திருவெதிர்கொள்பாடி


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

மத்த யானை யேறி மன்னர்
சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆரு மில்லை
சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி
யென்ப தடைவோமே.

பொழிப்புரை :

மதத்தையுடைய யானையின்மீது ஏறி சிற்றரசர்கள் புடைசூழ உலாவருகின்ற பேரரசர்களே , நீவிர் இறந்தால் , அதுபோது உம்மோடு துணையாய் வருவார் இவர்களுள் ஒருவரும் இலர் ; இறைவன் ஒருவனே அத்தகையனாய் உளன் ; இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள் . அவ்வாறு வைத்த மனத்தைப் பின் அந்நிலையினின்றும் வேறுபடுத்தி , மீள , இவ் வாழ்க்கையை உறுதியதாக நினைக்க வேண்டா . என் நெஞ்சீரே , நீரும் வாரும் ; அவர்களுடன் , யாவர்க்கும் தந்தையாராகிய இறைவரது திருக்கோயிலை , ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் .

குறிப்புரை :

தம் நெஞ்சிற்கு அறிவுறுத்தப் புகுந்தார் , பேரருள் காரணமாக , தலைவராகிய அரசர்க்கும் அறிவுறுத்தார் . ` மத்தயானை ` என்றதில் தகரமெய் , விரித்தல் . ` ஆரும் இல்லை ` என்றது , ` இறைவன் ஒருவனே உளன் ` என்னும் குறிப்பினது . ` செத்தபோதேல் ` எனவும் பாடம் ஓதுப . இழித்தற் குறிப்பால் , நெஞ்சினை உயர்திணையாக விளித்தருளினார் . இது வருகின்ற திருப்பாடல்களிலும் ஒக்கும் . ` வம்மின் ` என்றது , ஏனைய திருப்பாடல்களிலும் இயைய அருளிய தாம் . ` என்பது ` என்புழி ஏழாவது விரிக்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

தோற்ற முண்டேல் மரண முண்டு
துயர மனைவாழ்க்கை
மாற்ற முண்டேல் வஞ்ச முண்டு
நெஞ்ச மனத்தீரே
நீற்றர் ஏற்றர் நீல கண்டர்
நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.

பொழிப்புரை :

நினைத்தற் றன்மையை யுடைய நெஞ்சீரே , யாவர்க்கும் , பிறப்பு உளதாயின் , இறப்பும் ஒருதலையாக உண்டு ; அவற்றிற்கு இடையே உள்ள இல்வாழ்க்கையும் துன்பம் தருவதே . அவ்வாழ்க்கையின் பொருட்டுச் சொல்லப்படும் சொல் உளதாயின் . அதன்கண் பெரும்பாலும் வஞ்சனை உளதாவதேயாம் . அதனால் , அவைகளின் நீங்குதற் பொருட்டு , வெண்ணீற்றை யணிந்தவரும் , இடப வாகனத்தை உடையவரும் , மிக்க நீரை நீண்ட சடையிலே தாங்கியவரும் ஆகிய இறைவரது திருக்கோயிலை , ` திருஎதிர்கொள் பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .

குறிப்புரை :

` மனம் ` என்றது , நினைத்தற் றன்மையை விதந்தருளியவாறு . குடிப்பிறப்பும் , சால்பும் உடையார் சிலரேயாக , அனையரல்லா தாரே உலகத்துப் பலராதலானும் , அவர் , ` நகை , ஈகை , இன்சொல் , இகழாமை ` ( குறள் - 953.) என்பனவும் ` அன்பு , நாண் , ஒப்புரவு , கண்ணோட்டம் , வாய்மை ` ( குறள் - 983.) என்பனவும் இன்றியே வாழ்தலானும் , ` மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு ` என்று அருளிச் செய்தார் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

செடிகொள் ஆக்கை சென்று சென்று
தேய்ந்தொல்லை வீழாமுன்
வடிகொள் கண்ணார் வஞ்ச னையுட்
பட்டு மயங்காதே
கொடிகொ ளேற்றர் வெள்ளை நீற்றர்
கோவண ஆடையுடை
அடிகள் கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.

பொழிப்புரை :

நெஞ்சீரே , துன்பத்தைக் கொண்ட உடம்பானது , உலகியலில் உழன்று உழன்று மெலிந்து , விரைய வீழ்ந்தொழியாத முன்னே , மாவடுவின் வடிவைக் கொண்ட கண்களையுடைய மாதரது மயக்கத்திற் பட்டு மயங்காது , தம் கொடி தன்னிடத்துப் பொருந்தக் கொண்ட இடபத்தை யுடையவரும் , வெண்மையான நீற்றை அணிந்த வரும் , கோவணமாக உடுத்த ஆடையை உடைய தலைவரும் ஆகிய இறைவரது திருக்கோயிலை , ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .

குறிப்புரை :

` வஞ்சனை ` என்றது , இளமை , அன்பு முதலியவற்றது நிலையாமையை . ஆடையைக் கோவணமாக உடுத்தலாவது , கீழ்வாங்கிக் கட்டுதல் . ஈண்டும் நெஞ்சிற்கு அறிவுறுத்தலே திருவுள்ளமாகலின் , அவ்வாறு உரைக்கப்பட்டது . பிற திருப்பாடல்களிலும் இவ்வாறுரைப்பன அறிந்துகொள்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர்
வஞ்ச மனத்தீரே
யாவ ராலு மிகழப் பட்டிங்
கல்லலில் வீழாதே
மூவ ராயும் இருவ ராயும்
முதல்வன் அவனேயாம்
தேவர் கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.

பொழிப்புரை :

வஞ்சனையை யுடைய நெஞ்சீரே , நமக்கு உட்பட்டவராயே ஐவர் பகைவர் வாழ்வர் ; அதனால் , அவரது தீமையால் யாவராலும் இகழப்படும் நிலையை எய்தித் துன்பத்தில் வீழாது , தாமே மும்மூர்த்திகளாயும் , தமது ஆணை வழியால் மாலும் அயனுமாயும் , எவ்வாற்றானும் உலகிற்கு அவரே முதல்வராகும் முழுமுதல்வராகிய இறைவரது திருக்கோயிலை , ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .

குறிப்புரை :

கண்டீர் , முன்னிலை யசை . ` ஐவர் ` என்றது , ஐம்புல ஆசையை . அஃது ஒன்றாயினும் , புலன் வகையால் , ` ஐந்து , எனப்படும் , ` வஞ்சம் ` என்றது , தம்வழி நில்லாது அறைபோதலை . ` சிவபிரான் , சுத்த மாயையைத் தொழிற்படுத்துமிடத்துத் தானே , ` அயன் ` மால் , உருத்திரன் ` என்னும் மூன்று நிலைகளையும் உடையவனாய் நிற்பன் ` என்பதும் , அசுத்த மாயையின் கீழ் உள்ள பிரகிருதி மாயையைத் தொழிற்படுத்துமிடத்து , அத்தொழிலைப் பிறர்மாட்டு வைக்கும் ஆணையாற்றால் , அந்நிலையைப் பெறும் , மூவராயும் நிற்பன் என்பதும் சிவாகம நூல் துணிபு . எனினும் , பிரகிருதி மாயையில் நின்று முத்தொழிலைச் செய்யும் மூவருள் உருத்திரன் , ஏனை இருவர் போலச் சிவபிரானை மறந்து , தானே முதல்வன் என மயங்கித் தருக்குதல் இன்மையின் , அவனை வேற்றுமைப்படுத்து ஓதுதல் திருமுறைகளுட் சிறுபான்மையேயாம் . அவ்வாற்றான் ஈண்டும் , முன்னர் , ` மூவராயும் ` என்றும் , பின்னர் , ` இருவராயும் ` என்றும் அருளிச் செய்தார் . ` முதல்வன் `, ` அவன் ` என்பன , பன்மை யொருமை மயக்கங்கள் . ` முதல்வர் அவரேயாம் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` தேவர் ` என்றது . ஈண்டு , ` முழுமுதற் கடவுள் ` என்னும் பொருளது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

அரித்து நம்மேல் ஐவர் வந்திங்
காறலைப்பான் பொருட்டால்
சிரித்த பல்வாய் வெண்டலை போய்
ஊர்ப்புறஞ் சேராமுன்
வரிக்கொ டுத்தி வாள ரக்கர்
வஞ்சமதில் மூன்றும்
எரித்த வில்லி எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.

பொழிப்புரை :

நெஞ்சீரே , ஐவர் ஆறலை கள்வர் நம்மேல் வந்து துன்புறுத்தி நன்னெறியின் இடையே அலைத்தலால் வாணாள் வீணாளாய்க் கழிய , மகிழ்ச்சியாற் சிரித்த பல்லினை உடைய வாய் , வெண்டலையாய்ப் போய் ஊர்ப்புறத்திற் சேராத முன்பே , அழகினைக் கொண்ட படப்புள்ளிகளையுடைய பாம்பை அணிந்த , கொடிய அசுரரது பகைமை தங்கிய மதில்கள் மூன்றினையும் எரித்த வில்லை யுடைய பெருமானது திருக்கோயிலை , ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .

குறிப்புரை :

` அலைப்பான் ` என்பது , தொழிற்பெயர்ப் பொருள தாயும் , ` பொருட்டு ` என்றது , ` காரணம் ` என்னும் பொருளதாயும் நின்றன . வரி - அழகு . துத்தி - பாம்பின் படப்பொறி ; அஃது இங்கு இரு மடியாகுபெயராய் , பாம்பையே உணர்த்திற்று . ` வரிக்கொள் ` என்றதில் ககர மெய் , விரித்தல் . அசுரர் கொண்ட பகைமை , அவரது மதில் மேல் ஏற்றப்பட்டது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர்
பொத்தடைப் பான்பொருட்டால்
மையல் கொண்டீர் எம்மொ டாடி
நீரும் மனத்தீரே
நைய வேண்டா இம்மை யேத்த
அம்மை நமக்கருளும்
ஐயர் கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.

பொழிப்புரை :

நெஞ்சீரே , நம் இல்வாழ்க்கையை ஆளுதலுடைய சுற்றத்தார் , நம்மீது நிலையற்ற அன்புடையரே ; அதனை நினையாது , அவர்கள் குறையை முடித்தற் பொருட்டு நீரும் எம்மொடு கூடித் திரிந்து , மயக்கத்தையுடையீராயினீர் ; இனி , அவ்வாற்றால் துன்புறுதல் வேண்டா ; இப்பிறப்பில் நாம் வழிபட்டிருக்க , வருகின்ற பிறப்பில் வந்து நமக்கு அருள் பண்ணும் நம் பெருமானது திருக்கோயிலை , ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .

குறிப்புரை :

கண்டீர் , முன்னிலை யசை . பொத்து - பொத்தல் ; பொள்ளல் ; என்றது , குறையை . ` அவர் பொத்து ` என எடுத்துக் கொண்டு உரைக்க . ` எம்மொடாடி மையல்கொண்டீர் ` என்றாராயினும் , ` எம்மொடு மையல் கொண்டு ஆடினீர் ` என்பது திருவுள்ளம் என்க . உயிர் எந்நிலையில் நின்றது . உள்ளமும் அந்நிலையதாம் ஆதலின் , இவ்வாறு அருளப்பட்டது . இவ்வுண்மையைச் சிவப்பிரகாசத்தின் எழுபதாஞ் செய்யுளால் அறிக . ` நீரும் ` என்னும் உம்மை , இறந்தது தழுவிற்று . ` அம்மை நமக்கருளும் ஐயர் ` என்றது , ஏனையோர் அது மாட்டார் என்பது உணர்த்தற் பொருட்டு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

கூச னீக்கிக் குற்றம் நீக்கிச்
செற்ற மனம்நீக்கி
வாச மல்கு குழலி னார்கள்
வஞ்ச மனைவாழ்க்கை
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி
என்பணிந் தேறேறும்
ஈசர் கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.

பொழிப்புரை :

நெஞ்சே , கும்பிட்டுக் கூத்தாடக் கூசுதலை ஒழித்து , காமம் வெகுளி முதலிய குற்றங்களை அகற்றி , யாரிடத்தும் பகை கொள்ளுதலைத் தவிர்த்து , மணம் நிறைந்த கூந்தலையுடைய மகளிரது , வஞ்சனையையுடைய மனைவாழ்க்கையில் உள்ள ஆசையைத் துறந்து எலும்பை அணிதலோடு , விடையை ஊரும் இறைவரது திருக்கோயிலை அவரிடத்து அன்பு வைத்து . ` திரு எதிர் கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; அதுவே செயற்பாலது ; வா .

குறிப்புரை :

` கூசம் நீக்கி ` என்பதும் பாடம் . ` மனம் ` என்றது அண்மை விளி . ` குழலினார்களது மனைவாழ்க்கை ` என்க . மகளிர் இல்லையேல் இல்லையாதல் பற்றி , மனைவாழ்க்கையை அவருடைய தாக்கி யருளினார் . வஞ்சனையாவது , பிழைத்துப் போக வொட்டாது தன்னிடத்தே அகப்பட்டுக் கிடக்குமாறு தளைத்து நிற்றல் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

இன்ப முண்டேல் துன்ப முண்டு
ஏழை மனைவாழ்க்கை
முன்பு சொன்னால் மோழை மையாம்
முட்டை மனத்தீரே
அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை
யடிகளடி சேரார்
என்பர் கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.

பொழிப்புரை :

பொறியொன்றும் இல்லாத முட்டைபோலும் நெஞ்சீரே , அறியாமையால் வரும் மனை வாழ்க்கையில் இன்பம் உள்ளதுபோலவே துன்பமும் உளதாதல் கண்கூடு ; ` அழகிய கொன்றை மாலையை அணிந்த இறைவரது திருவடிகளை , அவற்றிற்கு அன்பராய் உள்ளவரல்லது அடையமாட்டார் ` என்று , அறிந்தோர் கூறுவர் ; இவற்றை முன்பு உமக்குச் சொன்னால் நீர் உணரமாட்டாமையின் , அறியாமையாய் முடியும் ; ஆதலாற் சொன்னோமில்லை . இனி மனை வாழ்க்கையைக் கைவிட்டு , இறைவரது திருக்கோயிலை , ` திருஎதிர் கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .

குறிப்புரை :

` இன்பம் உண்டேல் ` என்ற , ` செயின் ` என்னும் எச்சம் , ` நீரின் றமையா துலகெனின் ` ( குறள் -20.) என்பதிற்போலத் தெளிவின்கண் வந்தது . ` உண்டு ஏழை ` என்புழிக் குற்றியலுகரம் கெடாது நின்றது . ` முன்பு ` என்றது , இறைவனால் ஆட்கொள்ளப்படாத காலத்தை . மோழை புரையாகலின் , மோழைமை அறிவின்மை யாயிற்று ; ` போத்தறார் புல்லறிவினார் ` ( நாலடி -351.) என , அறி வின்மை , ` பொத்து ` எனப்படுதல் காண்க . ` முன்பு சொன்ன மோழை மையான் ` எனவும் பாடம் ஓதுவர் . பின்னர் , ` என்பர் ` என உரை யளவையைக் கூறினமையால் , முன்னர்க் காட்சியளவை கூறுதல் பெறப்பட்டது . ` கொன்றையடிகள் ` என முன்னே வந்தமையின் . ` கோயில் ` என வாளாதே அருளிப் போயினார் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

தந்தை யாருந் தவ்வை யாரு
மெட்டனைச் சார்வாகார்
வந்து நம்மோ டுள்ள ளாவி
வான நெறிகாட்டும்
சிந்தை யீரே னெஞ்சி னீரே
திகழ்மதி யஞ்சூடும்
எந்தை கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.

பொழிப்புரை :

நெஞ்சீரே , தந்தையாரும் தமக்கையாரும் நமக்கு எள்ளளவும் துணையாகமாட்டார் ; ஆதலின் , நீர் எம்பால் வந்து உள்ளாய்க் கலந்து உசாவி , எமக்கு வீட்டு நெறியைக் காட்டும் நினைவுடையீராயின் , விளங்குகின்ற திங்களைச் சூடும் நம் தந்தை கோயிலை , ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; வாரீர் .

குறிப்புரை :

` தந்தையாரும் தவ்வையாரும் ` என்றது அணுக்கராய உறவினர்க்குச் சிலரை எடுத்தோதியவாறு . ` நாம் ` என்பது , ` யாம் ` என்னும் பொருளிலும் வருதல் உண்டென்க . ` சிந்தையீரே ` என்பது பிழைபட்ட பாடம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

குருதி சோர ஆனையின் தோல்
கொண்ட குழற்சடையன்
மருது கீறி ஊடு போன
மாலய னும்அறியாச்
சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச்
சோதியெம் மாதியான்
கருது கோயில் எதிர்கொள் பாடி
யென்ப தடைவோமே.

பொழிப்புரை :

நெஞ்சீரே , யானையின் தோலை உதிரம் ஒழுகப் போர்த்த , குழல்போலும் சடையை உடையவனும் , இருமருத மரங்களை முரித்து , அவற்றின் இடையே தவழ்ந்த மாயோனும் , பிரமனும் காணாத , வேதத்தை உணர்ந்தோர்க்கும் சொல்ல ஒண்ணாத ஒளி வடிவினனும் , எங்கள் முதல்வனும் ஆகிய சிவபிரான் தன் இடமாக விரும்புகின்ற திருக்கோயிலை , ` திருஎதிர்கொள்பாடி ` எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம் ; அதுவே செயற்பாலது ; வாரீர் .

குறிப்புரை :

குழல் , மகளிர் கூந்தலை முடிக்கும் வகைகளுள் ஒன்று . ` மாயோன் கண்ணனாய்ப் பிறந்து ஆயர் பாடியில் வளருங்கால் , தன் தாய் தன்னைப் பிணித்திருந்த உரலுடனே ` தவழ்ந்து , துருவாச முனிவரது சாபத்தால் , ` நளன் கூபரன் ` என்னும் இருவர்தம் பிறப்பு வேறு பட்டு ஆங்கு வந்து தோன்றி வளர்ந்திருந்த இருமருத மரங்களின் இடையே சென்று அவற்றை முரிக்க , அவர் அச்சாபம் நீங்கினர் ` என்பது புராணம் , ` அறியா , ஒண்ணா ` என்னும் பெயரெச்ச மறைகள் இரண்டும் , ` சோதி ` என்றதனோடு தனித் தனி முடிந்தன .

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

முத்து நீற்றுப் பவள மேனிச்
செஞ்சடை யானுறையும்
பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப்
பரமனை யேபணியச்
சித்தம் வைத்த தொண்டர் தொண்டன்
சடைய னவன்சிறுவன்
பத்தன் ஊரன் பாடல் வல்லார்
பாதம் பணிவாரே.

பொழிப்புரை :

முத்துப்போலும் வெள்ளிய நீற்றையும் , பவளம் போலும் செய்ய திருமேனியையும் , சிவந்த சடையையும் உடைய இறைவன் வாழும் , அடியவர் மனம் பிணிப்புண்ணுதலையுடைய திருஎதிர்கொள்பாடியில் உள்ள பெருமானை வணங்கவே விரும்பின , சிவனடியானும் , சிவனடியார்க்கு அடியானும் , ` சடையன் ` என் பானுக்கு மகனும் ஆகிய நம்பியாரூரனது இப்பாடல்களை நன்கு பாடவல்லவர் , அப்பெருமானது திருவடியை அடைந்து வணங்கி யிருப்பர் .

குறிப்புரை :

எதிர்கொள்பாடியின் சிறப்புணர்த்துகின்றாராதலின் , ` செஞ்சடையான் ` என வேறொருவன்போல , அருளினார் . ஆதலின் , ` எதிர்கொள்பாடியில் உறையும் செஞ்சடையானாகிய பரமன் ` என்பதே கருத்தென்க . ` பாதம் ` என்புழி , ` அவன் ` என்பது எஞ்சி நின்றது . ஏகாரம் , பிரித்துக் கூட்டப்பட்டது .
சிற்பி