திருக்கஞ்சனூர்


பண் :

பாடல் எண் : 1

மூவிலைநற் சூலம்வலன் ஏந்தி னானை
மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை
நாவலனை நரைவிடையொன் றேறு வானை
நால்வேதம் ஆறங்க மாயி னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை
அயன்திருமா லானானை அனலோன் போற்றுங்
காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பொழிப்புரை :

மூவிலை கொண்ட நல்ல சூலத்தை வலக்கையில் ஏந்தினவனும் , சூரியன் , சந்திரன் , அக்கினி என்னும் முச்சுடர்களாகிய கண்ணினனும் அழகிய தோற்றத்தினனும் , நாவலனும் , வெள்ளிய இடபம் ஒன்றை ஊர்பவனும் , வேதம் நான்கும் அங்கம் ஆறும் ஆயினவனும் , பசு தரும் பஞ்சகவ்வியத்தை விரும்பியவனும் , தேவர்களுக்குத் தலைவனும் , பிரமனும் திருமாலும் ஆனவனும் , அக்கினியால் போற்றப்படும் காவலனும் , கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல்வரும் பிறப்பை நீங்கினேன் .

குறிப்புரை :

மூன்று சுடர்க் கண்ணான் - ` சூரியன் , சந்திரன் , அக்கினி ` என்னும் முச்சுடர்களாகிய கண்களை உடையவன் . நாவலன் - புலவன் ; என்றது , வேதமும் தமிழும் உரைத்தவனாதல் பற்றி . தருமிக்குப் பொற்கிழியளித்த வரலாறும் நினைக்கத்தக்கது . நரை - வெண்மை . அயன் திருமால் ஆதல் , சுத்தமாயையில் நேரேயும் , பிரகிருதி மாயையில் பிறரை அதிட்டித்தும் அவ்வாறு நிற்றலாம் . இத்தலம் அக்கினி தேவன் வழிபட்ட தலமாதல் பற்றி , ` அனலோன் போற்றும் காவலன் ` என்றருளினார் ; இங்கு இறைவர் , ` அக்கினீச்சுரர் ` எனவும் , தீர்த்தம் , ` அக்கினி தீர்த்தம் ` என்றும் சொல்லப்படுதல் அறியத்தக்கது . ` ஆண்ட ` என்றது , ` ஆட்சியாகக்கொண்ட ` என்னும் பொருளது .

பண் :

பாடல் எண் : 2

தலையேந்து கையானை யென்பார்த் தானைச்
சவந்தாங்கு தோளானைச் சாம்ப லானைக்
குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக்
கோணாக மசைத்தானைக் குலமாங் கைலை
மலையானை மற்றொப்பா ரில்லா தானை
மதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங்
கலையானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பொழிப்புரை :

பிரமகபாலத்தை ஏந்திய கையினனும் , எலும்பை மாலையாகக் கோத்து அணிந்தவனும் , பிரமவிட்டுணுக்களுடைய எலும்புக்கூடுகளைத் தாங்கும் தோளினனும் , வெண்ணீற்றுப் பூச்சினனும் , கொத்தாய்ப் பொருந்திய நறிய கொன்றை மலர்களை முடிமேல் கொண்டவனும் , கொடுமை வல்ல நாகத்தை உடை மேல் கட்டியவனும் , மேன்மை மிக்க கயிலை மலையவனும் , தனக்குவமை யில்லாதவனும் , சந்திரனும் , சூரியனும் தேவர்களும் திருமாலும் போற்றும் உருவத்திருமேனி உடையவனும் , கஞ்சனூரை ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும்பிறப்பை நீங்கினேன் .

குறிப்புரை :

தலை - பிரமகபாலம் . என்பு ஆர்த்தான் - எலும்பை மாலையாகக் கோத்து அணிந்தான் . ` சவம் ` என்றது , பிரமவிட்டுணுக்களது எலும்புக் கூட்டினை ; ` கங்காளம் ` எனப்படுவன இவையே . இவை , அவ்விருவரும் சேர இறக்க வரும் நாளில் ஏற்கப்படுவன , நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ கங்காளம் ஆமாகேள் காலாந் தரத்திருவர் தங்காலம் செய்யத் தரித்தனன்காண் சாழலோ . ( தி .8 திருவா . திருச்சா . 11.) என்றருளிச் செய்ததும் இவைகளையே என்க . குலையேறு - கொத்தாய்ப் பொருந்திய . குலம் - மேன்மை . கலையான் - உருவத் திருமேனியை உடையவன் .

பண் :

பாடல் எண் : 3

தொண்டர்குழாம் தொழுதேத்த அருள்செய் வானைச்
சுடர்மழுவாட் படையானைச் சுழிவான் கங்கைத்
தெண்டிரைகள் பொருதிழிசெஞ் சடையி னானைச்
செக்கர்வா னொளியானைச் சேரா தெண்ணிப்
பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம்
பாழ்படுத்துத் தலையறுத்துப் பற்கண் கொண்ட
கண்டகனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பொழிப்புரை :

தொண்டர்கூட்டமாய்த் திரண்டு தொழுது புகழ அவர்க்கு அருள்செய்பவனும் , ஒளிரும் மழுவாயுதத்தை உடையவனும் , சுழியையுடையதும் , தெளிந்த திரைகளால் மோதி இழிவதும் ஆகிய ஆகாய கங்கையைத் தாங்கிய சடையினனும் , செவ்வானம் போன்ற ஒளியினனும் , தன்னை அடையாமல் பண்டு அமரர்கள் கூடி ஆராய்ந்து மேற்கொண்டு விரும்பிச் செய்த தக்கனுடைய வேள்வி முழுதும் பாழ் செய்து தக்கனையும் எச்சனையும் தலையறுத்துச் சூரியனைப் பல்தகர்த்துப் பகனைக் கண் பறித்துக் கொண்ட கொடியவனும் , கஞ்சனூரை ஆண்டகோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

குறிப்புரை :

` சுழி ` என்பது , ` கங்கை ` என்பதனோடு இயையும் , அதனை , வேற்றுமைத் தொகையாகவேனும் , வினைத்தொகையாகவேனும் இயைத்து , ` சுழியையுடைய கங்கை ` என்றாதல் , ` சுழிக்கின்ற கங்கை ` என்றாதல் உரைக்க . பொருது - மோதி . ` இழிசடை ` என்பது , ` புக்க அகம் ` என்றல்போல இடப் பெயர்கொண்ட பெயரெச்சமுடிபின் பொருள்மேல் தொக்க இறந்தகால வினைத்தொகை . இனி , ` பழம் உதிர்ந்த கோடு ` என்றல்போல , நீங்கற் பொருட்பெயர்கொண்ட பொருண்மைத்தாய வினைத்தொகையாகக்கொண்டு , ` பகீரதன் பொருட்டுப் பின்னர் கங்கை நிலத்தில் இழிந்த சடை ` என்றுரைப்பினும் ஆம் . செக்கர்வான் - செவ்வானம் . சேராது - தன்னை ( சிவபிரானை ) அடையாமல் . எண்ணி - ( அமரர்கூடி ) ஆராய்ந்து . கொண்டு உகந்த - மேற்கொண்டு விரும்பிச்செய்த . இது தக்கன் வேள்வியே ஆயினும் , அமரர் பலரும் உடம்பட்டுச் செய்தமையின் இவ்வாறு அருளினார் . தலையறுக்கப்பட்ட தலைவர் , தக்கனும் எச்சனும் ; பல் தகர்க்கப் பட்டவன் சூரியன் ; கண்பறிக்கப்பட்டவன் பகன் . கண்டகன் - கொடியவன் ; என்றது , இவ்வாறு அவர்களைக் கண்ணோட்டம் இன்றி ஒறுத்தமைபற்றி இகழ்வார்போல இவ்வாறு அருளிச்செய்தாராயினும் , இவ்வொறுப்புக்கள் அவர்கள் பிற்றைஞான்று நெடுங்காலம் கரையேறாது புக்கழுந்தும் துன்பக் குழியினைத் தீர்த்த பெருங் கருணைச் செயலாதலின் , ` அதனைச் சிறிதும் நெகிழவிடாது செய்தவர் ` எனப் புகழ்ந்ததேயாம் என்க .

பண் :

பாடல் எண் : 4

விண்ணவனை மேருவில்லா வுடையான் தன்னை
மெய்யாகிப் பொய்யாகி விதியா னானைப்
பெண்ணவனை ஆணவனைப் பித்தன்தன்னைப்
பிணமிடுகா டுடையானைப் பெருந்தக் கோனை
எண்ணவனை எண்டிசையுங் கீழும் மேலும்
இருவிசும்பும் இருநிலமு மாகித் தோன்றுங்
கண்ணவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பொழிப்புரை :

சிவலோகனாய், மேருமலையை வில்லாக உடையவனாய், ஞானியர்க்கு உண்மைப் பொருளாகி, உணர்வில்லார்க்கு இல்பொருள் ஆகி அறநெறியும் அருள்நெறியும் ஆனவனும், பெண் ஆண் ஆனவனும், பித்தனும், பிணத்தைப் புதைக்கும் இடுகாட்டை இடமாகக் கொண்டவனும், மேலான தகுதியினனும், எண்ணமானவனும், எட்டுத் திசைகளும் கீழும் மேலும் பெரிய ஆகாயமும் பரந்த நிலமும் ஆகித் தோன்றுபவனும், கண்போற் சிறந்தவனும், கஞ்சனூரை ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு, மேல் வரும் பிறப்பை நீங்கினேன்.

குறிப்புரை :

`விண்ணவன்` என்பதில் உள்ள விண், சிவ லோகத்தை குறிக்கும். `மேருவை வில்லாக உடையான்` என்க. மெய்யாதல் - உணர்வுடையோர்க்கு அநுபவப் பொருளாதல் . பொய்யாதல், உணர்விலார்க்கு இல்பொருள்போல உணரவாராதிருத்தல். விதி - நெறி; அஃது `அறநெறியும், அருள்நெறியும்` என இருவகைத்து என்க. பிணம் இடு காடு - பிணத்தைப் புதைக்கும் காடு. பெருந்தக்கோன் - மேலான தகுதியை உடையவன். எண் - கருத்து. கண்ணவன் - கண்போலச் சிறந்து நிற்பவன்.

பண் :

பாடல் எண் : 5

உருத்திரனை உமாபதியை உலகா னானை
உத்தமனை நித்திலத்தை ஒருவன் தன்னைப்
பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப்
பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற
நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொப் பானை
நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பொழிப்புரை :

உருத்திரனும் , உமாபதியும் , உலகு ஆள்பவனும் , உத்தமனும் , நித்திலம் அனையவனும் , ஒப்பற்றவனும் , மலையாய் விளங்குபவனும் , மயிர்க் கயிறாகிய பஞ்சவடிப்பூணூல் திகழ் மார்பினனும் , பகலும் , இரவும் , நீரும் , ஆகாயமும் , பரவிய நெருப்பும் ஆனவனும் , முத்தின்கொத்து ஒக்கத் திகழும் திருநீற்றுக் கீற்றினனும் , திருநீற்றைப் பூசிய மேனியை உடையவராய் , இடைவிடாது நினைக்கும் அன்பர்களின் மனத்தில் உறைபவனும் , கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

குறிப்புரை :

உருத்திரன் - ` உருத்திரன் ` என்னும் காரணக்குறியை உடையவன் . இதன் காரணமாவது , ` துன்பத்தை ஓட்டுபவன் ` என்பது . இதனை , ` இன்னலங் கடலுட் பட்டோர் யாரையும் எடுக்கும் நீரால் உன்னரும் பரம மூர்த்தி உருத்திர னெனும்பேர் பெற்றான் ` எனக் கந்தபுராணமும் ( ததீசிப்படலம் - 46.) ` இடும்பைநோய் , என்ப தோட்டும் இயல்பின் உருத்திரன் ` எனக் காஞ்சிப் புராணமும் ( பரசிராமீச்சரம் - 44.) இனிது விளக்கின . இனி , ` உருத்திரன் ` என்னும் பெயர் , ` ரோதனம் ( அழுதல் ) செய்தவன் ` என்னும் காரணத்தான் வந்தது என்பாரும் உளர் ; அஃது அப்பெயர் அக்கினி தேவனைக் குறிக்குமிடத்திலாம் என்றே உணர்வுடையோர் பகுத்துணர்ந்து கொள்வர் என்பதனையும் கந்தபுராணம் மேற்காட்டிய இடத்திலே . ` செந்தழ லென்ன நின்ற தேவனுக் குருத்தி ரப்பேர் வந்தது புகல்வன் கேட்டி வானவர் யாரும் ஈண்டி முந்தையில் அவுணர் தம்மை முனிந்திட முயன்று செல்ல அந்தமில் நிதியந் தன்னை அவ்வழி ஒருங்கு பெற்றார் ` ` பெற்றிடு நிதியம் எல்லாம் பீடிலாக் கனல்பால் வைத்துச் செற்றலர் தம்மேற் சென்று செருச்செய்து மீண்டு தேவர் உற்றுழி அதுகொ டாமல் ஓடலுந் தொடர்ந்து சூழ மற்றவன் கலுழ்த லாலே வந்தது மறையுங் கூறும் ` ` ஓதுமா மறைகள் தம்மில் உருத்திர னெனும்பேர் நாட்டி ஏதிலார் தம்மைச் சொற்ற தீசன்மேற் சாரா அந்த ஆதிநா யகனைச் சுட்டி அறைந்தவும் பிறர்மாட் டேறா மேதைசாலுணர்வின் ஆன்றோர்விகற்பம்ஈதுணர்வரன்றே ` எனத் தெரித்துக் காட்டியது . இங்ஙனமாகவும் , அக்கினிக்குச் சொன்ன காரணத்தையே சிவபிரான்மாட்டுக் கற்பித்துக் கூறுவார் , அதனால் அடைவது உய்தியில் குற்றம் அன்றி வேறு இன்று ; அன்றியும் , வேறு வேறு காரணத்தால் வேறு வேறு பொருளை உணர்த்தும் பல பொருள் ஒரு சொற்கள் அவ்வப்பொருளை உணர்த்துமிடத்து அவ்வக் காரணங்களையே கூறாது , ஒரு காரணத்தினையே யாண்டும் கூறுதல் புலமை நெறியும் ஆகாமை அறிக . எனவே , துன்பந் துடைக்கவல்லனாய காரணம் பற்றிச் சிவபிரான் , ` உருத்திரன் ` எனச் சிறந்தெடுத்துப் போற்றப்படுவன் என்பதனை உணர்த்தி யருளுவார் , ` உருத்திரனை ` என்று அருளிச்செய்த அருமை அறியற்பாலதாதலறிக . உமாபதி - உமைக்குத் தலைவன் . உத்தமன் - யாவரினும் மேலானவன் . ஒருவன் - ஒப்பற்றவன் . சிவபிரான் ஒருவனையே ` ஒருவன் ( ஏகன் )` என உபநிடதங்கள் கூறும் என்பது , பலவிடத்துங் காட்டப்பட்டது . ` ஒருவன் என்னும் ஒருவன் காண்க ` என்பது திருவாசகம் ( தி .8 திருவண் . 43.) பருப்பதம் - மலையாய் இருப்பவன் . பஞ்சவடி - மயிர்க் கயிறாகிய பூணூல் . வெளி - ஆகாயம் . நெருப்பு - நெருப்பாய் இருப்பவன் . நித்திலம் - முத்து . தொத்து - கொத்து ; இவ் உவமை , சிவபிரானது திருநீற்றுக் கோலத்தை விளக்க வந்தது . சிந்தைக் கருத்தவன் - மனத்தின்கண் கருதப்படும் பொருளாய் உள்ளவன் .

பண் :

பாடல் எண் : 6

ஏடேறு மலர்க்கொன்றை யரவு தும்பை
இளமதியம் எருக்குவா னிழிந்த கங்கை
சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச்
செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார் சிந்தைக்
கேடிலியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங்
காடவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பொழிப்புரை :

இதழ் செறிந்த கொன்றைமலர் , பாம்பு , தும்பைப்பூ , பிறைச்சந்திரன் , எருக்க மலர் , வானின்றிறங்கிய கங்கை ஆகியவைகளால் அழகு விளங்கிய சடையினனும் , தேவர்க்குத் தலைவனும் , பெரிய செம்பொன்மலை போன்றவனும் , தன்னை அடைந்தார் சிந்தையில் கேடின்றி இருப்பவனும் , கீழ்வேளூரிலிருந்து ஆளும் அரசனும் , மடவார்கைகளில் அணிந்துள்ள வளைகளைப் பொய்பேசிக் கவர்ந்து கொள்ளும் அதிசயிக்கத்தக்க திறனுடையவனும் , கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

குறிப்புரை :

ஏடு - இதழ் . வான் இழிந்த - ஆகாயத்தினின்றும் இறங்கிய . சேடு எறிந்த - அழகு விளங்கிய . செம்பொன்மால் வரையான் - செம்பொன்மலைபோன்றவன் . சேர்ந்தார் - தன்னை அடைந்தவர் ; ` அவரது சிந்தையில் கேடின்றி ( நீங்குதல் இன்றி ) இருப்பவன் ` என்க . கிறி - பொய் . ` மடவார் வளைகள் ` என இயையும் . பெய்வளை - அவர் தம் கைகளில் அணிந்துள்ள வளைகள் . இனி , பிச்சையோடு உடன் வீழ மடவார்கள் பெய்தவளைகளை மீள ஈயாமல் ` எம் கையில் வந்தது எமது ஆகலே வழக்கு ` ( பிச்சாடன நவமணி மாலை ) எனக் கொண்டு செல்லும் என்று உரைத்தலுமாம் . காடவன் - அதிசயிக்கத் தக்க திறலுடையவன் ; இது காடம் என்னும் ஆரியச் சொல்லினின்றும் பிறந்த பெயர் .

பண் :

பாடல் எண் : 7

நாரணனும் நான்முகனும் அறியா தானை
நால்வேதத் துருவானை நம்பி தன்னைப்
பாரிடங்கள் பணிசெய்யப் பலிகொண் டுண்ணும்
பால்வணனைத் தீவணனைப் பகலா னானை
வார்பொதியும் முலையாளோர் கூறன் தன்னை
மானிடங்கை யுடையானை மலிவார் கண்டங்
கார்பொதியுங் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பொழிப்புரை :

திருமாலும் , நான்முகனும் , அறியாதவனும் , வேதமந்திர உருவினனும் , ஆடவருட்சிறந்தவனும் , பூதங்கள் தான் ஏவிய பணிகளைச் செய்ய தான் பிச்சை ஏற்று உண்ணும் பால் நிறத்தவனும் , தீ நிறத்தவனும் , பகல் ஆனவனும் , கச்சணிந்த கொங்கை யாளை உடலின் ஒரு கூற்றாகக் கொண்டவனும் , மானை இடக்கையில் ஏந்தியவனும் , தேவர்கள் மகிழ்ச்சி நிறைவதற்குக் காரணமானவனாய் , கழுத்துக் கருநிறத்தால் மூடப்பட்டவனும் , கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

குறிப்புரை :

` வேதம் ` என்றது , அதன்கண் உள்ள மந்திரங்களை . பாரிடங்கள் - பூதங்கள் . பலி - பிச்சை . ` பால் வண்ணம் திருநீற்றாலும் , தீவண்ணம் இயல்பினாலும் உடையவன் ` என்க . ` மான் இடங்கை உடையன் ` என்க ; இதனுள் , ` இடக்கை ` என்பது இடங்கை என மெலிந்து நின்றது ; ` இடத்திற் கையில் ` என அடுக்காக்கி யுரைத்தலுமாம் . மலிவு ஆர்கண்டம் - ( தேவர்கள் ) மகிழ்ச்சி நிரம்புதற்கு ஏதுவாய மிடறு . கார் பொதியும் - கருமை நிறத்தால் மூடப்பட்ட .

பண் :

பாடல் எண் : 8

வானவனை வலிவலமும் மறைக்காட் டானை
மதிசூடும் பெருமானை மறையோன் தன்னை
ஏனவனை இமவான்றன் பேதை யோடும்
இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத்
தேனவனைத் தித்திக்கும் பெருமான் தன்னைத்
தீதிலா மறையோனைத் தேவர் போற்றுங்
கானவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பொழிப்புரை :

வானிடத்தவனும் , வலிவலமும் மறைக்காடும் உறைபவனும் , மதிசூடும் பெருமானும் , ஆதி அந்தணனும் , மற்றை வருணத்தினனும் , இமவான் மகள் பார்வதியோடும் இனிதிருந்து அருள்செய்யும் பெருமானும் , தன்னை ஏத்தி வணங்குவார்க்குத் தேன் போன்று தித்திப்பவனும் , தீது இல்லாமல் அவர்களைக் காத்தற் பொருட்டுக் காலம்பார்த்துக் கரந்து நிற்பவனும் , தேவராற் போற்றப்படும் வேட்டுவனும் கஞ்சனூராண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

குறிப்புரை :

` வலிவலமும் ` என்பதன்பின் , ` உடைய ` என்பது எஞ்சி நின்றது . ` மறையோன் ` என்றது , ` முதல் அந்தணன் ` என்றவாறு . ஏனவன் - அந்தணனேயன்றிப் பிறவருணத்தவனுமாய் இருப்பவன் ; என்றது , யாவரது ஒழுக்கத்தையும் தாங்கி நிற்பவன் என்றதாம் . பேதையோடும் இனி திருத்தல் - யாவர்க்கும் அம்மை யப்பனாய் வீற்றிருந்து அருள்செய்தல் . தேனவன் - தேனாய் இருப்பவன் . ` தித்திக்கும் பெருமான் ` என்றது , தேனவன் என்றதன் கருத்தை இனிது விளங்க அருளிச்செய்தது . மறையவன் - மறைதலை உடையவன் ; தோன்றாது கரந்து நிற்பவன் ; இக் கரவு . ஏனையோர் கரவு போலப் பிறரை அற்றம் பார்த்துக் கெடுத்தற்குக்கொள்ளும் கரவன்றி , பருவம் நோக்கி அருள் செய்தற்குக் கொள்ளும் கரவு , என்பார் ` தீதிலாமறையவனை ` என்று அருளிச் செய்தார் . கானவன் - வேட்டுவன் ; இஃது , அருச்சுனன் பொருட்டுக் கொண்ட கோலம் நோக்கி அருளிச்செய்தது . இப் பேரருள் தேவராலும் போற்றப் படுவது ஆகலின் , ` தேவர் போற்றும் கானவன் ` என்று அருளினார் ; வேடனாகி விசயன்முன் சென்ற பொழுது பதினெண் கணங்களும் சூழ்ந்து சென்றன என்னும் வரலாறு ஈண்டு நினைக்கத் தக்கது .

பண் :

பாடல் எண் : 9

நெருப்புருவத் திருமேனி வெண்ணீற் றானை
நினைப்பார்தம் நெஞ்சானை நிறைவா னானைத்
தருக்கழிய முயலகன்மேல் தாள்வைத் தானைச்
சலந்தரனைத் தடிந்தோனைத் தக்கோர் சிந்தை
விருப்பவனை விதியானை வெண்ணீற் றானை
விளங்கொளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றுங்
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பொழிப்புரை :

நெருப்புநிறமுடைய அழகிய திருமேனியில் வெண்ணீற்றை அணிந்தவனும் , நினைப்பவர் நெஞ்சில் நிலைத்து நிற்பவனும் , எங்கும் நிறைந்தவனும் , முயலகன்மேல் காலை ஊன்றி ஆடியவனும் , சலந்தரனைப் பிளந்திட்டவனும் , ஞானிகள் சிந்தையில் விரும்பி வாழ்பவனும் , வேதவிதியானவனும் , சிவாகமவிதியாய் விளங்குபவனும் , இயல்பாகவே விளங்கும் ஒளியாய் , மெய்ப் பொருளாய் , மேலோர்கள் போற்றும் கருத்தாய்த் திகழ்பவனும் , கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

குறிப்புரை :

` நெருப்புருவம்போலும் திருமேனியில் வெண்ணீற்றை அணிந்தவன் ` என்க . ` நெருப்புருவு திருமேனி ` என்பது பாடம் அன்று . நெஞ்சான் - நெஞ்சின்கண் உள்ளவன் . நிறைவு - எங்கும் நிறைந்திருத்தல் . முயலகன்மேல் கால்ஊன்றி ஆடியதும் , சலந்தராசுரனை அழித்ததும் ஆகிய வரலாறுகளை , கந்தபுராண த்துத் ததீசியுத்தரப் படலத்துட் காண்க . தக்கோர் - தகுதி பெற்றவர் ; தகுதி , ஞானம் , ` அதனை அடைந்தவரது விருப்பமாய் இருப்பவன் ` என்றது , ` அவர் இறைவனை அன்றிப் பிறிதொரு பொருளையும் விரும்பார் ` என்றபடி . ` வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் ` எனவும் , ( தி .8 திருவாசகம் . உயிருண்ணிப்பத்து -7.) ` உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும் குற்றாலத் தமர்ந்துறையும் கூத்தாஉன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே ` எனவும் , ( தி .8 திருவாசகம் . திருப்புலம்பல் -3) ` வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே ` எனவும் , ( தி .8 திருவாசகம் . குழைத்தபத்து -6.) ` கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல் அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர் விண்ணாளுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்கும் கண்ணாளா ஈதென் கருத்து ` எனவும் ( தி .11 அற்புதத் திருவந்தாதி -72) எழுந்த திருமொழிகள் இங்கு ஒருதலையாக உணரற்பாலன . ` விதி ` என்றது , வேதவிதியை எனவும் , இங்கு , ` வெண்ணீறு என்றது சிவாகமவிதியை ` எனவும் கொள்க . ` வெண்ணீறு ` என்றது , உபலக்கணத்தால் ஏனைய சிவநெறிச் சாதனங்களையும் கொள்ள நின்றது என்க . விளங்கொளி - இயல்பாகவே விளங்குகின்ற ஒளி , மெய் - மெய்ப்பொருள் ; தோற்ற ஒடுக்கங்கள் இல்லாத பொருள் ; இவையிரண்டும் ஆயினமையால் மிக்கோர்கள் போற்றுவராயினர் என்க . ` கருத்து ` என்றது , கொள்கையை ; எனவே , மிக்கோர்களால் போற்றிக் கொள்ளப்படும் பொருள் என்றதாயிற்று .

பண் :

பாடல் எண் : 10

மடலாழித் தாமரைஆ யிரத்தி லொன்று
மலர்க்கணிடந் திடுதலுமே மலிவான் கோலச்
சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானைத்
தும்பியுரி போர்த்தானைத் தோழன் விட்ட
அடலாழித் தேருடைய இலங்கைக் கோனை
அருவரைக்கீழ் அடர்த்தானை அருளார் கருணைக்
கடலானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

பொழிப்புரை :

இதழுடைய வட்டமான தாமரை மலரில் ஆயிரத்தில் ஒன்றாகத் தன் தாமரை மலர்போலும் கண்ணைப் பெயர்த்து இடுதலும் நிறைந்த பெரிய அழகினையும் ஒளியையும் உடைய சக்கராயுதத்தை நெடு மாலுக்கு அருள் செய்தவனும் , யானைத் தோலைப் போர்வையாகக் கொண்டவனும் , தன் நண்பன் குபேரன் தோற்றுக் கைவிட்ட வலிய சக்கரத்தையுடைய தேரினைத் தன் உடைமை ஆக்கிக்கொண்ட இலங்கைக்கோனை எடுத்தற்கரிய கயிலை மலைக்கீழ் வைத்து நெரித்தவனும் , பின் அவனுக்கு அருளுதலைப் பொருந்திய கருணைக் கடலானவனும் , கஞ்சனூர் ஆண்டகோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக்கண்டு , மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

குறிப்புரை :

மடல் - இதழ் . ஆழித் தாமரை - வட்டமாக மலர்ந்த தாமரை மலர் . ` ஒன்றாக ` என , ஆக்கம் வருவித்துரைக்க . மலர்க்கண் - மலர்போலும் கண் . இடந்து - பெயர்த்து . இடுதலும் - சாத்திய உடன் . ` மலி கோலம் ` என இயையும் ; ` நிறைந்த அழகு ` என்பது பொருள் . வான் - பெரிய . சுடர் ஆழி - ஒளியை உடைய சக்கரம் . திருமால் சிவபெருமானை நாள்தோறும ஆயிரந்தாமரை மலர்களால் ஆயிரம் திருப்பெயரைச் சொல்லி அருச்சித்து வருகையில் , ஒரு நாள் ஒருமலரை அப்பெருமான் மறைப்ப , அதற்கு ஈடாகத் தன் கண்களைப் பறித்துச் சாத்தியது கண்டு மகிழ்ந்து சக்கரத்தை ஈந்தருளினன் என்பது பழைய வரலாறு என்க . ` நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ் அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ ` என்ற திருவாசகமும் ( தி .8 திருச்சாழல் - 18.) காண்க . தும்பி - யானை . தோழன் - தன் ( சிவபெருமானுக்கு ) நண்பன் ; குபேரன் . ` விட்ட ` என்றது , ` தோல்வியால் கைவிட்ட ` என்றவாறு . தேர் , புட்பக விமானம் ; அது வானத்திற் செல்வதாயினும் , தரையினும் செல்லுமாகலின் அதன்பொருட்டு ஆழியை , ( சக்கரத்தை ) உடையதாயிற்று என்க . அருள் ஆர் கருணைக் கடலான் - ( அவனுக்கு ) அருளுதலைப் பொருந்திய கருணைக் கடலாய் உள்ளவன் ; ` பொருள்மன்ன னைப்பற்றிப் புட்பகங் கொண்ட மருள்மன்ன னைஎற்றி வாளுடன் ஈந்து ` என அருளிச் செய்ததும் ( தி .4. ப .17. பா .11.) காண்க .
சிற்பி