திருவெண்ணியூர்


பண் :

பாடல் எண் : 1

தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந்
தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும்
புண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம்
பொங்குதழற் பிழம்பாய புராண னாரும்
வண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும்
வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாரும்
விண்டவர்தம் புரமூன்றும் எரி செய்தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

பொழிப்புரை :

வெண்ணி என்ற திருத்தலத்திலே விரும்பித் தங்கியிருக்கின்ற உலகியலிலிருந்து வேறுபட்டவராகிய சிவபெருமானார் , தொண்டுகளால் விளங்கும் அடியவர்களுக்கு ஒப்பற்ற வழியாய் உள்ளவரும் , திருநீறு அணிந்த மார்பினரும் , தாமரையிலுள்ள பிரமனும் திருமாலும் காணமுடியாதபடி தழற்பிழம்பாய்க் காட்சி வழங்கிய பழம்பொருளானவரும் , வண்டுகள் தங்கும் கொன்றை மாலை அணிந்தவரும் , தேவர்களுக்காக விடத்தை உண்டவலியவரும் , பகைவருடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவரும் ஆவார் .

குறிப்புரை :

தொண்டு இலங்கும் அடியவர் - தொண்டுகள் விளங்கும் இடமாய் நிற்கின்ற அடியார்கள் . அவர்கள் தம் பெருமானையே பற்றுக்கோடாகக் கொண்டு ஒழுகுதலின் , ` அடியவர்க்கு ஓர் நெறியினார் ` என்றருளினார் . ` நெறியானாரும் ` என்பதும் பாடம் . புராணனார் - பழையவர் . மைந்தனார் - வலியவர் . விண்டவர் - பிரிந்தவர் ; பகைவர் .

பண் :

பாடல் எண் : 2

நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்
நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும்
பொருப்பரையன் மடப்பாவை யிடப்பா லாரும்
பூந்துருத்தி நகர்மேய புராண னாரும்
மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்
வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்
விருப்புடைய அடியவர்தம் முள்ளத் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

பொழிப்புரை :

செம்மேனியில் வெண்ணீறு பூசியவரும் , நெற்றிக் கண்ணரும் , பார்வதி பாகரும் , பூந்துருத்தியில் உறையும் பழைய வரும் , யானைக் கொம்பு போன்ற பிறையை முடிமாலையாச் சூடிய வரும் , வளைகுளம் , மறைக்காடு இவற்றில் தங்கியவரும் , தம்மை விரும்பும் அடியாருடைய உள்ளத்தில் உறைபவரும் , வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தர் ஆவார் .

குறிப்புரை :

பூந்துருத்தி , மறைக்காடு ( வேதாரணியம் ) இவை சோழநாட்டுத் தலங்கள் . மருப்பு - யானைக் கொம்பு . வளைகுளம் , வைப்புத்தலம் .

பண் :

பாடல் எண் : 3

கையுலாம் மூவிலைவே லேந்தி னாருங்
கரிகாட்டில் எரியாடுங் கடவு ளாரும்
பையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும்
பரவுவார் பாவங்கள் பாற்று வாரும்
செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
திருப்புன்கூர் மேவிய செல்வ னாரும்
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

பொழிப்புரை :

வெண்ணி அமர்ந்துறையும் விகிர்தனார் , கையில் முத்தலைச் சூலம் ஏந்தினாரும் , சுடுகாட்டு நெருப்பில் கூத்து நிகழ்த்தும் கடவுளும் , படமெடுக்கும் பாம்பினை ஆட்டுபவரும் , தம்மை வழிபடுகின்றவர்களின் பாவத்தை அழிப்பவரும் , கயல் மீன்கள் பாயும் வயல்களை உடைய திருப்புன்கூர் மேவிய செல்வரும் , உடல்முழுதும் வெண்ணீறு பூசியவரும் ஆவர் .

குறிப்புரை :

கரிகாடு - கரிகின்ற காடு ; சுடலை . பை உலாம் - படம் பொருந்திய . பாற்றுவார் - அழிப்பார் . செய் - வயல் ; ` செய்க்கண் பாய ` என்க . ` வயல்கள் ` என்பது , ` அவைகள் ` என்னும் சுட்டளவாய் நின்றது . திருப்புன்கூர் , சோழநாட்டுத் தலம் . சண்ணித்தல் - பூசுதல் .

பண் :

பாடல் எண் : 4

சடையேறு புனல்வைத்த சதுர னாருந்
தக்கன்றன் பெருவேள்வி தடைசெய் தாரும்
உடையேறு புலியதள்மேல் நாகங் கட்டி
யுண்பலிக்கென் றூரூரி னுழிதர் வாரும்
மடையேறிக் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
மயிலாடு துறையுறையும் மணாள னாரும்
விடையேறு வெல்கொடியெம் விமல னாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

பொழிப்புரை :

சடையில் கங்கை வெள்ளத்தைச் சூடிய திறலுடைய வரும் , தக்கனுடைய பெரிய வேள்வி நிறைவேறாமல் தடுத்தவரும் , உடையாக அணிந்த புலித்தோல் மீது பாம்பினை இறுக்கிக் கட்டிப் பிச்சைக்காக ஊர் ஊராகத் திரிபவரும் , நீர்மடையில் ஏறிக் கயல்பாயுமாறு நீர்வளம் மிக்க வயல்களால் சூழப்பட்ட மயிலாடுதுறையின் தலைவரும் , காளை எழுதிய கொடியை உயர்த்திய எம் புனிதரும் , வெண்ணி அமர்ந்துறைகின்ற விகிர்தனாரே .

குறிப்புரை :

ஏறு புனல் - பெருகும் நீர் . சதுரனார் - திறலுடையவர் . உடை ஏறு - உடையாகப் பொருந்திய . உழிதரல் - திரிதல் . மயிலாடு துறை - மாயூரம் . மணாளனார் - தலைவர் .

பண் :

பாடல் எண் : 5

மண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி
மற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும்
பண்ணிலங்கு பாடலோ டாட லாரும்
பருப்பதமும் பாசூரும் மன்னி னாரும்
கண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்திக்
கடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும்
விண்ணிலங்கு வெண்மதியக் கண்ணி யாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

பொழிப்புரை :

ஐம்பூதங்களும் , அவற்றின் பண்புகளுமாய் நிலைபெற்றவரும் , பண்ணோடு கூடிய பாடலும் கூத்தும் நிகழும் சீசைலம் , பாசூர் இவற்றில் உறைபவரும் , நெற்றிக்கண்ணினரும் , மண்டையோட்டினை ஏந்தி வீட்டு வாயில்தோறும் பிச்சை ஏற்கும் செயலை உடையவரும் , பிறையை முடிமாலையாக உடையவரும் , வெண்ணியமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .

குறிப்புரை :

` இலங்கு ` என்பதனை எல்லாவற்றிற்கும் இயைய , ` மண் ` என்றதற்கு முன்னே கூட்டுக ; மற்று , சடை . குணம் , ` சுவை , ஒளி ஊறு , ஓசை , நாற்றம் ` என்பன . பருப்பதம் - சீ பருப்பதம் ( சீசைலம் ); இது வடநாட்டுத்தலம் . பாசூர் , தொண்டை நாட்டுத்தலம் . கடை - வாயில் .

பண் :

பாடல் எண் : 6

வீடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும்
வேலைவிட முண்டிருண்ட கண்டத் தாரும்
கூடலர்தம் மூவெயிலும் எரிசெய் தாரும்
குரைகழ லாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும்
ஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும்
ஆலமர நீழலிருந் தறஞ்சொன் னாரும்
வேடுவராய் மேல்விசயற் கருள்செய் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

பொழிப்புரை :

அடியவருக்கு வீட்டுலகம் நல்குபவரும் , விடமுண்ட நீலகண்டரும் , பகைவருடைய மும்மதில்களையும் எரித்த வரும் , திருவடியால் கூற்றுவனை உதைத்தவரும் , படமெடுத்தாடும் பாம்பினை இடையில் இறுகக்கட்டிக்கொண்டு கூத்து நிகழ்த்துபவரும் , கல்லால மர நிழலிலிருந்து அறத்தை உபதேசித்தவரும் , வேடராய் முன்னொரு காலத்தில் அருச்சுனனுக்கு அருளியவரும் , வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .

குறிப்புரை :

வீடு - முத்திப்பேறு . மெய்யடியார் , பயன் கருதாது அன்பு காரணமாகவே வழிபடுபவர் . வேலை - கடல் . கூடலர் - பகைவர் . குமை - குமைத்தல் ; அழித்தல் ; முதனிலைத் தொழிற் பெயர் . ` அங்கு ` என்பது அசைநிலை . மேல் - பின் ; ` முன்பு போர்செய்து பின்பு அருள் செய்தார் ` என்றதாம் .

பண் :

பாடல் எண் : 7

மட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி
மடவா ளவளோடு மானொன் றேந்திச்
சிட்டிலங்கு வேடத்த ராகி நாளுஞ்
சில்பலிக்கென் றூரூர் திரிதர் வாருங்
கட்டிலங்கு பாசத்தால் வீச வந்த
காலன்றன் கால மறுப்பார் தாமும்
விட்டிலங்கு வெண்குழைசேர் காதி னாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

பொழிப்புரை :

தேன்பொருந்திய கொன்றைமாலை சூடி மான் ஒன்றைக் கையில் ஏந்திப் பார்வதியோடு ஞானம் புலப்படும் வேடத்தோடும் சிலவாகிய பிச்சைக்காக ஊர் ஊராகத் திரிபவரும் , உறுதியான பாசத்தால் மார்க்கண்டேயனைக் கட்டவந்த கூற்றுவனுடைய வாழ் நாளைப் போக்கியவரும் , ஒளிவீசும் வெள்ளிய காதணி சேரும் காதுகளை உடையவரும் , வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .

குறிப்புரை :

மட்டு இலங்கு - தேனோடு விளங்குகின்ற . ` சிட்டம் ` என்பது ` சிட்டு ` என நின்றது ; ` ஞானம் ` பொருள் இறைவனது வேடங்கள் ஞானத்தைத் தருதல் அறிக . கட்டு - கட்டுதல் ; முதனிலைத் தொழிற்பெயர் . காலன்றன் காலம் - கூற்றுவனது வாழ்நாள் . விட்டு இலங்குதல் - விட்டு விட்டு ஒளிர்தல் ; மின்னுதல் .

பண் :

பாடல் எண் : 8

செஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந்
திருவால வாயுறையுஞ் செல்வ னாரும்
அஞ்சனக்கண் அரிவையொரு பாகத் தாரும்
ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும்
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி
மதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும்
வெஞ்சினத்த வேழமது உரிசெய் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

பொழிப்புரை :

செஞ்சடையில் வெண்பிறை சூடியவரும் , திருவாலவாய் உறையும் செல்வரும் , மைதீட்டிய கண்களை உடைய பார்வதி பாகரும் , நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களுமாகி இருப்பவரும் , மேகத்தை அளாவிய நீண்ட சோலைகளையும் மாட வீதிகளையும் மதிலையும் உடைய ஆரூரில் புகுந்து அங்கே நிலையாகத் தங்கிய வரும் , மிக்க கோபத்தை உடைய யானையின் தோலை உரித்தவரும் , வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .

குறிப்புரை :

` சடைக்கு `, ` சடைக்கண் ` என உருபு மயக்கம் . திருவாலவாய் - மதுரைத் திருக்கோயில் . அஞ்சனம் - மை . மஞ்சு - மேகம் . ` சோலையையும் வீதியையும் , மதிலையும் உடைய ஆரூர் ` என்க .

பண் :

பாடல் எண் : 9

வளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும்
வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாருங்
களங்கொளவென் சிந்தை யுள்ளே மன்னினாருங்
கச்சியே கம்பத்தெங் கடவு ளாரும்
உளங்குளிர அமுதூறி யண்ணிப் பாரும்
உத்தமரா யெத்திசையும் மன்னி னாரும்
விளங்கிளரும் வெண்மழுவொன் றேந்தி னாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

பொழிப்புரை :

வளமான பிறைசூடும் சடையினரும் , தேவர்களுக்காக விடத்தை உண்ட வலியவரும் , என் உள்ளத்தை உறைவிடமாகக் கொண்டு தங்கியவரும் கச்சி ஏகம்பத்து உறைபவரும் , என் உள்ளம் குளிருமாறு அமுதமாக ஊற்றெடுத்து இனிப்பவரும் , மேம்பட்டவராய் எல்லாத் திசைகளிலும் நிலைபெற்றிருப்பவரும் , ஒளிவீசும் வெள்ளிய மழுப்படையை ஏந்தியவரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .

குறிப்புரை :

களம் கொள - தாம் தமக்கென்று ஓர் இடம்பெற்று நிற்றற் பொருட்டு . ` களங்கொளக் கருத அருளாய் போற்றி ` ( தி .8 திருவா . போற்றித் - 171.) என்பதும் இப்பொருள் படுதல் உணர்க . அமுது ஊறி - அமுதம் சுரப்பது போன்று . அண்ணிப்பார் - இனிப்பார் . உத்தமர் - மேலானவர் . ` விளங்குகிளரும் ` என்பது குறைந்து நின்றது ; விளங்கு - விளங்குதல் ; முதனிலைத் தொழிற் பெயர் .

பண் :

பாடல் எண் : 10

பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப்
புகலூரும் பூவணமும் பொருந்தி னாருங்
கொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங்
குளிரார்ந்த செஞ்சடையெங் குழக னாருந்
தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துந்
திருவிரலா லடர்த்தவனுக் கருள்செய் தாரும்
மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

பொழிப்புரை :

பொன்போல் விளங்கும் கொன்றை மாலை சூடிப் புகலூரிலும் பூவணத்திலும் உறைபவரும் , அச்சம் தரும் முத்தலைச் சூலம் ஏந்தியவரும் , குளிர்ச்சி தரும் கங்கைபொருந்திய செஞ்சடையை உடைய இளையரும் , இராவணனுடைய பத்துத்தலைகளையும் தம் காலின் அழகிய விரலால் வருத்திப் பின் அவனுக்கு அருள் செய்தவரும் , மின்னல்போன்ற நுண்ணிய இடையை உடைய பார்வதி பாகரும் , வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே .

குறிப்புரை :

பொன் இலங்கு - பொன்போல விளங்குகின்ற . தார் இன்பநிலையிலும் , மாலை வெற்றியிலும் அணியப்படுவன . புகலூர் , சோழநாட்டுத் தலம் ; இதுவே , சுவாமிள் இறைவன் திருவடி கூடிய இடம் . பூவணம் , பாண்டிநாட்டுத் தலம் . கொன் - அச்சம் . கங்கை வைக்கப்பட்டிருத்தலின் , சடை குளிர்ச்சி பொருந்தியதாயிற்று .
சிற்பி