திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம்


பண் :

பாடல் எண் : 1

சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்
சொற்பொருளுங் கடந்த சுடர்ச் சோதி போலும்
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
மன்மலிந்த மணிவரைத்திண் தோளர் போலும்
மலையரையன் மடப்பாவை மணாளர் போலும்
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் , சொல் வடிவாய் நிற்கும் நான்கு மறைகளும் ஆறு அங்கங்களும் ஆனவரும் , சொல்லையும் அதன் பொருளையும் கடந்த ஒளிப்பிழம்பாம் தன்மையரும் , பக்க மலைகள் நிறைந்த கயிலை மலையில் வாழ்பவரும் , கடலிடத்துத் தோன்றிய நஞ்சையுண்டு கறுத்த கழுத்தினரும் , வலிமைமிக்க அழகிய மலை போன்ற திண்ணிய தோளினரும் , பருவதராசன் மகள் பார்வதியின் கணவரும் , கொலைத் தொழில் பழகிய மூவிலை வேலை ஏந்திய அழகரும் ஆவார் .

குறிப்புரை :

சொல் மலிந்த - சொற்கள் நிறைந்த ; என்றது , ` சொல்வடிவாய் நிற்கும் ` என்றபடி . ` சொற்பொருள் ` என்றது , சொற்பொருள் உணர்வை ; அதுவே நாதமாதலின் , ` அதனைக் கடந்த ` என்றது , ` நாதத்தைக் கடந்த ` என்றவாறாயிற்று . ` சுடர் ` என்றது கதிர்களையும் , ` சோதி ` என்றது அக்கதிர்களின் திரட்சியையும் . நாதந்தானே உயிர்களின் அறிவை விளக்கி அவ்வறிவாய் நிற்றலின் , ` அதனைக் கடந்த சுடர்ச் சோதி ` யாதலாவது , அதுபோல விளக்குவதொரு பொருளை வேண்டாது , தானே இயல்பாய் விளங்கி நிற்கும் அறிவாதலாம் . ஆகவே , ` சொன்மலிந்த நான்மறை ஆறங்கம் ஆகிச் சொற்பொருளும் கடந்த சுடர்ச் சோதி ` என்றது , ` தான் இயல்பாகவே விளங்கும் இயற்கை யுணர்வினனாய் நின்று , நாதத்தைச் செலுத்தி , அது வாயிலாக உயிர்களின் அறிவை விளக்கிநிற்பவன் ` என்றருளியவாறாதல் அறிக . ` உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் - நின்ற மெய்யா ` ( தி .8 திருவா . சிவ புரா . 33 - 34) என்றாற்போலுந் திரு மொழிகள் இதனையே குறிக்கும் என்க . சமட்டியாய் ( தொகுதியாய் ) நிற்கும் ஓங்காரம் வியட்டியில் ( பகுதியில் ) ` அகாரம் , உகாரம் , மகாரம் , விந்து , நாதம் ` என ஐந்தாய் உயிர்களின் அறிவை விளக்கும் ; அவை அங்ஙனம் விளக்கும்படி அவற்றை இறைவன் ஐவகை நிலையில் நின்று செலுத்துமாற்றினை , ` அகார உகாரம் அகங்காரம் புத்தி மகாரமனம் சித்தம் விந்துப் - பகாதிவற்றை நாதம் உளவடிவா நாடிற் பிரணவமாம் போதம் கடற்றிரையே போன்று ` எனவும் , ` எண்ணில வோங்காரத் தீசர் சதாசிவமாம் நண்ணிய விந்துவொடு நாதத்துக் - கண்ணிற் பகரயன்மா லோடு பரமனதி தெய்வம் அகரஉக ரம்மகரத் தாம் ` எனவும் விளக்கியது சிவஞானபோதம் . ( சூ . 4. அதி . 1.) ஓங்காரம் பருப்பொருளாக மேற்கூறிய ஐந்து பகுதிகளாக ( பஞ்சகலைகளாக ) ப் பகுக்கப்படுதலே பெரும்பான்மை ; மற்றும் அதனை மிக நுட்பமாகப் பன்னிரண்டு பகுதிகளாகவும் , பதினாறு பகுதிகளாகவும் பகுத்து , யோகநெறியில் அவைகளை உன்னி உணர்ந்து அவற்றின் நீங்கும் முறையும் உண்டு ; அவ்விடத்து , அப் பகுதிகள் முறையே , ` பன்னிருகலைப் பிராசாத மந்திரம் ` எனவும் , ` பதினாறுகலைப் பிராசாத மந்திரம் ` எனவும் , அவற்றை உன்னி உணரும் யோகம் , பிராசாத யோகம் ` எனவும் கூறப்படும் . அவை எல்லாவற்றிற்கும் முதலாய் யாண்டும் யாவர்க்கும் உடனாய் நின்று உதவுவது இறைவனது திருவருளேயாகும் . அத்திருவருள் ஒன்று தானே எண்ணிறந்த வகையில் அவரவர்க்கு ஏற்குமாற்றால் நின்று உதவும் வியட்டி நிலைகளையே இங்கு , ` சுடர் ` எனவும் , அந் நிலைகள் அனைத்தையும் உடைய முதல்வன் தான் ஒருவனேயாய் நின்று நிலவுதலையே , இங்கு , ` சோதி ` எனவும் அருளிச்செய்தார் என உணர்க . இதனானே மெய்ந்நூல்களின் ( தத்துவ சாத்திரங்களின் ) பரப்புக்கள் அனைத்திற்கும் முதலாய் நிற்பன திருமுறைகள் என்பதும் தெற்றெனத் தெளிந்துகொள்க . ` ஆகிக் கடந்த ` என இயையும் . மேற்கூறியனவெல்லாம் இனிது விளங்குதற் பொருட்டே , ` ஆகிக் கடந்த சுடர்ச்சோதி ` என எச்சமாக்கி , ஒரு தொடர்ப்பட அருளிச் செய்தார் . ` சொற்பொருளும் ` என்ற உம்மை , நுட்பத்தின் மிகுதியுணர நின்ற சிறப்பும்மை . வாணர் , ` வாழ்நர் ` என்பதன் மரூஉ ; ` வாழ்பவர் ` என்பது பொருள் . ` சொற் பொருளுங் கடந்த நுண்ணியராயினும் , உயிர்கள்பொருட்டுப் பரியராயும் விளங்கினார் ` என்பார் , ` கல் மலிந்த கயிலைமலை வாணர் ` என அருளிச்செய்தார் ; ` கல் ` என்றது , பக்க மலைகளை , ` மல் மலிந்த ` ( வலிமை நிறைந்த ) ` அழகிய மலைபோலும் திண்ணிய தோள்களை உடையவர் ` என்க . கொல் மலிந்த - கொல்லுதல் நிறைந்த . மூவிலை வேல் - சூலம் . குழகர் - அழகர் . இத்திருப்பதிகம் முழுவதும் இறைவனைச் சுவாமிகள் , ` கூத்தன் ` என்றே குறித்தருளுகின்றார் .

பண் :

பாடல் எண் : 2

கானல்இளங் கலிமறவ னாகிப் பார்த்தன்
கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்
ஆனல்இளங் கடுவிடையொன் றேறி யண்டத்
தப்பாலும் பலிதிரியும் அழகர் போலும்
தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற்
செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்
கூனல்இளம் பிறைதடவு கொடிகொள் மாடக்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

நல்லதேனின் சிறிய துளிகளை மிகுதியாக ஏந்தித் தென்றல் தவழும் முன்றிலின்கண்ணுள்ள பொழிலிடத்துப் பாளைகள் விரிதலால் துளிக்கும் தேனின் மணம் கமழப்பெறுவனவும் , வளைவு பொருந்திய இளம்பிறையைத் தடவும் துகிற்கொடிகளைக் கொண்டவனும் ஆகிய , மாடங்களை உடைய குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் , காட்டில் எழுச்சிமிக்க நல்லிள வேட்டுவன் ஆகி விசயனுடைய ஊக்கத்தின் அளவினையும் விற்றொழிலின் பயிற்சி முழுவதையும் அறிந்தவரும் , விரைந்து நடக்கும் நல்லிள ஆனேற்றை ஊர்ந்து இந்நிலவுலகிற்கு அப்பாலும் பிச்சைகொள்ளத் திரியும் அழகரும் ஆவார் .

குறிப்புரை :

கான் - காட்டில் , ` நல் இளங்கலி மறவன் ஆகி ` என்க . கலி - எழுச்சி . மறவன் - வேட்டுவன் . ` கருத்து ` என்றது , ஊக்கத்தை . செரு - போர் . விற்றொழிலில் அவன் பயின்ற அனைத்தையும் காட்டச்செய்தார் ஆகலின் , ` செருத்தொகுதி ` என்று அருளினார் . ` கருத்தளவையும் , செருத்தொகுதியையும் கண்டார் ` என்க . ` ஆன் விடை ` என இயையும் . ` அண்டம் ` என்றது , நில அண்டத்தை . ` அதற்கு அப்பாலும் திரிவர் `. என்றது , ` ஏனைய நீர் அண்டம் முதலிய வற்றுள் உள்ளார்க்கும் இவ்வாறே அருள்செய்வார் ` என்றருளியதாம் . ` தேன் துவலை ` என இயையும் ; இளமை , இங்குச் சிறுமை மேல் நின்றது . துவலை - துளி . ` துவலை மலிதல் `, தென்றலுக்கு அடை . ` தேறல் ` என்றது மாடங்களில் உள்ளார் பருகும் தேனினை . ` கூன் நல் இளம் பிறை தடவு ` என்றது , கொடிக்கு அடை . ` தென்றல் இயங்கும் முன்றிலின்கண் உள்ள பொழிலிடத்துப் பாளைகள் விரியப்பெறுவனவும் , உண்ணப்படும் தேனினது மணம் வீசப்பெறுவனவும் , பிறையைத் தடவும் கொடிகளைக் கொண்டனவும் ஆகிய மாடங்களையுடைய குடந்தை ` என்க .

பண் :

பாடல் எண் : 3

நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும்
நிலாஅலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை
ஆறலைத்த சடைமுடியும் அம்பொன் தோளும்
அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்
ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையர் போலும்
ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலும்
கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

குடந்தைக் கீழ்க் கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் திருநீறு பொருந்திய தம் திருவுருவத்தையும் , நெற்றிக் கண்ணினையும் , பிறையொடு பாம்பும் நீர் நிறைந்த கங்கையும் பொருந்திய சடைமுடியையும் , அழகிய பொன்நிறத் தோள்களையும் அடியவர்க்குக் காட்டி அருள்புரிவாராய் , இடபம் பொறித்த கொடியை உயர்த்தியவராய் , ஏழுலகங்களும் வணங்கும் திருவடிகளை உடைய ஈசராய்த் தம் இடப்பங்காய் இடம் பெற்ற மலைமகட்குக் கொழுநராயும் திகழ்பவர் .

குறிப்புரை :

` வருத்திய ` எனப் பொருள் தரும் ` அலைத்த ` என்னும் சொல் , ஈண்டுப் பலவிடத்தும் ` பொருந்திய ` என்னும் அளவாய் நின்றது . நீறலைத்த திருவுரு என்பது முதலாக , ` அம்பொன் தோள் ` என்பது ஈறாக உள்ளவற்றை எடுத்தோதி , ` அவைகளை அடியவர்க்குக் காட்டி அருள்புரிவார் ` என்று அருளிச்செய்தது , மெய்யுணர்வு தோன்றப் பெறும் செவ்வி பெற்று அதனை அவாவி நிற்கும் நன் மாணாக்கர்க்கு அதனை ஒருவார்த்தையால் உணர்த்தியருளும் உறுதிச் சொல்லாய் நின்று பயன் தருவதாதல் காண்க . நிமிர் - உயர்ந்த .

பண் :

பாடல் எண் : 4

தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்
சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்
செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி
செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்
மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி
மிகுபுகைபோய் விண்பொழியக் கழனி யெல்லாங்
கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

வேதவழி ஒழுகுதலில் மிக்க வன்மையுடைய மறையவராய் விளக்கம்பெறும் வேள்வியிடத்து எழும் மிகு புகை விண்ணிடத்துப் போய் மழையைப் பெய்விக்க , கழனிகளில் மாமரத்தினுடைய இனிய கனிகள் சிதற அவற்றின் சாறு பரவிப் பாயும் குடந்தைக் கீழ்க் கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் , தக்கனது பெருவேள்வியை அழித்தவரும் , சந்திரனை ஒற்றைக் கலையுடன் கைப்பற்றித் தலையில் தரித்துக் காப்பாற்றியவரும் , செவ்வானொளி , பவளஒளி , மின்னொளி , கொழுவிய சுடர்த்தீயொளி , ஞாயிற்றொளி , ஆகிய எல்லா ஒளியும் ஒருங்கு கலந்தாற் போன்ற செம்மை நிறம் உடையவரும் ஆவார் .

குறிப்புரை :

` கவர்ந்து ` என்றது ஈண்டு , ` கைக்கொண்டுகாத்து என்னும் பொருட்டாய் நின்றது . ` தக்கனது சாபத்தால் தேய்ந்தொழிந்த ஏனைக்கலைகள் போல இவ்வொருகலையும் ஒழியாதவாறு கைப்பற்றிக் காத்துப் பின் சடையில் தரித்தார் ` என்க . சந்திரனைக் கலைகவர்ந்து என்றதனை ` குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் ` ( குறள் . 1029) என்பது போலக் கொள்க . சந்திரனைக் காத்ததும் . தக்கனுக்கு மாறாய செயலேயாதல் அறிக . செக்கர் - செவ்வானம் , ` செக்கர் ஒளி முதலாக ஞாயிற்றின் ஒளிஈறாக உள்ள அனைத்தொளியும் ஒருங்கு கலந்தாற் போலும் செம்மை நிறம் உடையவர் ` என , அவரது திரு மேனிப் பொலிவினை வியந்தருளிச்செய்தார் . ` தீ , ஞாயிறு ` என்றனவும் , அவற்றின் ஒளியையே என்க . திறலாவது , வேதம் முதலிய கலைகளை ஓதுதலினும் ஒழுகுதலினும் உள்ள வன்மை , வேள்வி வேட்டலால் பருவமழை பொய்யாது பெய்தல் பற்றியும் , வேள்விப் புகை உருவத்தால் மேகத்தோடு ஒத்திருத்தல் பற்றியும் ` அவ்வேள்விப் புகைதானே விண்ணிற் போய் மேகமாய் நின்று மழை பொழியும் ` என , தற்குறிப்பேற்றமாக அருளிச்செய்தார் . ` விண் போய் ` என இயைக்க . ` விண்ணாய்ப் பொழிய ` என ஆக்கம் வருவித்து , ` விண் - மேகம் ` என்றலுமாம் . கொக்கு - மாமரம் . ` சிதறி ` என்றதனை , ` சிதற ` எனத் திரிக்க . ` தேறல் ` என்றது , மாம்பழத்தின் சாற்றினை .

பண் :

பாடல் எண் : 5

காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங்
காமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும்
ஆலதனில் அறம்நால்வர்க் களித்தார் போலும்
ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும்
நீலவுரு வயிரநிரை பச்சை செம்பொன்
நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங்
கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

அழகிய அரதனங்களைக்கரையில் ஒதுக்கி , மலையினின்று இறங்கிவரும் காவிரியின் நன்னீரால் சிறப்புமிகும் குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் , இயமனது ஆற்றலையழித்ததும் , கழல் அணிந்ததும் ஆகிய காலை உடையவரும் , மன்மதனது அழகிய உடலை அழல் உண்ணும் வண்ணம் நுதற் கண்ணை விழித்து நோக்கியவரும் , சனகாதி முனிவர் நால்வர்க்கும் , கல்லாலின் கீழ் அமர்ந்து அறம் உரைத்தருளியவரும் , ஆண் பெண் அலிகளின் அல்லராம் தன்மை உடையவரும் , நீலமணி , வரிசைப் படப்பதித்தற்குரிய வயிரம் , பச்சை , செம்பொன் , நீடு பளிங்கு என்றிவற்றுள் இன்னது ஒன்று போலும் நிறத்தினர் என உணர ஒண்ணாததொரு நிறமுடையவரும் ஆவார் .

குறிப்புரை :

` எழிலை அழல் விழுங்க ` என்க . கண்டார் - நோக்கினார் ; நோக்கியது நெற்றிக்கண்ணால் என்க . ` ஆல் ` என்றது , அதன் நிழலைக் குறித்தது . அல்லர் ஆனார் - அல்லராம் தன்மையை உடையவராயினார் . ` உரு ` என்றது , மணியை , நிரை - வரிசைப்படப் பதித்தற்கு உரிய . ` நிறை பச்சை` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` நவ மணிகளும் , பொன்னும் , பளிங்கும் ஆகிய இவற்றுள் இன்னதன் நிறம்போலும் நிறத்தினர் என உவமையானும் உணர ஒண்ணாததொரு நிறமுடையவர் ` என்றபடி . கோலம் - அழகு .

பண் :

பாடல் எண் : 6

முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும்
முளைஞாயி றன்னமலர்க் கண்கள் மூன்றும்
அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி
அணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றத்
துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு
சுடர்ச்சோதிக்கடிச்செம்பொன்மலைபோலிந்நாள்
குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழுமெம் கூத்தனார் , முடியினிடத்தே வளர்மதியைத் தரித்தவராய் , மூன்றாய் எழுந்து தோன்றும் இளஞாயிறுகள் என்னத் தக்க மலர்க்கண்கள் மூன்றுடையவராய் , பாதத்தில் கட்டப்பட்டொலிக்கும் சிலம்பினராய் , அருள் நிறைந்து ஒளிமிக்க வரிசையான பற்களுடன் அழகிதாய் விளங்கும் செவ்வாயினராய் , உடுக்கை போன்ற இடுப்பினை உடைய உமை யம்மையை இடப்பங்காய்க் கொண்டவராய் , ஒளிப்பிழம்பாய் விளக்கம் மிக்க செம்பொன் மலை போன்றவராய் , இந்நாள் என் மனத் திடத்தே புகுந்து குடிகொண்டவர் ஆவார் .

குறிப்புரை :

` மூன்றாய்த் தோன்றுங் கண்கள் ` என இயையும் . ` முளைஞாயிறு அன்ன ` என்றது தொழில் பற்றி வந்த உவமை ; ` மூன்று கண்கள் யாதொன்று திறப்பினும் சிறிது திறத்தலே யன்றி முழுவதூஉம் திறப்பின் உலகம் ஆற்றுமாறில்லை ` என அவற்றது ஆற்றல் மிகுதியை உணர்த்தியருளியவாறு . ` அன்ன ஆற்றலை உடையவாயினும் , மென்மையிற் பிறழா ` என்பார் , ` மலர்க்கண்கள் ` என்று அருளினார் . ` அருள் ஆர் , சோதி , அணி ` என்னும் மூன்றும் ` முறுவல் ` என்றதனோடு தனித்தனி முடியும் . ` நிறைந்த அருளைப் புலப்படுத்துவதாயும் , தண்ணிய ஒளியினையுடையதாயும் நின்று , இயல்பானே அழகியதாகிய முகத்திற்குப் பின்னும் பேரழகினைச் செய்வதாகிய முறுவல் ` என்றருளியவாறு . ` இத்தகைய முறுவலோடு கூடிய சிவந்தவாயினது அழகு சொல்ல ஒண்ணாததாய் நிற்கும் ` என்பார் . ` அணிமுறுவற் செவ்வாய் ` என்று அருளினார் . சுடர்ச் சோதி - கதிர்களின் திரட்சியாகிய ஒளிப்பிழம்பு . கடி - விளக்கம் . ` சோதி ` முதலிய மூன்றும் மலைக்கு அடை . இங்ஙனம் முடிகொண்ட வளர்மதி முதலியவற்றை வகுத்துப் புகழ்ந்து , ` குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் ` என்று அருளிய இதனால் , சுவாமிகளுக்குச் சிவபிரானது திருமேனிக் காட்சியால் விளைந்த பேரின்ப மேலீடு தெள்ளிதிற் புலனாகும் . இவ்வருமைத் திருத்தாண்டகத்தை , ` முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்பும் துடிகொண்ட கையும் துதைந்தவெண் ணீறும் சுரிகுழலாள் படிகொண்ட பாகமும் பாய்புலித் தோலும்என் பாவிநெஞ்சிற் குடிகொண்ட வாதில்லை யம்பலக் கூத்தன் குரைகழலே .` என்னும் திருவிருத்தத்தோடு உடன்வைத்து உணர்க . ( தி .4. ப .81. பா .7.)

பண் :

பாடல் எண் : 7

காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக்
கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்
சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்
சிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்
பாரிலங்கு புனல்அனல்கால் பரமா காசம்
பரிதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலும்
கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் மேகம் போல விளங்கும் அழகிய உருவத்தையுடைய திருமாலுக்கும் , படைப்பிற்குக் காரணராய்த் தாமரை மலரில் விளங்கும் பிரமனுக்கும் காண முடியாதபடி புகழ் நிலவும் நெருப்புப்பிழம்பு உருவத்தில் சிவந்து காணப்பட்டவரும் , மலையை வில்லாக வளைத்து அசுரருடைய முப்புரங்களையும் அழித்தவரும் , விளங்கும் நிலம் , நீர் , தீ , காற்று மேம்பட்ட ஆகாயம் , சூரியன் சந்திரன் , சுருதி என்றிவையாய்ப் பரவி நின்றவரும் , கூர்மையுடன் திகழும் வேலையுடைய குமரனுக்குத் தந்தையானவரும் ஆவார் .

குறிப்புரை :

கார் இலங்கு திருஉருவத்தவன் - மேகம்போல விளங்கும் அழகிய உருவத்தை யுடையவன் ; திருமால் , கமலத்தில் காரணன் - தாமரை மலரில் இருக்கும் தலைவன் ; பிரமன் . காட்சி ஒண்ணா - காணுதல் கூடாத . சீர் - புகழ் ; ` சீர்ப் பிழம்பு ` என இயையும் . பிழம்பின் - பிழம்புருவத்தில் . சிவந்தார் - சிவப்பு நிறமாயினார் . ` பார் ` என்றது , ` புனல் ` என்றதனோடு எண்ணுநிலை வகையான் இயைந்தது . ` பரமாகாசம் ` என்றது , ` ஏனைய பூதங்களின் மேம்பட்டதாகிய ஆகாசம் ` என்றபடி . ` சுருதி ` என்றது இசையை . பரந்தார் - பரவிநின்றார் .

பண் :

பாடல் எண் : 8

பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்
புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு
மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்
மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல
தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து
திருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள்
கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் பூக்கள் பரவிய பொழிலால் தழுவப்பட்ட புகலூரில் உள்ளவரும் , புறம்பயத்தில் உறைபவரும் , அறத்தை மக்கள் விரும்பி மேற்கொள்ளும் பூந்துருத்தியில் புக்கவரும் , வண்டுகள் சூழ்ந்த பழனத்தை விரும்பிக் கொண்டவரும் , நெய்த்தானத்து நிலைத்தவரும் , சிறந்த தவஞ்செய்தற்கு ஏற்ற சோற்றுத்துறையைப் போற்றிக் கொண்டவரும் , தீயைப் போன்ற ஒளியை உமிழும் சக்கராயுதத்தைத் திருமாலுக்கு ஈந்த வரும் , திருவானைக்காவில் தொண்டு செய்த ஒப்பற்ற சிலந்திக்கு மேம்பட்ட சோழர்குடிக்குரிய அரசாட்சியை அந்நாள் கொடுத்தவரும் ஆவார் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , இறைவன் ஏனைய பல தலங்களிலும் எழுந்தருளியிருக்கும் நிலையை நினைந்து அருளிச் செய்தது . புகலூர் , புறம்பயம் , பூந்துருத்தி , பழனம் , நெய்த்தானம் , திரு வானைக்கா அனைத்தும் சோழநாட்டுத் தலங்கள் . மாச் சூழந்த - ( மலர்களின் மிகுதியால் ) வண்டுகள் சூழ்ந்த . ` மா தவத்துச் சோற்றுத்துறை ` என்க . ` சிறந்த தவத்திற்கு உரிய ` என்பது பொருள் . தீச் சூழ்ந்த - தீப்போன்ற ஒளியையுடைய . திகிரி - சக்கரம் . ` ஈந்து ` என்னும் வினையெச்சம் , எண்ணின்கண் வந்தது . திரு வானைக்காவில் வாய்நூலாற் பந்தர் அமைத்த சிலந்தியைச் சோழ மன்னனாக்கிய வரலாற்றை , சேக்கிழார் நாயனார் , கோச்செங்கட் சோழநாயனார் புராணத்துள் விரித்துரைத்தருளினார் .

பண் :

பாடல் எண் : 9

பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற்
பொறிகிளர்வெண் பூணூல் புனிதர் போலும்
சங்கரவக் கடன்முகடு தட்ட விட்டுச்
சதுரநடம் ஆட்டுகந்த சைவர் போலும்
அங்கரவத் திருவடிக்காட் பிழைப்பத் தந்தை
அந்தணனை அறஎறிந்தார்க் கருளப் போதே
கொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார் போலும்
குடந்தைக்கீழ்க் கேட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் சினம் மிகும் பாம்பை அணிந்தவரும் , புலித்தோலை உடுத்தவரும் , பழமையானவரும் , உத்தம இலக்கணமாகிய பொறிகள் ( மூன்று வரிகள் ) விளங்கும் மார்பிடத்து வெள்ளிய பூணூலைத் தரித்த புனிதரும் , சங்குகள் வாழ்வதும் ஒலியுடையதும் ஆகிய கடல் அண்ட முகட்டில் சென்று மோதுமாறு கைகளை வீசித் திறம்பட நடனமாடும் அநாதிசைவரும் , கழலும் , சிலம்பும் கிடந்து ஒலிக்கும் திருவடிக்கு ஆளாதலில் தவறியதனால் , தந்தையாகிய அந்தணனைத் தாளிரண்டும் வெட்டுண்டு வீழ மழுவினாலெறிந்த சண்டேசருக்கு அப்பொழுதே அரவம் தவழும் சடை முடியிடத்துத் திகழும் கொன்றை மாலையைக் கொடுத்தவரும் ஆவார் .

குறிப்புரை :

பொங்கு அரவர் - மிக்க பாம்பை அணிந்தவர் . பொறி - ஒளி . ` புரி கிளர் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` சங்குக் கடல் , அரவக் கடல் ` எனத் தனித்தனி இயைக்க . அரவம் - ஓசை , முகடு - அண்ட முகடு . சதுர நடம் - திறல் வாய்ந்த நடனம் ; இதனை ` காளி யோடு ஆடி வென்ற நடனம் ` என்க . ஆட்டு - ஆடுதல் ; முதனிலை திரிந்த தொழிற்பெயர் . ` கடலின் நீரை அண்ட முகட்டைப் பொருந்துமாறு எழுப்பிவிடும் வகையில் நிலம் அதிர நடம் ஆட்டுகந்தவர் ` என்க . சைவர் - சிவ ( மங்கல ) சம்பந்தம் உடையவர் ; சிவபிரானை , ` அனாதி சைவர் ` என்னும் மரபும் உண்டு . அரவத் திருவடி - கழல் , சிலம்பு இவைகளின் ஒலி பொருந்திய திருவடி . ஆள் பிழைப்ப - ஆளாதலில் தவறியதனால் ; என்றது , ` குற்றம் செய்தமையால் ` என்றபடி . குற்றம் , ஆட்டுதற்கு வைத்திருந்த ஆன்பாற் குடத்தைக் காலால் இடறியது ; பிறிது குற்றமும் உண்டு . ` தந்தையாகிய அந்தணனை ` என்க . அற - தாள் இரண்டும் வெட்டுண்டு விழும்படி . எறிந்தார் - மழுவினால் எறிந்தவர் ; சண்டேசுர நாயனார் . ` அப்போதே அருளும் கொன்றையும் கொடுத்தார் ` என்க . ` கொங்குக் கொன்றை , சடைக்கொன்றை ` என இயைக்க . கொங்கு - வாசனை . அரவச்சடை - பாம்பணிந்த சடை . இவ்வரலாற்றின் விரிவைத் திருத்தொண்டர் புராணத்துள் , சண்டேசுர நாயனார் புராணத்திற் காண்க . திருமுறைகளுள் இவ்வரலாறு வந்துள்ள பிற இடங்களை நோக்கின் , ` எறிந்தாற்கு ` என்பதே பாடமாதல் வேண்டும் எனக் கருதலாகும் .

பண் :

பாடல் எண் : 10

ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை
யிப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலும்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

முதன்மை பொருந்திய காவிரி , நல்யமுனை , கங்கை , சரசுவதி , பொற்றாமரை , பிற தாமரைத் தடாகங்கள் , தெளிநீர்க் கிருட்டிணை , குமரி ஆகிய தீர்த்தங்கள் தாவிவந்து சூழ்ந்த குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழுமெம் கூத்தனார் , என் வினைக்கு ஈடாகத் தம்மால் செலுத்தப்பட்டுத் துன்பக்கடலில் வீழ்ந்து துன்புறுகின்ற என்னைக் கூவிக் கரை ஏறும்படி எடுத்து , இப்பிறவியை அறுத்து யான் விண்ணவர் உலகம் எல்லாவற்றையும் தாண்டித் தமது சிவலோகத்தில் சென்று சேரும்படி , மாயை கலவாத தம் அருட்குணம் ஆறனுள்ளும் படுத்து என்னை ஆட்கொண்டவர் ஆவார் .

குறிப்புரை :

ஏவி தம்மால் ( இறைவரால்வினைக்கீடாகச் ) செலுத்தப் பட்டு , ` இளைக்கின்றேனைக் கூவி ஏறவாங்கி இப்பிறவி அறுத்து அமர் உலகு அனைத்தும் உருவி ஆங்கே போக ஆண்டுகொண்டார் ` எனக் கொண்டு கூட்டியுரைக்க . கூவி - அழைத்து . ஏற வாங்கி - கரை ஏறும் படி எடுத்து . இப்பிறவி அறுத்து - பிராரத்தத்தை நுகர்ந்து இப் பிறவியைத் தொலைத்த பின்பு . அமர் உலகு அனைத்தும் உருவி - விண்ணவர் உலகம் எல்லாவற்றையும் தாண்டி . ஆங்கே போக - தனது உலகிலே ( சிவலோகத்திலே ) யான் சென்று சேரும்படி . குறி இல் - மாயையின் தன்மை ஒன்றும் இல்லாத . அறு குணத்து ஆண்டு கொண்டார் - தமது அருட்குணம் ஆறனுள்ளும் படுத்து ஆண்டு கொண்டார் . இறைவனது எண்குணங்களை ஆறாகக் கூறுமிடத்து , தூய உடம்பினனாதல் இயல்பாகவே பாசங்களின் நீங்குதற்கண்ணும் , இயற்கை யுணர்வு முற்று முணர்தற்கண்ணும் அடங்கும் ; அவ்வாறு அடக்கி , அக் குணங்களை ` ஆறு ` என்றலும் மரபாகலின் , ` அறுகுணத்து ஆண்டு கொண்டார் ` என்றருளினார் . இதனால் , ` பாசம் நீங்கி இறைவனை அடையப்பெற்ற உயிர் அவனது குணங்களெல்லாம் தன்மாட்டு விளங்கக் கொண்டு நிற்கும் ` என்பது பெறப்பட்டது . ` எண் குணத்துளோம் ` ( ப .98 பா .10) எனப் பின்னர் வருதலுங் காண்க . இக் குணங்கள் மேலே ( ப .16. பா .4,7.) காட்டப்பட்டன . தாவி - விரைந்து . ` தாவி வரு தீர்த்தம் ` என்க . முதற் காவிரி - முதற்கண்வைத்து எண்ணப்படும் காவிரி ; இஃது இத்தலத்தின் அணிமைக்கண் உண்மையின் முதற்கண் எண்ணப்படுவதாயிற்று . பொற்றாமரைத் தீர்த்தம் , மதுரைத் திருக்கோயிற்கண் உள்ளது . புட்கரணி - தாமரைக் குளம் ; தாமரைக் குளமாய் உள்ள பிற தீர்த்தங்கள் . கோவி - கிருட்டிணை நதி . குமரி - குமரி யாறு ; இது தென்றிசைக்கண் கடலாற் கொள்ளப்பட்டது . அதனால் , அத் தென்கடல் இஞ்ஞான்று அத்தீர்த்தமாகக் கொள்ளப் படுகின்றது . ` தீர்த்தம் ` என்றது , மகாமகத் திருக்குளத்தை . ` குடந்தைக் கீழ்க்கோட்டத்திற்கு அண்மையில் உள்ள இத்திருக்குளத்தில் தீர்த்தங்கள் பலவும் தெய்வ வடிவில் வந்து கலந்து நிற்கும் என்பது புராணமாகலின் . ` இத்தீர்த்தமெல்லாம் தாவிவரு தீர்த்தஞ் சூழ்ந்த குடந்தைக் கீழ்க்கோட்டம் ` என்று அருளினார் .

பண் :

பாடல் எண் : 11

செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்
தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும்
நெறிகொண்ட குழலியுமை பாக மாக
நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்
மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்
மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீழிட்டுக்
குறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பொழிப்புரை :

குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் , இறையின்பம் எய்துதலையே முடிந்தபயனாய்த் தெளிய வுணர்ந்து தியானத்தில் செறிந்து நிற்பார் சிந்தையில் தித்திக்கும் சிவலோகத்து அமுதம் ஆவாரும் , நெறித்த கூந்தலையுடைய உமை ஒருபாகமாக இருக்க , அமரர் கூட்டம் வணங்க , எல்லா நலனும் நிரம்பப்பெற்றுத் திகழ்ந்தவரும் , மான்கன்றைத் தம் கரத்தில் ஏந்திய எம் வலியரும் , மதிற்காவல் மிக்க இலங்கையிறை கருத்தழியுமாறு மலைக்கீழ் இட்டு அவனை ஒறுத்துப் பின் இலக்கணம் அமைந்த அவன் இசையைக் கேட்டு விருப்புற்று அவனுக்கு நலம்பல நல்கினவரும் ஆவார் .

குறிப்புரை :

செறிகொண்ட சிந்தை - ஒன்றுதல் கொண்ட மனம் . தெளிந்து - விளங்கி . தேறி - முடிந்த பயனாய் நின்று . ` தித்திக்கும் அமுதம் ` என இயையும் . வாயளவில் தித்திக்கும் தேவர் உலகத்து அமுதத்தின் நீக்குதற்கு , ` சிவபுவனத்து அமுதம் ` என்று அருளினார் . புவனம் - உலகம் . ` சிவபவனத்து ` என்பதும் பாடம் . நெறிகொண்ட குழல் - நெறிப்பைக் ( வளைவைக் ) கொண்ட கூந்தல் . பாகம் ஆக - ஒரு பாகத்தாளாய் இருக்க . நிறைந்து - எல்லா நலனும் நிரம்பப்பெற்று . ` நிறைந்து நின்றார் ` என இயையும் . ` பாகமாகி ` எனப் பாடம் ஓதி , ` நிறைந்து வணங்க ` என்று இயைத்துரைத்தல் சிறக்கும் . மறி - மான் கன்று . குறி - இசையின் இலக்கணம் .
சிற்பி