திருஇன்னம்பர்


பண் :

பாடல் எண் : 1

அல்லிமலர் நாற்றத் துள்ளார் போலும்
அன்புடையார் சிந்தை அகலார் போலுஞ்
சொல்லின் அருமறைகள் தாமே போலுந்
தூநெறிக்கு வழிகாட்டுந் தொழிலார் போலும்
வில்லிற் புரமூன் றெரித்தார் போலும்
வீங்கிருளும் நல்வெளியு மானார் போலும்
எல்லி நடமாட வல்லார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர்த் தலத்துத் தான்தோன்றி யீசனாராகிய சிவபெருமானாரே அக இதழ்களையுடைய மலர்களின் நறுமணத்துள் நிலவி இன்பந்தருபவரும் , தம்மாட்டு அன்புடையார் சிந்தையை விட்டு அகலாதவரும் , தாமே சொற்களையுடைய அரிய வேதங்கள் ஆனவரும் , வீட்டுநெறிக்கு வழியாகும் மெய்ஞ்ஞானத்தை உணர்த்தும் தொழிலினரும் , வில்லால் புரமூன்றையும் எரித்தவரும் , மிக்க இருளும் மிக்க ஒளியும் ஆனவரும் , இரவில் கூத்து ஆட வல்லவரும் ஆவார் .

குறிப்புரை :

அல்லி - அகஇதழ் . ` அக இதழ்களையுடைய மலர்களது நறுமணங்களிலே இருந்து இன்பம் தருவார் ` என்க . சொல்லின் அருமறைகள் - சொற்களையுடைய அரிய வேதங்கள் . தூநெறியாவது , மெய்யுணர்வு ; தத்துவஞானம் ; அதனை இறைவர் , தம்மை நோக்கிச் செய்யும் தவம் காரணமாக வந்து அருளுதலாலும் , அஃது , அவரது ஐந்தொழில்களில் முடிந்த பயனாய் உள்ள தொழிலாதலாலும் , ` தூநெறிக்கு வழிகாட்டும் தொழிலார் ` என்று அருளினார் . வீங்கு இருள் - மிக்க இருள் . ` நல் வெளி ` என்றதும் , ` மிக்க ஒளி ` என்னும் பொருளதே . இறைவரை இருளாகவும அருளியது , மலத்தினது ஆற்றல் கெடுதற் பொருட்டு , அதன்வழிநின்று அதனைத் தொழிற் படுத்தல் பற்றி என்க . இதனையே , ` ஏயுமும் மலங்கள் தத்தம் தொழிலினை இயற்ற ஏவும் தூயவன் றனதோர் சத்தி திரோதான கரியது ` எனச் சிவஞானசித்தியும் . ( சூ . 2. 87.) ` பாகமாம் வகைநின்று திரோதான சத்தி பண்ணுதலான் மலம்எனவும் பகர்வர் ` எனச் சிவப்பிரகாசமும் (3.20) விளக்கின . எல்லி - இரவு . இத்தலத்தில் சிவபிரானைச் சுவாமிகள் , ` தான்தோன்றி ( சுயம்புமூர்த்தி )` என்றே அருளுகின்றார் .

பண் :

பாடல் எண் : 2

கோழிக் கொடியோன்தன் தாதை போலும்
கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும்
ஊழி முதல்வரும் தாமே போலும்
உள்குவா ருள்ளத்தி னுள்ளார் போலும்
ஆழித்தேர் வித்தகருந் தாமே போலும்
அடைந்தவர்கட் கன்பராய் நின்றார் போலும்
ஏழு பிறவிக்குந் தாமே போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாகிய சிவ பெருமான் கோழிக்கொடியோனாகிய முருகனுக்குத் தந்தையாரும் , பூங்கொம்பு போன்ற உமாதேவியை உடலின் ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்தவரும் , ஊழியின் நிகழ்ச்சிகளுக்குத் தலைவரும் , தம்மை நினைப்பவர் உள்ளத்தில் தாம் நீங்காமல் உள்ளவரும் , சூரிய சந்திரர்களாகிய சக்கரங்களையுடைய தேரினை ஊர வல்லவரும் , தம்மை அடைந்தவரிடத்து அன்புடையவரும் , எழுவகைப் பிறவிகளுக்கும் தாமே காரணரும் ஆவார் .

குறிப்புரை :

கோழிக் கொடியோன் - முருகக் கடவுள் . தாதை - தந்தை . கொம்பு அன்னாள் - பூங்கொம்புபோன்றவள் ; உமாதேவி . குளிர்ந்தார் - மகிழ்ந்தார் . ஊழி முதல்வர் - ஊழியின் நிகழ்ச்சிகளுக்குத் தலைவர் . உம்மை . சிறப்பு . ` தாமே ` என்னும் ஏகாரம் , பிரிநிலை ; அது , பிறர் இன்றித் தாம் ஒருவரேயாய முழு முதற்றன்மையை விளக்கிற்று . ஆழி என்றது இரட்டுற மொழிதலாய் , சூரிய சந்திரராகிய மண்டிலங்களையும் , தேர்ச் சக்கரங்களையும் உணர்த்தின ; எனவே , ` சூரிய சந்திரர்களாகிய சக்கரங்களையுடைய தேரினை ஊரவல்லவர் ` என்றதாயிற்று . வித்தகர் - திறலுடையவர் . ` ஏழு பிறவிக்கும் தாமே ` என்புழி , ` தாமே காரணர் ` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க .

பண் :

பாடல் எண் : 3

தொண்டர்கள் தம்தகவி னுள்ளார் போலும்
தூநெறிக்குந் தூநெறியாய் நின்றார் போலும்
பண்டிருவர் காணாப் படியார் போலும்
பத்தர்கள் தம்சித்தத் திருந்தார் போலும்
கண்டம் இறையே கறுத்தார் போலும்
காமனையுங் காலனையுங் காய்ந்தார் போலும்
இண்டைச் சடைசேர் முடியார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாராகிய சிவ பெருமானாரே , தொண்டர்களுடைய மெய்யன்பினிடத்துத் திகழ்பவரும் , தூய ஞானநெறிக்குப் பற்றுக்கோடாய் நின்றவரும் , பண்டு மாலும் அயனும் காண இயலாத நிலையினரும் , பக்தர்களுடைய சித்தத்தில் இருந்தவரும் , கண்டம் சிறிது கறுத்தவரும் , மன்மதனையும் இயமனையும வெகுண்டு ஒறுத்தவரும் , முடி மாலையணிந்த சடைமுடியவரும் ஆவார் .

குறிப்புரை :

தகவு - தகுதி ; அது , மெய்யன்பு . தூநெறி - ஞான நெறி , ` அதற்குப் பற்றுக்கோடாய் இருப்பவர் ` என்பதாம் . இருவர் , மாலும் , அயனும் . படி - நிலைமை . இறையை - சிறிதே . இண்டை - முடிமாலை .

பண் :

பாடல் எண் : 4

வானத் திளந்திங்கட் கண்ணி தன்னை
வளர்சடைமேல் வைத்துகந்த மைந்தர் போலும்
ஊனொத்த வேலொன் றுடையார் போலும்
ஒளிநீறு பூசு மொருவர் போலும்
தானத்தின் முப்பொழுதுந் தாமே போலும்
தம்மிற் பிறர்பெரியா ரில்லார் போலும்
ஏனத் தெயிறிலங்கப் பூண்டார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாராகிய சிவபெருமானாரே வானில் திகழும் பிறைச்சந்திரனாகிய கண்ணியைத் தம் வளரும் சடைமேல் வைத்து மகிழ்ந்த வலியவரும் , ஊன் பொருந்திய சூலம் ஒன்றை உடையவரும் , ஒள்ளிய திருநீற்றைப் பூசும் ஒருவரும் , முச்சந்தி நேரங்களிலும் வழங்கப்படும் அருக்கியம் முதலியவற்றை ஏற்று அருள்பவரும் , தம்மினும் பெரியர் பிறர் இல்லாதவரும் , பன்றியினது கொம்பு மார்பில் விளங்க அணிந்தவரும் ஆவார் .

குறிப்புரை :

` வானத்துத் திங்கள் ` என இயையும் ; ` வானத்துக் கண் உலாவுவதாகிய திங்கள் ` என்பது பொருள் . ` திங்களாகிய கண்ணி ` என்க . கண்ணி - முடியில் அணியும் மாலை . ஒத்த - பொருந்திய . ` வேல் ` என்றது , சூலத்தை . தானம் - கொடை ; அது , சந்தியா காலங்களில் அருக்கியம் முதலியன கொடுத்தலைக் குறித்தது . முப்பொழுது என்றது , சந்தியா காலங்களை . ` அக்காலங்களின் முதல்வராய் இருந்து , வழிபடுவோர் செய்யும் வழிபாடுகளை ஏற்றருளுபவர் ` என்றபடி . ` எல்லாவற்றையும் சிவபிரானே ஏற்றருளுபவன் என்பது என்னை ?` என்னும் ஐயத்தினை நீக்குதற்கு , ` பிறர்பெரியார் இல்லார் ` என்று அருளினார் . இதனையே சிவஞான சித்தி ( சூ . 2. 25.) ` யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகியாங்கே மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள் வேதனைப் படும்இ றக்கும் பிறக்கும்மேல் வினையும் செய்யும் ஆதலால் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே `. என விளக்கிற்று .

பண் :

பாடல் எண் : 5

சூழுந் துயரம் அறுப்பார் போலும்
தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்
ஆழுங் கடல்நஞ்சை யுண்டார் போலும்
ஆடலுகந்த அழகர் போலும்
தாழ்வின் மனத்தேனை யாளாக் கொண்டு
தன்மை யளித்த தலைவர் போலும்
ஏழு பிறப்பு மறுப்பார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாராகிய சிவபெருமானாரே , வந்து வளைத்துக்கொள்ளும் துயரங்களை நீக்குபவரும் , படைப்பு அழிப்புக்களைச் செய்து நிற்பவரும் , ஆழ மிக்க கடலிடத்துத் தோன்றிய நஞ்சை உண்டவரும் , கூத்து ஆடுதலை விரும்பும் அழகரும் , தாழ்ந்த மனத்தினை உடைய அடியேனையும் அடிமைகொண்டு ஞானமளித்த தலைவரும் , ஏழுவகையாகவும் பிறத்தலை அறுத்தெறிபவரும் ஆவார் .

குறிப்புரை :

சூழும் - வந்து வளைத்துக்கொள்கின்ற . தோற்றம் இறுதி - படைப்பு அழிப்புகள் ; உம்மைத் தொகை . அவைகளைச் செய்பவரை அவரேயாகச் சார்த்தியருளிச் செய்தார் . தாழ்வின் மனம் - தாழ் வினை ( இழிவினை ) உடையமனம் . ` மனத்தேனையும் ` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று . தன்மை - பெருந்தன்மை ; ஞானம் .

பண் :

பாடல் எண் : 6

பாதத் தணையுஞ் சிலம்பர் போலும்
பாரூர் விடையொன் றுடையார் போலும்
பூதப் படையாள் புனிதர் போலும்
பூம்புகலூர் மேய புராணர் போலும்
வேதப் பொருளாய் விளைவார் போலும்
வேடம் பரவித் திரியுந் தொண்டர்
ஏதப் படாவண்ணம் நின்றார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாராகிய சிவ பெருமானாரே , திருவடிகளில் கட்டப்பட்ட சிலம்பினரும் , பூமிமேல் நடக்கும் ஓர் இடபத்தை ஊர்தியாக உடையவரும் , பூதப்படையைச் செயற்படுத்தும் புனிதரும் , புகலூரைப் பொருந்திய புராணரும் , வேதங்களின் பொருளாய் விளங்குபவரும் , திருநீறு , கண்டிகை , சடை , முதலியவை எங்கே காணப்படினும் , அங்கேயெல்லாம் தம்மை ஏத்தி இறைஞ்சி நிற்கும் தொண்டர் துன்பப்படா வண்ணம் காத்து நின்றாரும் ஆவார் .

குறிப்புரை :

பார் ஊர் விடை - பூமியின்மேல் நடத்துதற்குரிய இடபம் ; ` அன்னம் , கருடன் முதலியனபோல ஆகாயத்தில் நடத்துதற்குரிய ஊர்தி அன்று ` என்றபடி . பூம்புகலூர் , அழகிய புகலூர் ; இது சோழநாட்டுத்தலம் ; சுவாமிகள் இறைவன் திருவடியடைந்த இடம் . வேடம் பரவித் திரிவார் - திருநீறு கண்டிகை , சடை , கல்லாடை முதலியவைகள் எங்கே காணப்படினும் அங்கெல்லாம் சிவபிரானை ஏத்தி இறைஞ்சி நிற்பவர் . ஏதப்படாவண்ணம் - துன்பத்திற் பொருந்தாத படி .

பண் :

பாடல் எண் : 7

பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்
பத்தர்கள்தம் சித்தத் திருந்தார் போலும்
கல்லாதார் காட்சிக் கரியார் போலும்
கற்றவர்கள் ஏதங் களைவார் போலும்
பொல்லாத பூதப் படையார் போலும்
பொருகடலும் ஏழ்மலையுந் தாமே போலும்
எல்லாரு மேத்தத் தகுவார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர்த் தான் தோன்றியீசனாராகிய சிவபெருமானாரே , பற்கள் நிறைந்த தலையோட்டில் உணவு ஏற்று உண்பவரும் , பத்தர்களுடைய சித்தத்தில் இருந்தவரும் , மெய்ந்நூல்களைக் கல்லாதவரால் காணப்படாதவரும் , அவற்றைக் கற்பவரின் துன்பங்களைக் களைபவரும் , கொடுமைமிகும் பூதப்படையினரும் , அலைமோதுங் கடல் ஏழும் குலமலை ஏழும் தாமே ஆனவரும் , எல்லாரும் ஏத்துதற்குக் காரணமான அருளினரும் ஆவார் .

குறிப்புரை :

பல் ஆர் - பற்கள் நிறைந்த . ` பல் ஆர் ஓடு ` என இயையும் . இனி , பிரமர்தாம் பலராதல் பற்றி , ` பல்லார் தலை ` என்றார் எனினுமாம் . ` கல்லாதார் , கற்றார் ` என்பன , அருள் நூல்களைக் கல்லாதார் கற்றார்களைக் குறித்தன . ஏதம் - துன்பம் . ` பொல்லாத பூதப்படை ` என்றது , அவை பிறரைத் தீண்டி வருத்துவனவாதல் பற்றி ; இஃது இனம்பற்றி நயம்பட அருளிச் செய்ததன்றிச் சிவபூதங்கள் அன்ன அல்ல ; நல்லனவே செய்வன என்க . பொருகடல் - அலை மோதுகின்ற கடல் . ` ஏழ் ` என்றதனைக் கடலுக்கும் கூட்டுக . ` தகுவார் ` என்றது , பெருமை நோக்கியே யன்றி , அருள் நோக்கியுமாம் ; அதனால் , ` சிலர் ` ஏத்தாதொழிதல் என் ` என இரங்கியருளிய வாறாயிற்று .

பண் :

பாடல் எண் : 8

மட்டு மலியுஞ் சடையார் போலும்
மாதையோர் பாக முடையார் போலும்
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும்
காலன்தன் வாழ்நாள் கழிப்பார் போலும்
நட்டம் பயின்றாடும் நம்பர் போலும்
ஞாலமெரி நீர்வெளிகா லானார் போலும்
எட்டுத் திசைகளுந் தாமே போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர்த் தான்தோன்றியீசனாராகிய சிவ பெருமானாரே , பூக்களின் தேன்மிகும் சடையினரும் , உமையை ஒரு பாகத்திலுடையவரும் , துன்பம் , பிணிகளைத் தவிர்ப்பவரும் , இயமன் உயிருக்கு இறுதி கண்டவரும் , எப்பொழுதும் கூத்தாடுந் தலைவரும் , நிலம் , நீர் , தீ , வளி , ஆகாசம் ஆம் ஐம்பூதங்கள் ஆனவரும் , எட்டுத் திசைகளும் தாமே ஆனவரும் ஆவார் .

குறிப்புரை :

மட்டு - தேன் ; இது , கொன்றை மலரில் மிகுந்துளது . மலியும் - நிறைந்த . கட்டம் - துன்பம் ; மனக்கவலை . ` கட்டமும் பிணியும் தவிர்ப்பார் ` என்க . பயின்று ஆடுதல் - எப்பொழுதும் ஆடுதல் . ஞாலம் - நிலம் . வெளி - வான் . கால் - காற்று .

பண் :

பாடல் எண் : 9

கருவுற்ற காலத்தே யென்னை ஆண்டு
கழற்போது தந்தளித்த கள்வர் போலும்
செருவிற் புரமூன்றும் அட்டார் போலும்
தேவர்க்குந் தேவராஞ் செல்வர் போலும்
மருவிப் பிரியாத மைந்தர் போலும்
மலரடிகள் நாடி வணங்க லுற்ற
இருவர்க் கொருவராய் நின்றார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர்த் தான்தோன்றியீசனாராகிய சிவ பெருமானாரே நான் கருவாய்ப் பொருந்திய காலத்திலேயே மெய்யுணர்வைப் பெறும் அவாவை என்பால் உண்டாக்கிப் பின் திருவடித் தாமரைகளைத் தந்து காத்த கள்வரும் , போரில் பகைவர்புரம் மூன்றையும் அழித்தவரும் , தேவர்க்கும் தேவராம் செல்வரும் , கூடியபின் பிரியாத மைந்தரும் , தம்முடைய மலரடிகளை விரும்பி வணங்கிய பிரமனுக்கும் திருமாலுக்கும் ஒப்பற்ற தலைவராய் நின்றவரும் ஆவார் .

குறிப்புரை :

` ஆண்டு ` என்றது , மெய்யுணர்வைப் பெறும் அவாவை உண்டாக்கினமையை ; இது , ` கருவுற்ற நாள் முதலாக வுன்பாதமே காண்பதற்கு , உருகிற்றென் உள்ளமும் ; நானுங் கிடந்தலந் தெய்த்தொழிந்தேன் ` எனத் திருவிருத்தத்துள் அருளிச்செய்தமையான் அறியப்படும் ( தி .4. ப .99. பா .6.) ` பின்பு கழற்போது தந்தளித்த ` என்க . அளித்த - காத்த . ` கள்வர் ` என்று அருளினார் . முதலில் வெளிப்படாதிருந்து பின்பு வெளிப்பட்டமையின் . செருவில் - போரின்கண் ; ` செருச் செய்கின்ற வில்லால் ` என்று உரைத்தலும் ஆம் . அட்டார் - அழித்தார் . மருவிப் பிரியாத - கூடியபின் பிரியாத ; இறைவன் உயிர்களைக் கூடுதல் அவை மெய்யுணர்வு பெற்ற பின்னரே யாகலின் , பின்னர்ப் பிரிதல் இலனாயினான் . ` துறக்கு மாசொலப்படாய் துருத்தியாய் ` என்றார் திருஞானசம்பந்த சுவாமிகளும் , ( தி .2. ப .98. பா .5.) இருவர் - மாலும் அயனும் ; இவர்கள் முதலில் செருக்குக்கொண்டு இறைவனைத் தேடி எய்த்துப் பின்பு வழிபட்டு உய்ந்தார்களாகலின் ` மலரடிகள் நாடி வணங்கலுற்ற இருவர்க்கு ஒருவராய் நின்றார் ` என்று அருளினார் . ஒருவர் - ஒப்பற்ற தலைவர் .

பண் :

பாடல் எண் : 10

அலங்கற் சடைதாழ ஐய மேற்று
அரவம் அரையார்க்க வல்லார் போலும்
வலங்கை மழுவொன் றுடையார் போலும்
வான்தக்கன் வேள்வி சிதைத்தார் போலும்
விலங்கல் எடுத்துகந்த வெற்றி யானை
விறலழித்து மெய்ந்நரம்பால் கீதங் கேட்டன்
றிலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர்த் தான் தோன்றியீசனாராகிய சிவபெருமானார் கொன்றை மாலையணிந்த சடை தாழப் பிச்சை ஏற்க வல்லவரும் , பாம்பினை இடையில் கட்டவல்லவரும் , வலக்கையில் மழுப்படை ஒன்றை உடையவரும் , தருக்கினால் உயர்ந்த தக்கனுடைய வேள்வியைச் சிதைத்தவரும் , கயிலை மலையை எடுத்த அளவில் தனது வெற்றி பற்றி மகிழ்ந்த இராவணனது அவ்வெற்றியை அழித்துப் பின் அவன் தன் உடல் நரம்பால் எழுப்பிய இசையைக் கேட்டு அவற்கு ஒளிவாளைக் கொடுத்தவரும் ஆவார் .

குறிப்புரை :

அலங்கல் - ( கொன்றை ) மாலை . ` வலத்தின்கண் உடையார் ; கைக்கண் உடையார் ` என்க . இனி , ` வலக்கை ` என்பது மெலிந்து நின்றது எனலுமாம் . விலங்கல் - மலை . உகந்த - மகிழ்ந்த ; கயிலையைப் பெயர்த்த அளவில் இராவணனுக்குத் தனது வெற்றிபற்றி ஓர் மகிழ்ச்சி உளதாயிற்று என்க . விறல் - வெற்றி . ` அவ்விறல் ` எனச் சுட்டு வருவித்து உரைக்க மெய்ந் நரம்பு - உடம்பில் உள்ள நரம்பு .
சிற்பி