவர்; என் நெஞ்சில் நிலைபெற்றிருப்பார் என்று நின் மகள் சொல்லுவாள். மேலும், தாயே! திருமால், அயனாலும் காணமுடியாதவர் என் நெஞ்சில் நிலைபெற்றிருப்பது என்ன ஆச்சரியம்? என்று சொல்லுவாள்.

குறிப்புரை :

`உத்தரகோச மங்கை` என்பதனை, ``உத்தர மங்கை`` எனத் தொகுத்து அருளிச் செய்தார். ``என்நெஞ்சில்`` என்றது, `இசை யெச்சத்தால்`, `நாயினுங் கடையேனாகிய எனது நெஞ்சில்` எனப் பொருள் தந்தது. மறித்து வந்த தொடர்க்கண், `என் நெஞ்சில் மன்னுவ தாக` என ஆக்கம் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 7

வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிரு முண்டத்தர்
பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென்
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும். 

பொழிப்புரை :

தாயே! வெள்ளை ஆடையையுடையவர்; வெள்ளிய திருநீறணிந்த நெற்றியையுடையவர்; குதிரையேற்றத்திற்கு உரிய சட்டையை அணிந்தவர் என்று நின்மகள் சொல்லுவாள். மேலும், தாயே! குதிரையேற்றத்திற்கு உரிய சட்டையை அணிந்தவர், பாய்ந்து செல்லும் குதிரைமேல் வந்து என் உள்ளம் கவர்வர் என்று சொல்லுவாள்.

குறிப்புரை :

கலிங்கம் - ஆடை. முண்டம் - நெற்றி. அது, திருநீற்றால் வெள்ளிதாயிற்று. பள்ளி - படுக்கையாதற்குரிய, குப்பாயம் - போர்வை. வெள்ளைக் கலிங்கமும், பள்ளிக் குப்பாயமும் சிவ பெருமான், குதிரைமேல் வந்த காலத்துக் காணப்பட்டவை என்க. எனவே, இத் திருப்பாட்டு, பாய்பரிமேல் வந்த திருக்கோலத்தின் இயல் புரைத்ததாயிற்று. குதிரை வாணிகர், தாம் தங்குமிடத்தில் தமது போர்வையையே நிலத்தின்மேல் விரித்து அதன்மேற் கிடந்து உறங்குதல் தோன்ற, ``பள்ளிக் குப்பாயத்தர்`` என்று அருளினார்.

பண் :

பாடல் எண் : 8

தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர்
ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும்
ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில்
தாள மிருந்தவா றன்னே என்னும்.

பொழிப்புரை :

தாயே! அறுகம் புல்லினால் தொடுக்கப்பட்ட மாலை அணிந்தவர்; சந்தனக் கலவையைப் பூசியவர்; அடிமையாக எங்களை ஆண்டருளுவர், என்று நின் மகள் சொல்லுவாள். மேலும், தாயே! அடிமையாக எங்களை ஆண்டருளுகின்ற தலைவர் கையில் தாளம் இருந்த விதம் என்னே! என்று சொல்லுவாள்.

குறிப்புரை :

`தாளியறுகு` (தி.8 போற்றித் திருவகவல் - அடி-201. உரை) என்பது பற்றி மேலே கூறப்பட்டது `ஆளாக` என ஆக்கம் விரிக்க. அடிகளார் - தலைவர். தாளம், பிச்சைக் கோலத்திற் கொள்ளப் படுவது ``இருந்தவாறு`` என்றதன்பின், `என்னே` என்பது எஞ்சி நின்றது. `எம்மை ஆளாகக் கொண்டு ஆளுகின்ற தலைவர் எனப் படுவார், பிச்சைக் கோலத்தராய் நிற்றல் என்` என்று மருண்டவாறு.

பண் :

பாடல் எண் : 9

தையலோர் பங்கினர் தாபத வேடத்தர்
ஐயம் புகுவரால் அன்னே என்னும்
ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம்
நையும்இது என்னே அன்னே என்னும். 

பொழிப்புரை :

தாயே! பெண்ணை ஒரு பாகத்தில் உடையவர்; தவ வேடத்தை உடையவர்; பிச்சை ஏற்பவர் என்று, நின் மகள் சொல்லுவாள், மேலும், தாயே! அவர் பிச்சை எடுத்துத் தெருவில் போகும்போது என் மனம் வருந்தும் இது என்ன காரணம்? என்று சொல்லுவாள்.

குறிப்புரை :

தாபத வேடம் - துறவுக் கோலம். `வேடத்தராய்` என எச்சமாக்குக. ஐயம் புகுதல் - பிச்சைக்குச் செல்லுதல். `தையலோர் பங்கும், தாபத வேடமும் ஒன்றோடொன்றொவ்வாத கோலங்கள்; அவற்றை ஒருவனே உடையனாயிருத்தல் வியப்பு` என்றபடி, நைதல்- உருகுதல்.

பண் :

பாடல் எண் : 10

கொன்றை மதியமுங் கூவிள மத்தமும்
துன்றிய சென்னியர் அன்னே என்னும்
துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே
இன்றெனக் கானவா றன்னே என்னும். 

பொழிப்புரை :

தாயே! கொன்றை மலரோடு பிறையும் வில்வத்தோடு ஊமத்தமும் பொருந்திய சடையை உடையவர் என்று நின் மகள் சொல்லுவாள், மேலும், தாயே! சடையில் பொருந்திய ஊமத்த மலர் இப்பொழுது எனக்குப் பெரும்பித்தை உண்டுபண்ணின வாறு என்னே? என்று சொல்லுவாள்.

குறிப்புரை :

``கொன்றை, கூவிளம்`` என்றவற்றில் உம்மை தொகுத்தலாயிற்று. கூவிளம் - வில்வம். துன்றிய - நெருங்கிய. மத்தம்-ஊமத்தம் பூ. உன்மத்தம் - பித்து; அஃது ஆகுபெயராய், அதற்கு ஏதுவைக் குறித்தது. ``ஆனவாறு`` என்றதன்பின், `என்னே` என்பது எஞ்சிநின்றது. `சிவபெருமானது சென்னியில் உள்ள ஊமத்த மலர், இன்று எனக்குப் பித்துத் தருவதாயினமை வியப்பு` என்றபடி. இதனால், பொருள் யாதாயினும், அதனை யுடையாரது தன்மையால் அதன் தன்மை வேறுபடும் என்பது பெறப்பட்டது. படவே, தலைவியது பித்திற்குச் சிவபெருமான் ஏதுவாயினமையால், அவன் அணிந்துள்ள ஊமத்த மலரும் அன்னதாயிற்று என்பது போதரும்.
சிற்பி