திருப்புனவாயில்


பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 1

சித்த நீநினை யென்னொடு சூளறு வைகலும்
மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளன்ஊர்
பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி
பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே.

பொழிப்புரை :

மனமே , நீ , ` நும் நெறியாற் பயன் கிட்டாது ` என்று , இப்பொழுது என்னொடு சூள் செய்தலை ஒழி ; மதத்தையுடைய யானையின் , உரித்த தோலைப் போர்த்த அழகனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற ஊர் , அடியார் பலர் , திருப்பாடல்கள் பல வற்றைப்பாடி ஆடுகின்ற பழைய ஊராகிய மரப்பொந்துகளில் ஆந்தை களின் பாட்டு ஒழியாத திருப்புனவாயிலே ; அதனை நாள்தோறும் தப்பாது நினை ; பின்னர் என்னொடு சொல் .

குறிப்புரை :

ஈற்றில் வருவித்துரைத்தது குறிப்பெச்சம் . அதனாற் போந்தது , ` யாண்டும் பெறலாகாத பெரும் பேற்றினைப் பெற்று விடுவை ` என்பது . ` சூளறும் ` என்பது பாடம் அன்று . சோலைகளில் பகலும் இரவுபோலத் தோன்றுதலின் , ஆந்தை களின் பாட்டு எஞ்ஞான்றும் ஒழியாதாயிற்று . ஏகாரம் , பிரிநிலை , அதனை என்பது சொல் லெச்சம் . இத்தலத்தில் பாலைநில வருணனையே கூறப்படுகிறது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 2

கருதி நீமனம் என்னொடு சூளறு வைகலும்
எருது மேற்கொளும் எம்பெரு மாற்கிட மாவது
மருத வானவர் வைகும் இடம்மற வேடுவர்
பொருது சாத்தொடு பூசல றாப்புன வாயிலே.

பொழிப்புரை :

மனமே , நீ , இப்பொழுது என்னொடு சூள் செய்தலை ஒழி ; எருதினை ஊர்கின்ற எம்பெருமானுக்கு இடமாய் இருப்பது , இந்திரன் முதலிய தேவர் நீங்காதிருக்கின்ற இடமாகிய , வேடர்கள் வாணிகச் சாத்தோடு போர்செய்தலால் , ஆரவாரம் ஒழியாத திருப்புனவாயிலே ; அதனை நாள்தோறும் தப்பாது நினை ; பின்னர் என்னொடு சொல் .

குறிப்புரை :

இந்திரன் மருதநிலத் தெய்வமாதல் பற்றி , அவன் வழிப் பட்டோரையும் , ` மருத வானவர் ` என்று அருளினார் ; இதற்குப் பிற வாறும் உரைப்ப . திருப்புனவாயில் நெய்தலொடு மயங்கிய பாலைக் கண் இருத்தலின் , இத்திருப்பதிகத்துள் , பாலைக்கேற்ற அணிந் துரையை அருளுவார் . ` வேடுவர் பொறாது சாத்தொடு பூசலறாப் புன வாயில் ` என்று அருளிச்செய்தார் . வருகின்ற திருப்பாடல்களில் இன்ன பிற காண்க .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 3

தொக்காய்மன மென்னொடு சூளறு வைகலும்
நக்கானமை ஆளுடை யான்நவி லும்மிடம்
அக்கோடர வார்த்தபி ரானடிக் கன்பராய்ப்
புக்காரவர் போற்றொழி யாப்புன வாயிலே.

பொழிப்புரை :

அளவற்ற நினைவுகள் பொருந்தி ஆராய்கின்ற மனமே , நீ , இப்பொழுது என்னொடு சூள்செய்தலை ஒழி . ஆடை யில்லாதிருப்பவனும் , நம்மை ஆளாக உடையவனும் ஆகிய சிவ பெருமானுக்கு இடமாய் இருப்பது , எலும்பையும் , பாம்பையும் அணிந்த அப்பெருமானுக்கு அன்பராய் , அவனையே புகலிடமாக அடைந்தவர் அவனைப் போற்றுதல் ஒழியாத திருப்புனவாயிலே ; அதனை நாள்தோறும் தப்பாது நினை ; பின்னர் என்னொடு சொல் .

குறிப்புரை :

` புனவாயிலே ` என்றதற்குப்பின் , மேலைத் திருப் பாடலில் உள்ளனவெல்லாம் வந்து இயையும் . ` தொக்காய மனம் ` எனப்பாடம் ஓதுவாரும் உளர் . ` அக்கோடர வார்த்தபிரான் ` என்றது சுட்டுப் பெயரளவாய் நின்றது . இத் திருப்பாடல்களில் , சீர்மயக்கமும் , அடிமயக்கமும் வந்தன பல .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 4

வற்கென் றிருத்திகண் டாய்மன மென்னொடு சூளறு
பொற்குன்றஞ் சேர்ந்ததொர் காக்கைபொன் [ னாமதுவேபுகல்
கற்குன்றுந் தூறுங் கடுவெளி யுங்கடற் கானல்வாய்ப்
புற்கென்று தோன்றிடு மெம்பெரு மான்புன வாயிலே.

பொழிப்புரை :

மனமே , நீ , முருடுடையையாய் இருக்கின்றாய் ; என்னொடு இப்பொழுது சூள்செய்தலை ஒழி ; பொன்மலையைச் சேர்ந்த காக்கையும் பொன்னிறமாம் ஆதலின் , கரையிடத்து , சிறிய கற் குன்றுகளும் , புதர்களும் , வெப்பம் மிக்க வெற்றிடமும் பொலிவிழந்து தோன்றுதற்குக் காரணமான எம் பெருமானது திருப்புனவாயிலாகிய அதனையே போற்று ; பின்னர் என்னொடு சொல் .

குறிப்புரை :

` முருடு நீங்கப்பெற்று , நல்லையாவாய் ` என்றபடி , கற் குன்று முதலியன புற்கென்று தோன்றுதல் , திருப்புனவாயிலின் பொலிவினால் என்க . எனவே , ` புற்கென்று தோன்றும் பெரும் பரப்பில் இது பொலிவுற்று விளங்குகின்றது ` என , அதன் சிறப்பை வியந்தவாறாயிற்று . ` புனவாயிலாகிய அதுவே புகல் ` எனக் கூட்டுக . இதன் முதலடியின் இறுதியில் , ` வைகலும் ` என்பதனைச் சேர்த்து ஓதுவது , பிழைபட்ட பாடம் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 5

நில்லாய்மன மென்னொடு சூளறு வைகலும்
நல்லான்நமை ஆளுடை யான்நவி லும்மிடம்
வில்வாய்க்கணை வேட்டுவ ராட்ட வெருண்டுபோய்ப்
புல்வாய்க்கணம் புக்கொளிக் கும்புன வாயிலே.

பொழிப்புரை :

மனமே , நீ , இப்பொழுது என்னொடு சூள்செய்தலை ஒழி ; நன்மையே வடிவமானவனும் , நம்மை ஆளாக உடையவனுமாகிய சிவபெருமான் பெரிதும் உறையும் இடம் , வேடர்கள் , தம் வில்லின்கண் தொடுத்த அம்பினால் வெருட்ட வெருண்டு ஓடி , மான் கூட்டம் புகுந்து ஒளிக்கின்ற திருப்புனவாயிலே ; நாள்தோறும் அதன் கண் சென்று நில் ; பின்னர் என்னொடு சொல் .

குறிப்புரை :

ஆட்டுதல் , ஈண்டு , வெருட்டுதல் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 6

மறவல் நீமன மென்னொடு சூளறு வைகலும்
உறவும் ஊழியும் ஆயபெம் மாற்கிட மாவது
பிறவு கள்ளியின் நீள்கவட் டேறித்தன் பேடையைப்
புறவங் கூப்பிடப் பொன்புனஞ் சூழ்புன வாயிலே.

பொழிப்புரை :

மனமே , நீ , இப்பொழுது என்னொடு சூள்செய்தலை ஒழி ; எல்லா உயிர்கட்கும் உறவும் , காலமுமாய் நிற்கும் சிவபெருமானுக்கு இடமாய் இருப்பது , சேவற் புறா , தன் பெடை பிரிந்தபின்பு , அதனை , கள்ளிப் புதரின் வளர்ந்த கிளையில் ஏறிநின்று கூப்பிட , புனங்களில் பொன் நிறைந்து காணப்படுகின்ற திருப்புனவாயிலே ; அதனை மறவாது நினை ; பின்னர் என்னொடு சொல் .

குறிப்புரை :

` மறவல் ` என்றது , ` மறவாது நினை ` என்றவாறு . ` பிறகு ` என்பது , ` பிறவு ` எனத் திரிந்தது . ` கூப்பிட ` என்றதனால் , ` பிரிந்த பிறகு ` என்பது பெறப்பட்டது . புனத்திற் பொன் சூழ்தல் புனவாயிலிலும் , புறா கூப்பிடுதல் பாலை வெளியிலும் என்க .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 7

ஏசற்று நீநினை என்னொடு சூளறு வைகலும்
பாசற்றவர் பாடிநின் றாடும் பழம்பதி
தேசத் தடியவர் வந்திரு போதும் வணங்கிடப்
பூசற்றுடி பூசல றாப்புன வாயிலே.

பொழிப்புரை :

மனமே , நீ , இப்பொழுது என்னொடு சூள்செய்தலை ஒழி ; பாசம் நீங்கிய மெய்யுணர்வினர் புகழ்ந்து பாடி , நின்று ஆடுகின்ற பழைமையான ஊர் , பல நாட்டிலும் உள்ள அடியவர் பலரும் வந்து காலையிலும் , மாலையிலும் வணங்க , வேடுவர்களது போர்ப்பறை ஆரவாரத்தை ஒழியாத திருப்புனவாயிலே ; அதனை , இகழ்தல் அற்று , நாள்தோறும் தப்பாது நினை ; பின்னர் என்னொடு சொல் .

குறிப்புரை :

` ஏசு ` முதனிலைத் தொழிற் பெயர் . ` பாசம் ` என்பது குறைந்து நின்றது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 8

கொள்ளி வாயின கூரெயிற் றேனங் கிழிக்கவே
தெள்ளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை
கள்ளிவற் றிப்புற் றீந்துவெங் கானங் கழிக்கவே
புள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே.

பொழிப்புரை :

கொள்ளிபோல முனை சிவந்து நீண்ட வாயினை யுடையனவாகிய , கூரிய பற்களையுடைய பன்றிகள் நிலத்தைக் கிண்ட வெளிப்பட்ட சிறந்த மாணிக்க மணியோடு நெருப்புத் தோன்று மிடத்துச் சிவந்து காட்டும் நிலத்தின்கண் உள்ள கள்ளி உலர்ந்து , புல்தீந்து , கொடிய காடு அழிகையினாலே , புள்ளிமானின் கூட்டம் புகுந்து ஒளிக்கின்ற திருப்புனவாயிலே .

குறிப்புரை :

மேலைத் திருப்பாடல்களில் உள்ளன பலவற்றையும் முன்னும் பின்னும் கொணர்ந்து இயைத்துரைத்து ஏனைய திருப் பாடல்களோடு பொருந்த உரைத்துக்கொள்க . ` தெள்ளிய ` என்னும் பெயரெச்சத்தின் ஈறும் , ` விழிக்குமிடத்து ` என்னும் வினையெச்சத்தின் அத்தும் தொகுத்தலாயின . ` வற்றி , தீந்து ` என்னும் எச்சங்கள் , எண்ணின்கண் வந்தன . ` கழிக்கவே ` என்பது பாடம் அன்று . ` மானினம் புக்கொளிக்கும் ` என்றது , ` அவைகட்கு அரணாய் நிற்கும் சிறப்பினது ` என்றவாறு . ` தரை ` என்னும் வடசொல் , ரகர றகர வேறுபாடின்றி , ` தறை ` என வருதலும் உண்டு . ` தரை ` என்றே பாடம் ஓதினும் இழுக்காது .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 9

எற்றேநினை என்னொடு சூளறு வைகலும்
மற்றேதும் வேண்டா வல்வினை யாயின மாய்ந்தறக்
கற்றூ றுகார்க் காட்டிடை மேய்ந்தகார்க் கோழிபோய்ப்
புற்றேறிக் கூகூ எனஅழைக் கும்புன வாயிலே.

பொழிப்புரை :

மனமே , நின் செய்கைதான் எத்தன்மைத்து ! என்னொடு சூள்செய்தலை ஒழி ; நம் வலிய வினையெனப் படுவன யாவும் அடியோடு கெட்டொழிதற்கு மற்றுச் சூழ்ச்சி யாதும் வேண்டா ; கல்லைச் சூழ்ந்த புதரிலும் , கரிய காட்டிடத்தும் இரையை உண்ட கரிய கானங்கோழிகள் , ஈயற் புற்றுக்களின் மேல் ஏறி நின்று , ` கூகூ ` எனக் கூப்பிடுகின்ற திருப்புனவாயிலை நாள்தோறும் தப்பாது நினை .

குறிப்புரை :

` மனமே ` என்பது , மேலைத் தொடர்பால் வந்தியையும் , ` ஆயின ` என்பது , எழுவாய்ப் பொருள் தருவதோர் இடைச்சொல் . ` தூறு ` என்பது , ` காடு ` என்பதனோடு உம்மைத் தொகை படத் தொகுதலின் , ஒற்றிரட்டாதாயிற்று .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 10

பொடியாடு மேனியன் பொன்புனஞ் சூழ்புன வாயிலை
அடியா ரடியன் னாவல வூரன் உரைத்தன
மடியாது கற்றிவை ஏத்தவல் லார்வினை மாய்ந்துபோய்க்
குடியாகிப் பாடிநின் றாடவல் லார்க்கில்லை குற்றமே.

பொழிப்புரை :

நீற்றின்கண் மூழ்கிய திருமேனியனாகிய சிவ பெருமானது , புனங்களில் பொன் நிறைந்துள்ள திருப்புனவாயிலை , அடியார்க்கு அடியானாகிய திருநாவலூரன் பாடிய இப்பாடல்களை , சோம்பியிராது கற்று , அவற்றால் அப்பெருமானை ஏத்த வல்லவர் , முன்செய்த வினை எல்லாம் மாய்ந்துபோகப் பெற்று , அப்பெரு மானுக்கே அடியராய் வாழ , அவற்றை இசைவழிப் பாடி நின்று ஆட வல்லவர்க்கு , செய்வன தவிர்வனவற்றிற் பிறழ்தலால் வருங் குற்றம் இல்லையாம் .

குறிப்புரை :

இயற்றமிழ்ப் பாவளவிற் பாடி ஏத்துதலினும் , இசைத் தமிழியல்பு நிரம்பப் பாடுதலும் , அதற்கேற்ப ஆடுதலும் சிறந்தன என்றருளியவாறு . ` கீதம் வந்த வாய்மையாற் கிளர்த ருக்கி னார்க்கலால் ஓதி வந்த வாய்மையா லுணர்ந்து ரைக்க லாகுமே ` ( தி .3 ப .52 பா .7) ` கோழைமிட றாககவி கோளுமில வாகஇசை கூடும் வகையால் ஏழையடி யாரவர்கள் யாவை சொன சொன்மகிழும் ஈசன் ` ( தி .3. ப .71 பா .1) என்ற திருஞானசம்பந்தர் திருமொழிகளையும் , ` அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளு மாறே ` ( தி .4 ப .77 பா .3) ` தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடி ` ( தி .6. ப .31 பா .3) என்ற திருநாவுக்கரசர் திருமொழிகளையும் காண்க. `ஆக` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது.
சிற்பி