திருப்புக்கொளியூர் அவினாசி


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

எற்றான் மறக்கேன் எழுமைக்கும்
எம்பெரு மானையே
உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன்
உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி
யூர்அவி னாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி
யேபர மேட்டியே

பொழிப்புரை :

புற்றின்கண் வாழ்கின்ற , படமெடுத்து ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே , உயிர்களுக்கெல்லாம் தலைவனே , மேலான இடத்தில் உள்ளவனே , திருப்புக்கொளியூரில் உள்ள , ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , ஏழு பிறப்பிலும் எமக்குத் தலைவனாய் உள்ள உன்னையே எனக்கு உறவினன் என்று உணர்ந்து , மனத்தால் நினைக்கின்றேன் ; உன்னையே எனக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வேன் ; உன்னை எக்காரணத்தால் மறப்பேன் !

குறிப்புரை :

`ஒருகாரணத்தாலும் மறவேன் ` என்பது எதிர்மறை எச்சமாயும் , ` யான் இரப்பதனை மறாது அருளல்வேண்டும் ` என்பது குறிப்பெச்சமாயும் வந்து இயையும் . ` எழுமை ` என்றது , வினைப் பயன் தொடரும் ஏழு பிறப்பினை . அதனை , ` எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் ` என்னும் திருக்குறளானும் உணர்க ( 107 ). அவினாசி - அழியாதது ; இத்தலத்தில் உள்ள திருக்கோயிலின் பெயராகிய இஃது ஆகுபெயராய் அதன்கண் இருக்கும் இறைவனைக் குறித்தது . இத்திருப்பாடலின் இரண்டாம் அடியில் ஒருசீர் மிகுந்து வந்தது .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

வழிபோவார் தம்மோடும் வந்துடன்
கூடிய மாணிநீ
ஒழிவ தழகோசொல் லாய்அரு
ளோங்கு சடையானே
பொழிலா ருஞ்சோலைப் புக்கொளி
யூரிற் குளத்திடை
இழியாக் குளித்த மாணிஎன்
னைக்கிறி செய்ததே

பொழிப்புரை :

அருள் மிக்க , தவக்கோலத்தையுடையவனே , பெருமரப் பொழில்களையும் , நிறைந்த இளமரக் காக்களையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள குளத்தின்கண் இறங்கிக் குளித்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம் யாது ? உன்னை வணங்கச் செல்பவர் களுடன் வந்து உடன் சேர்ந்த அச்சிறுவன் , உன் திருமுன்னே இறந்து போவது உனக்குப் பொருந்துவதோ ? நீ சொல்லாய் .

குறிப்புரை :

` வழிபோவார் ` என்றதனை , ஏழாவதன் தொகையாக வன்றி , இரண்டாவதன் தொகையாகக் கொள்ளுதலும் பொருந் துவதாதல் அறிக . வழிபோவார் , தல யாத்திரையை மேற்கொண்டவர் . பிறவிடத்தினின்றும் வந்த அவருடன் சேர்ந்து சென்று குளித்த சிறுவர் இருவருள் ஒருவனை முதலை விழுங்கிற்று என்க . ` அம்மாணி ` எனச் சுட்டு வருவித்துரைக்க . ` மாமணி நீ ` என்பது பாடம் அன்று . ` எவன் ` என்னும் வினாப் பெயரின் திரிபாகிய , ` என்னை ` என்பதன்முன் வல்லினம் விகற்பிக்கும் என்க . இஃது அறியாதார் , அதனை இரண்டன் உருபேற்ற தன்மைப் பெயராகக் கொண்டு , வழிபோவேன் றன்னோடும் ` என்னாது , ` வழிபோவார் தம்மோடும் ` என்ற பாடத்தையும் நோக்காது , சிறுவர் இருவரும் , சுவாமிகள் இத் தலத்திற் சென்றபொழுது அவருடன் செல்ல , அவர்களுள் ஒருவனை முதலையுண்டது ` எனச் சேக்கிழாரது திருமொழியொடு முரண உரைத்துக் குற்றப்படுவர் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

எங்கேனும் போகினும் எம்பெரு
மானை நினைந்தக்கால்
கொங்கே புகினுங் கூறைகொண்
டாறலைப் பார்இலை
பொங்கா டரவா புக்கொளி
யூர்அவி னாசியே
எங்கோ னேஉனை வேண்டிக்கொள்
வேன்பிற வாமையே

பொழிப்புரை :

மிகுதியான , ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே , திருப்புக்கொளியூரில் உள்ள , ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , எங்கள் தலைவனே , எம்பெருமானாகிய உன்னை நினைத்தால் , கொங்கு நாட்டிலே புகுந்தாலும் , மற்றும் எங்கேனும் சென்றாலும் , என்னை ஆறலைத்துக் கூறையைப் பறித்துக்கொள்பவர் இலராவர் ; ஆகவே , உன்னிடம் நான் பிறவாமை ஒன்றையே வேண்டிக் கொள்வேன் .

குறிப்புரை :

உம்மை இரண்டனுள் முன்னையது முற்று ; பின்னையது எதிர்மறை . பிரிநிலை ஏகாரம் , இருவகைச் சிறப்பினையும் சிலவிடத்து உணர்த்தும் ; ஈண்டு , ` கொங்கே ` என்பதில் இழிவு சிறப்பை உணர்த்திற்று . ` கொங்கு நாடு நெறிப்படாதோர் மிக்கது ` என்றல் வழக்கு . சுவாமிகளை இறைவர் வழிப்பறி செய்ததும் அந்நாட்டிலே யாதலை நினைக்க . ` கூறைகொண்டு ஆறலைப்பார் இலை ` என்றதனைப் பின் முன்னாக மாற்றியுரைக்க . ` இம்மையில் எனக்குக் குறையாதும் இல்லை ; இனிப் பிறவாமை ஒன்றே வேண்டும் ` என்றவாறு . ` சிறுவனை உயிர்ப்பிக்க எழுந்த அவா நிரம்பாதுவிடின் , பிறப்பு உளதாம் ` என்பது குறிப்பாகக் கொள்க . ` மாணி ` என்பதனை மேலைத் திருப்பாடலினின்றும் வருவித்து , ` இறவாமை ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

உரைப்பார் உரைஉகந் துள்கவல்
லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும்
அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி
யூர்அவி னாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை
தரச்சொல்லு காலனையே

பொழிப்புரை :

உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே , உன்னை எஞ்ஞான்றும் மறவாது நினைக்க வல்லவரது தலைமேல் இருப்பவனே , அரையின்கண் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே , எல்லாப் பொருட்கும் முதலும் முடிவு மானவனே , சிறந்த முல்லை நிலத்தையும் , சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள , ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , கூற்றுவனையும் முதலையையும் , இக்குளக் கரைக்கண் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள் .

குறிப்புரை :

` உகந்து ` என்னும் வினையெச்சம் எண்ணின்கண் வந்தமையின் , அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது . ` காடுசோலை `, உம்மைத்தொகை . ` கரைக்கால் ` என்றதில் ` கால் ` ஏழனுருபு . ` காலனை ` என்றதனை . ` முதலையை ` என்றதற்கு முன்னர்க் கூட்டி , இரண்டன்கண்ணும் எண்ணும்மை விரித்துரைக்க . ` காலனை முதலை யிடத்தும் , முதலையைக் கரையிடத்தும் தரச்சொல்லு ` என்றபடி . செம்பொருள்பட சுவாமிகள் இவ்வாறு இப்பாடலை அருளிச்செய்து முடிக்குமுன்பே , பிள்ளை கரைக்கண் தரப்பட்டமை அறியற்பாற்று .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

அரங்காவ தெல்லா மாயிடு
காடது அன்றியும்
சரங்கோலை வாங்கி வரிசிலை
நாணியிற் சந்தித்துப்
புரங்கோட எய்தாய் புக்கொளி
யூர்அவி னாசியே
குரங்காடு சோலைக் கோயில்கொண்
டகுழைக் காதனே

பொழிப்புரை :

திருப்புக்கொளியூரில் உள்ள , குரங்குகள் குதித்து ஆடுகின்ற சோலையையுடைய , ` அவினாசி ` என்னும் திருக்கோயிலை இடமாகக்கொண்ட , குழையை யணிந்த காதினை உடையவனே , உனக்கு நடனமாடும் இடமாய் இருப்பது , எல்லாரும் அழிகின்ற முதுகாடு ; அதுவன்றியும் , நீ , அம்பை எடுத்து , வரிந்த வில்லில் உள்ள நாணியில் தொடுத்து , மூன்று ஊர்கள் அழிய அழித்தாய் .

குறிப்புரை :

` உன்னால் ஆகாதது எது ` என்பது குறிப்பெச்சம் . ` எல்லாம் மாய் ` எனப் பிரிக்க . ` எல்லாம் ` என்னும் பொதுப் பெயர் , இங்கு உயர்திணைமேல் நின்றது . ` எல்லாம் ஆய் ` எனப்பிரித்து , ` எல்லாவற்றினும் தெரிந்தெடுத்த இடுகாடு ` என உரைப்பாரும் உளர் . ` சரக்கோல் ` என்னும் இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் உள்ள ககர ஒற்று எதுகை நோக்கி , மெலிந்து நின்றது . ` சரக்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்து ` என விதந்தோதியது , ` அவை பிறரால் அங்ஙனம் செயற்படுத்தற்கரிய பொருள்களானவை ` என்பது பற்றியாம் . ` கோடுதல் ` என்பது இங்கு , ` கெடுதல் ` என்னும் பொருளது . ` புரங்கெட ` என்றேயும் பாடம் ஓதுவர் . ` அவினாசி ` என்றதனை , ` கோயில் ` என்றதன் பின்னர்க் கூட்டுக .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

நாத்தா னும்உனைப் பாடல்அன்
றிநவி லாதெனாச்
சோத்தென்று தேவர் தொழநின்ற
சுந்தரச் சோதியாய்
பூத்தாழ் சடையாய் புக்கொளி
யூர்அவி னாசியே
கூத்தா உனக்குநான் ஆட்பட்ட
குற்றமுங் குற்றமே

பொழிப்புரை :

` எங்கள் நாவும் உன்னைப் பாடுதலன்றி வேறொன்றைச் சொல்லாது ` என்றும் , ` உனக்கு வணக்கம் ` என்றும் சொல்லித் தேவர்கள் வணங்க நிற்கின்ற அழகிய ஒளிவடிவாய் உள்ள வனே , பூவையணிந்த , நீண்ட சடையை உடையவனே , நடனம் ஆடு பவனே , திருப்புக்கொளியூரில் உள்ள , ` அவினாசி ` என்னும் திருக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , நான் உனக்கு ஆளான தன்மையும் குற்றமோ ?

குறிப்புரை :

` நாத்தானும் ` என்றதில் ` தான் ` அசைநிலை ; உம்மை , எச்சம் ; அதனால் , ` தலையும் பிறரை வணங்காது ; மனமும் வேறொன்றை நினையாது `, என்பன தழுவப்படும் . இழிந்தோர் கூறும் வணக்கச் சொல்லாகிய , ` சோத்தம் ` என்பது , கடைக்குறைந்து நின்றது . ` குற்றம் ` இரண்டனுள் முன்னது , பொதுமையில் ` தன்மை ` என்னும் பொருளதேயாம் . அது , ` குற்றம் ` எனப் பின்னர்க் குறிக்கப்படுதலின் , முன்னரும் அவ்வாறே குறிக்கப்பட்டது . ` குற்றமும் ` என்ற உம்மை உயர்வு சிறப்பு . ` ஆட்பட்ட பின் , விரும்புவதை வேண்டுதல் , நிகழவே செய்கின்றது ` என்பார் , ` உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே ` என்று அருளிச் செய்தார் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

மந்தி கடுவனுக் குண்பழம்
நாடி மலைப்புறம்
சந்திகள் தோறுஞ் சலம்புட்பம்
இட்டு வழிபடப்
புந்தி உறைவாய் புக்கொளி
யூர்அவி னாசியே
நந்தி உனைவேண்டிக் கொள்வேன்
நரகம் புகாமையே

பொழிப்புரை :

பெண்குரங்கு , ஆண்குரங்குக்கு , அது செல்லும் மலைப்புறங்களில் , உண்ணத் தக்க பழங்கள் கிடைக்கவேண்டி , ` காலை , நண்பகல் , மாலை ` என்னும் காலங்கள் தோறும் நீரையும் , பூவையும் இட்டு வழிபாடு செய்ய , அதன் மனத்திலும் புகுந்து இருப்ப வனே , திருப்புக்கொளியூரில் உள்ள , ` அவினாசி ` என்னும் திருக் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற , ` நந்தி ` என்னும் பெயரை உடையவனே , உன்னிடம் நான் நரகம் புகாதிருத்தலையே வேண்டிக் கொள்வேன் .

குறிப்புரை :

` உணப்பழம் ` என்பதும் , ` சலபுட்பம் ` என்பதும் பாடங்கள் . ` புந்தியும் ` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று . ` நந்தி ` என்னும் வடசொல் , ` இன்பம் உடையவன் ` எனப் பொருள் படும் . நரகம் புகுதல் , முதலையால் விழுங்கப்பட்ட சிறுவனுக்கும் , புதல்வனை இழந்த தாய் தந்தையருக்கும் , அவர்களது துன்பத்தைக் களையாது தமக்கும் உளதாகும் எனக் கருதினமையைக் குறிப்பினால் அருளினாராகக் கொள்க . ` முதலையால் விழுங்கப்படுதல் முதலிய வற்றால் , பாவங் காரணமாக . வாழ்நாள் இடைமுரியப் பெற்றோரும் , புத்திரன் இல்லாதோரும் , பிறர் துன்பம் களைதல் இயலும்வழி அது செய்யாதோரும் நரகம் புகுவர் ` என்பது அறநூல் துணிபு .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

பேணா தொழிந்தேன் உன்னைஅல்
லாற்பிற தேவரைக்
காணா தொழிந்தேன் காட்டுதி
யேல்இன்னங் காண்பன்நான்
பூணாண் அரவா புக்கொளி
யூர்அவி னாசியே
காணாத கண்கள் காட்டவல்
லகறைக் கண்டனே

பொழிப்புரை :

` அணிகலமாகவும் , வில்நாணாகவும் பாம்பைக் கொண்டுள்ளவனே , திருப்புக்கொளியூரில் உள்ள , ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் உன்னையன்றிப் பிறதேவரை விரும்பாது நீங்கினேன் ; அதனால் அவர்களைக் காணாதும் விட்டேன் ; காணும் தன்மையற்ற என் கண்களைக் காணும்படி செய்யவல்ல , நஞ்சினையணிந்த கண்டத்தை யுடையவனே , என் அறிவாகிய கண்ணையும் அங்ஙனம் அறியச் செய்வையாயின் , உனது பெருமைகளை இன்னும் மிகுதியாக அறிந்து கொள்வேன் .

குறிப்புரை :

ஒரோவொரு பயனைப்பெற ஒரோவொரு தேவரை அணுகுவோர் போலவன்றி , எல்லாவற்றிற்கும் உன்னையே அடியேன் அணுகுவேன் ; நீயும் அங்ஙனம் எனக்கு எல்லாவற்றையும் அளிக் கின்றாய் ; இனியும் அளிப்பாய் ` என்பது , இத் திருப்பாடலாற்போந்த பொருளாகக் கொள்க . அறிவுக்கண்ணாவது , அனுபவம் ; அதனை மேலும் மேலும் பெறவிரும்பி , இறைவன் தமக்குக் கண் அளித்த அருஞ்செயலை எடுத்தோதியருளினார் என்க . ` நாண் ` என்றது , வில் நாணேயன்றி , அரை நாணுமாம் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

நள்ளாறு தெள்ளா றரத்துறை
வாய்எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின்
தோலை விரும்பினாய்
புள்ளேறு சோலைப் புக்கொளி
யூரிற் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணியென்
னைக்கிறி செய்ததே

பொழிப்புரை :

திருநள்ளாறு , திரு அரத்துறைகளில் உள்ள நம்பனே , வெள்ளாடையை விரும்பாது , புலித்தோல் ஆடையை விரும்புபவனே , பறவைகள் தங்கும் சோலைகளையுடைய திருப்புக் கொளியூரில் உள்ள குளத்தில் உள்ளே முழுகப் புகுந்த அந்தணச் சிறுவன் செய்த மாயம் யாது ?

குறிப்புரை :

முழுகினவன் விரைவில் எழுந்துவாராது மறைந் திருந்து , சில ஆண்டுகளுக்குப்பின் வந்தமையை , ` மாயம் ` என்றார் என்க . இறைவன் செய்த அற்புதச் செயலைச் சிறுவன்மேல் வைத்து வியந்தருளியவாறு . ஐந்தாம் திருப்பாடல் முதலாக வந்த பாடல்கள் , முதலையுண்ட பாலன் மீண்டமைக்கு முன்னும் பின்னும் உள்ள இருநிலைகட்கும் இயையப் பொருள் பயந்து நிற்றலை அறிந்து கொள்க .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

நீரேற ஏறு நிமிர்புன்சடை
நின்மல மூர்த்தியைப்
போரேற தேறியைப் புக்கொளி
யூர்அவி னாசியைக்
காரேறு கண்டனைத் தொண்டன்ஆ
ரூரன் கருதிய
சீரேறு பாடல்கள் செப்பவல்
லார்க்கில்லை துன்பமே

பொழிப்புரை :

நீர் தங்குதலால் பருமை , பெற்ற , நீண்ட புல்லிய சடையை உடைய , தூய பொருளானவனும் , போர்செய்யும் எருதை ஏறுபவனும் , கருமை பொருந்திய கண்டத்தையுடையவனும் ஆகிய , திருப்புக்கொளியூரிலுள்ள , ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , அவனது தொண்டனாகிய நம்பியாரூரன் , ஒரு பயன் கருதிப் பாடிய , இப்புகழ்மிக்க பாடல்களைப் பாடவல்லவர்கட்குத் துன்பம் இல்லையாகும் .

குறிப்புரை :

`பயன், முதலையுண்ட பாலனைப் பெறுதல்` என்பது வெளிப்படை. இவ்வதியற்புதச் செயலைச் செய்தமையின், இப் பாடல்கள் புகழை மிக உடையவாயின. மூவர் முதலிகள் வாயிலாக நிகழ்ந்த அற்புதச் செயல்கள் பலவற்றுள்ளும் இதனையே அதியற்புதச் செயலாகப் பின்னுள்ளோர் ஒருவர் குறித்ததும் நினைக்கத்தக்கது ( நால்வர் நான்மணிமாலை - 19). மகனை இழந்து நெடுநாள் வருந்தினோரது வருத்தத்தைப் போக்கிய இப்பாடல்களைப் பாடுவோர்க்கு, ஏனைத் துன்பங்கள் நீங்குதல் சொல்ல வேண்டுமோ என்பது திருவுள்ளம்.
சிற்பி