திருவெஞ்சமாக்கூடல்


பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 1

எறிக்குங்கதிர் வேயுதிர் முத்தம்மோ
டேலம்மில வங்கந்தக் கோலம்இஞ்சி
செறிக்கும்புன லுட்பெய்து கொண்டுமண்டித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
முறிக் குந்தழை மாமுடப் புன்னைஞாழல்
குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா
வெறிக்குங்கலை மாவெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

பொழிப்புரை :

மூங்கிலினின்றும் உதிர்ந்த , ஒளிவீசும் , முத்துக்களோடு , ` ஏலம் , இலவங்கம் , தக்கோலம் , இஞ்சி ` என்பவைகளை , எவ்விடங்களையும் நிரப்புகின்ற நீருள் இட்டுக்கொண்டு , கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள , ` தளிர்த்த தழைகளையுடைய மாமரம் , வளைந்த புன்னை மரம் , குங்கும மரம் , குருக்கத்திப்பந்தர் ` என்னும் இவைகளின்மேல் குயில்கள் இருந்து கூவுதல் ஒழியாத , அஞ்சுகின்ற கலைமானையுடைய திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற , வேறுபட்ட இயல்பை உடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

குறிப்புரை :

` பெய்துகொண்டு ` என்றது முதலியன , செய்யாததனைச் செய்வதுபோல அருளியன . ` சிற்றாறு ` என்பது , பெயர் . அது வடக்காக ஓடுதலின் , இத்தலம் அதன் கீழ்க்கரையில் உளதென்க . குயில் கூவுதலும் மான் அஞ்சுதற்குக் காரணமாகும் . வேறுபடுதல் , உலகிய லினின்றும் . இல்வாழ்க்கையின் நீங்கி , இறைவன் தொண்டே செய்வார் சீரடியார் என்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 2

குளங்கள்பல வுங்குழி யுந்நிறையக்
குடமாமணி சந்தன மும்மகிலும்
துளங்கும்புன லுட்பெய்து கொண்டுமண்டித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
வளங்கொள்மதில் மாளிகை கோபுரமும்
மணிமண்டப மும்மிவை மஞ்சுதன்னுள்
விளங்கும்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

பொழிப்புரை :

பல குளங்களும் , பல குழிகளும் நிறையும்படி , மேற்குத் திசையில் உள்ள சிறந்த மணிகளையும் , ` சந்தனமரம் , அகில் மரம் ` என்னும் இவற்றையும் , அசைகின்ற நீருள் இட்டுக்கொண்டு , கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரை மேல் உள்ள , வளத்தைக்கொண்ட மதிலும் , மாளிகையும் கோபுரமும் , மணிமண்டபமும் ஆகிய இவை . மேகத்தில் விளங்குகின்ற சந்திரனை அளாவுகின்ற திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பை உடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

குறிப்புரை :

` இவை என்றதும் , மதிதோய் ` என்றதும் , ` வாளைமீன் உள்ளல் தலைப்படல் ` ( திரிகடுகம் -7.) என்புழிப் போல , ஒவ்வொன்றும் வினைமுதலும் , செய்யப்படுபொருளுமாய்த் தடுமாறின .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 3

வரைமான்அனை யார்மயிற் சாயல்நல்லார்
வடிவேற்கண்நல் லார்பலர் வந்திறைஞ்சத்
திரையார்புன லுட்பெய்து கொண்டுமண்டித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
நிரையார்கமு குந்நெடுந் தாட்டெங்குங்
குறுந்தாட்பல வும்விர விக்குளிரும்
விரையார்பொழில் சூழ்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

பொழிப்புரை :

மலையில் உள்ள மான்போல்பவரும் , மயில் போலும் சாயலை யுடையவரும் , கூரிய வேல்போலும் கண்களை யுடையவரும் ஆகிய மகளிர் பலர் வந்து வழிபட , அவர்கள் தனக்கு அளித்த பொருளை , அலை நிறைந்த நீரில் இட்டுக்கொண்டு , கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள , வரிசையாகப் பொருந்திய கமுக மரங்களும் , நீண்ட அடியினையுடைய தென்னை மரங்களும் , குறிய அடியினையுடைய பலா மரங்களும் ஒன்றாய்ப் பொருந்துதலால் குளிர்ச்சியை அடைகின்ற , மணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற , வேறு பட்ட இயல்பினையுடையவனே , அடியேனையும் உன் சீரடி யாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

குறிப்புரை :

` மானனையார் ` முதலிய பலவும் வேறு வேறுள்ளாரைக் குறித்தனவல்ல ; அனைவரையும் குறித்தனவேயாம் . ` இறைஞ்ச ` என்றதனால் , திரையார் புனலுட் பெய்துகொள்வது அப் பொருளாயிற்று . அதனைக் குறிக்கும் சொல் சொல்லெச்சமாய் நின்றது .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 4

பண்ணேர்மொழி யாளையொர் பங்குடையாய்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்
தண்ணார்அகி லுந்நல சாமரையும்
அலைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
மண்ணார்முழ வுங்குழ லும்மியம்ப
மடவார்நட மாடு மணியரங்கில்
விண்ணார்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

பொழிப்புரை :

பண்போலும் மொழியினையுடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே , யாவரும் ஒடுங்குங் காட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே , இன்பத்தைத் தரும் அரிய அகிலையும் , நல்ல கவரியையும் அலைத்துக்கொண்டு வந்து கரையை மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள , மண்பொருந்திய மத்தளமும் , குழலும் ஒலிக்க , மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல் , வானத்தில் பொருந்திய சந்திரன் தவழ்கின்ற திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினை யுடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

குறிப்புரை :

தண்மை , மனங் குளிர்தலைக் குறித்தது . மண் மத்தளத்திற் பூசப்படுவது ; இதனை , ` மார்ச்சனை ` என்ப .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 5

துளைவெண்குழை யுஞ்சுருள் வெண்டோடுந்
தூங்குங்கா திற்றுளங் கும்படியாய்
களையேகம ழும்மலர்க் கொன்றையினாய்
கலந்தார்க்கருள் செய்திடுங் கற்பகமே
பிளைவெண்பிறை யாய்பிறங் குஞ்சடையாய்
பிறவாதவ னேபெறு தற்கரியாய்
வெளைமால்விடை யாய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

பொழிப்புரை :

துளைக்கப்பட்ட வெள்ளிய குழையும் , சுருண்ட வெள்ளிய தோடும் நீண்ட காதினிடத்தில் அசைகின்ற வடிவத்தை யுடையவனே , தேனினது மணத்தை வீசுகின்ற கொன்றை மலரைச் சூடியவனே , அடைந்தவர்க்கு அருள்செய்கின்ற கற்பகம் போல்பவனே , இளைய வெள்ளிய பிறையைச் சூடியவனே , விளங்குகின்ற சடைமுடியை உடையவனே , பிறத்தலைச் செய்யாதவனே , கிடைத் தற்கு அரியவனே வெண்மையான பெரிய விடையை உடையவனே , திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற , வேறுபட்ட இயல்பை உடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

குறிப்புரை :

தோளில் தோய நீண்டிருத்தலின் , ` தூங்கும் காது ` என்றார் . ` தோடும் சங்கினால் ஆயது ` என்க . ` கள்ளை , பிள்ளை , வெள்ளை என்பன , இடைக்குறைந்து நின்றன . ` கள் ` ஆகுபெயர் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 6

தொழுவார்க்கெளி யாய்துயர் தீரநின்றாய்
சுரும்பார்மலர்க் கொன்றைதுன் றுஞ்சடையாய்
உழுவார்க்கரி யவ்விடை யேறிஒன்னார்
புரந்தீயெழ ஓடுவித் தாய்அழகார்
முழவாரொலி பாடலொ டாடலறா
முதுகாடரங் காநட மாடவல்லாய்
விழவார்மறு கின்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

பொழிப்புரை :

உன்னைத் தொழுகின்றவர்க்கு எளிதில் கிடைக்கும் பொருளாய் உள்ளவனே , அவர்களது துன்பந்தீர அவர்கட்கு என்றும் துணையாய் , நின்றவனே , வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் பொருந்திய சடையை உடையவனே , உழுவார்க்கு உதவாத விடையை ஏறுபவனே , பகைவரது திரிபுரத்தில் நெருப்பை மூளுமாறு ஏவியவனே , பேய்களின் ஓசையாகிய அழகுநிறைந்த மத்தளஒலியும் , பாட்டும் , குதிப்பும் நீங்காத புறங்காடே அரங்காக நடனமாட வல்லவனே , விழாக்கள் நிறைந்த தெருக்களையுடைய திருவெஞ்ச மாக் கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பை உடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

குறிப்புரை :

விடை ஒற்றையாகலானும் , தேவர் ஆகலானும் உழுவார்க்கு உதவாதாயிற்று . சிரிப்பினின்றும் எழுந்து சென்றமையால் , ` தீயெழ ஓடுவித்தாய் ` என்றார் . முதுகாடாதலின் , முழவு முதலியன பேயின் முழக்கமே என்க . ` மறுகில் ` என்பது பாடம் அன்று .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 7

கடமாகளி யானை யுரித்தவனே
கரிகாடிட மாஅனல் வீசிநின்று
நடமாடவல் லாய்நரை யேறுகந்தாய்
நல்லாய்நறுங் கொன்றை நயந்தவனே
படமாயிர மாம்பருத் துத்திப்பைங்கண்
பகுவாய்எயிற் றோடழ லேயுமிழும்
விடவார்அர வாவெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

பொழிப்புரை :

மதநீரையுடைய பெரிய மயக்கங்கொண்ட யானையை உரித்தவனே , கரிந்த காடே இடமாக நெருப்பை வீசிநின்று நடனமாட வல்லவனே , வெள்ளிய இடபத்தை விரும்பியவனே , நல்லோனே , கொன்றை மலரை மகிழ்ந்து அணிந்தவனே , புள்ளிகளை யுடைய ஆயிரம் படங்கள் பொருந்திய , பருத்த , பசிய கண்களை யுடைய , பிளந்த வாயில் பற்களோடு நெருப்பை உமிழ்கின்ற , நஞ்சினையுடைய அரிய பாம்பை அணிந்தவனே , திருவெஞ்சமாக் கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பையுடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

குறிப்புரை :

` துத்திப் படம் ` எனக் கூட்டுக . ` எயிற்றோடு ` என்பது , வேறுவினை ஓடு . ` அழல் ` என்றது , அழல்போலும் வெய்தாய உயிர்ப்பினை . பாம்பிற்கு அருமையாவது , தீண்டப்படுதல் கூடாமை .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 8

காடும்மலை யுந்நாஅ டும்மிடறிக்
கதிர்மாமணி சந்தன மும்மகிலும்
சேடன்னுறை யும்மிடந் தான்விரும்பித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
பாடல்முழ வுங்குழ லும்மியம்பப்
பணைத்தோளியர் பாடலொ டாடலறா
வேடர்விரும் பும்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

பொழிப்புரை :

ஒளியையுடைய சிறந்த மணிகளையும் , சந்தனத்தையும் , அகிலையும் , ` முல்லை , குறிஞ்சி , மருதம் ` என்னும் நிலங்களில் சிதறி , ` சேடன் ` என்னும் அரவரசன் வாழ்கின்ற பாதலத்தை அடைய விரும்பி நிலத்தை அகழ்ந்து , கரையைப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள , தம் பாடலுக்கு இயைந்த மத்தளமும் , குழலும் ஒலிக்க , பருத்த தோள்களையுடைய மாதர்கள் பாடுதலோடு , ` ஆடுதலைச் செய்தல் ஒழியாத கூத்தர் விரும்பும் திருவெஞ்ச மாக் கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பையுடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

குறிப்புரை :

வேடர் - கதையிற் சொல்லப்படுவோர்போல வேடம் புனைந்து ஆடுபவர் : இவரை , ` பொருநர் ` என்ப . இவர் விரும்புதல் பரிசில் மிக வழங்குவோர் உளராதல் பற்றி . ` நாஅடும் ` என உயிரளபெடை வந்தது . அளபெடையின்றி ஓதுதல் கூடாமையறிக .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 9

கொங்கார்மலர்க் கொன்றையந் தாரவனே
கொடுகொட்டியொர் வீணை யுடையவனே
பொங்காடர வும்புன லுஞ்சடைமேற்
பொதியும்புனி தாபுனஞ் சூழ்ந்தழகார்
துங்கார்புன லுட்பெய்து கொண்டுமண்டித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
வெங்கார்வயல் சூழ்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

பொழிப்புரை :

தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையை அணிந்தவனே , கொடுகொட்டியையும் வீணையொன்றையும் உடையவனே , சீற்றம் மிக்க , ஆடுகின்ற பாம்பும் தண்ணீரும் சடையில் நிறைந்துள்ள தூயவனே , காடுகளைச் சூழ்ந்து அழகுமிகுகின்ற , உயர்வு பொருந்திய நீருள் , காடுபடு பொருள்கள் பலவற்றை இட்டுக்கொண்டு , கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள , விரும்பத்தக்க நீர் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினையுடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

குறிப்புரை :

` கொடுகொட்டி ` என்னும் பறை அடிக்கப்படுதற் கேற்ப ஆடுதலின் , அக்கூத்து , ` கொடுகொட்டி ` எனப்பட்டது என்க . ` புனஞ் சூழ்ந்து ` என்றதனால் , புனலுட் பெய்யப்படுவன , காடுபடு பொருள் களாயின .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 10

வஞ்சிநுண்ணிடை யார்மயிற் சாயலன்னார்
வடிவேற்கண்நல் லார்பலர் வந்திறைஞ்சும்
வெஞ்சமாக்கூஉ டல்விகிர் தாஅடியே
னையும்வேண்டுதி யேஎன்று தான்விரும்பி
வஞ்சியாதளிக் கும்வயல் நாவலர்கோன்
வனப்பகை யப்பன்வன்ன் றொண்டன்சொன்ன
செஞ்சொற்றமிழ் மாலைகள் பத்தும்வல்லார்
சிவலோகத்தி ருப்பது திண்ணமன்றே.

பொழிப்புரை :

` வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையை யுடையவரும் , மயில்போலும் சாயலை யுடையவரும் , கூர்மை பொருந்திய வேல்போலும் கண்களையுடையவரும் ஆகிய மகளிர் பலர் வந்து வணங்குகின்ற திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளி யிருக்கின்ற , வேறுபட்ட இயல்பினையுடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் ` என்று , விளைவுகளை வஞ்சியாதளிக்கின்ற வயல்களையுடைய திருநாவ லூரில் உள்ளார்க்குத் தலைவனும் , வனப்பகைக்குத் தந்தையும் ஆகிய வன்றொண்டன் விரும்பிப் பாடிய செவ்விய சொற்களாலாகிய இத் தமிழ்மாலைகள் பத்தினையும் பாட வல்லவர் சிவலோகத்தில் வீற்றிருத்தல் திண்ணம் .

குறிப்புரை :

தான் , அசைநிலை . மிகக் கொடுப்பவரை , ` வஞ்சியாது கொடுப்பவர் ` என்னும் வழக்குப் பற்றி , ` வஞ்சியாது அளிக்கும் வயல் ` என்று அருளினார் . இனி , ` வஞ்சியாது அளிக்கும் நாவலூரர் ` என , நாவலூரில் உள்ளார்க்கு அடையாக்கலுமாம் . நாவலூரை , ` நாவல் ` என்றல் , பான்மை வழக்கு . ` என்று வன்றொண்டன் விரும்பிச் சொன்ன ` என இயையும் . ` வன்ன்றொண்டன் ` என ஒற்றளபெடை வந்தது . அளபெடையின்றி ஓதுதல் கூடாமையறிக .
சிற்பி