திருப்புறம்பயம்


பண் :கொல்லி

பாடல் எண் : 1

அங்கம் ஓதியோர் ஆறை மேற்றளி
நின்றும் போந்துவந் தின்னம்பர்த்
தங்கி னோமையும் இன்ன தென்றிலர்
ஈச னாரெழு நெஞ்சமே
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள்
ஏத்தி வானவர் தாந்தொழும்
பொங்கு மால்விடை ஏறி செல்வப்
புறம்ப யந்தொழப் போதுமே.

பொழிப்புரை :

மனமே , ஆறங்கங்களையும் ஓதியவராகிய அந்தணர்களது திருவாறைமேற்றளியினின்றும் புறப்பட்டு வந்து திருவின்னம் பரில் பலநாள் தங்கியும் நம்மை இங்குள்ள இறைவர் இனி நாம்செய்யத்தக்கது இன்னது என்று தெளிவித்தாரில்லை ; ஆதலின் , வானவர்கள் தம் நிலையினும் மேன்மேல் உயர்தற் பொருட்டு இரவெல்லாங் காத்து நின்று விடியலில் ஏத்தித் தொழுகின்ற , அழகு மிக்க பெரிய விடையை ஏறும் பெருமானது , செல்வம் நிறைந்த திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ; புறப்படு .

குறிப்புரை :

உம்மை , சிறப்பு . ` இன்னதென எடுத்துச் சொல்லாமையின் , இயல்பாக நாம் செய்யும் பணியைச் செயற்பாலம் ` என்றபடி . வானவர்கள் வந்த அன்று செவ்வி வாயாமையின் , இரவெல்லாங் காத்து நின்றனர் என்க . ` தேவர்கள் ` என்ற இடத்து , ` ஆக ` என்பது வருவிக்க . ஈண்டு , ` தேவர்கள் ` என்றது , உயர்ந்த தேவர்களை . ` வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால் - தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழவேண்டி ` என்ற திருவாசகத்தைக் காண்க . ( தி .8 திருச்சதகம் 16.)

பண் :கொல்லி

பாடல் எண் : 2

பதியுஞ் சுற்றமும் பெற்ற மக்களும்
பண்டை யாரலர் பெண்டிரும்
நிதியில் இம்மனை வாழும் வாழ்க்கையும்
நினைப்பொ ழிமட நெஞ்சமே
மதியஞ்சேர்சடைக் கங்கை யானிடம்
மகிழும் மல்லிகை செண்பகம்
புதிய பூமலர்ந் தெல்லி நாறும்
புறம்ப யந்தொழப் போதுமே.

பொழிப்புரை :

அறியாமையுடைய மனமே , நாம் வாழ்கின்ற ஊரும் , மணந்த மனைவியரும் , பெற்ற மக்களும் , பிற சுற்றத்தாரும் , தேடிய பொருளும் , அப்பொருளால் மனையில் வாழும் இவ் வாழ்க்கையும் எல்லாம் பண்டு தொட்ட தொடர்பினரல்லர் ; அதனால் , என்றும் உடன் தொடர்ந்தும் வாரார் . ஆதலின் , அவர்களைப் பற்றிக் கவலுதல் ஒழி ; இனி நாம் , சந்திரன் சேர்ந்த சடையிடத்துக் கங்கையை அணிந்தவன் தன் இடமாக மகிழும் , மல்லிகைக் கொடியும் சண்பக மரமும் புதிய பூக்களை மலர்ந்து இரவெல்லாம் மணம் வீசுகின்ற திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ; புறப்படு .

குறிப்புரை :

திணைவிராய் எண்ணப்பட்டன , பன்மையால் உயர் திணை முடிபு கொண்டன . ` நிதியில் ` என்றது , உடம்பொடு புணர்த்தலாகலின் , இவ்வாறுரைக்கப்பட்டது .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

புறந்தி ரைந்து நரம்பெழுந்து
நரைத்து நீஉரை யாற்றளர்ந்
தறம்பு ரிந்துநி னைப்ப தாண்மை
யரிது காணிஃ தறிதியேல்
திறம்பி யாதெழு நெஞ்ச மேசிறு
காலை நாமுறு வாணியம்
புறம்ப யத்துறை பூத நாதன்
புறம்ப யந்தொழப் போதுமே.

பொழிப்புரை :

மனமே , தோல் திரைந்து , நரம்புகள் வெளித் தோன்றி , வாய் குழறும் நிலை வந்த பின்பு அறத்தைச் செய்ய நினைப்பது பயனில்லாததாம் ; இதனை நீ அறிவையாயின் , நாம் இளமையிலே செய்து ஊதியம் பெறுதற்குரிய வாணிகம் இதுவேயாக , புறத்திலே அச்சத்தொடு சூழும் பூதங்களுக்குத் தலைவனாகிய இறைவனது திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ; என்னைப் பிறழ்வியாது , விரையப் புறப்படு .

குறிப்புரை :

முதலில் ` புறம் `, ஆகுபெயர் ,. செய்தெனெச்சங்கள் எண்ணின்கண் வந்தன . ` நீ அறிதியேல் ` எனக் கூட்டுக . ` உரையால் ` என்றதில் ஆல் , அசைநிலை . ` புரிந்து ` என்றதனை , ` புரிய ` எனத் திரிக்க . ஆண்மை , ஆளுதல் - பயன்கொள்ளுதல் - தன்மை . அரிது , இல்லாதது . ` திறம்புவியாது ` என்பது விகாரமாயிற்று . ` வாணியம் ` என்பதன்பின் , ` ஆக ` என்பது வருவிக்க . ` வாணிகம் ` என்பது வாணியம் என மருவிற்று . வாணிபம் என்பதும் பாடம் . இத்திருப் பாடலில் , ` புறம்பயம் ` என்பது , ` மடக்கு ` என்னும் அணிநயம்பட அருளப்பட்டது .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

குற்றொ ருவ்வரைக் கூறை கொண்டு
கொலைகள் சூழ்ந்த களவெலாம்
செற்றொ ருவ்வரைச் செய்த தீமைகள்
இம்மை யேவருந்திண்ணமே
மற்றொ ருவ்வரைப் பற்றி லேன்மற
வாதெ ழுமட நெஞ்சமே
புற்ற ரவ்வுடைப் பெற்ற மேறி
புறம்ப யந்தொழப் போதுமே.

பொழிப்புரை :

அறியாமையுடைய மனமே , பொருளைப் பறித்தல் வேண்டி அஃது உடைய ஒருவரைக் கருவியாற் குற்றி , அவர் உடையைப் பறித்து , மேலும் கொலைச் செயல்களைச் செய்யத் துணிந்த களவினால் ஆகிய பாவங்களும் , முறையில் நிற்கும் ஒருவரை முறை யின்றிப் பகைத்து , அப்பகை காரணமாக அவர்க்குத் தீங்கிழைத்த பாவங்களும் மறுமை வருங்காறும் நீட்டியாது இம்மையே வந்து வருத்தும் ; இது திண்ணம் ; ஆதலின் , அவைபோல்வன நிகழாதிருத்தற்கு உன்னையன்றிப் பிறர் ஒருவரையும் நான் துணையாகப் பற்றாது உன்னையே பற்றினேன் ; புற்றில் வாழும் பாம்புகளை அணிகளாக உடைய , இடப வாகனனது திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ; அவனை நினைந்து புறப்படு .

குறிப்புரை :

` குறு ` என்பது அடியான செய்தெனெச்சம் , ` குற்று ` என வருதல் பண்டைய வழக்கு . குற்று என்பது அடியாக , ` குற்றி ` என வருதல் பிற்கால வழக்கு . குத்துதல் கையாலும் , குற்றுதல் கருவியாலும் நிகழ்வன . முன்னையது புண் செய்யாது ; பின்னையது புண் செய்யும் . கொல்லுதல் ஒன்றாயினும் , அஃது உண்டாகச் செய்யும் செயல்கள் பல உளவாகலின் , ` கொலைகள் ` என்றார் . சூழ்தல் , எண்ணித் துணிதலைக் குறித்தது . எச்செயலுக்கும் மனமே முதலாதலின் , அல்லதை ஒழித்தற்கும் , நல்லதைச் செய்தற்கும் அதனையே துணையாகப் பற்றினார் என்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

கள்ளி நீசெய்த தீமை யுள்ளன
பாவ மும்பறை யும்படி
தெள்ளி தாஎழு நெஞ்ச மேசெங்கண்
சேவு டைச்சிவ லோகனூர்
துள்ளி வெள்ளிள வாளை பாய்வயல்
தோன்று தாமரைப் பூக்கள்மேல்
புள்ளி நள்ளிகள் பள்ளி கொள்ளும்
புறம்ப யந்தொழப் போதுமே.

பொழிப்புரை :

மனமே , நீ வஞ்சித்துச் செய்த தீமையால் உள வாகிய பாவமும் நீங்கும்படி , இடபத்தையுடைய சிவலோகனது ஊராகிய , வெள்ளிய இளமையான வாளை மீன்கள் துள்ளிப் பாய்கின்ற வயல்களில் மலர்கின்ற தாமரைப் பூக்களின் மேல் , புள்ளிகளை யுடைய நண்டுகள் பள்ளி கொள்கின்ற திருப்புறம்பயத்தை வணங்கத் தெளிவுடையையாய்ப் புறப்படு .

குறிப்புரை :

` உள் , எள் ` என்பவை அடியாக , ` உள்ளி , எள்ளி ` என்னும் வினையெச்சங்கள் வருதல்போல , ` கள் ` என்பது அடியாக , ` கள்ளி என்னும் வினையெச்சம் வருதலை , இத் திருப்பாடலிற் காண்க . ` கட்டு ` என வருவது , ` களைந்து ` எனப் பொருள்தரும் . ` தெள்ளிது ` என்றதில் , து , பண்புப் பெயர் விகுதி . ` து , று ` என்பன பண்புப் பெயர் விகுதியாதல் பிற்கால முறைமை . அப்பண்புப் பெயர் பண்பியின் மேல் நின்றது . ஈண்டுக் குறித்த பாவம் தமக்கு உளதாகத் துணிந்திலராயினும் , ` உளதாயிருப்பின் , அவையும் நீங்குமாறு வணங்குவோம் ` என்று அருளினார் , அஃது ஒன்றே அதற்குப் பயனாகாமையின் .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

படையெ லாம்பக டாரஆளிலும்
பௌவஞ் சூழ்ந்தர சாளிலும்
கடையெ லாம்பிணைத் தேரை வால்கவ
லாதெ ழுமட நெஞ்சமே
மடையெ லாங்கழு நீர்ம லர்ந்து
மருங்கெ லாங்கரும் பாடத்தேன்
புடையெ லாமணம் நாறு சோலைப்
புறம்ப யந்தொழப் போதுமே.

பொழிப்புரை :

அறியாமை பொருந்திய மனமே , யானைகள் நிரம்பியிருக்க , பல படைகளையும் ஏவல்கொண்டு வெற்றியைப் பெறினும் , அவ்வெற்றியாலே கடல்சூழ்ந்த நிலம் முழுவதையும் ஆளினும் , முடிவில் எல்லாம் , தேரையோடு ஒட்டியுள்ள வால்போல ஆகிவிடும் ; ஆதலால் , நீர்மடைகளில் எல்லாம் கழுநீர்ப் பூக்கள் மலர் தலாலும் , பல இடங்களிலும் கரும்பை ஆலையில் இட்டுப் பிழிதலாலும் , எல்லாப் பக்கங்களிலும் தேனின் மணம் வீசுகின்ற சோலை களையுடைய திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ; அவை களைப் பற்றிக் கவலைகொள்ளாது புறப்படு .

குறிப்புரை :

` படைகளை ஆளுதல் ` என்றது , அவ்வாற்றால் வெற்றி பெறுதலைக் குறித்தது . ` சூழ்ந்த ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . ` அரசு ` அதனையுடைய நிலத்திற்கு ஆயிற்று . ` தேரையொடு பிணைதலை உடைய வால் ` என்க . தேரை பிறந்த பொழுது அதனோடு உடன் தோன்றிய வால் ஒரு கால எல்லையில் அதனைவிட்டு ஒழிதல் போல , படைகளும் , நாடு முதலியனவும் ஒரு காலஎல்லையில் விட்டொழிவனவன்றி , உடன்வருவது யாதும் இல்லை என்றதாம் . ` மலர்ந்து ` என்னும் எச்சம் , எண்ணின்கண் வந்தது . ` ஆட ` என்ற எச்சம் , காரணப் பொருட்டு . ` தேன் ` என்பது , கருப்பஞ்சாற்றையும் குறிக்கும் . ` மணம் நாறு புறம்பயம் , சோலைப் புறம்பயம் ` எனத் தனித்தனி இயையும் . ` சோலைப் புறம்பயம் ` என்றதும் , பிறிதொரு மணம் வீசுதலைக் குறித்தவாறு .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

முன்னைச் செய்வினை இம்மை யில்வந்து
மூடு மாதலின் முன்னமே
என்னை நீதியக் காதெ ழும்மட
நெஞ்ச மேஎந்தை தந்தையூர்
அன்னச் சேவலோ டூடிப் பேடைகள்
கூடிச் சேரு மணிபொழில்
புன்னைக் கன்னி களக்கரும்பு
புறம்ப யம்தொழப் போதுமே.

பொழிப்புரை :

அறியாமையையுடைய மனமே , ஒருவர் முற்பிறப்பிற் செய்த வினை , இப்பிறப்பில் வந்து அவரைச் சூழ்ந்து கொள்ளும் என்பது உண்மையாதலின் , அங்ஙனம் வந்து சூழ்வதற்கு முன்பே , எமக்கும் பிறர்க்கும் தந்தையாகிய சிவபெருமானது ஊராகிய , அன்னப் பேடைகள் , அவற்றின் சேவல்களோடு முன்னே ஊடல் கொண்டு , பின்பு கூடலைச் செய்து வாழ்கின்ற அழகிய சோலைகளில் உள்ள இளைய புன்னை மரங்கள் கழிக்கரையில் நின்று மணம் வீசுகின்ற திருப்புறம் பயத்தை வணங்கச் செல்வோம் ; என்னை நீ கலங்கச் செய்யாது புறப்படு .

குறிப்புரை :

` கன்னிப் புன்னை ` என மாற்றியுரைக்க . பெண் மக்களுள் மணமாகாத இளம் பருவத்தாளைக் குறிப்பதாகிய , ` கன்னி ` என்னும் சொல்லால் , புன்னை முதலியவற்றைக் குறித்தல் உயர்வு பற்றிய பான்மை வழக்கு . ` கழி ` என்றது , கழிபோல நீர் வற்றாது ஓடும் வாய்க்கால்களை . ` புன்னைக் கன்னிகழிக்கணாறும் ` என்று ஒரு பாடம் காணப்படுகின்றது .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

மலமெ லாமறும் இம்மை யேமறு
மைக்கும் வல்வினை சார்கிலா
சலமெ லாமொழி நெஞ்ச மேஎங்கள்
சங்க ரன்வந்து தங்குமூர்
கலமெ லாங்கடல் மண்டு காவிரி
நங்கை யாடிய கங்கைநீர்
புலமெ லாமண்டிப் பொன்வி ளைக்கும்
புறம்ப யந்தொழப் போதுமே.

பொழிப்புரை :

மனமே , இப்பிறப்பிற்றானே மலங்கள் யாவும் நீங்கும் ; மறு பிறப்பிற்கு வாயிலாக வலிய வினைகள் வந்து அடைய மாட்டா ; ஆதலின் , நீ துன்பத்தை விட்டொழி ; எங்கள் சங்கரன் வந்து தங்கியிருக்கும் ஊராகிய , காவிரிநதி என்கின்ற நங்கை முழுக ஓடுகின்ற , கடலிற் காணப்படுவது போல நாவாய்கள் மிகுந்து காணப்படுகின்ற கங்கைநதியின் நீர் போலும் நீர் , வயல்களிலெல்லாம் மிகப் பாய்ந்து பொன் போலும் செந்நெற்களை விளைவிக்கின்ற திருப்புறம் பயத்தை வணங்கச் செல்வோம் .

குறிப்புரை :

` காவிரி நங்கை ஆடிய , கலமெலாம் கடல் மண்டு கங்கைநீர் ` எனக் கூட்டுக . காவிரி நதியில் கரைகடந்து பெருகும் வெள்ளத்தை அந்நதியாகிய நங்கை முழுகிய நீராக அணிந்துரைத்தார் . ` கங்கை ` என்றது , ஆகுபெயராய் அதன் நீரை உணர்த்திற்று . ` பொன் ` உவமையாகுபெயர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

பண்ட ரீயன செய்த தீமையும்
பாவ மும்பறை யும்படி
கண்ட ரீயன கேட்டி யேற்கவ
லாதெ ழுமட நெஞ்சமே
தொண்ட ரீயன பாடித் துள்ளிநின்
றாடி வானவர் தாந்தொழும்
புண்ட ரீகம லரும் பொய்கைப்
புறம்ப யந்தொழப் போதுமே.

பொழிப்புரை :

அறியாமையையுடைய மனமே , முற்பிறப்பில் நீக்குதற்கு அரியனவாகச் செய்த தீய செயல்களின் பழக்கமும் , அச் செயல்களால் வந்த பாவமும் விரைய நீங்கும்படி நான் கண்ட அரிய வழிகளை நீ கேட்டு நடப்பதாயின் , தேவர்கள் அரிய பல தொண்டுகளைச் செய்து . பாடியும் , குதித்து நின்று ஆடியும் தொழுகின்ற , தாமரை மலர்கள் மலர்கின்ற பொய்கைகளை யுடைய திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ; கவலையுறாமல் புறப்படு .

குறிப்புரை :

` பண்டரியன ` என்றாற்போல நீட்டல் இன்றி ஓதுவன பாடம் அல்ல என்பது , ` புண்டரீகம் ` என்றதனானே விளங்கும் . ` கண்ட ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . ` தொண்டு அரியன ` என்றவிடத்து . ` செய்து ` என்பது வருவிக்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

துஞ்சி யும்பிறந் துஞ்சி றந்துந்
துயக்க றாத மயக்கிவை
அஞ்சி யூரன் திருப்பு றம்பயத்
தப்ப னைத்தமிழ்ச் சீரினால்
நெஞ்சி னாலே புறம்ப யந்தொழு
துய்து மென்று நினைத்தன
வஞ்சி யாதுரை செய்ய வல்லவர்
வல்ல வானுல காள்வரே.

பொழிப்புரை :

இறந்தும் , பின்பு பிறந்தும் , அதன் பின் வளர்ந்தும் சுழலுதல் நீங்காத மயக்கத் தொழிலாகிய இவைகளுக்கு அஞ்சி , நம்பியாரூரன் , ` திருப்புறம்பயத்தை வணங்கி உய்வோம் ` என்று நெஞ்சினாலே நினைத்து , ஆங்கிருக்கின்ற தன் தந்தையைத் தமிழ்ச் சீர்களால் பாடிய இப்பாடல்களைக் கரவில்லாது பாட வல்லவர்கள் , அவைகளை நீக்கவல்ல வானுலகத்தை ஆள்வார்கள் .

குறிப்புரை :

துயக்கு - கலக்கம் ; அஃது அதனைச் செய்கின்ற சுழற்சியைக் குறித்தது . மயக்கமாவது , துன்பத்தை இன்பம் எனக் கருதுதல் . வஞ்சித்தலாவது , இறத்தல் முதலியவற்றிற்கு அஞ்சாது , அஞ்சினார்போலக் காட்டுதல் . மயக்கினை நீக்கவல்ல வானுலகு , சிவலோகம் .
சிற்பி